எங்கேயும் எப்போதும் சங்கீதம் அவர் பெயர்

1

எஸ் வி வேணுகோபாலன்

msv_2476658g
“ஆபட்ஸ்பரி திருமண மண்டபம்” என்ற பெயரைக் கேட்டதுமே, எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத தி நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடை இல்லத் திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் நாங்கள் புறப்பட்ட எழுபதுகளின் காலம் மறக்க முடியாதது. இத்தனைக்கும் பத்திரிகை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான – அந்தமானில் வர்த்தகம் செய்துவந்த ஒரு குடும்பத்துக்குத்தான் வந்திருந்தது. இருந்தால் என்ன, எப்படியோ அந்த அமர்க்களமான அழைப்பிதழ் எங்கள் கண்ணிலும் பட்டுவிட்டது. சென்னையின் பிரசித்தமான அந்த மண்டபத்தை நேரில் பார்த்துவிடுவது, தடபுடலாக இருக்கப் போகும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பது இவை மட்டுமல்ல எங்கள் நோக்கம். வரவேற்பில் இசை விருந்து; எம் எஸ் விஸ்வநாதன் குழுவினர் என்று போட்டிருந்ததே மிகப் பெரிய காரணம். அடேங்கப்பா, அவ்வளவு பெரிய இசையமைப்பாளரை அருகே பார்த்துவிட முடியுமா, திரைப்படத்தில் வாசித்த அதே இசையை மேடையிலும் கேட்க முடியுமா, அப்படியானால் நமக்கு உயிராயிருக்கும் பாடகர்களும் அல்லவா வந்து இறங்குவார்கள்….அட்ரா சக்கை விடக் கூடாது என்ற தீர்மானத்தோடு போய் இறங்கினோம்……வாழ்நாள் மறக்க முடியாத இசை விருந்தை அருந்தினோம் அன்று!

கச்சேரியின் தொடக்கத்தில், அந்தக் குள்ளமான மனிதர் இசைக் கருவிகளின் நடு நாயகமாக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும் சிட்டிகை போட்டு ஒன டூ த்ரீ சொல்லவும், டண்டன் டண்டன் டண்டன் டண்டன்…..ஆஹா…காதலிக்க நேரமில்லை படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம்….முழுக்க முழுக்க இசைக் கருவிகளின் வாசிப்பிலேயே கொடி கட்டிப் பறக்க, இந்த மனிதர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் கொண்டே இருக்கவும், பாடல் முடியும்போது இரண்டு கைகளையும் குறுக்காகக் கொண்டுபோய் முடிச்சு போட்டு நிறுத்தவும் பாடல் நிறைவடையவும் அத்தனை துல்லியமாக எங்கள் கண் முன்னே நிகழ்ந்தது….வயலின் வாசிப்போரும், தபலாக்காரர்களும், பேண்ட் இசைப்போரும், புல்லாங்குழல் கலைஞரும், இன்னபிற வாத்தியக்காரர்களும் அவரது கண்ணோடு கண்ணினை நோக்கியவாறே தங்கள் இசைப்படகை அசாத்தியமாக செலுத்திக் கொண்டிருந்த காட்சி, ஓர் இசையமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்டாற்போல் அத்தனை இன்பமாய் அமைந்தது.

இசைக் கச்சேரிகளின்மீது பித்துப் பிடிக்க வைத்த அந்த ஒரு காட்சி, இசையமைப்பாளர் என்ற கலைஞர் குறித்த திணறடிக்கும் அனுபவமாகவே உள்ளிறங்கியது. அதன்பின் எந்தப் பாடலை வானொலியில் கேட்டாலும்கூட, மனத்திற்குள்ளே ஓர் இசைக்குழு மொத்தமாக மானசீகமான இயங்கி வாசிக்கத் தொடங்குவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எத்தனை நூறு பாடல்கள், எத்தனை எத்தனை இசைத்தட்டுகள், எத்தனை எத்தனை இசைக் கச்சேரிகள்….ஆனால் எம் எஸ் வி உள்ளிருந்து நெறிப் படுத்திக் கொண்டே இருக்கும் இசைதான் அவையனைத்தும்.

மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ, தனது கைகளில் வழங்கப்படும் ஒரு கவிதையை அதன் உயிர்மூச்சைத் தன்னுள் இழுத்துக் கொண்டு உயிர்த் துடிப்பான வகையில் அதன் நயங்கள் அனைத்தும் மின்னித் தெறிக்கத் தக்க பாடலாக உருமாற்றித் திருப்பிக் கொடுக்கும் ரசவாதத்தை எம் எஸ் வி ஓயாமல் செய்து கொண்டே இருந்தார். எத்தனை எத்தனை உணர்வுகள், என்னென்ன உணர்ச்சிகள், அவற்றின் பாவத்தை அப்படியே இசையில் நனைத்து வழங்க முடிந்தது அவருக்கு. ஒரே திரைப்படத்தில் முற்றிலும் முரண்பட்ட வெவ்வேறு காட்சிகளுக்கான பாடல்களுக்கான இசையை அத்தனை அபாரமாக கொண்டுவரத் தெரிந்த மேதை எம் எஸ் வி. தவப்புதல்வன் படத்தில், சிவாஜி கணேசன் கேபரே நடனத்திற்கு இசைத்துப் பாடுபவர். ராண்டார் கை மற்றும் வாலி கூட்டு உழைப்பில் தயாரான லவ் இஸ் ஃபைன் டார்லிங் என்று தொடங்கும் அந்தப் பாடலின் துள்ளாட்டம் ஒரு பக்கம். கிண்கிணி கிண்கிணி கிணி எனும் கிருஸ்துமஸ் தாத்தா பாடல் ஒரு சுவை என்றால், உலகின் முதலிசை தமிழிசையே என்ற போட்டிப் பாடல், பிறகு இசை கேட்டால் புவி அசைந்தாடும்….மிகவும் கொண்டாடப்படும் பாடல்.

இரட்டையராக விஸ்வநாதன் – ராமமூர்த்தி கட்டியாண்ட இசைக் கோட்டையிலிருந்து ஆயிரத்தில் ஒருவனும், புதிய பறவையும் காலகாலத்திற்கும் பேசப்படும் பாடல்களைக் கொண்டவை. உன்னை நான் சந்தித்தேன் பாடலில் குழையும் பி சுசீலாவின் குரல், பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டிக் கேட்பதாக பரிணாமம் பெற வைத்த மேதைமை அவர்களுக்கு இருந்தது. ஓடும் மேகங்களே என்று தூதுவிட்ட டி எம் எஸ் குரலை, எங்கே நிம்மதி என்று அலறித் தவித்துத் தத்தளித்துக் கதற வைத்த திறமை அது. தனியே வந்தபிறகு, எம் எஸ் வியின் அடுத்த பரிமாணம் துலங்கத் தொடங்கியது. ரீ ரிகார்டிங் எனப்படும் பின்னணி இசையில், ஒலிச்சித்திரத்தை வானொலியில் கேட்கத் தொடங்கும்போதே, படம் முழுக்க பரவி விரவும் குறிப்பிட்ட இசைக்கோவை மூலம் அடையாளப்படுத்தும் அவரது லாவகம் அருமையானது. தங்கப்பதக்கம் படத்தில் பாத்திரங்களின் சிக்கலான சந்திப்புகளின் போதெல்லாம் இடம் பெறும் அந்த வயலின் இசை எப்போது ஒலிக்கும்போதும் கண்களில் நீரை வரவழைக்கத் தக்க உணர்ச்சி தூண்டுதளைச் செய்து கொண்டிருப்பது.

எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று பல்லவியில் தொடங்கி சரணங்களில் பயணம் செய்யும் பாடலினூடே ஒலிக்கும் இசையின் சமன்பாடு உருக வைக்கவும், சிலிர்க்கச் செய்யவும், கொதிக்க வைக்கவும், கொதிநிலையைத் தணிக்கவுமாக என்னென்னவோ ஜால வித்தைகளைச் செய்து கொண்டிருக்கும் இசையமைப்பை எம் எஸ் வி எண்ணற்ற வகைகளில் பரிசோதனை செய்தபடி ரசிகர்களுக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். பல்லவியில் விடுபடும் சொற்கள் மீண்டும் சரணத்தில் கலந்து தழுவிக் கொள்ளும் இணைப்பு இசையில் தபலாக்களின் முடிச்சு தாவித் தழுவிக் கொண்டாட வைப்பதாயிருக்கும். கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள்) பாடலில் வயலினும், மிருதங்கமும் கதாபாத்திரங்களாகவே மாறி ஒரு முடிவற்ற உரையாடலை நடத்திக் கொண்டிருக்கும். மரோ சரித்ரா எனும் கே பாலசந்தர் அவர்களது தெலுங்குப் படத்தின் பாடல்களை தமிழ் ரசிகர்கள் அனாயாசமாக முணுமுணுக்க முடிந்ததில் எம் எஸ் வியின் இசை மிகப் பெரிய பங்கு வகித்தது. ‘ஏ திக பூவனு ஏ கொம்ம தேட்டினு கலிபிந்தி ஏவிந்த அனுபந்தமு’ பாடலும், ‘பலே பலே மகாடிவோய் பங்காரு நா சாமிவோய்’ பாடலும் காலத்தால் அழியாதவை.

பாடலின் தொடக்கத்திலும், இடையேயும் வரும் ராக ஆலாபனை பாடலுக்கு கம்பீரம் சேர்ப்பது. தெய்வம் தந்த வீடு (ஜேசுதாஸ்-அவள் ஒரு தொடர்கதை), பூ மாலையில் ஓர் மல்லிகை (ஊட்டிவரை உறவு)….என்று மிகப் பெரிய பட்டியல் அது. சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் (டி எம் எஸ் – பி சுசீலா: எங்கிருந்தோ வந்தாள்) பாடலில் சிரிப்பையே ஸ்வரங்களில் கொண்டுவந்திருப்பார் எம் எஸ் வி. தானே படிய ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ (முத்தான முத்தல்லவோ) பாடலில் அவரது சிரிப்பும் சங்கீத சிரிப்பாக வந்திருக்கும். தமிழ்ப் புலமையும், பேரும் பெற்றிருந்த சம காலக் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி இருவரிடையேயும் தொழில்முறை நட்பும், தோழமை நேயமும் பாராட்டி கருத்தொற்றுமையோடு பல நூறு பாடல்களை உருவாக்கிய சாதனை அசாதாரணமானது. ஆனால் அந்தச் செருக்கு தலைகாட்டாத அவரது எளிமைதான் பாமர ரசிகர்களின் நெஞ்சில் அவரைக் குடியமர்த்தி இருப்பது.

பாடகராக அவரது குரல் தனித்துவம் பெற்றிருந்தது. நீ இல்லாத இடமே இல்லை எனும் அல்லா அல்லா பாடல் ஒரு போதும் மறையாது எனில், கண்டதைச் சொல்லுகிறேன், சொல்லத்தான் நினைக்கிறேன், சம்போ சிவசம்போ, உனக்கென்ன குறைச்சல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் அமைந்தவை. உருவங்கள் மாறலாம் படத்தில் இடம் பெற்றிருந்த இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்திய திருநாயகா எனும் பாடல் மனித வாழ்வின் சொந்த விசாரணைக்கு ஏற்ற குரலில் ஒலிப்பது. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் (சிவகாமியின் செல்வன்) உருக்கம் மிகுந்த குரலில் ததும்புவது. நடிகராக அவர் அறியப்பட்ட சில படங்களில் அவரது தனி முத்திரை இருந்தது.

தன்னோடு ரஷ்யப் பயணத்தில் உடன்வந்த எம் எஸ் வி, மாஸ்கோ ம்யூசியத்தில் குழந்தையைப்போல் இது என்ன, அது என்ன என்று அப்பாவியாகக் கேட்டு வந்தாராம்; பிறகு, அங்கிருந்த மிகப் பெரிய பியானோ கருவியைக் கண்டதும் சிறப்பு அனுமதி கேட்டுப் பெற்று எந்த சிரமமும் இன்றி அதை வாசித்துக் காட்டியபோது வழிகாட்டியாக வந்தவர்களும், ரஷ்யர்களும் அதிர்ந்து கொண்டாடியதை கண்ணதாசன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். மேதைமைக் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன். பாடகர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர், கவிஞர்களின் சொற்களுக்கு அழியாத வடிவம் அளித்தவர், படங்கள் பேசப்படக் காரணமாக இருந்தவர், விருதுகளைக் கடந்த அங்கீகாரத்தோடு விடை பெற்றுச் சென்றிருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்பதே அவரது மூச்சுக் காற்றாக இருந்திருக்கிறது. அவர் மறையவில்லை. காற்றில் கலந்திருக்கிறது அவர் உயிரும் ஓர் இசைக் கோவையாக.

***************

நன்றி : சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எங்கேயும் எப்போதும் சங்கீதம் அவர் பெயர்

  1. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்னும் இசைச் சரித்திரம் எழுதிய பக்கங்கள் இனிமேல் வரும் தலைமுறைகளுக்குப் பாடங்கள்.  இசைஞானி இளையராஜா அதை முழுமையாய் உணர்ந்திருக்கிறார். மேடைகளில் உரைத்திருக்கிறார்.  ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் இரகுமானும் தன்னில் தவழ்ந்து கொண்டிருக்கும் அப் பொற்காலப் பாடல்களைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.  உங்களைப் போல் என்னைப் போல் உள்ளவர்கள் அத்திரையிசையில் நாளும் பொழுதும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.  உங்களின் கட்டுரை ஒரு இனிய அனுபவத்தைத் தந்தது.  தொடர்பில் இருங்கள்.  நாம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.   அன்புடன்.. காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.