இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (200)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இங்கிலாந்திலிருந்து இச்சிறியேனின் அன்பு வணக்கங்களுடன் இந்த மடலின் மூலம் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன் .

fe670b57-95b4-4996-af2a-ee09fc7e1a3f

இது நான் உங்களுக்கு வரையும் 200வது மடல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர் வாழ்வின் உத்வேகத்துடனான சுழற்சியினுள் அகப்பட்டு ஆழியினுள் ஒரு சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்படும் மீனைப்போல காலவோட்டத்தோடு இழுத்துச் செல்லப்படுகையில் மனதின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாய் இம்மடலின் மூலம் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அனைவர்க்கும் பொதுவான இறைக்கு நன்றியைச் செலுத்துவதோடு அன்பினிய வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது மனமுவந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

இன்று காலை விழித்தவுடன் இன்று 200வது மடல் எழுதப் போகிறேன் எனும் எண்ணம் எழுந்தபோது கூடவே இதன் மூலம் என்ன சாதித்து விட்டாய் என்றவொரு கேள்வியும் எழுந்தது. “சாதனை” என்றால் என்ன அதன் எல்லையை நிர்ணயிப்பது யார்? என்று சிந்தித்தபோது ஒவ்வொரு நாளும் வாழ்வினை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்ந்து முடிப்பதே ஒரு சாதனைதான் எனும் பதிலும் கிடைத்தது.

என்று என் எழுத்து நிற்கிறதோ அன்று எனது மனிதவாழ்க்கையின் அர்த்தமும் நின்றுபோய்விடும் என்பது உண்மை. என்னைப் பொருத்தவரை எழுத்து என்பது என்னை வாழவைக்கும் போஷாக்கு. உள்ளத்தில் ஓடும் உணர்வுகளை ஒன்று கோர்த்து அதனை சிந்தனை எனும் வடிதட்டினூடாக வடித்தெடுத்து அதை எழுத்துக்களாக வார்த்தெடுப்பது கூட ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போல, ஒரு ஓவியன் ஓவியத்தை வரைவது போல கலையின் அம்சமே என்பது உண்மையே.

என் வாழ்வின் ஒரு 35 வருடகாலத்தை நான் எப்படிச் செலவழித்தேன் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது என்னுள் எனக்குக் கிடைக்கும் தகவல்கள் பலசமயங்களில் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன, ஆத்திரப்பட வைக்கின்றன, ஆனந்தப்பட வைக்கின்றன, ஆராதிக்க வைக்கின்றன ஏன் சிலசமயங்களில் அழக்கூட வைக்கின்றன.

ஆனால் எனது எழுத்தின் அடிப்படை, எழுதத்தூண்டும் உணர்வுகளின் பிறப்பிடம் எனக்கு நான் கடந்து வந்த பாதைகளின் அனுபவத் திரட்டு என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும். நான் இந்த மடல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பகிர்ந்து கொள்ளப்போவது என் மனதில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளே ! ஒரே நிகழ்வு பலரது பார்வையில் பலவிதமாகப்படும் என்பதே உண்மை. அந்த வகையில் ஒரு புலம்பெயர் தமிழனின், இங்கிலாந்தினை தனது வாழ்விடமாக வரித்துக் கொண்ட ஒரு தமிழனின் பார்வையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதே எனது மடலின் சாரமாக அமைகிறது.

சில மடல்களில் இங்கிலாந்தின் அரசியல் நிகழ்வுகள், சில மடல்களில் இங்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகள், இங்குள்ள மக்களின் கலாச்சார வாழ்க்கைமுறை, வாழ்வின் எனது அனுபவங்களின் தாக்கத்தினால் எனது மனதில் விளைந்த எண்ணவோட்டங்கள் என பலவிதமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன், பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

நான் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. “இப்போ படுக்கைக்குப் போகும் நேரமா? இல்லை விளையாட்டு நேரமா? “ என்று கேட்ட பேரக்குழந்தையை மடியில் இருத்தி ஒரு தாத்தா கூறுகிறார். “ நான் உன்னைப் போல் குழந்தையாக இருந்தபோது எல்லையில்லாத நேரம் இருந்தது. நான் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிந்தது நேரம் மெதுவாக நகர்வது போலத் தென்பட்டது எப்போது வளர்வேன் என்று காத்திருந்தேன். வளர்ந்து வாலிபனாகிப் பெரியவனானதும் எதற்குமே நேரம் போதாததாக இருந்தது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இப்போது வயதுபோன முதுமைப்பருவத்தில் என் பின்னால் எல்லையில்லா நேரம் இருக்கிறது முன்னால் இருக்கும் நேரமோ சொற்பமானது. இப்போதுதான் புரிகிறது நேரம் என்பது எப்போதும் ஒன்றுதான் அதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் தான் அதன் அளவும் இருக்கிறது” என்றார்.

ஆமாம் முதுமையின் வாசலில் வந்து நிற்கும் என்முன்னே நான் மனதில் எண்ணுபவற்றை எழுதி முடிக்க என் வாழ்வின் நீளம் போதுமானதா ? எனும் சந்தேகம் பிறக்க ஆரம்பித்து விட்டது. ஏனெனில் எழுத வேண்டும் எனும் உணர்ச்சி மடையால் அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தைப் போல் வீரியத்தோடு சீறிப்பாயக் காத்திருக்கிறது.

என்னைச் செதுக்கியவர்களைப் பற்றி என் மனதில் எழும் எத்தனையோ எண்ணங்கள் வடிக்கப்படாத ஓவியங்களாக என் மனத்திரையினில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் தடைப்பட்டுப் போயிருந்த எனது “தமிழ்ப்பூங்கா” இதழை மீண்டும் காலாண்டு இதழாக உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் அந்த அனைவர்க்கும் பொதுவான இறையின் அருளால் மீண்டும் விரைவில் தமிழ்ப்பூங்கா இணையவழி மூலம் தவழும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

நடந்து முடிந்த சென்னைப்புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது எனது எட்டாவது நூலான “வியத்தகு விஷயங்களை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி”.

முகநூலில் நான் கவியரசருக்குக் கட்டியிருக்கும் ஒரு நினைவூஞ்சல், அன்பு ஜயாவும் என்னைச் செதுக்கியவர்களில் ஒருவருமான வாலி ஜயாவுக்கான “வாலிபக் கவிஞன் வாலி” பக்கம் என எழுத்தோட்டத்தின் சிறிய கால்வாய்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. நெஞ்சினில் ஊறும் எண்ணங்களை எழுத்தாக வடிக்கும் இம்முயற்சிகளின் ஆணிவேரே வாசகர்களாகிய நீங்கள்தான். உங்கள் அன்பும் , ஆதரவும் வல்லமை ஆசிரியர் சகோதரி பவளா உட்பட்ட ஆசிரியர் குழுவினர் மற்றும் பல இணையத்தளங்கள் எனக்கு அளித்திடும் தொடர்ந்த ஆக்கப்பூர்வமான ஊக்கமும் இல்லையேல் எனது எழுத்துக்கள் இல்லை.

cf943616-7e5a-4ab4-9fe0-aff751956248

இத்தனை காலமும் எனக்கு அளித்துவந்த அதரவுபோல தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு எனது இந்த 200வது மடலில் உங்களுக்கு எனது பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.