Tag: எஸ்.வி. வேணுகோபாலன்

  • மே தின சிந்தனைகள்

    எச்சரிக்கையாக இருப்பது மூலதனத்திற்கு நல்லது !

    எஸ் வி வேணுகோபாலன்

    இந்திய முதலாளிகள் எத்தனை ஏழைகள் என்பதை அண்மையில் வாசித்தபோது பெரிய கழிவிரக்கம் என்னைச் சூழ்ந்தது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நதெல்லா, இத்தனைக்கும் தாமும் இந்தியர் என்றாலும், இந்தியாவின் மிக அதிகமாக ஊதியம் பெறும் 14 முதலாளிகள் ஈட்டும் மொத்த சம்பளத்தைத் தமது ஊதியமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்….இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று மனம் மிகவும் வருந்தியது. அதாவது நதெல்லாவின் ஆண்டு ஊதியம் ரூ 525 கோடியாம். நம்மவூர் முன்வரிசை முதலாளியின் ஊதியம் நாற்பது கோடிக்கும் கீழே என்றாகிறது. அதற்காக அவ்வளவு மோசமில்லை, முதல் இரண்டு ஏழை முதலாளிகள், அதாவது புருஷன் பெண்டாட்டி தலா அறுபது கோடி வாங்கி இருக்கின்றனர். வேறு யாரு, நம்ம சன் தொலைகாட்சி குழுமத்தின் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி இருவரும்தான்!

    தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜோடியை அடுத்து நிற்பவர், ஒன்பதாவது இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்குப் படிப்படியாக (இந்தச் சொல்லை இந்தத் தேர்தலில் வேறு எங்கோ கேட்டது மாதிரி இருக்கு இல்லே!) உயர்ந்து வந்திருக்கும் அப்போலோ டயர்ஸ் நிறுவனத் தலைவர் ஓங்கர் எஸ் கன்வர் இவர்களை விடவும் நல்லவர். தமது கம்பெனியின் லாபம் 2.73 சதவீதம் சரிந்ததைத் தமது ஊதியத்தை 11 கோடி அதிகரித்து ஆண்டு வருவாய் ரூ 41 கோடி அள்ளிக் கொண்டு போன பெருந்தகை! இந்தக் கணிதம் எல்லாம் நம்மவர்களுக்கு எங்கே புரிகிறது.

    முதலாளியாக இருப்பது எத்தனை சோதனை மிகுந்த வாழ்க்கை, பாவம்! முகேஷ் அம்பானியை எடுத்துக் கொள்ளுங்களேன், பல ஆண்டுகளாக 44 கோடி ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டிருந்தவர் 2008-2009ல் வெறும் 15 கோடி அற்பச் சம்பளம் போதும் என்று சொல்லிவிட்டாராம்….என்னடா இந்தக் கொடுமைன்னு கேட்டால், நிறுவனத்தின் பங்குகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் ஈவுத் தொகை 1390 கோடியை வைக்கவே இடம் இல்லையாம்…போதும்டா நீங்களே வச்சுக்குங்க என்று சொல்ல எத்தனை பெரிய மனசு வேண்டும் பாருங்கள். அநியாயத்திற்கு முதலாளி வர்க்கம், சுரண்டல், அது இதுன்னு வெற்றுத் தத்துவம் பேசி தொழிலாளிகளை உசுப்பி விடும் ஆட்களை ஏதாவது செய்யத் தான் வேண்டும் அல்லவா…

    நல்ல நாளும் அதுவுமா இத்தனை தெரிந்து கொண்டதோடு இன்னொரு செய்தியும் கற்றுக் கொள்வோம். முதலாளி வாங்கும் ஊதியத்திற்கும், நிறுவனத்தின் நடுவாந்திர ஊதியத்துக்கும் என்ன விகிதம் என்று பார்க்கும் கணக்கீடு ஒன்று உண்டாம். அப்படி பார்த்தால், நம்ம அப்போலா டயர்ஸ் நிறுவனத்துக்காரர் கன்வர் பற்றிப் பார்த்தோமே, மனுஷன் வாங்கும் ஊதியம் (ச்சே அதுக்கும் பேரு ஊதியம் தானாமே…என்ன நியாய உணர்வு!), நிறுவன நடுவாந்திர சம்பள வரிசையைப் போல 1069 மடங்காம்! அது சரி, டயர் கம்பெனி ஓனருக்கு எத்தனை ‘டயர்டா’ இருக்கும் அன்றாடம் எத்தனை கவலை, எத்தனை தொல்லை, எத்தனை வேலை பளு, அதுக்குத் தக்கின கூலி வேண்டாமா? முதலாளிகள் கஷ்டம் யாருக்குப் புரிகிறது, எக்குத் தப்பாகி பாவம் ஒரு விஜய மல்லையாவை வெளி நாட்டுக்கு ஓடவிட்டு அப்புறம் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டியாகப் போச்சு.

    சரி, நாம் வாழும் உலகுக்கு வருவோம்….மத்திய அரசைக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 10,000 அறிவிக்க வைக்கவே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது தொழிலாளி வர்க்கம். பிச்சைக்காரகளுக்கு எத்தனை பெற்றுக் கொண்டால்தான் ஜென்மம் சாபல்யம் ஆகும் என்று நினைப்பு ஆட்சியாளர்களுக்கு. உள்ளே பணக்காரப் பந்தி பரிமாறல் நடத்தவே ஆள் அம்பு, கஜானா காசு கட்டுபடி ஆகாதபோது, பொழுதன்னிக்கும் வாசலில் கத்திக் கொண்டிருக்கும் பஞ்சைப் பராரிகளை அவர்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும். ‘போ போ அப்பால, சாயந்திரமா வா ஏதாவது பார்த்துக் கொடுக்கலாம்’ என்று விரட்டவே நேரம் சரியாக இருக்கிறது அவர்களுக்கு.

    நிரந்தரமற்ற காசுவல் தொழிலாளி என்ற பெயர் இப்போது பொதுத்துறை வங்கிக்குள்ளேயே வந்து இறங்கியபிறகு தனியார் நிறுவனங்களைக் கேட்பானேன். ஆதாரமே அற்று அட்டைகளால் உறிஞ்சப் பட்டுக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான ‘பாவி’களுக்கு ஆதார் அட்டைதான் குறைச்சலா? மொட்டையின் மகன் ஆண்டி, பிளாட்பார வீடு, தெருத் தெருவாய் சுற்றும் வீதி, மாதத்துக்கொரு மாநிலம் என்ற முகவரிக்கு யார் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் எல்லாம் கொட்டிக் கொடுத்துச் சீரழிந்து கொண்டிருப்பது. ஆண்டவனாப் பார்த்து, மெட்ரோ கட்டுமானப் பணியின்போது சரிந்து விழும் பாறங்கல்லைத் தலையில் போட்டோ, வேறெங்காவது மின்சாரக் கம்பிகளில் இடித்துக் கொண்டோ, மௌலிவாக்கம் மாதிரி அப்பார்ட்மென்ட் இடிந்து நொறுங்கியோ அவர்களது பிரச்சனைகளைச் சிக்கல் இல்லாமல் முடித்துத் தருவதை ஈர மனத்தோடு பார்க்க ஒரு நாதி இல்லை, நாட்டில்.

    இராச் சாப்பாடு இல்லாமல் உறங்கப் போகும் இந்தியர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கணக்கைச் சொன்ன மறைந்த மால்கம் ஆதி சேஷய்யா அவர்கள் இப்போது இருந்தால் நாணிக் கோணிப் போவார்கள். ஐ பி எல் ஆட்டம் எல்லாம் நடத்தி ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்கவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டுத் தவிக்கும் நாட்டில் மைல் கணக்கில் நடந்தும் தூய்மையான குடி தண்ணீர் இல்லை என்று போராடும் மராத்திய மக்களை என்ன சொல்வது. குடிக்கவே தண்ணி இல்லையாம், இதில் வேளாண்மை வேறு நடத்தி நாசமாப் போனதெல்லாம் போதும் என்று தாயுள்ளத்தோடு முதல்வர் ஆனந்தி பென் சொன்ன குஜராத் மாநில மண் வாசம் எத்தனை மகோன்னதமானது. மூன்று மாத மழை ஒரே நாளில் பெய்தால் ஒரு வருடச் சாவு இரண்டே நாளில் விழத் தான் செய்யும் என்று சொல்லக் கூட ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை மக்களை தொலைவில் இருந்து வந்து சந்திக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களது பாசமிக்க மிரட்டல்களைக் கொண்டாடத் தெரியாத குணமென்ன குணமோ!

    போதாததற்கு,பொதுத் துறையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் ஆனாலும் எப்போது பார்த்தாலும் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். காண்டிராக்டுமயம், பங்கு விற்பனை எந்த சீர்த்திருத்தமும் இவர்கள் கண்ணுக்கு அபாயமாகத் தெரிகிறதாம்….காலா காலத்தில் எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்கி இருந்ததால் ஒரு பய கேள்வி கேட்க முடியுமா…..உலக வங்கிக்கும், உலக நாடுகளில் இருந்து வரும் நிதி மூலதனத்திற்கும் இவர்கள் அப்பனா வந்து பதில் சொல்லப்போவது! ஸ்வச் பாரத் என்று எதற்கு நரேந்திர மோடி குரல் கொடுத்தார், இந்தக் குப்பைகளை எல்லாம் பெருக்கி எடுத்துப் போடு என்பதற்குத் தானே!

    உலக பொருளாதாரமே சிக்கித் திண்டாடியபோது இங்கே நாங்கள்தான் காப்பாற்றினோம் என்று ப சிதம்பரம் பீற்றிக் கொண்டாலும், உண்மையில் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட இடதுசாரிகளும், விடாது போராடிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களும் தானே காரணம் என்று அமித் ஷா வகையறாக்களுக்குத் தெரியாதா என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா, உலகம் எந்த வேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது, அதானி, அம்பானி குடும்பங்களுக்கு எத்தனை கனவு இன்னும் ஈடேறாமல் இருக்கிறது….கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்ன சொற்களை மறக்கலாமா அரசு!

    திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு, பல மடங்கு வர்த்தகமும், லாபமும் உயர்ந்த பிறகு எப்படி சொத்தைப் பிரித்துக் கொள்வது என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிட்டு சமாதானம் செய்த கோகிலா பென் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து ப சிதம்பரம் நிம்மதி பெருமூச்சு விட்டாரே, யார் அந்தப் பெண்மணி? சகோதர அம்பானிகளின் சாட்சாத் அம்மாவே தான். தேச பொருளாதாரம் சந்திக்க இருந்த நெருக்கடியை ஒரு சாதாரணத் தாய் தீர்த்தவைத்த சிலிர்க்கவைக்கும் தியாகக் கதைகளை தொழிலாளி வர்க்கம் கொண்டாட வேண்டாமா..அதை விட்டுவிட்டு, வெள்ளம் சூழ்ந்தபோது பம்பாயில் தகவல் தொடர்பு சேவையைத் தொடர முடியாது என்று ரிலையன்ஸ் மறுக்க, பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனம் மட்டுமே இயங்கி உயிரையும் உடைமையையும் பாதுகாக்க உதவி புரிந்ததாம்…இங்கும் தமிழக வெள்ள அபாயத்தின்போது பி எஸ் என் எல் மட்டுமே இயங்கியதாம், இதை எல்லாம் நினைவுபடுத்தி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு சூப்பர் சிங்கர் தமிழகத்தின் செல்லக் குரல் தேடலுக்கு லட்சக் கணக்கில் குறுஞ்செய்தி வசூலிக்க வேண்டி இருக்கிறது, அதிகக் காசு பிடுங்க வேண்டி இருக்கிறது, இதற்கே நேரம் இல்லையாம்…கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் சேவை, இதுக்குப் போயி அலட்டிக்கலாமா…

    ஆயிற்று, இனி ஏழை பாழைகள் எதுவுமற்றவர்கள் ரயில்வே பிளாட்பாரங்களில் படுத்து இடத்தைப் பாழடித்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள்தான் பிளாட்பாரத்தையே தனியாருக்கு விற்கப் போறோம்ல….அப்புறம் சரக்கு ரயில், பயணிகள் ரயிலில் பெட்டிகளை முதலாளி வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் சொந்தப் பொறுப்பில் வைத்து விளையாடிப் பார்க்க ஆசையாக இருக்கின்றனர்…உங்களுக்கு இல்லாததா கண்ணுகளா என்று எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தீவிர சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.

    ரகுராம் ராஜன், அதுதான் இந்த ரிசர்வ் வங்கியின் கவர்னர், கொஞ்சம் திருவாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறாரா மனுஷன், பார்வையில்லாதோர் பூமியில் ஒற்றைக் கண் உடையவனே ராஜா என்று போட்டு உடைத்துவிட்டார்… ..ஜி டி பி., பி பி பி என்று மக்களுக்குப் புரியாத எழுத்துக்களைச் சொல்லி இந்தியா எங்கோ உயரத்திற்குப் போய்விட்டது என்று ஜல்லி அடித்துக் கொண்டிருந்தது பொறுக்காமல் காற்றைப் பிடுங்கி விட்டார். வளர்ச்சி எல்லாம் ச்சும்மா…..போக வேண்டிய தூரம் அதிகம் என்று இப்படியா உளறிக் கொட்டுவது.

    A woman breaks down as she is about to board a bus for Mumbai leaving her son behind.

    நேற்று கூட பாருங்கள், தெலுங்கானா மண்ணில் வறட்சி, எட்டணாக் காசு இல்லை. குல்காசார்லா பேருந்து நிலையத்தில் சிறு வயது மகனை விட்டுப் போக முடியாத ஆற்றாமையோடு மாமனார் மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு, பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனோடு வேலை தேடி மும்பைக்குப் புறப்படும் பெண்மணியின் கண்களில் இப்படியாக இடம் பெயர்ந்து செல்லும் கோடிக் கணக்கான உதிரி பாட்டளிகளின் சார்பில் கண்ணீர் கெஞ்சி நிற்கிறது…. வளர்ச்சி என்றால் சும்மாவா…வல்லரசுக் கனவு வேண்டாமா…அதற்கு எல்லாம் ஒரு விலை உண்டல்லவா….சோகமான திரைப்படம் மாதிரி ரசித்து விட்டு வேறு காட்சியை மாற்றிப் பாருங்கள்…சானலை மாற்றிக் கொள்ளுங்கள்…கோக், பெப்சி, கென்டக்கி சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள்…ஓ நீங்கள் சுதேசியா…கவலையை விடுங்கள்…பாபா ராம்தேவ் வழங்கும் பதஞ்சலி உணவுப் பொருள்களுக்கு இணையதளத்தில் ஆர்டர் கொடுங்கள்…மலிவு விலையில் அம்மா தண்ணீர் ஒரு பாட்டில் வாங்கிக் குடித்து எல்லாவற்றையும் செரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

    மே தினம் வரும்போதெல்லாம் கொஞ்சம் அதிர்ச்சி முழக்கங்கள் கேட்கும்தான்….பழைய வரலாற்றுக் கதைகளை பேசிக் கொண்டே போய்க் கொண்டிருப்பார்கள்… இப்படியே காலம் போய்விடாது என்பார்கள். மக்கள் கொதித்தெழுவார்கள் என்பார்கள். ஜனநாயகக் குரல்கள் ஒலிக்கும் என்பார்கள். புரட்சியின் கீதங்கள் இளைய தலைமுறையை ஒரு நாள் கவ்வும், படிப்பினைகளில் இருந்து புதிய திசைவழியில் விடுதலைக்கான இறுதிப் போர் நடக்கவே செய்யும் என்பார்கள். அதன் ஆச்சரிய விதைகளை ஆந்திரத்தில், தில்லியில் பல்கலைக் கழகங்களில், நம்மூர் ஐ ஐ டியில் பார்த்தீர்களா என்பார்கள்…சாதியைக் கடந்து, மதங்களைக் கடந்து உழைப்பாளி மக்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டுவோம் என்பார்கள்…உங்களிடம் சொல்வதற்கென்ன, இப்படியான விஷயங்களில் உண்மை இருக்கத் தான் செய்கிறது…ஆங்காங்கு கலகங்கள் வெடிக்கத் தான் செய்கின்றன. இதை விரும்பாதவர்கள் போர்வையை இறுக்கப் போர்த்திக் கொண்டு குளுமை செய்யப்பட்ட அறைகளில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு நிம்மதியாகத் தூங்கப் பாருங்கள். ஏனென்றால், எப்போதுமே அநியாயமும் அக்கிரமும் வென்று கொண்டிருக்காது என்றுதான் சமயங்களில் தோன்றுகிறது. அதனால் எச்சரிக்கையாக இருப்பது மூலதனத்திற்கு நல்லது.

    *****************

    Share
  • உலக புத்தக தினம்!

    ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

    e6824b60-6b07-4866-b5c5-eedf7bdab8df

    வாசிப்பின் காதலர் தின வாழ்த்துக்கள் !

    எஸ் வி வேணுகோபாலன்

    பல மாதங்கள் ஆயிற்று அந்தத் தோழரைப் பார்த்து. சில ஆண்டுகளாக நளினி பெங்களூரில் இருப்பவர். கடந்த வாரம், எதிர்பாராத ஒரு புத்தக வாசிப்பு அவரை சந்திக்க உதவியது. கூரியரில் எழுத்தாளர் திலீப் குமார் அனுப்பிக் கொடுத்த அவரது சிறுகதைத் தொகுதியில் நான் எதிர்பார்த்தபடியே எனக்கு மிகவும் பிடித்த அவரது “ஒரு குமாஸ்தாவின் கதை” இருக்கவே, அலுவலகத்திலிருந்து மாலை புறப்படுகையில் ரயில் பயணத்தில் வாசிக்க எடுத்தேன், இடையே வந்த இரண்டு அலைபேசி அழைப்புகளுக்கு நடுவே நகர்ந்த கதையின் முக்கியமான கடைசி ஒன்றரை பக்கங்கள் இருக்கையில் நான் இறங்கவேண்டிய கோடம்பாக்கம் வந்துவிட்டது. ஆனாலுமென்ன, இறங்கிய இடத்திற்கு நேர் எதிரே இருந்த அருமையான நீளக் கடப்பா கல் திண்ணையில் அமர்ந்து பரிதவிப்போடு வாசித்து முடித்து எழுந்திருக்கும்போது, எதிரே ‘ஹாய்’ என்ற குரல். அடுத்த ரயிலில் வந்திறங்கி இருந்தார் நளினி. அவர் சொன்ன விஷயம்தான் சுவாரசியமானது: “ஜன்னல் வழியே பார்த்தால் உங்களைப் போலவே ஒருவர் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்…நீங்கள்தானோ என்று யோசிக்கையில் எழுந்து நடக்க ஆரம்பித்தீர்கள்…புறப்பட இருந்த ரயிலில் இருந்து சட்டென்று ஓடி வந்து இறங்கினேன்” என்றார். சிறிய உரையாடலுக்குப் பிறகு காஞ்சிபுரத்திற்கான ரயில் வரவும் விடைபெற்றுச் சென்றார்.

    வாசிப்புக்கு இடம், காலம், காரணம் எல்லாம் உண்டா என்ன…யாராவது எப்போதாவது வந்து படிப்பார்கள் என்று ஒரு சிற்றூரின் எளிய நூலகத்தில் காத்திருக்கின்றன புத்தகங்கள். தனது நூல் ஒன்று புதுக்கருக்கு கலையாமல் பழைய புத்தகக் கடை ஒன்றில் பத்து ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும் சிறிய பலகையின் அருகே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறக் கூடும் எழுத்தாளருக்கும், எங்கிருந்தோ வந்து கடையைக் கடக்கப் போகும் ஓர் உண்மையான வாசகர் மீது நம்பிக்கை இருக்கவே செய்யும். அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் யார் கூடுதல் கவனம் பெறுகிறார் என்று பார்த்தால் வாசிப்பே வெற்றி பெறுகிறது.

    விஜய மல்லையா விவகாரம் பெரிதும் பேசப்படும் இந்தக் காலத்தில், வராக் கடன் போலவே வாசிக்காத கடன் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பத் தோன்றுகிறது. அதாவது வாசிப்பைக் கடமையாகக் கொள்ள மறுப்பவர் பட்டியல் அல்ல அது, படிக்கிறேன் என்று வாங்கி வாங்கி அந்தப் புத்தகங்களுக்கு நீதி வழங்காதோர் பட்டியல் ! மிகவும் தற்செயலாக என் மகனுடைய நண்பனின் தந்தை என் வாசிப்பைப் பற்றி மகிழ்ச்சியோடு அறிந்து ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டுத் தருமாறு அனுப்பி வைத்தார். அதை வாசிக்காமலே கடந்து கொண்டிருந்த ஒரு நாளில், ‘படிக்க நேரமில்லாவிட்டால் அந்தப் புத்தகத்தையாவது உருப்படியாகத் திருப்பிக் கொடுத்து விடு, எங்கள் நட்புபாதிப்பதற்கு அது காரணம் ஆகிவிடக் கூடாது’ என்று நந்தா என்னிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். வெட்கத்தோடு நூலைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்த குற்றவுணர்ச்சி இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனை எத்தனை புத்தகங்கள் வாசிக்காமல், அதிலும், அன்பின் நிமித்தம் புதிய நூலின் பிரதியை அனுப்பி வைத்த அன்பர்கள் பலர் தோழமையோடு சகித்துக் கொண்டிருக்க, பழைய கடனை அடைக்காமல் புதிய நூல் ஏதேனும் கிடைத்தால் அதை உடனே படிக்கும்போது அவர்கள் யாரும் அருகே இல்லையே என்று கண்கள் தன்னிச்சையாகப் பார்த்துக் கொள்கின்றன.

    ஆறு மாதங்களாக வீட்டருகே உள்ள உதயா முடி திருத்தகத் தோழர்களை ஏய்த்துக் கொண்டிருந்தேன். நானாக ஒரு புத்தகத்தை அவர்களுக்குக் கொண்டுபோய்க் காட்டிச் சில வரிகளைப் படித்துக் காட்டிவிட்டு நான் முடித்தபிறகு கொடுப்பதாகச் சொல்லிவிட்டுவந்தேன். அந்தப் புத்தகத்தை அவர்கள் நான் கடையைக் கடந்து போகும்போது எல்லாம் நினைவூட்டிக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பண்டுவம் என்றால் மருத்துவம், ஆகவே பண்டிதன் என்று நாவிதர்களுக்குப் பெயர் என்ற குறிப்பில் சிலிர்த்த சதீஷ், ‘சார் புத்தகம் எங்கே கிடைக்கும்னாவது சொல்லுங்க, நாங்க போய்ப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்லியும் நான் அவர்களுக்கு நியாயம் செய்யத் தவறிக் கொண்டிருந்தேன்.

    அண்மையில், ஒரு புத்தகக் கடையில் நுழைந்து குறிப்பிட்ட புத்தகம் அங்கே கிடைக்குமா என்று உரக்கக் கேட்கையில், ‘இங்கே மட்டுமல்ல, எங்கும் கிடைக்காது, என்னிடம்தான் பிரதிகள் எல்லாம் இருக்கின்றன’ என்று அங்கே புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்த வேறோர் அன்பரிடமிருந்து குரல் வந்தது. ஐ டி படித்துவிட்டு உருப்படியான வேலை கிடைக்காத நிலையில், நூல் விற்பனையாளராக இயங்கிக் கொண்டிருக்கும் கதிரேசனிடம் பணத்தையும், முகவரியையும் ஒப்படைத்து விட்டு வந்தேன். மறுநாள் மாலை வீடு திரும்புகையில் புத்தகம் கூரியரில் வந்து காத்திருந்தது. “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்ற அந்த நூலை முடி உடனே எடுத்துக் கொண்டுபோய், முடி திருத்தகத் தோழனிடம் கொண்டு சேர்க்கையில் கட்டிப் பிடித்து அவர் அடைந்த உற்சாகம் ஒரு வாசிப்புத் திருவிழா ! நூலுக்குப் பணம் வாங்க மறுத்த என்னிடம்,’பணத்தைக் கொடுக்காமல் வாங்கிக் கொள்ளமாட்டேன், அப்போதுதான் வேறு நல்ல புத்தகம் கிடைத்தாலும் நீங்கள் வாங்கிக் கொடுத்து அறிமுகம் செய்வீர்கள்’ என்ற சதீஷின் குரல் எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாகச் சிறப்பிக்கும் மழைநீர்த் துளி.

    நான் எதிர்பார்த்த புத்தகம் கிடைக்காது போன அந்தக் கடையில் நான் எதிர்பாராமல் கண்டடைந்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை நூலை (“என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்” – அக்னி சேகர்), மாபாவி ஒரு வாரம் கழித்தே பையில் இருந்து எடுத்தேன். ஜிகாத் தீவிரவாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களது துயரம் குறித்த அந்த பிரதி பல கேள்விகளை எழுப்புவது. இந்தியிலிருந்து தமிழில் அற்புதமாக அந்தக் குரலைக் கொணர்ந்த கோவை இந்தி பேராசிரியர் ரமேஷ் குமாரை அழைத்து என்னை அறிமுகம் செய்து கொள்ளாமலே அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பேசத் தொடங்குகையில், “அய்யா உங்கள் பெயரைச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார். ‘ ஒரு வாசிப்பு அனுபவத்தில் நிலைகுலைந்து போயிருக்கும் வாசகன் தனது பெயரைச் சற்று நிதானமாகவே மீட்டெடுத்துக் கொள்ள முடியும்’ என்ற எனது பதிலில் அவர் அடைந்த பேரானந்தக் கிளர்ச்சிக்கு எந்த ராயல்டி தொகையும் ஈடாகாது.

    அண்மையில் குடும்ப மருத்துவர் பி வி வெங்கட்ராமன் (அவரே ஓர் இலக்கிய விரும்பி; சோவியத் கதைகள் கொண்டாடி) அவர்களைச் சந்திக்கக் காத்திருக்கையில் தற்செயலாக புதிய தலைமுறை கல்வி இதழ் பொறுப்பாசிரியர் பொன் தனசேகரனை அங்கே காண முடிந்தது. தொலைக்காட்சியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தமது நூல் ஒன்றைக் கொடுத்தபடி அவர் சொன்ன செய்தி உற்சாகம் அளிப்பது. ‘தெருவிளக்கும் மரத்தடியும்’ என்னும் தலைப்பில் பேரா ச மாடசாமி அவர்கள் எழுதி வந்த தொடர் கட்டுரைகளின் தொகுதி வரும் ஜூன் மாதம் சென்னை புத்தகக் கண்காட்சில் வெளிவர இருக்கிறது என்றார். கற்றல், கற்பித்தல் அனுபவங்களின் அற்புதக் கொடையாக அந்த நூல் அமையும். இளம் எழுத்தாளரான – ஏழாம் வகுப்பில் நுழையும் சைதன்யாவின் அடுத்த மொழி பெயர்ப்பு நூல், செப்டம்பரில் வெளியாகிறது என்றார் அவரது தந்தை.

    கடந்த வாரம், நான் பணியாற்றும் இடத்தில் வேறு ஒரு துறையில் மூத்த பெண் ஊழியர் ஒருவர் விருப்ப ஓய்வில் விடைபெறும் எளிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, தொடக்க காலங்களில் துணிச்சலும் குறும்பும் நகைச்சுவை உணர்வும் ததும்பும்படி வேலையில் வந்து சேர்ந்த அவர், பின்னர் வாழ்க்கையின் போக்கில் பல தொடர் நிகழ்வுகள், மிகவும் நேசித்த தாயின் மரணம் போன்றவை ஏற்படுத்திய பாதிப்பினால் சற்று உளவியல் நெருக்கடிக்கு ஆளாகி ஆளே மாறிப் போய்விட்டிருந்ததை அவருடன் ஒன்றாகப் பணியில் சேர்ந்த வேறொரு பெண் தோழர் கண்ணீர் மல்கப் பேசினார். சக ஊழியரான அவர் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இயல்பாகப் பதில் அளிப்பது, மன ஆறுதல் தரும்படி பேச்சுக் கொடுப்பது என்று ஆண்டுக் கணக்கில் உதவி வந்திருக்கும் இன்னொரு தோழர், ஒரு கட்டத்தில் அவர் விருப்ப ஓய்வில் செல்வதே எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கும் என குடும்பத்தாரிடம் எடுத்துப் பேசி நல்லவிதம் அதை முடித்தும் கொடுப்பதில் உதவி செய்திருக்கிறார். அன்பும் கரிசனமும் சூழ்ந்திருந்த அந்தத் தருணத்தில் பேசிவிட்டுத் திரும்பியபோது எனக்கு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது “காஃப்கா எழுதாத கடிதம்” தொகுப்பில் இடம் பெறும் ரேமண்ட் கார்வர் எனும் அமெரிக்க எழுத்தாளரின் அற்புதமான “ஒரு சிறிய எளிய காரியம்”சிறுகதை நினைவுக்கு வந்தது.

    da882ee1-78ea-4caa-8817-576669a93e32

    அசுவாரசியமாக நடந்து கொள்ளும் பேக்கரி ஆள் ஒருவரிடம் தனது மகன் பிறந்தநாளுக்கான கேக் ஆர்டர் கொடுத்துத் திரும்புகிறாள் 33 வயது தாய் ஆன். பிறந்த நாள் கொண்டாடவேண்டிய திங்கள் கிழமை காலையில் பள்ளிக்குச் செல்லும் ஸ்காட்டியை ஒரு கார் இடித்துவிட்டுச் சென்றுவிட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் கண் விழிக்காதிருக்கிறான் அவன். மருத்துவர் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தபடி இருக்கிறார். இரண்டு நாட்களில் மருத்துவமனையில் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. சோறு தண்ணீர் செல்லாமல் கணவனும் மனைவியும் மகன் கண் திறக்கக் காத்திருக்கின்றனர். இடையே கணவன் வீடு திரும்பும் ஒரு பொழுதில் ஓயாது அடிக்கும் டெலிபோனில் ‘கேக் எடுத்துக் கொள்ள வரவில்லையே’ என்று கேட்கும் குரல் கணவனுக்குச் சரிவர கேட்பதில்லை. திரும்பத் திரும்ப ஒலிக்கும் அழைப்பில் எரிச்சல் அடைகிறான்.

    மருத்துவமனையிலேயே இருக்கும் மனைவியை வீட்டுக்குப் போய் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, நாய்க்கும் உணவு கொடுத்துவிட்டு வா, ஆனால் ஃபோன் அடித்தால் எடுக்க வேண்டாம் என்று அனுப்பி வைக்கிறான் கணவன். அவளோ ஃபோன் அடித்து ஓய்ந்ததும் பயந்துகொண்டு மருத்துவ மனையை அழைத்துக் கேட்கிறாள், அங்கே ஒன்றும் நடப்பதில்லை. பிறகு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்புகையில், எல்லாம் முடிந்திருக்கிறது, ஸ்காட்டி இறந்துவிடுகிறான். மருத்துவர் கையறு நிலையில் வருத்தம் தெரிவிக்கிறார். உடல் கிடைக்க தாமதம் ஆகும் என்ற நிலையில் நொறுங்கிப் போய் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும். மீண்டும் ஓயாது அடிக்கும் ஃபோன் மணிச்சத்தம் பேக்கரியில் இருந்து வரும் அழைப்பு என்று தெரிந்து அவரைச் சண்டை பிடிக்க இருவரும் விடிந்தும் விடியாத காலையில் ஓடுகின்றனர். அவரும் சண்டைக்குத் தயாராகிறார். ஆனால் இவர்கள் நிலை உணர்ந்து துயரத்தில் பங்கேற்கிறார். தனக்குக் குழந்தைகள் கிடையாது, 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒற்றை ஆளாக நகரத்து மனிதர்களுக்காக உணவு தயாரிக்க அங்கேயே உழலும் தன்னால் ஸ்காட்டியின் பிரிவைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். முதலில் அவர்களுக்குத் தேவை உணவு என்று வற்புறுத்திச் சொல்லி அவர்களது மூன்று நாள் பசியைத் தீர்க்க உணவு ரோல்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆர்டர் செய்யப்பட்ட கேக் டெலிவரி செய்யப்படாது இருப்பது தனக்கு உறுத்தலான விஷயம் என்பதாலேயே திரும்பத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று என்கிறார். அவர்களும் சமாதானம் ஆகி அவரோடு பேசிக் கொண்டே இருக்கக் கதை முடிகிறது. ஒரு சிறிய நல்ல காரியத்தை இந்த உலகில் யாராவது ஒருவர் வேறு யாரேனும் மனிதர்களுக்காகச் செய்து கொண்டேதான் இருக்கின்றனர். புத்தகங்கள் ஓயாது அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பதாக எனக்குப் பட்டது.

    a378be03-f521-473e-baa2-d248c5285a50

    டிசம்பர் மாத பெருமழை வெள்ளத்தில் இழந்த பொருள்களில் புத்தகங்களின் வலியும் வேதனையுமே அதிகம். இனி கிடைக்காது என்கிற மாதிரியான சில நூல்களைக் கண்ணீர் மல்க விடை கொடுத்து வெளியேற்றினோம். அருமையான மனிதர்கள் மற்றும் செல்ல பிராணிகள் இறப்பு ஏற்படுத்தும் துயரத்தை அப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றியது. உயிர்களின் தோற்றமும் மறைவும் தவிர்க்க இயலாதவை, ஆனால் நினைவுகள் அழியாதவை. சங்கிலித் தொடராக ஒரு விசை அந்த நினைவுகளைத் தலைமுறைகளைக் கடந்து கடத்துகிறது. ஒரு மரணத்தை அடுத்து அதே இல்லத்தில் புதிய உயிரின் பிறப்பில் கேட்கும் அழுகை புன்னகையை, மகிழ்ச்சியை குடும்பத்திற்கு மீட்டுக் கொடுக்கிறது. ஓர் இடைவெளி அற்ற மகிழ்ச்சியை, மன நிம்மதியை, ஆறுதலை, பகிர்வை, உரையாடலை, இசைவை, சமாதானத்தை, மன்னிப்பை, சகிப்புத் தன்மையை, விடுதலையை, தாமே ஆற்றுப் படுத்திக் கொள்ளத் தக்க ஒரு துயரப் பெருக்கை, தாமே ததும்பிக் கொண்டாடும் களிப்பை, காற்றை, வெளிச்சத்தை, நம்பிக்கையை, கனவுகளை, கண்ணீரை, பெருஞ்சிரிப்பை மனிதர்கள் சுதந்திரமாக அனுபவிக்க வாசிப்பு அருள்பாலிக்கிறது.

    ஏப்ரல் 23, வாசகரை மிகுந்த பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து சமூகத்தைப் பார்க்க வைக்கிறது. புத்தகங்கள் இலேசாக செருமிக் கொள்கின்றன. நூலகங்கள் தங்களது திருவிழாவின் கொடியேற்றத்தைக் கொண்டாடுகின்றன. புத்தக ஆர்வலர்கள் ஒரு காதலர்களைப்போல் வீதியில் உலவும் காட்சியை உலக புத்தக தினம் படம் பிடிக்கிறது. இதுவரை வாசிப்பில் அத்தனை ஈடுபாடு காட்டதவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டி அருகே அழைக்கின்றன நூல்கள். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, வாசிப்பின் மீது!

    *****************

    Share
  • ஒரு புரட்சிக்காரரை நினைவு கூர்தல் எளிதானதில்லை

     

    எஸ் வி வேணுகோபாலன்

    baghatsingh8

    ஒரு புரட்சிக்காரரை யாரும்
    சொற்களால்
    கவிதையால்
    புகைப்படத்தால்
    ஓவியத்தால்
    சிற்பத்தால்
    ஏன்
    இசையால் கூட
    அத்தனை துல்லியமாகக் கொண்டு வந்து
    நிறுத்த முடிவதில்லை…

    ஒரு கலகச் சிந்தனையாளரை யாரும்
    உவமைப் படுத்துவதிலோ
    ஆய்வுக்கு உட்படுத்துவதிலோ
    கல்வெட்டுக்களில் பொறிப்பதிலோ கூட
    நிலைக்க வைத்துவிட முடிவதில்லை

    ஓர் எழுச்சிகர இளைஞரைச்
    சட்டையில் தாங்கியும்
    முத்திரையாய் உருக்கொண்டும்
    கணினித் திரையை அலங்கரித்தும்
    ஏன்
    அலைபேசியின் குரலாக்கியும் கூட
    எல்லா நேரமும்
    உடனிருக்க வைத்துவிட முடிவதில்லை

    புரட்சியின் விதைகளை விடாது தூவுவதிலும்
    கேள்வியின் தாகத்தை விடாது தூண்டுவதிலும்
    மாற்றத்திற்கான நெருக்கடியை விடாது முற்றவிடுவதிலும்
    பரந்த நேயத்திற்கான உள்ளத்தை விடாது தொழுவதிலும்
    சுதந்திரக் காற்றுக்கான அலைமோதலை விடாது ஆதரிப்பதிலும்

    வாழ்ந்து கொண்டே இருப்பார் பகத் சிங் –
    தூக்குக் கயிற்றின் இறுக்கத்தை
    மிக இலேசான புன்னகையால்
    உடைத்தெறிந்து விட்டு !

    ***************
    நன்றி: தீக்கதிர்: மார்ச் 23, 2016

    Share
  • முட்டுச் சந்து

    — எஸ். வி. வேணுகோபாலன்.

    இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

    இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

    ஒரு வேளை அந்தப் பாட்டி… அடடா… என்னுடன் மகள் இந்து இருந்தாள்.

    இந்த ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு எனது மூன்றாவது நடை அது. காலை ஏழரை மணிக்கு நானும் ராஜியும் வழக்கமான நடை நடந்து போகையில் இதே வீட்டைக் கடக்கையில் பாட்டியை நினைத்தபடி தான் கடந்தோம்… அப்போது வாசலில் எந்தக் கூட்டமும் இருந்திருக்கவில்லை. “”கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே முழு நடையை முடித்த நான், பால் வாங்க மறந்தது வீட்டருகே நெருங்கும்போது நினைவுக்கு வர, ராஜியை போகச் சொல்லிவிட்டு மீண்டும் பிஸ்மி கடைக்கு நடந்தேன்.

    பிஸ்மி கடை, சக்தி நகர் நுழைவுக்கு முந்தைய தெருவான விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு. வீட்டுக்குத் திரும்பிய பிறகு சிறிது நேரம் கழித்து மகன் நந்தா, “”கொஞ்சம் நடை நடந்து விட்டு வரலாம் வா” என்றான். அவனோடு நடக்கும் திசைகள், தெருக்கள் வேறு. அப்புறம் இந்து கேட்டாள், “”அப்பா கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா?” என்று அது எங்கள் வழக்கமான நடைப் பயிற்சிப் பாதை.

    சக்தி நகரில் நுழைகையில் அந்த வீட்டின் முன் நான்கைந்து பேரைப் பார்த்தோம். அந்தப் பாட்டி விடைபெற்று விட்டிருந்தாள். ஏழரை மணிக்கு எங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த உயிர், இனி எப்போதும் நினைவில் வாழ்வதானது.

    ஒரு நாளா? இரண்டு நாளா? எத்தனை முறை பார்த்திருப்போம்? ராஜிக்கு அந்தப் பாட்டியை மிகவும் பிடித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பார்க்கையில் திடமாகத் தெரிந்த பாட்டி, அண்மைக் காலமாக நாங்கள் அந்த வழி செல்கையில், எப்போதேனும் எதிர்ப்படுவாள். தெருவில் யாரேனும் தென்படுகிறார்களோ என்று தேடும் காந்தக் கண்கள். கருணை சுரக்கும் கண்களில் அதே போக்கில் ஒரு கோரிக்கையும் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.

    “”கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டு விட்டுடேன்” என்று கேட்பாள் பாட்டி. ஐம்பது மீட்டர் கூட இல்லாத சிறிய தெருவில் எதிர்ப்பக்கம் கையைப் பிடித்துக் கொண்டு விட்டால் போதும், அப்புறம் பாட்டி நேரெதிரே இருக்கும் முட்டுச் சந்தில் ஒரு வீட்டை நோக்கித் தானே நடந்து செல்லத் தொடங்கி விடுவாள். சிலபோது, எதிர்ப்பக்க முட்டுச் சந்தின் முனையில் காத்திருக்கையில் பார்த்திருக்கிறோம். ராஜி கையைப் பிடித்து தெருவின் குறுக்கே வண்டி வராத நேரமாக நடக்க வைத்து இந்த வீட்டின்முன் கொண்டு விடுவாள். அந்தக் கண்களில் இலேசான பரிச்சய சிரிப்பும், மகிழ்ச்சியும் எதிர்காலத் தலைமுறையையும் வாழ்த்தும்படி இருக்கும்.

    இங்கே யார் இருக்கிறார்கள். அங்கே யார் இருக்கிறார்கள் எங்களுக்குத் தோன்றியதில்லை, கேட்க. பாட்டி சொல்லியதாக நினைவு, இங்கே ஒரு பிள்ளை வீடு, அங்கே ஒரு பிள்ளை வீடு என்று. வாழ்க்கை ஒரு தொடர் ரயில் பயணம். இடைப்பட்ட தூரத்தில் பயணிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் பேச்சுத் துணைக்கு, ரசனைக்கு, பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் விஷயங்களுக்கு எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்கிறது. வடிவேலு சொல்வது மாதிரி, “”அதைத் தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வர மாட்டேன்” என்று பாட்டி எங்கள் நடைப் பயிற்சியின் இடையே ஒரு பாத்திரம். அவளது வாழ்க்கையில் எங்களுக்கு பெரிய இடம் இருந்திருக்க வேண்டிய சாத்தியம் இல்லை.

    முதுமையின் நிறைவில் ததும்பிக் கொண்டிருந்த அழகில், உடலின் இயலாமையை வெல்லும் அந்த கம்பீரப் புன்னகையில், மூக்குத்தியின் ஜொலிப்பில் நாங்கள் அந்தப் பாட்டியை நேசிக்கத் தொடங்கி இருந்தோம்.

    சிறிது காலமாக பாட்டியைப் பார்த்த நினைவு இல்லை. இந்த அவசர மாநகர வாழ்க்கையில் நழுவும் சங்கதிகள், மறக்கும் நிகழ்ச்சிகள், இழக்கும் அனுபவங்கள், தொலைக்கும் உறவுகள் எத்தனை எத்தனை… ஆனாலுமென்ன? இருக்கவே இருக்கிறது, “”ஓஹோ அப்படியா”, “”அடடா அப்புறம்”, “”அடக் கடவுளே”, “”ஆஹா போச்சுடா” என்பது மாதிரி ஸ்டாண்டர்ட் சொற்கோவை சில இருக்கவே இருக்கிறது, எல்லாவற்றையும் அந்த ஓரிரு சொற்களில் அழுத்தி உணர்ச்சிகளை மூழ்கடித்து அடுத்த வேலைக்குச் செல்ல கூட்டங்களில் அன்னார் நினைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி என்று அறிவிப்பதன் விரிவான பொருள், அதற்கு மேலும் அந்தத் துக்கத்திற்கு இங்கே நேரமில்லை என்பதாக இருக்கக் கூடும், யார் கண்டது?

    பாட்டி போய்விட்டாள் என்பதை வாசலில் அவரது மகன் அலைபேசியில் யாரிடமோ, ஆமாம்… எட்டரை மணிபோல இருக்கும்.. என்று சொல்லிக் கொண்டிருந்ததில் உறுதியானது. இந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் மட்டும் சட்டென்று வீட்டினுள் நுழைந்தேன். அழுது கொண்டிருந்தது மருமகளாக இருக்கக் கூடும். அவசர அவசரமாக வேறு ஒரு பெண்மணி – பச்சை நிற மாஸ்க் அவள் கழுத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது, நர்சிங் பணியாளராக இருக்கக் கூடும்- பாட்டிக்கு புடவை அணிவித்துக் கொண்டிருக்கவே சட்டென்று வாசலோடு நின்றேன்.

    “”கடைசியா ஏதாவது சாப்பிட்டாங்களா?” என்றேன்.

    “”கார்த்தால காப்பி சாப்பிட்டாளே… அப்புறம் எட்டு மணிக்குத் தான்”

    என்னருகே நின்ற ஒருவரிடம், “”டாக்டர் பார்த்துவிட்டுச் சொல்லிட்டாராக்கும்?” என்றேன்.

    “”ஆமாம்… முடியலேன்னு கூப்பிடவும் டாக்டர் வந்து பார்த்து ஐ சி யூவில் சேர்க்கலாம்னு சொல்லி இருக்கார். அவர் அந்தண்ட போயிருக்க மாட்டார். போய்ட்டா பாவம்” என்றார்.

    அதற்குள் வேறொரு பெண்மணி, “”நிறைவாழ்வு வாழ்ந்துட்டா… ஆறு மாசத்துக்கு முன்னாடி தாத்தாவும் பாட்டியும் நன்னா உட்கார்ந்துண்டு கனகாபிஷேகம் பண்ணிண்டாளே… அவருக்கு நூறு வயசு. பாட்டிக்கு தொண்ணூற்று ஐந்து” என்றார்.

    நான் பாட்டியைக் கை தொழுது நின்றேன். கழுத்து வழி புடவையைக் கொண்டுபோய் அந்த நர்சிங் பெண்மணி பாட்டியின் தலையை உயர்த்திய மாதிரி வைத்து வேலையை முடிக்கையில், பாட்டியின் முகம் பளிச்சென்று தெரிந்தது. “நான் வரட்டுமா?’

    என்று கேட்டாற்போல் இருந்தது. சாலையைக் கடந்து போகத் துணை தேடியவளுக்கு இப்போது காலத்தைக் கடந்து போக எந்தத் துணையும் தேவைப்பட்டிருக்கவில்லை. உடலை முன்னெடுக்கவும், உடலை நகர்த்தவும், உடலை இயக்கவுமே இயலாதவருக்கு யாருடைய துணையாவது தேவையாயிருக்கிறது. உடலைத் துறக்க வேண்டிய தருணத்தில் இலேசாகிறது எல்லாமும்.

    வெளியே இந்து காத்திருந்தாள். நான் பாட்டி எதிர்ச்சாரியில் முட்டுச் சந்து நோக்கிக் கடக்கும் இடத்திற்கு அவளையும் அழைத்து நகர்ந்தேன்.

    மிகவும் வயதான பெரியவரை யாரோ கைத் தாங்கலாக அழைத்து வந்தனர். மிக நெடிய அகல நெற்றியில் திருமண் பளிச்சிட்டது. துணையை இழந்த முதியவர் அவராகத் தான் இருக்கவேண்டும். அதற்குள் வேறொருவர் வேகமாக வந்து தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டு நடக்க உதவி செய்தவாறே, “”போயிட்டா” என்றார்.

    பெரியவர் அப்படியே நின்றார். ஒரு நொடிப் பொழுது. – ஒரே ஒரு நொடிப்பொழுது உறைந்தவண்ணம் நின்றார். தழுதழுக்கும் குரலில், “”போயிட்டாளா?” என்று வினவினார். “”நல்லதுக்குத் தான்” என்றார். அடுத்த கணம். மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

    எனக்கு என்னவோ, அவரை மெல்ல அந்தப் பக்கம் தெருவைக் கடக்க வைத்து அந்த வீட்டுக்குள் கொண்டு சேர்த்த பிறகு சொல்லி இருக்கலாமோ என்று பட்டது. ஆனால், அவரால் அந்த ஒரு நொடியில் உண்மையை ஜீரணிக்க முடிந்தது.

    இப்போது வண்டிகள் எதுவும் குறுக்கே வராதபடி பார்த்து மெல்ல தாத்தாவை அந்த இருவரும் கைத் தாங்கலாக அழைத்து வந்தனர்.

    ஏனெனில், இனி ஒரு போதும் பாட்டி அப்படி அதே எச்சரிக்கையோடு அடுத்தவர் உதவியோடு கூட எதிர்ப்பக்க முட்டுச் சந்துக்கு அவரைத் தேடிச் செல்ல இயலாது.

    ____________________________________________________________
    மறுபகிர்வு:
    நன்றி: முட்டுச் சந்து – தினமணி கதிர் சிறுகதை

    Share
  • கிளாரா ஜெட்கினின் கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்

     கிளாரா ஜெட்கின்: பெண்ணுரிமைப் போராளி; 1910ல் கோபன்ஹெகன் நகரில் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில், மார்ச் 8 உலக பெண்கள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவை எடுத்துக் கொடுத்த வீராங்கனை

    கிளாரா ஜெட்கின்: பெண்ணுரிமைப் போராளி; 1910ல் கோபன்ஹெகன் நகரில் கூட்டப்பட்ட உலக மாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர்வில், மார்ச் 8 உலக பெண்கள் தினமாக அனுசரிப்பது என்ற முடிவை எடுத்துக் கொடுத்த வீராங்கனை

     

    உலக பெண்கள் தின வாழ்த்துக்களுடன்

    எஸ் வி வேணுகோபாலன்

     

    சமத்துவ ஒப்பனை அல்லது
    சமத்துவ பாவனை அல்லது
    சமத்துவம் அசாத்தியம் எனும் சவால் அல்லது
    சமத்துவம் எதற்கு எனும் துருவல் அல்லது
    சமத்துவப் பேச்சே பிரச்சனைதான் எனும் புகார்……

    இன்னபிற எசப்பாட்டுக்கெல்லாம் சளைக்காது
    தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது
    சர்வதேச மகளிர் தின கீதம்

    *கிளாரா ஜெட்கின் நினைவைக் கொண்டாடும்
    கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்
    புதுப்பித்துக் கொள்கின்றனர்
    புதிய சமூகத்திற்கான கருவிகளை !

    புன்னகையால் புறந்தள்ளுகின்றனர்
    நிலைகுலைந்து போவோரது சாப மொழியை !

    இல்லத்தில், பொதுவெளியில், பணியிடத்தில்
    அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் பட்ட
    அவலங்களுக்கு எதிரான தீர்மானமான குரல்களோடு

    ஏந்திக் கொள்கின்றனர்
    பாலின சமத்துவத்தின் பல்லக்கை
    உன்னதப் பெருமிதம் சூடும் தோள்களோடும்
    உற்சாகத் தாளமிடும் கால்களோடும் !

    **********************

    Share
  • ரோஹித் வெமுலா கனவுக் குமிழிகளைத் தானே உடைத்துக் கொள்ளத் துரத்தப்பட்டவனின் மரணம் எழுப்பும் கேள்விகள்

    எஸ் வி வேணுகோபாலன்

    unnamed

    புன்னகை சிந்தும் இந்த முகத்தைப் பாருங்கள். ஒளி வீசும் அந்தக் கண்களில் எத்தனை கம்பீரமும், கனவுகளும், கற்பனைகளும் பளிச்சிடுகின்றன. இந்தப் புகைப்படத்தின் எந்தச் சிறிய சதுரத்திற்குள்ளாவது அவநம்பிக்கையின் விதைகள் தெரிகின்றனவா…”எப்போதுமே ஓர் எழுத்தாளராக விரும்பினேன். கார்ல் சாகன் போன்ற ஓர் அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன். கடைசியில் இந்தக் கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்தது” என்று கண்ணீரைப் பெருக்கும் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டுத் தூக்குக் கயிற்றை முத்தமிடவா இத்தனை பாடு எடுத்தாய் எங்கள் ரோஹித் வெமுலா ?

    ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலாவை இத்தனை மன அழுத்தத்திற்கும், வலி மிகுந்த வேதனைக்கும் கொண்டு நிறுத்தியது எது?

    ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பெயர் நீக்கம் செய்து கல்லூரி வளாகத்துள் அனுமதி மறுக்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களுள் ஒருவர் ரோஹித். அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டதற்காக இந்தப் பரிசு அவர்களுக்கு! பின்னே, என்ன ஆணவம், ஓர் உன்னதமான பல்கலையில் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பை இயக்குவதா? அதுவும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பா ஜ க வீற்றிருக்கும்போது, சங் பரிவாரத்தின் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சங்கத்தின் விருப்பத்திற்கு மாறான ஒரு மாணவர் சங்கத்தை எப்படி சகிக்க முடியும்! ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி இதெல்லாம் என்ன வெட்டிப் பேச்சு, பயல்களை அவரவர் இடத்தில் இருக்குமாறு தலையில் தட்டி வைத்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், கொஞ்சம் விட்டால் அவ்வளவுதான், இதுதானே வலதுசாரி சாதிய வெறித்தனத்தின் வெறுப்பு அரசியல்? அந்த இழிவுபடுத்தலின் அராஜக பலிபீடத்தில் துடிதுடிக்கத் தன்னையே அழித்துக் கொண்டுவிட்ட மற்றுமோர் உயிர்தான் ரோஹித் வெமுலா.

    ஒரு மாணவர் இயக்கத்தை “பயங்கரவாத சக்திகள்” என்றும், “தேச விரோத அமைப்பு” என்றும் மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானிக்குக் கடிதம் எழுதி, குறிப்பிட்ட ஐந்து மாணவர்களை பல்கலையிலிருந்து ஒழித்துக்கட்டக் கேட்டுவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிறார் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா. சுதந்திர தேசத்தில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகம், இரண்டு அமைப்புகளுக்கிடையே மூண்ட மோதலின் பின்னணியைக் குறித்து எந்தக் கவலையும் இன்றி, சாதிய ஒடுக்குமுறை பார்வையோடு ஒழுங்கு நடவடிக்கைக்குத் தீர்ப்பும் எழுதி இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் விடுதிக்குள், பல்கலைக் கழகத்தின் பிரதான கட்டிடத்திற்குள், பொதுவான பகுதிகளுக்குள் எங்கும் நுழையாமல் ஆராய்ச்சியை மட்டும் தொடரலாமாம், என்ன வெட்கக் கேடான சட்டதிட்டம் என்று கொதிக்கின்றனர் ஜனநாயக சிந்தனையாளர்கள். இந்த அநியாய, ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்கு எதிராக 15 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் இறங்கி இருந்தது அம்பேத்கர் மாணவர் சங்கம். திரும்பியும் பாராத நிர்வாகம், காதில் போட்டுக் கொள்ளாத துணைவேந்தர், எதிரான நடவடிக்கை எடுக்கத் தூண்டிய அரசியல் இந்தச் சதுரங்க வெறுப்பு ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தமது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார் ரோஹித்.

    எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தப் பட்டவர்கள் யாருமே தப்பிக்க முடியாது. பல மாதங்களாக ரோஹித் புகார் எழுப்பி வந்திருக்கிறார். பேசாமல் தலித் மாணவர்களுக்கு ‘அட்மிஷன்’ நேரத்திலே உயிர்க்கொல்லி மருந்தும் சேர்த்து வழங்கி விடுங்கள், தூக்கு போட்டுக்கொள்ள வாட்டமான ஒரு கயிற்றையும் அவர்களுக்கு கொடுங்கள் என்று ஒரு கடிதம் கூட எழுதி இருந்தார்.

    குடும்பத்தை உதறிவிட்டுப் போய்விட்ட தந்தை, கூலி வேலை செய்யும் அன்னை, தனக்கு கிடைக்கவேண்டிய உதவித் தொகை ஏழு மாதங்களாக நிறுத்தப் பட்டிருப்பதற்கு நீதி கேட்கவில்லை ரோஹித் – யாரையும் குற்றம் சொல்லாத அவரது இறுதிக் கடிதத்தில், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிலுவையை எப்படியாவது வாங்கி என் தாயிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பது எத்தனை இரத்தம் துளிர்க்கும் சொற்கள்.

    பல கோடிப் பேரின் அறிவியல் சிந்தனைகளைத் தூண்டிவிடும் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், எழுத்துக்கள் என்று புகழ் வாழ்க்கை படைத்த அமெரிக்க அறிவியலாளர் கார்ல் சாகனைத் தனக்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்த ரோஹித் எப்படி தனது கனவுக் குமிழிகளைத் தாமே தட்டிச் சிதறடித்தார் என்பது இதயங்களை நொறுக்கிப் போடும் கேள்வி. அந்த அளவுக்கு அவரைப் புரட்டிப் போடும் வன்மமும், ஆதிக்க உணர்வும் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவராக உளவியலால் மிதிபட்டால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதை பா ஜ க தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் டுவீட்டரில் பிரதிபலித்திருக்கிறார். ஒரு தாழ்த்தப்பட்டவன் என்கிறவகையில் இழிவுக்கு எதிரான போராட்டம் என்ன என்பதை நான் நன்கறிவேன் என்பது அவரது பதில்.

    ரோஹித் வேமுலா என்ன மாதிரி இழிவுகளை சந்தித்திருப்பார் என்பதற்கு சான்றுகளை வெளியே தேட வேண்டியதில்லை. இந்தச் செய்திக்கு ஆன் லைனில் பதில் எழுதும் உயர்சாதி ஆதிக்க மன நிலை எப்படி வெறுப்பை உமிழ்கிறது என்பதைப் படித்தாலே போதும். என்ன ஏதென்று தெரியாமலேயே மறுப்பது, படிக்க வந்தாயா போராட வந்தாயா என்று கேட்பது (வித்யார்த்தி பரிஷத்திற்கு இது பொருந்தாது போலும்! இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு இது பொருந்தாது போலும்!), அது என்ன தலித் அறிவுஜீவி தனியாக முளைத்தார்களா என்று படுகேவலமாக வினவுவது என்று குவியும் பதில்களில் தெறிக்கும் மொழியில் மறைக்கமாட்டாத வெறுப்புணர்வும், சாதிய மேட்டிமைத் தனமும் கொட்டிக் கிடப்பதைப் பார்த்தாலே போதும்.

    இறுதிக் கடிதத்தைக் கூட எத்தனை கவித்துவமாகவும், காழ்ப்புணர்வைக் கக்காமலும், இயற்கையின் நேயராகவும், அறிவியலின் வழிபாட்டாளராகவும், பரந்துபட்ட மனிதத் திரள் தொலைத்துக் கொண்டிருக்கும் இயல்பான வாழ்க்கை குறித்த விசனத்தோடும் எழுத முடிந்த அந்தக் கைகள் எப்படி தூக்குக் கயிற்றை முடிச்சு போட்டுக் கொடுக்கப் போயிற்று என்ற கேள்விகள் இரவு முழுக்க துரத்திக் கொண்டே இருந்தன. என் முடிவுக்கான காரணங்கள் கேட்டு என் நண்பர்களையோ, பகைவர்களையோ அழைத்துத் துளைத்தெடுக்க வேண்டாம் என்ற வரியை எழுதுகையில் இந்தப் புன்னகை ததும்பும் முகத்தோடேவா எழுதப் பட்டிருக்கும்? ஜெய் பீம் என்ற முழக்கத்தோடு முடியும் கடிதம், அந்தப் புரட்சிச் சொல்லின் பொருளைச் சுமக்க மாட்டது திணறும் அளவு வர்ணாசிரம தருமத்தின் அநீதி நம் தேசத்தின் உயர் கல்விச் சாலையில் கோலோச்சுவது எத்தனை சாபமிகுந்தது ?

    தமிழகத்தில் ஒரு தலித் மரணம் அடைந்து ஐந்து நாட்கள் கழித்து, அவரது உடலைப் பொதுவழியில் எதுத்துச் சென்று புதைக்குமாறு விதிக்கப்பட்ட , நீதிமன்ற உத்தரவை காவல் துறையே கீழே போட்டு மிதித்து தனிப் பாதையில் கொண்டுசென்று புதைத்ததோடு, தட்டிக் கேட்டவர்கள் மீது தடியடியும் நடத்தியதை திருநாள் கொண்ட சேரியில் பார்த்தோம். ரோஹித் வேமுலா உடலைத் தங்களது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ய விரும்பிய தமது எண்ணத்தைத் தடுத்து, உறவினர்கள் யாரும் வந்து சேருமுன் காவல் துறை அவசர் அவசரமாக அம்பர்பேட்டையில் எரித்துவிடுமாறு செய்துவிட்டதை ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகா கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். பல்கலைக் கழகத்தின்முன் காவல் துறை குவிக்கப்பட்டிருக்கிறது. அநீதியைத் தடுக்கவோ, நியாயத்தை நிலை நாட்டவோ, நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யவோ பயன்படுத்தக் கிடைக்காத அதிகாரத்தின் குவிப்பு ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்களை அடக்கி ஒடுக்கவும், மிரட்டி அடக்கவும் கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.

    அற்புதமான அறிவியல் மேதையாக, நட்சத்திரக் கூட்டங்கள் குறித்த கதைகளைக் குழந்தைகளுக்குக் காட்சிப் படங்களாக வழங்கத் தக்க ஆசிரியராக, வல்லுனராக உருப்பெற்று இருக்க வேண்டிய பயணத்தை ரோஹித் வேமுலா துண்டித்துக் கொண்டுவிட்டது சமூகத்தின் சோகம்.

    “……….நான் அறிவியலை, தாரகைகளை, இயற்கையை நேசித்தேன். மனிதர்கள் இயற்கையினின்றும் தங்களைத் துண்டித்துக் கொண்டுவிட்டதறியாது அவர்களை நேசித்தேன். நமது உணர்வுகள் இரவல் வாங்கப்பட்டவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. செயற்கையான கலைகள் மூலம் நமது இயல்பான கலையை வாழ்விக்கிறோம். காயப்படாமல் அன்பு செய்ய முடிவதில்லை. மனிதர்கள் ஓர் எண்ணிக்கை, ஒரு ஒட்டு, ஒரு பொருள் என்ற ஏதோவோர் உடனடி தேவை பற்றிய அடையாளமாக தாழ்வுற்றுக் கிடக்கின்றனர். தமது உன்னத நிலையை இழந்துவிட்டு நிற்கின்றனர்…..”

    போன்ற வரிகளை ஒரு 28 வயது மாணவர் தமது இறுதி சாசனமாக எழுதிவிட்டுப் போக முடியும் என்பது நாம் எத்தனை சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதையே வெளிப்படுத்துகிறது. ரோஹித் வெமுலா தேடிக் கொண்ட முடிவை ஆதரிக்க முடியாதுதான். ஆனால் இந்த அவலம் நேர்ந்ததற்கான காரணங்களுக்குப் பதில்களைத் தேட மறுப்பதற்கு அதையே ஒரு சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது..

    *******************

    Share
  • எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே !

    எஸ் வி வேணுகோபாலன்

    Child-Abuse

    எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே, சையத் சைனாப் ஃபாத்திமா ஜாஃப்ரி, எங்களை மன்னித்துவிடு! இந்த முறை ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் லிஃப்ட் இடைவெளியில் வைத்து உன்னைப் பறிகொடுத்தோம். ஒரு தாயின் கண்ணெதிரே – துடித்துக் கதறும் தாத்தாவின் அதிர்ச்சி மிகுந்த தருணங்களுக்கு இடையே உயிரற்ற உன் உடலை, ஏதோ உன்னையே மீட்டெடுப்பது போன்ற எதிர்பார்ப்போடு வலியோடும், வேதனையோடும் எடுத்துக் கிடத்தும் காட்சியைக் கண்ணுறவும் நெஞ்சுரம் கொண்டிருந்த என்னைப் போன்ற பாவிகளை மன்னித்து விடு, எங்கள் கள்ளம் கபடமற்ற இளம் தேவதையே.. புத்தக அலமாரியை சுவரில் பொருத்தி ஆணி அடிக்கையில் அல்லது மூட வராத சன்னல் கதவை இழுத்துச் சார்த்துகையில் நாமறியாமலே நசுங்கிச் செத்துப் போகும் பல்லியைப் பின்னர் கண்டெடுக்கையில் பதறிப் போகும் உள்ளங்கள், மூன்றரை வயதுப் பிஞ்சுக் குழந்தையின் துடிப்பு மிக்க இயக்கத்தை ஓர் எந்திரம் சட்டென்று முடிவுக்குக் கொண்டு வருவதை எப்படி எதிர்கொள்ளும், எங்கள் கண்ணே…

    முதன்முதலாக பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று யோசிக்கும் இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கையை மன்னித்துவிடு, ஜாஃப்ரி ! நவீன போட்டிக் களத்தில், ஒரேயொரு முதலிடத்திற்கான விபரீத ஓட்டப் பந்தயத்தில் குழந்தைகளை சாவி கொடுத்து இறக்கிவிடும் எங்களை மன்னித்துவிடு, கண்மணி. இல்லாவிட்டால், 2009ல் புது தில்லியில் 11 வயது ஷானூவை ஒரே ஓர் எழுத்துப் பிழைக்கு வேகாத வெயிலில் தலைமீது செங்கற்களைச் சுமந்து நிற்குமாறு தண்டனை கொடுத்து மயங்கி விழுந்து சாகக் கொடுத்திருப்போமா, பாவிகள்! 2007ல் ஆமதாபாத் மாநகரில் பத்து நிமிடம் தாமதமாகப் பள்ளிக்கு வந்ததற்கு பெரிய விளையாட்டு மைதானத்தை பத்து முறை சுற்றி வரச்சொல்லி மிரட்டி அனுப்பி ஐந்தாவது சுற்றிலேயே மிலான் தாணா மயங்கி மடிந்து விழக் கண்டிருப்போமா…. எச்சரிக்கையற்ற நிலையில் பராமரிக்கப்படும் நீச்சல் குளத்திலும், அலட்சியமாக கையாளப்படும் பள்ளி வாகனத்திலும் பிள்ளைகளைப் பறிகொடுப்போமா எங்கள் தங்கமே…

    குழந்தைகள் மீது உரிமை கொண்டாடப் பழகி இருக்கும் சமூகத்திற்குக் குழந்தைகளுக்கான உரிமைகள் இருப்பது தெரியாது என்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! தூய்மையான குடி நீரோ, கழிப்பறையோ, விளையாட்டுத் திடலோ, அன்பான கல்விச் சூழலோ, அரவணைப்பான காற்றுவெளியோ உத்தரவாதம் செய்யாமலே அடுத்த நூற்றாண்டுக்கான கல்வி நிலையங்களாக அறிவிப்போரை நம்பிக் குழந்தைகளைக் காவு கொடுப்போரை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

    ஆபத்துகளை தவிர்க்கவோ, விபத்துகளை எதிர்கொள்ளவோ வக்கில்லாமல் இருந்து கொண்டு, எந்த கோர மரணத்தையும், எதிர்பாரா விபத்து என்று சொல்லித் தப்பிக்கவும், நஷ்ட ஈடு வேண்டுமானால் கொடுத்துவிட்டுப் போகிறோம், அதற்கென்ன என்று அராஜகத் திமிரோடு வாதம் செய்யவும், இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டு அடுத்த வேலைக்குப் போகவும் துணிச்சல் கொண்டு திரிய அனுமதிக்கும் எங்கள் அரசியல், பண்பாட்டுச் சூழலை மன்னித்துவிடு ஜாஃப்ரி! மருத்துவரை அழைக்குமுன் வழக்கறிஞர்களை நாடவும், ஆடிட்டர்களை ஆலோசிக்கவும், அதிகாரவரிசையில் நெருக்கமான புள்ளிகளை உடனே துணைக்கு அழைக்கவுமான வசதியில் மிதப்போரிடம் கல்வி ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பதை மன்னித்து விடு ஜாஃப்ரி!

    இலக்குகளை வைத்து நடக்கிறது எங்கள் தாராளமய பொருளாதாரம். விற்பனைப் பொருள்கள், சரக்குகள், உருப்படிகள் என்று புதிய பெயர்கள் சூட்டப்படும் ஆடுகளத்தில், ‘பார்கோட்’ ஒட்டப்பட்டிருக்கும் இன்னொரு உருப்படி தான் குழந்தையும். வேகமான உணவு, வேகமான பயணம், வேகமான வாழ்க்கை என்றான உலகில், குழந்தைகளின் வளர்ச்சி மைல்கற்களை இப்போது வேகமாக ஊன்ற வேண்டியதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டரை அல்லது மூன்று வயதில் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதே எங்களுக்கு கொஞ்சம் தாமதம் போலாகி விட்டதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டிரண்டு படிக்கட்டுகளாகத் தாவி ஏறும் வயதில், இரண்டிரண்டு வகுப்புகளாக விரைந்து முடித்துவிடக் கூடாதா என்று நாங்கள் பேரார்வத்தோடு எதிர்பார்ப்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

    அறைந்து நசுக்கப்பட்டிருக்கும் உன் மென்மையான நாசி மீது உறைந்து மின்னும் இரத்தத்தின் துளிகளில் பிரதிபலிக்கிறது எங்களது கையாலாகத் தனம். பறிக்குமுன் வாடி விழும் வெள்ளை மலர்போல் எங்கள் நெஞ்சு துடிக்கக் கிடக்கும் எங்கள் முழுமதியே, ஜாஃப்ரி, மன்னித்து விடு எங்களை!

    *************

    Share
  • எந்தத் தடையுமற்ற அன்பின் பெருவெளி

    எஸ் வி வேணுகோபாலன்

    children
    குழந்தைகள் தினம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதம் விடிகிறது. கணக்கற்ற குழந்தைகளுக்கு விடியாமலே போகவும் செய்கிறது. காலை தேநீர்க் கடையில் உங்களை வரவேற்பது முதல், காய்கறிக் கடையில் தேங்காய் எடுத்துக் கொடுத்தால் படாரென்று அதை அறைந்து உடைத்துக் கொடுப்பது, சலூனில் முடி திருத்தக் காத்திருப்பது, அலுவலக வழியில் கடக்க நேரும் பாதி முடிந்த கட்டிட வேலையில் மூழ்கி இருப்பது, மதிய உணவருந்தும் ஓட்டலில் உணவு கொண்டு வைப்பது அல்லது பிளேட் எடுப்பது………எல்லாமே குழந்தைகள் என்பது மட்டுமல்ல, பல்லாயிரம் மைல் கடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தை தொழிலாளர்கள். அவர்களது மொழியை நாம் சென்றடையக் காத்திராமல் நமது மொழியில் வேக வேகமாக ஐக்கியமாகி நம் இதயம் நொறுங்கும்படி சிரிக்க சிரிக்க வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகள்.

    பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் தூக்கமுடியாத பையைத் தூக்கியபடி உடன் சென்று கொண்டிருக்கும் உள்ளூர் வேலைக்காரக் குழந்தைகள். பிளாட்பாரக் கடையருகே அம்மாவுக்கு உதவியாக எதையோ விற்றபடி பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். எதற்குப் பிச்சை எடுக்கிறோம் என்று தெரியாமலே நெரிசல் மிகுந்த ரயில் பயணத்தினூடே குட்டிக் கரணம் போட்டுக் கொண்டும், கைகள் நுழைக்க முடியாத இரும்பு வளையத்திற்குள் தனது உடலையே நுழைத்து வெளியேறிவிட்டு இறுக்கமான முகங்களிடம் அன்பு எதிர்பார்த்துத் தட்டேந்திச் செல்லும் குழந்தைகள். கொஞ்சம் அதிக சூடான காப்பிக் கோப்பையைக் கூட ஏந்த முடியாத வயதில் கொதிக்கும் கண்ணாடிக் கரைசல்களை வளையல்களாக்கும் தொழிலில் குழந்தைகள். விடியுமுன் தோட்டங்களில் வர்த்தகத்திற்காக மல்லிகைப் பூக்கள் பறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள். குழந்தைகள் தினம் என்ன, குழந்தைமை என்றாலே இன்னதென்று அறியாத குழந்தைகள்.

    உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அதிக பாதிப்புகளுக்கு உட்படுபவர்கள் குழந்தைகள். அருகில் இருக்கும் குழந்தையின் மேல் அலட்சியமாக ஊதிவிடப்படும் சிகரெட் புகை வன்முறை மிகுந்தது. வகுப்பறையில் அசந்து தூங்கிவிடும் குழந்தை மீது அடுத்த மாணவரைத் தண்ணீர் எடுத்து ஊற்றுமாறு சொல்வது இன்னுமே இழிவான வன்முறை. ஆர்வமாகக் கேள்வி கேட்கும் சிறுமியை அதட்டி உட்கார வைப்பது தண்ணீர் அல்ல, வெந்நீரை எடுத்துத் தலை மேல் ஊற்றுவதற்குச் சமம். மதிப்பெண்களைத் தரவாரியாக வாசித்துக் காட்டி அழவைப்பது நெருப்பள்ளிப் போடுவதற்குச் சமம். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா(ய்) என்றார் பூதத்தாழ்வார்! (தகளி=அகல் விளக்கு). குழந்தைகள் தினத்தன்று மிட்டாய் கூடக் கொடுக்க வேண்டாம், அன்பு நிரம்பிய பார்வை பார்த்தாலே கொண்டாடிக் கொள்வர் குழந்தைகள்.

    ஐந்து அல்லது ஆறு வயதிற்குள் ஒரே நேரத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு என மரியா மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். சுவர்களைத் தமது ஓவியக் கூடங்களாக்கிக் கொள்ளவும், கேட்பதையெல்லாம் பேசவும், பார்ப்பதையெல்லாம் கேள்வியால் துளைக்கவுமான வயதில் முடக்கப்படும் குழந்தைகள், பின்னர் மூர்க்கமாக வெளிப்படுகையில் திணறுகிறது சமூகம். தங்கள் கனவுகளை சேமித்து வைக்கும் உண்டியலாக பெற்றோரால் பார்க்கப்படும் குழந்தைகள் ஒருபோதும் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற விரும்புவதில்லை. உத்தரவுகள், விசாரணைகள், சரிபார்த்தல்கள், சந்தேகக் கேள்விகள் இவற்றின் கறைபடியாத உள்ளார்ந்த உரையாடல்களுக்கு ஏங்குகின்றனர் குழந்தைகள். உறக்கவேளை கதைகள் மீது காதலோடு காத்திருந்து உறங்கிப் போகின்றனர் குழந்தைகள். காசுகளைக் கொட்டிச் சேர்க்கப்படும் பள்ளிக்கூடங்களில் மறுக்கப்படும் விளையாட்டு நேரம், ஒடுக்கப்படும் பரஸ்பர பேச்சு, கண்டிக்கப்படும் நட்பு இவற்றின் வெப்பம் தாளாது வாடிப் போகின்றனர் குழந்தைகள்.

    அங்கீகாரமற்றுக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பருவத்தில் எங்கிருந்தோ வெளிப்படும் கள்ளத் தனமான அன்பில் ஏமாந்து தடுமாறி வீழ்கின்றனர் குழந்தைகள். நவீன தாராளமயம் சீரழித்துவிட்ட உறவுகளின் இழப்பில் தாத்தா பாட்டிகளையும், அவர்களது அன்பு முத்தங்களையும், அனுபவக் கதைகளையும், அரவணைப்பையும் பறிகொடுத்து வாட்டமுற்றுப் போகின்றனர் குழந்தைகள்.

    ஆனாலும் நம்பிக்கை தொலைத்துவிடாதவர்கள் குழந்தைகள். போராட்ட உணர்வை இன்னும் பத்திரம் காத்து வைப்பது குழந்தைப் பருவம். தேடலின் ஊற்று குழந்தைமைக் காலம். மிக முக்கியமாக மனமார மன்னிக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகள். முந்தைய நாளின் சோகத்தை அடியோடு கழற்றிப் போட்டுவிட்ட உற்சாகக் கால்கள் குழந்தையின் பாதங்கள். கடந்த காலத்தை எண்ணி எதிர்காலத்தை சபிக்காமல், நிகழ் காலத்தில் விதைக்கத் தயாராயிருப்பவர்கள், குழந்தைகளைக் கண்டடைந்தாலே போதும். மொழி, மதம், இனம் எந்தத் தடையுமற்ற அன்பின் பெருநிலம் அது. இன்னிசை ஆரவாரமிக்க நறுஞ்சோலை வனம் அது. குழந்தைகள் தினம் இந்த ஓர் ஆற்றுப்படுத்தலுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும், கொண்டாட்டத்திற்குமாகவே மிகவும் வேண்டி வந்து நம் வாசல் கதவைத் தட்டுகிறது. தவிரவும், எல்லோரையும் மீண்டும் குழந்தைகளாகக் கருதிக் கொள்ள வைக்கும் வரம் அளிக்கவுமதான்!

    *******************

    Share
  • அஞ்சலி: மனோரமா

    என்றென்று நிலைத்து நிற்கப் போகும்
    தில்லாங்குமரி டப்பாங்குத்து

     

    எஸ் வி வேணுகோபாலன்

    aman

    ஜில் ஜில் ரமாமணி காலமானார்……………….

    எல்லாம் வதந்தி…நான் நலமாக இருக்கிறேன்…உயிரோடு இருக்கிறேன் என்று சில மாதங்களுக்குமுன் அவர் பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன….மனோரமா இனி வந்து அப்படி சொல்ல இயலாது என்ற செய்தி இந்த நள்ளிரவில் சன் செய்திகள் அலைவரிசையில் பார்த்தபோது தெரிந்தது. பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் ஒரு நாயக, நாயகி அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருந்த பன்முக ஆற்றல் படைத்திருந்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்குக் குடி பெயர்ந்து பள்ளத்தூர் பாப்பாவாகி பின்னர் மனோரமா என்று பெயரெடுத்து ஆச்சியாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு மரணம் உண்டா என்ன…

    அகல விரிந்திருக்கும் கண்களில் மின்னும் ஒளி, அப்பாவி முகவாகு, அசாத்திய உடல் மொழி என்ற வகையில் கருப்பு வெள்ளை படங்களின் காலத்திலேயே நகைச்சுவை நடிகையாக அசத்தத் தொடங்கிய மனோரமாவுக்கு கவிஞர் கண்ணதாசன் முதல் வாய்ப்பு கொடுத்த படம் மாலையிட்ட மங்கை (1958​). அதில் தொடங்கி இடையறாத வாய்ப்புகளும், பாராட்டுதல்களும், சாதனைகளும் தொடர்ந்தன அவர் வாழ்க்கையில். பிற்காலப் படங்களில் உதறலெடுப்பது போன்ற பாவனை, பல குரல்களில் இழுத்து நீட்டி முழக்கும் வசன உச்சரிப்பு, சொந்தக் குரலில் அசத்தலான பாட்டு என்று புரட்டி எடுக்கத் தொடங்கினார். ஆயிரமா, ஆயிரத்து ஐநூறா யாருக்குத் தெரியும் அதற்கு மேலும் நடித்திருக்கிறார் மனோரமா.

    லாலி வந்தது என்பார் மனோரமா ஒரு திரைப்படத்தில். லாரி என்ற சொல் வராது அவருக்கு. நாகேஷ் கேட்பார், ஸ்கூல்ல ர நடத்தற அன்னிக்கு நீ லீவா என்று! தேன்மழை படத்தில் நாகேஷ், சோ இருவருக்கும் போட்டி, யார் மனோரமாவின் காதலை வெல்வது என்று….கலக்கலான அந்தப் போட்டியில் மனோரமாவின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு அசாத்தியமாக இருக்கும்.

    உனக்கும் வாழ்வு வரும் என்ற படம் (என்று நினைவு). தேங்காய் சீனிவாசனோடு இணை. ஊமையாக நடிப்பார். பெரிய மலை. அதில் ஒரு குருவி இந்த வசனத்தைப் போட்டுப் பின்னிப் பின்னி எடுப்பார் மனோரமா, அவர் வந்து நின்றாலே ரசிகர்கள், பெய்ய மய்யி அதுல ஒரு குய்யி…..என்று கத்தத் தொடங்கி விடுவார்கள். சென்னை பாஷையை அந்தப் பாடு படுத்தி எடுப்பார் படங்களில். அவரது வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டினா நா உடமாட்டேன்…என்ற பொம்மலாட்டப் படப் பாடல் எந்தக் காலத்திலும் அழியாது. வா வா மச்சான் ஒண்ணாச் சேந்து வாராவதிக்கே போய்வரலாம் என்ற சென்னைச் சேரியின் குடிசைக் காதலியின் குரலை இனி எங்கே கேட்பது….

    அதன் அடுத்த முனையில் மடிசார் மாமி பாத்திரம்…சூரியகாந்தி படத்தில் வம்பு பேசும் தோழிகளோடு அவர் அடிக்கும் கூத்து, தெரியாதோ நோக்கு தெரியாதோ என்ற பாட்டில் பன்மடங்கு பெருகி இருக்கும். மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள் இயக்கத்தில் அவர் பல நாடகங்களில் நடித்தார். அதில் ஒன்று சென்னை தொலைகாட்சி நாடகமாக மலர்ந்த என் வீடு என் கணவன் என் குழந்தை! குழந்தைப் பேறு வாய்க்காத வேதனையை மறைத்தபடி குடும்ப உறவுகளோடு நெருங்கி வாழும் தன்மையில் கணவரோடு (கம்பர் ஜெயராமன்) நெகிழ்ச்சியுற பேசிக் கொண்டிருக்கும் மனைவியாக அய்யர் மாமி வேடத்தில் அத்தனை அற்புதமாக நடித்திருப்பார். அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்குமுன் வானொலியில் அவர் அசாதாரண காட்டுக் கத்தல் போடும் பாத்திரத்தில் நடித்த காப்பு கட்டி சத்திரம் ஒலிபரப்பாகும் நேரத்திற்கு ரசிகர்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது.

    சர்வர் சுந்தரம் படத்தில் புதுமுக நடிகராக செட்டில் அறிமுகமாகும் நாகேஷ். இயக்குநராக ரங்காராவ். நாராசம் ததும்பும் உங்கள் நாக்கும் என்று தமிழைப் போட்டுக் கொன்று தின்பார். ஏம்மா மத்த படத்தில் எப்படி வேணும்னா பேசு..எம்படத்தில் தமிழ் பேசும்மா என்று கெஞ்சுவார் ரங்காராவ். போங்க சார் என்ற அவரது நளினமும், துடைப்பத்தை வைத்துத் தரையில் சிலுப்பி எடுக்கும் அவரது நடிப்பும் சிறப்பானவை.

    அன்பே வா படத்தில் எம் ஜி ஆர் யாரென்று தெரிந்தாலும் நாகேஷிடம் காட்டிக் கொள்ளாது அவரைக் காதலிக்கும் குறுகுறு பாத்திரம். சந்திரோதயத்தில் எம் ஜி ஆர் வியந்து பார்த்தபடி காசிக்குப் போகும் சந்நியாசியாக நாகேஷை விரட்டியடிக்கும் பாத்திரம் என பட்டியலிட இயலாத பல்சுவை ரசனை வேடங்களில் அசத்தி இருப்பவர் மனோரமா.

    aman1

    என்றென்றும் பேசப்படும் பாத்திரம் அவருக்குக் கிடைத்ததற்கு அவர் ஏ பி நாகராஜனுக்கு மிகவும் நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார். அதுதான் ஜில் ஜில் ரமாமணியாக ஊரையே கலக்கி எடுத்த தில்லானா மோகனாம்பாள். அவரது நடிப்பை சிவாஜியே ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அந்தப் படத்தில் நிறைய உண்டு. ஒங்க நாயனத்துலதே இந்த சத்தம் வருதா…ஏன் என்று அவர் கெஞ்சலோடு சிவாஜியிடம் கேட்பதும், அவர் மண்டு (மட்டு) என்று நமக்குக் கேட்கும் அளவு அழுத்தமாகச் சொல்லி சிவாஜி நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் காற்றை வருணிக்கும்போது அப்படி லயித்துக் கேட்டு உட்கார்ந்திருப்பார் மனோரமா. வெத்தலவாக்கு, ஜோடா …வசனத்தை யார் மறக்க முடியும்? தன்னை சண்முக சுந்தரத்தோடு (சிவாஜி) இணைத்து மோகனா (பத்மினி​) சந்தேகப்படும் இடத்தில் அவர் நியாயம் கேட்டு அடுக்கும் அவரது உதவி பட்டியல் அசர வைக்கும். மதுரை காரைக்குடி வட்டார வழக்கு அப்படி மணக்கும்.

    சுருளிராஜனை அவர் வேலை வாங்கத் திண்டாடும் டீக் கடை உரிமையாளர் பாத்திரம் தூள் கிளப்பும். காசி யாத்திரை படத்தில் வி கே ராமசாமியை ஏய்க்கும் பாத்திரம். அண்ணன் ஒரு கோயில் படத்தில், எவர்சில்வர் பாத்திரத் திருடியாக அவர் வருகையில் கிளி கத்திச்சி, கிளியனூர்னு நெனச்சி எறங்கிட்டேன், நானே கன்….ன் ….ன் …னிப்பொண்ணு….. என்று கிறக்கம் வர அவர் ரயில் நிலையத்தில் பேசுகையில் ஏ கருணாநிதி, ஏம்மா கிளி கத்தினா கிளியனூரு, கோழி கத்தினா கோழியூரா என்று கேட்பார்.

    விசுவிற்கு போட்டியாக அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சம்பந்தியோடு வாதம் செய்யும் வேலைக்காரப் பெண்மணியாக கம்னு கெட, கம்முனா கம், கம்னாட்டி கோ என்பார்….தில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்று ஜொலிக்கும் பாட்டியாக ஒரு வேடம்….எத்தனை எத்தனை பாத்திரங்கள்…..எத்தனை எத்தனை புதிய தோற்றங்கள்…வித்தியாசமான ரசனையில் அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றல்….

    நாகேஷ், சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், எஸ் எஸ் சந்திரன் ………..என எத்தனையோ நடிகர்களோடு இணையாக அவர் நகைச்சுவை நடிகையாக நடித்த அவர், ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்கத் தொடங்கினார். அம்மா பாத்திரம். ஜெமினி படத்தில் தனது மகனைக் கொன்ற விக்ரம் கோஷ்டியை அடையாளம் கண்டதும் அவர்களோடு நெருங்கிப் பழகி விஷம் வைத்துக் கொல்லக் காத்திருந்து அதைச் செய்ய முடியாது கதறும் இடத்தில் அருமையாக நடித்திருப்பார் மனோரமா. சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி, செந்திலோடு ஈடு கொடுத்து நடித்திருக்கும் அவர், ஜென்டில்மேன் படத்தில் தனது மகனுக்குக் கல்வி கிடைக்க தன்னையே அடுப்பாங்கரைத் தீயில் எரிய வைத்துக் கொள்ளும் உருக்கமான வேடத்தில் நடித்திருப்பார்.

    ஆச்சி மனோரமாவுக்கு மிகவும் மதிப்பு சிவாஜி கணேசனிடம் இருந்தது. பக்தி என்றே சொல்வார் அதை. மனோரமா ஒரு பெண் சிவாஜி என்று வருணித்தார் சோ. அதற்கு அடுத்து கமல் ஹாசனோடு ஈடு கொடுத்து நடிப்பதில் அத்தனை ஆர்வம் காட்டியவர் அவர். அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அய்யய்யோ அய்யோ அய்யய்யோ என்று கத்தி ஜனகராஜை வெறுப்பேற்றும் காட்சி ஒன்று போதும். ராஜா கைய வச்சா ராங்காப் போறதில்ல பாடலுக்குமுன் அவரும் கமலும் தாள லயத்தோடு நடத்தும் வாய்ச் சண்டையும், சிங்காரவேலனில் கமலிடம் சொக்கி ஏமாறும் இடங்களிலும், உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு அண்ணி வேடத்தில் உணர்ச்சிகர பாத்திரத்தில் பேசும் வசனங்களும் அவருக்கே உரித்தானவை. சவால் படத்தில் திருடக் கற்றுக் கொடுப்பவர்.

    அண்ணாமலை, அருணாசலம் படங்களில் ரஜினியோடு நடித்த மனோரமா, குரு சிஷ்யன் படத்தில் போலீஸ்காரராக வரும் வினு சக்ரவர்த்தியின் மனைவி வேடத்தில் அட்டகாசம் செய்திருப்பார்.தளபதியில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலில் ரிதத்திற்கு ஏற்ப நடனத்தை எடுப்பார். சின்னத்தம்பி படத்தில் வெகுளி மகன் பிரபுவோடு விதவைத் தாய் வேடத்தில் அத்தனை பரிதவிப்பைக் கொண்டு வந்திருப்பார்.

    உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா …. (படம்: பந்தாட்டம்​) என்று இருமி இருமி சொந்தக் குரலில் பாடும் வேடமானாலும், அவரே மிகவும் ரசித்த பாத்திரமான சத்யராஜைக் காதலிக்கும் வயதான பெண்மணி வேடமானாலும் (நடிகன்) அவர் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். 7 ஜி ரெயின்போ காலனியில் மிகச் சிறு பாத்திரமே ஆனாலும் சின்னஞ்சிறுசுகள் தப்பு பண்ணப் போகுதுங்களே என்று திடுக்கிடும் முகத்தின் மொழி முக்கியமானது.

    தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்குமுன் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பாட்டுக்களால் அமைந்த ஒரு விடுகதை போட்டி ஒன்றில் எதிரும் புதிருமாக நடத்தப்பட்டது. அதில் மனோரமா அத்தனை அழகாகப் பாடி இருந்தார். அவ மஞ்ச தேச்சுக் குளிச்சா, அது மழையில கரையவில்ல, அவ சந்தைக் கடைக்குப் போனா வந்த வழியில திரும்பவில்ல…அவ யாரு பேரைக் கூறு என்று பாடுவார் மனோரமா. எதிர்பார்ட்டி விடை தெரியாது முழிக்கவே, அவ அழகாச்சே, பேரு எலுமிச்சே என்று விடையையும் பாட்டாகவே பாடி இருப்பார் மனோரமா. நரசுஸ் காப்பி விளம்பரத்தில் மடிசாரோடு ஊஞ்சலைப் பிடித்தபடி ஒயிலாக நின்றவண்ணம் தேங்காய் சீனிவாசன் பேசும் (வட்டாவி விட்டு ஆத்தி…..) வசனத்தை அத்தனை பெருமிதத்தோடு கவனிக்கும் அவர் முகபாவம் உயிரானது.

    தமிழ் வசன உச்சரிப்பின் திருத்தம், ஏற்ற இறக்கம், நயம் அனைத்தும் அவர் நாவில் குடி கொண்டிருந்தது. புறமுதுகிட்டு ஓடுகையில் அடிபட்டு இறந்தானா என் மகன் அய்யகோ என்று போர்க்களத்தில் புகுந்து மார்பில் பாய்ந்த வேல் தான் முதுகைத் துளைத்தது என்று அறிந்து பெருமிதம் பொங்கக் கதறும் புறநானூற்றுத் தாய் வேடத்தில் கலைஞர் வசனத்தை உச்சரிப்பதில் பெயர் பெற்றிருந்தவர் அவர். மைல் கற்கள் வழி நெடுக கம்பீரமாக ஊன்றப்பட்ட மிக நீண்ட நெடுஞ்சாலை அவரது கலையுலக பங்களிப்பு.

    ‘ஏ தில்லாங்குமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ஷோக்காப் பாட்டு பாடுவேன் நேக்கா ஓட்டம் ஓடுவேன்’ என்று எல் ஆர் ஈஸ்வரி அதிரடிக் குரலில் பாடிக் கொடுத்த பாட்டுக்கு மேடையில் சதிராடி ரோசா ராணி என்று பெயர் மாற்றிக் கொண்டுவிடும் ஜில் ஜில் ரமாமணி அடுத்தடுத்த தலைமுறை தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் நிரந்தரமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் நடித்தபடியும் நிலைத்து நிற்பார்.

    &&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share
  • எப்போதும் நினைவை ஆட்கொள்பவரின் நினைவலைகள்…….

    எஸ் வி வேணுகோபாலன்

    bharathiyar

    தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே நினைவுக்கு வருகிறது. குயில் பாட்டையும், பாஞ்சாலி சபதத்தையும் அதனால் தான் ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு முறையில் கொண்டாடி வாசித்துக் கொண்டிருப்பது.

    சென்னை புறநகர் ரயில் பயணத்தின்போது ஏதேனும் பொருள்களை விற்றுக் கொண்டுவரும் சுவாரசியமான சிலரைப் பார்க்கலாம். வரைபடங்களை விற்பவர் ஒருவர், அதுபற்றி விவரிப்பதே வித்தியாசமாக இருக்கும். தேசத்தின் ஆறுகள் எத்தனை, என்னென்ன இயற்கை வளம், மாநிலத் தலைநகரங்கள் பெயர் எல்லாம் தரப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொன்றாக சுவையாக சொல்லிக் கொண்டே செல்பவர், கொஞ்சம் நிறுத்தி, நான் இந்திய வரைபடத்தைத் தான் விற்கிறேன், தப்பில்லை, நாட்டைத் தான் விற்கக் கூடாது என்பார். அவரது விற்பனைக்கான கவன ஈர்ப்பு அது. ஆனால் உண்மையில் எத்தனை முக்கியமான கவன ஈர்ப்பு!

    சம கால நடப்புகள்தானே நமது அன்றாடப் பேச்சில் சாதாரணமாக பிரதிபலிக்கிறது ! நாடாளுமன்றக் கூட்டுத் தொடர் நீட்சி இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதை நாளேட்டில் வாசிக்கும் அன்பர் ஒருவர், நல்ல வேளை நாடு தப்பியது என்று மனத்திற்குள் சொல்லிக் கொள்கிறார். அடுத்த நிமிடம், அய்யோ, பாவிகள் அவசர சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்களே என்று முணுமுணுக்கிறார். இப்போதைக்குத் தலை தப்பி இருந்தாலும் நிலப் பறிப்பு விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி இருக்கிறதே. மகாகவியின் பாஞ்சாலி சபதம் நம் நெஞ்சில் சுழலத் தொடங்குகிறது.

    கடந்த சில பத்தாண்டுகளில் நாட்டில் அதிகம் சுதேசி சுதேசி என்று பேசியவர்கள்தான் இப்போது ஆட்சியில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் விற்றுக் கொண்டிருப்பவர்கள். நடிப்பு சுதேசிகள் என்ற சொற்களை மகாகவி அப்போதே வைத்துப் புனைந்திருக்கிறார். அற்ப பிரச்சனைகளுக்காக பிரிந்து கிடப்பவர்களை எண்ணித் தான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று வெடித்தார் அவர். பயமெனும் பேய்தனை அடிக்கவும், பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடிக்கவும் அறிவுறுத்திய அவரது குரல் இன்றும் எவ்வளவு தேவைப்படுகிறது! இங்கே திரும்பினாலும், அங்கே பார்த்தாலும் எங்காவது வாசிக்கப்பட்டோ, ரசிக்கப்பட்டோ, மேற்கோள் காட்டப்பட்டோ கலந்திருக்கின்றன அவரது கவிதைகள்.

    நமது பண்பாட்டு வெளியைப்போல் புண்பட்டுக் கிடக்கும் இடம் வேறு ஒன்று உண்டா தெரியவில்லை. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று யாரை வழக்கப்படுத்துவது இப்போது? படிப்பு என்பது பாடச் சுமை என்று பொருள்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம். குழந்தைகளைக் கொட்டடியில் அடைப்பதும் ஒன்றுதான், வெளிச்சமோ, காற்றோ புக முடியாத வகுப்பறைகளில் சிறைப்படுத்துவதும் ஒன்றுதான். வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்றார் அவர். தமிழ் மண்ணில் தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளியில் படிக்கின்றனர் நமது குழந்தைகள். இன்புறும் வேளையில் மட்டுமல்ல, எதிர்கொள்ளும் மோசமான நடப்புகளின் போதும் அவர் பாடல்களில்தான் நாம் முட்டிக் கொள்கிறோம்.

    அறிவியல், வரலாறு, கதைகள், கவிதை தொகுதிகள் என்று விரிந்திருக்கும் புத்தகக் கடையில் தற்செயலாக பத்து நிமிடங்கள் நின்று கவனித்தால் ராசி பலன் புத்தகங்களே சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சோதிடம் தனை இகழ் என்றார் மகாகவி. பொருளாதார ஏற்றத் தாழ்வு, நிச்சயமற்ற எதிர்காலம்…. பந்தயக் குதிரைகளாக வெறியூட்டப்பட்ட வாழ்க்கைக் களத்தில் மூட நம்பிக்கைகளும், ஜாதக பலன்களுமே புகலிடமாகின்றன. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ, பல தோற்ற மயக்கங்களோ என்று பாடிய பாரதி, அந்தக் கவிதைக்கான முன்னுரையில் இவ்வுலகம் மாயை என்று சொல்வோரைப் பகடி செய்கிறார். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் தேடித் தேடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் நமது நவீன சாமியார்களோ மாயை என்று சொல்லிக் கொண்டே சொகுசான ‘கார்பொரேட்’ குடில்களில் அமர்ந்து அருள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

    பிள்ளைகள் பெற்றதப் பூனை, அவை பேருக்கொரு நிறமாகும் என்று ஒரு வெள்ளை நிறப் பூனையை வருணித்த மகாகவி, எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ, இதில் ஏற்றம் என்ன தாழ்வு என்ன என்றும் கேட்டார். சாதியின் பெயரால் இன்றும் இரத்த வெள்ளத்தில் மனிதம் மூழ்கடிக்கப்படுகிறது. ஆதிக்க உணர்வும், ஒடுக்குமுறையும் மரபணுவிற்குள் ஊன்றப்பட்டிருக்கிறது. கீழ்சாதிப் பயலைப் பற்றி பாடத்தில் என்னத்துக்குப் படிக்க என்று பாட புத்தகங்களில் இருந்து வரலாறு கிழித்தெடுத்துக் கொளுத்தப் படுகிறது.

    பாலின சமத்துவம், அரசியல் சமூக பண்பாட்டுப் பள்ளியில் தேர்வுக்குக் கேள்விகள் வராது என்று ஒதுக்கப்பட்ட பாடம். சுவாரசியம் அற்ற விவாதப் பொருள். நிறைவேற்ற வேண்டாத தீர்மானம். நடைமுறைப் படுத்த வற்புறுத்தல் அற்ற விதிமுறை. கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும் உணவுத் தட்டு. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை, ஆனால் இணையில்லை என்று மகாகவியின் கவிதை எப்போதோ உரு மாற்றி வாசிக்கப்படுகிறது.

    ஆனால், சோர்வுக் கஞ்சி காய்ச்சும் கலயம் அல்ல மகாகவியின் கவிதை அடுப்பு. அது வெம்மையைத் தணித்து உற்சாகத் தெம்பூட்டும் ஆடி மாதக் கூழ் வார்க்கும் அமுத சுரபி! போராட்டக் கனலை ஊதி எழுப்பும் குழல். நம்பிக்கை நாற்றுக்கு வார்க்கும் நீர். அதன் வாசிப்பு அனுபவம், மாற்றங்களுக்கான தேடலுக்கு வாசல் வரை வந்து வழியனுப்பும் ஒரு தாயின் பரவச வழியனுப்புதல்.

    இந்த நினைவு நாளில் மட்டுமல்ல, எப்போதும் நினைவில் இருப்பவை பாரதி குறித்த சிந்தனை அலைகள்.

    &&&&&&&&&&&&&&&

    Share
  • எங்கேயும் எப்போதும் சங்கீதம் அவர் பெயர்

    எஸ் வி வேணுகோபாலன்

    msv_2476658g
    “ஆபட்ஸ்பரி திருமண மண்டபம்” என்ற பெயரைக் கேட்டதுமே, எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத தி நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடை இல்லத் திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் நாங்கள் புறப்பட்ட எழுபதுகளின் காலம் மறக்க முடியாதது. இத்தனைக்கும் பத்திரிகை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான – அந்தமானில் வர்த்தகம் செய்துவந்த ஒரு குடும்பத்துக்குத்தான் வந்திருந்தது. இருந்தால் என்ன, எப்படியோ அந்த அமர்க்களமான அழைப்பிதழ் எங்கள் கண்ணிலும் பட்டுவிட்டது. சென்னையின் பிரசித்தமான அந்த மண்டபத்தை நேரில் பார்த்துவிடுவது, தடபுடலாக இருக்கப் போகும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பது இவை மட்டுமல்ல எங்கள் நோக்கம். வரவேற்பில் இசை விருந்து; எம் எஸ் விஸ்வநாதன் குழுவினர் என்று போட்டிருந்ததே மிகப் பெரிய காரணம். அடேங்கப்பா, அவ்வளவு பெரிய இசையமைப்பாளரை அருகே பார்த்துவிட முடியுமா, திரைப்படத்தில் வாசித்த அதே இசையை மேடையிலும் கேட்க முடியுமா, அப்படியானால் நமக்கு உயிராயிருக்கும் பாடகர்களும் அல்லவா வந்து இறங்குவார்கள்….அட்ரா சக்கை விடக் கூடாது என்ற தீர்மானத்தோடு போய் இறங்கினோம்……வாழ்நாள் மறக்க முடியாத இசை விருந்தை அருந்தினோம் அன்று!

    கச்சேரியின் தொடக்கத்தில், அந்தக் குள்ளமான மனிதர் இசைக் கருவிகளின் நடு நாயகமாக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும் சிட்டிகை போட்டு ஒன டூ த்ரீ சொல்லவும், டண்டன் டண்டன் டண்டன் டண்டன்…..ஆஹா…காதலிக்க நேரமில்லை படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம்….முழுக்க முழுக்க இசைக் கருவிகளின் வாசிப்பிலேயே கொடி கட்டிப் பறக்க, இந்த மனிதர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் கொண்டே இருக்கவும், பாடல் முடியும்போது இரண்டு கைகளையும் குறுக்காகக் கொண்டுபோய் முடிச்சு போட்டு நிறுத்தவும் பாடல் நிறைவடையவும் அத்தனை துல்லியமாக எங்கள் கண் முன்னே நிகழ்ந்தது….வயலின் வாசிப்போரும், தபலாக்காரர்களும், பேண்ட் இசைப்போரும், புல்லாங்குழல் கலைஞரும், இன்னபிற வாத்தியக்காரர்களும் அவரது கண்ணோடு கண்ணினை நோக்கியவாறே தங்கள் இசைப்படகை அசாத்தியமாக செலுத்திக் கொண்டிருந்த காட்சி, ஓர் இசையமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்டாற்போல் அத்தனை இன்பமாய் அமைந்தது.

    இசைக் கச்சேரிகளின்மீது பித்துப் பிடிக்க வைத்த அந்த ஒரு காட்சி, இசையமைப்பாளர் என்ற கலைஞர் குறித்த திணறடிக்கும் அனுபவமாகவே உள்ளிறங்கியது. அதன்பின் எந்தப் பாடலை வானொலியில் கேட்டாலும்கூட, மனத்திற்குள்ளே ஓர் இசைக்குழு மொத்தமாக மானசீகமான இயங்கி வாசிக்கத் தொடங்குவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எத்தனை நூறு பாடல்கள், எத்தனை எத்தனை இசைத்தட்டுகள், எத்தனை எத்தனை இசைக் கச்சேரிகள்….ஆனால் எம் எஸ் வி உள்ளிருந்து நெறிப் படுத்திக் கொண்டே இருக்கும் இசைதான் அவையனைத்தும்.

    மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ, தனது கைகளில் வழங்கப்படும் ஒரு கவிதையை அதன் உயிர்மூச்சைத் தன்னுள் இழுத்துக் கொண்டு உயிர்த் துடிப்பான வகையில் அதன் நயங்கள் அனைத்தும் மின்னித் தெறிக்கத் தக்க பாடலாக உருமாற்றித் திருப்பிக் கொடுக்கும் ரசவாதத்தை எம் எஸ் வி ஓயாமல் செய்து கொண்டே இருந்தார். எத்தனை எத்தனை உணர்வுகள், என்னென்ன உணர்ச்சிகள், அவற்றின் பாவத்தை அப்படியே இசையில் நனைத்து வழங்க முடிந்தது அவருக்கு. ஒரே திரைப்படத்தில் முற்றிலும் முரண்பட்ட வெவ்வேறு காட்சிகளுக்கான பாடல்களுக்கான இசையை அத்தனை அபாரமாக கொண்டுவரத் தெரிந்த மேதை எம் எஸ் வி. தவப்புதல்வன் படத்தில், சிவாஜி கணேசன் கேபரே நடனத்திற்கு இசைத்துப் பாடுபவர். ராண்டார் கை மற்றும் வாலி கூட்டு உழைப்பில் தயாரான லவ் இஸ் ஃபைன் டார்லிங் என்று தொடங்கும் அந்தப் பாடலின் துள்ளாட்டம் ஒரு பக்கம். கிண்கிணி கிண்கிணி கிணி எனும் கிருஸ்துமஸ் தாத்தா பாடல் ஒரு சுவை என்றால், உலகின் முதலிசை தமிழிசையே என்ற போட்டிப் பாடல், பிறகு இசை கேட்டால் புவி அசைந்தாடும்….மிகவும் கொண்டாடப்படும் பாடல்.

    இரட்டையராக விஸ்வநாதன் – ராமமூர்த்தி கட்டியாண்ட இசைக் கோட்டையிலிருந்து ஆயிரத்தில் ஒருவனும், புதிய பறவையும் காலகாலத்திற்கும் பேசப்படும் பாடல்களைக் கொண்டவை. உன்னை நான் சந்தித்தேன் பாடலில் குழையும் பி சுசீலாவின் குரல், பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டிக் கேட்பதாக பரிணாமம் பெற வைத்த மேதைமை அவர்களுக்கு இருந்தது. ஓடும் மேகங்களே என்று தூதுவிட்ட டி எம் எஸ் குரலை, எங்கே நிம்மதி என்று அலறித் தவித்துத் தத்தளித்துக் கதற வைத்த திறமை அது. தனியே வந்தபிறகு, எம் எஸ் வியின் அடுத்த பரிமாணம் துலங்கத் தொடங்கியது. ரீ ரிகார்டிங் எனப்படும் பின்னணி இசையில், ஒலிச்சித்திரத்தை வானொலியில் கேட்கத் தொடங்கும்போதே, படம் முழுக்க பரவி விரவும் குறிப்பிட்ட இசைக்கோவை மூலம் அடையாளப்படுத்தும் அவரது லாவகம் அருமையானது. தங்கப்பதக்கம் படத்தில் பாத்திரங்களின் சிக்கலான சந்திப்புகளின் போதெல்லாம் இடம் பெறும் அந்த வயலின் இசை எப்போது ஒலிக்கும்போதும் கண்களில் நீரை வரவழைக்கத் தக்க உணர்ச்சி தூண்டுதளைச் செய்து கொண்டிருப்பது.

    எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று பல்லவியில் தொடங்கி சரணங்களில் பயணம் செய்யும் பாடலினூடே ஒலிக்கும் இசையின் சமன்பாடு உருக வைக்கவும், சிலிர்க்கச் செய்யவும், கொதிக்க வைக்கவும், கொதிநிலையைத் தணிக்கவுமாக என்னென்னவோ ஜால வித்தைகளைச் செய்து கொண்டிருக்கும் இசையமைப்பை எம் எஸ் வி எண்ணற்ற வகைகளில் பரிசோதனை செய்தபடி ரசிகர்களுக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். பல்லவியில் விடுபடும் சொற்கள் மீண்டும் சரணத்தில் கலந்து தழுவிக் கொள்ளும் இணைப்பு இசையில் தபலாக்களின் முடிச்சு தாவித் தழுவிக் கொண்டாட வைப்பதாயிருக்கும். கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள்) பாடலில் வயலினும், மிருதங்கமும் கதாபாத்திரங்களாகவே மாறி ஒரு முடிவற்ற உரையாடலை நடத்திக் கொண்டிருக்கும். மரோ சரித்ரா எனும் கே பாலசந்தர் அவர்களது தெலுங்குப் படத்தின் பாடல்களை தமிழ் ரசிகர்கள் அனாயாசமாக முணுமுணுக்க முடிந்ததில் எம் எஸ் வியின் இசை மிகப் பெரிய பங்கு வகித்தது. ‘ஏ திக பூவனு ஏ கொம்ம தேட்டினு கலிபிந்தி ஏவிந்த அனுபந்தமு’ பாடலும், ‘பலே பலே மகாடிவோய் பங்காரு நா சாமிவோய்’ பாடலும் காலத்தால் அழியாதவை.

    பாடலின் தொடக்கத்திலும், இடையேயும் வரும் ராக ஆலாபனை பாடலுக்கு கம்பீரம் சேர்ப்பது. தெய்வம் தந்த வீடு (ஜேசுதாஸ்-அவள் ஒரு தொடர்கதை), பூ மாலையில் ஓர் மல்லிகை (ஊட்டிவரை உறவு)….என்று மிகப் பெரிய பட்டியல் அது. சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் (டி எம் எஸ் – பி சுசீலா: எங்கிருந்தோ வந்தாள்) பாடலில் சிரிப்பையே ஸ்வரங்களில் கொண்டுவந்திருப்பார் எம் எஸ் வி. தானே படிய ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ (முத்தான முத்தல்லவோ) பாடலில் அவரது சிரிப்பும் சங்கீத சிரிப்பாக வந்திருக்கும். தமிழ்ப் புலமையும், பேரும் பெற்றிருந்த சம காலக் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி இருவரிடையேயும் தொழில்முறை நட்பும், தோழமை நேயமும் பாராட்டி கருத்தொற்றுமையோடு பல நூறு பாடல்களை உருவாக்கிய சாதனை அசாதாரணமானது. ஆனால் அந்தச் செருக்கு தலைகாட்டாத அவரது எளிமைதான் பாமர ரசிகர்களின் நெஞ்சில் அவரைக் குடியமர்த்தி இருப்பது.

    பாடகராக அவரது குரல் தனித்துவம் பெற்றிருந்தது. நீ இல்லாத இடமே இல்லை எனும் அல்லா அல்லா பாடல் ஒரு போதும் மறையாது எனில், கண்டதைச் சொல்லுகிறேன், சொல்லத்தான் நினைக்கிறேன், சம்போ சிவசம்போ, உனக்கென்ன குறைச்சல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் அமைந்தவை. உருவங்கள் மாறலாம் படத்தில் இடம் பெற்றிருந்த இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்திய திருநாயகா எனும் பாடல் மனித வாழ்வின் சொந்த விசாரணைக்கு ஏற்ற குரலில் ஒலிப்பது. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் (சிவகாமியின் செல்வன்) உருக்கம் மிகுந்த குரலில் ததும்புவது. நடிகராக அவர் அறியப்பட்ட சில படங்களில் அவரது தனி முத்திரை இருந்தது.

    தன்னோடு ரஷ்யப் பயணத்தில் உடன்வந்த எம் எஸ் வி, மாஸ்கோ ம்யூசியத்தில் குழந்தையைப்போல் இது என்ன, அது என்ன என்று அப்பாவியாகக் கேட்டு வந்தாராம்; பிறகு, அங்கிருந்த மிகப் பெரிய பியானோ கருவியைக் கண்டதும் சிறப்பு அனுமதி கேட்டுப் பெற்று எந்த சிரமமும் இன்றி அதை வாசித்துக் காட்டியபோது வழிகாட்டியாக வந்தவர்களும், ரஷ்யர்களும் அதிர்ந்து கொண்டாடியதை கண்ணதாசன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். மேதைமைக் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன். பாடகர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர், கவிஞர்களின் சொற்களுக்கு அழியாத வடிவம் அளித்தவர், படங்கள் பேசப்படக் காரணமாக இருந்தவர், விருதுகளைக் கடந்த அங்கீகாரத்தோடு விடை பெற்றுச் சென்றிருக்கிறார்.

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்பதே அவரது மூச்சுக் காற்றாக இருந்திருக்கிறது. அவர் மறையவில்லை. காற்றில் கலந்திருக்கிறது அவர் உயிரும் ஓர் இசைக் கோவையாக.

    ***************

    நன்றி : சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்

    Share
  • உடலியல் உளவியல் அராஜக அரசியல்

    எஸ். வி. வேணுகோபாலன்.

     

    யோகாவை முன்னெடுக்கும்
    உடலியல் உளவியல் அராஜக அரசியல்

     

    modi doing yogaஉடலினை உறுதி செய் என்றார் மகாகவி பாரதி. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற சித்த மரபில் அவரது புதிய ஆத்திச்சூடியில் வந்து விழுந்த வாக்கு அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது காது அறுந்து விழும் வண்ணம் பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றது. நாம் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துக் கொண்டிருப்பது. உடற்பயிற்சி என்பது தொடக்கநிலை பள்ளிக்கூடங்களிலிருந்தே சொல்லித் தரப்படும் ஒரு முக்கியமான வளர்ச்சி சூத்திரம்.

    எல்லாவற்றையும் விற்பனைப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் நவீன தாராளமய பொருளாதாரத்தின் காலத்தில், குழந்தைகளே, நமது அடுத்த பாடம், யோகா என்று கரும்பலகையில் எழுதிப் போடுகிறார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. உடனே அமைச்சரவை, அதிகார வர்க்கம், தொடர்புள்ள மற்றும் தொடர்பே இல்லாத துறைகள், ஊடக அலைவரிசைகள், வரிசையில் நிற்கும் ஊதுகுழல்கள் எல்லாம் மைதானத்திற்கு விரட்டுகின்றனர் மக்களை.

    தலைநகரில் நீண்டகாலம் தடை செய்து வைத்திருந்த ராஜ்பாத் எனப்படும் ராஜபாட்டையில் ஜூன் 21 அன்று காட்சிப்படுத்தப் படுகிறது யோகா பயிற்சி. ‘நமது பாரம்பரியக் கலை, நமது ஆன்மிக மரபு, நமது புனித பயிற்சி, இதோ, சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது’ என்ற உற்சாகக் கூச்சல்களோடு திரை விழுகிறது. எல்லாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம் என்று வழக்கம்போல் மீள்கிறது எதையோ தேடிப்போன சமூகம்.

    யோகாவுக்கு இப்போது என்ன வேலை என்று ஒருவர் கேட்டல், ஏன், யோகா செய்தால் உடம்புக்கு லாபம்தானே எதற்கு விதண்டாவாதம் என்கிறது வேறொரு குரல். யோகாவை மதக் கண்ணோட்டத்தில் நாங்கள் அறிமுகப் படுத்துவோம், மதக் கண்ணோட்டம் இன்றிப் பார்க்க உங்களுக்கு அறிவில்லையா என்றும் கேட்கப்படுகிறது.

    யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல என்பதை, யோகா நிபுணர்களே உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யோகாவின் அடிப்படைக் கூறுகளாகப் பேசப்படும் எட்டு அம்சங்களில் ஒன்றுதான் உடற்பயிற்சி. அதையும் இப்படி ஊரைக் கூட்டிவைத்துக் கொண்டு மேடையில் இருந்து கற்பித்துப் பயிற்சி கொடுப்பது அதன் இயங்கியல் விதிக்கே புறம்பானது என்ற அவர்களது கூற்றும், ஜூன் 21 எழுப்பப்பட்ட கூச்சலில் அமுங்கிப் போனது.

    நாம், யோகாவைப் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. அதை நிபுணர்கள் பார்த்துக் கொள்ளட்டும். யோகா கலையைக் குறித்தோ, உடற்பயிற்சி குறித்தோ பொதுவாக யாரும் மாறுபட்டுப் பேசப் போவதுமில்லை. சங் பரிவாரத்தின் நோக்கமும் யோகா இல்லை. இன்று காவிக் கூடாரம் கையில் எடுத்திருக்கும் உடலியல் உளவியல் அரசியல் விஷயங்களைத் தான் நாம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.

    அதற்குமுன் வரலாற்றின் இரண்டு முக்கிய செய்திகளைப் பார்ப்போம். ஒன்று சர்வாதிகாரி இட்லர் தொடர்பானது. இரண்டாவது, முசோலினி குறித்தது. அழித்தொழிப்பு கொள்கையையும், கோட்பாட்டையும் தனது அடிப்படை இயக்குவிசையாகக் கொண்டிருப்பது ஆர் எஸ் எஸ். இந்த அமைப்பை நிறுவியவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் ஆகியோர், வரலாற்றில் படு பயங்கரங்களை நிகழ்த்தியவர்களாக பேசப்படும் இந்த இரண்டு பேரின் தத்துவங்களால், நடைமுறை அரசியலால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை பல அறிஞர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஜெர்மனியில் நாசிசத்தைப் பரப்பிய இட்லர், சாதாரண மக்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக் கையாண்ட அம்சம், உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் வேகக் கற்பித்தலின் ஒரு கட்டத்தில், இளைஞர்களிடையே இனவாத நஞ்சைக் கலந்து ஊட்டினான் இட்லர். இனவெறிக்கு அவர்களைத் தூண்டினான். யூதர்களுக்கு எதிராக இரத்த அணுக்களே கொதித்தெழும் வண்ணம் ஜெர்மானிய இளைஞர்களைத் திரட்டியது நாஜிக் கொள்கை. இட்லரின் சின்னம் தங்களது ஸ்வஸ்திகா சின்னத்தை ஒட்டியது என்று பேசிக் கொள்ளும் சங் பரிவாரம், இட்லர் வைத்த வணக்கம் போன்றே தங்களது வணக்கம் வைக்கும் முறையையும் வைத்திருக்கிறது. ஆரிய இரத்தம், ஆரிய இனம் இவையே தூய்மையானது என்று இவற்றின் பெருமையைத் தாங்களும் கொண்டாடிக் கொள்ளும் வழக்கத்தை ஆர் எஸ் எஸ் கைக்கொள்கிறது.

    இத்தாலியின் ஃபாசிசக் கொள்கையாளன் முசோலினியும் உடற்பயிற்சியைத் தான் முன்னெடுத்தான். ஆர் எஸ் எஸ் இயக்கத்தை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவாருடைய நெருங்கிய நண்பர் பி எஸ் மூஞ்சே, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார். மார்ச் 19, 1931 அன்று நேரடியாக முசோலினியை சந்தித்து உரையாடியதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். தங்களது தேசத்தில் இப்படியான ஒரு இராணுவப் பயிற்சி முறையைத் தங்களது தொண்டர்களுக்குத் தர இருப்பதாக அவரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். மூஞ்சே என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ ஜி நூரானி.

    உடற்பயிற்சி என்பது இங்கே உடலைப் பேணிக் காத்தல் என்பதைக் கடந்து ஓர் அணிதிரட்டலைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எந்த மாதிரியான நோக்கத்தைக் கொண்டது இந்த அணிதிரட்டல் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை.

    உடற்பயிற்சியை ஏற்கெனவே தங்களது ஷாகா (ஷாகா என்றால் கிளை) நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் ஆர் எஸ் எஸ், இப்போது யோகா என்ற பெயரில் ஒரு சமூக அங்கீகாரத்தோடு இந்த அணி திரட்டலுக்கான ஒத்திகை பார்க்கிறது. ஆன்மீக அடிப்படையைச் சொல்லி அதை அரங்கேற்றும் இந்த வேலையில், இந்து மதத்தைச் சாராதவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. வராது போனால், இன்னும் வசதி அவர்களுக்கு.

    மதரீதியான ஒரு படையைத் திரட்டும் தங்களது உள்நோக்கத்திற்கு உகந்த முறையிலான ஒரு பயிற்சியை, மிக சாதுரியமான முறையில் சர்வதேச தினம் என்கிற கூச்சலை எழுப்பி நாடு முழுவதும் ஒரே நாளில் மக்களை இதில் ஈடுபடுத்தும் நோக்கத்தை பா ஜ க அனாயாசமான முறையில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

    அடுத்து கவனிக்க வேண்டியது, வாழும் கலை, யோகா பயிற்சி என்று மிகப் பெரிய வர்த்தக உலகைக் கட்டியாளும் நபர்கள் திடீரென்று பன்மடங்கு உற்சாகத்தோடு சர்வதேச யோகா தினத்தையொட்டி தங்களது கடைகளை விரிக்கத் தொடங்கியதைப் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு யோகா தெரியுமா தெரியாதா என்ற சாதாரண கேள்விக்குப் பின்னால், கணக்கிட முடியாத அளவு காசுக்கான அடிக்கோல் இடப்படுகிறது. விலை போட்டு அறியாத படி கார்பொரேட் சாமியார்கள் தங்களது பரவசமிக்க யோகா முகாம்களை இதோ கடை விரிக்கத் தொடங்கிவிட்டனர்.

    yogisசர்வதேசக் கிளைகளை அவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பயிற்சிகளின் உடலியல், உளவியல் நோக்கம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். எதையும் கேள்விக்கு உட்படுத்தாதே, உன் வாழ்க்கையின் பிரச்சனைகள் உன்னிலிருந்து புறப்படுபவை, உன்னைத் திருத்திக் கொள், உனது எண்ணங்களே எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் என்று மெல்ல மெல்ல போதனைகளை பயிற்சிக்கு வருவோர் ஏற்கும் வண்ணம் மிக நுட்பமாக இந்த வேலைகள் கட்டமைக்கப்படுகின்றன.

    நவீன தாராளமயம், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆட்களாகப் பிரிக்கிறது என்கின்றனர் சமூக விஞ்ஞானிகள். இது குறித்து பொருளாதார மேதை பிரபாத் பட்நாயக் விரிவாக எடுத்துச் சொல்வதுண்டு. உலகமயத்தின் தீங்குகளுக்கு எதிராகத் திரண்டெழ வேண்டிய மனிதத் திரளை இப்படி மழுங்கடித்துத் தங்கள் விதியென்று எல்லாக் கொடுமைகளையும் தின்று செரிக்கப் பழக்கும் மோசடி ஏற்பாடுதான் இந்த ஜகஜ்ஜால கில்லாடி காவியுடை சாமியார்களது பயிற்சி மையங்கள்.

    ஜூன் 21 கொண்டாட்டம், இத்தகைய தகிடுதத்த ஆசாமிகளுக்கு ஒரு சமூக மதிப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் சங் பரிவாரம் சர்வதேச தினமாக யோகா தினத்தை ஐ நா அவையில் தீர்மானம் நிறைவேற்ற வழிவகை செய்தார் என்று நரேந்திர மோடியைக் கொண்டாடுவதன்பின் இத்தனை அராஜக சிந்தனை இயங்குகிறது.

    மூன்றாவது அம்சம் இன்னும் ஆபத்தானது. அதை, நரேந்திர மோடி அரசு மிகத் திறமையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதுதான் திசை திருப்புதல்.

    ஒரு பக்கம் மோடியின் ஓராண்டு ஆட்சியை எடை போட்டு எழுதிக் கொண்டிருந்த ஊடகங்கள், கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்குக் கை கழுவப்பட்டன என்பதைப் பேசிக் கொண்டிருந்த பத்திரிகைகள் அந்த அலசலை அப்படியே ஓர் ஓரத்தில் எடுத்துப் போட்டுவிட்டு, ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன. நீ யோகாவை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா இதுதான் இப்போதைய விவாதப் பொருள். யோகா ஆன்மிக விஷயமா, உடற்பயிற்சி விஷயமா இதுதான் இப்போதைய விவாதக் களம். யோகாவை மத ரீதியாகப் பார்ப்பது யார் – இந்துக்களா, இஸ்லாமியரா, கிறித்துவரா என்பதுதான் இப்போதைய ஊடக அலசல்.

    நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை, பொதுத் துறையைச் சீர்குலைக்கும் சீர்திருத்தங்களை, இயற்கை வளங்களை பன்னாட்டு மூலதனத்தின் வேட்டைக்குத் திறந்து கொடுக்கும் சட்ட திருத்தங்களை, தொழிலாளர் நலனை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கத் துடிக்கும் திருவிளையாடல்களை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காட்டிலும் வேகமாக நிறைவேற்றி வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. தன்னை விட சிறந்த விற்பனை பிரதிநிதி நரேந்திர மோடி என்று மன்மோகன் சிங் மனதார வாழ்த்தி சான்றிதழ் வழங்கி இருப்பதைக் காட்டிலும் வேறென்ன ஆதாரம் வேண்டும்!

    பகவத் கீதை தேச நூலாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்கிறார் அமைச்சர் ஒருவர். இந்துத் தாய்மார்கள் பத்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான் துறவி என்று சொல்லிக் கொள்பவன் ஒருவன். இந்த அராஜகத்தைக் கண்டிப்பதற்குப் பதில் அதன் மீது விவாத மேடை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். மாட்டுக் கறியைத் தடை செய்துவிட்டால், ஒரு மாதத்திற்கு அது சரியா, தவறா என்ற விவாதத்தைத் தேசம் முழுக்க நடத்தவிட்டுத் தடையை ஓசைப்படாமல் அமலாக்கிக் கொண்டிருக்கிறது மராட்டிய மாநில பா ஜ க – சிவசேனா அரசு. உயிர்க்காட்சி சாலையில் சிங்கங்களும், புலிகளும் கோழிக் கறியைக் கொத்தி உயிர் தரிக்க விடப்பட்டதை அதிகம் கண்டு கொள்ளவில்லை ஊடகங்கள். சாதாரண மக்களுக்கு மலிவான உணவு மாட்டுக்கறி என்பதை மத வெறியர்கள் வீதியில் பேசும் பொருள் ஆக்கிவிட்டுத் தங்கள் வேலைக்குப் போய்விட்டனர்.

    indias poorஇப்போதைய மிகப் பெரிய திசை திருப்பலாக யோகா எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு. அடுத்த மாதம் யோகாவை யாரும் கண்டு கொள்ளாமலும் போகலாம். அப்போது விவாதப் பொருளாக, வேறொரு விஷயத்தைத் தூக்கி எறிவார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். வெறும் திசை திருப்பல் மட்டுமல்ல, தொடர்புள்ள விஷயங்களைத் தமது நிகழ்ச்சி நிரல்படி நடைமுறைப் படுத்திக் கொண்டே செல்பவர்கள், இணை கோட்டில் இந்த விவாதங்களை யாரோ நடத்திக் கொண்டிருப்பதை ஓர் எள்ளல் புன்னகையோடு பார்த்தபடி தங்களது அடுத்தடுத்த அராஜக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    வயிற்றுக்குச் சோறிட வேணும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றான் மகாகவி. வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட அல்லது பறிகொடுத்த மக்கள் கோடிக்கணக்கில் உள்ள தேசத்தில், உடற்பயிற்சிக்கான தெம்பு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? அன்றாடப் பாட்டுக்கு அதிகாலையில் எழுந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் சோர்ந்து திரும்பும் மாலைப் பொழுதின் இடையே எந்த நல்ல வேளையில் அவர்களது யோகப் பயிற்சி நடைபெறும்?

    பசியோடிருக்கிறாயா, வேலை கிடைக்கவில்லையா, பிணி போட்டு வருத்துகிறதா, எல்லாவற்றுக்கும் யோகாவில் நிவாரணம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வதைவிடவும் வன்முறை வேறு என்ன இருக்க முடியும்?

    மனித வளர்ச்சிக் குறியீட்டில 187 நாடுகள் வரிசையில் 135வது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. பட்டினிக் குறியீட்டில் 76 நாடுகள் வரிசையில் இந்தியா 55வது இடத்தில் இருக்கிறது. வயிற்றுப் போக்கினால் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. 1000 குழந்தைகளுக்கு 388 குழந்தைகள் என்பது அந்த விகிதம். பிறந்த முதல் நாளே இறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். அந்த எண்ணிக்கை மூன்று லட்சம்! தப்பி வாழ்கின்ற குழந்தைகளில் சரிபாதி எண்ணிக்கை ஊட்டச் சத்தற்றவர்கள்.

    இதுதான் சுதந்திர இந்தியாவின் ராஜபாட்டை. இந்த ராஜபாட்டையில் நின்றுகொண்டு இந்த அவமானகரமான புள்ளிவிவரங்களைப் புரட்டிப் போடும்வண்ணம் மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டியவர்கள், உணவு, உறைவிடம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் உறுதி செய்ய வேண்டியவர்கள் யோகா தினத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தியாவை உலக நாடுகள்முன் பெருமைக்குரியதாக ஆக்குவதாகக் கதை விடுவது, கதியற்ற குடிமக்களை இழிவு செய்வதன்றி வேறொன்றுமில்லை.

    யோகா உடற்பயிற்சியில் ஒரு தவறுமில்லை. அதற்கான வலு உள்ளவர்கள் அதைச் செய்வதும், மேலும் வலுப் பெறுவதும் மறுக்கத் தக்க .விஷயமே இல்லை. ஆனால், யோகாவைத் தங்களது உடலியல் உளவியல் ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்துவோரை மன்னிப்பதற்கில்லை. அதன் ஆபத்தான உள்ளடக்கத்தை, அபாயகரமான வரலாற்று சாட்சியங்களை, அராஜகமான கட்டமைப்பை அம்பலப்படுத்தாமல் – எதிர்த்துக் குரல் கொடுக்காமல் கடந்து போவது நல்லதற்கில்லை.

     

     

    நன்றி: செம்மலர்:ஜூலை 2015

    Share
  • ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

    பிதற்றலும் கவிதையே…..

     

    எஸ் வி வேணுகோபாலன்

    kannadasan2

    கண்ணதாசன் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் சார்..என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவரை அன்றுதான் நான் அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் வாழ்க்கை இணையின் கைக் கடிகாரத்திற்கு அவர் புதிய செல் எடுத்துப் பொருத்திக் கொண்டிருந்தார். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள அந்தச் சிறிய கடைவாசலில் நின்றவாறு வழக்கம்போல் எனக்குப் பிடித்த ஒரு திரைப்படப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது தற்செயலாகத் தொடங்கிய பேச்சின் நிறைவில் மிகப் பெரிய கவிதை ரசிகரை, பாடல் வழிபாட்டாளரை நான் கண்டுகொண்டேன்.

    அந்த எளிய மனிதர், தனது காதல் மனைவியைப் பறிகொடுத்த துயரமிக்க இரவுகளில் வாழ்க்கையின் கசப்பிலிருந்து விடுதலை பெறத் துடித்தபோது, அவரது உள்ளத்தில் கண்ணதாசனின் துன்பியல் பாடல்கள் மாற்றுவினை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவரது கண்களில், தானே கண்ணதாசன்தான் என்பது போன்ற பெருமித வெளிச்சம் மின்னுவதை நான் அதற்குப் பிறகு பலமுறை பார்ப்பதுண்டு.

    இப்படி லட்சக்கணக்கான ரசிக இதயங்களில் கால காலமாகக் குடி இருக்கும் வண்ணம் எப்படி அவரால் ஒரு ரசவாதம் செய்ய முடிந்தது…இத்தனைக்கும் எளிமையோ எளிமையான சொற்களால் நிரம்பித் ததும்புகின்றன அவரது பாடல் மதுக் கிண்ணங்கள். தலைவன், தலைவி, நண்பன், எதிரி, ஊடல், கூடல், காதல், காமம், குறும்பும் சேட்டையும், கனிவும் பரிவும், சிரிப்பு, கண்ணீர், பாசம், வஞ்சகம், அருளுதல் மருளுதல், வேண்டுதல் மீறுதல், கேள்வியும் பதிலும், நெருப்பும் குளிர்ச்சியும்…..என்னதான் பாடவில்லை, கண்ணதாசன்!

    காதலில் தோற்றவன் கடவுளை நொந்து கொள்ளுதல் உலக நியதி, ஆனால், ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும், பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும், அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்…’ என்று (வானம்பாடி) சாபமிட முடிந்தது அவருக்கு. ‘கண்ணனையும் இந்த இடம் கலக்கவில்லையா, இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயம் இல்லையா’ என்று காதல் உருகுதலை வடிக்கவும் முடிந்தது.

    புராண பாத்திரங்களை கதைக்கருவிற்கு ஏற்ப பாடலில் இழைத்துக் கொண்டுவருவதில் பேரார்வம் மிகுந்திருந்தது அவரிடம். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் தனது நண்பனுக்காகப் பெண் பார்க்கச் செல்கையில் அங்கே தனது காதலியைக் கண்டு திடுக்கிடும் நாயகன்முன் அந்தப் பெண் பாடுவதான ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்’ என்ற அற்புதப் பாடலின் இலக்கிய நயம் அசாத்திய சுவை கொண்டிருப்பது. ‘கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே, அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே….’ என்று நிறைவடையும் அந்தப் பாடல் ஓர் அழகு சிற்பம்.

    வாழ்க்கைப் படகு திரைப்படத்தின் ‘உன்னைத்தான் நான் அறிவேன்’ என்ற அருமையான பாட்டின் சரணத்தில், ;காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ, கண்களே பாவம் என்றால் பெண்மையே பாவம் அன்றோ’ என்று கொஞ்சும் சுசீலாவின் குரல், ‘பெண்மையே பாவம் என்றால்..’ என இழுத்து, ‘மன்னவனின் தாய் யாரோ?’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் ரசிகர், கண்ணதாசன் நினைவில் தனது உயிர் மூச்சை ஒரு சொடுக்கு போடும் நேரம் நிறுத்தி இழுத்துக் கொள்வார் அல்லவா…

    ‘நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்ற மிடுக்கோடு கே பாலச்சந்தரின் கதாநாயகி அவள் ஒரு தொடர்கதையாக நடந்து போகும்போதும், ‘தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே’ என்று தங்கையின் உயிரைக் காக்க ஓர் அண்ணன் போராடிக் கொண்டிருக்கும் போதும், ‘இங்கே என் காலம் எல்லாம் முடிந்துவிட்டாலும், ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்’ என்று நிச்சயதாம்பூலத்திற்கு ஒரு காதலன் தவிப்பாய்த் தவிக்கும்போதும் கண்ணதாசன் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பாடல்களில் அரசியலைக் கலந்த அந்த கால கட்டத்தில், காமராசரைக் கருத்தில் கொண்டு பல பாடல்களில் அவரைக் குறிக்கும் சொற்களைப் போட்டு எழுதியவர் கண்ணதாசன். சிவகாமி உமையவளே முத்துமாரி, உன் செல்வனுக்கும் காலம் வரும் முத்துமாரி (பட்டிக்காடா பட்டணமா), நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும், ஆர்ப்பாட்ட அலை ஓசை வரவேண்டும், எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே….(ராஜபார்ட் ரங்கதுரை) என்று செல்கிறது அந்த அலைவரிசை.

    எலந்தப்பயம் (பணமா பாசமா) போன்ற கொச்சையான பாடல்களையும் உள்ளடக்கியதுதான் கண்ணதாசனின் படைப்புலகம். திரைப் பாடல்கள் மூலம் பெற்ற அவரது பாடலின்பம் ஒரு பக்கம். கவிதைகளாக அவரிடமிருந்து பாய்ந்துவந்த பெருவெள்ளம் இன்னோர் அரிய பக்கம். அவரது அறுசீர், எண்சீர் விருத்தங்களின் ஓசைநயம், சொற்களின் வீச்சு, தாளகதி எல்லாம் உள்ளத்தைக் கொள்பவை. கம்ப ராமாயணச் செய்யுளை மிகுந்த ரசனையோடு தனது மேடைப் பேச்சுக்களில் சங்குசக சங்குசக சங்குசக சங்சங் என்று அவர் மெட்டுப் போட்டுச் சொல்வதைக் கேட்டோர் இசைநதி நுரைபொங்க வழிந்தோடும் அவரது உள்ளத்தை நேரில் கண்டிருப்பர்.

    அவரது அரசியல் உணர்வுகளின் மாற்றங்களின் பதிவாகவும் அவரது கவிதைத் தொகுதிகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். திராவிட இயக்கத்தின் செல்லப் பிள்ளையான அவரே, ‘இந்திய மலைகள் தோறும் இந்திரா பேர் கேட்டாயா’ என்றும் எழுதினார் வேறொரு கட்டத்தில். ஆட்டுக்குட்டி முட்டை இட்டு என்ற திரைப்பாடலின் முன் வடிவம், திராவிட நாடு குறித்த அவரது பகடியான, ‘குதிரை ஒரு முட்டையிட கோழி அதை அடைகாக்க குட்டியானை பிறக்கும்….’ என்ற கவிதைதான்.

    எழுபதுகளின் பிற்பகுதியில் குமுதம் இதழில் வாரா வாரம் கண்ணதாசன் எழுதி வந்த கவிதைகள் ரசனை மிக்கவை. கேள்வனே கண்ணபிரானே என்ற தலைப்பிலான கவிதையில், ‘கண்வழி சொற்களும் கைவளை சொர்க்கமும் கள்ளமோ கானலோ தோற்றேன், பெண்மையே பொய்மையோ பொய்மையே பெண்மையோ பேதையர் கூடலை ஏற்றேன்..’ போன்ற இடங்களில் சித்தர் மரபினைக் காண முடியும்.

    “நான்தான் கண்ணதாசன், எனது கதை கவிதை கட்டுரைகளைப் படிக்க கண்ணதாசன் மாத இதழ் படியுங்கள், கண்ணதாசன், சென்னை 17” என்ற கம்பீரக் குரலை எழுபதுகளின் பிற்பகுதியில் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டோர் மறக்க முடியாது.

    தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துவிட்டுப் போன கவிஞர், தான் இறந்த செய்தி கேட்டால் யார் முதலாவதாக வந்து நிற்பார் என்று தான் இருக்கும்போதே பார்க்கத் துடித்த வித்தியாசமான மனிதர், திருப்பூர் தொழிற்சாலை அரவத்தின் நடுவே அமர்ந்துகூட தன்னால் கவிதை எழுத முடியும் என்று சவால் விடுத்த குழந்தை உள்ளம், கண்ணதாசன்.

    முத்தையா என்ற தன்பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்ட கவியரசு, கண்ணனை முன்வைத்து அடுக்கித் தள்ளிய சுவைமிகுந்த கவிதைகளின் ஒளிக் கீற்றுக்கு இந்த எடுத்துக்காட்டு போதுமானது. ஏனெனில், அவர் உள்ளத்தின் எதிரொலி அதில் கேட்கிறது.

    நள்ளிராப் போழ்தினில் நானுமென் கண்ணனும்
    உள்ளுறும் பொருள்களை உரைப்பதுண்டுகாண்
    கள்ளினும் இனியவென் கண்ணன் சொன்னது
    பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே!

    வாழ்வைத் துறக்க முடிவெடுத்த மனிதரையே தனது பாடல்கள் மூலம் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடிந்த கவிஞரின் பாடல்களும் நிரந்தரமானவை ஆகத் தானே இருக்க முடியும்….எந்த நிலையிலும் அவருக்கும் மரணமில்லைதான்!

    *******************

    Share
  • மரணத்தை முன்வைத்து….

    எஸ் வி வேணுகோபாலன்

    நண்பர் ஒருவர் மரணச் செய்தி ஒன்றைச் சொல்வதற்காக தொலைபேசியில் அழைத்தார். ‘இன்னார் போய்விட்டார்’ என்றார். தொடர்ந்து, “நீங்கள் எப்போது போவீர்கள்” என்று அவர் கேட்கவும், “தெரியலியே, வேளை வந்தால் போகவேண்டியதுதான்!” என்றேன். “அய்யய்யோ, என்ன தோழர், என்னென்னவோ பேசுகிறீர்கள். இறந்தவரின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த எப்போது போவீர்கள் என்றுதானே கேட்டேன்” என்றார். நான் சிரித்துக் கொண்டேன்.

    மரணம் என்றாலே அலற வேண்டியதில்லை. அது யாரது இசைவையும், தயார் நிலையையும், முன்மொழிதல் -வழிமொழிதல்களையும், ஏற்புரையையும் கோருவதில்லை. அது நிகழ்கிறது. மரணத்தின் சுவாரசிய ரகசியம், மீதம் இருப்போரை வாழுங்கள் என்று அது கேட்டுக் கொள்வது. அந்தக் குரல்தான் நமக்குச் சரிவர கேட்பதில்லை. ஒவ்வொரு மரணத்திலும் அது மறு ஒலிபரப்பு செய்யப்படுவதை கவனித்தால் மரணம் அல்ல, வாழ்க்கையும் கசந்துபோகாத சூட்சுமம் பிடிபட்டுவிடும் வரம் காத்திருக்கிறது.

    விழுப்புரம் புத்தகக் கண்காட்சி விழா ஒன்றில் பங்கேற்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த அனுபவம் மறக்க முடியாதது. டி வி எஸ் 50 வாகனத்தில் எளிமையாக வந்து இறங்கினார் நகராட்சி தலைவர் திரு ஜனகராஜ். என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளுமுன்பாகவே, “சார் கொஞ்சம் என் கூட வாங்க, உங்களுக்கு ஒண்ணு காட்டணும்” என்று அழைத்துப் போனார்.

    டிசம்பர் மாதத்தின் எதிர்பாராத மழை, வீதிகளின் சேற்றைக் குழைத்து வைத்திருந்தது. உடைத்துக் கொண்டிருந்த சாலையில் ஆட்கள் பணியில் இருந்தனர். அவர்களை விரைந்து நிவாரணப் பணிகளை முடிக்குமாறு கண்டிப்பான குரல் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு புதிய கட்டிடத்தின் முன் கொண்டு நிறுத்தினார். பெரிய காம்பவுண்ட் சுவர். உள்ளே மரங்கள். செடி கொடிகள். மனத்தைக் கவரும் சூழல் அது. மூடி இருந்த கதவுகளின் அருகே பெரிய பலகையில், நவீன தகன மேடை என்று எழுதி இருந்தது. வேறொன்றுமில்லை, சுடுகாட்டிற்கு அழைத்து வந்திருந்தார் நகரத் தந்தை.

    “இடம் அருமையாக இருக்கிறதே, இதில் எரியக் கொடுத்து வைத்த முதல் பாக்கியசாலி யாரோ?” என்று அவரைக் கேட்டேன்.

    “இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை சார்” என்ற அவரிடம், “நான் வெளியூர்க்காரன், எனக்கு வாய்ப்பு இருக்காது” என்றேன்.

    “என்ன சார், இப்படி சொல்றீங்க!” என்றவரிடம், “ஆமாம், நீங்கள் மட்டும் முன்ன பின்ன தெரியாத ஆளை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து காண்பிக்கலாம், நான் சொல்லக் கூடாதா?” என்றேன். வஞ்சனையில்லாமல் சிரித்தார்.

    மரணம் ஒரு சுவாரசியமான பேசுபொருளாக இருக்கிறது. மரணத்தைப் பார்ப்பது வேறு. சிந்திப்பது முற்றிலும் வேறு.

    மரணத்தை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்று தொடங்கும் திருக்குறளை விடவா?

    மரண இல்லத்தில் நிலவும் பேரமைதி, வெளியே பேசப்படும் செய்திகள், சமாதான மொழி, அடுத்தடுத்து நகரும் காரியங்கள் எல்லாம் வாழ்க்கையின் இயல்பை நோக்கி விரைகின்றன. ஒரு மரண வேளையில் எத்தனையோ முந்தைய மரணங்கள் நினைவுக்கு வருகின்றன – ஒரு விபத்தின்போது பேசப்படும் வேறு விபத்துக்களைப் போல.

    ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில நிலைகுலைய வைக்கின்றன. சில குற்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றன. சில விடுதலையடைந்த உயிரின் அவஸ்தையை வழியனுப்ப வைக்கின்றன. சில மௌனத்தில் ஆழ்த்திவிடுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்வது சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு நிர்ப்பந்தமாகவும், சிலருக்கு தேடலாகவும் அமைகிறது.

    மரணத்தின்முன் மௌனமாக நிற்கும்போது மனிதர்கள் கொஞ்சம் சுயமிழக்க இயற்கை வாய்ப்பு நல்குகிறது. சொந்த கிரீடங்களின் பளுவிலிருந்து விடுவிக்க முயல்கிறது. ஏற்கெனவே இறந்த மனிதர்களிடமும், இப்போது நேர்ந்திருக்கும் புதிய மரணத்திடமும் சொல்ல விடுபட்டவற்றை, கேட்கத் தவறியவற்றை, பேசாது தவிர்த்தவற்றை, வழங்க மறுத்த கருணையை, பெற இயலாதுபோன மன்னிப்பை, பகிர வெறுத்த புன்னகையை, இன்ன பிறவற்றை அந்த நொடியில் சரி செய்துகொள்ளப் பார்க்கும் மனங்கள் அப்போதாவது இலேசாகும் தருணத்தை வரமாக்கிக் கொள்கின்றன. அப்போதும் தங்களது மேலாதிக்க மனநிலையில் மிதப்பவர்களை மரணங்கள் பெருந்தன்மையுடன் மன்னிக்கவே செய்கின்றன. இறந்த மனிதரின் வங்கிக் கணக்குகளை முடித்துக் கொடுக்கும் சமூகம், அவரோடு இருந்த வம்பு வழக்குகளை முடித்துக் கொள்ள இசைவதில்லை என்பது மரணத்தைக் கடந்தும் தொடரும் துயரம்.

    ஒரு நகைச்சுவை துணுக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது. வெளியூர்ப் பயணம் செல்லும் கணவன், இப்படி ஒரு மின்னஞ்சலை மனைவிக்கு அனுப்பி வைக்கிறான்: “கண்ணே, நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன். நீ நம்பமாட்டாய். எதிர்பாராத வசதிகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. அருமையான தங்குமிடம். இணையதள இணைப்பு. குளிர்பதன அறை. அருமையான வேலையாட்கள். உனக்கும்கூட இங்கே ஏற்பாடு செய்துவிட்டேன். நீ ஏன் உடனே புறப்பட்டு என்னிடம் வந்து சேரக் கூடாது?”

    அவருடைய அவசர தட்டலில், இந்த மெயில் வேறொரு பெண்மணிக்குச் சென்றுவிடுகிறது. அவரோ அதைத் திறந்து படித்து அதிர்ந்துபோய், மகனே இங்கே வாயேன், அய்யோ என்ன இது…என்று அலறுகிறார். மகனும் அதைப் படித்ததும் அதிர்ச்சி அடைகிறார். அப்புறம் தெளிகிறார்.

    அந்தப் பெண்மணியின் கணவர் அன்று காலைதான் இறந்துவிட்டிருந்தார். அவரைப் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் மேற்படி மின்னஞ்சல் அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று நினைத்துவிட்டார். இப்போது அந்த மெயிலை நீங்களே இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அதிர்ச்சிக்கான காரணம் தெரியும்.

    ஆனந்த் (பிரபல மலையாள எழுத்தாளர் சச்சிதானந்தன்) அவர்களது ‘மரண சர்டிபிகேட்’ (கேரளா சாகித்ய அகாதமி விருது பெற்றது) தனது இல்லத்தில் நேரும் மரணத்தைத் துயரத்தோடு அணுகும் பதட்டம் நிறைந்த மனிதர் ஒருவரைப் பேசுகிறது. அருமையான தமிழ் மொழிபெயர்ப்பில் பல ஆண்டுகளுக்குமுன் வாசித்த அந்தக் கதையில் ஒரே ஒரு மனிதரே அதிகம் இடம் பெறுகிறார். அவரது மொழியிலேயே கதை நகர்கிறது. அவரது வீட்டில் தற்செயலாக வந்து தங்கும் ஒருவர் மரித்துப் போய்விடுகிறார். அவரைக் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் இவரிடம் கிடையாது என்று கொஞ்சம் வித்தியாசமாகத் தொடங்கும் கதை.

    உடல் நலம் குன்றியிருக்கும்போது பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்களை திருப்பிக் கொடுக்க சம்பந்தப்பட்ட கடைக்குச் செல்கிறார் இவர். “வருந்துகிறேன் சார்..அந்த மரணம் எப்போது நேர்ந்தது?” என்று கேட்கும் கடைக்காரன் இவரை வியப்பில் ஆழ்த்துகிறான். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்கிறார். “இந்த சாதனங்கள் ஒருமுறை கடைக்கு வெளியே சென்றால், நோயாளி மரிக்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை” என்கிறான் அவன்.

    தகனம் செய்யுமிடத்தில் விறகு வாங்கும்போது ரசீது தருபவன், இது மிகவும் முக்கியம். பத்திரமாக இருக்கட்டும். இல்லையெனில் மரண சான்றிதழ் கிடைக்காது என்கிறான். ஆனால் அதை கிரிமடோரியம் கிளார்க் பின்னர் பெற்றுக் கொண்டுவிடுகிறான், சான்றிதழ் ஏற்பாடு செய்ய.

    முதல்முறை பிரேதத்துடன் அச்சத்தோடு செல்லும் சுடுகாட்டுக்கு, பின்னர் சான்றிதழ் பெற திரும்பத் திரும்பச் செல்ல நேர்கிறது அவருக்கு. அச்சம் மெல்ல மெல்ல அகன்றாலும், மரணத்தின் நிழல் அவரை எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் சூழ்ந்திருப்பதாகவே உணர்கிறார். சுடுகாட்டில் வேலையாளின் குடும்பம் வசிப்பதும், குழந்தைகள் அநாயசாமாக அங்கே ஓடியாடி விளையாடுவதும் அவருக்கு விசித்திரமாகப் படுகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது அந்த ஒரே ஒரு மரணம்.

    சுடுகாட்டு எழுத்தர் மாற்றலில் சென்றுவிடுகிறார். புதிய ஆள், விறகுக் கடை ரசீது எங்கே என்று இவரிடமே கேட்கிறார். சுமார் 190 பக்கங்கள் கொண்ட நாவலில் கடைசி கடைசியாக மாநகராட்சி அலுவலகத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரியிடம் சான்றிதழ் கையொப்பம் ஆகும் நேரத்தில் அவரெதிரே நிற்கிறார்.

    அந்த உயர் அதிகாரியோ எல்லாத் தாள்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்துவிட்டு, மன்னிக்கணும், மறைந்த அந்த மனிதரின் பிறப்புச் சான்றிதழ் நகலை நீங்கள் இணைக்கவே இல்லையே என்கிறார். இவருக்கு எரிச்சல் எடுக்கிறது.

    அந்த உயரதிகாரி சொல்கிறார்: “உங்கள் கோபம் நியாயமானது…இறந்த மனிதனுக்கு எதற்கு பிறப்பு சான்றிதழ் என்று நீங்கள் நினைப்பீர்கள்! ஓர் அடிப்படை சிக்கலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகில் பிறக்காத ஒரு மனிதன் இங்கே மரித்தான் என்று எப்படி நான் சான்றிதழ் தர முடியும்?”

    கதை இப்படி முடிகிறது: பிறப்பின் சாட்சி வாழ்க்கை. வாழ்க்கையின் சாட்சி மரணம். மரணத்திற்குச் சாட்சியைத் தேடி அலைகிறேன்….

    நன்றி: செம்மலர் (மே, 2015)

    ***************

    Share
  • கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சவால்கள்

    எஸ் வி வேணுகோபாலன்

    சென்னையின் கல்வி வளாகங்களில் அந்த இடம் எப்போதுமே பசுமைச் சூழல் நிரம்பியதாக இருக்கும். ஒரு பத்தாண்டுக்குமுன்பு அங்கே குடியிருந்த உயர் நிர்வாகி ஒருவருக்கு திடீரென்று ஒரு சத்தம் ஆகவில்லை. மிகப் பெரிய சிந்தனையாளரைத் தூங்கவிடாத சக்திகளை அவரால் எப்படி மன்னிக்க முடியும்?. மறுநாள் நரிக்குறவர்களை வரவழைத்து அந்த சத்தத்தை அவர்களது வெடி சத்தத்தால் முடித்து வைக்க வேண்டினார். சுட்டு வீழ்த்தப்பட்ட சிட்டுக் குருவிகளை அந்தப் பாமர மனிதர்கள் மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு வெளியேறினர்.

    பேரா. வசந்தா கந்தசாமி அவர்களை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக நேர்காணல் செய்கையில், அவரது கணவர் சொன்ன தகவல் இது. ஐ ஐ டி வளாகத்தில் பறவைகளின் அற்புதமான மொழியைக் கேட்கப் பிடிக்காத மேதாவி ஒருவர் இருந்தார் என்பதும், தனக்கு ஒவ்வாத ஒலிகளை எழுப்பிய பாவத்திற்காக சிறகடித்த பறவைகளை அவர் சிதறடிக்கவும் தயங்கவில்லை என்பது எத்தனை வேதனையான செய்தி.

    இதோ, ஐ ஐ டி மீண்டும் செய்திகளில் வந்திருக்கிறது. அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்திருக்கின்றது ஐ ஐ டி நிர்வாகம். பிரதமரை விமர்சித்தார்களாம், அடடா, ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா….இந்து மதத்திற்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்டார்களாம். ஓஹோ, இது இந்து நாடு என்ற முடிவுக்கு வந்து விட்டு, அதை சர்வாதிகார அமைப்பாகவும் அறிவிக்கத் துடிக்கின்றனரா…யாரோ மத்திய அரசுக்கு புகார் எழுதிப் போட்டனராம். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு ஐ ஐ டி நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அடுத்த நிமிடம், இந்த அமைப்பையே தடை செய்துவிட்டது விசுவாசமிக்க நிர்வாகம்.

    மத்திய ஆட்சியாளர்களின் அதிகார வெறி, தத்துவார்த்தத் திமிர் மீண்டுமொரு முறை அராஜகத்தின் உச்சத்தைத் தொடுகிறது. இதை சாதாரண நிகழ்வாக, ஒரு நிறுவனத்தின் உள்ளரங்க விஷயமாக, ஏதோ புரிதலில் உள்ள சிக்கலாக மட்டும் பார்த்துவிட்டுப் போக முடியாது. ஏனெனில், அரசின் அத்துமீறிய இந்தத் தலையீட்டை எதிர்த்துப் பேசுபவர்களை சங் பரிவார பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து குதறுவோர் எழுப்பும் கேள்விகள், பிரச்சனை இதோடு முடியாது என்று தெரிவிக்கின்றன.

    படிக்க வந்த இடத்தில் அதென்ன அரசியல் என்று ஓர் அறிவுஜீவி, இணையதளத்தில் அப்பாவி போல் எழுதுகிறார். அம்பேத்கர் பெரியார் வட்டத்தின் சுவர் அறிக்கையை கேள்விக்கு உட்படுத்துகின்றவர்கள் அதன் உள்ளே எழுதப்பட்டிருக்கும் செய்திக்கு பதில் சொல்லத் தயாராயில்லை.

    ஐ ஐ டி நிறுவனத்தில் இயங்கும் துறைகளின் பெயர்களை இந்தியில் மாற்றி எழுதுகின்றனர். எழுதிவிட்டுப் போகட்டும். அதில் படியும் சமஸ்கிருத சாயலை, அது பிரதிபலிக்கும் அவர்களது வேத காலத்து அறிவியல் தடாலடியை மாணவர்கள் விமர்சித்துள்ளனர். நரேந்திர மோடியின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கைகளை மாணவர்கள் விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசாதே என்கிறது இந்துத்வா கும்பல். அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்களைக் கேட்கவே கூசுகிறது அதன் காது.

    இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் அறிக்கை பரிந்துரைகளுக்கு எதிராக, தலைநகர் தில்லியில் மருத்துவ மாணவர்களைப் போராட்டத்தில் இறங்கவைத்து அவர்களைத் தவறான முறையில் வழி நடத்திய இந்த பாசிச கும்பலுக்கு, மாணவர்களுக்கு எதற்கு அரசியல் என்று அப்போது சொல்லத் தெரியவில்லையா?

    கல்வி வளாகங்களில் சாதிய, மத வெறி முழக்கங்களை எழுப்பி வன்முறையைத் தூண்டும் வித்யார்த்தி பரிஷத் அமைப்பை அழைத்து உங்களுக்கு ஏனிந்த அரசியல் என்று சொல்லத் தெரியவில்லையா?

    உலகில் எங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதோ, அதன் தாக்குதல்கள் மெல்ல மெல்ல பல்வேறு பகுதியினரை அலைக்கழிக்கத் தொடங்குகிறதோ அங்கெல்லாம் ஏதேனும் ஒரு வடிவில் மக்களைக் கூறுபோடும் சக்திகள் வேகம் பெறுவதை அண்மைக்கால உலக நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஜனநாயக உரிமைகள் நுட்பமான முறையில் மறுக்கப்படுவதும், ஒரு சாரார் அதை நியாயப்படுத்துவதும், ஏற்றத் தாழ்வுகளின் இடைவெளி பெரிதாக பெரிதாக பரஸ்பர மோதல்களை உருவாக்குவதும் இப்போது இங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

    நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஓராண்டை எடை போட்டுக் கொண்டிருப்போர் பலரும், அரசின் கீழ் இயங்கும் கல்வி, ஆராய்ச்சி, பண்பாட்டு வெளி தொடர்பான பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு சங் பரிவாரத்தின் தீவிர கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டுவதில்லை. இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்திற்கு மிக மோசமான பிற்போக்குக் கருத்தியலை ஓயாது எழுதியும் பேசியும் வந்த ஆர் எஸ் எஸ் விசுவாசி ஒய்.சுதர்சன ராவ் என்பவரை மோடி அரசு நியமித்தது. திரைத் தணிக்கைக் குழுவைத் தங்களுக்கு வசதிப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பிவிட்டது. இந்த ஆக்டோபஸ் இப்படியே ஒவ்வோர் அமைப்பிலும் தனது ஆதிக்கக் கரங்களை செலுத்திப் பற்றிக் கொண்டுவருகிறது.

    இன்னொரு புறம், நவீன தாராளமயத்தின் தலைமை உபாசகர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தேசத்தின் சொத்துக்களை பன்னாட்டு நிதி மூலதனத்தின் பசிக்குத் திறந்து கொடுக்க ஆவன செய்வதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள், காப்பீட்டுத் துறை ஒன்றும் மிஞ்சாதபடி அந்நிய ஏகபோக நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்கள் உள்ளிட்டு பலவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவந்து உழைப்பாளி மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களுக்கு இந்தக் காட்சிகளின் கோரம் புரிபட்டுவிடக் கூடாதென்று திசை திருப்பல் நாடகங்களையும், புதிய புதிய பிரச்சனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    சாதிய சக்திகளோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பா ஜ க, ஏற்கெனவே பெருமாள் முருகன் நாவல் விஷயத்தில் குறுக்கிட்டது. வாய்ப்புள்ள ஒவ்வோர் இடத்திலும் தனது அதிகாரத் தொண்டையைக் கனைத்துக் காட்டுகிறது. மாற்று சிந்தனைகள், சுதந்திர எண்ணங்கள், மாற்றுக் கொள்கைகள் என்று இளைய தலைமுறை தயாராகிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளது. அதனால்தான், இடதுசாரி கருத்தியல், முற்போக்கு முழக்கம் இவை எதையும் பாசிச சக்திகளால் செரித்துக் கொள்ள இயலவில்லை.

    இளைய தலைமுறையினரிடமும் மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்த ஃபாசிச கும்பலுக்கு, தத்துவார்த்த அடிப்படையில் விளக்கங்கள் சொல்ல இயலாதபோது கருத்துரிமைக்கே வேட்டு வைக்கும் அளவு ஆத்திரம் மூள்கிறது. அதிகாரம் கையில் இருக்கும் ஆணவம் அவர்களது அராஜகத்தை மேலும் கூர் தீட்டிக் கொடுக்கிறது.

    விவேகானந்தரை நேர்காணல் செய்த பிராம்மணர் ஒருவர், அசைவ உணவு புசிப்பது பற்றிக் கேட்கிறார். எந்த உணவைத் தின்றால் வலு ஏற்படுமோ அதைச் சாப்பிடுங்கள் என்றுதான் இளைஞர்களுக்குச் சொல்கிறேன் என்று பதில் சொன்னார் விவேகானந்தர். ஆனால், மாட்டுக் கறியை வைத்து மதவெறி அரசியலை நடத்துகிறது சங் பரிவாரம். விவேகானந்தர் சொன்ன எத்தனையோ கருத்துக்களைப் புறம்தள்ளும் இந்தக் கும்பல், அவரை முன்வைத்தே தேசம் முழுமையும் ஊர்திகளை அனுப்புவது, கண்காட்சி நடத்துவது, கல்லூரி வளாகங்களை காவி மயமாக்குவது போன்றவற்றை ஓயாது செய்து கொண்டிருக்கிறது. ஆனால், அறிவார்ந்த விவாதங்களை உருவாக்கும் ஒரு வாசக வட்டத்தைக் கண்டு மிரள்கிறது காவிக் கும்பல்.

    வளர்ச்சி, வளர்ச்சி என்று எழுப்பப்படும் வெற்று ஆரவாரங்களுக்கிடையே மறைக்கப்படும் தேசத்தின் அதிர்ச்சியான பட்டினிக் குறியீட்டு எண்ணை, கீழிறங்கிக் கொண்டிருக்கும் மனித வளர்ச்சி அளவீட்டு இலக்கத்தை, உலக நாடுகள் வரிசையில் ஊழலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நம் வரிசை எண்ணை தொழில்நுட்ப வளாகத்திற்குள் விவாதிக்காமல் வேறெங்கு பேச?

    ஐ ஐ டி வளாகத்திற்குள் பேசத் தகாத விஷயங்களைப் பேசியதால்தான் தடை செய்திருக்கின்றனர் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வாசிப்பு வட்டத்தில் என்ன தகாத விஷயம் விவாதிக்கப்பட்டது என்பதைக் கடைசிவரையில் சொல்ல முடியவில்லை. ஆட்சியை விமர்சிக்க உரிமை கிடையாது என்று பேசும் இவர்கள், அயல்நாட்டுப் பயணத்தில் எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டிப் பேசும் பிரதமரை, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இத்தனை ஆண்டுகளாக அவமானத்தோடு வாழ்ந்தார்கள் என்று மிகவும் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்ட நரேந்திர மோடியை என்ன செய்யலாம் என்று சொல்வார்களா?

    அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்றார் பாவேந்தர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து என்றனர் மேதைகள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது, அதன்மூலம் அதிகாரத்தை உண்மைவயமாக்குவதும், உண்மையை அதிகாரமிக்கதாக ஆக்குவதுமே ஜனநாயகத்தின் உட்பொருள் என்றனர் சமூக விஞ்ஞானிகள்.

    சுதந்திர போராட்டத்தின் ஆவேச முழக்கங்களை எழுப்புகையில் புச்சலபள்ளி சுந்தரையா, ஒரு கல்லூரி மாணவர்தான். அண்ணாமலை பல்கலையில் இருந்தபடிதான் கே முத்தையாவும், ஆர் உமாநாத்தும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். விடுதலை வீரர் என் சங்கரய்யா அவர்களது மாணவப் பருவத்து தேச பக்த ஆவேசத் துணிச்சலின் பதிவு, இன்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக் கோப்புகளில் வாழ்கிறது.

    மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் குரல்களும், பழமைவாதப் புரட்டுக்களை சவாலுக்கு அழைக்கும் குரல்களும் கலகக் குரல்களாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. தேடலில் இருப்போரை ஊக்குவிக்காத கல்வி, உருப்படியான எதிர்காலத் தலைமுறையைத் தரப்போவதுமில்லை. காற்றும், வெளிச்சமும் நுழையாத வகுப்பறைகள் இருண்ட காலத்தையே எதிரொலிக்கும்.

    பறவைகளின் சுதந்திரத் திரிதலை, உற்சாகக் கொண்டாட்ட ஒலிகளை நாராசம் என்று நினைத்து அவற்றைச் சுட்டுப் பொசுக்கும் அதே வேலையை இன்றைய ஐ ஐ டி நிர்வாகமும் செய்யத் துணிகிறது. மத்தியில் உள்ள சகிப்புத் தன்மை அற்ற ஜனநாயக உணர்வற்ற ஆட்சி அப்படி செய்யத் தூண்டுகிறது. இந்த முறை குருவிகள் வெளியேறாது. மேலும் கூட்டம் கூட்டமாய் வட்டமிட்டுப் பறக்கும். குறிபார்க்கும் துப்பாக்கிகளை அவை தமது வலிமையால் கீழே வைத்துவிடச் செய்யும். வளாகத்தின் கருத்துச் சுதந்திர வெளியைத் தற்காத்து விரிவடைய வைக்கும் போராட்டத்தில் அவை நிச்சயம் வெற்றி பெறும்.

    ***************

    நன்றி: தீக்கதிர் (ஜூன் 3)

    Share