Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (212)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல, கோடையும், வசந்தமும் மாறி மாறி வருவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது போலத்தான் அரசியல் உலக மாற்றங்களும். 

    அரசியல் என்றால் என்ன? ஏதோ நாம் அறியாத எமக்குப் புரியாத ஒரு மந்திரமா? அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் என்ன அதற்காகவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுக் கையில் தாம் நினைத்தவுடன் அனைத்தையும் சரிசெய்துவிடும் மந்திரக்கோலைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டவர்களா?

    இல்லையே!

    அவர்களும் எம்மைப் போன்ற சாதாரண ஆசாபாசங்களுக்கும், உலக பந்தங்களுக்கும் ஆட்பட்ட மனிதர்களே! சமூகசேவை, மனிதர்களின் மேம்பாடு, மக்கள் சேவை என்பவற்றின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கான மாற்றமாக அரசியலைத் தேர்ந்தெடுத்து மக்கள்முன்னால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே அரசியல்வாதிகள். ஆனால் இன்றைய அரசியல் உலகில் இடம்பெறும் பல அநாகரிகமான செயல்கள் இவற்றையெல்லாம் கொச்சைப்படுத்துவதுபோலத் தம்முடைய சொந்தவாழ்வைக் குறுக்குவழியில் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான் சிலர் அரசியலில் குதிக்கிறார்களோ என எம்மை எண்ணத்தோன்ற வைக்கிறது எனலாம். ஆனால் அரசியல் உலகில் இத்தகையோர் சிறுபான்மையினர் எனும் உண்மை எமது மனதில் ஓரளவு மன அமைதி கொள்ள வைக்கிறது.

    சுமார் நூறு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்து மக்கள் தமது வாழ்வை, தமது எதிர்காலத்தை முற்றாக மாற்றியமைக்கப் போகும் ஒரு முக்கியத் தீர்மானத்தை எடுத்தார்கள். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி நடந்த சர்வஜன வாக்கெடுப்பு சரித்திரப் பிரசித்தி பெற்றது. 41 வருடகாலமாக ஜக்கிய இராச்சியத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்த “ஜரோப்பிய ஒன்றிய”அமைப்பிலிருந்து தம்மை வெளியேற்றுக் கொள்ளும் முடிவினைப் பெரும்பான்மை பலத்தினால் இங்கிலாந்து மக்கள் எடுத்தனர். அதன்மூலம் அவர்கள் ஆட்சியிலிருக்கும் தமது அரசுக்கொரு கட்டளையிட்டனர். “ஜரோப்பிய ஒன்றியத்தின் “தொடர்ந்த அங்கத்துவம் தம்மைப் பாதிக்கக்கூடிய செயலாதலால் அதனின்றும் வெளியேறும் நடவடிக்கையை எடுக்கும் அதிகாரத்தைக் கட்டளை மூலம் வழங்கினார்கள்.

    சீட்டாட்டக் கட்டுகளினால் கட்டப்பட்ட மாளிகை ஒரு காற்றடித்ததும் அடுக்கடுக்காய்ச் சரிந்து விழுவது போல முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்திலும் படுவேகமான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என சுமார் 53% விகித மக்கள் வாக்களித்தாலும் 47%ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் நிலைப்பதை விரும்பினார்கள். நாடு ஏறத்தாழ கருத்தளவில் சரிபாதியாகப் பிரிந்து நின்றது. இந்நிலையில் சரியான, முறையான அரசியல்வாதிகளின் முக்கிய நகர்வு எதுவாக இருக்க வேண்டும்? பிளவுப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதே! ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெற வேண்டும் என்று வாதிட்ட அப்போதைய பிரதம மந்திரி டேவிட் கமரன் அவர்கள் மிகவும் கெளரவமாகத் தன் வாதத்தில் தோல்வியுற்றதற்காக மட்டுமல்லாது அவ்வாதத்தோல்வி கொடுத்த மாற்றங்களை ஏற்படுத்தும் தகுதி தனக்குக் கிடையாது எனும் காரணத்தினால் தனது பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.

    எதிர்க்கட்சித் தலைவரின் நிலையோ இதற்கு முற்றும் முரணானது. அவரது கட்சியைச் சேர்ந்த 170 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் அவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று இரகசிய வாக்கெடுப்பு மூலம் அறியத்தந்தும் தனது பதவியை அழுங்குப்பிடியாகப் பிடித்து விட்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் நான் இக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எமது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களினால் , பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்ல என்பதுவே. விளைவு? கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சிக்குள் ஒரு தலைவர் போட்டிக்கான தேர்தல் முடுக்கி விடப்பட்டு அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதே ஒரு எதிர்க்கட்சியின் முக்கிய கடமை என்பதினின்றும் விலகித் தமக்குள்ளே ஓர் உட்கட்சிப் போரில் ஈடுபட்டார்கள். மறுபடியும் அதே ஜெர்மி கோபன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பார்த்தீர்களா? முன்னைவிட அதிக வாக்கு வித்தியாசத்தினால் இம்முறை வெற்றி பெற்றது எனக்கு அடிமட்டத் தொண்டர்களிடையே இருக்கும் ஆதரவைக் காட்டவில்லையா? என்று மார்தட்டிக் கொள்கிறார். அவருக்கு எதிரானோர் தம்முடைய ஆதரவாளர்களின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சியமைக்க முடியாது; மற்றைய கட்சிகளின் வாக்காளர்களைக் கவரக்கூடியவகையில் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அத்தகைமை அவருக்கு இல்லை. அதனால் தாம் அரசமைப்பது என்பது இத்தலைவர் இருக்குமட்டும் முடியாத காரியம் என்கிறார்கள்.

    இத்தகைய ஓர் அரசியல் சூழலில் இங்கிலாந்து மக்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை “ப்ரெக்ஸிட் (Brexit)” எனப்படும் ஜரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் அம்சமே! வெளியேறும்போது ஜக்கிய இராச்சியம் எத்தகைய ஒரு உடன்படிக்கையை ஜரோப்பிய ஒன்றியத்தின் “வியாபாரச் சந்தையுடன்” ஏற்படுத்திக் கொள்ளப்போகிறது? ஏனெனில் அவ்வுடன்படிக்கையின் அடிப்படையே தொடர்ந்த வெளிநாட்டு முதலீடுகளை உறுதிசெய்யும் என்பது ஓர் மறுக்க முடியாத உண்மை. இத்தகையதோர் பாரிய மாற்றம் ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது. ஆனால் அதன் தாக்கத்தை மென்மைப்படுத்த அரசின் நடவடிக்கைகள் எதுவாக இருக்கப் போகிறது? ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் ஜக்கிய இராச்சியம் ஒரு தன்னுரிமை பெற்ற, ஜரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்குள் கட்டுபட்டு நடக்க வேண்டிய அவசியமில்லாத நாடாகத் துலங்கப் போகிறது எனும் வாதத்தைப் பல தேசியவாதத் தலைவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் வெறும் கோஷங்கள் எனும் நிலையிலேயே இருக்கின்றன. இதன் உண்மையான தாத்பரியம் அதனைச் செயலாக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. அதற்குரிய மனத்தைரியமும், இவற்றின் அடிக்கோடாக மறைந்து நிற்கும் இனத்துவேஷத்தை அடியோடு அறுத்தெறியும் வல்லமை புதிய பிரதமர் திரேசா மே அவர்களுக்கு உண்டா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும்.

    அக்டோபர் மாதம் அனைத்து அரசியல் கட்சிகளினது மகாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. லேபர் கட்சி தனது பிரபல்யமான மிதவாத இடதுசாரக் கட்சிக் கொள்கைளினின்றும் விலகித் தீவிர சோஷலிசக் கட்சியாகத் தன்னை இனம்காட்டி நிற்கிறது. வெறும் கோஷங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் அது வேண்டுமானால் சுவையாகத் தென்படலாம் ஆனால் நடைமுறையில் இத்தகைய தீவிர இடதுசாரக் கொள்கையுடைய கட்சி இன்றைய ஜக்கிய இராச்சியத்தில் அரசமைக்கும் அளவுக்கு தேர்தல் பலம் பெறுவதென்பது மிகவும் சந்தேகத்துக்குரிய விடயமே!

    அதேநேரம் லேபர் கட்சியினால் கைவிடைப்பட்ட இந்த மிதவாத இடத்தைத் தமது மிதவாத வலதுசாரக் கொள்கையின் மூலம் கைப்பற்ற அரசாங்கத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி முனைகிறது. கடைசியாக நடந்துமுடிந்த அவர்களது மகாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் குறிப்பாகப் பிரதம மந்திரி திரேசா மே அவர்களின் உரை இதனை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கிறது.பாரம்பரியமாக லேபர் கட்சிக்கு வாக்களித்த வட இங்கிலாந்து தொழிலாளர்களின் வாக்குகளைத் தமது பக்கம் இழுப்பதற்கான சகல கொள்கை முழக்கங்களையும் அவர்கள் செய்கிறார்கள்.லேபர் கட்சி எதிர்க்கட்சியின் கடமைகளை மறந்து தமது சோஷலிசக் கொள்கைகளை இறுகப்பற்றி உட்கட்சிப்பூசலில் ஈடுபட்டிருக்கும்வரை கன்சர்வெடிவ் கட்சியின் காட்டில்தான் மழை.

    மக்களுக்காக அரசியலா? அரசியலுக்காக மக்களா?அதேகேள்வி அனைத்து மக்களின் உள்ளங்களிலும் எதிரொலிக்கிறது. அரசியல்வாதிகளின் உள்ளத்தில் எதிரொலிக்கிறதா? பொறுத்திருந்து பார்ப்பதுதான் இதற்கு விடையோ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (211)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    patience
    அன்பான வணக்கங்கள் இதோ அடுத்தவாரத்தில். மனிதராகப் பிறந்த நாமெல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் எனும் உணர்ச்சியினால் தாக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாதது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் , யாருக்கு எதிராக, எதனால் உருவாகிறது என்பதன் அடிப்படையில் அதனைக் கட்டுப்படுத்தும் வல்லமை எம் அனைவருக்குள்ளும் மறைந்துள்ளது.

    மறைந்த என் தந்தை எனக்கு அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று, “ கோபத்தில் வேதனை , பொறுமையில் சாதனை ! “ என்பதுவே அது.

    கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று சொல்வார்கள். ஆமாம் ! மனதினைக் கோபம் என்னும் உணர்வு கவ்விக் கொள்ளுவதற்கு எம்மிடம் அனுமதி கோருவதில்லை. ஆனால் அந்தக் கோபம் கிளப்பி விடும் உணர்வலைகளைச் சமாளிக்க, அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்த எமக்குத் தேவையான பொறுமையை எம்மிடம் ஏற்படுத்த நாம் அதீத முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

    பல வாசகர்களின் மனதில் இந்நிமிடம் எழும் கேள்வி என் காதுகளில் மெளன ஒலிகளாக காற்றலைகளின் மூலம் வந்து விழுகிறது.

    ” என்னட? இவன் பாட்டுக்கு கோபிக்காதே ! பொறுமையாக இரு என்று சொல்கிறானே ! எமக்கு நடந்த விடயங்களை இவன் அனுபவித்திருக்கிறானா? அப்புறம் என்ன பெரிசா பொறுமையைப் பற்றிப் பேசுறானே “ என்ற உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.

    பொறுமையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் எனக்கு நன்றாகப் புரிகிறது. எத்தனையோ சமயங்களில் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கைவிட்ட நிகழ்வுகள் உண்டு. இத்தகைய சிக்கல்களுக்குள் நானும் உழல்பவன் என்னும் ஒரே ஒரு காரணத்தினால்தான் இக்கருத்துப் பகிர்தலை ஆரம்பித்தேன்.

    பொறுத்துக் கொண்டிருக்கும் போது எம்மீது தான் அனைத்துப் பாரங்களும், வாழ்வின் சுமைகளும் விழுவது போலும், பொறுமையை எள்ளளவும் கடைப்பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள் தாம் நினைத்ததை நடத்திக் கொண்டு செல்வது போலும் தோன்றுவது வழக்கம்.

    வாழ்க்கையில் நாம் நினைத்ததை நடத்துவதற்காகவே வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக பாடுப்பட்டு உழைக்கிறோம் பின்னே எதற்காக பொறுமையின் பெயரால் நாம் அனுபவிக்க நினைக்கும் செயல்களை விட்டுக் கொடுக்க வேண்டும்? இதனால் சாதிப்பது என்ன ?

    இந்தக் கேள்விகள் மனதில் சாதாரணமாக எழுவது இயற்கையே !

    உண்மைதான் வாழ்க்கையில் நாம் நினைப்பது சரியோ, தவறோ அதை நாம் நினைத்தவகையில் நிகழ்த்திக் கொண்டு போவதே வாழ்க்கையின் நோக்கம் எனக் கருதினால் அப்படிப்பட்டவர்கள் எதையோ சாதிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மையா? அத்தகையவைகளைத்தான் நாம் சாதனை என்கிறோமா?

    கோபம் என்னும் அந்த உணர்வு எம்மனதின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி விடுகிறது. கோபம் என்னும் அந்தக் குறுகிய உணர்ச்சி பொங்கி வெளியாகியவுடன் எமது மனங்களில் தோன்றும் வெறுமையின் வெப்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

    கோபத்தின் ஆரம்பமே விரக்தியாகும். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அளவெடுத்தால் விரக்தியை மிக விரைவாக உண்டு பண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றி வியாபித்திருப்பதை உணரலாம்.

    உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று அமர்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எம்மை உட்காரவைக்க அந்த வெயிட்டர் எடுக்கும் நேரம், எமது உணவுகளுக்கான ஆர்டரை எடுக்க வரும் பணியாளரின் தாமதமான வருகை, அதன் பின்பு அவர்களின் செய்கையில் இருக்கும் தளர்வு, அருகிலிருப்போரின் உரையாடலின் தொனி இவையனைத்தையுமே எமக்கு விரக்தி உண்டு பண்ணக்கூடிய காரணிகளாகக் கொள்ளலாம்.

    அதே போல சூப்பர் மார்க்கட்டிற்கு போகிறோம் என்று வையுங்கள், நாம் மிகவும் அவதானமாக தேவையான பண்டங்களை மட்டும் தெரிவு செய்து கொண்டு விரைவாக பணம் செலுத்துமிடத்திதிற்கு வருகிறோம், அங்கே வரிசையில் நிற்கும் போது எமக்கு முன்னாலிருப்பவர் தமது முறை வரும் போதுதான் தான் வாங்க வந்து மறந்து போன பண்டத்தின் நினைவு வந்தவராக இதோ வந்து விடுகிறேன் என்று ஓடுகிறார் எம்மை ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வைக்கிறார்.

    சரி அதுதான் முடிந்தது என்று கவுண்டருக்கு வந்தால் அதிலே உட்கார்ந்திருக்கும் பெண் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு பொருளாக மேலும் கீழும் பார்த்து அதை ஸ்கெனரில் ஸ்கேன் செய்கிறாள்.

    நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்று ஓடி வந்த நமக்கு என்ன நிகழ்கிறது? விரக்தி பொங்குகிறது, இரத்தம் ஜிவு, ஜிவுவென்று சூடேறுகிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டிய நிலைமை.

    சரி இதே நிலைமைகளைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அதே உணவகத்தில் நாம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெயிட்டரின் இடத்தில் எம்மை உட்கார்த்தி நாம் எப்படி இருந்திருப்போம் என்று ஒரு கற்பனை உலகை உருவாக்கிப் பார்த்துக் கொள்வோம் என்று வையுங்கள். எமக்கு நேரம் போவதே தெரியாது.

    விரக்தி என்னும் மனப்பான்மையே அருகில் கூட எட்டிப்பார்க்காது.

    அதேபோல அந்த சூப்பர் மார்க்கெட் நிலையில் கூட அனைத்தையும் எம்மை மீறி நடக்கும் செயல்கள் நாம் ஆத்திரப்படுவதால் எதுவும் நடந்து விடாது என்று மனதைச் சாந்தப்படுத்தப் பழகிக் கொண்டால் உள்ளம் அமைதி கொள்ளப் பழகிவிடும்.

    கோபம் என்னும் கோலம் கொண்டுவிட்டால் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது. வார்த்தைகள் வாயிலிருந்து விழுந்து விட்டால் பின்னே அள்ளியெடுத்து உள்ளே திணித்துக் கொள்ள முடியாது.

    கோபம் கொள்வதினால் எம்மையே நாம் தாக்கிக் கொள்கிறோம், எமது சக்தியையே நாம் விரயம் செய்து கொள்கிறோம். நாம் சொல்ல வந்ததை அதைச் செவிமடுப்பவர் புரிந்து கொள்ள முடியாத வகை செய்து விடுகிறோம்.

    கோபம் எமது புத்தியையே மழுங்கடித்து விடுகிறது. எதையும் யதார்த்தமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

    கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பித்து விடுகிறது.

    ஆனால் பொறுமையோ எம்மை மேம்பட்ட மனிதராக்கி விடுகிறது. மனதினை மென்மை என்னும் போர்வையால் மூடிவிடுகிறது. எம்மையிட்டு நாமே பெருமை கொள்ள வைக்கிறது.

    பொறுமையால் அடைந்த வெற்றிக்கு இருக்கும் மதிப்பே தனியானது ஏனென்றால் அது தானென்னும் மமதையின் அடிப்படையில் வந்ததாக இருக்காது.

    பொறுமையின் உதாரணங்களை எடுத்துக்கொண்டால் தாய்மை, பூமி, கருணை என இணையில்லாத பல தனிப்பண்புகளின் தரிப்பிடமாக இருப்பதைக் காணலாம்.

    பொறுமையின் உச்சகட்டமே பூமியாகும். ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் தன்னை இழக்கும் மனிதரா இல்லை பொறுமையையே தன் ஆயுதமாகக் கொண்டிருக்கும் பூமி மாதாவா வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்? இந்தக் கேள்வியின் விடை அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலொன்று,

    “ மண்ணின் மீது மனிதனுக்காசை
    மனிதன் மீது மண்ணுக்காசை
    மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது ” என்று வரும்.

    எத்தனை உண்மையான வரிகள்.

    நிச்சயமான, உண்மையான வாக்கியம் ” கோபத்தில் வேதனை ! பொறுமையில் சாதனை ! “

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 210 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்புடன் கூடிய வணக்கங்கள். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு பிறப்பதில்லை. காலநதியின் ஓட்டத்தில் நாம் வகுத்துக் கொண்டு செல்லும் இலக்கைச் சிலர் அடைகிறோம். சிலர் தாம் போட்ட இலக்கை விட்டு காலத்தின் வேகத்தினால் வேறு பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு தாம் எதிர்பார்த்திராத இலக்கினை எட்டுகிறார்கள். இதுதான் நம் வாழ்க்கையின் எளிமையான யதார்த்தம்.

    இவ்வுலகத்தில் நம் மத்தியில் பலர் ஊடல் ஊனமுற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் பிறப்பினாலும், சிலர் வியாதிகளினாலும், சிலர் விபத்துகளினாலும், சிலர் கொடிய போரில் ஈடுபடுவதினாலும் இத்தகைய ஒரு துரதிருஷ்ட நிலையை அடைகிறார்கள். இவர்களை நாம் ” மாற்றுத் திறனாளிகள் – Physically chalanged “ என்று அழைக்கிறோம். ஆனால் மற்ற அனைவரிடத்தில் இருக்கக்கூடிய திறமைகள் என்று கருதப்படுபவை இவர்களிடமும் எந்த விதத்திலும் குறைவதில்லை. அதேபோல அவர்களது இலட்சிய வேட்கைகளும் குறைவதில்லை.

    உடலில் எந்தக் குறைபாடுகளும் அற்றவர்கள் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இம்மாற்றுத்திறனாளிகள் தம்முடைய இலட்சியத்திற்காக அயராது உழைப்பவர்களாகக் காணப்படுகிறார்கள்.
    சமீபத்தில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அது ஒரு ஆங்கில நிகழ்ச்சி DIY SOS – Big Build என்று அந்நிகழ்ச்சி அழைக்கப்படும். வாழ்வில் மிகவும் இடர்களைச் சந்திப்பவர்கள் தாம் வாழும் இல்லத்தில் பல குறைபாடுகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் பி.பி.ஸிக்கு எழுதுவார்கள் அவர்களும் அவ்வில்லத்தை அக்குடும்பத்தினருக்கு வேண்டிய வகையில் அமைத்துக் கொடுப்பார்கள். இத்திருத்த கட்டிட வேலையில் ஈடுபடுவோர்கள் அனைவரும் எதுவித ஊதியமும் பெறாமல் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவே தமது சேவையை அளிப்பார்கள்.

    சமீபத்தில் நான் பார்த்த அந்நிகழ்வு நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது. 16 வயதே நிறைந்த ஒரு மாணவன் 6 அல்லது 7 வயதுவரை சாதரணமாக நடமாடிக் கொண்டிருந்தவன் காதிலே ஏற்பட்ட ஒரு கட்டியினால் இரண்டுமுறை ஆபரேஷனுக்குட்படுத்தப்பட்டான். விளைவு அதுவரை நடந்து கொண்டிருந்தவன் இடுப்புக்குக் கிழே பாரீசவாதத்தினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டான். ஆனாலும் அவன் தன் இலட்சிய வேட்கையைக் கைவிடவில்லை. விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவனாக இருந்த அவன் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு ஈடுபடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான்.

    அவனுடைய இலட்சியத்திற்கு அவனுடைய தாய் தந்தை தம்மாலான முழு ஒத்தாசையையும் நல்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களின் நிதி நிலைமை அவர்கள் வாழும் இல்லத்தை அவனுடைய வசதிகளுக்கேற்ப மாற்றியமைக்க முடியவில்லை. அவனுடைய நண்பர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்க அவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் அவனது இல்லத்தை அவன் வாழ்வதற்கு வசதியான வகையில் மாற்றிக் கொடுத்தார்கள். அவன் உடற்பயிற்சி செய்வதற்காக ஒவ்வொருநாளும் இரண்டுமுறை ஜிம்முக்கு அவனது தாய் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்நிகழ்ச்சியின் திருத்த வேலைகளின் போது அவனது இல்லத்திலேயே அவனுக்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தார்கள். அவ்வில்லத்தில் அவன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே தனக்குத் தேவையான உணவு வகைகளைச் சமைப்பதற்கான உபகரணங்களை அமைத்துக் கொடுத்தார்கள்..

    அவ்விளைஞன் 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெற்றி பெறுவதே தனது இலட்சியமாக வகுத்து அதற்காக முழுமூச்சுடன் உழைத்து வருகிறான். இம்முறை ரியோ நகரில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சீன தேசத்திற்கு அடுத்த அளவிலான பதக்கங்களைப் பெற்று , அதிக பதக்கம் பெற்ற நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கின்றது. இங்கிலாந்தில் இம்மாற்றுத்திறனாளிகளின் பயிற்சிக்காக, ஒலிம்பிக் , மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர்கள் பங்கு பற்றி வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளுக்கான ஊக்கம் பல இடங்களிலிருந்து வழங்கப்படுகிறது. அவர்களின் போட்டிகளுக்கு தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அவர்களது போட்டிகளில் பார்வையாளர்களாகக் கலந்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். காலம் அவர்களின் மீது போட்ட சவால்களை எதிர்ப்பது என்பது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் அவ்வெதிர்ப்புக்கு சமுதாய முழு உணர்வுடன் கைகொடுக்க வருமானால் அவர்களது பாதை இலகுவாகிறது. அன்று நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் முடிவில் சமூகம் தனக்கு நல்கிய உதவிகளைக் கண்ணுற்ற அவ்விளைஞனின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது.

    எமது பின்புல நாடுகளில் உடல் ஊனமடைந்தவர்களை கெளரவமான பெயர்களால் அழைத்து வருகிறோம் ஆனால் அவர்களை நோக்கிய சமுதாயப் பார்வை எத்தகையது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமை அவர்களது குறைபாடுகளால் முடங்கிப் போய்விடாமல் வெளிக்கொணரப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா ? இவைகள் இனி வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினால் ஒரு முக்கிய பிரச்சனையாக அணுகப்படுவது ஒன்றே எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மாற்றமடையக்கூடிய வழிவகைகளை அவர்களுக்கு வகுத்துத்தரும். அனைவருமே ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாளர்களாக முடியாது ஆனால் வாழ்வுப் போட்டியின் வெற்றிக் கோட்டினைத் தட்டிப்பார்க்குமளவிற்கு அவர்களின் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கலாமல்லவா ?

    ஒலிம்பிக் போட்டியில் கலந்து விட்டுத் திரும்பிய ஜக்கிய இராச்சிய மாற்றுத் திறனாளிகள் குழுவிற்கு விமானநிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு இங்கிலாந்து மகாராணி தானே அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளமை இந்நாட்டின் முதிர்ச்சியை நன்கு எடுத்துக் காட்டுகிறது.
    மீண்டும் அடுத்த மடலில்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 209 )

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் இதோ அடுத்த மடலில் உளக்கருத்தைப் பரிமாற வந்திருக்கிறேன்.

    உலகம் இடமிருந்து வலமாகச் சுழல்கிறது., இரவும், பகலும் மாறி மாறி வருகிறது, கோடையும், வசந்தமும் சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது இலையுதிர்கிறது, மீண்டும் தளிர்க்கிறது. ஆம் இவையெல்லாம் இயற்கையின் நியதிகள். அதே இயற்கையின் செயற்பாடுதான் மனிதர்களின் வாழ்வும். எம் வாழ்க்கையிலும் சில இயற்கை நியதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் சுழற்சியோடு மனிதன் சேர்ந்து இயங்கும்வரைதான் மனிதனின் மனித நாகரீகம், கலாச்சாரம் என்பனவற்றின் முழு அர்த்தமும் முழுமை பெறுகிறது.

    ஆணும், பெண்ணும் இணைவதால் அங்கு அடுத்தொரு சந்ததி பிறக்கிறது.

    அதுவே மனிதகுலத்தின் விருத்திக்கு வித்திடுகிறது. அதுவே இயற்கையின் நியதியுமாகிறது. இந்நியதியின் அடிப்படையே ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அடுத்த சந்ததியைத் தோற்றுவிக்கும் வல்லமைக்கு வித்திடுகிறது. இயற்கை மனிதனின் சமுதாயப் பெருக்கத்திற்கு ஒரு கால இடைவெளியை நிர்ணயிக்கிறது. அக்கால இடைவெளி மனிதன் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து அதனை ஆளாக்கி சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக நடக்க வைக்கும் முயற்சிக்கு அடித்தளமாகிறது. அதாவது உதாரணமாக 25 வயதில் திருமணமாகி 30 வயதுக்குள் குழந்தையை ஈன்றெடுத்தால் அக்குழந்தை 20 வயது வாலிபப் பருவத்தையடைந்து தனது காலிலே நடக்கும் வரை அம்மனிதன் தனது குழந்தையைப் பராமரிக்கும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான். அதாவது பணி புரிந்து கொண்டிருக்கையிலேயே அக்குழந்தையை முழுமை பெற்ற மனிதனாக்க அவனால் முடிகிறது.

    விஞ்ஞானம் வலுவடைந்த காலகட்டத்தில் இருக்கிறது. இதுவரை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்த வானுலகம் இப்போது கண்ணுக்கு எட்டும் தொலைவில் வந்திருப்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியினாலேயே. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கு மாதக்கணக்கு எடுத்த காலம் மாறி அதனை இப்போது மணிக்கணக்கில் அடையக்கூடிய வல்லமையை விஞ்ஞான வளர்ச்சி கொடுத்துள்ளது. அவ்வளவு ஏன் இன்று நான் எனது மனக்கருத்தை மேசையில் உட்கார்ந்தபடி மடிக்கணினியில் தட்டி அதனை உடனே எனது அன்பினிய வாசக உள்ளங்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியே !

    அதே விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் நியதிகளின் எல்லைக்கோடுகளுக்கு சவால் விடுக்கும் ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிட்டாதவர்கள் அப்பேற்றையடைய பல புதிய யுத்திகளை இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்து பலரின் வறண்ட வாழ்க்கையை சோலைகளாக்கியுள்ளது. “பரிசோதனைக்குழாய் குழந்தைகள் – test tube babies” எனும் அரிய கண்டெடுப்பு மூலம் பலரின் வாழ்க்கை ஆனந்தமயமாக்கப்பட்டுள்ளது..

    சரி எதற்காக இந்த வழியான அலசல் என்கிறீர்களா ? இங்கிலாந்தில் ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. பல காரணங்களுக்காக இவ்வழக்கில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2011ம் ஆண்டு Bowel Cancer புற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுத்து உயிரிழந்துள்ளார். கருத்தரித்தலுக்குத் தேவையான தனது சூல்களை குளிரூட்டி உறைந்த சேமிப்பில் வைத்துத் தான் உயிரிழக்கும் பட்சத்தில் தனது சூல்களை உபயோகித்து தனது குழந்தையைத் தனது தாய் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.

    தமது ஒரே வாரிசான தமது மகளைப் பறி கொடுத்த பெற்றோர் அவரது நினைவாக, அவரது வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். அதுமட்டுமல்ல தமது ஒரே வாரிசை இழந்த துக்கம் அவர்களை வாட்டியது. அது இயற்கைதானே ! தமது துயரிலிருந்து மீள்வதற்காக தமது மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முற்பட்டனர். குறுக்கிட்டது இங்கிலாந்தின் செயற்கை குழந்தைப்பேறுக்கான நடைமுறைச் சட்டம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் அச்சட்டத்தை எதிர்த்து 2014ம் ஆண்டு நீதிமன்றம் சென்றனர். கடந்த வருடம் அதற்கான தீர்ப்பளிக்கப்படும்போது அத்தாயாரின் வயது 59 ஆகும். அவரின் வயதை முன்வைத்து தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது.

    விடவில்லை அப்பெற்றோர் அதற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சார்பாக வாதாடிய சட்ட நிபுணர் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மூன்று காரணங்களை முன்வைத்தார்.

    தன் தாயார் தன் கருவைச் சுமக்க வேண்டும் எனும் அப்பெண்ணின் கோரிக்கை சரியாக முன்வைக்கப்படவில்லை எனும் வாதத்திற்கு எதிரான சாட்சியங்கள் சரியாக முன்வைக்கப்படவில்லை. அவரின் கருவை அவர் தாயார் சுமப்பதில் உள்ள சிக்கல்கள், விளைவுகள் என்பனபற்றி அவ்விளம்பெண்ணுக்கு சரியான விளக்கமளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளப்போதிலும் எதற்காக அவருக்கு இவ்விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விளக்கப்படவில்லை.

    அதுமட்டுமல்ல அவருக்கு என்ன விளக்கங்கள் கொடுக்கப்படவேண்டும் என்பது அதற்கான சரியான இலாகாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை.

    இம்மூன்று வாதங்களை முன்வைத்து இவ்வழக்கு மீண்டும் மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றே அவர்களது சட்டத்தரணி வாதாடினார். இவரது வாதங்களில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்ட நீதியரசர் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளார். இதனை தமக்குக்கிடைத்த முதல் வெற்றியாக அப்பெற்றோர் எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வழக்கின் மூலம் அவர்கள் வெற்றியடைந்தால் கூட அதற்கான சிகிச்சையை அவர்கள் இங்கிலாந்தில் பெற்றுக் கொள்வதற்கு இங்கிலாந்தின் சட்டம் அனுமதிக்காது. இவ்வழக்கின் மூலம் அவர்கள் சேகரிக்கப்பட்டுள்ள தமது மகளின் சூல்கள விடுவிக்கவே முயல்கின்றனர். அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இச்சிகிச்சையை அமெரிக்காவில் தான் பெறமுடியும்.

    இங்கேதான் இவ்வழக்கு பல விவாதங்களை ஊடகங்களில் கிளப்பி விட்டிருக்கிறது. 60 வயதான பெண்மணி தனது பேரக்குழந்தையைத் தானே பெற்றெடுக்கப் போகிறார். அதுமட்டுமல்ல அப்பேரக்குழந்தைக்கு அவர்களே பெற்றோர்களாகப் போகிறார்கள். இங்கேதான் பெரியதோர் கேள்வி எழுகிறது. அக்குழந்தை பிறந்து 20 வயதாகும் போது அவரது தாயருக்கு 80 வயதாக இருக்கும். ஒரு இருபது வயது வாலிபக் குழந்தைக்குத் தேவையான அரவணைப்பைப் பாதுகாப்பை ஒரு 80 வயதுப் பெற்றோர்களால் கொடுக்க முடியுமா?

    அதுமட்டுமல்ல இங்கிலாந்து போன்ற மேலைத்தேச நாடுகளில் பதின்ம வயது குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனை பலதரப்பட்டது. அதனை அவர்கள் எதிர்கொள்வதற்கு அவர்களது பெற்றோர்களின் வலிமையான பக்கபலம் வேண்டும். அதனை எழுபதுகளில் இருக்கும் பெற்றோர்களால் வழங்க முடியுமா ? அது,மட்டுமல்ல இப்படி செயற்கை முறையில் ஒரு குழந்தையைத் தோற்றுவித்து இவ்வுலகில் அவதரிக்க விடும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் ஈந்தது ?

    இவ்வகையான பலதரப்பட்ட விவாதங்கள் ஊடகங்களில் காரசாரமாக இடம்பெறுகின்றன. மறுபுறம் தமது ஒரே வாரிசை இழந்து தவிக்கும் அவர்களின் துயரும், அவர்களை நோக்கிய அவர்களது மகளின் அந்திமகால வேண்டுகோளும். இவையிரண்டையும் நீதி எனும் தராசுத்தட்டில் போட்டால் எந்தத்தட்டு தாழ்ந்திருக்கும் என்பதனை இம்மேல்நீதிமன்ற வழக்கின் முடிவிலேயே தெரிந்து கொள்ள முடியும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ( நன்றி – டெய்லி டெலிகிராப் இணையத்தள அறிக்கை)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 208 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் அன்னைத்தமிழ் சொந்தங்களோடு மனம் திறக்க ஒரு மடல். கடந்த மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையில் இரண்டு வாரங்கள் காற்றாய்ப் பறந்தோடி விட்டன. இடையே ஒரு வாரம் தவறியது ஏன் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கையே !

    அகிலத்தில் அல்லாடும் மனிதர்களுடன் அடிக்கடி விளையாடுவது அந்த அனைவர்க்கும் பொதுவான ஆண்டவனின் பண்பாகும். அவ்விளையாட்டு சிலசமயங்களில் சோகத்தின் சுமையாகவும், சில சமயங்களில் ஆனந்த அலையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட அவனது ஆனந்த விளையாட்டுகளில் ஒன்று என் குடும்பத்தில் நிகழ்ந்தது. ஆமாம் செப்டெம்பர் 17ம் திகதி இவ்வகிலத்தில் அவதரிக்கப் போகிறாள் என் பேத்தி எனும் வைத்தியர்களின் கணக்கைப் பார்த்துச் சிரித்த ஆன்டவன் அவளை அவசரமாக்க மூன்று வாரங்களின் முன்பாகவே புவியினில் இறக்கி விட்டான். ஆனந்த அதிர்வு கொடுத்த பரப்பில் சிக்குண்ட எனக்கு மடல் வரைய முடியாத காரணமே அவ்வொருவார இடைவெளி.

    அது முடிந்து இன்று நான் இம்மடலை இங்கிலாந்து நேரப்படி இரவு 10 மணிக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். ஏனென்று கேட்கிறீர்களா ? என்னை எனது அன்னை இப்புவியில் அவதரிக்க வைத்து இன்றோடு அகவைகள் அறுபது முடிந்துவிட்டது. ஆமாம் இன்று நான் எனது அறுபதாவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளேன். தாத்தாவின் 60வது அகவை தினத்திற்கு தானும் இருக்க வேண்டும் எனும் அவசரத்திலேயே மூன்று வாரங்களுக்கு முன்பாகவே வந்திறங்கிய என் பேத்தியுடனே தான் இன்றைய பிறந்ததினம் இருக்க வேன்டும் என்று எனது மைந்தனும், மருமகளும் இட்ட அன்புக் கட்டளையின்படி தினத்தை அவர்களுடன் கழித்துவிட்டு என் மனச்சாந்தியளிக்கும் எழுத்தில் இன்றைய தினத்தை முடிப்பதற்காக உங்களுக்கு வரையும் மடலிது.

    ஆண்டுகள் அறுபது இப்புவியில் வாழ்ந்து அப்படி என்னதான் சாதித்து விட்டேன் ? எனும் கேள்வி என் மனதில் ஒரு ஓரத்தில் எழுந்தாலும். எனைச்சுற்றி எனைச் சூழ்ந்திருக்கும் சொந்தங்களைப் பார்க்கையில் என் வாழ்விலும் ஏதோ ஒரு அர்த்தம் பொதிந்திருப்பதை உணர முடிகிறது. எனது பிறந்த நாளுக்காக முகநூலில் வந்து குவியும் வாழ்த்துக்களைப் பார்க்கையில் இத்தனை அன்பு உள்ளங்களின் அன்பைச் சம்பாதித்திருப்பதே எனது இந்த அறுபதாண்டு காலத்தின் சாதனை என்பதே உண்மையெனப்படுகிறது. அதுவும் முகநூல் சொந்தங்களில் பெரும்பான்மையானவை முகமறியாச் சொந்தங்களே ! அவர்களை என்னுடன் இணைத்தது எது? தமிழ் எனும் இனிய தாய்மொழியே ! ஆம் தமிழன்னை எனக்கீந்த இனிய சொந்தங்களின் அன்பு ஒன்றுதான் இவ்வுலகில் உண்மையானது. அதற்கு இணையானது உலகில் எதுவும் இல்லை. தமிழ் எனும் என் இனிய தாய்மொழிக்கு இருக்கும் செல்வச்செழிப்பு உலகில் இருக்கும் அனைத்துச் செல்வங்களுக்கும் ஈடாகாது. எழுதும்போது உள்ளத்தில் பூக்கும் உவகைப் பூக்களின் வாசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என் இனிய சொந்தங்களே ! இந்த அன்பு நிறைந்த சந்தர்ப்பத்தை எனக்களித்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.

    நன்றி சொல்ல வார்த்தையின்றி
    நாணி நானும் வருந்துகிறேன்
    மூன்றெழுத்தில் முடிவதல்ல எம்
    முத்தமிழ் தந்த சொந்தம்
    ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
    ஈன்றவளில்லை இன்றெனக்கு
    சபைதனில் முன்னிருத்த முயன்ற
    எந்தையும் என்னுடனில்லை
    அறிவூட்டிய பல முன்னோர்கள்
    ஆசிபொழிகின்றார் என்பதுபோல்
    அன்புநிறை சொந்தங்களாம் நீங்கள்
    அன்புமழை பொழிகிறீர்கள்
    அறுபது கன்டேன் அதில் பல
    அர்த்தங்களும் கண்டேன்
    கிடைப்பவை எல்லாம் வேண்டியதல்ல
    கிடைத்தது எல்லாம் அரும்பெரும் தவமே
    தமிழன்னை தந்த என்னினிய உறவுகளே
    தமிழில் ஊறிய நன்றி எனும் மூன்றெழுத்துடன்
    உங்கள் அன்பு என்றும் வேண்டும் என்றே
    வணங்கி நன்றி கூறுகிறேன்

    வணக்கத்துடன்
    சக்தி சக்திதாசன்

    achjr_163695

    தாயே ! தமிழே !
    தாயீந்த பாலுடன்
    தமிழ்தந்த அன்னையே !

    பிறந்தேன் என்பது பெரிதல்ல
    தவழ்ந்தேன் என்பதும் புதிரல்ல
    பேசினேன் என்பதும் புதுமையல்ல
    நடந்தேன் என்பதும் அதிசயமல்ல

    தமிழ் எந்தன் நாவில் ஊறிடும்
    வகை கண்டது உந்தன் வரமே தாயே !
    தமிழென்ன செய்தது எனக்கு என்பதல்ல
    தமிழுக்காய் நானென்ன செய்தேன் ?

    உள்ளத்தில் கவிதையாய் உதித்திடும் போது
    வெள்ளத்தில் ! ஆனந்த வெள்ளத்தில் நான்
    மிதப்பது என்னவோர் விந்தையம்மா ?
    சிறப்பது நீ தந்த தமிழால் அல்லவோ ?

    படித்திடும் வரிகள் யாவையும் மனதில்
    சுவைப்பது தமிழாய் உள்ளதால் அல்லவோ ?
    கிடைத்திடும் பொழுதுகள் யாவையும் உனக்காய்
    படைத்திடுவேன் ஆயிரம் படைப்புகள்

    விதித்திடும் விதியாய் உள்ளத்தில் யான்
    வரித்திட்ட செய்தியும் ஒன்றே
    மரித்திடும் நாள்வரை தமிழ் எழுத்தினை
    மறந்திடேன் என்பது அதுவே !

    மீண்டும் அடுத்த மடலில்

    படத்திற்கு நன்றி.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது!

    போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது இந்தவாரம் அதே செவ்வாய் இரவு தமது தேசத்தை நிலஅதிர்வு ஒரு உலுக்கு உலுக்கப் போகிறது என்பதை இத்தாலிய மத்தியப் பிரதேச மக்கள் அறிந்திருந்தார்களா என்ன? அதே போலப் போனவாரம் புதன்கிழமை வாழ்வைச் சகஜமாகக் கழித்த ஐந்து மிகவும் இளவயது ஆசிய இளைஞர்கள் இந்தப் புதன்கிழமை “கம்ப சாண்ட்ஸ் ” எனும் கடற்கரையில் தாம் நீந்திக் களித்திருக்கையில் உயிரிழக்கப் போகிறோம் என்று எண்ணியிருந்தார்களா என்ன?

    எத்தனையோ அழகாக எமது வாழ்வின் கனவுகளைச் சாதனைகளாக்கத் திட்டம் தீட்டி வைத்துள்ளோம். அதன் நிறைவேற்றங்களினால் நாமடையப் போகும் ஆனந்தம் எனப் பலவற்றைச் சிந்தித்து அதன் நினைவுகளில் மூழ்கியிருந்திருப்போம். ஒரேயொரு வினாடி நிகழ்வுகள் அவையனைத்தையும் தரைமட்டமாக்கி விடும் எனும் உண்மையை மட்டும் ஏனோ மறந்து போய்விடுகிறோம். உண்மையில், மறந்துதான் போகிறோமா ? இல்லை மறக்கிறோம் எனும் மாயையில் எம்மை மூழ்கடிக்கிறோமா?

    எனது நண்பர் ஒருவர் ஈழத்திலிருந்து இலண்டனுக்கு எழுபதுகளின் முடிவில் வந்தார். அவர் வரும்போது ஒன்றும் எனக்கு நண்பரல்ல. எனது நல்ல நண்பன் ஒருவனின் உறவினராக எனக்கு அறிமுகமானார். என்னைவிட வயதில் சில வருடங்கள் மூத்தவர்; காலநேரத்தின் விளைவாக இலண்டனில் ஒரு பணி தேடுவதற்காக என் உதவியை நாடினார். அவர் பணி தேடுவதற்காக இலண்டனில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். என்னுடைய ஓர் இனிய நண்பரானார்.

    மிகவும் கடினமான உழைப்பாளி. அதிகாலை முதல் இரவுவரைக் கடினமாக உழைக்கும் வல்லமை கொண்டவர். மனைவியையும் குழந்தைகளையும் ஈழத்தில் விட்டு விட்டுத் தான் பணிபுரிந்த வேலையையும் விட்டுத் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மிகவும் சிக்கலான தீர்மானம் எடுத்து இலண்டன் வந்திருந்தார்.

    தூரதிருஷ்டவசமாக அவருக்கு இலண்டனில் வதிவிட உரிமை கிடைக்கவில்லை. பல சிக்கல்களுக்கிடையில் ஒருவாறு தனது மனைவி பிள்ளைகளையும் இலண்டன் தருவித்தார். அதற்காக அவர் எடுத்த சிக்கலான முயற்சிகளைப் பற்றி நான் நன்கு அறிவேன். மிகவும் சிரமப்பட்டு மூன்றுமுறைகள் தோல்வியுற்றும் தனது விடாமுயற்சியால் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார்.அங்கும் அவர் கடினமாக உழைக்கத் தவறவில்லை. தனக்காக ஒரு சிறு சுயதொழில் ஆரம்பித்துக் கடின உழைப்பால் முன்னேறித் தனக்குக் கீழ் கனேடிய மக்களை வைத்துத் தொழில் நடத்தும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தார். இன்று தனது மைந்தனையும், மகளையும் மிகவும் ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி மனைவியோடு தனது ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கழித்து வருகிறார்.

    எனது மற்றொரு நன்பன் ஏறத்தாழ நான் இலண்டனுக்கு வந்த சமயம் இலண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தவன். என்னைப் போலவே இந்த நாட்டையே தனது வாழ்வாதாரத்திற்கான நாடாக்கி வாழ்ந்து வந்தான். அவனும் மிகவும் கடினமாக உழைத்து 64 வயதை அடைந்ததும் அடுத்த வருடம் தனக்குக் கிடைக்கப் போகும் ஓய்வூதியத்துடன் தனது வாழ்நாளைத் தனக்குப் பிடித்த வகையில் கழிக்க விரும்பியவன். ஆனால் அந்தோ பரிதாபம்… ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில் மாபெரும் மாரடைப்புக்கு இலக்காகித் தனது கனவினை இழந்து விட்டான்.

    இவ்விருவர்களையும் நான் இங்கே குறிப்பிட்டதன் காரணம் காலதேவனின் மாற்றம் இவர்கள் இருவரினது வாழ்விலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அவர்கள் எதிர்பார்த்திருக்காததே!ஆயினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான ஒற்றுமை இவர்கள் இருவருமே காலம் தமது திசையை மாற்றி விடக்கூடும் எனும் அச்சத்தினால் ஏதோ வாளாது இருந்தவர்கள் அல்ல. வாழ்வின் இடர்களை, அவை அவர்களின் மீது வீசிய சவால்களை எதிர்த்துப் போரிட்டவர்களே!

    இன்றிருப்போர் நாளை இருப்பது சந்தேகமே! ஆனால் அதற்காக நாம் எமது வாழ்வின் இலட்சியங்களை அலட்சியம் செய்து விடலாமா? முயற்சியைக் கைவிடலாமா? ஒருபோதும் இல்லை. அவ்விலட்சியங்கள் எம்மால் எட்டப்படக்கூடிய யதார்த்தமான இலட்சியங்களாக இருக்குமேயானால். மட்டுமே!

    இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்தப்பாகத்திலும் எத்தகைய வழியிலும் பதவியையும், பணத்தையும் சம்பாதித்து விடலாம் என்பதே பலரிடம் காணக்கூடிய தன்மையாக உள்ளது.அதற்கு அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும், அச்சமுதாயத்தில் எத்தகையவர்கள் அவர்களுக்கு வெற்றி பெற்ற முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே உள்ளது. இது சாதாரண வியாபாரியிலிருந்து , மிகப்பெரிய அரசியல்வாதிகள்வரை காணப்படும் தன்மையாக உள்ளது. இதற்குத் தனிமனிதர்களாகிய நாம் எவ்விதத்திலும் பொறுப்பானவர்கள் இல்லை என்று சொல்வது மாபெரும் தவறாகும்.

    ஒவ்வொரு தனிமனிதனுடைய அபிலாஷைகளுமே ஒரு சமுதாயத்தின் நடைமுறையின் முதுகெலும்பாகிறது. சமுதாயத்தின் போக்கே அச்சமுதாயத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளை உருவாக்குகிறது. சமுதாயத்தின் தேவைகளின் தன்மையே அச்சமுதாயத்தின் வியாபாரிகளுக்கு அடிப்படை மூலதனமாகிறது. எம்மால் உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள், எமது தேவைகளின் அடிப்படையில் எம்மிடமிருந்து பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் இவர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வெறும் பார்வையாளர்களாக நாம் நடக்கும் வரை, இத்தகைய நிலைமைகள் மாறப் போவதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து கொள்வோமானால் ஒரு புத்தம் புதியதோர் உலகம் உருவாகும் சாத்தியம் உண்டு.

    எதற்காக இந்தத் திடீர் அலசல் என்று கேட்கிறீர்களா ? நாம் நினைப்பதும், இங்கு நடப்பதும் வேறு என்பதும் இவ்வுலக நிர்ணயம் என்பது நிலையற்றது என்பதும் எவ்வளவு உண்மையோ நாம் வாழும் காலம் வரை உழைப்பில் கடினமும், உள்ளத்தில் நேர்மையும், அடுத்தவரை நோக்கிய எமது பார்வையில் மனிதாபிமானமும் கலந்திருக்குமேயானால் எம் ஒவ்வொருவருடைய வாழ்வும் இந்நிலையற்ற உலகில் நிலைபெற்று நிலைத்திருக்கும் என்பதினை உங்களோடு சேர்த்து எனக்கும் சத்தமாய்ச் சொல்லிக் கொள்வதற்கே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    ***

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (206)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரம், மற்றொரு மடலுடன் உங்கள் முன்னே. உலகம் சுற்றிக் கொண்டே இருப்பதினால் தானோ என்னவோ வாழ்க்கையும் ஒரு சுழற்சி போலத் தென்படுகிறது. சுழற்சியில் முன்பு வந்த இடத்தை மீண்டும் வந்து தொடுவது போல வாழ்விலும் சில சமயங்களில் பழைய நிலை மீண்டும் திரும்புவது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்படுவது உண்டு.
    இங்கிலாந்தில் நடக்கும் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் எனது பார்வையில் அதன் தாக்கங்களையும், விளைவுகளையும் பற்றியே இம்மடலின் மூலம் நான் பகிர்ந்து கொள்கிறேன். புலம் பெயர்ந்த ஒரு தமிழனின் ஒரு கோணப்பார்வையே இது. ஒரு சமயத்தில் நான் கொண்டிருந்த கருத்துக் கணிப்பு முற்று முழுதாக பிழைத்துப் போகலாம் அப்படியான சமயங்களில் இது ஒரு சாதரண பாமர மனிதனின் கணிப்பே என்பதே அதற்கான விளக்கமாகும்.

    “ப்ரெக்ஸிட்(Brexit)” என்ற ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் பல. அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதற்கான பொறிமுறைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலேதான் முடுக்கி விடப்படும் எனும் அரசியல் கணிப்பே பலமாக நிலவுகிறது. அதேசமயம் இதற்கான பொறிமுறை உடனடியாக முடுக்கி விடப்பட வேண்டும் எனும் வாதம் இந்த “ப்ரெக்ஸிட்”என்ற ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவான பலரிடம் இருந்து கிளம்புகிறது.

    இதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையில் நடைபெற்ற வாதங்களில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலை வந்தால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனும் வாதம் இங்கிலாந்து அரசாங்கத்தினாலும் பல முன்னனி நிதி நிறுவனங்களினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களினால் முன்வைக்கப்பட்ட அளவினில் பொருளாதார வீழ்ச்சி நிகழவில்லை. இருப்பினும் பொருளாதாரம் ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.

    ஆனால் உலகநாடுகளின் பொருளாதார நிலைகளைக் கணிக்கும் சர்வதேச நிறுவனத்தின் அறிக்கையின்படி இவ்வருட இறுதியில் இங்கிலாந்து பொருளாதாரப் பின்னடைவு அடையும் நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை பொறுத்த அளவில் இங்கே நான் சரி என்று யாரும் வாதிடுவதினால் எதுவித பலனுமில்லை. வரப்போகும் எதிர்விளைவுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையே இன்றைய காலகட்டத்தின் தேவையாகிறது. முகத்தின் மீது கோபம் கொண்டு மூக்கை அறுத்துக் கொள்வதினால் யாருக்கு நட்டம் என்று சிந்தித்துச் செயல்படுவதே சீரான அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்..

    “பெரிய பிரித்தானியா (Great Britain)” என்பது இன்று பேச்சளவில் மட்டுமே ! அப்பெயரின் பெருமை கடந்தகால சரித்திரத்தில் இடம்பெற்றிருக்குமே அன்றி அதன் தாத்பரியம் இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது அல்ல. நாம் பிரித்தானிய நாட்டுப் பிரஜை, எமது நாடு பிரித்தானியா என்று பெருமை கொள்வது தவறாகாது ஆனால் கடந்தகால சாதனைகளின் மிதப்பில் நிகழ்காலத்தைத் தவறாக எடை போடுவது மிகவும் அபாயகரமானதாகும்.

    இந்த “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் மற்றொரு பூதம் ” இனத்துவேஷமாகும் . ஆமாம் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி வந்து செல்வது மட்டுமின்றி அங்கு பணிபுரிவதற்கான அனுமதியும் , அந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் உடையவர்களாவார் எனும் ஐரோப்பிய யூனியனின் விதிக்கமைய பல ஐரோப்பிய யூனியனின் புதிய அங்கத்துவ நாடுகளான போலந்து, பல்கேரியா, ரொமேனியா போன்ற நாடுகளில் இருந்து பலர் தொகையினராக இங்கிலாந்துக்குள் நுழைந்தது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

    2008ஆம் ஆண்டு உருவான உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான இங்கிலாந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பல கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாகியது. அதனால் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு வந்தன. விளைவு குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரிய சித்தமாகவிருந்த ஐரோப்பிய நாட்டவர் பல இடங்களில் பணிக்கமர்த்தப்பட்டனர். இது இங்கிலாந்து நாட்டவரின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் பாதிக்கிறது எனும் ஆதங்கம் பொதுவாகவே கானைத்து மக்களுக்கும் ஏற்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவரும் விதிவிலக்கல்ல.

    இந்தச் சந்தர்ப்பத்தையும் மக்களின் மனோநிலையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட “ப்ரெக்ஸிட்” ஆதரவாளர்கள், இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் எனும் தமது வாதத்திற்கு முக்கியமான பிரச்சாரமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.. “இமிகிறேஷன் ” எனும் பதமே அனைவரின் பேச்சுக்களிலும் எதிரொலித்தது. ஏற்கனவே வெளிநாட்டவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட இனத்துவேஷிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவர்களும் தாமும் “பிரெக்ஸிட்” ஆதரவாளர்கள் எனும் முகத்திரையுடன் இப்பிரச்சார அரங்கில் நுழைந்தார்கள். விளைவு இந்தப் பிரச்சாரத்தின் மூலம் “இனத்துவேஷம்” எனும் பூதம் கிளப்பி விடப்பட்டுள்ளது.

    இது ஜரோப்பிய யூனியனில் இருந்து வந்த வெளிநாட்டவர் எனும் எல்லையைக் கடந்து அனைத்து வெளிநாட்டவர் மீதும் குறிப்பாக ஆசிய நாட்டவர் மீதும் கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளது.. இங்கிலாந்து மெட்ரோபாலிட்டன் போலிஸின் கணிப்பின் படி இனத்துவேஷம் சம்பந்தமான குற்றச்செயல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. இதைப்பற்றிய பல அரசியல் அவதானிகளின் கருத்தும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலைக்கு அனைவரையும் தள்ளுகின்றன.

    பல இந்திய, பாகிஸ்தானிய, இலங்கை புலம் பெயர் மக்கள் தம்மை நோக்கி வீசப்படும் இனத்துவேஷம் சம்பந்தமான அவதூறுகளைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவரித்துள்ளார்கள்.

    இங்கேதான் பூமி சுழன்று மீண்டும் அதேஇடத்தை வந்தடைவது போல வாழ்வின் சுழற்சியும் என்று நாம் ஏற்கனவே கூறியது வருகிறது. எப்படி என்கிறீர்களா? நான் லண்டனுக்கு வந்து 41 வருடங்களாகி விட்டன. நான் லண்டனுக்கு வந்த போது இருந்த ஒரு வெளிநாட்டவருக்கெதிரான உணர்வு இங்கிலாந்து நாட்டு மக்களிடையே மீண்டும் நிலவுவது போல உணர்கிறேன். அதாவது 41 வருடங்களின் பின்னால் வாழ்வு சுழன்று மீண்டும் அதே இடத்திற்கு வந்திருப்பது போன்ற ஒரு நிலை.

    எது எப்படி இருப்பினும் நடப்பவை நடந்தேதான் தீரும் . பல கேள்விகளின் விடையை நாம் காலத்திடம் எதிர்பார்ப்பது போல இதையும் காலத்தின் கையில் விட வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்—(205)

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். சிறியதோர் இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலவோட்டத்தின் சுழற்சியில் சிக்குண்டு அலையும் சருகினைப் போல் எமது வாழ்வும் எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் உழலும் நிலை ஏற்படுவதுண்டு. அத்தகைய ஒரு சூழலில் சிக்குண்டதினால் தான் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது.

    எனது முந்தைய மடலில் இங்கிலாந்தின் தொழிற்கட்சி அதாவது பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ஜெர்மி கோபன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் பற்றி அடுத்த மடலில் கூறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். வரலாறு காணாத வகையில் பல லட்சம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தொழிற்கட்சி அங்கத்தினர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சுவதை விடுத்து அப்படி என்ன சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுவது இயற்கையே!

    ஆனால் ஜெர்மி கோபன் தலைவரானதே ஒரு விசித்திரமான விடயம் தான். பல்லாண்டுகள் பாராளுமன்ற அங்கத்துவராகப் பதவி வகித்தாலும் எப்போதும் தொழிற்கட்சியின் விதிகளுக்குச் சவால் விட்டு நடந்தவர் ஜெர்மி கோபன். உலக அரங்குகளில் பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இயக்கங்களின் அங்கத்தினர்களுடன் அரசியல் அளவிலான தொடர்புகளை எப்போதும் பேணி வந்தவர். இவரை ஓர் இடதுசாரத் தீவிரவாத அரசியல்வாதியாகவே மக்கள் கணித்தனர்.

    பின் எப்படி இவருக்குத் தலைவராகும் சந்தர்ப்பம் கிட்டியது? தொழிற்கட்சியின் பொதுத்தேர்தல் தோல்வியினால் அப்போதைய தலைவர் எட் மில்லிபாண்ட் பதவி விலக, தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயரை முன்மொழியும்போது இப்போதைய லண்டன் மேயரும், அப்போதைய டூட்டிங் நகரப் பாராளுமன்ற உறுப்பினருமான சடிக் கான் , தமது கட்சிக்குள் விவாதத்தை விரிவாக்கும் பொருட்டுத் தலைவராகவே மாட்டார் எனும் நம்பிக்கையில் திரு ஜெர்மி கோபன் அவர்களை முன்மொழிந்தார்.

    விளைவு! யாருமே எதிர்பார்த்திராத வகையில் யார் ஒருபோதும் தலைவராகும் சந்தர்ப்பம் அற்றவர் என்று கருதப்பட்டாரோ அவர் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் காரணம் என்ன என்பதற்குப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.. இயற்கையில் சோஷலிசக் கொள்கைகளைக் கொண்ட தொழிற்கட்சி டோனி பிளேயரின் காலத்தில் மிகவும் மிதவாதக் கொள்கைகளைக் கொண்ட ஒரு நடுநிலைக் கட்சியாக மாறியது. இதன் காரணமாகக் கன்சர்வேடிவ் கட்சிக்கும், லேபர் கட்சிக்குமிடையிலான வேறுபாடு குறுகி, அவையிரண்டும் ஒரே கொள்கையுடைவை போலத் தோற்றமளித்தன. தொடர்ந்துவந்த பொருளாதார நெருக்கடிகளினால் வாழ்க்கைத் தரம் குன்றிய நிலையில் லேபர் கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் போக்கில் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

    அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் நடைமுறை வழக்கம் எனக்கருதப்பட்ட வகையில் மாற்றம் கொண்டு வாக்காளர்கள் பதவியிலிருப்போருக்குப் பாடம் புகட்ட வேண்டும் எனும் ஒரு மனநிலையை அடைந்தனர் . இது ஜெர்மி கோபனின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி எட் மில்லிபாண்ட் தொழிற்கட்சிக்கு வழமையான 20 பவுண்ட்ஸ் செலுத்தி உறுப்பினர்கள் ஆவதோடு  வெறும் 33 பவுண்ட்ஸ் மட்டும் செலுத்தித் தம்மைப் பதிவு செய்பவர்கள் கூடத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் ஒரு தீர்மானத்தைக் கட்சியின் நடைமுறையாக்கினார். இதன் மூலம் பல இடதுசார மார்க்ஸிசக் கொள்கைவாதிகள் தம்மைப் பதிவு செய்துகொண்டு தீவிர மார்க்ஸிசவாதியான ஜெர்மி கோபனுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு.

    சரி… ஜெர்மி கோபனுக்கு வந்த இக்கட்டுதான் என்ன? ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே லேபர் கட்சியின் உத்தியோக நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ஜெர்மி கோபன் அந்நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் வெகுவாக ஈடுபடாததினால் பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் விலக வேண்டும் என்று வாக்களித்து விட்டார்கள். இதுவே இங்கிலாந்து, ஜரோப்பிய யூனியனிலிருந்து விலகவேண்டும் எனும் வாதம் வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் சுமார் 170 லேபர் கட்சி பாரளுமன்ற அங்கத்தினர்கள் ஜெர்மி கோபனின் தலைமைக்குக்கீழ் தாம் இயங்க முடியாது என்று அவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்து விட்டார்கள்.

    விளைவாக நாடு ஒரு முக்கியமான சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் முறையான எதிர்க்கட்சியாக இயங்க முடியாமல் மீண்டும் ஒரு தலைமைப் பதவித் தேர்தலில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது லேபர் கட்சி. இத்தேர்தலில் ஜெர்மி கோபன் மீண்டும் வெற்றியடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. அப்படி அவர் வெற்றியடைந்தால் லேபர் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சந்தர்ப்பங்கள் பல தலைதூக்கியுள்ளன. கட்சியின் நன்மை கருதி ஜெர்மி கோபன் தனது பதிவியை ராஜினாமாச் செய்திருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து.

    ஓர் அரசியல் சுழற்சியின் மத்தியில் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இத்தேர்தல் முடிவுகளின் வழி பிறக்கும் முடிவினை எதிர்பார்ப்பது ஒன்றே தற்போதைய நிலைமையாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    ***

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 204)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    ஒரு வாரம் ! அது இத்தனை நீளமானதா ? ஒரு வாரத்தின் அளவு அவ்வாரத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளின் ஆழத்தில் அமைந்துள்ளது என்று எங்கோ எப்போதோ யாரோ சொன்னதைப் படித்ததாக ஞாபகம். என்ன எதற்காக இவ்வாரத்தின் நீளத்தின் அளவு பற்றிய அலசல் எனும் எண்ணம் எழுகிறதா ? காரணம் இருக்கிறது.

    இங்கிலாந்தின் அரசியல் அரங்கிலே தினமும் மேடையேறும் காட்சிகளும் அதன் மாற்றங்களும் கொடுக்கும் அதிர்வுகளும் அதன் தாக்கங்களும் தாக்கத்தின் விளைவுகளும் முன்பு எப்போதும் காணாதவகையில் நிகழ்வதாக அனுபவத்தில் முதிர்ந்த, பழுத்த பல அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    6a2b06ec-dbe7-4bb1-bfdf-2dbce6c3db78

    எனது இந்த நாற்பத்தியொரு வருட இங்கிலாந்து வாழ்வில் நான் இதுவரை இவ்வேகத்தில் அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்ததை அவதானித்ததேயில்லை. ஆமாம் ஐக்கிய இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா இல்லை வெளியேறுவதா எனும் முடிவை இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன் பொதுமக்களின் கைகளில் கொடுத்தது ஜீன் 23ம் திகதி இன்று இம்மடலை நான் வரைந்து கொண்டிருப்பது ஜீலை 13ம் திகதி , இன்று டேவிட் கமரன் அவர்கள் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராகி விட்டார். ஆமாம் அரசியல் ஆட்டத்தின் வேகம் படுவேகமாக சுழன்றோடி விட்டது.

    e9247de6-bc4c-4124-aaf0-c5c8bd196297அவ்வரசியல் அதிர்வான ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் முடிவு வெளிவந்ததையடுத்து அப்போதைய பிரதமர் அதாவது பெரும்பான்மை பெற்று இரண்டாவது தேர்தல் வெற்றியீட்டி ஒரு வருடமே முடிந்த நிலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த டேவிட் கமரன் அவர்கள் இன்று தனது இராஜினாமாக் கடிதத்தை இங்கிலாந்து மகாராணியாரிடம் கையளித்தார்.

    சரி இவர் தான் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக ஜூன் மாதம் 24ம் திகதி அறிவித்தபோது செப்டெம்பர் மாதம் வரை தனது கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் பிரதமராக பதவியேற்கும்வரை தான் பதவியிலிருப்பேன் என்று கூறியவர் இரண்டே வாரத்தில் வெளியேறியதன் பின்னணி என்ன ?

    டேவிட் கமரனின் கன்சர்வேடிவ் கட்சி அவரின் அறிவித்தலைத் தொடர்ந்து தனது தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் முறையை முடுக்கிவிட்டிருந்தது. அதற்கான தேர்தலில் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் எனப்பிரச்சாரம் செய்த பல கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னணி அரசியல் பிரமுகர்கள் குதிப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் லண்டன் மேயர் பொரிஸ் ஜான்சன் நிச்சயம் தேர்தலில் குதிப்பார் எனவும் தலைவராகும் சந்தர்ப்ப்பம் அவருக்கே கூடுதலாக இருந்தது என்றும் அரசியல் அரங்கில் பலமான கருத்து நிலவியது. ஆனால் நடந்தது என்ன ?

    அவருடன் இணையாக , அவரோடு ஒன்றிணைந்து ஐக்கிய இராச்சியம்b3a04ca6-dd18-423c-855d-fb04c3c41922 வெளியேறவேண்டும் எனப்பிரச்சாரம் செய்த நீதியமைச்சர் மைக்கல் காவ் அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகக் கூடஇருந்து குழி பறிப்பவர் போல தானே தலைவருக்கான தேர்தல் களத்தில் குதித்தார். விளைவு பொரிஸ் ஜான்சன் ஒதுங்கிக் கொண்டார். எதிர்பார்த்தது போல உள்துறை அமைச்சரான திருமதி தெரேசா மே அவர்களும், முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்த லியாம் வொக்ஸ் அவர்களும், வேல்ஸ் நிர்வாக அமைச்சரும், சுற்றுச்சூழல் அமைச்சரும் தேர்தல் களத்தில் குதித்தனர். ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் நீக்கப்பட இறுதியாக திருமதி தெரேசா மே அவர்களும் திருமதி அன்ட்ரியா லீட்சம் அவர்களும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் முன்னால் குதித்தனர். அங்கேயும் மறுபடி ஒரு திருப்பம். என்ன என்கிறீர்களா ?

    கடந்த வாரவிடுமுறை இங்கிலாந்தின் முன்னணி தினசரிகளில் ஒன்றான “த டைம்ஸ் ” எனும் பத்திரிகை தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான அன்ட்ரியா லீட்சம் அவர்களைப் பேட்டி கண்டது வந்ததே சோதனை அன்ட்ரியா அவர்களுக்கு. குழந்தைப் பேறற்ற திருமதி தெரேசா மே அவர்களை விட குழந்தைகள் உடைய, தான் சமுதாயப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் அனுபவம் உடையவர் என்று அவர் கூறியது அப்படியே ஊடகங்களில் வெளிவந்தது.. சும்மா விடுவார்களா ! வெறும் வாயை மெல்பவர்களிடம் அவல் கிடைத்தால் எப்படி இருக்கும் ? வறுத்தெடுத்து விட்டார்கள் அன்ட்ரியா அவர்களை. தாங்காமல் திருமதி தெரேசா மே அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அன்ட்ரியா. அது மட்டுமல்ல கடந்த திங்கட்கிழமை காலை பத்திரிகையாளர்களைக் கூட்டி நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு புதியதோர் பிரதமர் விரைவாகப் பதவியேற்றும் நிலையை உருவாக்க தாம் போட்டியினின்றும் விலகிக் கொள்வதாக அறிக்கை விட்டார். மிஞ்சியது திருமதி தெரேசா மே ஒருவர்தான். “ஏகமனதாக” எனும் முடியைச் சூட்டிக்கொண்டார் திருமதி தெரேசா மே.

    அப்புறம் என்ன ?

    அரசியல் அரங்கின் சக்கரங்கள் வெகுவேகமாகச் சுழன்றன. அன்றையப் பிரதமர் டேவிட் கமரன் , தான் இரண்டு நாட்களில் பிரதமர் பதவியை திருமதி தெரேசா மே அவர்களிடம் கையளிக்கப்போவதாக அறிவித்தார். விளைவாக நான் இக்கட்டுரையை ஆரம்பிக்கும் போது பிரதமராக டேவிட் கமரனும், இதை எழுதி முடிக்கும் போது பிரதமராக திருமதி தெரேசா மே அவர்களும் இருக்கும் நிலை.

    ஆமாம் இப்போது ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமர் ” தெரேசா மே ” அவர்கள். யார் இந்த தெரேசா மே ?

    இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் ஒன்றான ஈஸ்ட் சசெக்ஸ் ( East Sussex) எனும் பகுதியில் ஹுர்பேர்ட் பிரேசியர் என்பவருக்கும் சைடி மேரி என்பவருக்கும் ஒரே மகளாக 1956ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 1ம் திகதி பிறந்தார் (ஓ நான் பிறந்த அதே ஆண்டோ ?) . இவரது தந்தை ஒரு கத்தோலிக்க மதகுரு ஆவார். ஆக்ஸ்வேர்ட் எனும் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பாதிரியாராகப் பணிபுரிந்தார் இவர் தந்தை. ஆக்ஸ்வேர்டு தனியார் பாடசாலையில் கல்வி பயின்ற இவர் , ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் பூமிசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியானர். 1997 ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக மேடின்கெட் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.. தொடர்ந்து ஆறு வருடங்கள் இங்கிலாந்து அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.. இன்று ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

    அவர் முன்னே இருக்கும் சவால்கள் ஏராளம் அவற்றில் எத்தனையை அவர் வெற்றிகரமாகச் சமாளிப்பார் என்பதற்குக் காலம் தான் எமக்கு விடை பகர வேண்டும்.

    இவ்வாரம் நடந்த நிகழ்வுகள் பல அவற்றில் சிலவற்றையே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். லேபர் கட்சியின் தலைவரின் முன்னால் இருக்கும் சவால்களைப் பற்றி அடுத்தவார மடலில் பார்ப்போம்.

    மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 203 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் , இங்கிலாந்து அரசியல் வானிலே அடுத்தொரு மின்னல். 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி ஈராக் நாட்டின் மீது அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து நாடும் இணைந்து தொடுத்ததொரு போர். காரணம் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் கொடுக்கும் பயங்கரமான அமைதியின்மை. அவர் வசம் உலகையே ஆட்டி வைக்கக்கூடிய பயங்கரமான இராசயன ஆயுதங்கள் இருப்பதற்கு ஆதரமாக அமெரிக்க, இங்கிலாந்து உளவுப்ப்படைகளின் அறிக்கை.

    b54e68ed-da78-41ab-9d0e-19da24eda6eb

    இவைகள் தான் அன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலே முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் அவர்களால் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னால் ஈராக் அதிபருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு. இவைகளின் அடிப்படையில் அமெரிக்க நாட்டின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மற்றைய நாடுகளின் உதவியையும் அனுசரணையையும் கோரியது.

    அந்நிலையில் இப்பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பிரித்தானியாவும் தன் முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்தது. டோனி பிளேயருக்கும், அமெரிக்க அதிபரான ஜோர்ஜ் புஷ் அவர்களுக்கிடையிலுமான நட்புணர்வு இருநாடுகளுக்கிடையிலுமான நேச உணர்வுகளை விட மிக நெருக்கமாக உருவெடுத்தது.

    758e9b77-9564-46de-b2e9-fc07206771f8

    அடுக்கடுக்காக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஈராக் நாட்டில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒத்துழைப்பு நல்காமல் அந்நாட்டின் அதிபர் சதாம் ஹூசேன் இழுத்தடிப்புச் செய்தது அமெரிக்காவின் ஈராக் மீதான வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமாக அமைந்தது.

    இவ்வாயுத பரிசோதகர்கள் 1991ம் ஆண்டிலிருந்து இவ்வாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆனால் ஈராக் அதிபரோ அவர்களை தம்மால் முடிந்தளவு இடையூறுகளுக்கு முகம் கொடுக்க வைத்து அவர்கள்கின் முயற்சியில் தோல்வியுறச் செய்தார்.

    அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஈராக் நாட்டிற்கெதிராக பல ஜநா சார்பான சட்டங்கள் அமுலாக்கப்பட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஈராக் அதிபரினால்
    மீறப்பட்டு வந்தது.. இந்நிலையில் தான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீதான் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்கா தனது இராணுஇவ மகத்துவத்தை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. அச்சமயம் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது ஈராக்கும், சர்வதேச சட்டதிட்டங்களை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அதன் அதிபர் சதாம் ஹூசேனும்.

    அமெரிக்கா இராக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை சதான் ஹூசேன் அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார். எப்படி என்கிறீர்களா ? அனைத்து சர்வதேச சட்டதிட்டங்களுக்கும், புறம்பாக தமது அயல்நாடான குவைத் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றியதே !.

    குவைத் நாட்டை ஈராக்கிடம் இருந்து மீட்பதற்கும் அமெரிக்காவின் தலைமையிலேயே போர் நடந்தது . அப்போதைய அமெரிக்க அதிபர் சீனியர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஈராக் இராணுவத்தை குவைத்திலிருந்து கலைத்ததன் பின்னர் தமது போரை நிறுத்திக் கொண்டார். ஆனால் அப்போரைத் தொடர்ந்து ஈராக்கில் சதாம் ஹூசேனின் ஆட்சியை மாற்றியமைத்திருக்க வேண்டும் என்று சில அரசியல், இராணுவ அவதானிகள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தனர்.

    சரி இந்த அலசலெல்லாம் எதற்காக என்னும் கேள்வி எழுகிறது இல்லையா ? இங்கிலாந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரில் ஈடுபட்டது சட்டத்திற்குப் புறம்பானது எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வந்ததினால் சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் இப்போரின் தன்மைகளைப் பற்றி ஆராய ஒரு விசாரணைக் கமிஷன் “ஜான் சில்க்கொட்” என்பவரின் தலைமையில் நிறுவப்பட்டது.

    சுமார் ஏழு வருடங்களாக இவ்வாரய்வு நிகழ்த்தப்பட்டது. இதை இவர்கள் இழுத்தடிப்பது பூசிமெழுகுவதற்காகவே எனும் அபிப்பிராயம் நிலவியது. இவ்வபிப்பிராயத்தின் பின்னனியில் பலவிதமானோர் சம்பந்தப்பட்டிருந்தனர். இப்போரில் தமது உறவினர்களை பறிகொடுத்த இங்கிலாந்து மக்கள், மூன்று தடவைகள் தொடர்ந்து வெற்றியீட்டிய முதலாவது லேபர் கட்சிப் பிரதமர் எனும் பெயரைத் தட்டிக் கொண்ட டோனி பிளேயர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றுக் கட்சியினர். தமது கலாச்சாரப் பின்னனியான தீவிர இடதுசாரக் கொள்கையினின்றும் விலகி மிதவாத இடதுசாரக் கொள்கையைக் கடைப்பிடித்த டோனிபிளேயர் மீது பகையுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக கங்கணம் கட்டிக் கொண்டவரது கட்சியைச் சேர்ந்த தீவிர இடதுசாரக் கொள்கையைக் கொண்டவர்கள்.

    ஆனால் ஏழு வருடங்களின் இவ்விசாரணைக் கமிஷனின் அறிக்கை நேற்ரு அதாவது 6ம் திகதி வெளியிடப்பட்டது.. இவ்வறிக்கை அநேகரின் கருத்துப்படி பூசிமெழுகப்பட்ட அறிக்கையாக இல்லாமல் மிகவும் அடிமட்டம் வரை சென்று மிகவும் விரிவான ஆய்வு நடாத்தப்பட்டதன் விளைவான அறிக்கையாகவே காணப்படுகிறது.. அவ்வறிக்கையின் முக்கிய முடிவுகள்,

    ஈராக் மீதான போர் மிகவும் அவசரப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை.

    ஈராக் நாட்டில் மிகவும் பயங்கரமான இரசாயனத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளது எனும் உளவுத்துறையின் அறிக்கை சரியான தகவல்களின் அடிப்படையில் அமையவில்லை. இதனை யாரும் தட்டிக் கேட்கவில்லை.

    இப்போருக்கான காரணத்தை நியாயப்படுத்த அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் மிகவும் ஆர்வமாக எல்லையைக் கடந்து செயல்பட்டிருந்திருக்கிறார்.

    நாட்டு மக்களையும் , பாராளுமன்றத்தையும் ஏமாற்றி இப்போரை டோனி பிளேயர் நடத்தவில்லை.

    இப்போருக்கான காரணத்தை உண்மையாக டோனி பிளேயர் ஏற்றுக் கொண்ட காரணத்திலாயே அவர் இப்போரில் இங்கிலாந்தை இணைத்துக் கொண்டார்.

    அமெரிக்காவுடன் நட்பு நாடாக இணைந்து செயலாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்த டொபொனி ப்ளேயர் இதன் மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்கலாம் என்று நம்பியதால் தான் இப்போரில் ஆர்வம் காட்டினார்.

    இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் இப்போரில் தமது உறவினர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் மிகவும் கொப்புடன் உள்ளார்கள்.. தாம் தமது உறவுகளை இழக்கக் காரணமாக இருந்தவர் டோனி பிளேயர் என்றும் இவரைப் போர்க்குற்றவாளியாக்கி சர்வதேச போர்குற்றவாளிகளை விசாரிக்கும் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

    ஆனால் சட்டம் பயின்றவர்களும், சட்டம் அறிந்தவர்களும் இவ்வறிக்கையில் டோனி பிளேயர் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையில் அவரை குற்றம் சாட்டவில்லை என்கிறார்கள். இவ்வறிக்கை சமர்ப்பித்ததின் பின்னால் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டோனி பிளேயர் தான் பிரதமராக இருந்த பொழுது தான் எடுத்த முடிவுகளின் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இப்போரில் ஏற்பட்ட பின்விளைவுகளின் பிரகாரம் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தின் பாரத்தையும் என்னெஞ்சில் எவ்வாறு சுமக்கிறேன் என்பதை அறிந்தவர்கள் இல்லை என்றார். தான் தவறு செய்தாக யாரும் எண்ணியிருந்தால் தான் அவர்களின் மன்னிப்புக் கோருவதாகக் கூறிய அதேசமயம் அன்றைய சூழலில் ஒரு பிரதமராக தான் எடுத்த முடிவு தன் நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பைக் கருதியே எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

    ஆனால் இவரது வாதங்களை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவர் , நாட்டின் எத்தனையோ நன்மை பயக்கக்கூடிய மாற்றங்களுக்கு காரணமாகவிருந்தவர் இன்று குற்றவாளியென விமர்சிக்கப்பட்டு, தன் நாட்டு மக்களையே லட்சக்கணக்கில் கொன்றுகுவித்த சதாம் ஹூசேன் அவர்களுக்கிணையாக விமர்சிக்கப்படுவது முறையா ? என்பது ஒரு நியாயமான கேள்வியே !

    ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னால் அதைப்பற்றிய பலவிதமான விமர்சனங்களையும் செய்வது மிகவும் இலகுவான செயலே. ஆனால் அன்றைய பொழுதில் தான் எடுக்கப் போகும் முடிவு தனது நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு அம்முடிவை எடுத்திருந்தால் இன்று அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முயற்சிப்பது சரியான செயலா ?

    பல கேள்விகள் பல முனைகளில் இருந்து எழுகின்றன. இவையனைத்துக்கும் விடையை காலச்சுழற்சி பகருமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 202 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வாரம் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் நிறைந்த வாரமாக இடம்பெறப் போகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னால் அடுக்கடுக்காய் வரும் சிறு அதிர்வுகளும் அவ்வதிர்வுகளினால் ஏற்படும் விளைவுகளும் சகஜம் என்பது போல ஜாரோப்பிய ஒன்றியத்தின் உள்ளேயா ? வெளியேயா ? என்பதற்காக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் அரசியல் அதிர்வின் விளைவுகள் இன்னும் விளைந்து கொண்டே இருக்கின்றன.

    23853e20-b8a6-44db-9470-c068ca104c65கடந்த வியாழக்கிழமை 23ம்திகதி நடைபெற்ற இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா ? இல்லை தொடர்ந்து அங்கம் வகிப்பதா எனும் கேள்விக்கு இங்கிலாந்து மக்கள் 52% வெளியேற வேண்டும் என்றும் 48% அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதைற்கமைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பதை அரசாங்கம் மக்கள் ஆணையாக ஏற்று அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    இம்முடிவு ஒரு அரசியல் அதிர்வாகவே அமைந்து விட்டது. இங்கிலாந்து அரசாங்கமும், பிரதமரும், எதிர்க்கட்சியும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை எனது கடந்தவார மடலில் தெரிவித்திருந்தேன். ஆனால் மக்களின் முடிவு அவர்கள் எதிர்பார்த்ததைப் போலல்லாது முக்கியமான அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணானதாக அமைந்து விட்டது.

    தேர்தல் முடிவு வெளியான வெள்ளியன்று காலை பிரதமர் தனது உத்தியோக வாசஸ்தலத்திற்கு வெளியே பத்திரிகைகளுடனான ஒரு சந்திப்பை நடத்தி தான் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற தனது வேன்டுகோளை நிராகரித்த மக்களின் ஆணையை நிறைவேற்றும் தகமையைத் தான் இழந்து விட்டதாகக் கூறிய அவர் , இங்கிலாந்தை ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை புதிய பிரதமரும், புதிய அமைச்சரவையுமே கொன்டு செல்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றார் பிரதமர்.

    ஆயினும் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படும் வரை தான் மூன்றுமாத காலத்திற்கு தொடர்ந்து நாட்டின் தலைமையை முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அரச அதிகாரத்திலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தமக்கான புதிய தலைவரின் மூலம் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு செப்டெம்பர் 9ம் திகதி புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

    சரி இனி இந்த முடிவு கிளப்பிய அடுத்த அதிர்வலையைப் பார்ப்போம். எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான ஜெர்மி கோர்பன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தலைவலி. ஜேர்மி கோர்பன் பலகாலமாகவே லேபர் கட்சியின் இடதுசார முன்றலில் நின்றவர், நிற்பவர் அவர் எப்போது ஜரோப்பிய ஒன்றியத்திற்கு முரணான கருத்தையே கொண்டிருந்தார் ஆனால் காலத்தின் கோலத்தால் லேபர் கட்சியின் தலைவராக்கப்பட்டார். லேபர் கட்சியின் பெரும்பான்மையினர் ஜரோப்பிய ஒன்றியத்திற்ல்கு சார்பான கொள்கை கொண்டிருந்ததால் அக்கட்சியின் கொள்கையாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் காரணமாக லேபர் கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் முழுமனதுடன் ஈடுபடவில்லை அதனால் லேபர் கட்சியை ஆதரிப்பவர்கள் மத்தியில் லேபர் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி தெளிவான நிலை இருக்கவில்லை. விளைவு லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட இடங்களிலேயே ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான வாக்களிப்பே நிகழ்ந்தது.

    தமது கட்சியின் தலைவர் கட்சியை வழிநடத்தும் தகமை அற்றவர். இவரின் தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் தமது கட்சி மூழ்கிப் போவது நிச்சயம் எனும் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் வந்தனர். ஒவ்வொருவராக ஏறக்குறைய 75% வீதமான நிழல் அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்தது மட்டுமன்றி தமது தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்திர்கு ஆதரவாக 172 உறுப்பினர்களும் எதிராக 40 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஜெர்மி கோர்பன் அவர்கள் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் எனும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் அவரோ தன்னைத் தேர்ந்தெடுத்த சாதாரண உறுப்பினர்களின் நம்பிக்கையை தான் சிதறடிக்கப் போவதில்லை என்றும் தன்னைப் பதவியிலிருந்து இறக்க வேண்டுமானால் ஜனநாயக வழியில் தன்னை எதிர்த்து தலைமைப் பதவிக்கு போட்டியிடலம் என்றும் கூறியுள்ளார்.

    சரி அடுத்த அதிர்வலைக்கு வருவோம். ஜக்கிய இராச்சியமானது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியதாகும். நடந்த இந்த ஜரோப்பிய ஒன்ரியத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து நாட்டு மக்கள் 56% மானோர் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று வாக்களித்துள்ளனர். இதன் பிரகாரம் ஸ்கொட்லாந்து நாட்டின் சட்டசபையின் முதலமைச்சர் தமது நாட்டை தமது மக்களின் ஆணைக்குப் புறம்பாக ஜக்கிய இராச்சியத்தோடு இணைத்து வெளியே எடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனும் வாதத்தை முன்வைக்கிறார் . ஜக்கிய இராச்சியம் தமது விருப்பத்திற்கு எதிராக நடக்க முற்பட்டால் தாம் தமது நாடு ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்லும் மக்களின் அபிலாஷயை அறிந்து கொள்ள இரண்டாவது ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

    அதேபோல் வட அயர்லாந்தும் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க விரும்புவதாக வாக்களித்துள்ளார்கள். அவர்களும் இதன் மூலம் தாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் ஜக்கிய இராச்சியத்தின் முடிவு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

    அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் தீர்வு பற்பல பிரச்சனைகளைக் கிளறி விட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன் பிரஸ்ஸல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்து இங்கிலாந்தின் முடிவைப் பற்றிய விளக்கத்தை மற்றைய ஜரோப்பிய தலைவர்களுக்கு விளக்கிக் கூறியுள்ளார். அவர்களோ ஜரோப்பிய ஒன்றியத்தின் சாசனத்தில் 50 வது ஷரத்தான விலகுதல் எனும் ஷரத்தை முடுக்கி விட்டால் ஒழிய எதுவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் நாம் இடமளிக்கவே மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்..

    சரி இனி பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக மக்கள் வாக்களித்தது ஏன் ? முதலாவதாக மக்கள் இதுவரை நடந்த அரசியலை தூக்கி எறியும் வண்ணம் நடந்துள்ளார்கள் எனும் கருத்து நிலவுகிறது . அத்தோடு இங்கிலாந்துக்குள் நுழையும் அந்நியதேசத்தவரின் எண்ணிக்கையின் அளவு எதிர்பார்த்த அளவில் கட்டுப்படுத்தாது ஒரு காரணம். இக்காரணமே கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

    மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவெனில் இங்கிலாந்தின் பல்லினக் கலாச்சார மக்கள் வாழும் நகரமாகிய பேர்மிங்காம் நகர் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையேயாகும். பேர்மிங்காம் நகரம் நிச்சயமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ந்த அங்கத்துவத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றே அரசியல் அவதானிகளின் கருத்து அமைந்திருந்தது.

    ஆனால் இந்த “வெளிநாட்டுக்காரரின் இங்கிலாந்து வருகை என்பதை முன்னிலைப்படுத்தி பல முன்னனி அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்தமையால் இங்கிலாந்து மக்களின் மனங்களில் என்றுமில்லாதவாறு நிறவெறி, இனவெறி என்பன தலைதூக்கப்பட்டு விட்டதோ எனும் அச்சம் பலர் மனதில் ஊசலாடுகிறது.

    இனவெறி, நிறவெறி தொடர்பான குற்றச்செயல்கள் கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குப் பின்னர் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்தவார சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் சுனாமி அலை கொடுத்த அரசியல் அதிர்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று காலை அனைவராலும் அடுத்த பிரதமராவார் என்று எதிர் பார்த்திருந்த முன்னாள் லண்டன் மேயர் பொரிஸ் ஜான்சன் தான் டேவிட் கமரன் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக விண்ணப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்தது அனைவரின் மத்தியிலும் மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சரி போனவாரம் நான் எவ்வாறு வாக்களித்தேன் என்று இந்தவாரம் சொல்கிறேன் என்று சொன்னதன் பிரகாரம் நான்,

    “ஜரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டும்” என்றே வாக்களித்திருந்தேன். ஆனால் முடிவு எதிராக இருக்கிறது . எது எப்படி இருப்பினும் வருவதை எதிர்கொள்வதுதானே யதார்த்தம். காலம் தனது கைக்குள் என்ன வைத்திருக்கிறது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (201)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    2016 ஜீன் மாதம் 23ம் திகதி. இங்கிலாந்து மக்களின் மனதில் பொறித்து வைக்கப்பட வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

    அப்படி என்ன முக்கியத்துவம் இங்கிலாந்தில் ? எனும் கேள்வி எழுகிறதா ?

    இங்கிலாந்தின் எதிர்கால அரசியல், பொருளாதார முன்னேற்றம் , இங்கிலாந்து இனிவரும் காலத்தில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான நாள்.

    இதை நிர்ணயிக்கும் உரிமையை மக்களின் கைகளில் இங்கிலாந்தின் அரசாங்கம் கொடுத்திருக்கும் நாள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! என்பதற்கமைய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான ஒவ்வொரு குடிமகனுக்கும் எமது நாடு இந்தப்பாதையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை அரசாங்கத்துக்கு ஆணையிடும் தீர்மானத்தை எடுக்கும் ஒரு அதிமுக்கியமான நாள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக தொடர்ந்தும் வீற்றிருப்பதா ? இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று மக்களின் கைகளில் அதிகாரத்தை அரசாங்கம் கையளித்து அதற்கான வழிமுறையான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் அடிப்படையில் இன்றுதான் மக்கள் தமது முடிவை தெரியப்படுத்தும் முக்கியமான நாள்.

    இன்றைய வாக்கெடுப்பு இன்று முன்னிரவு நான் இம்மடலை எழுதிக்கொண்டிருக்கும் 23ம் திகதி 10 மணிவரை நடைபெறும். அதன்பின்னால் வாக்கெடுப்பு முடிவுக்கு வந்து வாக்கெண்ணிக்கை நடைபெறும். நாளை காலை தாவது 24ம் திகதி காலை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்விக்கு இங்கிலாந்து மக்கள் அளித்த பதில் தெரியப்படுத்தப்படும்.

    இன்று ஜரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் இங்கிலாந்து அதிமுக்கியமான ஒரு நாடாகக் கணிக்கப்படுகிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகளில் இங்கிலாந்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வைரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான அம்சமாக அனைத்து அங்கத்துவ நாடுகளும் எதுவித தடைகளும் இன்றி தமது பொருட்களை வியாபாரம் செய்யக்கூடிய தனிச் சந்தை single market கருதப்படுகிறது.

    இங்கிலாந்து மக்களின் அபிலாஷை ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று முடிவானால் இத்தனிப் பொருளாதாரச் சந்தையின் மூலம் இங்கிலாந்து வியாபார நிறுவனங்களுக்கு கிடைக்கும் 500 மில்லியன் பாவனையாளர்களின் தளம் கிடைக்காம்மல் போகும். இது இங்கிலாந்தின் பொருளாதார நிலையை மிகவும் அதிக அளவில் பாதிக்கும் இதுவே இன்றைய பல இங்கிலாந்து, சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள், பல நேசநாடுகளின் தலைவர்களின் அச்சமாக இருக்கிறது.

    அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் எனும் கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் இவ்வைரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை பின் தள்ளுகிறது எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள். இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்காக கட்டும் பணத்தை மீதப்படுத்துவதனால் அதனை இங்கிலாந்து மக்களின் தேவைகளுக்காக செலவழிக்கலாம் என்பதும் அவர்கள் வாதமாகிறது..

    இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன், மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள எழுபத்தைந்து வீதமான அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பெரும்பான்மையான எதிர்க்கட்சி அங்கத்தினர்கள். லண்டன் மேயர் சாடிக் கான் , மற்று,ம் பல முன்னாள் அமைச்சர்கள், பிரதமர்கள் அனைவரும் இங்கிலாந்தின் ஜரோப்பிய அங்கத்துவம் தொடர வேண்டும் என்றே கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள்.

    அதேபோல சில முன்னைநாள் நிதியமைச்சர்கள் , முன்னாள் இலண்டன் மேயர் , சில எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் இங்கிலாந்து ஜரோப்பிய அங்கத்தினர் அந்தஸ்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்பிரச்சாரங்களில் வெளிநாட்வரின் இங்கிலாந்து புகலிடம் கொள்கையே முதன்மை பெற்று நின்றது. இவ்வாதம் சில சமயங்களில் பிரிவினை எனும் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்கிறதோ எனும் சந்தேகம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது..

    இன்றைய இங்கிலாந்து பொருளாதாரப் பட்டியலில் உலகில் ஜந்தாவது இடத்தைப் பெற்று நிற்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்தின் செல்வாக்கின் ஆதிக்கம் இடம்பெறுகிறது. இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

    கடந்த 41 வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியச் சூழலில், ஜரோப்பிய ஒன்றியத்தின் தொடர் மாறுதல்களில் தீவிர பங்களிப்புச் செய்து வந்த இங்கிலாந்து இவ்வொன்றியத்திலிருந்து வெளியேறுவது ஒரு எதிர்பார்க்காத எதிர்காலத்தினுள் காலடி எடுத்து வைப்பதைப் போன்றதே. இப்போதுதான் ஒரு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீன்டு வந்து கொண்டிருக்கிறது இங்கிலாந்தின் பொருளாதாரம். இப்பொருளாதார வீழ்ச்சி கொடுத்த வரவு செலவு கணக்கில் விழுந்த துண்டை சரிப்படுத்துவதற்காக பொதுத்துறையில் செய்யும் செலவுகளைக் கட்டுப்படுத்தியதால் மக்களின் பல சேவைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இந்த ஒரு நிலையில் , இத்தகைய ஒரு திருப்பத்தில் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சியக் கொடுப்பது அவசியமா ? இன்றைய இங்கிலாந்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே வருவதுதான் தீர்வாகுமா ? வெளியே வந்தும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின் அதன் பின்னான நிலை என்ன ?

    ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்பு அத்தீர்மானம் பிழையானது என்று அறியப்படுமானால் மீண்டும் அவ்வொன்றியத்தின் அங்கத்துவத்தைப் பெறுவது சுலபமான விடயமா?

    பல கேள்விகள் பல அரசியல் அவதானிகளால் எழுப்பப்படுகின்றன. ஆளும் அரசியல் கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று இச்சர்வஜன வாக்கெடுப்பினால் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்து மக்களின் முடிவு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் சார்பாக வருகிறதோ இல்லையோ நிச்சயமாக இங்கிலாந்து அரசியல் ஆழியில் இது சுனாமியைக் கிளப்பி விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    என்ன இவ்வளவு சொல்கிறாயே உனது வாக்கு எந்தப் பக்கம் என்கிறீர்களா? பொறுத்திருங்கள் அடுத்தவாரம் சொல்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (200)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்திலிருந்து இச்சிறியேனின் அன்பு வணக்கங்களுடன் இந்த மடலின் மூலம் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன் .

    fe670b57-95b4-4996-af2a-ee09fc7e1a3f

    இது நான் உங்களுக்கு வரையும் 200வது மடல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர் வாழ்வின் உத்வேகத்துடனான சுழற்சியினுள் அகப்பட்டு ஆழியினுள் ஒரு சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்படும் மீனைப்போல காலவோட்டத்தோடு இழுத்துச் செல்லப்படுகையில் மனதின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாய் இம்மடலின் மூலம் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அனைவர்க்கும் பொதுவான இறைக்கு நன்றியைச் செலுத்துவதோடு அன்பினிய வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமுவந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

    இன்று காலை விழித்தவுடன் இன்று 200வது மடல் எழுதப் போகிறேன் எனும் எண்ணம் எழுந்தபோது கூடவே இதன் மூலம் என்ன சாதித்து விட்டாய் என்றவொரு கேள்வியும் எழுந்தது. “சாதனை” என்றால் என்ன அதன் எல்லையை நிர்ணயிப்பது யார்? என்று சிந்தித்தபோது ஒவ்வொரு நாளும் வாழ்வினை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்ந்து முடிப்பதே ஒரு சாதனைதான் எனும் பதிலும் கிடைத்தது.

    என்று என் எழுத்து நிற்கிறதோ அன்று எனது மனிதவாழ்க்கையின் அர்த்தமும் நின்றுபோய்விடும் என்பது உண்மை. என்னைப் பொருத்தவரை எழுத்து என்பது என்னை வாழவைக்கும் போஷாக்கு. உள்ளத்தில் ஓடும் உணர்வுகளை ஒன்று கோர்த்து அதனை சிந்தனை எனும் வடிதட்டினூடாக வடித்தெடுத்து அதை எழுத்துக்களாக வார்த்தெடுப்பது கூட ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போல, ஒரு ஓவியன் ஓவியத்தை வரைவது போல கலையின் அம்சமே என்பது உண்மையே.

    என் வாழ்வின் ஒரு 35 வருடகாலத்தை நான் எப்படிச் செலவழித்தேன் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது என்னுள் எனக்குக் கிடைக்கும் தகவல்கள் பலசமயங்களில் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன, ஆத்திரப்பட வைக்கின்றன, ஆனந்தப்பட வைக்கின்றன, ஆராதிக்க வைக்கின்றன ஏன் சிலசமயங்களில் அழக்கூட வைக்கின்றன.

    ஆனால் எனது எழுத்தின் அடிப்படை, எழுதத்தூண்டும் உணர்வுகளின் பிறப்பிடம் எனக்கு நான் கடந்து வந்த பாதைகளின் அனுபவத் திரட்டு என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும். நான் இந்த மடல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பகிர்ந்து கொள்ளப்போவது என் மனதில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளே ! ஒரே நிகழ்வு பலரது பார்வையில் பலவிதமாகப்படும் என்பதே உண்மை. அந்த வகையில் ஒரு புலம்பெயர் தமிழனின், இங்கிலாந்தினை தனது வாழ்விடமாக வரித்துக் கொண்ட ஒரு தமிழனின் பார்வையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதே எனது மடலின் சாரமாக அமைகிறது.

    சில மடல்களில் இங்கிலாந்தின் அரசியல் நிகழ்வுகள், சில மடல்களில் இங்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகள், இங்குள்ள மக்களின் கலாச்சார வாழ்க்கைமுறை, வாழ்வின் எனது அனுபவங்களின் தாக்கத்தினால் எனது மனதில் விளைந்த எண்ணவோட்டங்கள் என பலவிதமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன், பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

    நான் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. “இப்போ படுக்கைக்குப் போகும் நேரமா? இல்லை விளையாட்டு நேரமா? “ என்று கேட்ட பேரக்குழந்தையை மடியில் இருத்தி ஒரு தாத்தா கூறுகிறார். “ நான் உன்னைப் போல் குழந்தையாக இருந்தபோது எல்லையில்லாத நேரம் இருந்தது. நான் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிந்தது நேரம் மெதுவாக நகர்வது போலத் தென்பட்டது எப்போது வளர்வேன் என்று காத்திருந்தேன். வளர்ந்து வாலிபனாகிப் பெரியவனானதும் எதற்குமே நேரம் போதாததாக இருந்தது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இப்போது வயதுபோன முதுமைப்பருவத்தில் என் பின்னால் எல்லையில்லா நேரம் இருக்கிறது முன்னால் இருக்கும் நேரமோ சொற்பமானது. இப்போதுதான் புரிகிறது நேரம் என்பது எப்போதும் ஒன்றுதான் அதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் தான் அதன் அளவும் இருக்கிறது” என்றார்.

    ஆமாம் முதுமையின் வாசலில் வந்து நிற்கும் என்முன்னே நான் மனதில் எண்ணுபவற்றை எழுதி முடிக்க என் வாழ்வின் நீளம் போதுமானதா ? எனும் சந்தேகம் பிறக்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் எழுத வேண்டும் எனும் உணர்ச்சி மடையால் அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தைப் போல் வீரியத்தோடு சீறிப்பாயக் காத்திருக்கிறது.

    என்னைச் செதுக்கியவர்களைப் பற்றி என் மனதில் எழும் எத்தனையோ எண்ணங்கள் வடிக்கப்படாத ஓவியங்களாக என் மனத்திரையினில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் தடைப்பட்டுப் போயிருந்த எனது “தமிழ்ப்பூங்கா” இதழை மீண்டும் காலாண்டு இதழாக உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் அந்த அனைவர்க்கும் பொதுவான இறையின் அருளால் மீண்டும் விரைவில் தமிழ்ப்பூங்கா இணையவழி மூலம் தவழும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

    நடந்து முடிந்த சென்னைப்புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது எனது எட்டாவது நூலான “வியத்தகு விஷயங்களை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி”.

    முகநூலில் நான் கவியரசருக்குக் கட்டியிருக்கும் ஒரு நினைவூஞ்சல், அன்பு ஜயாவும் என்னைச் செதுக்கியவர்களில் ஒருவருமான வாலி ஜயாவுக்கான “வாலிபக் கவிஞன் வாலி” பக்கம் என எழுத்தோட்டத்தின் சிறிய கால்வாய்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. நெஞ்சினில் ஊறும் எண்ணங்களை எழுத்தாக வடிக்கும் இம்முயற்சிகளின் ஆணிவேரே வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் அன்பும் , ஆதரவும் வல்லமை ஆசிரியர் சகோதரி பவளா உட்பட்ட ஆசிரியர் குழுவினர் மற்றும் பல இணையத்தளங்கள் எனக்கு அளித்திடும் தொடர்ந்த ஆக்கப்பூர்வமான ஊக்கமும் இல்லையேல் எனது எழுத்துக்கள் இல்லை.

    cf943616-7e5a-4ab4-9fe0-aff751956248

    இத்தனை காலமும் எனக்கு அளித்துவந்த அதரவுபோல தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு எனது இந்த 200வது மடலில் உங்களுக்கு எனது பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (199)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். புதுவருடம் பூத்து ஜந்து மாதங்கள் காற்றோடு கலந்து போய் ஆறாவது மாதத்தில் காலூன்றி நிற்கிறோம்.

    இந்த ஜந்தாவது மாதம் இங்கிலாந்தை அதாவது ஜக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான ஒரு மாதமாகக் கணிக்கப்படுகிறது. அதன் காரணம் ஜக்கிய இராச்சியம் வரும் காலத்தைப் பாதிக்கப் போகும் ஒரு முக்கியமானமுடிவைத் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறது.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியம் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா? என்று தீர்மானிக்கும் உரிமை ஜக்கிய இராச்சிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு இம்மாதம் 23ம் திகதி நடைபெறவிருப்பதே இம்மாதத்தின் முக்கியத்துக்குரிய காரணமாகிறது.

    இந்தச் சந்தியில் நாம் இப்போது வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன ? ஜரோப்பிய பொதுச்சந்தையில் அங்கத்துவராவது என்று தீர்மானிக்கும் முடிவை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஹரால்ட் வில்சன் அவர்களின் தலைமையிலான லேபர் அரசாங்கம் இதேபோன்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் 1075ம் ஆண்டு எடுத்தது. அதன் பின்னால் அப்பொதுச்சந்தை முறையிலான ஐரோப்பிய கூட்டுறவு விரிவாக்கலுக்குள்ளாகி இன்று ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளடங்கிய வடிவிலான ஐரோப்பிய ஒன்றியமாகி நிற்கிறது.

    1975ம் ஆண்டிற்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் எவ்விதமான விரிவாக்கலுக்கும் பொதுமக்களின் முடிவு அறியப்படவில்லை. இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இதன் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவிலான பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. பின்பு அத்தொகையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் முடிவின்படி அங்கத்துவ நாடுகளின் பல்வேறு தேவைகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது.

    இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை முற்று முழுதாக எதிர்க்கும் கருத்துகளை உடையவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பல அரசியல் கட்சிகளிலும் பரவலாக இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஐக்கிய இராச்சியம் செலுத்தும் பணத்தை நாமே எமது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேவையற்ற பல உள்நாட்டு விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவது எமது நாட்டின் இறைமைக்குச் சவாலாக உள்ளது எனும் கூக்குரல் பல காலமாக எழுந்து கொண்டிருந்தது.

    சமீப பொருளாதார வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்த வெளிநாட்டாளர்கள் ஐக்கிய இராச்சியத்துக்கு குடியேறும் விகிதாசாரம் அளவுக்கதிகமாகியதாலும் இக்கூக்குரல் பெரும்பான்மையான கோஷமாக உருவெடுத்தது. அதன் காரணமாக கடந்த பாராளுமன்றத்தில் பிரதமரான டேவிட் கமரன் தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் தொடர வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கக் கூடிய வகையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாகக் கொள்கைப்பிரகடனம் செய்திருந்தார். அதன் விளைவே இன்றைய இந்த சர்வஜன வாக்கெடுப்பு.

    இந்தச் சர்வஜன வாக்கெடுப்பை அறிவிப்பதற்கு முன்னால் பிரதமர் டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னால் சில கோரிக்கைகளை வைத்தார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து தொடர்ந்து அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்பதைத் தான் தனது மக்களுக்கு பரிந்துரைக்க வேண்டுமானால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காக அங்கத்துவம் வகிக்கும் பல நாடுகளின் தலைவர்களை நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளக்கினார். அவரது விளக்கங்களை ஏற்றுக்கொண்ட ஜரோப்பிய ஒன்றியம் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. அக்கோரிக்கைகளில் முக்கியமானவை,
    “ சங்கன் ” எனப்படும் ஜரோப்பிய விசா முறையிலின்றும் ஜக்கிய இராச்சியத்துக்கு விதி விலக்கு.

    ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் ஐக்கிய இராச்சியத்துக்கு குடியேறினால் ஆறு மாதத்துக்குள் பணி செய்ய முடியாவிட்டால் திரும்ப அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும். அத்துடன் பணிபுரியத் தொடங்கி நான்கு வருடத்துக்கு வரி செலுத்திய பின்பே அரசாங்க உதவிப் பணம் பெறும் தகுதியை அடைவார்கள்.

    ஐரோப்பிய ஒன்றியம் அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றிணைவை மேற்கொள்வதானால் அதற்கான விதிவிலக்கு ஜக்கிய இராச்சியத்துக்கு அளிக்கப்படும்.

    மேற்கூறப்பட்டவை பிரதமரின் கோரிக்கைகளில் சில மட்டுமே. இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையால் பிரதமர் சர்வஜன வாக்கெடுப்பை அறிவித்துத்தானும் தனது அரசாங்கமும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.

    பிரதமருக்கு வந்ததொரு சிக்கல் அவரது அமைச்சர்களில் மூவரும், பிரதி அமைச்சர்களில் சிலரும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்தார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் லண்டன் மேயருமான பொரிஸ் ஜான்சன் ஜக்கிய இராச்சியம் விலக வேண்டும் எனும் அணிக்கு தலைமை தாங்கினார், இதே கருத்தை முன்வைத்து ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் வ்ராஜ்ன மற்றொரு அணிக்குத் தலைமை தாங்கிப் பிரச்சாரம் செய்கிறார்.

    இந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு இன்னும் இரண்டே வாரங்கள் தானுள்ளன எனும் நிலையில் இப்பிரச்சாரங்கள் வெகு வேகமாக சகல ஊடகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் எனும் அடிப்படையில் தமது கருத்துக்களை முன்னெடுப்பது சிரமம் எனக்கண்ட “விலகுதல்” அணியினர் “வெளிநாட்டினரின் குடியேற்றம் ” அதாவது immigration என்பதனை முதன்மைப்படுத்தி தமது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இதற்குச் சார்பாக இவர்கள் முன்வைக்கும் சிலவாதங்கள் வெளிநாட்டுக்காரருக்கெதிரான இனத்துவேஷத்தை தூண்டுகிறதோ எனும் ஐயம் பலதரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.

    இல்லை நாம் வெளிநாட்டினருக்கெதிரானவர்கள் அல்ல நாட்டின் மக்கள் மனங்களில் எழும் அதிருப்தியையே நாம் முன்வைக்கிறோம். உள்நாட்டினரின் வாழ்க்கைத் தராதரம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் என்கிறார்கள்.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதன் மூலம் மிகப் பரந்த அளவிலான வியாபாரத் தளத்தினுள் எமது வியாபாரத்தை முன்னெடுக்கும் வல்லமை எமக்கிருக்கிறது. எமது நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதே சாலச்சிறந்தது என்கிறார்கள் “இணைந்திருப்போம்” அணியினர். ஒவ்வொரு அணியினராலும் முன்வைக்கப்படும் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என மற்றைய அணியினரால் குற்றம் சாட்டப்படுகிறது.

    பல பொருளாதார நிபுணர்கள் , சர்வதேச நிதியமைப்புகள், பல வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பவில்லை. இது அவர்களது சுயநலத்தின் அடிப்படையில் அமைந்தது என்கின்றனர் “விலகுதல்” அணியினர்.

    இவ்வாதப் பிரதிவாதங்களில் பல முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள் மிகவும் முனைப்புடன் குதித்துள்ளனர். பல மக்கள் இன்னும் குழம்பிய நிலையில் இருப்பது போலவே தென்படுகிறது.

    எது எப்படி இருப்பினும் இது எம் வாழ்நாளில் நாம் எடுக்கும் ஒரு பெரிய தீர்மானம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கிடையாது, ஆயினும் இவ்வாக்கெடுப்பு முடிந்ததும் பிரதமரின் நிலை, அரசாங்கத்தின் நிலை எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியே !

    ஏன் என்கிறீர்களா ?

    அமைச்சரையே பிரிந்து வாதம் செய்கிறது. அவ்வாதங்களில் சில தனிப்பட்ட தாக்குதல்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விடையை சர்வஜன வாக்கெடுப்பின் முடிவினைப் போல ஜீன் 23ம் திகதிக்குப் பின்னரே நாம் அறிய முடியும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (198)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மனந்திறப்பதில் மகிழ்வடைகிறேன். வாழ்வெனும் ஓட்டப்பந்தயத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறோமோ அன்றி கடைசியில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ இல்லை இடைநடுவில் ஓடிக் கொண்டிருக்கிறோமோ எமது நிலை என்னவெனினும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியது எமது நியதி.

    ஒரு ரயிலில் உட்கார்ந்திருக்கும்போது நாம் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் அந்த ரெயில் எம்மைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டேயிருக்கும். யன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகள் அதிவேகத்தில் எம்மைக் கடந்து செல்வதைப் பார்க்கும் போதுதான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எமக்குப் புரிகிறது.

    ஏறக்குறைய அதுபோலத்தான் நாம் முன்னேற முயற்சிக்கிறோமோ இல்லையோ காலம் எம்மைக் கடந்து அதேவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எமக்காக காலம் காத்திருக்கப் போவதில்லை. இது யதார்த்தம். எங்கோ பிறந்து ஏதோ ஒரு கலாசாரப் பின்னணியில் வளர்ந்து இன்று எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைக் கடந்து காலம் கனவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது . இங்கிலாந்தில் எனது ஆரம்பகால வாழ்விற்கும் இன்றைய வாழ்விற்கும் இடையிலான மாற்றங்களைக் கண்டது மட்டுமல்ல, அம்மாற்றங்கள் கொடுத்த தாக்கங்களை அனுபவித்தும் இருக்கிறேன் என்பதே உண்மை.

    இலண்டனில் மாணவனாக வாழ்ந்த முதல் ஜந்து வருடங்களுக்கும் அதன் பின்னான வருடங்களுக்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை என் மனத்தளவில் இருந்தது என்பதே உண்மை. கல்வி முடிந்ததும் திரும்பவும் நான் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறேன் எனும் எண்ணம். அந்த எண்ணத்தின் ஆனந்தத்தின் அடித்தளம் நான் வாழ்ந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டை ஒரு வாடகை வீடாகவே பார்க்க வைத்தது.

    இங்கிலாந்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், அம்மாற்றங்கள் ஏற்படுத்திய சமுதாயத் தாக்கங்கள் என்பனவற்றின் மீதான எனது பார்வை மேலோட்டமாகவே இருந்தது. உண்மையான யதார்த்தமான நிலைமைகளைச் சரிவரப் புரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை என்பதுவே உண்மை.

    இதன் காரணம் பலவாக இருக்கலாம். எனது வாலிப வயதின் அறிவு முதிர்ச்சியின்மை, என்ன இந்த நாடு என்ன என் தாய்நாடா? அந்நியநாடுதானே எனும் எண்ணம், ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய பழைய வரலாற்றின் அடிப்படையில் எழுந்த ஆங்கிலேயர் மீதான காரணமில்லா வெறுப்பு என்பன சில காரணங்களாக இருக்கலாம்.

    பிந்தைய வருடங்களில் வாழ்வின் மீதான என் பார்வையின் திருப்பம் மாறியது. என் தாய்நாட்டிற்குத் திரும்பப் போகிறோம் எனும் ஆர்வம் குறைந்தது. இப்பார்வையின் மாற்றத்திற்கு காரணமோ தெரியவில்லை. உள்ளத்தில், உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றம். நான் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டு மக்கள் மீதான எனது அபிப்பிராயம் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய காலமது. எனது தொடரும் வாழ்க்கை நான் வாழும் அந்நாட்டிலேயே நிகழப்போகிறது என்பதை உணரத் தொடங்கிய பொழுது அது.

    இன்று என் வாழ்க்கையின் பெரும்பாகத்தை அதாவது உலகத்தில் உதித்த 59 வருடங்களில் 41 வருடத்தை இங்கிலாந்தில் கழித்துவிட்ட நிலையில் , இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள் என்பன என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள், ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்பனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு நிலையிலிருக்கிறேன்.

    இத்தகைய நிலையிலேயே அடுத்தமாதம் அதாவது ஜீன் மாதம்23ஆம் திகதி நிகழவிருக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியம் அங்கத்தினராக நிலைத்திருப்பதா இல்லையா என்பதன் மீதான சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலை.

    இன்றைய தபாலில் அச் சர்வஜன வாக்கெடுப்புக்கான எனது வாக்குப்பதிவுச் சீட்டு வந்து விழுந்தது. “நிலைத்திருப்பதா?”  “விலகுவதா?” என்பதே இவ்வாக்கெடுப்பின் சாரம். இருதரப்பினரும் அன்றாடம் அனைத்து ஊடகங்களிலும் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். இங்கிலாந்து அரசாங்கம், எதிர்க்கட்சி, இங்கிலாந்து வங்கி, சர்வதேச நிதி ஒன்றியம், இங்கிலாந்து நிதியமைச்சு என அனைவரும் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பொருளாதாரத் தற்கொலைக்குச் சமானம் என்கிறார்கள்.

    இங்கிலாந்தின் நட்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்தின் தொடர்ந்த ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வற்புறுத்தி வருகிறார்கள். மாறாக, இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் தொலைநோக்கான பொருளாதாரச் செறிவுக்கு உத்தரவாதம் அளிக்கும் என வெளியேற வேண்டும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    அவர்கள் அணியில் சில அமைச்சர்கள், முன்னாள் நிதியமைச்சர்கள் எனப் பலர் இணைந்துள்ளனர்.

    இவர்களது வாதத்தினால் மக்கள் தெளிவடைகிறார்களா இல்லை மேலும் குழப்பமடைகிறார்களா என்பது கேள்விக்குறியே! ஒரு அணியினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்பதை வலியுறுத்துவதிலேயே அடுத்த அணியினர் கவனம் செலுத்துகிறார்களேயன்றி, தமது வாதத்திற்கான நிரூபணமான உண்மைகள் எதையும் கூறுவதாகத் தெரியவில்லை.

    ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரஜைகள் இலட்சக்கணக்கில் இங்கிலாந்துக்குள் நுழைகிறார்கள். இது இங்கிலாந்து மக்களுக்கு இன்னல்களை விளைவிக்கிறது எனும் வாதமே பலமாக முன்வைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து மக்களிடையே ஒருவிதமான இனத்துவேஷத்துக்கு அத்திவாரமிடுகிறதோ எனும் அச்சம் எழுவதைத் தவிர்க்கமுடியாது.

    ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தினராக இங்கிலாந்து இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த எமக்கு இங்கிலாந்து விலகினால் எப்படி  இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணித்தான் பார்க்க முடிகிறது. அந்தக் கற்பனை உலகில் காலடி வைப்பது அவசியமா? எனும் கேள்வி நிச்சயம் நெஞ்சில் எழுகிறது.

    ஒரு புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்துப் பிரஜையாக இதை இரண்டு கோணங்களில் பார்க்க முடிகிறது.

    1. அளவில்லாத வெளிநாட்டு மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதால் இங்கு ஏற்படும் வீட்டுப் பற்றாக்குறை,வேலையில்லாத் திண்டாட்டம்,தேசிய சுகாதாரச் சேவையின் தாக்கங்கள் என்பன இங்குள்ள இங்கிலாந்து மக்களுக்கு ஏற்படுத்தும் இன்னல்களினால் அவர்களின் கோபம் அனைத்தும் வேற்றினத்தவர் மீது திரும்பினால் பாதிக்கப்படுவோரில் நாமும் எமது தலைமுறையும் அடங்குவோம்.
    1. இங்கிலாந்தின் குடியேற்றக் கொள்கையே இச்சர்ச்சையில் பிரதானமாக்கப்படுவதால் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்போரின் கோஷம் வெற்றியடைந்தால், அடுத்து இங்கு ஏற்கனவே குடியேறி வாழ்ந்துவரும் எம்போன்றோரின் மீது அவர்களின் துவேஷம் திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    இவ்விரண்டு கோணங்களின் அடிப்படையில் நாம் எமது அரசியல் கண்ணோட்டத்தை மேலெடுக்க வேண்டும். இன்றைய நிலையில் எமது நாடு இங்கிலாந்து. இங்கிலாந்தின் தத்துப்பிள்ளைகளாக வாழும் நாம் எம்மைத் தத்தெடுத்த பெற்றோரின் வாழ்வு நன்றாக அமையக்கூடிய வகையில் எமது வாக்குகளை அளிக்க வேண்டியது எமது கடப்பாடாக உள்ளதை உணர வேண்டியது அவசியம்.

    யார் எத்தகைய வாதத்தை முன்வைத்தாலும் இது இறுதியில் இங்கிலாந்து மக்களின் முடிவாகவே இருக்கப் போகிறது. அம்மக்களின் எண்ணிக்கையில் நாமும் அடங்குகிறோம் என்பதுவே யதார்த்தம். அனைத்துக்கும் விடை  ஜூன் மாதம் 23-ஆம் திகதி கிடைக்கும்.

    ஆம்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

    மீண்டும் அடுத்தமடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share