இலக்கியம்கவிதைகள்

தாத்தா அப்பா நானென மூன்று நண்பர்கள்

ராஜகவி ராகில்

அடிக்கடி பற்றாக்குறைத் தீ
வீடு எரியும்
சில வேளை
அடுப்பில் பூனை படுத்திருக்கும்
அப்பா அறையெங்கும் இரவு நேரத்திலும் பாசம் பரவி நிற்கும் வெளிச்சமாய்

சட்டை பழையது
அப்பா முகம் அணிகின்ற புன்னகை ஆடை
காற்றைக் கலகலப்பாக்கும்
இதய சுகந்தம் கலந்தபடியும் இனிப்பு நறுமணம் பூசியதுமாய்

புறப்பட்டுச் சென்றுவிட்ட பழைய மாதத்தில்
தாத்தா மீண்டும் பிறந்திருந்தார்
எழுபது வயதுடன்

நான் இறைவனிடம் இருந்திருக்க மாட்டேன்
அப்பாவும் தாத்தாவும்
தோழமைப் பாலங்கட்டியபோது

தாத்தா கன்னத்தில் சோகக்கை அறைந்ததாகவும்
கண்ணீர் முள் தைத்துக் காயப்படுத்தியதாகவும்
தாத்தா குரல்மீது அப்பா தொனி ஏறி மிதித்ததாகவும்
நான் அறிந்திருக்கவில்லை

தாத்தாவுக்கென
வேட்டியோ சட்டையோ வேறு தேவைகளோ
நான் அறிய காணாமல் போகும் அப்பாவுக்குள்

தாத்தா மூக்குக் கண்ணாடி
ஒரு கை கண் இழந்து
ஒரு வார வெயிலில் தினத் தண்ணீர் வற்றிப்போன நேரம்
என் கை அணிந்த புதிய கண்ணாடியில்
தெரிந்தது அப்பா முகம்

பாசம் கட்டளைக்குள் புதையுண்டு
தாத்தாவுக்குக் கொடுக்கச் சொன்னபோது
எனது இறந்தகாலக் கேள்வி
அடம் பிடித்தது விடைகேட்டு

நானும்
ஒரு நாள்
உன் தாத்தா போலாவேன்

அப்பா அணிந்த பதில் கண்ணாடியில்
தெளிவாகத் தெரிந்தது
எனது முகம் .

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க