சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!
–ரா. பார்த்தசாரதி
எழுபது ஆண்டுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தோமா?
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து செயல்படுகின்றோமா?
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா?
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா?!
ஒரு பக்கம் மனித மேம்பாடு, தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி
மறுபக்கம் காட்டையும், விளை நிலங்களையும் அழிக்கும் முயற்சி
நிலங்களைக் கூறு போட்டு விற்கும் அவலத்தைத் தடுப்பாருண்டோ?
அரசாங்கமே இதற்குத் துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ?
நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மைச் சுதந்திரம்
பட்டப் பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிகக் கடினம்
கொலையும், கொள்ளையும் பட்டப் பகலிலே நடக்கின்றதே
சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!
பல தியாகிகளின் உயிர் அர்ப்பணிப்பில் சுதந்திரம் பெற்றோம்
அந்தமான், மற்ற சிறைகளில் தியாகிகள் பட்ட துன்பத்தை அறியோம்
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும்
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும்!
சுதந்திரம் என்பது தந்திரமாகச் செயல்படுவது அல்ல
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல
நாட்டின் உரிமைச் சாசனம் எழுதிவிட்டால் பெருமை அல்ல
தனிமனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் அது!
வேற்றுமையில் ஒற்றுமை மாநிலங்களிலே நிலவுகிறதா?
ஜாதி, இனம் காட்டிச் சலுகைகளைப் பெற நினைப்பதா?
நாட்டின் பொருளாதாரமும், நாணயத்தின் மதிப்பும் உயர்ந்ததா?
நாட்டில் நதிநீர்ப் பிரச்சனையும், குடிநீர்ப் பிரச்சனையும் தீர்ந்ததா?
இளைஞர்களே! உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி
கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டு எழுகின்ற எழுச்சி
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூருங்கள்!
நாட்டினை நல்வழிப்பாதையில் அழைத்துச் செல்லுங்கள்!