கிரேசி மோகன்

 

தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
அவ்வனப்பே ஆரா அழகு…(31)

பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)

அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)

ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
செய்ய அழகின்றி சோர்வு….(34)

வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)

விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….கிரேசி மோகன்….!

இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
துல்லிய ரத்தினத் தேசு….(37)

மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
சாரம் அமைத்திளமை சேர்வு….(38)

நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)

செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40).

நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)

சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *