இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (206)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரம், மற்றொரு மடலுடன் உங்கள் முன்னே. உலகம் சுற்றிக் கொண்டே இருப்பதினால் தானோ என்னவோ வாழ்க்கையும் ஒரு சுழற்சி போலத் தென்படுகிறது. சுழற்சியில் முன்பு வந்த இடத்தை மீண்டும் வந்து தொடுவது போல வாழ்விலும் சில சமயங்களில் பழைய நிலை மீண்டும் திரும்புவது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்படுவது உண்டு.
இங்கிலாந்தில் நடக்கும் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் எனது பார்வையில் அதன் தாக்கங்களையும், விளைவுகளையும் பற்றியே இம்மடலின் மூலம் நான் பகிர்ந்து கொள்கிறேன். புலம் பெயர்ந்த ஒரு தமிழனின் ஒரு கோணப்பார்வையே இது. ஒரு சமயத்தில் நான் கொண்டிருந்த கருத்துக் கணிப்பு முற்று முழுதாக பிழைத்துப் போகலாம் அப்படியான சமயங்களில் இது ஒரு சாதரண பாமர மனிதனின் கணிப்பே என்பதே அதற்கான விளக்கமாகும்.
“ப்ரெக்ஸிட்(Brexit)” என்ற ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் பல. அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதற்கான பொறிமுறைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலேதான் முடுக்கி விடப்படும் எனும் அரசியல் கணிப்பே பலமாக நிலவுகிறது. அதேசமயம் இதற்கான பொறிமுறை உடனடியாக முடுக்கி விடப்பட வேண்டும் எனும் வாதம் இந்த “ப்ரெக்ஸிட்”என்ற ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவான பலரிடம் இருந்து கிளம்புகிறது.
இதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வேளையில் நடைபெற்ற வாதங்களில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலை வந்தால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனும் வாதம் இங்கிலாந்து அரசாங்கத்தினாலும் பல முன்னனி நிதி நிறுவனங்களினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களினால் முன்வைக்கப்பட்ட அளவினில் பொருளாதார வீழ்ச்சி நிகழவில்லை. இருப்பினும் பொருளாதாரம் ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.
ஆனால் உலகநாடுகளின் பொருளாதார நிலைகளைக் கணிக்கும் சர்வதேச நிறுவனத்தின் அறிக்கையின்படி இவ்வருட இறுதியில் இங்கிலாந்து பொருளாதாரப் பின்னடைவு அடையும் நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை பொறுத்த அளவில் இங்கே நான் சரி என்று யாரும் வாதிடுவதினால் எதுவித பலனுமில்லை. வரப்போகும் எதிர்விளைவுகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையே இன்றைய காலகட்டத்தின் தேவையாகிறது. முகத்தின் மீது கோபம் கொண்டு மூக்கை அறுத்துக் கொள்வதினால் யாருக்கு நட்டம் என்று சிந்தித்துச் செயல்படுவதே சீரான அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்..
“பெரிய பிரித்தானியா (Great Britain)” என்பது இன்று பேச்சளவில் மட்டுமே ! அப்பெயரின் பெருமை கடந்தகால சரித்திரத்தில் இடம்பெற்றிருக்குமே அன்றி அதன் தாத்பரியம் இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது அல்ல. நாம் பிரித்தானிய நாட்டுப் பிரஜை, எமது நாடு பிரித்தானியா என்று பெருமை கொள்வது தவறாகாது ஆனால் கடந்தகால சாதனைகளின் மிதப்பில் நிகழ்காலத்தைத் தவறாக எடை போடுவது மிகவும் அபாயகரமானதாகும்.
இந்த “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் மற்றொரு பூதம் ” இனத்துவேஷமாகும் . ஆமாம் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி வந்து செல்வது மட்டுமின்றி அங்கு பணிபுரிவதற்கான அனுமதியும் , அந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் உடையவர்களாவார் எனும் ஐரோப்பிய யூனியனின் விதிக்கமைய பல ஐரோப்பிய யூனியனின் புதிய அங்கத்துவ நாடுகளான போலந்து, பல்கேரியா, ரொமேனியா போன்ற நாடுகளில் இருந்து பலர் தொகையினராக இங்கிலாந்துக்குள் நுழைந்தது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.
2008ஆம் ஆண்டு உருவான உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான இங்கிலாந்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பல கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாகியது. அதனால் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கான ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு வந்தன. விளைவு குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரிய சித்தமாகவிருந்த ஐரோப்பிய நாட்டவர் பல இடங்களில் பணிக்கமர்த்தப்பட்டனர். இது இங்கிலாந்து நாட்டவரின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் பாதிக்கிறது எனும் ஆதங்கம் பொதுவாகவே கானைத்து மக்களுக்கும் ஏற்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவரும் விதிவிலக்கல்ல.
இந்தச் சந்தர்ப்பத்தையும் மக்களின் மனோநிலையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட “ப்ரெக்ஸிட்” ஆதரவாளர்கள், இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் எனும் தமது வாதத்திற்கு முக்கியமான பிரச்சாரமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.. “இமிகிறேஷன் ” எனும் பதமே அனைவரின் பேச்சுக்களிலும் எதிரொலித்தது. ஏற்கனவே வெளிநாட்டவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட இனத்துவேஷிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவர்களும் தாமும் “பிரெக்ஸிட்” ஆதரவாளர்கள் எனும் முகத்திரையுடன் இப்பிரச்சார அரங்கில் நுழைந்தார்கள். விளைவு இந்தப் பிரச்சாரத்தின் மூலம் “இனத்துவேஷம்” எனும் பூதம் கிளப்பி விடப்பட்டுள்ளது.
இது ஜரோப்பிய யூனியனில் இருந்து வந்த வெளிநாட்டவர் எனும் எல்லையைக் கடந்து அனைத்து வெளிநாட்டவர் மீதும் குறிப்பாக ஆசிய நாட்டவர் மீதும் கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளது.. இங்கிலாந்து மெட்ரோபாலிட்டன் போலிஸின் கணிப்பின் படி இனத்துவேஷம் சம்பந்தமான குற்றச்செயல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. இதைப்பற்றிய பல அரசியல் அவதானிகளின் கருத்தும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலைக்கு அனைவரையும் தள்ளுகின்றன.
பல இந்திய, பாகிஸ்தானிய, இலங்கை புலம் பெயர் மக்கள் தம்மை நோக்கி வீசப்படும் இனத்துவேஷம் சம்பந்தமான அவதூறுகளைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவரித்துள்ளார்கள்.
இங்கேதான் பூமி சுழன்று மீண்டும் அதேஇடத்தை வந்தடைவது போல வாழ்வின் சுழற்சியும் என்று நாம் ஏற்கனவே கூறியது வருகிறது. எப்படி என்கிறீர்களா? நான் லண்டனுக்கு வந்து 41 வருடங்களாகி விட்டன. நான் லண்டனுக்கு வந்த போது இருந்த ஒரு வெளிநாட்டவருக்கெதிரான உணர்வு இங்கிலாந்து நாட்டு மக்களிடையே மீண்டும் நிலவுவது போல உணர்கிறேன். அதாவது 41 வருடங்களின் பின்னால் வாழ்வு சுழன்று மீண்டும் அதே இடத்திற்கு வந்திருப்பது போன்ற ஒரு நிலை.
எது எப்படி இருப்பினும் நடப்பவை நடந்தேதான் தீரும் . பல கேள்விகளின் விடையை நாம் காலத்திடம் எதிர்பார்ப்பது போல இதையும் காலத்தின் கையில் விட வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்