வாழ்வதற்கு வழிசமைப்போம்!
–எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
காந்திமகான் எனும்பெயரில் வந்துநின்ற பெருவெளிச்சம்
கருமைநிறை அடிமைத்தனம் கழன்றோடச் செய்ததுவே
வெள்ளையரை விரட்டிவிட்டு விடிவுவந்த பாரதத்தில்
கொள்ளையரை விரட்டிவிட வருவாரா காந்திமகான்?
உண்ணாத நோன்பிருந்து உயிருடனே வதைப்பட்டும்
கண்ணான சுதந்திரத்தைக் கண்டுவிடப் பாடுபட்டார்
மண்மீது மனிதர்க்கு மானமுடன் சுதந்திரமும்
என்றுமே தேவையென எண்ணிநின்றார் காந்திமகான்!
காந்தியது சாத்வீகம் கண்டுநின்ற வெற்றியினால்
கணக்கற்றோர் காந்திய வழிநடக்கப் புறப்பட்டார்
தேசமதைச் சிந்தைவைத்துச் சிறைசென்றார் பலபேரும்
தேசப்பிதா காந்திமகான் தெய்வமென உயர்ந்துநின்றார்!
காந்திமகான் எழுச்சியினால் கதிகலங்கி நின்றார்கள்
சாந்தி சமாதானம்பற்றிச் சற்றுமவர் சிந்தித்தார்
அன்னியமாய் இருந்தாலும் அவர்சற்று யோசித்தார்
ஆதலால் காந்திவழி அவர்மனதை மாற்றியதே !
வெள்ளையனை வெளியேற்றி வெற்றிக்கொடி பறக்கவிட்டு
விரும்பிநின்ற சுதந்திரத்தை விருப்புடனே மனமேந்தி
நல்லதொரு பாரதத்தை நாம்வளர்ப்போம் எனவெழுந்து
நாளுமே பாரதத்தின் நலங்கெடுத்தல் முறையாமோ?
பாரதத்தில் பலரிஷிகள் பலசமயப் பெரியோர்கள்
வேறிடத்தில் இல்லாத அளவினிலே வெளிப்பட்டார்
ஆனாலும் பாரதத்தில் அரக்ககுணம் மிகுந்தோரால்
நாளாந்தம் சுதந்திரத்தை நாமிழத்தல் நடக்கிறதே !
விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் மேலோங்கி வளர்கிறது
அஞ்ஞானம் மிக்கோரும் அதைத்தாண்டி வருகின்றார்
அருமைமிகு சுதந்திரத்தை அநுபவிக்க வாய்ப்பின்றி
அமைந்துவரும் சூழலினை ஆர்வந்து தடுத்திடுவார்?
ஊழலும் மதுவும்சேர்ந்து உழைப்பவர் நிலையை மாற்றி
நாளுமே நொடிந்துவாழ நாட்டிலே நிலமையாச்சு
ஆழமாய் எண்ணிப்பார்க்கின் அனைவரும் இணைந்தேநின்று
ஊழலும் மதுவும்போக உழைத்திடுவோமே வாரீர்!
பஞ்சமொடு பசியும் பலநோயும் ஒழியவேண்டும்
அஞ்சிகின்ற மனநிலையை அகற்றியே விடவேண்டும்
நஞ்சுநிலை நினைப்பையெலாம் நார்நாராய்க் கிழித்தெறியின்
நல்லதொரு சுதந்திரத்தை நாமென்றும் சுவாசிப்போம்!
அணிவகுப்பு, கொடியேற்றம் அதுவல்ல சுதந்திரமாம்
அறம்சார்ந்த அத்தனையும் நிலம்காணல் சுதந்திரமே
வளம்காண வேண்டுமெனின் வணங்கிடுவோம் சுதந்திரத்தை
வாழ்வினிலே சுதந்திரமாய் வாழ்வதற்கு வழி சமைப்போம்!