மீனாட்சி பாலகணேஷ்

 

சகலலோகமும் பின்வரும் தெய்வமாக்கொடி

சிறுமகள் தளர்நடை நடக்கிறாள். தாயும் சேடியரும் கண்கள் பெற்றபேறு என்று மகிழ்வெய்துகின்றனர். “வா குழந்தாய், எம் கண்மணியே, முத்தே,” என்றெல்லாம் அவளை அழைத்து குறுநடை பயின்றுவர வேண்டுகின்றனர். அடியவர் ஒருவர், இந்த தெய்வக்குழந்தை நடந்து வரும்போது இன்னும் பல பொருட்கள் உடன்வரக் காண்கிறார். பக்திப் பரவசத்தில் பாடல் பெருகுகிறது.

குழந்தை, பெண்குழந்தையல்லவா? தாயார் தலைவாரிப் பூச்சூடி விட்டிருக்கிறாள். கரிய மேகம் போன்ற தண்மையான குழல், அக்குழலில் அணிந்துள்ள பூமாலையில் உல்லாசமாக மொய்க்கின்ற வண்டுகளுடன், குழந்தை அசைந்தாடி நடைபயிலும்போது தானும் அசைந்தாடி வருகின்றதாம்! நறுமண எண்ணெயைத் தேய்த்து, வாசனைப்பொடியிட்டு நீராட்டி, அகில்புகை ஊட்டிய கூந்தல் குளிர்ச்சியாக இருக்குமல்லவா? அதனால்தான் ‘தண்குழல்’ என்றார் போலும்! தேன் நிறைந்த மலர்களாலான பூமாலைகள், கண்ணிகள், இவற்றில் வண்டுகள் ரீங்காரமிட்டு மூழ்கியெழுகின்றன.

வானில் கருமேகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இருப்பினும் அவற்றினுள் சென்று மறைந்துவிடாத ஒளிநிறைந்த கதிரவன்போலப் பிரகாசிக்கும் கற்கள் இழைத்துச்செய்த நெற்றிச்சுட்டியை குழந்தைக்கு அணிவித்துள்ளனர். அது சுடர்வீசி மின்னியபடி உடன்வருகின்றது! கருங்குழல் கற்றையினுள் மறைந்துவிடாமல் சுடர்வீசும் நெற்றிச்சுட்டி எனவும் கொள்ளலாம்.

ab1முகமாகிய மதி அழகுற விளங்குகிறது; அதற்குள் இன்னொரு மதி என்பதுபோலக் குமுதமலர் காணப்படுகிறது. இது என்ன முரண்?முரணாவது ஒன்றாவது? புலவர் பெருமக்களின் சொன்னயம். ‘குஸுமே குஸுமோத்பத்தி’ – ‘மலரினுள் மலர்ந்த மலர்’- எனக் காளிதாசன் பாடவில்லையா? முகமாகிய தாமரை மலரில் கண்களாகிய குவளைமலர்கள் பூத்துள்ளன,’ என்று உவமித்தான்; அதுபோல, இங்கும் அம்பிகையின் முகமாகிய மதியினைக் கண்டு மகிழ்ச்சியால் குமுதம் – அல்லிமலர் ஆகிய சிறுமுறுவல் அரும்பி உடன்வருகின்றதாம். ‘ஆகா, அருமை,’ எனத் தலையாட்டத் தோன்றுகிறதல்லவா?

இன்னும் அந்த ஆகாயத்து முழுமதி, அம்பிகை அணிந்துள்ள முத்துப்புல்லாக்கினால் (பெண்கள் நாசியிலணியும் அணி) அவள் திருமுகத்தில் திகழும் வெண்முறுவலின் ஒளியைக் கவர்ந்து செல்லும் பொருட்டு, ஓரிடத்தில் நிற்காமல், அலைந்தபடி அவள்பின்னே வருகின்றதாம்.

மென்மையான மல்லிகை, முல்லை மலர்மாலைகளை குழந்தைக்கு அணிவித்திருக்கிறாள் தாய். பசிய, ஒளிமிகுந்த தோள்கள் அவளுடையவை; ஆயினும் சிறுகுழந்தையல்லவா? சிறிய தோள்களல்லவா? தோள்வளை என்னும் அணிகலன் வேறு அணிவிக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் அம்மையுடன் வருகின்றன.
அடுத்து வரும் வரிகளும் அவற்றின் பொருளும் எல்லையற்ற அழகு வாய்ந்தவை. அன்னையே அத்தனை அண்டகோடிகளையும் படைத்து அருளுபவள். அவளை ‘உலகனைத்தையும் கருப்பெறாதீன்ற கன்னி,’ என்பர். குழந்தையின் சிறுவயிறு அதன் தளர்நடையினால் குலுங்குவது அத்துணை அண்டங்களும் அவள் திருவயிற்றில் அடங்கியதால் குலுங்கிவருவது போலுள்ளதாம். இடையிலணிந்த மேகலையும் மகிழ்ச்சியால் ஒலிக்கிறது.

இவ்வாறெல்லாம் அம்பிகை குழந்தையாய் நடந்து சென்றால் அகில உலகங்கள் சும்மா இருக்கத்தகுமா? அவையும் அவள்பின் தொடர்ந்து செல்கின்றனவாம். ‘பராசக்தியின் ஆணைப்படி இவ்வுலகம் நடைபெறும், பெறவேண்டும்,’ அல்லவா? அதுவே இதன் கருத்து.

இங்ஙனம் அனைத்தும் உடன் வருமாறு பெருமை நிறைந்த திருச்சுழியல் எனும் ஊரில் வாழும் கருணைமிகுந்தவளும், மைதீட்டப்பெற்ற விழிகளை உடையவளும் ஆகிய மயில் போல்பவளே! திருமேனியை உடைய நாயகனான சிவபிரான் உனக்குத் தன் திருமேனியின் பாதியைத் தந்தானல்லவோ? அந்தத் தெய்வக்கொடியே வருக,’ என அடியவர்பங்கில் வேண்டிநிற்கிறார் புலவர்.

கார்கொண்ட தண்குழற் களிவண் டினங்குழற்
கண்ணியோ டசைந்துவர வான்
கருமுகிற் குள்ளெழுந் தொளியாத மின்னிறக்
கதிர்சுட்டி மின்னிவரநன்
னீர்கொண்ட முகமதிக் குண்மதி யெனக்குமுத
நிகழ்நகை யரும்பிவரவெண்
ணின்றுமொரு தண்டரள மூரலொளி யைக்கவர
நில்லா தலைந்துவரமென்
தார்கொண்ட பைஞ்சுடர்த் தோள்வளைக் கடைவரத்
தருமண்ட கோடியுதரா
தன்னிற் குலுங்கிவர மேகலை குலாய்வர
சகலலோ கமும்பின்வரச்
சீர்கொண்ட சுழியற் பெருங்கருணை மைவிழிச்
செல்வமா மயில்வருகவே
திருமேனி நாயகற் திருமேனி தந்தமெய்த்
தெய்வமாக் கொடிவருகவே.

(திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

*****

ab2
திருச்சுழியல் துணைமாலை அம்மை பிள்ளைத்தமிழ் பழமையானது. இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை; கிடைக்கவில்லை. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் ஆகிய முதல் ஐந்து பருவங்களுக்குரிய பாடல்களும் வருகைப்பருவத்தில் முதல் ஆறு பாடல்களுமே கிடைத்துள்ளனவாம். மேற்கண்ட பாடல் அவற்றுள் ஒன்று.
அவ்வாறெனில் முழுநூல் எவ்வாறு கிடைத்தது எனும் வினா எழலாம். அறுபதுகளில், இந்த முடிக்கப்பெறாத நூலை ஏனைய பருவத்துப் பாடல்களையும் இயற்றி முடித்துத்தருமாறு கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. டி. எச். விவேகானந்தம் கேட்டுக்கொண்டாராம். கவியரசு அவர்களால் முழுமை செய்யப்பட்டு இந்நூல் முதன்முறையாக 1964-ல் பதிப்பிக்கப்பட்டது. சொற்சுவையும், பொருட்சுவையும், பக்தி, தமிழ்ச்சுவையும் சிறிதும் குன்றாது கவியரசு பாடிய பாடல்கள் இவை. அவற்றிலிருந்து வருகைப்பருவத்துக்குண்டான பாடல் ஒன்றினையே காண்போமே!

*****

இங்கு குழந்தையை வருமாறு வேண்டுவது தாயின் கூற்றாகக் காணப்படவில்லை; அடியவர் கூற்றாக அமைந்துள்ளது. அழகான தெய்வக்குழந்தையைப் பாட, தாய், செவிலி, தோழி, தந்தை மட்டுமல்ல; அடியவர்களும் அனைவருமே விரும்புவார்களல்லவா? இப்பாடலும் அந்தக்குறிப்பிலேயே அமைந்துள்ளது!

‘உனக்கு ஒன்றுமே அரியதல்ல; பெரும் செயலல்ல; அனைத்தையும் விளையாட்டாகச் செய்து விடுபவளல்லவோ நீ தாயே!’ என்கிறார் புலவர் பெருமகனார். இது பராசக்தியாம் அம்பிகையின் அருள்பெற்றவர்கள் யாண்டும் கூறும் திருவாக்காகும். ‘அனேககோடி ப்ரஹ்மாண்ட ஜனனி,’ ‘லீலாக்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா,’ என ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அவள் புகழ்பேசும். அதாவது ‘அத்தனை உலகங்களையும் அநாயாசமாக / விளையாட்டாகப் படைத்து விட்டவள்,’ என்பது பொருள்.

இன்னுமிவள் என்னவெல்லாம் செய்தாள்?

“ஊமையான ஒரு அடியவர் வடமொழியான சமஸ்கிருதத்தில் ஐந்நூறு கவிதைகளை உன்மீது இயற்றும்வண்ணம் அருள்புரிந்தாய்.” (இவரே மூககவி; இவர் இயற்றியது மூக பஞ்சசதி எனப்படும் அற்புதமான ஐந்நூறு ஸ்லோகங்கள் கொண்ட நூல்).

ab4
“பக்தி உணர்வு கொப்பளிக்கும் வகையில் ஆதிசங்கரர் எனும் மகான் பலநூல்களை (உன்மீதும் மற்ற தெய்வங்களின்மீதும்) புனைந்து இயற்றுமாறு அவருடைய மணிநாவில் நீயே கலைவாணியாக அமர்ந்தாய்.” (சௌந்தர்யலஹரி, கணேச, பவானி, சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரங்கள், இன்னும் பல)

“மிகுந்த புகழ்வாய்ந்த கவிஞனான காளிதாசன் இனிமைநிறைந்த கவிதைகளை மழையெனப் பொழிந்து பல காவியங்களைப் படைக்குமாறு அருளினவளும் நீயே தாயே!”

“பிரமாபுரம் எனும் திருவூரில் ஒரு சிறுவனுக்கு அமுதினை ஊட்டி பெரும்நெறிகள் வாய்ந்த தமிழ்நூல்களை இயற்ற வைத்தாய்!” (திருஞான சம்பந்தருக்கு, உமையன்னை முலைப்பாலை அருந்துவித்து, அவரைச் சிறுவயதிலேயே பெரிய புகழ்வாய்ந்த தமிழ்ப்பாடல்களாம் தேவாரத்தினைப் பாடியருள அருள்புரிந்தாள். அவரும் ‘தோடுடைய செவியன்’ முதலாக ஆயிரக்கணக்கான தேவாரப்பதிகங்களைப் பாடியருளினார்).

ab3
“இவையெல்லாம் உன் கருணைக்கு மிகச்சில உதாரணங்களே! உன் மனம் உருகி, இன்னும் எத்தனையெத்தனையோ அடியார்களுக்கு உனது அருளாகிய பெரும்செல்வம் எளிதில் கிடைத்தருளுமாறு செய்து உதவினாய்! அத்தகைய பெரும் அடியார்களின் மரபில் வழிவழியாக வந்துள்ள நான் மிக எளியவன் தாயே! நானும்கூட உய்யும்வண்ணம் ஒருமுறை எந்தன்முன், என் கண்கள்முன்பு வந்தருளி காட்சி கொடுப்பாய்! எத்தனையோவிதமாக மற்ற அடியார்களுக்கு அருள்புரிந்த உனக்கு இதென்ன பெரிய கடினமான செயலோ? அல்லவே! வந்தருள் புரிவாய்! திருச்சுழியலில் கோயில் கொண்டுள்ள மாணிக்கமாலையே வந்தருள்வாய்!” என வேண்டி நிற்கிறார் புலவர்பிரான்.

அன்னை வாராதிருப்பாளா என்ன?

ஒருமூக னரியவட மொழியிலைந் நூறுகவி
உனையோத அருள்புரிந்தாய்
உணர்வின்மிகு சங்கரா சாரியன் பலநூல்
உரைக்கமணி நாவமர்ந்தாய்
பெருமைமிகு காளிதா சன்மதுர கவிமாரி
பெய்யுமாற ருள்சுரந்தாய்
பிரமா புரத்துவரு மொருசிறுவன் அமுதுண்டு
பெருநெறித்தமிழ் செய்வித்தாய்
உருகமனம் இன்னுமெத் தனையடிய ருக்கெளிதில்
உற்றுனருள் வைத்துதவினாய்
உனதுவழி வழியடியர் மரபில்வரு மெளியேமு
முய்யவொருகால் விழிமுனர்
வருகவருள் புரிகஇதென் அரிதோ மலைச்செல்வி
வந்தருள்க வந்தருள்கவே
வளமருவு சுழியலமர் மாணிக்க மாலையே
வந்தருள்க வந்தருள்கவே.

(திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

ஒருவரால் பாதி இயற்றப்பட்ட நூலை அதே கருத்துக்களைப் பிரதிபலித்து, அதே மனோபாவங்களை உள்ளேற்றி மீதிப்பாடல்களையும் இயற்றி முழுமைசெய்ய மிகுந்த புலமை வேண்டும். மேலான தெய்வ அருள் வேண்டும். கவியரசு அவர்களின் புலமை இதில் அழகுற நயம்பட வெளியாகின்றது. இதனை நமது நல்வினைப்பயன் என்றே கொள்ளவேண்டும்.

இன்னும் காண்போம்; கண்டு மகிழ்வோம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

*************

_

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *