எழுவகைப் பெண்கள்- 11
அவ்வை மகள்
பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.
பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?. பெண்ணின் பல்வேறு உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம் தேங்கி – அங்கேயே தங்கி – செறிவடைகிறதான உடலியல் பெண்ணினுடையது. ஏனெனில் பெண்ணானவள், சிருஷ்டி கர்த்தாவானதால், எந்நேரமும் படைப்புப் பணிக்குத்தேவையான வெப்ப ஆற்றலோடு அவள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதே அவளுக்கு இடப்பட்டிருக்கிற இயற்கைப் பணி.
ஆனால், இந்தக் கனலை மூலாதாரத்திலேயே தங்கவிட்டால் – தொங்கவிட்டால்- தூங்கவிட்டால் – பலப்பல விளைவுகள் எழும்:
- பெண்ணுக்கு, புற உடலுறுப்புக்களில் இருக்கவேண்டிய உஷ்ணம் குறைந்துவிடும் – இதனால் அவளது உடலியக்கத்தில் அவளுக்கு களைப்பும் அசதியும் ஏற்படும்.
- பெண்ணுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகரித்து அதனால் அதிக கோபம், ஆத்திரம், கடுமையான பேச்சு ஆகியன எழும் – அல்லது கடும் தலை வலி – தலைச் சுற்றல் ஏற்படும்.
- பெண்ணுக்கு மலச்சிக்கல், நீர்க்கடுப்பு, ஆகியன ஏற்படும்.
- அவளுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படும்.
- அவளது உணர்வலைகள் தாறுமாறாக இருக்கும்.
- வெள்ளை படும்.
- பெண்ணின் மறையுறுப்பில் அரிப்பு ஏற்படும் – கொப்புளங்கள் உண்டாகும்.
- அவளுக்கு ஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
- அவளது வயிறு உப்பும் – அல்லது கடும் வலி காணும்.
- தலைமுடி கொட்டும், பொடுகு வளரும்.
- தோல் வறட்சி ஏற்படும்.
- பாத வெடிப்புக்கள் உண்டாகும்.
- உடலின் முப்பெரும் உறுப்புக்களான – கல்லீரல் (பித்தகம்), நுரையீரல் (கபமகம்), மற்றும் பெருங்குடல் (வாய்வகம்) ஆகியன பாதிக்கப்படும். இதனால் பெண்ணுக்கு ஏப்பமும் குதவழி வாயு வெளியேற்றமும் அதிகம் ஏற்படும். மூக்கடைப்பு – தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும் – அதிகப் பசி உணர்ச்சி ஏற்படும். எவ்வளவு நீர்ப் பருகினாலும் கூட – உடலில் நீர்ச் சத்து காணாமல் போகும் – தோல் வறண்டே இருக்கும் – குறிப்பாகக் கால் பாதங்கள் வெகுவில் களைப்படையும் – பாத மேல் தோல் சாம்பல் பூச்சோடு – வறண்டு உலரும்.
- உடல் நிமிர்ந்து நிற்கமுடியாமல் முதுகெலும்பு வளையும்.
- வாய்- உதடுகள் – நாசித்துவாரங்கள் – முகத்தோல் ஆகியன வறண்டு போகும்.
- கழுத்தும் தோளும் பொலிவிழந்து நோகும்.
- சிறிய பிரச்சினைகளையும் கண்டு மிரளுவாள் – பயப்படுவாள், பிறருடன் பழக முனைய மாட்டாள், பிடிவாதம் மிகும்.
மொத்தத்தில் ஓரு பெண், எரிச்சல் உணர்ச்சியோடு – தலைபாரத்தோடு, உடல் – உள அவதியோடு உங்களுடன் வசிப்பாள். அவளை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் – தகாத வார்த்தைகள் பேசி அவளை வைவீர்கள் – அல்லது கொடிய, இழிய வார்த்தைகளால் அவளை வருணிப்பீர்கள். அவளுக்கு வேண்டியன செய்யாமல் அவளைப் புறக்கணிப்பீர்கள்-கொடுமை செய்வீர்கள். அவளை ஒதுக்கிவிட்டு வேறு பெண்துணையைக் கூடத் தேடப் போவீர்கள். ஏனென்றால் பொதுவாகவே பெண் என்றால் அவளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் – நடத்தலாம் -என்பது இங்கே வாடிக்கை.”
“Yes. Yes. Yes!!! – you are absolutely correct! We men really do not get to understand females at all! As you said, we take them for granted! I think this is mostly the problem of the western culture” என்றார்.
“சரியாகச் சொன்னீர்கள் பெண்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சையாகக் கையாளும் போக்கு ஆண்களுக்கு கைவந்த கலை. சொல்லப்போனால், ஆண்களின் இந்தப் போக்கு எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக் கால காலக்கட்டத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் கலாச்சாரங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டான – இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கண்டன என்பதிலேதான் கலாச்சாரங்களின் உயர்வும் தாழ்வும் அமைகிறது. கிழக்கத்திய கலாச்சாரங்களில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன தான் என்றாலும் என்றாலும் எங்கள் தமிழ்ச்சமுதாயம் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த அளவிற்கும் – அவர்களை அரவணைத்துக் காத்த அளவிற்கும் ஈடு இணை இல்லையென்றே சொல்லமுடியும். பெண்களை மையமாகவைத்தே அவர்கள் எங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள் என்றால் அவர்களது பெண்மைப் போற்றுதலை நீங்களே புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் நீங்கள் சொல்லியது போல, மேற்கத்திய கலாச்சாரம் ஆழ்ந்த ஷரத்துக்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை உடையது என்பது உண்மையே. அதனிடம் ஒன்றும் இல்லை என்ற நிலை இருப்பினும் பல்வேறு காரணங்களால் அது விரவிப்பரவுகிறது ஒரு தொற்று நோயைப்போல. ஆரோக்கியமான கலாச்சாரங்களில் இருக்கிற பலரை அது பீடித்து – அவர்களைத் தன் வசப்படுத்தி – அவர்களின் பாரம்பரிய செல்வங்களை கபளீகரம் செய்கிறது – அவர்களின் கண்களை மறைக்கிறது – அவர்களின் மூளையை மழுங்கச்செய்கிறது.
எங்களைப் பொறுத்தவரை – நாங்கள் வேண்டியும் – வேண்டாமலும் – எமக்குள் நுழைந்த மேற்கத்திய கலாச்சாரம் – இந்த இருநிலைகளிலும் எங்கள் கலாச்சாரத்தை மூடுதிரைபோட்டு மூடிவிட்டிருக்கிறது. மாணிக்கம் போன்ற எங்கள் கலாச்சாரத்தின் மீது தூசி படிந்து மணியின் ஒளி குறைந்திருக்கிறது – இத்திரையை விலக்கி – மாசு களைந்து – தூசி துடைத்து – எங்கள் மணி ஒளியை மீண்டும் எமக்கும் உலகிற்கும் வழங்க நாங்கள் முனைந்தாக வேண்டும். அந்த உணர்வை எனக்குள் மீண்டும் நான் உணர உங்கள் வாசகம் உதவியது. மிக்க நன்றி.” என்று தொடர்ந்தேன்.
“சொல்லப்போனால், நாம் பேசிவரும் அவ்வை எனும் இந்தப் பெண், பொல்லாத ஆண் உலகில் படாத பாடுபட்டவள் தான். இன்று நாம் “professional women” என்று சொல்லக்கூடிய பணியிடப் பெண்களுக்கான பிரச்சினைகளைப் பற்றிப் பேசி வருகிற இந்தத் தருணத்தில் அவ்வையின் பணியிடப் பிரச்சினைகளையும் கூடக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்நாளில் மன்னராட்சியில் – புலவராக, எழுத்தாளராக, Governance எனப்படும் அரசாட்சி நுணுக்கங்களில் விற்பன்னராக – அரசவையில் மன்னருக்கு ஆலோசகராக, மக்கள் தொடர்பு மிகக் கொண்ட மக்கள் பிரதிநிதியாக, சமயத் தலைவராக, இறை அன்னையாக, மாதர்குலத் திலகமாக இருந்திருக்கிற மிக அசாதாரணமான பெண் அவ்வை. உலகின் எந்த கலாச்சாரத்திலும் அவ்வையைப் போன்ற ஒரு professional woman – பெண் அதிகாரியை – நீங்கள் காணமுடியாது. பன்முக ஆற்றலும் பரிமாணமும், சொல் வன்மையும், கடப்பாடும், கட்டுப்பாடும், இறை சிந்தனையும் கொண்டு விளங்கிய பெண் அவ்வை. மனித குலத்துக்கு மாதர்களின் மேன்மையை அறிவிக்கும் விநாயகர் அகவல் என்கிற புனித நூலை இயற்றி அவள் மனித குலத்துக்கு ஒப்பற்ற சேவை சேவை செய்திருக்கிறாள். இது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியாகவேண்டும்.
சொல்லப்போனால் இந்திய கலாச்சாரத்தில், கணபதி என்னும் கடவுள், பெண்ணின் உடலின் உயர் இலக்கணங்களை – அவளது உடலில் பொதிந்திருக்கும் ஒப்பற்ற இறைமையின் அடையாளங்களைக் காட்டுமுகமாக உலகிற்குத் தோற்றம் அளித்தவரே.
அத்தகைய கணபதி எனும் விநாயகக் கடவுள் காட்டும் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் பொதித்து, அவள் – இவ்விநாயகர் அகவலை ஓதுகிறாள் – அந்நிலையில், அவளது மனித குல சேவையைப் பாராட்டியவாறு அருள்பாலித்து கடவுள்அவளைத் தன்னுடன் ஐக்கியமாக்கி அவளுக்கு இறைபதவி அளிக்கிறான் என்பது வரலாறு.
அவ்வை எனும் ஒரு professional woman, பெண்களுக்கான முழுமையான வேதமாக விநாயகர் அகவலை ஆக்கிப் படைத்திருக்கிறாள் என்பதை நாம் உற்று நோக்கவேண்டும். எவரும் பேசத் தயங்கும் அல்லது கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் ஒரு முக்கியமான சமாச்சாரத்தை, professional woman என்ற வகையிலும், சாதாரணப்பெண் என்ற வகையிலும் இரு நிலைகளில் நின்று, அவ்வை ஆய்ந்து எழுதியிருப்பது விநாயகர் அகவல். பெண்கள் பிரச்சினைகளை அவள் எத்தனை அகலம் சென்று – எத்தனை ஆழம் சென்று புரிந்துகொண்டிருந்தாள் என்பதைக் காட்ட இந்த விநாயகர் அகவல் ஒன்றே போதும் இது ஒரு அசாத்தியமான படைப்பு. விநாயகர் அகவலின் ஒவ்வொரு சொல்லும் ஒரு காவியம். professional woman என்கிற வகையில் விஞ்ஞானியாக என் முப்பதாண்டு காலப் பணி அனுபவம், பன்னாட்டுதொடர்பு, அரசுப்பணி, எழுத்துப் பணி, பதிப்புப் பணி என அடிமட்ட அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு சிறு வாழ்வியல் அனுபவத்தில் அவ்வையின் முழுப் பரிமாணங்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவ்வை என்பவள் இலக்கியவாதி மட்டுமல்ல, மருத்துவத்தில் தலை சிறந்தவளாக, வர்ம மருத்துவக்கலையில் ஒப்பற்ற நிபுணராக, மிகப்பெரிய பெண் யோகியாக, பெண்ணின் உடலியல் பற்றிய ஞானங்களில் தலைசிறந்த ரிஷியாக, மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களுக்குச் சேவை செய்த மனிதகுல முழுமருத்துவராய் என்னால் அவ்வையைப் பார்க்க முடிகிறது. அந்நாளில் எங்கள் ஊரில் பெண் மருத்துவச்சிகள் இருப்பார்களாம். வீட்டுக்கு வீடு சென்று பிரசவம் பார்ப்பதும் பிள்ளை பேணுவதும் அவர்களது சேவைப் பணியாம். அவ்வை ஒரு மருத்துவச்சியாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற பிரசவங்களை அவள் பார்த்திருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, விநாயகர் அகவல் என்பது முழுக்க முழுக்க ஒரு பெண் மருத்துவ உடலியல் விளக்கம். தேர்ந்தெடுத்த – மிகப்பொறுப்பான – மிகப்பொருத்தமான வாசகங்களை மிக எச்சரிக்கையுடன் – மிக நுணுக்கமாக அவ்வை, தனது விநாயகர் அகவலில் கையாண்டிருக்கிறாள். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்கிறபடியாய், “சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து” என அவள் இங்கே ஒவ்வொரு சொல்லையும் வெகு நேர்த்தியாக உபயோகிக்கிறாள். எழுத்துலகில், விநாயகர் அகவல் ஒரு இலக்கிய விருந்து என்றால், மருத்துவ உலகில், இது ஒரு மாபெரும் Source Book என்பேன். மருத்துவ பரிபாஷையில் விநாயகர் அகவலை விளக்கப் புகுந்தால் பல மருத்துவ நூற் தொகுப்புக்களை நம்மால் வெளிக்கொணர முடியும். நவீன மருத்துவக் கல்வியில் விநாயகர் அகவலை இணைக்கும் ஒரு காலம் கனியுமெனில் அது இவ்வுலகின் ஒரு மிகப்பெரிய பொற்காலமாகும்.
குறிப்பாக, மூலாதாரக்கனல் பற்றி அவ்வை சொல்லியிருப்பது மருத்துவ உலகில் ஆணித்தரமான ஞானக்கருவூலம். உலகில் இதுகாறும் வெளிவந்திருக்கிற எந்த நவீன மருத்துவ அறிவியல் வெளியீடும் வெளிக்கொணர்ந்திராத அசைக்கவியலாப் பேருண்மைகளை அவ்வை ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து’ என ஒற்றை வாசகத்தில் சேர்த்தளிக்கிறாள்” என்றேன்.
“மூலாதாரத்தில் உண்டாகும் உஷ்ணம் என்பது எத்தனைப் பெரிய விஷயம்! இது தெரியாமல் ஐம்பது வருஷங்களாய் வீண் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேனே!” என்று அவர் தன்னை நொந்து கொண்டார்.
“எங்கள் ஆடவர்களில் பலருக்கும் – ஏன் எங்களின் பல பெண்களுக்கும் – உலகின் எண்ணறிந்த பெண்களுக்கும் கூட இதே நிலைதான். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த விளக்கம் – கவலைப் படாதீர்கள்- அறியாமை விலகிட வேண்டுமெனில் அறிவுக்கண்களை நாம் நாம் திறக்க வேண்டுமல்லவா!” என்று நான் தொடர்ந்தேன்.
முதலில் மூலாதாரக்கனலின் இருவேறு நிலைகளைக் காணவேண்டும் – ஒன்று: மூலாதாரத்தில் மூளும் கனல் சரியாக, முழுமையாகக் கனியாமல் இருக்கும் நிலை; இரண்டு: மூலாதாரக்கனல் நன்கு கனன்று அங்கேயே செறியும் நிலை ஆகியன.
இந்த இரு நிலைகளிலும் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை நன்கு அக்கினியாக்கி அதனை ஜ்வாலையுடன் ஒளிறும்படியாய் கனற்றி, அதனை அங்கிருந்து எழுப்பி, அவ்வெப்பத்தைப் பெண்ணின் உடல் முழுதும் பரப்பி – உடலுக்குத் தேவையானது போக உள்ள மிச்சத்தை உடலினின்று விட்டு வெளியேறச் செய்ய வேண்டும். இது ஒன்று தான் பெண்ணை – சரியான அளவீடுடைய அப்பு எனப்படும் நெருப்புடன் காக்கும். முதலில் மூலாதார அங்கங்களின் அமைப்பை நாம் கீழ்வரும் படங்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
படம் 1 (இடது) முதுகெலும்பும் திருவெலும்பும் இணையும் பாங்கு https://www.studyblue.com/
படம் 2. (இடது) பின்புறம் வளையும் காஸிக்ஸின் நுனியில் வெப்ப உற்பத்தி நிகழ்தலின் மாதிரிப் படம் ; (வலது) திருவெலும்பில் உஷ்ணம் செறிதலின் மாதிரிப் படம் . http://www.iatropedia.gr/
படம் 3. திருவெலும்பு யானையின் முகத்தோற்றம் போன்ற வடிவும், நான்கு ஜோடி தோள்களும் (shoulders) ஐந்து கரங்களும் (limbs) உடையது. படத்திற்கு நனறி: http://www.healthhype.com/
படம் 4. பெரினியத்தின் உட்புறத்தோற்றங்கள். http://www.sspphysio.com.au/
படம் 5. (இடது) முதுகெலும்பு வில் போன்ற தோற்றம் கொண்டது http://www.urgentcarefl.com/
படங்களின் மூலம் அமைப்பைப் புரிந்து கொண்ட நிலையில், மருத்துவ ரீதியாக, பொறியியல் ரீதியாக, பெண்ணின் உடலினைப் பார்க்க வேண்டும். உடலில், சிரசுக்கும் கால்களுக்கும் மத்தியில் இடையாக வருவது இடுப்பு. இடுப்பும் மார்புக்கூடும் என்றும் நேராக இணையாது. இரண்டும் அப்படியே தனித்தனியாய்க் கிடைக்க – இந்த இரண்டையும் ஒரு கம்பிச்சுருள் பாலத்தால் இணைப்பது முதுகெலும்பு. முதுகெலும்பின் துவக்கம் சிரசின் பின்பகுதியான் முகுளம் – அதன் முடிவு இடுப்பெலும்பின் பின் மையத் தொக்கலான திருவெலும்பு. திருவெலும்பின் அமைப்பு வெகு நுட்பமானது என்றால் திருவெலும்பின் நுனியானது வெகு-வெகு நுண்ணிய நுட்ப வடிவ அமைப்பு கொண்டது. இந்த நுனியை காஸிக்ஸ் என்பர். இந்த காஸிக்ஸில் தான் முதுகெலும்பின் நரம்புத் தொகுதியின் கடைசித் தொங்கு நரம்பிரட்டை முடிகிறது. இது அசப்பில் பார்க்க பாம்பின் நாவைப்போன்று இருக்கும்.
இந்தத் திருவெலும்பானது இடுப்புக்குள் இருப்பது. இங்கே இடுங்கி ஒளிந்து கொண்டு இருப்பது தான் பெரினியம் எனும் மூலாதார வாயிலும் அதனுள் உள்ளக் குழியும். குறிப்பாக, இடுப்புடன் கால்கள் இரண்டும் வந்து இணையும் இடைச்சந்தியில் தான் இந்த பெரினியம் மிகப்பொருத்தமாக – மிக பத்திரமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. பெரினியம் முழுக்க முழுக்க திசுஇழைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது (சேயிழையார் என்று பெண்கள் அழைக்கப்படுவது பெரினிய அமைப்பில்தான் என்று ஏற்கனவே பார்த்தோம்).
பெரினிய அமைப்பை உற்றுக்கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். இரண்டு கால்களின் கடை முடிவுகள் இடுப்புடன் வந்து இணையும் இரு அடிப்பகுதிகளையும் ஒன்றாக தசைநார்களைக் கொண்டு இணைத்துத் தைத்ததால் ஏற்பட்ட ஒரு துருத்தியே பெரினியம் என்பது விளங்கும்.
பெரினியத் தசை நார்கள் பிற உறுப்புக்களில் உள்ள தசைநார்களிலிருந்து வித்தியாசமானவை. மிக அதிக இழுப்பு விசைகொண்ட உறுதியான ரப்பர் நார்கள் இவை. உடலிலுள்ள பிற தசைநார்கள் குறித்த அளவே நீளும் ஆனால் பெரினிய தசைநார்களோ 10 மடங்கு அதிகம் நீளும். அது மட்டுமல்ல விரிந்தபின் மீண்டும் இயல்பாய் சுருங்கி பெட்டகம் போல் மடிந்து கொள்ளும். புடவைக்கு கொசுவம் வைப்பதைப்போல நுண்ணிய மடிப்புக்களில் டக்கென மடிந்து சுருங்கிக்கொள்ளும் தன்மையான இழைநார்கள் இவை. உற்றுப்பார்த்தால் இழைக்கோர்த்து நெய்தாற்போல் – உறுதியான தோலாலான மடல்களைப்போல அத்தனை நேர்த்தியாய் இந்த அமைப்பு இருக்கும். பெரினியத் தசைநார்களின் இன்னுமொரு சிறப்புப் பண்பு என்னவென்றால் எட்டு வெவேறு விதமான தசைநார்கள் ஒன்று சேர்ந்து பெரினியத்தை உருவாக்குகின்றன. மேலும். இது தசைநார்களில் கொழுப்புச் சத்தும் மிகுந்திருக்கிறது – தோல் போன்ற தடிமன் குறைந்த மெலிதான தன்மையும் மீள்விசையும் இந்தக் கொழுப்புச் சத்தால் வருவனவே.
படம் 6. பெரினியத்தை இணைந்து உருவாகும் வலுவான தசைநார் இழைமடல்களின் மாதிரி. இந்த இழைமடல்கள் மிகுந்த இழுப்பு விசையும் மீள் வீசையும் கொண்டவை. http://www.buyamag.com/pelvis_
பெரினியத்தின் ஒட்டுமொத்த வடிவம் அகலின் தீபம் போல் இருக்கும். அகல் விளக்கும் கூட பெண்ணின் பெரினியத்தின் அமைப்பையையும், அதனுள் எழும் அனலையும் குறிப்பிடவே உருவாக்கப்பட்டதாக ஐதீகம் உண்டு.
இது நிற்க. பெரினியத்தைத் துருத்தியை ஒத்த ஒரு கருவி என்றோம். துருத்தி என்றால் அதற்கு சுருங்கி விரியும் வாய் உண்டு. பெரினியத்தின் பெண்ணுறுப்புத் துளை அளப்பரிய விரிந்து சுருங்கும் ஆற்றல் உடையது என்கிற விஷயம் நாமெல்லாம் அறிந்த ஒன்று தானே!- ஒரு குழந்தையின் தலை அந்தத் துளையில் வழியே தானே வெளிவருகிறது! பிரசவமான பின்பு சுருங்கி மீண்டும் சாதாரண இயல்பு நிலைக்குத் திரும்பும் அசாத்திய ஆற்றல் அதற்கு உண்டு அல்லவா?
படம் 7. பிரசவத்தின் போது பெரினியத் தசை நார்கள் விரிய, உள்ளிருந்து வெளியே பிரவேசிக்கும் சிசு. http://sydney.edu.au/medicine/
இப்போது பொறியியலில் கவனம் செலுத்துவோம். கருவி எனும் வகையில், துருத்தி என்பது காற்றுக் கருவி. கொல்லர்கள் பயன்படுத்துவது. சிறு அடுப்பில், இரும்பையும் கூடப் பழுக்கக் காய்ச்சும் அளவுக்கு உஷ்ணத்தை உருவாக்க துருத்தியைக் கொல்லர்கள் பயன்படுத்துவார்கள். விரிந்து சுருங்கும் தோல் வாயும் – அவ்வாயை விரித்துச் சுருக்க இரு கால்களும் துருத்திக்கு உண்டு. துருத்தியில் காலிரண்டும் இணைந்து ஒற்றைக் கண்மாயாயாக மாறி ஒரு துவாரத்தில் சென்று பொருந்தும். துருத்தியின் கால்களை அசைக்க, துருத்தி காற்றை உள்ளிழுத்து, அக்காற்றை, கண்மாயின் துவாரம் வழியே அடுப்புள் இருக்கும் தணலில் மீது குவித்து அத்தணலைக் கனன்று எரியவைக்கும்.
படம் 8. துருத்தி எனும் தோல் கருவியைபப் பயன்படுத்தி அடுப்பில் உள்ள கனலை கொழுந்துவிட்டு எரியவைக்கும் காட்சி. http://warehamforgeblog.
இவ்வகையில் விரிந்து சுருங்கும் துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்கி, பெரினியக்குழியாம் அடுப்பைபோன்ற இடுப்புக்குழி எனும் அக்கினிக் குண்டத்தில் மூளும் நெருப்பை அங்கே தாங்காமல் எழுப்பி அவளது உடல் பூராவும் பரப்பும் வித்தையை எங்கள் தமிழ்ச்சமுதாயம் நடத்திக் காட்டியது” என்றேன்
“ஒரு சந்தேகம்” என்றார். தொடர்ந்தார். “பெண்களுக்கு கால்கள் பலவீனமாயிற்றே – அவர்களால் இது எப்படி முடியும்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே” என்றார்.
இதிலே குழம்ப ஏதுமில்லை. பிற கலாச்சாரங்களால் சாதிக்கமுடியாததைச் சாதித்தது எங்களுடைய கலாச்சாரம். எங்கள் பெண்கள் மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கலை தெரிந்தவர்கள். இந்தக் கலையை அவர்களது அனுதின வாழ்வாக்கி, அக்கலையை அவர்களது நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் இழைத்தும் குழைத்தும் நிறுத்தியது எங்கள் கலாச்சாரம். உலகின் வேறெந்த சமுதாயமும் காணாத மாபெரும் வெற்றி இது என்றேன்.
மேலும் பேசுவோம் .

கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுகள். அவ்வையாரும் விநாயகர் அகவலையும் ஆராய்ந்து அரும் பெரும் கருத்துக்களை தருவதற்கு நன்றி. இங்கு காலால் எழுப்புவது என்பது மூச்சுக்காற்றை குறிப்பிடுவதாக யோக கலைஞர்கள் குறிப்பிடுகிறார்கள். தங்களின் கருத்தை எதிர் பார்க்கிறேன்.