-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

 

jayaramasarama

 

பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை
 தான்பெற்ற பிள்ளைக்காய்த் தனையிழப்பாள் தாயாவாள்
 சேயதனின் வாழ்வினுக்காய்ச் செலுத்திடுவாள் தன்னலத்தைப்
பூதலத்தில் தெய்வமாய்ப் பொலிந்திடுவாள் தாயாவாள்
ஆரென்ன சொன்னாலும் அதைமனத்தில் ஏற்றாமல்
பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பைத் தான்சுமந்து
ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள்!

 நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும்
 மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று
 கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல்
 அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள்!
 மார்பணைத்துப் பால்கொடுக்கும் தாயவளின் மார்புதன்னை
நோவெடுக்கக் கடித்தாலும் நோவாகாக எடுக்கமாட்டாள்
நீரருந்தி மோரருந்தி நீண்டநேரம் தான் இருப்பாள்
தன்பிள்ளைப் பசிபொறுக்காள் தயவான தாயாவாள்!

காய்ச்சலிலே தானிருப்பாள் களைப்புவந்து தான்படுப்பாள்
ஆசையுடன் பிள்ளைதனை அரவணைத்தல் தவிர்த்துவிடாள்
மூச்செல்லாம் முழுவதுமாய்ப் பிள்ளையிடம் தானிருக்கும்
பேச்செல்லாம் பிள்ளையன்றிப் பிறிதறியாள் தாயாவாள்!
கண்கலங்கிப் பிள்ளைகாணின் கதிகலங்கிப் போய்விடுவாள்
உண்ணாமல் உறங்காமல் உயிர்கொடுத்தும்
காத்திடுவாள்
கருவுற்ற நாள்முதலாய்க் கையில்பிள்ளை வரும்வரைக்கும்
கடவுளினை வேண்டிநிற்பாள் கருணைநிறை தாயாவாள்!

பிரசவத்தில் அழுதிடுவாள் பெருந்துன்பம் கண்டிடுவாள்
பிள்ளையது முகங்காணின் பெருமகிழ்வு எய்திடுவாள்
காலமெல்லாம் தானழுவாள் கவலையெலாம் தான்சுமப்பாள்
ஞாலமதில் பிள்ளையினைத் தாங்கிநிற்பாள் தாயாவாள்!
அழுதழுதுப் பிள்ளைபெற்றும் ஆனந்தம் தானடைவாள்
ஆனாலும் பிள்ளைதனை அழுவதற்கு விடமாட்டாள்
ஒருபொழுதும் தன்னலத்தை உயர்த்திவிட எண்ணமாட்டாள்
முழுமனதும் பிள்ளையிடம் கொடுத்துநிற்பாள் தாயாவாள்!

பிள்ளைவளர்ந் தாளாகிப் பெரியநிலை அடைந்தாலும்
உள்மனமோ பிள்ளையிடம் ஓடியே நின்றுவிடும்
பிள்ளைதாயைப் பாராமல் பேசாமல் இருந்திடினும்
கள்ளமில்லா அன்புதனைக் காட்டிநிற்பாள் தாயாவாள்!
பால்கொடுப்பாள் தாயாவாள் பசிதீர்ப்பாள் தாயாவாள்
நோய்தடுப்பாள் தாயாவாள் நுடங்கிவிடாள் தாயாவாள்
வேர்விட்டு வளர்வதற்கு வித்தாவாள் தாயாவாள்
மேதினியில் நாம்காணும் தெய்வமே தாயாவாள்! 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.