இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்—(205)

அன்பினியவர்களே!

இனிய வணக்கங்கள். சிறியதோர் இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலவோட்டத்தின் சுழற்சியில் சிக்குண்டு அலையும் சருகினைப் போல் எமது வாழ்வும் எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் உழலும் நிலை ஏற்படுவதுண்டு. அத்தகைய ஒரு சூழலில் சிக்குண்டதினால் தான் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது.

எனது முந்தைய மடலில் இங்கிலாந்தின் தொழிற்கட்சி அதாவது பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ஜெர்மி கோபன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் பற்றி அடுத்த மடலில் கூறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். வரலாறு காணாத வகையில் பல லட்சம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தொழிற்கட்சி அங்கத்தினர்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சுவதை விடுத்து அப்படி என்ன சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுவது இயற்கையே!

ஆனால் ஜெர்மி கோபன் தலைவரானதே ஒரு விசித்திரமான விடயம் தான். பல்லாண்டுகள் பாராளுமன்ற அங்கத்துவராகப் பதவி வகித்தாலும் எப்போதும் தொழிற்கட்சியின் விதிகளுக்குச் சவால் விட்டு நடந்தவர் ஜெர்மி கோபன். உலக அரங்குகளில் பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இயக்கங்களின் அங்கத்தினர்களுடன் அரசியல் அளவிலான தொடர்புகளை எப்போதும் பேணி வந்தவர். இவரை ஓர் இடதுசாரத் தீவிரவாத அரசியல்வாதியாகவே மக்கள் கணித்தனர்.

பின் எப்படி இவருக்குத் தலைவராகும் சந்தர்ப்பம் கிட்டியது? தொழிற்கட்சியின் பொதுத்தேர்தல் தோல்வியினால் அப்போதைய தலைவர் எட் மில்லிபாண்ட் பதவி விலக, தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயரை முன்மொழியும்போது இப்போதைய லண்டன் மேயரும், அப்போதைய டூட்டிங் நகரப் பாராளுமன்ற உறுப்பினருமான சடிக் கான் , தமது கட்சிக்குள் விவாதத்தை விரிவாக்கும் பொருட்டுத் தலைவராகவே மாட்டார் எனும் நம்பிக்கையில் திரு ஜெர்மி கோபன் அவர்களை முன்மொழிந்தார்.

விளைவு! யாருமே எதிர்பார்த்திராத வகையில் யார் ஒருபோதும் தலைவராகும் சந்தர்ப்பம் அற்றவர் என்று கருதப்பட்டாரோ அவர் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் காரணம் என்ன என்பதற்குப் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.. இயற்கையில் சோஷலிசக் கொள்கைகளைக் கொண்ட தொழிற்கட்சி டோனி பிளேயரின் காலத்தில் மிகவும் மிதவாதக் கொள்கைகளைக் கொண்ட ஒரு நடுநிலைக் கட்சியாக மாறியது. இதன் காரணமாகக் கன்சர்வேடிவ் கட்சிக்கும், லேபர் கட்சிக்குமிடையிலான வேறுபாடு குறுகி, அவையிரண்டும் ஒரே கொள்கையுடைவை போலத் தோற்றமளித்தன. தொடர்ந்துவந்த பொருளாதார நெருக்கடிகளினால் வாழ்க்கைத் தரம் குன்றிய நிலையில் லேபர் கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் போக்கில் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் நடைமுறை வழக்கம் எனக்கருதப்பட்ட வகையில் மாற்றம் கொண்டு வாக்காளர்கள் பதவியிலிருப்போருக்குப் பாடம் புகட்ட வேண்டும் எனும் ஒரு மனநிலையை அடைந்தனர் . இது ஜெர்மி கோபனின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி எட் மில்லிபாண்ட் தொழிற்கட்சிக்கு வழமையான 20 பவுண்ட்ஸ் செலுத்தி உறுப்பினர்கள் ஆவதோடு  வெறும் 33 பவுண்ட்ஸ் மட்டும் செலுத்தித் தம்மைப் பதிவு செய்பவர்கள் கூடத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் ஒரு தீர்மானத்தைக் கட்சியின் நடைமுறையாக்கினார். இதன் மூலம் பல இடதுசார மார்க்ஸிசக் கொள்கைவாதிகள் தம்மைப் பதிவு செய்துகொண்டு தீவிர மார்க்ஸிசவாதியான ஜெர்மி கோபனுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு.

சரி… ஜெர்மி கோபனுக்கு வந்த இக்கட்டுதான் என்ன? ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே லேபர் கட்சியின் உத்தியோக நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ஜெர்மி கோபன் அந்நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் வெகுவாக ஈடுபடாததினால் பல தொழிற்கட்சி ஆதரவாளர்கள் விலக வேண்டும் என்று வாக்களித்து விட்டார்கள். இதுவே இங்கிலாந்து, ஜரோப்பிய யூனியனிலிருந்து விலகவேண்டும் எனும் வாதம் வெற்றியடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் சுமார் 170 லேபர் கட்சி பாரளுமன்ற அங்கத்தினர்கள் ஜெர்மி கோபனின் தலைமைக்குக்கீழ் தாம் இயங்க முடியாது என்று அவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்து விட்டார்கள்.

விளைவாக நாடு ஒரு முக்கியமான சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் முறையான எதிர்க்கட்சியாக இயங்க முடியாமல் மீண்டும் ஒரு தலைமைப் பதவித் தேர்தலில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது லேபர் கட்சி. இத்தேர்தலில் ஜெர்மி கோபன் மீண்டும் வெற்றியடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. அப்படி அவர் வெற்றியடைந்தால் லேபர் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சந்தர்ப்பங்கள் பல தலைதூக்கியுள்ளன. கட்சியின் நன்மை கருதி ஜெர்மி கோபன் தனது பதிவியை ராஜினாமாச் செய்திருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து.

ஓர் அரசியல் சுழற்சியின் மத்தியில் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இத்தேர்தல் முடிவுகளின் வழி பிறக்கும் முடிவினை எதிர்பார்ப்பது ஒன்றே தற்போதைய நிலைமையாக இருக்கிறது.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

***

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *