Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 208 )

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் அன்னைத்தமிழ் சொந்தங்களோடு மனம் திறக்க ஒரு மடல். கடந்த மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையில் இரண்டு வாரங்கள் காற்றாய்ப் பறந்தோடி விட்டன. இடையே ஒரு வாரம் தவறியது ஏன் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கையே !

அகிலத்தில் அல்லாடும் மனிதர்களுடன் அடிக்கடி விளையாடுவது அந்த அனைவர்க்கும் பொதுவான ஆண்டவனின் பண்பாகும். அவ்விளையாட்டு சிலசமயங்களில் சோகத்தின் சுமையாகவும், சில சமயங்களில் ஆனந்த அலையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட அவனது ஆனந்த விளையாட்டுகளில் ஒன்று என் குடும்பத்தில் நிகழ்ந்தது. ஆமாம் செப்டெம்பர் 17ம் திகதி இவ்வகிலத்தில் அவதரிக்கப் போகிறாள் என் பேத்தி எனும் வைத்தியர்களின் கணக்கைப் பார்த்துச் சிரித்த ஆன்டவன் அவளை அவசரமாக்க மூன்று வாரங்களின் முன்பாகவே புவியினில் இறக்கி விட்டான். ஆனந்த அதிர்வு கொடுத்த பரப்பில் சிக்குண்ட எனக்கு மடல் வரைய முடியாத காரணமே அவ்வொருவார இடைவெளி.

அது முடிந்து இன்று நான் இம்மடலை இங்கிலாந்து நேரப்படி இரவு 10 மணிக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். ஏனென்று கேட்கிறீர்களா ? என்னை எனது அன்னை இப்புவியில் அவதரிக்க வைத்து இன்றோடு அகவைகள் அறுபது முடிந்துவிட்டது. ஆமாம் இன்று நான் எனது அறுபதாவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளேன். தாத்தாவின் 60வது அகவை தினத்திற்கு தானும் இருக்க வேண்டும் எனும் அவசரத்திலேயே மூன்று வாரங்களுக்கு முன்பாகவே வந்திறங்கிய என் பேத்தியுடனே தான் இன்றைய பிறந்ததினம் இருக்க வேன்டும் என்று எனது மைந்தனும், மருமகளும் இட்ட அன்புக் கட்டளையின்படி தினத்தை அவர்களுடன் கழித்துவிட்டு என் மனச்சாந்தியளிக்கும் எழுத்தில் இன்றைய தினத்தை முடிப்பதற்காக உங்களுக்கு வரையும் மடலிது.

ஆண்டுகள் அறுபது இப்புவியில் வாழ்ந்து அப்படி என்னதான் சாதித்து விட்டேன் ? எனும் கேள்வி என் மனதில் ஒரு ஓரத்தில் எழுந்தாலும். எனைச்சுற்றி எனைச் சூழ்ந்திருக்கும் சொந்தங்களைப் பார்க்கையில் என் வாழ்விலும் ஏதோ ஒரு அர்த்தம் பொதிந்திருப்பதை உணர முடிகிறது. எனது பிறந்த நாளுக்காக முகநூலில் வந்து குவியும் வாழ்த்துக்களைப் பார்க்கையில் இத்தனை அன்பு உள்ளங்களின் அன்பைச் சம்பாதித்திருப்பதே எனது இந்த அறுபதாண்டு காலத்தின் சாதனை என்பதே உண்மையெனப்படுகிறது. அதுவும் முகநூல் சொந்தங்களில் பெரும்பான்மையானவை முகமறியாச் சொந்தங்களே ! அவர்களை என்னுடன் இணைத்தது எது? தமிழ் எனும் இனிய தாய்மொழியே ! ஆம் தமிழன்னை எனக்கீந்த இனிய சொந்தங்களின் அன்பு ஒன்றுதான் இவ்வுலகில் உண்மையானது. அதற்கு இணையானது உலகில் எதுவும் இல்லை. தமிழ் எனும் என் இனிய தாய்மொழிக்கு இருக்கும் செல்வச்செழிப்பு உலகில் இருக்கும் அனைத்துச் செல்வங்களுக்கும் ஈடாகாது. எழுதும்போது உள்ளத்தில் பூக்கும் உவகைப் பூக்களின் வாசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என் இனிய சொந்தங்களே ! இந்த அன்பு நிறைந்த சந்தர்ப்பத்தை எனக்களித்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.

நன்றி சொல்ல வார்த்தையின்றி
நாணி நானும் வருந்துகிறேன்
மூன்றெழுத்தில் முடிவதல்ல எம்
முத்தமிழ் தந்த சொந்தம்
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்த
ஈன்றவளில்லை இன்றெனக்கு
சபைதனில் முன்னிருத்த முயன்ற
எந்தையும் என்னுடனில்லை
அறிவூட்டிய பல முன்னோர்கள்
ஆசிபொழிகின்றார் என்பதுபோல்
அன்புநிறை சொந்தங்களாம் நீங்கள்
அன்புமழை பொழிகிறீர்கள்
அறுபது கன்டேன் அதில் பல
அர்த்தங்களும் கண்டேன்
கிடைப்பவை எல்லாம் வேண்டியதல்ல
கிடைத்தது எல்லாம் அரும்பெரும் தவமே
தமிழன்னை தந்த என்னினிய உறவுகளே
தமிழில் ஊறிய நன்றி எனும் மூன்றெழுத்துடன்
உங்கள் அன்பு என்றும் வேண்டும் என்றே
வணங்கி நன்றி கூறுகிறேன்

வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்

achjr_163695

தாயே ! தமிழே !
தாயீந்த பாலுடன்
தமிழ்தந்த அன்னையே !

பிறந்தேன் என்பது பெரிதல்ல
தவழ்ந்தேன் என்பதும் புதிரல்ல
பேசினேன் என்பதும் புதுமையல்ல
நடந்தேன் என்பதும் அதிசயமல்ல

தமிழ் எந்தன் நாவில் ஊறிடும்
வகை கண்டது உந்தன் வரமே தாயே !
தமிழென்ன செய்தது எனக்கு என்பதல்ல
தமிழுக்காய் நானென்ன செய்தேன் ?

உள்ளத்தில் கவிதையாய் உதித்திடும் போது
வெள்ளத்தில் ! ஆனந்த வெள்ளத்தில் நான்
மிதப்பது என்னவோர் விந்தையம்மா ?
சிறப்பது நீ தந்த தமிழால் அல்லவோ ?

படித்திடும் வரிகள் யாவையும் மனதில்
சுவைப்பது தமிழாய் உள்ளதால் அல்லவோ ?
கிடைத்திடும் பொழுதுகள் யாவையும் உனக்காய்
படைத்திடுவேன் ஆயிரம் படைப்புகள்

விதித்திடும் விதியாய் உள்ளத்தில் யான்
வரித்திட்ட செய்தியும் ஒன்றே
மரித்திடும் நாள்வரை தமிழ் எழுத்தினை
மறந்திடேன் என்பது அதுவே !

மீண்டும் அடுத்த மடலில்

படத்திற்கு நன்றி.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க