Tag: இசைக்கவி ரமணன்

  • ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    முனைவர் அண்ணாகண்ணன்
    5_five

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.

    2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

    வல்லமையின் தொடர்கள்

    இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.

    திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.

    மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    போட்டிகள்

    இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.

    வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி

    ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.


    புத்தக மதிப்புரைப் போட்டி

    தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி

    வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.

    Vallamai_oratory_competitio

    கடித இலக்கியப் போட்டி

    அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

     
    வல்லமை.காம் ISSN: 2348 – 5531

    வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

    ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்

    கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.

    ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி

    வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.

    கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

    புதிய தொடர்கள்

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.

    புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

    புதிய திட்டங்கள்

    வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.

    வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.

    நன்றிகள்

    வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.

    Share
  • அன்புள்ள மணிசார்

    இசைக்கவி ரமணன்

    isai1968. நாங்கள் தி.நகரிலிருந்து நங்கைநல்லூருக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு அப்போது 14 வயது. இந்த மாற்றம் எனக்குப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது. தி.நகரிலிருந்து யாராவது நங்கைநல்லூருக்குச் செல்வார்களா? என் அத்தைக்கு என்னமோ அந்தப் பெயர் வாயில் வந்ததே இல்லை. ‘இப்ப எதுக்குடா பத்னாவன் (பத்மனாபன்! அப்பாவை அழைக்கும் பெயர்) நெல்லிக்குப்பத்துல போயி வீட்டப் பாத்திருக்கான்?’ என்பாள். ‘ஐயோ! அத்தை அது நெல்லிக்குப்பம் இல்ல,’ என்றால், ’தெரியும்டா நங்காவரம்தானே? அங்க எதுக்குப் போறாங்குறேன்?’ என்பாள்.

    வீட்டில் வில்வமரம், கொய்யா, சீதாப்பழ மரம், பாக்கு மரம், அத்திமரம், மாமரம், தென்னை, புன்னை; அடுத்த தெரு பாண்டி பஜார்; பொடிநடையாய் நடந்தால் எங்கள் ராமகிருஷ்ணா மிஷன் நார்த் ப்ரான்ச்; இரண்டு நிமிடங்களில் எத்தனையோ கிரிக்கெட் மேட்சுகள் நடக்கும் ‘நியூ க்ரெளண்டு’; ஐந்து நிமிட நடையில் பஸ் ஸ்டாண்டு. இதையெல்லாம் விட்டுவிட்டு, பேர் தெரியாத, ஆனானப்பட்ட அத்தைக்கே வாயில் பேர் சரியாய் வராத ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா என்று எனக்கு ஒரே வருத்தம். அதுவும் பாலு, அனந்து, எல்லப்பன் என்கின்ற பாண்டியன், தம்பி மணி, மொகம்மது ரவூஃப், தெலுங்கு பாபு இவர்களை விட்டுவிட்டால் அப்புறம் உலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்களோ? அந்த கிராமத்தில் பட்டாசு கிடைக்குமோ? என்றெல்லாம் துக்கம் தொண்டையை அடைத்தது.

    அப்பாவுக்கு ஒரே சிரிப்பு. ’எல்லா எடத்திலியும் எல்லாம் கெடெக்குண்டா! இதைவிட ஒனக்கு நெறெய்ய ஃப்ரெண்ட்ஸ் நங்கைநல்லூரில கெடெப்பா பாத்துண்டே இரு,’ என்றார். நான் சமாதானமாகவில்லை.

    நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நங்கைநல்லூர் என்பது மாசுபடாத சொர்க்கமாகத்தான் இருந்தது. அதற்குக் காரணங்கள்:

    · அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வரவில்லை

    · கிணற்றில் தண்ணீரை மொண்டு எடுக்கலாம்

    · நிறைய வெட்ட வெளிகள் இருந்தன

    · கண்ணுக்கு விருந்தான ஏரிகள் உண்டு. கார்த்திகை மாதத்தில் அலைபுரளும்! கொக்குகளும், நீர்க்கோழிகளும், உள்ளான்களும் அதிகம் காணப்படும்

    · குளக்கரையில் கணேஷ் டூரிங் டாக்கீசில் 30 பைசா கொடுத்து மணல்குவித்து உட்கார்ந்து, நாலணாவுக்கு அவித்த கடலை வாங்கிக்கொண்டு, நாலு இண்டெர்வெல் கடந்து, இருமலர்கள், இதாலியன் ஜாப் என்று இரண்டு சினிமாக்கள் பார்க்கலாம்

    · என் வயதொத்த தாவணி போட்ட பெண்கள் தாராளமாகத் தென்பட்டார்கள்

    · கோயில்கள் புதிது புதிதாய் முளைத்தவண்ணம் இருந்தன

    · லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து, அரட்டை அடிக்க எத்தனையோ வாராவதிகள் இருந்தன

    · மரங்கள், ஆமாம், மரங்கள் இருந்தன. குளத்தில் தண்ணீர் இருந்தது. இன்று நீங்கள் பார்க்கும் சிவலிங்கம் அன்று குளத்திலேயே காணப்பட்டது

    · எல்லோருக்கும் நிறைய நடக்கும் பழக்கம் இருந்தது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் இருந்தது

    · அடிக்கடிப் பலர் வீட்டில் பலவித காரணங்களுக்காக உணவருந்த அழைப்பார்கள்

    · தொலைக்காட்சி, செல் ஃபோன் இன்னும் வந்தபாடில்லை

    · என் பள்ளித் தோழனும், அந்த வயதிலேயே அறுமுகன் அந்தாதி, கெளமார சதகம் போன்ற கவிதைகள் எழுதி அப்போதே ‘டேய் புலவா’ என்னும் பட்டம் வாங்கிய ஹரிகிருஷ்ணன் அங்கெங்கோதான் ஓர் ஏரிக்கரையில் கருங்கொக்காக இருந்தான்

    வெகு சீக்கிரம் கிரிக்கெட் தோழர்கள் கிடைத்தார்கள். சின்ன முகுந்தன், பெரிய முகுந்தன், பிரசாத், சாரதி, வெள்ளை ரகு, செகப்பு ரகு, கணேசன், பன் ஸ்ரீதர், ஜெயதேவ், கிட்டு, நரசிம்மன், ராஜகோபால், ராமசந்திரன் என்று எத்தனையோ பேர் உடனடியாக நண்பர்களானார்கள். அப்பா ஆனா ஊனா வீடு மாற்றிக்கொண்டே இருந்ததில் நண்பர்கள் வட்டம் பெருகியது.

    இப்போது குருவாயூரப்பன் கோயில் இருக்கும் இடம் முன்பு காலியாக இருந்தது. அதுதான் எங்கள் சிட்னி கிரிக்கெட் கிரெளண்டு. விக்கெட் கீப்பருக்குப் பின்னே ஒரு கிணறும், கீதப்பிரியன் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த வர்த்தமானன் வீடும் இருக்கும். பந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தால் – அடிக்கடி நுழையும் – ஜெயின் கல்லூரியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அண்ணன் செல்வராஜைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சித்தான் மீட்க முடியும். அதைத்தாண்டினால் ரோடு, அதற்குப் பின்னே வடமொழி ஆசிரியர் ராம்தாஸ் வாழும் வீடு. வலதுபுறம், ஒரு கால்வாய், ரோடு. எதிர்ப்புறம், அதேபோல். இடதுபுறம், ஒருமேடு, அதன் சரிவில் பள்ளம். அதுதான் எங்கள் ஸ்க்வேர்லெக். இங்கிருந்து பந்தை அடித்தால் அங்கே இருப்பவன் அதைக் கேட்ச் பிடித்தானா இல்லையா என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மேட்டெல்லாம் போட்டு விளையாடியிருக்கிறோம். குருவாயூரப்பன் வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு விட்டார்.

    மறந்துவிட்டேனே, மிட் ஆன் அருகே ஒரு தோட்டக் கிணறு அதற்குப் பக்கவாட்டில் ஒரு சிமெண்ட் மேடை இருந்தது. பிள்ளையார் கோயிலைப் பார்த்தபடி எதற்காக ஒரு மேடை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள், Nallur Entertainers நாடகம் போடுகிறார்கள் என்று அழைப்பு வந்தது. ரேடியோ, டூரிங் டாக்கீஸ் தவிர வேறு புதிதாய் எது வந்தாலும் எல்லோரும் ஆர்வமாகப் பார்க்கும் காலம் அது. எனவே நானும் போனேன்.

    மேடையில் ஒருவர். ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு “வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்,” என்று அறிவித்துவிட்டு அவரே பாடுகிறார்:

    உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்
    உன்னின்று பிரிந்தாலோ துயர்வந்து கொல்லும் துயர்வந்து கொல்லும்

    கண்ணோடு கண்வைத்து உரையாடத் துடித்தேன்
    உன்கூந்தல் நிழல்கீழே துயில்கொள்ள நினைத்தேன்
    பொன்னோடு பொருள்யாவும் கொண்டோடி வந்தால்
    விழிதாழ்த்தி தலைசாய்த்து வழிநோக்கிச் சென்றாய்…

    என்று தொடர்ந்தார்.

    தமிழ்த்திரைப்படங்களில் கேட்டிராத மெட்டு. இந்திக் கவிதையை மொழிபெயர்த்தது போல வார்த்தைகள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டால், நிறுத்திவிட்டுக் கண்டிக்கிறார். உதடு நிறையக் காதலும், கண்களில் எப்போதும் ஒரு கோபத்தின் தறுவாயிலும் இருக்கும் இவர் யார்?

    மறுபடி அவரே, ஒரு சித்திரக் குள்ளனாக வேடமணிந்து கோமாளி வித்தை காட்டுகிறார்.

    அவரே, கைகளை இழந்த மேஜராக வருகிறார். அப்பாவி போலப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞர் தன்னுடைய கைகளை அவருடைய கைகளின் இடத்தில் வைத்து, இவர் பேச்சுக்கு ஏற்றபடி அசைவுகள் காட்டி, சிகரெட் பற்றவைக்கும்போது அது கீழே விழ, இருவரும் லாகவமாக அதைத் தரையிலிருந்து எடுத்துக்காட்டி அசத்தினார்கள். அந்த இளைஞர் சற்று நேரத்திற்கெல்லாம் பல நடிகர்களின் குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

    கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரே இன்னொரு நண்பருடன் வந்து மூர்மார்க்கெட் மருந்து வியாபாரியாக வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தார்.

    இருங்கள், இன்னும் முடியவில்லை! ஒரு சின்ன நாடகம். அதில், முட்டைக்கண்ணும், மூக்குக் கண்ணாடியும் ‘சோ’ போன்ற குரலோடும் ஒருவர்; கைகொடுத்த அதே இளைஞர்; இவர்களுடன் மீண்டும் இவர்! அதிலும் அந்த இளைஞர் டாக்சி டிரைவராக வந்து சென்னைத் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்தார். இவர்தான் நாடகத்தை இயக்கியுமிருக்கிறார்!

    யாரிந்த சகலகலா வல்லவர்?

    சில நாட்களில், அந்த தாடி இளைஞரின் தொடர்பு கிடைத்தது. அவன்தான் தாடி பாபு. அவனும், பிச்சையும், ராமச்சந்திரனும் இறந்துவிட்டார்கள். அவர்களை நினைக்கும்போது, அவர்கள் மேலே எனக்காகக் காத்திருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.

    ‘சோ’தான் கவிமாமணி வீரராகவன். இன்றுவரை தொடர்கிறது எங்கள் இனிய நட்பு.

    பாபுவுக்கு என்னை உடனே பிடித்துவிட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவனுக்கு எல்லோரையும் உடனேMani பிடித்துவிடும். யாருடனும் அவனுக்கு விரோதம் கிடையாது. யாருக்கும் கடன் வாங்கியாவது உதவி செய்யத் துடிப்பான் அவன். காதல் களவாணி! அவன்தான் என்னை, 29 ஆவது தெருவில், வாணி நர்சரி பள்ளிக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அந்த சகலகலா வல்லவரிடம் அழைத்துச் சென்றான்.

    அது மாலை நேரம். அவர் மொட்டை மாடியில், தென்னங் கீற்றுகளின் வழியே சற்றே தேன் தடவியது போல் மினுக்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி, இரண்டு கைகளையும் பின்னுக்கு ஊன்றியபடி உட்கார்ந்திருந்தார்.

    பாபு, “சார்! இதுதான் ரமணன். என் நண்பன். நல்லாப் பாடுவான்.” என்றான் துணிச்சலாக! ‘டேய்! பாடேண்டா” என்றான். நான் ‘தொடுவதென்ன தென்றலோ மலர்களோ?’ என்னும் பாட்டைப் பாடினேன். அப்போது நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேனே தவிர, பாடல்கள் இன்னும் வந்தானபடியில்லை.

    அவருக்கு என்னமோ, “காமதேனு பால் கறந்தாளோ? அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ?” என்னும் வரிகள் பிடிக்கவில்லை. “என்ன ஆபாசமாக இருக்கிறதே!” என்றார். ஆனாலும், ‘You have a good voice,’ என்பதை புன்னகை இல்லாமல், குரலில் மென்மை வராமல் பார்த்துக்கொண்டு சொன்னார்!

    ஓர் அதிகாரியின் முன்பு உட்கார்ந்திருக்கிறோம் என்ற உணர்வு மேலிட, என்னை அறியாமல் அவரைப் பணிந்தேன். அவரால் கவரப்பட்டேன்.

    ‘பாபு! யார்றா இது?’ என்று வெளியே வரும்போது கேட்டேன்.

    ‘அவர்தாண்டா ஆர். எஸ். மணி,” என்று நாங்கள் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொண்டான் அவன். அதுதான் பாபு.

    ஓசையுடன் ஓடிவந்த வெள்ளம் எங்கே போச்சுதம்மா?
    ஆசையுடன் ஆடிவந்த உள்ளம் என்ன ஆச்சுதம்மா?
    உள்ளம் என்ன ஆச்சுதம்மா?

    நல்லூர் இலக்கிய வட்டம் உருவாகிவிட்டது. ஹரிகிருஷ்ணன், வீரராகவன், பா. கிருஷ்ணன், கீதப்பிரியன், சுகுமார், குணசேகரன் போன்ற நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மாதா மாதம் கவியரங்கம் நடத்தி வந்தோம். வித்வான் திரு டி.என்.எஸ். வரதன் அவர்கள்தான் முதல் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி மாண்டிஸோரி பள்ளிதான் கவியரங்கக் கூடம். அ. ம. ஜெயின் கல்லூரியின் தமிழாசிரியர் நாகநந்தி என்னும் திரு. தி. வேணுகோபால் அடிக்கடி வந்து எங்கள் ‘மத்தாப்புக் கவிதைகளை’க் கடுமையாக விமர்சிப்பார்.

    ஒருமுறை கடற்கரைக் கவியரங்கப் புகழ் “முல்லைச்சரம்” பொன்னடியான் அவர்கள் தலைமை. அதில் தயக்கத்துடன் கலந்துகொண்ட மணிசார் ஓசையுடன் ஓடிவந்த என்று பாடிய பாட்டு, கவியரங்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டது. பொன்னடியான் தழுதழுத்துப்போய், “என்னங்க! இசை நெஞ்சைத் தொட்டிருச்சே!” என்று அவரும் பாட்டில் இறங்கிவிட்டார்.

    ஆர். எஸ். மணி அவர்களை ’மணி சார்’ என்றுதான் நாங்கள் அழைப்போம். அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான்.

    அவர் வீட்டுக்கு அன்றாடம் அல்லது, அன்றாடம் இரண்டு முறை செல்வது என்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மாற்றாகவும், இதயத்தில் புகுந்த இனிய தென்றல் காற்றாகவும் அவர் எனக்கு இருந்தார். வெறும் உற்சாகம் மட்டுமே இருந்த எங்களை ஊக்குவித்த அதே நேரத்தில், நாங்கள் எங்களை விடாமல் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர் எங்களுக்கு போதித்தார். என்னுடைய அறியாமை அவருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கும். “You must learn a lot of good things in life, Ramanan,” என்பார் நாகரிகமாக.

    அவருக்கு எதையும் சிரத்தையாக, நேர்த்தியாக, முழுமையாகச் செய்யவேண்டும். ஒரு புத்தகத்தை அவர் எடுப்பதிலேயே, பச்சைக் குழந்தையை ஏந்தும் தாயின் பாசமும், பொறுப்பும், எச்சரிக்கையும் காணப்படும். காலையில் அரக்கப்பரக்க அவர் அலுவலகத்திற்குக் கிளம்பும்போதும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். மிக நேர்த்தியாக மீசையைக் கத்திரித்தபடியே, ஒரு மாலை அவள் வந்தாள்! இரு கண்ணில் மது தந்தாள்! நான் மயங்கினேன் நான் மயங்கினேன்’ என்று பாடுவார்.

    கெளரி, ஆனந்த், அருணா, அரவிந்த் எல்லோருமே அப்போது சின்னக் குழந்தைகள்; செல்லக் குழந்தைகள். 20 வயதிலேயே திருமணமாகிவிட்டது. படிப்பில், விளையாட்டில், கலைகளில் பன்முக ஆற்றல் கொண்டிருந்தார் அவர். மேலாக, மிகவும் வசீகரமான தோற்றமும் கொண்டிருந்தார். நாங்கள் ‘பிரேமா மாமி’ என்று அன்புடன் அழைக்கும் அவர் மனைவியிடம் அவர் பரிபூரண விசுவாசத்தோடு இருந்தது பாபு போன்ற, யாரையும் எப்போது வேண்டுமானாலும் காதலிக்கத் தயாராய் இருந்த நண்பர்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    பிரேமா மாமி அற்புதமாகச் சமைப்பார். விரும்பி விரும்பிப் பரிமாறுவார். மாமியின் வரிபோட்ட ரொட்டியும் அன்றைய நாள் கீரை கலந்த ஸப்ஜியும் சுடச் சுட அவருக்குப் படைக்கப்படும். மிகவும் சூடான வெந்நீரில்தான் அவர் குளிப்பார். புத்தகங்களுக்கு அட்டைப்படம் போடுவது போன்ற உபரி வேலைகளிலும் ஈடுபட்டிருந்த அவர், தனது ஐ.சி.எஃப். தொழிற்சாலைக்கு ஒரு போதும் நிதானமாகக் கிளம்பி நான் பார்த்ததில்லை. அத்தனை அவசரத்திலும், உணவு சுடச்சுடத்தான் உண்பார். பிறகு சைக்கிளில் பரங்கிமலை ரயில்நிலையம் வரை பறப்பார். அங்கிருந்து ரயில் பிடித்து, தினசரி நெடும்பயணம்தான்.

    மாலை அவர் வீடு திரும்பும்போதோ, அல்லது அப்போதுதான் திரும்பியிருக்கும்போதோ, நான் அவருக்காக அங்கே காத்திருப்பேன், ஒரு சின்னக் கவிதையோடு.

    ஒருநாள் சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்து இறங்குகிறார். என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று மாமி பதட்டத்துடன் வெளியே வந்தால், இவர் பெரிதாக ஒரு இசைக் கருவியோடு வந்து இறங்குகிறார். ‘என்னன்னா இது?’ என்கிறார் மாமி. ‘இது பியானோ அக்கார்டியண்டி,’ என்கிறார். ‘இதை எதுக்கு இப்ப வாங்கிண்டு வந்தேள்?’ என்று கேட்கக் கூடாத ஒரு கேள்வியை ஆயிரமாவது முறை, தவிர்க்க முடியாமல் கேட்கிறார் மாமி. நெற்றியில் எத்தனை முறை ஒதுக்கிவிட்டாலும் வந்துவந்து புரளும் கேசத்தைக் கோபமுடன் சிலுப்பிக்கொண்டு, “I want to know what it is” என்றார்.

    பற்பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம். ஆர்வத்தோடு நிற்கமாட்டார். அது என்ன என்று அதில் இறங்கி ஆராய்வார். அப்புறம் போதும் என்று நிறுத்திவிடுவார். எதையுமே அவருக்காகத்தான் அவர் செய்துபார்த்துக்கொண்டார். இப்படித்தான் ஸ்வப்ரானோ, தப்லா, மெளத் ஆர்கன் போன்ற பல கருவிகளை வாங்கிப் பழகிக்கொண்டார்.

    திடீரென்று ஒருநாள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அந்த MSR 116 என்னும் வண்டியை நாங்கள் மறப்பதற்கில்லை. நாங்கள் ஒவ்வொருவருமே அதில் அவரோடு பயணம் செய்திருக்கிறோம். ஒரு நாள் காலையில் அவர் வீட்டுக்குச் சென்றால், அந்த மோட்டார் சைக்கிள் குற்றுயிரும் குலைவுயிருமாக இருந்தது. என்ன ஆயிற்று என்று பார்த்தால் மணிசார் அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அந்தந்த பாகங்களை சின்னச் சின்னச் சட்டிகளில் அழகாக வைத்திருந்தார். என்ன என்று பார்த்தேன். “I want to know what it is” என்று அவருடைய பார்வை சொன்னது! என்னையும் அதில் ஈடுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சிதான் முழுத்தோல்வியில் முடிந்தது!

    அந்த வீடு அவருடைய மாமனார் திரு. சுவாமிநாதனுடையது. அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மனைவியை இழந்தவர். அதில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முன்னர், நுழைந்தவுடன் இடப்புறம் இருக்கும் அறையில்தான் மணிசார் இருப்பார். ஒரு மாலைப்பொழுது. தனது அக்கார்டியனோடு அவர் என்னமோ முயன்றுகொண்டிருந்தார். ஒரு மெட்டை வாசித்து, ‘ரமணன்! இதுக்கு ஒரு பாட்டெழுதேன்,’ என்றார் விளையாட்டாக. உடனே நானும்,

    வா! மாலையும் போய்விடும் வா!
    மையலும் இழுத்திட மைவிழி சிவந்திட
    மங்கை என்னிடம் வா!

    என்று ஒரு பெண் பாடுவதுபோல் பாடல் சொன்னேன். ஏதோ அத்தோடு முடிந்தது அந்த விளையாட்டு என்று நினைத்தேன். அவரும் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், எங்கள் நட்புக்கே ஆதாரம்போல், அவர் மெட்டுச் சொல்லி சூழ்நிலையைச் சொல்ல, நான் பாடல் புனைவதும், நான் வரிகளைச் சொல்ல அவர் மெட்டுப் போடுவதும் வழக்கமாகிவிட்டது!

    ஒரு நாள்
    மலராகப் பிறக்கவேண்டும்
    உன் கூந்தலில்
    சிலநேரம் இருக்கவேண்டும்
    ஒருநாள்
    தென்றலாய்ப் பிறக்கவேண்டும்
    உன் மடியினில்
    குழந்தைபோல் தவழ வேண்டும்!

    என்பதுதான் நான் எழுதி அவர் மெட்டமைத்த என் முதல் காதல் பாடல்.
    இன்றைக்கும் பலருக்கும் பிடித்த பாடல் அது.

    இருந்ததுவும் ஓரிதயம் அதைக் கவர்ந்து சென்றாய்
    இமைவிளிம்பில் ஒரு பார்வையில் உன் நெஞ்சைத் தந்தாய்
    உன் மடியில்
    கண்மூடி
    என் பாடல் காற்றில் மிதந்திடவே
    ஒருநாள்!

    என்னும் வரிகளுக்கு அவர் அமைத்த மெட்டும் அதை அவர் பாடிய விதமும் மறக்க முடியாதவை.

    நடுநடுவே அவர் தனது பாடல்களையும் படைத்துக்கொண்டிருந்தார்.
    முந்தானை காற்றினில் அலையடிக்க
    பின்னாலே என்மனம் படபடக்க என்னும் பாடலும்

    ஏரிக்கரையிலே பாடுகின்றான்
    என்றன் உள்ளம் மயங்குது என்னும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவை.

    ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் யாருமில்லை. நான் பல பாடல்களை எழுதி அவரிடம் மெட்டமைக்கத் தந்தேன். ‘என்னடா இது?’ என்றாரேயொழிய எல்லாவற்றுக்கும் மெட்டமைத்தார்.

    கண்ணனைக் கண்டாயோ
    மேகமே என்றாலோ
    காணவில்லை என்றே
    கண்ணீரில் ஆடுதம்மா!

    மற்றும்,
    வாசலில் கோலம் போடுங்கடி
    வந்திடுவான் நம் கண்ணன்

    மேலும்,

    கோபம் என்னடா? கண்ணா
    கோபம் என்னடா?
    கொஞ்சினாலும் தீர்ந்திடாத
    கோபம் என்னடா?

    கொஞ்சலிலே கொஞ்சமேனும் குறைத்துவிட்டேனா? நீ
    கொஞ்சும்போது கேட்பதற்குத் தவறிவிட்டேனா?
    பஞ்சு மடியில் உன்னைச் சாய்க்க மறந்துவிட்டேனா? இந்தப்
    பாவை உந்தன் மனதிலிருந்து இறங்கிவிட்டேனா?

    போன்ற என் பாடல்களுக்கு அவர் அமைத்த மெட்டுக்கள் மிகவும் பொருத்தமானவை, இனிமையானவை. இந்தப் பாடல்களை ஒரு குறுந்தகடாகக் கொண்டுவர வேண்டும் என்னும் அவர் விருப்பத்தை நான் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்.

    நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். அவர் கலில் ஜிப்ரானின் Tears and Laughter, வால்ட் விட்மனின் கவிதைகள், தாகூரின் கீதாஞ்சலி, கீட்ஸ், ஷெல்லி இவர்களின் கவிதைகளை நிதானமாகப் படித்துக் காட்டுவார். Jerome K Jerome’s Three Men in a Boat, Woodhouse’s Leave it to Psmith இவற்றை அவர் படித்துக் காட்டியதும், நான் கண்ணீர் வடிய விழுந்து விழுந்து சிரித்ததும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

    அவருக்கு, உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவரால் தாங்க முடியாது. நீங்கள் ரொம்பத்தான் கொண்டாடும் என்னுடைய உச்சரிப்பில் பிழைகள் இருப்பதை அண்மையிலும் அவர் சுட்டிக்காட்டினார்! கீதப்பிரியன் குளம் என்றாலும் குலம் என்றாலும் ஒரே விதமாகவே சொல்வதை அவனுக்குச் சுட்டிக்காட்டி அவனைத் திருத்த டேப் ரிகார்டரில் அவன் குரலைப் பதியவைத்துப் போட்டுக்காட்டி அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மகத்தானது!

    “With the beaded bubbles winking at the brim,” என்பான் கீட்ஸ். அவருக்குக் காப்பி அப்படி இருக்கவேண்டும்! சூடாக, நுரையோடு, விளிம்பில் கண்சிமிட்டும் குமிழ்களோடு! பிரேமா மாமியின் காப்பி பிரசித்தியானது. நான் அன்றாடம் அவரைச் சென்று பார்க்கக் காரணம் மணிசாரின் கலையா? மாமியின் கைவண்ணமா? என்ற பட்டி மன்றத்திற்குத் தீர்ப்பு வழங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் சாலமன் பாப்பையா!

    ஒரு மன்னனின் ரசனை, தோரணை, பாங்கு, நடத்தை அவரிடம் இருந்தது. ஆனால், இறுக்கமான நடுத்தர வர்க்கச் சூழ்நிலையில்தான் அவர் வாழ வேண்டியிருந்தது. இருந்தும், he was truly regal!

    என்னைப் பொருத்தமட்டில், அவர் எத்தனையோ கலைகளில் வல்லவராக – மூன்று மொழிகளில் கவிஞராக, பாடகராக, இசையமைப்பாளராக, நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக, ஜோதிடராக, மேஜிக் செய்பவராக, களிமண்ணில் பதுமை செய்பவராக, ஏழு இசைக்கருவிகள் வாசிப்பவராக – இருந்தாலும், அவருடைய ஒப்பற்ற தன்மை அவரது ஓவியத் திறமையில்தான் தரிசனமாகிறது என்று தோன்றுகிறது. அவருடைய முழு இயல்பு, அவருடைய பிரத்யேகமான ராஜ கம்பீரத்தோடு, அவருடைய உயிரின் இயல்பான அழகியலோடு அவருடைய ஒவ்வொரு ஓவியத்திலும் வெளிப்படும். அவர் பழகாத பாணியே இல்லை.

    அவருடைய இந்த உயிர்த்திறமையை ஊர் அறியவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

    எனக்கு ஆங்கிலத்தில் விருப்பம் ஏற்பட்டதற்கு அவரும் அவருடைய “Idle Tears” என்னும் கவிதைகளும் காரணம். பிற்பாடு நான் அதை “விழியோரம் துளி ஈரம்” என்று மொழிபெயர்த்தேன். ஹரி அற்புதமான முன்னுரை எழுதினான். என்னை அவர் Patton திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். ஓர் ஆங்கிலப் படத்தை எப்படிப் பார்க்கவேண்டும், ஒரு திரைப்படத்தில் எதையெதையெல்லாம் கவனிக்கவேண்டும் என்று அண்ணன்போல் சொல்லித் தந்தார்.

    நாங்கள் வானொலியின் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சியிலும் தொழிலாளர் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டோம். பிறகு, என் உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் Sundaram Fasteners நிறுவனத்தின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்குகொண்டோம். மணி சாரும், பாபுவும் நடித்த அந்த மேஜர் காட்சி அரங்கிலிருந்த ஆயிரம் பேர்களை அசத்திவிட்டது! மணிசாரும் நானும் நடித்த மூர்மார்க்கெட் மருந்து வியாபாரி நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, பாபு, வீரராகவன், நான் எங்கள் மூன்று பேரையும் வைத்து, மணிசார் ஒரு pantomime நிகழ்ச்சி அமைத்திருந்தார். நாங்கள் நடிப்பு மட்டும். குரலும், பொருத்தமான சில ஓசைகளும் பின்னணியிலிருந்து மணிசார். தூளென்றால் அப்படி ஒரு தூள் கிளப்பினோம்! தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும் சண்டை போட்டுக்கொள்வதுபோல் நான் ஒரு வசனம் எழுதி அதை பாபுவும் நானும் நடித்தோம். பிறகு நான் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்திலிருந்து சிவாஜி ஓய்வுபெற்று வீட்டுக்கு வந்து பேசும் வசனத்தை அவர்குரலில் நடித்துக் காட்டினேன். இதற்கெல்லாம் அவர் எங்களுக்குக் கடுமையாகப் பாடம் எடுத்தார், எங்கே நிற்க வேண்டும், எப்படித் திரும்பவேண்டும், குரல் அளவு, உடல்மொழி எல்லாம் கற்றுத் தந்தார். சாக் பீசால் கோடு கிழித்தால் கிழித்ததுதான். தாண்டினால் கிழித்துப் போட்டுவிடுவார்! கோபம் வந்தால் (அடிக்கடி வரும்!) குரல் இன்னும் ‘கேய்ங்’ என்று ஆகி, இங்கிலீஷ் வேறு வந்து சேரும்.

    எல்லோருக்கும் மகிழ்ச்சி. நாங்கள் எழும்பூரில் இம்பாலாவில் சாப்பிட்டுவிட்டு, மசாலா பால் அருந்தி, அவரோடு பீடாவும் போட்டுக்கொண்டு ஏதோ திரைப்படத்தில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய குதூகலத்தோடு நடந்துகொண்டிருந்தோம்.

    குருவாயூரப்பன் கோயில் எழப்போகிறது. கூரை போட்டு, சுவாமி படத்தை வைத்து, பிராரம்பமாக ஒரு பாலாலயத்தை எழுப்பினார்கள். அதில் தொடர்ந்து பஜனைகள் நடத்த ஏற்பாடாயிற்று. சம்பிரதாய பஜனைகள் நடந்த வண்ணமிருந்தன. நான் தப்லா தட்டிக்கொண்டிருந்தேன். அப்பாதான் மேல்சாந்தி, அதாவது பிரதான பூஜாரி. ’ஏண்டா! நீங்க வந்து பாடுங்கோளேன்,’ என்றார். மணி சாரிடம் சொன்னேன். சிரத்தையின் உருவாரமான அவர், சம்பிரதாய முறைப்படி என்னென்ன தெய்வங்களை எந்த வரிசையில் பாடுவார்களோ அதே முறையில், அதே வரிசையில் நாம் பாடல்களை அமைப்போம் என்றார்! பாடல்களை எழுதினேன்; நாமாவளிகள் பிறந்தன. அருமையாக மெட்டமைத்தார். சின்னச் சின்னக் குழந்தைகளையும் கூட வைத்துக்கொண்டு, அவர் பாட, குழந்தைகளும், ஏன் பெரியவர்களும் சேர்ந்து தங்களை மறந்து பாட, நான் மணி சார் கொடுத்த தப்லாவை வாசிக்க, அற்புதமாக அமைந்தது நாம சங்கீர்த்தனம். பாராட்டிப் பேசிய அப்பா, “சாகித்யகர்த்தாவுக்கு (அடியேன்தான்) பாட வராது,” என்பதைத் தவறாமல் பதிவு செய்தார்.

    என் அக்கா லலிதா கனடாவில் இருந்தாள். என்னை அங்கே வந்துவிடச் சொன்னாள். மணி சாரிடம் பேசினேன். நானும் வரவா என்றார். ஒரே குஷிதான். இருவரும் விண்ணப்பித்தோம். அவருக்குக் கிடைத்தது, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    1974 ஆகஸ்டு மாதம் அவர் கனடாவுக்குச் சென்றார். கொஞ்ச நாள் அவர் மாம்பலத்திற்கு வீடு மாற்றிச் சென்றதையே தாங்க முடியாத எனக்கு இது பேரிழப்பாக இருந்தது. அண்ணனாகவும், நண்பராகவும் இருந்து என்னை வழிநடத்திக்கொண்டிருந்த ஒரு பெரும் துணையை விதி திடீரென்று பறித்துக்கொண்டுவிட்டது போலத் தோன்றியது. மணிசார், கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனாலும், மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. என்னமோ அவர் செல்வதற்காகக் காத்திருந்தது போல, என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மிகவும் இறுக்கமாகிவிட்டன.

    ஏறத்தாழ 47 ஆண்டுகளாக என்மீது சற்றும் குறையாத நேசம் பாராட்டி வரும் ஹரியின் ஆதுரத்தால்தான் நான் ஒரு வேதனையான கால கட்டத்தைக் கடந்தேன் என்றால் அது மிகையாகாது.

    1977 பிப்ரவரி மாதம், நாங்கள் நங்கநல்லூரை (ஹரி! ஸ்பெல்லிங் சரியா?) விட்டு பெசண்டு நகருக்குக் குடிபெயர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் கடற்கரை. கடலைப் பார்த்தபோது, தாகூரின் வாசகம் நினைவுக்கு வந்தது:
    “The language of eternal questions.”

    இந்த வாசகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவரே மணிசார்தான்.

    1979ல் ஒரு முறை மணிசார் இந்தியா வந்தார். அவர் என்னை வீடியோ எடுத்ததை அண்மையில் ரமணன் யார் என்னும் பதிவில் இட்டிருந்தார். பின்பு, 1986 ல் ஒரு முறை வந்தார். அப்போது நான் ஒரு “குரு” விடம் ஈடுபட்டு மயக்கத்தில் இருந்தேன். அவரையும் சந்தித்தார் மணிசார். பாடினார். எனக்கு அன்புடன் பரிசுகள் தந்தார். அக்கறையுடன் விசாரித்தார்.

    1989ல் நான் விசாகப்பட்டினம் சென்றுவிட்டேன். அங்கே இந்து நாளிதழை நிறுவும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்; ஒவ்வொரு நாளும் 16 மணி நேரங்கள் வேலை செய்வேன். ஆயினும் ஒவ்வொரு காலையும் நான்கு மணிக்கு தியானம் செய்யத் தவறாமல் அமர்ந்தேன். கடும் பணியும், ஆன்மிகப் பயணத்தில் வாங்கிய அடிகளும், என்மீது திணிக்கப்பட்ட சில விபரீதமான பரிசோதனைகளின் விளைவாலும், ஒரு விபத்தாலும் என் முதுகு விண்டுவிட்டது. சென்னை அப்பொல்லோவில் அறுவை சிகிச்சை. அதனால் பெரும் பயன் ஏதும் விளையவில்லை.

    அலைந்தலைந்து இறுதியில் 1994 ல் என் குருவின் திருவடி அடைந்தேன். அதன் பிறகு, என் வாழ்க்கை சீரானது. 27 ஆண்டுகள் பணி புரிந்தபின்பு, இன்னும் 10 ஆண்டுகளைத் தவிர கையில் வேறு எதுவும் இல்லாத போது, குருநாதரின் சம்மதத்துடன், வேலையை விட்டு 2005 ல் விலகினேன்.

    இதைத் தொடர்ந்து கனடாவுக்குப் பயணம் சென்றேன். அங்கே என் அக்கா வீட்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் மணிசார் வீடு! எப்படி இருந்திருக்கும் எனக்கு?! அவருக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி!

    பிரேமா மாமி, பாத்திரங்களைக் கழுவியபடி, கண்ணில் நீர் மல்க, “ரமணா! அந்தக் காலம் மாதிரி வருமாப்பா?” என்றார், நான் பாடினேன்:

    இதுவொரு காலம் அதுவொரு காலம்
    அடியில் மணலாய்க் கரைகிறதே
    அதுதான் உண்மைக் காலம்!

    நினைவும் கனவும் புகையென நீளும்
    நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
    அதுதான் உண்மையில் வாழும்!

    எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
    அத்தனை முறையும் எழுந்தோம்
    அதைநாம் ஏனோ மறந்தோம்!
    அதனால்தானே துவண்டோம்!

    எத்தனை அடைந்தோம் எத்தனை இழந்தோம்
    என்பதில் ஏதும் இல்லை! இங்கு
    ஏதும் மீதம் இல்லை, இதை
    இதயம் மறந்தால் தொல்லை

    காலம் நடக்கும் காயம் வலிக்கும், ஒரு
    மாலைப் பொழுதில் நினைக்கும்போது
    மனதினில் எல்லாம் இனிக்கும்! சின்ன
    மலராய் நம் முகம் சிரிக்கும்!

    மாமி ஆசை ஆசையாகச் சமைத்துப் போட்டார்கள்!

    மணிசாரும், அவருடைய என் மகனுக்கு இணையான மகனான ஆனந்தும், என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் நயாகராப் பயணம் மறக்க முடியாதது. என்னுடைய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் வந்திருந்து மணிசார் ஒளிப்பதிவு செய்தார். நான் பாரதியைப் பற்றி டொரொண்டோவில் பேசியதை 11 பகுதிகளாக யூட்யூபில் பதிவு செய்திருந்தார். புகைப்படங்கள் எடுத்தார். எனக்காக நிறைய நேரமும் பொருளும் செலவழித்தார். எனக்கு மாதா மாதம் பணம் அனுப்பினார்.

    ”கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது,” என்று பாரதி கண்ணனுக்குச் சொன்னதை நான் மணி சாருக்கு இன்றும் சொல்லலாம்.

    2007 ல் என் மனைவி அனுவுடன் மீண்டும் கனடா சென்றேன். அப்போதும் இதே கதைதான். ஆனால், அவர் உடல்நலம் குன்றியிருந்தது.

    மீண்டும் அவர் இந்தியா வந்து, என்னுடன் விசாகப்பட்டினத்தில் வெகுசில நாட்கள் தங்கினார். அவரை குருஜிக்கு அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தேன். மீண்டும் அவர் வந்தபோது, நான் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்தேன். இங்கே வந்து நோய்வாய்ப்பட்டார்.

    2013 ஆகஸ்டு மாதம் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு கண்ணில் பார்வை அறவே மங்கியிருந்தது. இருந்தும், என்னைக் கண்ட மகிழ்ச்சியில், எழுந்துவிட்டார்! நான் பராசக்தி கவிதைகளைச் சொன்னேன்; அவர் ஒளிப்பதிவு செய்தார். அந்த சிரமத்தால் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் படுத்த படுக்கையாயிருந்தார். அன்புமிக்க ஆனந்த் அவர் எனக்குச் செய்த சேவைகளையெல்லாம் இரட்டிப்பு மடங்கு செய்தான்.

    என்னடா அவர் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திக்கொண்டிருந்தால், ‘ரமணன் யார்?’ என்று ஒரு பதிவைத் தொடங்கி 10 கட்டுரைகள் இட்டார். படங்கள், வீடியோக்களைப் பதிவு செய்துவைத்தார். எத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்திருந்தார்! என்ன சிரத்தை! என்ன அன்பு!

    எதற்காக?

    காரணத்தைத் தேடினால் அன்பைப் புரிந்துகொள்ளவே முடியாது. எல்லாவற்றுக்கும் எதற்குத்தான் இப்படிக் காரணத்தைத் தேடி அலைந்து காரியத்தைக் கோட்டை விடுகிறோமோ தெரியவில்லை!

    45 ஆண்டு கால நட்பு. ஒரே சொல்லில் அவரை விவரிக்கலாம், நேர்மை. Fiercely honest, scrupulously honest. Brutally frank. தன்னிலும் சரி, பிறரிலும் சரி, அவர் பொய்மையை சம்மதிப்பதோ சகிப்பதோ இல்லை. அதனால் அவருக்கு நண்பர்கள் குறைவு.

    அவரால், அவருடைய நண்பனாக நான் கருதப்படுவதில் எனக்குப் பெருமை உண்டு. அதைக் காப்பாற்றிக்கொள்ள நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் உண்டு!

    கிடங்காய்க் கிடந்த என் இதயத்தை, ஒரு கலையரங்கமாக வடிவமைத்ததில் அவருடைய கரங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இன்று அந்த அரங்கில் அழகியல் ஆட்சி நடத்துகின்றது என்றால், அதற்கு ஆரம்ப நாட்களில் அவர் செய்த சேவைதான் காரணம் என்பதைக் கடவுள் முன்னிலையில் நன்றியுடன் சொல்வேன்.

    உண்மைதான். என்னைவிட 17 வயது வயதில் மூத்தவர் அவர். இன்று வரை, அவர்தான் எனக்குத் தொண்டு புரிந்து வந்திருக்கிறார் என்பதை சங்கடத்துடனேயே இங்கே பதிவு செய்கிறேன். என்னால் அவருக்குத் தொந்திரவுகள் உண்டே தவிர, உபகாரம் எதுவும் கிடையாது.

    ஒரு தந்தையைப் போல, தமையனைப் போல, என் நலனில் அவருக்கு அக்கறை; என் வளர்ச்சியில் அவருக்கு ஆனந்தம்; என் மனநிலையில் அவருக்கு கவனம்.

    அறிவார்ந்த அந்த அன்புக் கண்கள் என் மனசாட்சியில் எப்போதும் ஒளிவீசியபடி என்னை மனிதனாக வைத்திருக்கும்.

    அவருடைய நேர்மை எனக்கிருந்தால், நான் இறைவனின் சபையில் தலைநிமிர்ந்து நுழைவேன்!

    இன்று அவருக்கு 76 வயதாகிறது.

    ஆயிரம் பிறைகள் காண்க! ஆரோக்கியமாக வாழ்க!
    ஆன்மாவில் திளைத்து மகிழ்க! ஆழத்தே அமைதி பெறுக!
    பாயிரம் பாடி உம்மைப் பலவாறு போற்றுகின்றேன்
    பனித்த என் கண்களோடு பாதத்தில் வீழுகின்றேன்!

    Share
  • இசைக்கவியின் இதயம்!

    அன்பினிய நண்பர்களே,

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இரமணன் அவர்களின் இனிய குரலில், நம் வல்லமையில் ஏற்கெனவே ஒலிபரப்பாகியுள்ள பாடல்களின் தொகுப்பையும் இந்தப் பகுதியில் காணலாம். இசைக்கவியின் இதயம் மிகப் பெரியது; அதில் நம் எல்லோருக்கும் இடம் உண்டு. வாருங்கள், இசைக்கவி இரமணன் அவர்களின் தொடரை இனி தொடர்ந்து சுவைப்போம். இதோ, தவம் புரிய அழைக்கும் அவருடைய முதல் பகுதி…

     நிர்வாக ஆசிரியர்

    1800026_10152014436087919_583660219_o

    பாரதியும் தவமும்


    தவம் என்பது, கவனம் அனைத்தும் ஒருமுனையில் குவிவது. ஊசி முனையில், சின்னஞ் சிறிய பனித்துளியாய் உயிர் ததும்புவது போல; வெயில்நாளில் வேல்முனையில் துளி வெண்ணையாக உணர்வு நின்று உருகுவதைப் போல; இடைவிடாத வேட்கை ஓர் இடைவிடாத விசைப்பில் கனல்வதைப் போல.

    bharathi9பாரத நாட்டின் அடிநாதம் ஆன்மிகம். அதன் உயிரூட்டம் தவம். யோகம், ஞானம், வைராக்கியம், பக்தி இவையெல்லாம் தவமின்றிக் கனிவதில்லை. அந்தத் தவம், மனிதப் பண்பில்லாமல் கனிவதில்லை. மனிதப் பிறவியை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே தெய்வதத்தை நிறுவிக் கொள்ளவும் தவம் தேவை. உடம்பில் இருந்துகொண்டும் வரம்புகளை மீறிய ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் தவம் தேவை. சக மனிதனிடம் எதிர்பார்ப்பில்லாத அன்பு பாராட்டவும் தவம் தேவை. அனைத்துயிர்களிடமும் சமமான நேயம் பழகவும் தவம் தேவை. அனைத்தும் யாமே என்னும் உன்னத நிலையை எய்தவும் தவம் தேவை.

    ஒரு மனிதன், தன் மனதினுள்ளே எந்தச் சிக்கலும் பூசலுமின்றி, ஒரு சாதாரணமான, இனிய. எளிய மனிதனாக வாழவும் தவம் தேவைப்படுகிறது.

    காட்டில் சென்று ஆற்றப்படுவது மட்டுமில்லை தவம். விதிவசத்தால் விளைந்த சூழ்நிலைகள் நம்மை வைத்திருக்கும் இடம், நமக்கு வழங்கியிருக்கும் அடையாளம் இவற்றுக்கேற்பத் தோன்றும் கடமைகளைப் பற்றின்றிச் செய்வதும் தவம்தான்.

    தனியே இருப்பதில்லை தவம். கூட்டத்தில் தனித்திருக்கும் திறமை தவம். நீரில், நிழல்போல் நனையாமல் நீந்தும் லாகவம் தவம். எல்லாவற்றிலும் பங்குகொண்டு எதனாலும் தொடப்படாத வானமாய் விளங்கும் திறமை தவம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னால் உலகிற்கு நன்மை விளையவேண்டும் என்ற எண்ணமுள்ளவனுக்கு அது ஈடேறத் தவம் தேவைப்படுகிறது.

    ஆக, ஒரு சாதாரண மனிதன் ஆச்சரியமான ஆற்றல் பெறுவதற்கும், அந்த ஆற்றல்களைப் பொருட்படுத்தாமல் அவன் சாதாரண மனிதனாகவே விளங்குவதற்கும், ஒரு மனிதனால் பலருக்கும் நன்மை விளைவதற்கும். ஒரு மனிதன் அனைத்துக்கும் அறுதியான ஆன்மிக இலக்கை அடைவதற்கும் தவமே தேவை.

    தவத்தின் சிறப்பு என்னவென்றால், தான் உலகை விட்டு நீங்கும்போது, அந்தத் தவத்தை உலக நன்மைக்காக விட்டுச்செல்வதே! பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும், கலைகளும், கவிதைகளும் காலம் தாண்டி வாழ்ந்து உலகிற்கு ஒளிவழங்கக் காரணம், அவை தவத்தின் விளைவு என்பதுதான்!

    எனவே, பாரதி நமக்குக் கவிதைகள் மூலமாக விட்டுச் சென்றிருப்பது அவனது தவத்தைத்தான். அவனது ஒவ்வோர் எழுத்தும் ஒளியுடன், கனலுடன், ஒரு விசைப்புடன் விளங்கக் காரணம் அவை அவனது ஆன்ற தவத்தின் விளைவே என்பதுதான். ஒரு சராசரி மனிதனின் அத்தனை அம்சங்களும் அவனிடத்தில் காணப்பட்டதால் நமக்கு அவனோடு ஓர் அணுக்கம் ஏற்படுகிறது. ஒரு மகாமனிதனின் அபாரமான வீச்சுக்கள் அவனிடம் அனாயசமாக விளங்குவதைக் காணும்போது நமக்கு வியப்பும் திகைப்பும் விஞ்சுகிறது.

    கர்ம யோகத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவன் பாரதி. கீதையை மொழிபெயர்க்கும்போது, `செய்கையில் கீர்த்தியே யோகம்` என்றான். கடமையே தவம் என்ற கருத்துள்ளவன், அந்தக் கடமை என்ன என்பதையும் தெளிவுறவே தெரிவிக்கிறான்:

    கடமை யாவன தன்னைக் கட்டுதல்
    பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேணுதல்
    உலகெலாம் போற்றும் ஒருவனைப் போற்றுதல்

    என்றுசொல்லி, இந்த நான்முகம் கொண்ட கடமையின் பயனாய் விளைவதே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறு என்றும் தெளிவுபடுத்துகிறான். தனது வாழ்நாள் முழுதும் இந்தக் கடமைகளில் அவன் சலியாது ஈடுபட்டிருந்து, அதன் மூலம், பயன்களைத் தாண்டிய ஒரு செம்மாந்த மனப்பான்மையை, பிரபஞ்சம் அளாவிய பார்வையை அவன் பெற்றிருந்ததால் தன் மனதிற்குச் சொல்வதுபோல் மனிதர்களுக்கு ஓர் அறைகூவல் விடுக்கிறான்:

    செய்கதவம் செய்கதவம் நெஞ்சே! தவம்செய்தால்
    எய்த விரும்பியதை எய்தலாம்! வையகத்தில்
    அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
    இன்புற்று வாழ்தல் இயல்பு (வினாயகர் நான்மணி மாலை)

    அவன் எய்த விரும்பியது அன்பே! எய்தியதும் அன்பே! அதுவே மனித நேயமாக அவன் சொல்முழுதும் வெளிப்படுகின்றது. தவம் என்பது ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமல்ல. பெற்றதைப் பேணுவதற்கும் தவமே தேவை. ஒரு குழந்தையைப் பெறுவதோடு தாய்மை முடிந்துவிடுகிறதா என்ன? தனது குழந்தையைப் பேணி வளர்ப்பதற்கான துவக்கமே அல்லவா அது? எனவேதான் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறான்.

    துறவு பூண்டு ஒதுங்கி வாழ்ந்து இயற்றப்படும் தவம் மேன்மையானதே. அதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம். ஆனால், அதனினும் பெரிது, ஆண்டவனைப் போற்றும் தொண்டர்கள் செய்யும் தவம் என்கிறான்.

    துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகும் இங்குக்
    குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து
    அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெல்லாம்
    சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே!

    தொண்டர்களின் இயல்பு தொண்டு செய்தலே. தங்களால் இயன்ற தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர்கள் தொண்டர்கள். நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களைக் காத்தல், இல்லார்க்கு உணவீதல், அறவழியில் வாழ்பவர்கள் நீடூழி வாழ்கவென வாழ்த்தி அண்டமெல்லாம் ஆள்பவன் ஆண்டவன். அடியார்கள், இவையே ஆண்டவனின் குணங்கள் என்று கருதுவதால் அவர்களுக்கு அதே இயல்புகள் வந்தனவோ, இல்லை அந்த இயல்புகள் தம்மிடத்தில் காணப்படுவதால் அவற்றை ஆண்டவனிடம் காண்கிறார்களோ யாரறிவார்? இந்த இயல்புகளால் அவர்கள் செய்யும் தவம் சிறப்படைகிறது என்கிறான் பாரதி.

    தவம் என்பதை ஓர் உரிமையாகக் கருதிவிட முடியாது. அதனால்தான், யார் வேண்டுமானாலும் தவம் செய்யலாமா என்ற கேள்விக்கு `ஆம்` என்று விடைகூற இயலவில்லை. ஒருவனுடைய குண இயல்பில், தவம் செய்யவேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அல்லாதவன் அதில் புகுவது, செயற்கையாய்த் துவங்கி, பொய்யாய் நீண்டு, ஆணவ வீம்பாய் முடியும்.

    `புத்தி என்பது கர்ம வினையை அனுசரித்தே இயங்குகிறது` என்பது யோக சூத்திரங்களைத் தொகுத்தளித்த பதஞ்சலி முனியின் கூற்று. செய்த வினையின் விளைவு, மனிதனின் புத்தியில் உட்கார்ந்துகொண்டு அவனை இங்குமங்கும் செலுத்துகிறது. இதனால்தானோ என்னவோ, திருவள்ளுவர்,

    தவமும் தவமுடையார்க் கேயாம் அவமதனை
    அஃதிலார் மேற்கொள் வது

    என்றார். இதை, பாரதி உள்வாங்கிக் கொண்டு சொல்லும் அழகே அழகு:

    இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
    செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
    பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
    முயலு வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!
    (மொய்ம்பு = வலிமை, தோள்)

    இயல்பு என்பது அதுவாய் நம்மில் இருப்பது என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்பு போன்ற ஆன்ற பண்புகள் பயின்று பயின்றுதான் இயல்பாகிறது. பழக்கம் வழக்கமாகி, பண்பாகி, இயற்கை அல்லது இயல்பாகி விடுகிறது. சாதாரண பழக்கங்களுக்கும் அசாதாரணப் பண்புகளுக்கும் இது பொருந்தும் என்று சரியாக அறிந்துவைத்திருந்தபடியால்தான், பாரதி `பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்` என்கிறான். அன்பு என்பது பயின்றுகொண்டே இருக்க வேண்டிய ஒப்பற்ற பண்பு. அறிவைப் போல அதற்கும் அந்தம் கிடையாது.

    சரி. அன்பைவிடச் சிறந்த தவமில்லை என்றான். தவத்தைக் கடமையென்றான். கடமையைத் தவமென்றான். துறவைக் காட்டிலும் தொண்டே பெரிய தவமென்றான். தனது இயல்பில் தவவேட்கை இல்லாதவர்கள் அன்பைத் தவமாய்ப் பயிலுங்கள் என்கிறான். ஏனெனில் அன்பிற் சிறந்த தவமில்லையே!

    செய்வது தவம், பெறுவது வரம் என்பது பொதுவான கருத்து. எனவே முதலில் `செய்க தவம்` என்றான். இப்போது அதைத் தாண்டி, தவத்தைத் தருக என்று ஞானாசிரியனும் பரம குருவுமான முருகனிடம் வேண்டுகிறான்:

    தருவாய் நலமும் தகவும் புகழும்
    தவமும் திறமும் தனமும் கனமும் (முருகன் பாட்டு)
    (தகவு = தகுதி, பெருமை,அருள், நடுவுநிலை,வலி, அறிவு,தெளிவு, கற்பு,நல்லொழுக்கம்)

    எப்படி, உருக்கம் என்பது வேண்டிப் பெறப்படுகிறதோ, அப்படியே, தவம் என்பதும் பெறக்கூடிய ஒன்று என்னும் அரிய சேதியைப் போகிற போக்கில் பதிவு செய்கிறான் பாரதி.

    தனது கண்ணம்மாவைத் தவத்தின் உச்சத்தில் கிடைக்கும் விளைவாக, ஒப்புயர்வற்ற பயனாகக் கருதுகிறான்.

    பீடத்திலேறிக்கொண்டாள் – மனப்
    பீடத்திலேறிக்கொண்டாள்

    நாடித் தவம்புரிந்து – பீடுற்ற முனிவரர்
    கேடற்ற தென்றுகண்டு – கூடக் கருதுமொளி
    மாடத்தி லேறிஞானக் – கூடத்தில் விளையாடி
    ஓடத் திரிந்துகன்னி – வேடத் திரதியைப்போல்
    ஈடற்ற கற்பனைகள் – காடுற்ற சிந்தனைகள்
    மூடிக் கிடக்கு நெஞ்சின் – ஊடுற்ற தையமரர்
    தேடித் தவிக்குமின்ப வீடொத்தினிமைசெய்து
    வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

    இந்த வரிகள், பாரதியின் அரிய யோக நிலையை விளக்குவதாகவே படுகிறது. சித்தத்தில் எதனைப் பதியம் போடுகிறோமோ, சித்தம் அதன்மயமாகிறது என்பார்கள் பெரியோர். இங்கே பாரதி `மனப்பீடம்` என்பது சித்தமே. அந்தச் சித்தத்தில் யாரை வைத்தான்? கண்ணம்மாவை! அதுவும் அவளாகவே சித்தத்தில் ஏறிக்கொண்டாளாம்! யாரிந்தக் கண்ணம்மா? காளி! கண்ணனும் காளியும் ஒன்றுதானே? அந்தக் கண்ணம்மா என்னும் கண்ணனாகிய காளி சித்தத்தில் ஏறிக்கொண்டு சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டபின் எல்லாம் எளிதாகிவிட்டது. என்னவெல்லாம்?

    தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்tumblr_mqminyR2bz1s461fro1_1280
    தனிநிலை எளிதெனப் புரிந்தாள்
    சிவத்தினை இனிதாப் புரிந்தாள், மூடச்
    சித்தமும் தெளிவுறச் செய்தாள்
    பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
    பான்மைகொன் றவள்மயம் புரிந்தாள்
    அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்
    அநந்தமா வாழ்கவிங் கவளே (மஹாசக்தி பஞ்சகம்)

    செய்யப்படுவதல்ல தவம். அது நிகழவேண்டும். மனப்பீடத்தில் காளி ஏறிக்கொண்டால் அது தானாக நிகழும். அவளே வேண்டும் என்ற வேட்கை இருந்தால் அவள் தானே பீடத்தில் ஏறிக்கொள்கிறாள். அப்போது தவம் எளிதாகிறது. தன்னில் தான் தனித்து விளங்கும் யோகநிலை எளிதாகிறது. முரட்டுச் சிவம் முறுவல் பூக்கிறது. அவளைத் தவிர வேறேதும் இல்லாததால் சித்தம் தெளிவாகிறது. சித்தம் தெளிவானால் அங்கே காளிதான் தென்படுகிறாள். அவளே சித்தத்தின் ஒவ்வொரு மூலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கிறாள். அப்போது அவளோடு நேருக்கு நேரே பேசிக்கொள்ள முடிகிறது:

    யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்
    யோகமேதவம் தவமேயோகமென உரைத்தாள் (அழகுத் தெய்வம்)

    யோகம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் `யுஜ்` என்பது. அதாவது, இணைதல். மானுடம் தெய்வதமாவது. இந்தத் தெளிவுடன் தவத்தில் அமர்ந்தால் யோகம் எளிதாகிறது. அல்லது, இந்த நோக்கத்துடன் யோகம் பயின்றால் தவம் எளிதாகிறது. எத்தனை அரிய சேதியை எவ்வளவு எளிதாக, அவளிடமே கேட்டுப் பெற்றதாகத் தெரிவிக்கிறான் பாருங்கள்!

    தவத்தின் உச்சம் என்ன? தான் தவம் செய்கிறோம் என்னும் உணர்வு நீங்குதலே. முழு உணர்வோடு, நோக்கம், இலக்கு பற்றிய தெளிவோடுதான் தவத்தில் இறங்கவேண்டும். பிறகு, அதில் தன்னைத் தொலைத்துவிட வேண்டும். ஏனெனில், சாதனை செய்கிறோம் என்னும் உணர்வே வெற்றிக்குத் தடை! மேலும், சாதனை என்பது சித்தசுத்திக்காகவே. மோட்சத்திற்கு நேரடி சாதனை கிடையாது. சித்தம் சுத்தமடைந்து, இறுதி இலக்கான சிவம் என்னும் சிந்தனையில் அப்படியே காத்துக் கிடப்பதே செய்ய வேண்டியது; செய்ய முடிவது. இங்கே, பாரதியின் சித்தம் சுத்தமாகிவிட்டது, அதாவது சக்திமயமாகிவிட்டது. அப்போது என்ன தோன்றும்?

    தவமொன்றும் இல்லையொரு சாதனையும் இல்லையடா
    சிவமொன்றே உள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா
    (பரசிவ வெள்ளம்)

    சரணாகதிக்கு அடிப்படை பக்தி. அதே பக்தி, சித்தசுத்தியின் முடிவிலும் தேவைப்படுகிறது! பாரதியின் வீச்சு, நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது!

    பாரதிக்கு ஆதாரம் பாரத நாட்டின் தவவலிமையே. அவன் பாரத நாட்டைக் கொண்டாடும் போதிலெல்லாம் மறவாமல் தவத்தைக் குறிப்பிடுகிறான்:

    யாகத்திலே தவ வேகத்திலே – தனி
    யோகத்திலே பல போகத்திலே
    ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
    அருளினிலே உயர் நாடு (பாரத நாடு)

    யாகம் என்பது தவத்திற்கு முற்பட்ட, அல்லது கீழ்ப்பட்ட நிலைதான். ஆபத்தில்லாத யோகம் என்பது, தவத்தின் வழியே பெறப்படும் யோகம்தான். போகம் என்பது தவத்தின் மூலமே நியாயமாகிறது. சரி, அதென்ன தவ வேகத்திலே? தவம் என்றால் நிதானம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்! தவம் என்பது, ஒரு சக்தி விசைப்பு, மின்சாரம் போல! எதைநோக்கியும் செல்லாமல் இருந்த இடத்திலேயே விசைத்துக் கொண்டிருக்கும் ஒரு வினோதமான வேகமே தவம். ‘Resultless dynamism.’

    பாரத நாடு தவத்தலம். உலகில், வேறெந்த நாடும் நாகரிகத்தின் அரிச்சுவடியைப் பயின்றுகொண்டிருந்த வேளையில், நம் நாடு தவத்தின் உச்சங்களைக் கண்டது. இறைவனுக்குச் சமமான ஆற்றல் பொருந்திய மாமுனிவர்கள் பலர், சாதாரண மனிதர்கள் போலவே நடமாடிய நாடிது. எல்லோரும் வேறெதுவும் செய்யாமல் தவத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்களா? நாட்டை நடத்திச் செல்லும் வீரமிக்க அரசர்கள் இல்லையா? கடமையே தவம் என்ற கருத்தை உலகிற்கு வழங்கிய நம் நாட்டில் வீரர்களுக்குப் பஞ்சமேது?

    மாரத வீரர் மலிந்த நன்னாடு
    மாமுனிவோர் பலர் வாழ்ந்தபொன்னாடு (எங்கள் நாடு)

    `புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு` என்பது போல் `வீரர் மலிந்த நன்னாடு` என்று கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வீரர்களில் பலர், மாமுனிவோர்களாகத் திகழ்ந்தார்கள். நாடாளும் அரசர்களும் காடாளும் முனிவர்களும் ஒரேபோல் வீரர்களா? ஆம்! நாடாண்டது மட்டுமல்ல. உரிய நேரத்தில், பொறுப்பைத் தக்கவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரும்பி ஏழ்மையைத் தழுவி, தவமியற்றக் காட்டுக்குச் சென்ற எத்தனையோ அரசர்களை உலகம் இந்த நாட்டில்தான் கண்டிருக்கிறது. மேலும், பற்றைத் துறக்கப் பெரும் வீரம் வேண்டும்! எனவேதான் ஞானியரை `தீரர்` என்று நாம் அழைக்கிறோம்.

    எனவே, சித்தம் எப்படியோ அப்படித்தான் இந்த உலகமும். சித்தம் சிவமயமானால் உலகம் சிவமயமாய்த் தோன்றும். சித்தம் உறுதிப்பாடோடிருந்தால், கடலும் கூடக் குளம்படி நீராய்க் குறுகும். இதுதான், ஆரிய ராணியாகிய பாரத மாதா தனக்குச் சொன்ன வாசகம் என்கிறான் பாரதி:

    சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
    சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
    அத்தனையும் வெல்லலாம் என்று சொன்னசொல்
    ஆரிய ராணியின் சொல் (பாரத மாதா)

    அப்படி, சித்தத்தில் உறுதி கொண்ட துறவியரை எல்லோரும் வணங்கும் பாரத மாதாவே வணங்குகிறாளாம்!

    கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
    கைதொழுவாள் எங்கள் தாய் (எங்கள் தாய்)

    ஆகவே, சித்தத்தில் ஒளியிருந்தால் உலகம் ஒளிமயமாகவே தோன்றும். சித்தத்தில் மேன்மையான எழிலிருந்தால், காண்பதெல்லாம் எழிற்கொள்ளையாகவே தோன்றும். உலகம் என்கின்ற காட்சியே சித்தம் அதைப் பிரதிபலிப்பதால் காணப்படுகிறது. அந்தச் சித்தம் மேன்மையான பண்புகளால் நிறைந்திருந்தால், நகர்க என்றால் மலை நகரும். விலகு என்றால் கடல் விலகும். விழி திறந்தாலே இருள் விடியும்! இதை எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாரதி!

    பொழுது புலர்ந்தது யாம்செய் தவத்தால்images
    புன்மை இருட்கணம் போயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி
    (பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி)

    இந்த வரிகளை, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் அவன் வைத்ததுதான் எத்தனை சிறப்பு! நமக்கு விழிப்பு ஏற்பட்டால்தான் நாடு செழிக்கும். சுப்ரபாதம் என்பது கடவுளை எழுப்புவதற்காக அல்ல. கடவுள் உறங்குபவரும் அல்ல. அவர் உறங்கினால், சுப்ரபாதம் எங்கே? பாடுவார் எங்கே? ஆசை மண்டிக்கிடக்கும் நம்முள்ளத்தில் இறையுணர்வைத் தட்டி எழுப்புவதற்காக ஏற்பட்டதே திருப்பள்ளியெழுச்சி.

    தமிழும் தமிழ் இனமும் இதுநாள் வரை வாழ்ந்திருக்கக் காரணம் என்னவாம்? அதைத் தமிழ்த்தாயின் வாயிலாகவே சொல்கிறான் பாரதி:

    தந்தை அருள்வலியாலும் – முன்பு
    சான்ற புலவர் தவவலியாலும்
    இந்தக் கணமட்டுங் காலன் – எனை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

    ஆனால், மேன்மைக் கலைகள் மேற்கில் மெத்த வளர்கின்றன என்றும் மெல்லத் தமிழினிச் சாகும் என்றும் கேட்டுத் துடிக்கிறாள் `சீரிளமைத் திறம்` கொண்ட தமிழ்த்தாய். ஆனால், இந்தப் பழிதீரும், நான் பார்மீதில் சாகாதிருப்பேன் காண்பீர் என்கிறாள். எதை ஆதாரமாகக் கருதி அப்படிச் சொல்கிறாளாம்? அதே அருள், அதே தவம்தான்!

    தந்தை அருள்வலியாலும் – முன்பு
    சான்ற புலவர் தவவலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன் (தமிழச் சாதி)

    புலவர் தவவலிமை என்னும் கொள்கை வேறெந்த நாட்டிலும் உண்டோ? சொல்லேர் உழவர் பகைகொள்ளற்க என்னும் திருவள்ளுவரின் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கது.

    `வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றி,` என்று பாரதி அந்த மராட்டியச் சிங்கத்தை வெகுவாகப் போற்றிப் பாடுகிறான். சத்ரபதி சிவாஜி என்னும் கனல்பறக்கும் ஒரு கவிதையில் இந்த நாட்டின் மேன்மையைப் பற்றி சிவாஜி சொல்வதாக அவன் அமைத்திருக்கும் வரிகள் பாரதியின் பாரத நேசம் எத்தனை அறிவார்ந்தது, ஆழமானது என்று நமக்குக் காண்பிக்கின்றன:

    இன்னரு பொழில்களும் இணையிலா வளங்களும்
    உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
    மைந்நிற முகில்கள் வழங்குபொன்னாடு
    தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
    ஆவலோ டடையும் அரும்புகழ் பூமி!
    வானவர் விழையு மாட்சியர் தேசம்!
    பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ
    நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்!

    இமயத் தொடர்களை, தேவர்களின் ஆன்மாக்கள் என்றான் காளிதாசன். தேவர்கள் வாழ்வதே இங்குதான் என்கிறான் பாரதி. தவத்திற்கு இதுதான் தகுந்த இடம் என்பதால் முனிவர்கள் நாடிப் பிறக்கும் நாடிது என்கிறான்! வானவர்களும், தங்களது நிலையில் உயரவேண்டும் என்றால், அது பாரதத்தின் மூலமே என்று பறைசாற்றுகின்றான். இவையெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை. ஆழமான அரியதான, நாம் அறவே மறந்துபோன உண்மைகள்.

    அதெல்லாம் சரி, இந்த முழக்கம் போர்க்களத்தில் எதற்கு? நமது வாழ்வின் ஆதாரமான பண்பாட்டுக்கு ஆபத்து வரும்போது எவரும் அதைக்காக்கத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டும். இங்கே அப்படியோர் ஆபத்தான கட்டத்தில்தான் மன்னன் சிவாஜி தனது மக்களைத் தட்டியெழுப்பி, ஒவ்வொருவரையும் உயிரைத் துச்சமாக மதிக்கச் செய்து, பாரதத்தை மிலேச்சர்களிடமிருந்து காக்கும் அரிய பணியில் ஈடுபடும் வீரர்களாகத் தயார்செய்கிறான்.

    சரி, இது தவத்தில் சேருமா என்றால் இதைவிடச் சிறந்த தவம் இல்லை என்கிறான். `அன்பிற் சிறந்த தவம் இல்லை` என்றவன்தான்,

    …நெஞ்சக்குருதியை நிலத்திடை வடித்து
    வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் யாம்!
    தவத்தினில் இதுபோற் தவம்பிறிதில்லை (சத்ரபதி சிவாஜி)

    இவ்விதம், அன்பிற் சிறந்த தவமில்லை, கடமையே தவம், தவமே கடமை, தொண்டர் செயுந்தவமே சிறந்த தவம், என்றெல்லாம் விதவிதமாகத் தவத்தின் பரிமாணங்களை நமக்கு விரிவாகப் பல இடங்களில் காட்டுகிறான் பாரதி.

    வாருங்கள் தவம் புரிவோம்!

    Share
  • கொஞ்சம் டீ! கொஞ்சம் தீ!

    வணக்கம்!

    இன்று (10.11.2013) மாலை 6.00 மணிக்கு, மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் (திருவல்லிக்கேணி, சென்னை)

    திருமதி பாரதி பாஸ்கர், கவிமாமணி திரு. வ.வே.சு. ஆகியோருடன் என் சித்தத்தில் சித்திரமாய்ப் பதிந்துவிட்ட பாரதியைப் பற்றி உரையாடுகிறேன்.

    வாருங்களேன்!

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • URL for videos in Youtube – Isaikkavi Ramanan

     

    Dear Friends!

    Vanakkam!

    As you know, Swathi Solutions have taken up the task of bringing out my works in the form of audio CDs, ebooks and apps. Now, they have started uploading my videos in Youtube. Here is the URL:

    http://www.youtube.com/IsaikkaviRamanan

    isakkaviramanan/wp-login

    I would request you all to subscribe to it. It is of course free!

    Here is the list of my ebooks:

    1. Agathiyar Andhaadhi (100 Venbas)
    2. Nathiyil Vizundha Malar (Poems)
    3. Ellorkkum Thanthai Iraivan (Article on Siva)
    4. Imayam:Andharangathin Bhagirangam (Essay on my pilgrimage)
    5. Drop from the Gita (English – Two part essay on Bhagawat Gita)
    6. ManonmaNi Maalai (100 Venbas)
    7.Thirumanam Enbadhu (Write up on the institution of marriage, meaning of mantras)
    8. A Sublime Sacrament (English – Write up on the institution of marriage, meaning of mantras

    You may visit www.kalakendra.com to get these books.

    Here is the list of my CDs:

    1. Aathi Choodi
    2. Way of the Vedas – வேத நெறி
    3. Durga Saptha Sloki

    These three are presented as conversational explanations in English and Tamil. My good friend Dharma Raman has rendered the English portions. Nritya Jagannathan has chanted the Vedic mantras and Durga Saptha Sloki.

    4. Nathiyil Vizundha Malar
    My Tamil poems and some of my songs in my voice. Dharma Raman has provided appropriate explanatory preludes beautifully.

    5. Manonmani Maalai
    My 100 verses (Venbas) in my voice. Dharma Raman comes in whenever necessary to explain the nuances.

    This is a new experiment. Its success depends on your support!
    My explanatory notes in English and Tamil on Avvaiyar’s Aathi Choodi is now available as Mobile App also (apart from audio CD) thanks to Swathi Soft Solutions, Chennai.

    Please click kalakendra.com/aathichoodi to access it.

    It is your support which would encourage them to bring out more of my works.

     

    Love,

    Ramanan

    Share
  • கதவைத் திறந்தால் கண்ணதாசன்

     

    கதவைத் திறந்தால் கண்ணதாசன்

    அன்பர்களே!

    வணக்கம்!

    அக்டோபர் 20. ஞாயிறு, மாலை 6.15 மணிக்கு, “கதவைத் திறந்தால் கண்ணதாசன்” நிகழ்ச்சி!

    மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் பேசுகிறோம்.

    இடம்: சிருங்கேரி ஜகத்குரு சனாதன தர்ம சமிதி, 23, சிருங்கேரி மடம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28.

    அனைவரும் வருக!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • வீணையா (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

    வீணையா – கேட்டு மகிழுங்கள்

    வீணையா? விதியினைச் சரிசெய்யும் இதயத்தின்
    ஆணையா?
    விரல்களா? விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்வுதரும்
    சுரங்களா? ஒரு
    வீணையை ஏந்திய திருமகள் என்
    விழியினில் வந்துநின்றாள் அவள்
    செந்தாமரையில் கலைமகள், புதுச்
    சிரிப்புடன் வந்துநின்றாள்
    அலைமகளும் கலைமகளும் வந்து குலவுகின்ற தருணம்
    மலைமகளும் இதைக்கண்டு தன் மனது குளிரும் தருணம்

    பார்க்கப் பார்க்கப் பரவசம் அம்மா பார்க்க முடியவில்லையே
    பால்மழையில் குழந்தையம்மா பருகத் தெரியவில்லையே
    சேர்த்துப் பிடித்த மணல்மேடெல்லாம் தேன்மழையில் கரைந்ததுவே!
    செல்லுமிடம் நானேயாகி சிலையாய் உயிர் நிலைத்ததுவே!
    நேரில் நின்ற சிறுமியின் கண்ணில் கோடிமின்னல் தெறித்ததுவே, அவள்
    நெஞ்சின் ஒளியில் நீண்ட நிழலில் அலையும் கலையும் தோன்றியதே
    கண்ணில் மறைந்து நெஞ்சில் நுழைந்து கமலமாக விரிந்ததுவே                     

    (வீணையா)

     

    நாணம்வந்து சிவந்ததிதயம் அதிலெழுந்தாள் திருமகளே
    நாள்:விடிந்து வெளுத்தபோது அங்குவந்தாள் கலைமகளே
    காணக்காண எங்கும்தோன்றிக் கலகலத்தாள் மலைமகளே
    கண்கள்கூச உயிரின் உள்ளே ஒன்றானாள் ஒருமகளே
    மாறிமாறித் தோன்றினாலும் மர்மமொன்றும் இல்லையே
    ஒளியும் இருளும் ஒன்றே என்றால் மாயமொன்றும் இல்லையே
    மாயம் மர்மம் தீர்ந்துவிட்டாலும் மலைப்பு தீரவில்லையே! (வீணையா)

    வீணையா – ஆம் கேட்டு மகிழுங்கள்!

     படத்திற்கு நன்றி :

    http://www.brass-handicrafts.com/saraswati-statue.html

     

    Share
  • நட்ட நடுவில் (பாடல்)

     

    இசைகவி ரமணன்

    நட்டநடுவில் – சுவைத்து மகிழுங்கள்

    நட்ட நடுவில் பொட்டுவைத்து
    நட்சத்திரங்களை நட்டுவைத்து
    கோள்களினைச் சுழலவைத்து கோளங்களை அலையவைத்து
    வெள்ளம்வடிந்து நாணல்புல்லை நிமிரவைத்தவள்! அந்த
    வானத்திலே முகம்துடைத்துச் சுருட்டி எறிந்தவள்!
     அவள்தான் என்னையும் படைத்தவள்!
     எனக்குள் தன்னையும் அடைத்தவள்!!
    தர்மங்களும் நியாயங்களும் அவள் மனத்தின் இட்டம், நம்
    தர்க்கமெல்லாம் தாழ்வாரத்தில் குழந்தை அடிக்கும் கொட்டம்!
    மர்மமாக இருப்பதிலும் அவளுக்கில்லை திட்டம்
    மனம்தொறந்தா மல்லிகைஉதிர்ந்து மணக்குமவள் கொற்றம்!

    தக்கைபோல மெதந்திடாமல்
    தாயை அறிய முடிந்திடுமா?
    கட்டிப்பிடிக்கவும் முடியாது விட்டுவிலகவும் வழியேது?
    தொட்டுப் பார்க்க முடியாத தொலைவில் ராணி, என்னைத்
    தொட்டுத் தொட்டு வார்த்தைசெல்லும் தோழமை வாணி
     அவள்தான் தொலைவில் ராணி
     அவளே தோழமை வாணி

     
    சாதனையும் வேதனையும் கானலிலே நீரு, அவ
    சோதனையே வைப்பதில்லே தேறுவது யாரு?
    இன்பம் பதநி துன்பம் கள்ளு இப்படிப் பாருநீ
    சரியும் தவறும் அவள்வீணையில் சரிகமபதநி

    பேரைச் சொல்லி அழைத்தாலும்
    பேந்தப் பேந்த முழித்தாலும்
    ஊரைக்கூட்டித் தொழுதாலும் உருண்டு புரண்டு விழுந்தாலும்
    ஒண்ணும்லாபம் இல்லேநானும் சொல்வதைக் கேளு, அவளை
    உயிர்க்குயிரா அம்மான்னு ஒரு தரம் கூவு
     உண்மையைச் சொல்லுறேன் கேளு
     அம்மான்னு ஒருதரம் கூவு

    படத்திற்கு நன்றி :

    https://ramanan50.wordpress.com/2012/09/01/for-childless-couplethirukkarukaavoor-details/

    நட்டநடுவில் – செவி குளிர!

     

    Share
  • அம்பிகையின் அழகு

     

    இசைக்கவி ரமணன்

    அம்பிகையின் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

    ஜூலை 1976. பாரதி கலைக்கழக அன்பர்கள் ஒரு திருக்கோயிலில் ”தெய்வக் கவியரங்கம்” என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது எந்தக் கோயில் என்பது இப்போது நினைவில் இல்லை. ஐந்தாறு கவிஞர்கள் – இளையவன், மதிவண்ணன் போன்றோர், ஆளுக்கொரு தெய்வத்தைப் பாடவேண்டும் என்பதாக ஏற்பாடு.

    “நீ அம்பிகையின் அழகு என்ற தலைப்பில் பாட முடியுமா?” என்று கேட்டார்கள். நான் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும், அது ரொம்ப சுலபம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
     
    அந்தக் கணத்திலிருந்து என்னில் கவிதையைக் காண இயலவில்லை…நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஒரு வார்த்தை கூட எனக்கு வரவில்லை! பேசிக்கொண்டே இருந்தவன் தீடீரென்று நட்ட நடு அவையில் ஊமையாகிப்போனால் எப்படி இருக்கும்? அப்படி, எனக்குத் தமிழே மறந்துவிட்டதுபோல் மனது சூனியமாகி விட்டது.

    யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ஒருநாள் பகற்பொழுது முழுவதும் எனக்குத் தமிழே மறந்ததுபோல், சொல்லே இல்லாமல் துடித்தேன்.

    விளக்கேற்றி வைத்து, பராசக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன். ஜீவித்திருக்கும் உயிர்களுக்கு எப்படி அடுத்த மூச்சு நிச்சயம் இல்லையோ, அதுபோல் அடுத்த சொல்லுக்கான உத்தரவாதம் இல்லாத கவிஞன்தான் நான்; அவளிட்ட பிச்சையே தவிர என் திறமை என்று ஏதுமில்லை; என்று புரிந்துகொண்டேன்.

     
    பிறகு வந்தன வார்த்தைகள். அதுதான் “அம்பிகையின் அழகு” என்னும் கவிதை. அதை என் குரலில் ஒலிப்பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதில் இலக்கியம், கவிதை நயம் எதுவும் கிடையாது. ஆனால், எனக்கு இது அம்பிகையுடனான அந்தரங்க அனுபவம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஏன் பொதுவில் கொண்டு வருகிறேன்?

    அவளைத்தான் கேட்கவேண்டும்!

    அம்பிகையின் அழகை செவியாலும் பருகலாம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.starsai.com/garbarakshambigai-photos/

    Share
  • நடிக்கிறாள்

     

    இசைக்கவி ரமணன்

    வீசும் ஒளிவிழிப் பார்வையில், எங்கள்
    வீரர் உதிர்த்திடும் வேர்வையில், ஞானத்
    தேசு பெருகிடும் நெஞ்சினில், எங்கள்
    தேசத்து மாதர்கள் நெற்றியில், பொன்னைப்
    பூசிப் பரப்பிய மாலையில், இன்பப்
    புள்ளினம் ஆர்த்திடும் சோலையில், ஒரு
    தூசின் அசைவு முயற்சியில், சக்தி
    துயர்கெடக் கூத்து நடிக்கிறாள்!

    ஆழ நடுக்கருங் காட்டிலே, ஓர்
    ஆளுமில் லாக்குச்சு வீட்டிலே, நன்கு
    வாழ மறந்திட்ட போதிலே, நல்ல
    வார்த்தையொன் றும்விழாக் காதிலே, கண்ணில்
    ஆழத் துயர்சுழல் கையிலே, நித்தம்
    ஆடியின் புற்றுவீழ் பொய்யிலே, தோன்றி
    வாழத் திருவொளி பெய்யவே, சக்தி
    வாழ்வெனும் கூத்து நடிக்கிறாள்!

    எண்ணரியப் பல பந்துகள், தமை
    எட்டி உதைத்துச் சுழற்றுவாள்! நீல
    விண்ணைக் கடலினி இம் மண்ணினை, நூறு
    வித்தைகள் காட்டி இயக்குவாள், மனம்
    எண்ணுமுன்னே சிரம் தாழ்ந்திடும், முன்னோர்
    என்னும் மலர்களைச் சூடுவாள், அவள்
    எண்ணும்படிக் கொன்றுமே இலாத
    என்னிலும் ஓடி நடிக்கிறாள்!

    காதலெனச் சொல்லிக் காமத்தில், இந்தக்
    கட்டுடல் வீழ்ந்து துடிக்கையில், நெஞ்சம்
    சாதலை எண்ணி வருந்தியே, ஒரு
    தத்துவம் இன்றித் தவிக்கையில், வாழ்வில்
    சோதனை யாய்ப்பல துன்பங்கள், வந்து
    சூழ்ந்து விழுந்து கடிக்கையில், இன்ப
    வேத மெனக்கவி வெள்ளமாய், சக்தி
    வேக நடனம் நடிக்கிறாள்!

    பண்ணிய பாவங்கள் எத்தனை! எய்தும்
    பழிகள் ஊறுகள் எத்தனை!
    கண்ணிருந்தும் குருடாகிய, கலி
    காலங்கள் எத்தனை எத்தனை!
    எண்ணி இவைகளை ஓர்கணம், இந்த
    ஏழை அழுது புரள்கையில், எந்தன்
    கண்ணின் றுருண்டிடும் முத்திலும், அந்தக்
    காளி நடனம் நடிக்கிறாள்!

    படத்திற்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:Kali_Dakshineswar.jpg

    Share
  • அன்பின் மறுபெயர்!

     

    இசைக்கவி ரமணன்

    ஒரு புதிய கவிதை, பழைய பாடல்

    ஒவ்வொரு நாளும் கவிதைகள்
    ஒவ்வொரு வேளையும் கானங்கள்
    ஓங்கி வளர்கிற தோர்பூசை
    ஒய்யா ரிக்கிது தான்சேவை
    ஒவ்வொரு கணமும் ஆனந்தம்
    ஒவ்வொரு கனவும்  மிகவும்நிசம்
    ஒருகணம் போலொரு கணமில்லை
    ஒவ்வொரு பொழுதும் புதுஎல்லை!

    “அம்மா!” என்னும் குரல்கேட்க
    அவளுக் காசை மிகவுண்டு
    அவளது தன்னந் தனிமையிலே
    அனுபவித் துள்ளே நெகிழ்வதுண்டு
    அம்மா என்னும் மந்திரச்சொல்
    அதுபோல் எதுவும் இங்கில்லை
    அவள்செவி வேறெதும் கேட்பதில்லை
    அதுவே அதுவே அவள் எல்லை!

    குட்டியைக் கவ்விய தாய்ச்சிங்கம்
    கொஞ்சம் தரையில் குலவவிடும்
    கூரிய கண்கள் ஒருசிறிதும்
    குட்டியை விட்டு விலகாது
    எட்டும் தொலைவில் அவள்காவல்
    என்றும் ஒளியாய்ச் சூழ்ந்திருக்கும்
    இடையே கவலை களிப்பாட்டம்
    என்னும் நாடகம் தொடர்ந்திருக்கும்

    மறந்த நினைவு மீள்கையிலே
    மடியைத் தேடி மனம்பதறும்
    மறக்கத் தெரியா மனத்தவளின்
    மணத்தில் முகத்தைத் தேய்த்திருக்கும்
    பிறந்து வளர்வது அவளில்தான்
    பின்னும் முன்னும் அவளில்தான்
    பிணியும் குணமும் அவளில்தான்
    பிணக்கும் தீர்வும் அவளேதான்!

    ஆழ மனத்தின் அடியிலிருந்து
    அம்மா என்றே அழைப்பவரை
    அல்லல் ஏதும் அண்டிடுமா?
    அற்ப மரணம் தீண்டிடுமா?
    வேழம் எலிவளை வீழ்ந்திடுமா?
    வேலை நாணல் பிளந்திடுமா?
    வேதனை தீர்க்கும் நாமமிது!
    வேதம் பணியும் நாமமிது!

    ஆயிரம் நாவுகள் இருந்தாலும்
    அதுதான் சொல்லித் தீர்ந்திடுமோ?
    அம்மா அம்மா என்றிடுவோம்
    ஆனந் தக்கூத் தாடிடுவோம்
    வாயினிக்க வரும் வார்த்தைகள்
    வண்ணக் கவிதைக ளாகட்டும்
    வற்றிக் கிடக்கும் தடங்களிலே
    வசந்த நதிகள் பொங்கட்டும்!

    அன்பின் மறுபெயரைச் சுவையுங்கள்!

     

    Share
  • கட்டுக்கடங்காத வெள்ளம்!

     

    இசைக்கவி இரமணன்    

    காலு வச்ச எடமெங்கும்  தாமரை
    கையி தொட்ட எடமெங்கும் பூமழை
    கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
    கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

    இவ எட்ட முடியாத பைரவி
    எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

    அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
    அது தொட்ட கணத்துல பூக்குமே

    இது கட்டுக் கடங்காத வெள்ளமே
    அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

    தென்றல் தொட்டு விழுந்தது பட்டு மலரொன்று
    போகுது ஊர்கோலமே!

    இனி திக்குத் தெசெயொண்ணுமில்லயே
    இதில் திரும்ப வழியொண்ணுமில்லயே
    இதில் இன்பமும் துன்பமும் வண்ணமே
    அதில் வண்ணங்கள் ஒவ்வொன்றும் ராகமே

    எந்தன் நட்டநடு நெஞ்சில் பைரவி
    அது பட்டப் பகலினில் ராத்திரி

    தங்கம் கொட்டிக் கெடக்குது கொல்லையில்
    உயிர் பஞ்சுப் பறக்குது கொள்ளையில்

    இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ?
    இந்த அன்புக்குப் பேரென்ன வன்மமோ?

    அந்த முத்துச் சிரிப்பியின் பித்தத்திலே
    இந்தச் சத்தமும் சங்கீதமோ?
    நான் உங்களுக்கு வழி சொல்லவா?
    அட உங்களையும் சுழல் கொள்ளவா?
    தேன் சின்னத் துளியில்ல ஊருணி
    வான் அந்தத் துளிக்குள்ள முக்குளி
    அவ வச்சுக்கிட்ட பேரு பைரவி
    அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் காவிரி

    அட கண்ணில் பெருகுது கங்கையே
    அடி காலை அளந்தவன் தங்கையே

    அம்மோய்! அண்ட பகிரண்டம் பம்பரம்
    அங்கு ஜனன மரணங்கள் சாமரம்

    என்னைக் கொண்டவளே உன்னைக் கண்டொருநாள் ரெண்டு
    வார்த்தை சொன்னாலிது தீருமோ

    அவ ஊரறியாத பயங்கரி
    வந்து ஊட்டி வளர்க்கிற சங்கரி
    அவ வச்சதுதானிங்கு சட்டமே
    அந்தச் சட்டமெல்லாம் அவ இட்டமே

    உயிர் உன்மத்த உச்சமே பைரவி
    அதில் ஊறிக் கெடக்குது என்விதி

    இனி மிச்சமொண்ணுமில்ல சங்கதி
    அட மீனுக்கு முக்கெல்லாம் சந்நிதி

    அந்தக் காத்துல வாசனை என்கதி
    அவ காலில் கெடப்பதே நிம்மதி

    அந்த உச்சாணிக் கொம்புல உக்காந்த பைங்கிளி
    பேச்சில் அறுந்தது சங்கிலி!

    காலு வச்ச எடமெங்கும் (இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க)

    படத்திற்கு நன்றி :

    http://srisubramaniamthroupathai.webs.com/srithroupathaimahashakti.htm#542691942

    Share
  • பரமஹம்ஸரும் பவதாரிணியும்

     

    இசைக்கவி ரமணன்

    அவளுக் கென்றோர் மனமுண்டு! அதில்
    ஆயிர மாயிரம் குணமுண்டு!
    சிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒரு
    சித்திர மலராய்ச் சிரித்திடுவாள்
    கவலைகள் யாவும் இவளேதான், ஒரு
    கலமாய் வருவதும் அவளேதான்!
    எவரும் எதுவும் அறியாமல், இவளே
    எதிரே புதிராய்த் திரிகின்றாள்!

    ஏதும் துவங்கிய முன்பேயே, அவை
    எல்லாம் விழுங்கி வியர்த்தவள்தான்
    ஏதோ மிஞ்சி இருப்பதுபோல்
    இன்றும் வீதியில் திரிகின்றாள்
    தீதும் நன்றும் இவள்கண்கள், இவள்
    சிந்திய சிரிப்பே நம்பெண்கள்
    கீதம் பாடும் கவிஞர் நெஞ்சில்
    கிளர்ந் தெழுந்திடும் கிரணங்கள்!

    உச்சி வெய்யில் வியர்வையிலே
    உடம்பில் ஒருவித நடுக்கம்போல்
    பிச்சியின் சினத்தின் உச்சத்தில்
    பெயர்ந்த சுகமே பக்தியடா!
    தன்னை மீறிய புதிரொன்று
    தன்னி லிருந்தே தோன்றியதை
    அன்னை உணர்ந்து வியக்கின்றாள்
    அதனைக் காண விழைகின்றாள்!

    எங்கே எப்படிக் காணுவது?
    எவ்விதம் தன்னைக் காணுவது?
    கங்கைக் கரையின் ஓரத்தில்
    கனலாய் பக்தி ஒதுங்கியது
    அங்கே பதுமை வடிவத்தில்
    அநந்த சக்தி ஒடுங்கியது
    எங்கும் காணாப் பேரின்பம், ஓர்
    ஏழையின் மூலம் துலங்கியது!

    பவதா ரிணியே கண்ணாடி
    பரம ஹம்ஸரே பக்தியதில்
    அவரை வைத்துத் தன்னைத்தான்
    கண்டு மகிழ்ந்தாள் பராசக்தி!
    சிவனே அறியாப் பேதையவள்
    சித்தம் சிலிர்க்க வைத்தவரை
    இவனா கவியில் பாடுவது?
    இலையா நதியைச் சூடுவது?

    பக்திக் கனலின் வெப்பத்தால்
    சக்தியின் பிடரியைப் பற்றியவர்
    சக்தி யென்னுமோர் மூர்க்கத்தை
    சற்றும் குறையா ஆக்கத்தை
    நற்கதி அனைவரும் பெறவேண்டி
    நட்டு வைத்தார் நடுவூரில்
    முக்தியும் இதற்கோர் ஈடில்லை, எந்த
    முடிவும் இதுபோல் சுகமில்லை!

    காளியின் கண்ணைப் பாருங்கள், அதில்
    பரம ஹம்ஸரே தெரிகின்றார்
    தூளியி லாடும் குழந்தைபோல்,
    தூண்டிற் புழுபோல், தோள்தேடும்
    தோழன் போல், ஒரு துணைவன்போல்
    துவண்டு புரண்டு துடிக்கின்றார்
    ஆளே யின்றி அத்வைத
    அருமை ஒருமையில் நிற்கின்றார்!

     
    அவளுக் காக அழுவதுபோல்
    ஆனந் தம்வே றொன்றில்லை
    அவளே கதியென விழுவதுபோல்
    அறிவொன் றிங்கே வேறில்லை
    அவளே தானாய்க் காண்கின்ற
    அனுபவம் போல்பிறி தொன்றில்லை
    பவதா ரிணியைக் காணுங்கள்
    பரம ஹம்ஸர்தான் தெரிகின்றார்!

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

    Share
  • ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

     

    இசைக்கவி ரமணன்

    ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

    (அக்டோபர் 21, 1985 விஜயதசமி அன்று எழுதியது)

     

    பாடத் திறந்தவாய் மூடமுடி யாதபடிப்
    பாயும்கங் கைப் பிரவாகம்
    பருகத் திறந்தவிழி பரிதியாய் விரியவே
    பரவுமின் பப் பிரகாசம்
    சாடப் பிறந்தகலி ஓடச் சிரித்தபடி
    சஞ்சாரம் செய்யும் நாகம்
    தரையேது வானேது தெரியாத விதமாகத்
    தாயாகப் பொழியு மேகம்
    தண்மையை தழலான தங்கதீபம் நெஞ்சைத்
    தாலாட்டும் தேவ கீதம்
    தந்திகளை உந்திவரும் சங்கநாதம் நல்ல
    தருணத்தில் வந்த வேதம்
    ஆடாஆ டப்பெருகும் ஆவேசம் நெஞ்சைவிட்
    டகலாது நீளும் தாபம்
    அள்ளஅள் ளப்பரவும் ஆனந்த சாகரம்
    அமிழ்தமென் சாயிரூபம்!

     

    நந்தா விளக்காக நமதுவினை எரியவதில்
    நாயகன் குளிர்காய்கிறான்
    நாளாக இரவாக வாளாகத் நின்றுதுயர்
    நண்ணாமல் காவல் செய்வான்
    வந்தாடும் பிள்ளையெனைப் பந்தாடி வீடெங்கும்
    வாசலாய் மாற்றிவிட்டான்
    வருவதெது செல்வதெது விரைவதெது தெரியாமல்
    வண்ணவிண் நாய்நிறைந்தான்
    என் தாயுமல்லவோ என் தந்தையல்லவோ
    எல்லாமும் நீயல்லவோ!
    ஏனோ வெறித்தபடி எங்கோநீ நோக்குவதும்
    எமதுநலன் தானல்லவோ?
    சந்திநே ரத்தொளிரும் தங்கத் தடாகத்தில்
    தாமரை எங்கள் தேகம்
    சந்நிதி உலாவந்து சஞ்சலம் தீர்க்கும் ஆச்
    சர்யமென் சாயி நாமம்!

     

    யார்சொல்லி வீதியினில் யாகத்தின் ஜ்வாலையாய்
    யாசகம் கேட்டுவந் தாய்?
    யார்சொல்லி ஆனந்த லீலைகள் மாயங்கள்
    அன்றாடம் என்றாக்கினாய்?
    யாரழைத் தாலும்வந் தருள்செய்யும் கருணையை
    ஐயனே எங்கு கற்றாய்?
    அபலையாய் நின்றவெனை அன்போடு தடவியேன்
    அருள்மொழிகள் பேசவைத்தாய்?
    ஓரிழை கூடவொளி நுழையாத நெஞ்சிலேன்
    உள்ளங்கை யாகநின்றாய்?
    ஓங்காரம் ரூபமாய் ஒளியெலாம் நாதமாய்
    ஓயாமல் விந்தைசெய்தாய்
    ஆரழைத் தாலும்விசி அகலாமல் கடலுன்னுள்
    அலையாய்க் கலந்திருக்கும்
    அல்லல்புயல் வீசுமொரு தொல்லைப்ர தேசத்தின்
    ஆச்சரியம் சாயிதீபம்!

     

    விட்டாலும் எனைவிட்டு வெளியெங்கும் போகாமல்
    வீடாக வாழவேண்டும்
    கொட்டாமல் உள்ளழகுக் கோலத்தை யேகாண
    ஒத்தாசை செய்யவேண்டும்
    சுட்டாலும் உன்கோவில் சுவரிலே மோதிநான்
    சுமையின்றி வீழவேண்டும்
    ஒட்டாமல் நின்றபடி உயிரெலாம் தழுவுமுன்
    உள்ளன்பில் நெகிழவேண்டும்
    முட்டாமல் முட்டிமடி மோதிக் களிக்கும்நான்
    மோகனக் கன்று நீ தாய்
    தொட்டாலும் வானமாய்த் தொலைவெங்கும் செல்லாமல்
    தூபமாய் நீ நிறைந்தாய்
    எட்டாத படியென்று முட்டிமுட் டிக்கதறி
    எத்தனைக் காலமழுதேன்!
    முட்டா ளெனைக்கொன்று முகமெலாம் ஆனந்தம்
    மூட்டியது சாயிதீபம்!

     

    விழிதிறந் தாலென்ன இமைவிழுந்தா லென்ன
    வேண்டியதை மனம்பார்க்குமே!
    வெளியென்றும் உள்ளென்றும் விளையாட்டு நின்றகணம்
    விரிகின்ற புதுலோகமே!
    மொழியெலாம் சுடராகிச் சுடரெலாம் மொழியாகி
    மோடி தலை சுழலுதையா!
    மோனமா ஞானமா மூண்ட அபிமானத்தில்
    வானெலாம் அழுததையா!
    வழியெலாம் திருநாட்கள் வாசலில் கைபொத்தி
    வரவேற்றுப் பாடுதையா
    தவழ்ந்திடத் தவழ்ந்திடத் தரையெலாம் மடியாகித்
    தடுமாற வைக்குதையா!
    அழவேண்டி வரும்கண்ணீர் ஆகாய கங்கையாய்
    அடிநெஞ்சில் மோதுதையா!
    தொழவேண்டும் என்றேனும் தோணாத மூடனின்
    தோள்தட்டும் சாயிநாமம்!

     

    நரகத்தில் வாழ்வதே நலமென்று நம்பினேன்
    நாதனே வந்துநின்றாய்!
    நான்பார்க்கி றேனென்னும் மடமையினி யில்லையெனை
    நீபார்க்கும் நினைவுபோதும்!
    விரகத்தைக் கொண்டாடும் வீணனைத் துரியத்தின்
    வெட்டவெளி தொட்டருளினாய்
    வீணான காலங்கள் விளைக்கின்ற உரமாகும்
    விந்தையதை யும்புரிந்தாய்
    கரகங்கள் தலைமீது காலடியில் கனலாறு
    கடுவெய்யில் சுட்டெரிக்க
    கங்கையாய் வந்தென்னைக் காப்பாற்றி மாறாத
    கடனாளி யாக்கிவிட்டாய்
    சிரசுக்குன் சீரடி சிந்தைக்கு ஷீரடி
    சித்தமெல் லாமுன் துனி!
    செப்புவதும் உந்நாமம் சிந்திப்ப துன்ரூபம்
    சேரும்கதி உன்தீபமே!

    படத்திற்கு நன்றி :
    http://www.saibaba.ws/quotes/shirdi100sayings.htm

    Share
  • எந்தன் விழிகளில்

     

    இசைக்கவி ரமணன்

    எந்தன் விழிகளில் உந்தன் பதங்கள்
    எழுந்து மின்னுதே
    எந்த நேரமும் சிந்தையிலேயொரு
    மொந்தை தளும்புதே
    அந்தரி சூலி வராகி மாரி
    ஆனந்த பைரவி, உன்னை
    அண்டிக் கிடக்குற நெஞ்சு முழுக்கவும்
    மண்டிக் கிடப்பவ நீ!

    சலசலக்குற ஓடையிலே சலங்கை எடுத்தியா? நடுவில்
    பவளம்மின்னும் பவழமல்லியில் பாதம் தொடுத்தியா?
    சந்தனக் காட்டு வாசம் அதுல சேத்துக் கொழச்சியா? உன்
    சந்தோஷமே சங்கீதமா மெட்டி போட்டியா? அம்மா!
    சந்ததம் இந்த சந்நிதி எனக்கு சாசனம் கொடுத்தியா? (எந்தன்)

    இரவுமில்லே பகலுமில்லே உதயமாச்சுது, அது
    இங்கும் அங்கும் நகராம பதிஞ்சி போச்சுது
    உறவுமில்லே பிரிவுமில்லே உயரமாச்சுது
    ஒண்ணு ரெண்டு போலத் தெரிஞ்ச காலமும் போச்சுது
    ஒத்திக்கிட்டு சொட்டுத் தண்ணி வடிப்பது உரிமையாச்சுது (எந்தன்)

     
    பக்கத்துல பாரு நாலு வேதமும் பம்மிப் பதுங்குது, இன்னொரு
    பக்கத்துல அம்மோய் முனிவர் வரிசை பாத்து நிக்குது
    வெக்கமில்லாதொரு ஏழைமனசு நடுவில் கெடக்குது, இந்த
    வெவரம் தெரிஞ்சபோது பாவம் வேர்த்து நடுங்குது, அப்ப
    வீசுற காத்துல பாதம் நடுவில் வீழ்ந்து மறெஞ்சிது! (எந்தன்)

     

    எந்தன் விழிகளில்- உங்கள் செவிகளில்

     

    படத்திற்கு நன்றி :

    http://www.vishvarupa.com/shakti.html

     

     

     

     

    Share