இசைக்கவி ரமணன்

isai1968. நாங்கள் தி.நகரிலிருந்து நங்கைநல்லூருக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு அப்போது 14 வயது. இந்த மாற்றம் எனக்குப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது. தி.நகரிலிருந்து யாராவது நங்கைநல்லூருக்குச் செல்வார்களா? என் அத்தைக்கு என்னமோ அந்தப் பெயர் வாயில் வந்ததே இல்லை. ‘இப்ப எதுக்குடா பத்னாவன் (பத்மனாபன்! அப்பாவை அழைக்கும் பெயர்) நெல்லிக்குப்பத்துல போயி வீட்டப் பாத்திருக்கான்?’ என்பாள். ‘ஐயோ! அத்தை அது நெல்லிக்குப்பம் இல்ல,’ என்றால், ’தெரியும்டா நங்காவரம்தானே? அங்க எதுக்குப் போறாங்குறேன்?’ என்பாள்.

வீட்டில் வில்வமரம், கொய்யா, சீதாப்பழ மரம், பாக்கு மரம், அத்திமரம், மாமரம், தென்னை, புன்னை; அடுத்த தெரு பாண்டி பஜார்; பொடிநடையாய் நடந்தால் எங்கள் ராமகிருஷ்ணா மிஷன் நார்த் ப்ரான்ச்; இரண்டு நிமிடங்களில் எத்தனையோ கிரிக்கெட் மேட்சுகள் நடக்கும் ‘நியூ க்ரெளண்டு’; ஐந்து நிமிட நடையில் பஸ் ஸ்டாண்டு. இதையெல்லாம் விட்டுவிட்டு, பேர் தெரியாத, ஆனானப்பட்ட அத்தைக்கே வாயில் பேர் சரியாய் வராத ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா என்று எனக்கு ஒரே வருத்தம். அதுவும் பாலு, அனந்து, எல்லப்பன் என்கின்ற பாண்டியன், தம்பி மணி, மொகம்மது ரவூஃப், தெலுங்கு பாபு இவர்களை விட்டுவிட்டால் அப்புறம் உலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்களோ? அந்த கிராமத்தில் பட்டாசு கிடைக்குமோ? என்றெல்லாம் துக்கம் தொண்டையை அடைத்தது.

அப்பாவுக்கு ஒரே சிரிப்பு. ’எல்லா எடத்திலியும் எல்லாம் கெடெக்குண்டா! இதைவிட ஒனக்கு நெறெய்ய ஃப்ரெண்ட்ஸ் நங்கைநல்லூரில கெடெப்பா பாத்துண்டே இரு,’ என்றார். நான் சமாதானமாகவில்லை.

நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நங்கைநல்லூர் என்பது மாசுபடாத சொர்க்கமாகத்தான் இருந்தது. அதற்குக் காரணங்கள்:

· அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வரவில்லை

· கிணற்றில் தண்ணீரை மொண்டு எடுக்கலாம்

· நிறைய வெட்ட வெளிகள் இருந்தன

· கண்ணுக்கு விருந்தான ஏரிகள் உண்டு. கார்த்திகை மாதத்தில் அலைபுரளும்! கொக்குகளும், நீர்க்கோழிகளும், உள்ளான்களும் அதிகம் காணப்படும்

· குளக்கரையில் கணேஷ் டூரிங் டாக்கீசில் 30 பைசா கொடுத்து மணல்குவித்து உட்கார்ந்து, நாலணாவுக்கு அவித்த கடலை வாங்கிக்கொண்டு, நாலு இண்டெர்வெல் கடந்து, இருமலர்கள், இதாலியன் ஜாப் என்று இரண்டு சினிமாக்கள் பார்க்கலாம்

· என் வயதொத்த தாவணி போட்ட பெண்கள் தாராளமாகத் தென்பட்டார்கள்

· கோயில்கள் புதிது புதிதாய் முளைத்தவண்ணம் இருந்தன

· லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து, அரட்டை அடிக்க எத்தனையோ வாராவதிகள் இருந்தன

· மரங்கள், ஆமாம், மரங்கள் இருந்தன. குளத்தில் தண்ணீர் இருந்தது. இன்று நீங்கள் பார்க்கும் சிவலிங்கம் அன்று குளத்திலேயே காணப்பட்டது

· எல்லோருக்கும் நிறைய நடக்கும் பழக்கம் இருந்தது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் இருந்தது

· அடிக்கடிப் பலர் வீட்டில் பலவித காரணங்களுக்காக உணவருந்த அழைப்பார்கள்

· தொலைக்காட்சி, செல் ஃபோன் இன்னும் வந்தபாடில்லை

· என் பள்ளித் தோழனும், அந்த வயதிலேயே அறுமுகன் அந்தாதி, கெளமார சதகம் போன்ற கவிதைகள் எழுதி அப்போதே ‘டேய் புலவா’ என்னும் பட்டம் வாங்கிய ஹரிகிருஷ்ணன் அங்கெங்கோதான் ஓர் ஏரிக்கரையில் கருங்கொக்காக இருந்தான்

வெகு சீக்கிரம் கிரிக்கெட் தோழர்கள் கிடைத்தார்கள். சின்ன முகுந்தன், பெரிய முகுந்தன், பிரசாத், சாரதி, வெள்ளை ரகு, செகப்பு ரகு, கணேசன், பன் ஸ்ரீதர், ஜெயதேவ், கிட்டு, நரசிம்மன், ராஜகோபால், ராமசந்திரன் என்று எத்தனையோ பேர் உடனடியாக நண்பர்களானார்கள். அப்பா ஆனா ஊனா வீடு மாற்றிக்கொண்டே இருந்ததில் நண்பர்கள் வட்டம் பெருகியது.

இப்போது குருவாயூரப்பன் கோயில் இருக்கும் இடம் முன்பு காலியாக இருந்தது. அதுதான் எங்கள் சிட்னி கிரிக்கெட் கிரெளண்டு. விக்கெட் கீப்பருக்குப் பின்னே ஒரு கிணறும், கீதப்பிரியன் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த வர்த்தமானன் வீடும் இருக்கும். பந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தால் – அடிக்கடி நுழையும் – ஜெயின் கல்லூரியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அண்ணன் செல்வராஜைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சித்தான் மீட்க முடியும். அதைத்தாண்டினால் ரோடு, அதற்குப் பின்னே வடமொழி ஆசிரியர் ராம்தாஸ் வாழும் வீடு. வலதுபுறம், ஒரு கால்வாய், ரோடு. எதிர்ப்புறம், அதேபோல். இடதுபுறம், ஒருமேடு, அதன் சரிவில் பள்ளம். அதுதான் எங்கள் ஸ்க்வேர்லெக். இங்கிருந்து பந்தை அடித்தால் அங்கே இருப்பவன் அதைக் கேட்ச் பிடித்தானா இல்லையா என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மேட்டெல்லாம் போட்டு விளையாடியிருக்கிறோம். குருவாயூரப்பன் வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு விட்டார்.

மறந்துவிட்டேனே, மிட் ஆன் அருகே ஒரு தோட்டக் கிணறு அதற்குப் பக்கவாட்டில் ஒரு சிமெண்ட் மேடை இருந்தது. பிள்ளையார் கோயிலைப் பார்த்தபடி எதற்காக ஒரு மேடை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள், Nallur Entertainers நாடகம் போடுகிறார்கள் என்று அழைப்பு வந்தது. ரேடியோ, டூரிங் டாக்கீஸ் தவிர வேறு புதிதாய் எது வந்தாலும் எல்லோரும் ஆர்வமாகப் பார்க்கும் காலம் அது. எனவே நானும் போனேன்.

மேடையில் ஒருவர். ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு “வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்,” என்று அறிவித்துவிட்டு அவரே பாடுகிறார்:

உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்
உன்னின்று பிரிந்தாலோ துயர்வந்து கொல்லும் துயர்வந்து கொல்லும்

கண்ணோடு கண்வைத்து உரையாடத் துடித்தேன்
உன்கூந்தல் நிழல்கீழே துயில்கொள்ள நினைத்தேன்
பொன்னோடு பொருள்யாவும் கொண்டோடி வந்தால்
விழிதாழ்த்தி தலைசாய்த்து வழிநோக்கிச் சென்றாய்…

என்று தொடர்ந்தார்.

தமிழ்த்திரைப்படங்களில் கேட்டிராத மெட்டு. இந்திக் கவிதையை மொழிபெயர்த்தது போல வார்த்தைகள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டால், நிறுத்திவிட்டுக் கண்டிக்கிறார். உதடு நிறையக் காதலும், கண்களில் எப்போதும் ஒரு கோபத்தின் தறுவாயிலும் இருக்கும் இவர் யார்?

மறுபடி அவரே, ஒரு சித்திரக் குள்ளனாக வேடமணிந்து கோமாளி வித்தை காட்டுகிறார்.

அவரே, கைகளை இழந்த மேஜராக வருகிறார். அப்பாவி போலப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞர் தன்னுடைய கைகளை அவருடைய கைகளின் இடத்தில் வைத்து, இவர் பேச்சுக்கு ஏற்றபடி அசைவுகள் காட்டி, சிகரெட் பற்றவைக்கும்போது அது கீழே விழ, இருவரும் லாகவமாக அதைத் தரையிலிருந்து எடுத்துக்காட்டி அசத்தினார்கள். அந்த இளைஞர் சற்று நேரத்திற்கெல்லாம் பல நடிகர்களின் குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரே இன்னொரு நண்பருடன் வந்து மூர்மார்க்கெட் மருந்து வியாபாரியாக வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தார்.

இருங்கள், இன்னும் முடியவில்லை! ஒரு சின்ன நாடகம். அதில், முட்டைக்கண்ணும், மூக்குக் கண்ணாடியும் ‘சோ’ போன்ற குரலோடும் ஒருவர்; கைகொடுத்த அதே இளைஞர்; இவர்களுடன் மீண்டும் இவர்! அதிலும் அந்த இளைஞர் டாக்சி டிரைவராக வந்து சென்னைத் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்தார். இவர்தான் நாடகத்தை இயக்கியுமிருக்கிறார்!

யாரிந்த சகலகலா வல்லவர்?

சில நாட்களில், அந்த தாடி இளைஞரின் தொடர்பு கிடைத்தது. அவன்தான் தாடி பாபு. அவனும், பிச்சையும், ராமச்சந்திரனும் இறந்துவிட்டார்கள். அவர்களை நினைக்கும்போது, அவர்கள் மேலே எனக்காகக் காத்திருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.

‘சோ’தான் கவிமாமணி வீரராகவன். இன்றுவரை தொடர்கிறது எங்கள் இனிய நட்பு.

பாபுவுக்கு என்னை உடனே பிடித்துவிட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவனுக்கு எல்லோரையும் உடனேMani பிடித்துவிடும். யாருடனும் அவனுக்கு விரோதம் கிடையாது. யாருக்கும் கடன் வாங்கியாவது உதவி செய்யத் துடிப்பான் அவன். காதல் களவாணி! அவன்தான் என்னை, 29 ஆவது தெருவில், வாணி நர்சரி பள்ளிக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அந்த சகலகலா வல்லவரிடம் அழைத்துச் சென்றான்.

அது மாலை நேரம். அவர் மொட்டை மாடியில், தென்னங் கீற்றுகளின் வழியே சற்றே தேன் தடவியது போல் மினுக்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி, இரண்டு கைகளையும் பின்னுக்கு ஊன்றியபடி உட்கார்ந்திருந்தார்.

பாபு, “சார்! இதுதான் ரமணன். என் நண்பன். நல்லாப் பாடுவான்.” என்றான் துணிச்சலாக! ‘டேய்! பாடேண்டா” என்றான். நான் ‘தொடுவதென்ன தென்றலோ மலர்களோ?’ என்னும் பாட்டைப் பாடினேன். அப்போது நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேனே தவிர, பாடல்கள் இன்னும் வந்தானபடியில்லை.

அவருக்கு என்னமோ, “காமதேனு பால் கறந்தாளோ? அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ?” என்னும் வரிகள் பிடிக்கவில்லை. “என்ன ஆபாசமாக இருக்கிறதே!” என்றார். ஆனாலும், ‘You have a good voice,’ என்பதை புன்னகை இல்லாமல், குரலில் மென்மை வராமல் பார்த்துக்கொண்டு சொன்னார்!

ஓர் அதிகாரியின் முன்பு உட்கார்ந்திருக்கிறோம் என்ற உணர்வு மேலிட, என்னை அறியாமல் அவரைப் பணிந்தேன். அவரால் கவரப்பட்டேன்.

‘பாபு! யார்றா இது?’ என்று வெளியே வரும்போது கேட்டேன்.

‘அவர்தாண்டா ஆர். எஸ். மணி,” என்று நாங்கள் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொண்டான் அவன். அதுதான் பாபு.

ஓசையுடன் ஓடிவந்த வெள்ளம் எங்கே போச்சுதம்மா?
ஆசையுடன் ஆடிவந்த உள்ளம் என்ன ஆச்சுதம்மா?
உள்ளம் என்ன ஆச்சுதம்மா?

நல்லூர் இலக்கிய வட்டம் உருவாகிவிட்டது. ஹரிகிருஷ்ணன், வீரராகவன், பா. கிருஷ்ணன், கீதப்பிரியன், சுகுமார், குணசேகரன் போன்ற நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மாதா மாதம் கவியரங்கம் நடத்தி வந்தோம். வித்வான் திரு டி.என்.எஸ். வரதன் அவர்கள்தான் முதல் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி மாண்டிஸோரி பள்ளிதான் கவியரங்கக் கூடம். அ. ம. ஜெயின் கல்லூரியின் தமிழாசிரியர் நாகநந்தி என்னும் திரு. தி. வேணுகோபால் அடிக்கடி வந்து எங்கள் ‘மத்தாப்புக் கவிதைகளை’க் கடுமையாக விமர்சிப்பார்.

ஒருமுறை கடற்கரைக் கவியரங்கப் புகழ் “முல்லைச்சரம்” பொன்னடியான் அவர்கள் தலைமை. அதில் தயக்கத்துடன் கலந்துகொண்ட மணிசார் ஓசையுடன் ஓடிவந்த என்று பாடிய பாட்டு, கவியரங்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டது. பொன்னடியான் தழுதழுத்துப்போய், “என்னங்க! இசை நெஞ்சைத் தொட்டிருச்சே!” என்று அவரும் பாட்டில் இறங்கிவிட்டார்.

ஆர். எஸ். மணி அவர்களை ’மணி சார்’ என்றுதான் நாங்கள் அழைப்போம். அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான்.

அவர் வீட்டுக்கு அன்றாடம் அல்லது, அன்றாடம் இரண்டு முறை செல்வது என்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மாற்றாகவும், இதயத்தில் புகுந்த இனிய தென்றல் காற்றாகவும் அவர் எனக்கு இருந்தார். வெறும் உற்சாகம் மட்டுமே இருந்த எங்களை ஊக்குவித்த அதே நேரத்தில், நாங்கள் எங்களை விடாமல் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர் எங்களுக்கு போதித்தார். என்னுடைய அறியாமை அவருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கும். “You must learn a lot of good things in life, Ramanan,” என்பார் நாகரிகமாக.

அவருக்கு எதையும் சிரத்தையாக, நேர்த்தியாக, முழுமையாகச் செய்யவேண்டும். ஒரு புத்தகத்தை அவர் எடுப்பதிலேயே, பச்சைக் குழந்தையை ஏந்தும் தாயின் பாசமும், பொறுப்பும், எச்சரிக்கையும் காணப்படும். காலையில் அரக்கப்பரக்க அவர் அலுவலகத்திற்குக் கிளம்பும்போதும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். மிக நேர்த்தியாக மீசையைக் கத்திரித்தபடியே, ஒரு மாலை அவள் வந்தாள்! இரு கண்ணில் மது தந்தாள்! நான் மயங்கினேன் நான் மயங்கினேன்’ என்று பாடுவார்.

கெளரி, ஆனந்த், அருணா, அரவிந்த் எல்லோருமே அப்போது சின்னக் குழந்தைகள்; செல்லக் குழந்தைகள். 20 வயதிலேயே திருமணமாகிவிட்டது. படிப்பில், விளையாட்டில், கலைகளில் பன்முக ஆற்றல் கொண்டிருந்தார் அவர். மேலாக, மிகவும் வசீகரமான தோற்றமும் கொண்டிருந்தார். நாங்கள் ‘பிரேமா மாமி’ என்று அன்புடன் அழைக்கும் அவர் மனைவியிடம் அவர் பரிபூரண விசுவாசத்தோடு இருந்தது பாபு போன்ற, யாரையும் எப்போது வேண்டுமானாலும் காதலிக்கத் தயாராய் இருந்த நண்பர்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பிரேமா மாமி அற்புதமாகச் சமைப்பார். விரும்பி விரும்பிப் பரிமாறுவார். மாமியின் வரிபோட்ட ரொட்டியும் அன்றைய நாள் கீரை கலந்த ஸப்ஜியும் சுடச் சுட அவருக்குப் படைக்கப்படும். மிகவும் சூடான வெந்நீரில்தான் அவர் குளிப்பார். புத்தகங்களுக்கு அட்டைப்படம் போடுவது போன்ற உபரி வேலைகளிலும் ஈடுபட்டிருந்த அவர், தனது ஐ.சி.எஃப். தொழிற்சாலைக்கு ஒரு போதும் நிதானமாகக் கிளம்பி நான் பார்த்ததில்லை. அத்தனை அவசரத்திலும், உணவு சுடச்சுடத்தான் உண்பார். பிறகு சைக்கிளில் பரங்கிமலை ரயில்நிலையம் வரை பறப்பார். அங்கிருந்து ரயில் பிடித்து, தினசரி நெடும்பயணம்தான்.

மாலை அவர் வீடு திரும்பும்போதோ, அல்லது அப்போதுதான் திரும்பியிருக்கும்போதோ, நான் அவருக்காக அங்கே காத்திருப்பேன், ஒரு சின்னக் கவிதையோடு.

ஒருநாள் சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்து இறங்குகிறார். என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று மாமி பதட்டத்துடன் வெளியே வந்தால், இவர் பெரிதாக ஒரு இசைக் கருவியோடு வந்து இறங்குகிறார். ‘என்னன்னா இது?’ என்கிறார் மாமி. ‘இது பியானோ அக்கார்டியண்டி,’ என்கிறார். ‘இதை எதுக்கு இப்ப வாங்கிண்டு வந்தேள்?’ என்று கேட்கக் கூடாத ஒரு கேள்வியை ஆயிரமாவது முறை, தவிர்க்க முடியாமல் கேட்கிறார் மாமி. நெற்றியில் எத்தனை முறை ஒதுக்கிவிட்டாலும் வந்துவந்து புரளும் கேசத்தைக் கோபமுடன் சிலுப்பிக்கொண்டு, “I want to know what it is” என்றார்.

பற்பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம். ஆர்வத்தோடு நிற்கமாட்டார். அது என்ன என்று அதில் இறங்கி ஆராய்வார். அப்புறம் போதும் என்று நிறுத்திவிடுவார். எதையுமே அவருக்காகத்தான் அவர் செய்துபார்த்துக்கொண்டார். இப்படித்தான் ஸ்வப்ரானோ, தப்லா, மெளத் ஆர்கன் போன்ற பல கருவிகளை வாங்கிப் பழகிக்கொண்டார்.

திடீரென்று ஒருநாள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அந்த MSR 116 என்னும் வண்டியை நாங்கள் மறப்பதற்கில்லை. நாங்கள் ஒவ்வொருவருமே அதில் அவரோடு பயணம் செய்திருக்கிறோம். ஒரு நாள் காலையில் அவர் வீட்டுக்குச் சென்றால், அந்த மோட்டார் சைக்கிள் குற்றுயிரும் குலைவுயிருமாக இருந்தது. என்ன ஆயிற்று என்று பார்த்தால் மணிசார் அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அந்தந்த பாகங்களை சின்னச் சின்னச் சட்டிகளில் அழகாக வைத்திருந்தார். என்ன என்று பார்த்தேன். “I want to know what it is” என்று அவருடைய பார்வை சொன்னது! என்னையும் அதில் ஈடுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சிதான் முழுத்தோல்வியில் முடிந்தது!

அந்த வீடு அவருடைய மாமனார் திரு. சுவாமிநாதனுடையது. அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மனைவியை இழந்தவர். அதில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முன்னர், நுழைந்தவுடன் இடப்புறம் இருக்கும் அறையில்தான் மணிசார் இருப்பார். ஒரு மாலைப்பொழுது. தனது அக்கார்டியனோடு அவர் என்னமோ முயன்றுகொண்டிருந்தார். ஒரு மெட்டை வாசித்து, ‘ரமணன்! இதுக்கு ஒரு பாட்டெழுதேன்,’ என்றார் விளையாட்டாக. உடனே நானும்,

வா! மாலையும் போய்விடும் வா!
மையலும் இழுத்திட மைவிழி சிவந்திட
மங்கை என்னிடம் வா!

என்று ஒரு பெண் பாடுவதுபோல் பாடல் சொன்னேன். ஏதோ அத்தோடு முடிந்தது அந்த விளையாட்டு என்று நினைத்தேன். அவரும் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், எங்கள் நட்புக்கே ஆதாரம்போல், அவர் மெட்டுச் சொல்லி சூழ்நிலையைச் சொல்ல, நான் பாடல் புனைவதும், நான் வரிகளைச் சொல்ல அவர் மெட்டுப் போடுவதும் வழக்கமாகிவிட்டது!

ஒரு நாள்
மலராகப் பிறக்கவேண்டும்
உன் கூந்தலில்
சிலநேரம் இருக்கவேண்டும்
ஒருநாள்
தென்றலாய்ப் பிறக்கவேண்டும்
உன் மடியினில்
குழந்தைபோல் தவழ வேண்டும்!

என்பதுதான் நான் எழுதி அவர் மெட்டமைத்த என் முதல் காதல் பாடல்.
இன்றைக்கும் பலருக்கும் பிடித்த பாடல் அது.

இருந்ததுவும் ஓரிதயம் அதைக் கவர்ந்து சென்றாய்
இமைவிளிம்பில் ஒரு பார்வையில் உன் நெஞ்சைத் தந்தாய்
உன் மடியில்
கண்மூடி
என் பாடல் காற்றில் மிதந்திடவே
ஒருநாள்!

என்னும் வரிகளுக்கு அவர் அமைத்த மெட்டும் அதை அவர் பாடிய விதமும் மறக்க முடியாதவை.

நடுநடுவே அவர் தனது பாடல்களையும் படைத்துக்கொண்டிருந்தார்.
முந்தானை காற்றினில் அலையடிக்க
பின்னாலே என்மனம் படபடக்க என்னும் பாடலும்

ஏரிக்கரையிலே பாடுகின்றான்
என்றன் உள்ளம் மயங்குது என்னும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவை.

ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் யாருமில்லை. நான் பல பாடல்களை எழுதி அவரிடம் மெட்டமைக்கத் தந்தேன். ‘என்னடா இது?’ என்றாரேயொழிய எல்லாவற்றுக்கும் மெட்டமைத்தார்.

கண்ணனைக் கண்டாயோ
மேகமே என்றாலோ
காணவில்லை என்றே
கண்ணீரில் ஆடுதம்மா!

மற்றும்,
வாசலில் கோலம் போடுங்கடி
வந்திடுவான் நம் கண்ணன்

மேலும்,

கோபம் என்னடா? கண்ணா
கோபம் என்னடா?
கொஞ்சினாலும் தீர்ந்திடாத
கோபம் என்னடா?

கொஞ்சலிலே கொஞ்சமேனும் குறைத்துவிட்டேனா? நீ
கொஞ்சும்போது கேட்பதற்குத் தவறிவிட்டேனா?
பஞ்சு மடியில் உன்னைச் சாய்க்க மறந்துவிட்டேனா? இந்தப்
பாவை உந்தன் மனதிலிருந்து இறங்கிவிட்டேனா?

போன்ற என் பாடல்களுக்கு அவர் அமைத்த மெட்டுக்கள் மிகவும் பொருத்தமானவை, இனிமையானவை. இந்தப் பாடல்களை ஒரு குறுந்தகடாகக் கொண்டுவர வேண்டும் என்னும் அவர் விருப்பத்தை நான் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்.

நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். அவர் கலில் ஜிப்ரானின் Tears and Laughter, வால்ட் விட்மனின் கவிதைகள், தாகூரின் கீதாஞ்சலி, கீட்ஸ், ஷெல்லி இவர்களின் கவிதைகளை நிதானமாகப் படித்துக் காட்டுவார். Jerome K Jerome’s Three Men in a Boat, Woodhouse’s Leave it to Psmith இவற்றை அவர் படித்துக் காட்டியதும், நான் கண்ணீர் வடிய விழுந்து விழுந்து சிரித்ததும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

அவருக்கு, உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவரால் தாங்க முடியாது. நீங்கள் ரொம்பத்தான் கொண்டாடும் என்னுடைய உச்சரிப்பில் பிழைகள் இருப்பதை அண்மையிலும் அவர் சுட்டிக்காட்டினார்! கீதப்பிரியன் குளம் என்றாலும் குலம் என்றாலும் ஒரே விதமாகவே சொல்வதை அவனுக்குச் சுட்டிக்காட்டி அவனைத் திருத்த டேப் ரிகார்டரில் அவன் குரலைப் பதியவைத்துப் போட்டுக்காட்டி அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மகத்தானது!

“With the beaded bubbles winking at the brim,” என்பான் கீட்ஸ். அவருக்குக் காப்பி அப்படி இருக்கவேண்டும்! சூடாக, நுரையோடு, விளிம்பில் கண்சிமிட்டும் குமிழ்களோடு! பிரேமா மாமியின் காப்பி பிரசித்தியானது. நான் அன்றாடம் அவரைச் சென்று பார்க்கக் காரணம் மணிசாரின் கலையா? மாமியின் கைவண்ணமா? என்ற பட்டி மன்றத்திற்குத் தீர்ப்பு வழங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் சாலமன் பாப்பையா!

ஒரு மன்னனின் ரசனை, தோரணை, பாங்கு, நடத்தை அவரிடம் இருந்தது. ஆனால், இறுக்கமான நடுத்தர வர்க்கச் சூழ்நிலையில்தான் அவர் வாழ வேண்டியிருந்தது. இருந்தும், he was truly regal!

என்னைப் பொருத்தமட்டில், அவர் எத்தனையோ கலைகளில் வல்லவராக – மூன்று மொழிகளில் கவிஞராக, பாடகராக, இசையமைப்பாளராக, நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக, ஜோதிடராக, மேஜிக் செய்பவராக, களிமண்ணில் பதுமை செய்பவராக, ஏழு இசைக்கருவிகள் வாசிப்பவராக – இருந்தாலும், அவருடைய ஒப்பற்ற தன்மை அவரது ஓவியத் திறமையில்தான் தரிசனமாகிறது என்று தோன்றுகிறது. அவருடைய முழு இயல்பு, அவருடைய பிரத்யேகமான ராஜ கம்பீரத்தோடு, அவருடைய உயிரின் இயல்பான அழகியலோடு அவருடைய ஒவ்வொரு ஓவியத்திலும் வெளிப்படும். அவர் பழகாத பாணியே இல்லை.

அவருடைய இந்த உயிர்த்திறமையை ஊர் அறியவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

எனக்கு ஆங்கிலத்தில் விருப்பம் ஏற்பட்டதற்கு அவரும் அவருடைய “Idle Tears” என்னும் கவிதைகளும் காரணம். பிற்பாடு நான் அதை “விழியோரம் துளி ஈரம்” என்று மொழிபெயர்த்தேன். ஹரி அற்புதமான முன்னுரை எழுதினான். என்னை அவர் Patton திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். ஓர் ஆங்கிலப் படத்தை எப்படிப் பார்க்கவேண்டும், ஒரு திரைப்படத்தில் எதையெதையெல்லாம் கவனிக்கவேண்டும் என்று அண்ணன்போல் சொல்லித் தந்தார்.

நாங்கள் வானொலியின் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சியிலும் தொழிலாளர் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டோம். பிறகு, என் உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் Sundaram Fasteners நிறுவனத்தின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்குகொண்டோம். மணி சாரும், பாபுவும் நடித்த அந்த மேஜர் காட்சி அரங்கிலிருந்த ஆயிரம் பேர்களை அசத்திவிட்டது! மணிசாரும் நானும் நடித்த மூர்மார்க்கெட் மருந்து வியாபாரி நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, பாபு, வீரராகவன், நான் எங்கள் மூன்று பேரையும் வைத்து, மணிசார் ஒரு pantomime நிகழ்ச்சி அமைத்திருந்தார். நாங்கள் நடிப்பு மட்டும். குரலும், பொருத்தமான சில ஓசைகளும் பின்னணியிலிருந்து மணிசார். தூளென்றால் அப்படி ஒரு தூள் கிளப்பினோம்! தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும் சண்டை போட்டுக்கொள்வதுபோல் நான் ஒரு வசனம் எழுதி அதை பாபுவும் நானும் நடித்தோம். பிறகு நான் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்திலிருந்து சிவாஜி ஓய்வுபெற்று வீட்டுக்கு வந்து பேசும் வசனத்தை அவர்குரலில் நடித்துக் காட்டினேன். இதற்கெல்லாம் அவர் எங்களுக்குக் கடுமையாகப் பாடம் எடுத்தார், எங்கே நிற்க வேண்டும், எப்படித் திரும்பவேண்டும், குரல் அளவு, உடல்மொழி எல்லாம் கற்றுத் தந்தார். சாக் பீசால் கோடு கிழித்தால் கிழித்ததுதான். தாண்டினால் கிழித்துப் போட்டுவிடுவார்! கோபம் வந்தால் (அடிக்கடி வரும்!) குரல் இன்னும் ‘கேய்ங்’ என்று ஆகி, இங்கிலீஷ் வேறு வந்து சேரும்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி. நாங்கள் எழும்பூரில் இம்பாலாவில் சாப்பிட்டுவிட்டு, மசாலா பால் அருந்தி, அவரோடு பீடாவும் போட்டுக்கொண்டு ஏதோ திரைப்படத்தில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய குதூகலத்தோடு நடந்துகொண்டிருந்தோம்.

குருவாயூரப்பன் கோயில் எழப்போகிறது. கூரை போட்டு, சுவாமி படத்தை வைத்து, பிராரம்பமாக ஒரு பாலாலயத்தை எழுப்பினார்கள். அதில் தொடர்ந்து பஜனைகள் நடத்த ஏற்பாடாயிற்று. சம்பிரதாய பஜனைகள் நடந்த வண்ணமிருந்தன. நான் தப்லா தட்டிக்கொண்டிருந்தேன். அப்பாதான் மேல்சாந்தி, அதாவது பிரதான பூஜாரி. ’ஏண்டா! நீங்க வந்து பாடுங்கோளேன்,’ என்றார். மணி சாரிடம் சொன்னேன். சிரத்தையின் உருவாரமான அவர், சம்பிரதாய முறைப்படி என்னென்ன தெய்வங்களை எந்த வரிசையில் பாடுவார்களோ அதே முறையில், அதே வரிசையில் நாம் பாடல்களை அமைப்போம் என்றார்! பாடல்களை எழுதினேன்; நாமாவளிகள் பிறந்தன. அருமையாக மெட்டமைத்தார். சின்னச் சின்னக் குழந்தைகளையும் கூட வைத்துக்கொண்டு, அவர் பாட, குழந்தைகளும், ஏன் பெரியவர்களும் சேர்ந்து தங்களை மறந்து பாட, நான் மணி சார் கொடுத்த தப்லாவை வாசிக்க, அற்புதமாக அமைந்தது நாம சங்கீர்த்தனம். பாராட்டிப் பேசிய அப்பா, “சாகித்யகர்த்தாவுக்கு (அடியேன்தான்) பாட வராது,” என்பதைத் தவறாமல் பதிவு செய்தார்.

என் அக்கா லலிதா கனடாவில் இருந்தாள். என்னை அங்கே வந்துவிடச் சொன்னாள். மணி சாரிடம் பேசினேன். நானும் வரவா என்றார். ஒரே குஷிதான். இருவரும் விண்ணப்பித்தோம். அவருக்குக் கிடைத்தது, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

1974 ஆகஸ்டு மாதம் அவர் கனடாவுக்குச் சென்றார். கொஞ்ச நாள் அவர் மாம்பலத்திற்கு வீடு மாற்றிச் சென்றதையே தாங்க முடியாத எனக்கு இது பேரிழப்பாக இருந்தது. அண்ணனாகவும், நண்பராகவும் இருந்து என்னை வழிநடத்திக்கொண்டிருந்த ஒரு பெரும் துணையை விதி திடீரென்று பறித்துக்கொண்டுவிட்டது போலத் தோன்றியது. மணிசார், கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனாலும், மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. என்னமோ அவர் செல்வதற்காகக் காத்திருந்தது போல, என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மிகவும் இறுக்கமாகிவிட்டன.

ஏறத்தாழ 47 ஆண்டுகளாக என்மீது சற்றும் குறையாத நேசம் பாராட்டி வரும் ஹரியின் ஆதுரத்தால்தான் நான் ஒரு வேதனையான கால கட்டத்தைக் கடந்தேன் என்றால் அது மிகையாகாது.

1977 பிப்ரவரி மாதம், நாங்கள் நங்கநல்லூரை (ஹரி! ஸ்பெல்லிங் சரியா?) விட்டு பெசண்டு நகருக்குக் குடிபெயர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் கடற்கரை. கடலைப் பார்த்தபோது, தாகூரின் வாசகம் நினைவுக்கு வந்தது:
“The language of eternal questions.”

இந்த வாசகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவரே மணிசார்தான்.

1979ல் ஒரு முறை மணிசார் இந்தியா வந்தார். அவர் என்னை வீடியோ எடுத்ததை அண்மையில் ரமணன் யார் என்னும் பதிவில் இட்டிருந்தார். பின்பு, 1986 ல் ஒரு முறை வந்தார். அப்போது நான் ஒரு “குரு” விடம் ஈடுபட்டு மயக்கத்தில் இருந்தேன். அவரையும் சந்தித்தார் மணிசார். பாடினார். எனக்கு அன்புடன் பரிசுகள் தந்தார். அக்கறையுடன் விசாரித்தார்.

1989ல் நான் விசாகப்பட்டினம் சென்றுவிட்டேன். அங்கே இந்து நாளிதழை நிறுவும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்; ஒவ்வொரு நாளும் 16 மணி நேரங்கள் வேலை செய்வேன். ஆயினும் ஒவ்வொரு காலையும் நான்கு மணிக்கு தியானம் செய்யத் தவறாமல் அமர்ந்தேன். கடும் பணியும், ஆன்மிகப் பயணத்தில் வாங்கிய அடிகளும், என்மீது திணிக்கப்பட்ட சில விபரீதமான பரிசோதனைகளின் விளைவாலும், ஒரு விபத்தாலும் என் முதுகு விண்டுவிட்டது. சென்னை அப்பொல்லோவில் அறுவை சிகிச்சை. அதனால் பெரும் பயன் ஏதும் விளையவில்லை.

அலைந்தலைந்து இறுதியில் 1994 ல் என் குருவின் திருவடி அடைந்தேன். அதன் பிறகு, என் வாழ்க்கை சீரானது. 27 ஆண்டுகள் பணி புரிந்தபின்பு, இன்னும் 10 ஆண்டுகளைத் தவிர கையில் வேறு எதுவும் இல்லாத போது, குருநாதரின் சம்மதத்துடன், வேலையை விட்டு 2005 ல் விலகினேன்.

இதைத் தொடர்ந்து கனடாவுக்குப் பயணம் சென்றேன். அங்கே என் அக்கா வீட்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் மணிசார் வீடு! எப்படி இருந்திருக்கும் எனக்கு?! அவருக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி!

பிரேமா மாமி, பாத்திரங்களைக் கழுவியபடி, கண்ணில் நீர் மல்க, “ரமணா! அந்தக் காலம் மாதிரி வருமாப்பா?” என்றார், நான் பாடினேன்:

இதுவொரு காலம் அதுவொரு காலம்
அடியில் மணலாய்க் கரைகிறதே
அதுதான் உண்மைக் காலம்!

நினைவும் கனவும் புகையென நீளும்
நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
அதுதான் உண்மையில் வாழும்!

எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
அத்தனை முறையும் எழுந்தோம்
அதைநாம் ஏனோ மறந்தோம்!
அதனால்தானே துவண்டோம்!

எத்தனை அடைந்தோம் எத்தனை இழந்தோம்
என்பதில் ஏதும் இல்லை! இங்கு
ஏதும் மீதம் இல்லை, இதை
இதயம் மறந்தால் தொல்லை

காலம் நடக்கும் காயம் வலிக்கும், ஒரு
மாலைப் பொழுதில் நினைக்கும்போது
மனதினில் எல்லாம் இனிக்கும்! சின்ன
மலராய் நம் முகம் சிரிக்கும்!

மாமி ஆசை ஆசையாகச் சமைத்துப் போட்டார்கள்!

மணிசாரும், அவருடைய என் மகனுக்கு இணையான மகனான ஆனந்தும், என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் நயாகராப் பயணம் மறக்க முடியாதது. என்னுடைய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் வந்திருந்து மணிசார் ஒளிப்பதிவு செய்தார். நான் பாரதியைப் பற்றி டொரொண்டோவில் பேசியதை 11 பகுதிகளாக யூட்யூபில் பதிவு செய்திருந்தார். புகைப்படங்கள் எடுத்தார். எனக்காக நிறைய நேரமும் பொருளும் செலவழித்தார். எனக்கு மாதா மாதம் பணம் அனுப்பினார்.

”கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது,” என்று பாரதி கண்ணனுக்குச் சொன்னதை நான் மணி சாருக்கு இன்றும் சொல்லலாம்.

2007 ல் என் மனைவி அனுவுடன் மீண்டும் கனடா சென்றேன். அப்போதும் இதே கதைதான். ஆனால், அவர் உடல்நலம் குன்றியிருந்தது.

மீண்டும் அவர் இந்தியா வந்து, என்னுடன் விசாகப்பட்டினத்தில் வெகுசில நாட்கள் தங்கினார். அவரை குருஜிக்கு அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தேன். மீண்டும் அவர் வந்தபோது, நான் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்தேன். இங்கே வந்து நோய்வாய்ப்பட்டார்.

2013 ஆகஸ்டு மாதம் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு கண்ணில் பார்வை அறவே மங்கியிருந்தது. இருந்தும், என்னைக் கண்ட மகிழ்ச்சியில், எழுந்துவிட்டார்! நான் பராசக்தி கவிதைகளைச் சொன்னேன்; அவர் ஒளிப்பதிவு செய்தார். அந்த சிரமத்தால் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் படுத்த படுக்கையாயிருந்தார். அன்புமிக்க ஆனந்த் அவர் எனக்குச் செய்த சேவைகளையெல்லாம் இரட்டிப்பு மடங்கு செய்தான்.

என்னடா அவர் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திக்கொண்டிருந்தால், ‘ரமணன் யார்?’ என்று ஒரு பதிவைத் தொடங்கி 10 கட்டுரைகள் இட்டார். படங்கள், வீடியோக்களைப் பதிவு செய்துவைத்தார். எத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்திருந்தார்! என்ன சிரத்தை! என்ன அன்பு!

எதற்காக?

காரணத்தைத் தேடினால் அன்பைப் புரிந்துகொள்ளவே முடியாது. எல்லாவற்றுக்கும் எதற்குத்தான் இப்படிக் காரணத்தைத் தேடி அலைந்து காரியத்தைக் கோட்டை விடுகிறோமோ தெரியவில்லை!

45 ஆண்டு கால நட்பு. ஒரே சொல்லில் அவரை விவரிக்கலாம், நேர்மை. Fiercely honest, scrupulously honest. Brutally frank. தன்னிலும் சரி, பிறரிலும் சரி, அவர் பொய்மையை சம்மதிப்பதோ சகிப்பதோ இல்லை. அதனால் அவருக்கு நண்பர்கள் குறைவு.

அவரால், அவருடைய நண்பனாக நான் கருதப்படுவதில் எனக்குப் பெருமை உண்டு. அதைக் காப்பாற்றிக்கொள்ள நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் உண்டு!

கிடங்காய்க் கிடந்த என் இதயத்தை, ஒரு கலையரங்கமாக வடிவமைத்ததில் அவருடைய கரங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இன்று அந்த அரங்கில் அழகியல் ஆட்சி நடத்துகின்றது என்றால், அதற்கு ஆரம்ப நாட்களில் அவர் செய்த சேவைதான் காரணம் என்பதைக் கடவுள் முன்னிலையில் நன்றியுடன் சொல்வேன்.

உண்மைதான். என்னைவிட 17 வயது வயதில் மூத்தவர் அவர். இன்று வரை, அவர்தான் எனக்குத் தொண்டு புரிந்து வந்திருக்கிறார் என்பதை சங்கடத்துடனேயே இங்கே பதிவு செய்கிறேன். என்னால் அவருக்குத் தொந்திரவுகள் உண்டே தவிர, உபகாரம் எதுவும் கிடையாது.

ஒரு தந்தையைப் போல, தமையனைப் போல, என் நலனில் அவருக்கு அக்கறை; என் வளர்ச்சியில் அவருக்கு ஆனந்தம்; என் மனநிலையில் அவருக்கு கவனம்.

அறிவார்ந்த அந்த அன்புக் கண்கள் என் மனசாட்சியில் எப்போதும் ஒளிவீசியபடி என்னை மனிதனாக வைத்திருக்கும்.

அவருடைய நேர்மை எனக்கிருந்தால், நான் இறைவனின் சபையில் தலைநிமிர்ந்து நுழைவேன்!

இன்று அவருக்கு 76 வயதாகிறது.

ஆயிரம் பிறைகள் காண்க! ஆரோக்கியமாக வாழ்க!
ஆன்மாவில் திளைத்து மகிழ்க! ஆழத்தே அமைதி பெறுக!
பாயிரம் பாடி உம்மைப் பலவாறு போற்றுகின்றேன்
பனித்த என் கண்களோடு பாதத்தில் வீழுகின்றேன்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அன்புள்ள மணிசார்

 1. இத்தகைய அருமையான கனிவான நட்புக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் கொடுப்பினை வேண்டும்! பூர்வ ஜன்ம புண்ணியம்!

  ///ஒரே சொல்லில் அவரை விவரிக்கலாம், நேர்மை. Fiercely honest, scrupulously honest. Brutally frank. தன்னிலும் சரி, பிறரிலும் சரி, அவர் பொய்மையை சம்மதிப்பதோ சகிப்பதோ இல்லை. அதனால் அவருக்கு நண்பர்கள் குறைவு.///

  இதை என் தாத்தாக்களின் காலத்திலிருந்து பார்த்தும் பட்டும் வந்திருக்கிறேன்! 😉

  திரு மணிசார் பல்லாண்டு பல்லாண்டு நல்ல உடல் நலம், மனமகிழ்ச்சி, மனநிறைவோடு வாழ்ந்து நம் எல்லாரையும் வழிநடத்த வேண்டும்.

  அன்புடன்,
  ராஜம்

  http://www.letsgrammar.org
  http://mytamil-rasikai.blogspot.com
  http://viruntu.blogspot.com

 2. அன்புள்ள மணி ஸார் உங்கள் எழுத்துக்கள் மூலம் எங்களுக்கும் மிகவும் பரிச்சயமானவராகிவிட்டார். நட்புக்கு எது வயது? 
  கடைசியில் உங்கள் வாழ்த்துப்பா படிக்கும் போதும் எங்கள் கண்களும் பனித்தன. 

  மணி ஸார் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிறைவுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *