இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 209 )

0

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் இதோ அடுத்த மடலில் உளக்கருத்தைப் பரிமாற வந்திருக்கிறேன்.

உலகம் இடமிருந்து வலமாகச் சுழல்கிறது., இரவும், பகலும் மாறி மாறி வருகிறது, கோடையும், வசந்தமும் சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது இலையுதிர்கிறது, மீண்டும் தளிர்க்கிறது. ஆம் இவையெல்லாம் இயற்கையின் நியதிகள். அதே இயற்கையின் செயற்பாடுதான் மனிதர்களின் வாழ்வும். எம் வாழ்க்கையிலும் சில இயற்கை நியதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் சுழற்சியோடு மனிதன் சேர்ந்து இயங்கும்வரைதான் மனிதனின் மனித நாகரீகம், கலாச்சாரம் என்பனவற்றின் முழு அர்த்தமும் முழுமை பெறுகிறது.

ஆணும், பெண்ணும் இணைவதால் அங்கு அடுத்தொரு சந்ததி பிறக்கிறது.

அதுவே மனிதகுலத்தின் விருத்திக்கு வித்திடுகிறது. அதுவே இயற்கையின் நியதியுமாகிறது. இந்நியதியின் அடிப்படையே ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் அடுத்த சந்ததியைத் தோற்றுவிக்கும் வல்லமைக்கு வித்திடுகிறது. இயற்கை மனிதனின் சமுதாயப் பெருக்கத்திற்கு ஒரு கால இடைவெளியை நிர்ணயிக்கிறது. அக்கால இடைவெளி மனிதன் ஒரு குழந்தையை ஈன்றெடுத்து அதனை ஆளாக்கி சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக நடக்க வைக்கும் முயற்சிக்கு அடித்தளமாகிறது. அதாவது உதாரணமாக 25 வயதில் திருமணமாகி 30 வயதுக்குள் குழந்தையை ஈன்றெடுத்தால் அக்குழந்தை 20 வயது வாலிபப் பருவத்தையடைந்து தனது காலிலே நடக்கும் வரை அம்மனிதன் தனது குழந்தையைப் பராமரிக்கும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான். அதாவது பணி புரிந்து கொண்டிருக்கையிலேயே அக்குழந்தையை முழுமை பெற்ற மனிதனாக்க அவனால் முடிகிறது.

விஞ்ஞானம் வலுவடைந்த காலகட்டத்தில் இருக்கிறது. இதுவரை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்த வானுலகம் இப்போது கண்ணுக்கு எட்டும் தொலைவில் வந்திருப்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியினாலேயே. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கு மாதக்கணக்கு எடுத்த காலம் மாறி அதனை இப்போது மணிக்கணக்கில் அடையக்கூடிய வல்லமையை விஞ்ஞான வளர்ச்சி கொடுத்துள்ளது. அவ்வளவு ஏன் இன்று நான் எனது மனக்கருத்தை மேசையில் உட்கார்ந்தபடி மடிக்கணினியில் தட்டி அதனை உடனே எனது அன்பினிய வாசக உள்ளங்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியே !

அதே விஞ்ஞான வளர்ச்சி இயற்கையின் நியதிகளின் எல்லைக்கோடுகளுக்கு சவால் விடுக்கும் ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிட்டாதவர்கள் அப்பேற்றையடைய பல புதிய யுத்திகளை இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்து பலரின் வறண்ட வாழ்க்கையை சோலைகளாக்கியுள்ளது. “பரிசோதனைக்குழாய் குழந்தைகள் – test tube babies” எனும் அரிய கண்டெடுப்பு மூலம் பலரின் வாழ்க்கை ஆனந்தமயமாக்கப்பட்டுள்ளது..

சரி எதற்காக இந்த வழியான அலசல் என்கிறீர்களா ? இங்கிலாந்தில் ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. பல காரணங்களுக்காக இவ்வழக்கில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ம் ஆண்டு Bowel Cancer புற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுத்து உயிரிழந்துள்ளார். கருத்தரித்தலுக்குத் தேவையான தனது சூல்களை குளிரூட்டி உறைந்த சேமிப்பில் வைத்துத் தான் உயிரிழக்கும் பட்சத்தில் தனது சூல்களை உபயோகித்து தனது குழந்தையைத் தனது தாய் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.

தமது ஒரே வாரிசான தமது மகளைப் பறி கொடுத்த பெற்றோர் அவரது நினைவாக, அவரது வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர். அதுமட்டுமல்ல தமது ஒரே வாரிசை இழந்த துக்கம் அவர்களை வாட்டியது. அது இயற்கைதானே ! தமது துயரிலிருந்து மீள்வதற்காக தமது மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முற்பட்டனர். குறுக்கிட்டது இங்கிலாந்தின் செயற்கை குழந்தைப்பேறுக்கான நடைமுறைச் சட்டம். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் அச்சட்டத்தை எதிர்த்து 2014ம் ஆண்டு நீதிமன்றம் சென்றனர். கடந்த வருடம் அதற்கான தீர்ப்பளிக்கப்படும்போது அத்தாயாரின் வயது 59 ஆகும். அவரின் வயதை முன்வைத்து தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது.

விடவில்லை அப்பெற்றோர் அதற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சார்பாக வாதாடிய சட்ட நிபுணர் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மூன்று காரணங்களை முன்வைத்தார்.

தன் தாயார் தன் கருவைச் சுமக்க வேண்டும் எனும் அப்பெண்ணின் கோரிக்கை சரியாக முன்வைக்கப்படவில்லை எனும் வாதத்திற்கு எதிரான சாட்சியங்கள் சரியாக முன்வைக்கப்படவில்லை. அவரின் கருவை அவர் தாயார் சுமப்பதில் உள்ள சிக்கல்கள், விளைவுகள் என்பனபற்றி அவ்விளம்பெண்ணுக்கு சரியான விளக்கமளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளப்போதிலும் எதற்காக அவருக்கு இவ்விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விளக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல அவருக்கு என்ன விளக்கங்கள் கொடுக்கப்படவேண்டும் என்பது அதற்கான சரியான இலாகாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை.

இம்மூன்று வாதங்களை முன்வைத்து இவ்வழக்கு மீண்டும் மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றே அவர்களது சட்டத்தரணி வாதாடினார். இவரது வாதங்களில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்ட நீதியரசர் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளார். இதனை தமக்குக்கிடைத்த முதல் வெற்றியாக அப்பெற்றோர் எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வழக்கின் மூலம் அவர்கள் வெற்றியடைந்தால் கூட அதற்கான சிகிச்சையை அவர்கள் இங்கிலாந்தில் பெற்றுக் கொள்வதற்கு இங்கிலாந்தின் சட்டம் அனுமதிக்காது. இவ்வழக்கின் மூலம் அவர்கள் சேகரிக்கப்பட்டுள்ள தமது மகளின் சூல்கள விடுவிக்கவே முயல்கின்றனர். அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இச்சிகிச்சையை அமெரிக்காவில் தான் பெறமுடியும்.

இங்கேதான் இவ்வழக்கு பல விவாதங்களை ஊடகங்களில் கிளப்பி விட்டிருக்கிறது. 60 வயதான பெண்மணி தனது பேரக்குழந்தையைத் தானே பெற்றெடுக்கப் போகிறார். அதுமட்டுமல்ல அப்பேரக்குழந்தைக்கு அவர்களே பெற்றோர்களாகப் போகிறார்கள். இங்கேதான் பெரியதோர் கேள்வி எழுகிறது. அக்குழந்தை பிறந்து 20 வயதாகும் போது அவரது தாயருக்கு 80 வயதாக இருக்கும். ஒரு இருபது வயது வாலிபக் குழந்தைக்குத் தேவையான அரவணைப்பைப் பாதுகாப்பை ஒரு 80 வயதுப் பெற்றோர்களால் கொடுக்க முடியுமா?

அதுமட்டுமல்ல இங்கிலாந்து போன்ற மேலைத்தேச நாடுகளில் பதின்ம வயது குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனை பலதரப்பட்டது. அதனை அவர்கள் எதிர்கொள்வதற்கு அவர்களது பெற்றோர்களின் வலிமையான பக்கபலம் வேண்டும். அதனை எழுபதுகளில் இருக்கும் பெற்றோர்களால் வழங்க முடியுமா ? அது,மட்டுமல்ல இப்படி செயற்கை முறையில் ஒரு குழந்தையைத் தோற்றுவித்து இவ்வுலகில் அவதரிக்க விடும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் ஈந்தது ?

இவ்வகையான பலதரப்பட்ட விவாதங்கள் ஊடகங்களில் காரசாரமாக இடம்பெறுகின்றன. மறுபுறம் தமது ஒரே வாரிசை இழந்து தவிக்கும் அவர்களின் துயரும், அவர்களை நோக்கிய அவர்களது மகளின் அந்திமகால வேண்டுகோளும். இவையிரண்டையும் நீதி எனும் தராசுத்தட்டில் போட்டால் எந்தத்தட்டு தாழ்ந்திருக்கும் என்பதனை இம்மேல்நீதிமன்ற வழக்கின் முடிவிலேயே தெரிந்து கொள்ள முடியும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

( நன்றி – டெய்லி டெலிகிராப் இணையத்தள அறிக்கை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.