என்றென்று நிலைத்து நிற்கப் போகும்
தில்லாங்குமரி டப்பாங்குத்து

 

எஸ் வி வேணுகோபாலன்

aman

ஜில் ஜில் ரமாமணி காலமானார்……………….

எல்லாம் வதந்தி…நான் நலமாக இருக்கிறேன்…உயிரோடு இருக்கிறேன் என்று சில மாதங்களுக்குமுன் அவர் பேட்டி கொடுத்தபோது எத்தனை ரசிக உள்ளங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன….மனோரமா இனி வந்து அப்படி சொல்ல இயலாது என்ற செய்தி இந்த நள்ளிரவில் சன் செய்திகள் அலைவரிசையில் பார்த்தபோது தெரிந்தது. பல பத்தாண்டுகள் தமிழ்த் திரை உலகில் ஒரு நாயக, நாயகி அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருந்த பன்முக ஆற்றல் படைத்திருந்த நடிகை காலமாகிவிட்டார். மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்குக் குடி பெயர்ந்து பள்ளத்தூர் பாப்பாவாகி பின்னர் மனோரமா என்று பெயரெடுத்து ஆச்சியாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு மரணம் உண்டா என்ன…

அகல விரிந்திருக்கும் கண்களில் மின்னும் ஒளி, அப்பாவி முகவாகு, அசாத்திய உடல் மொழி என்ற வகையில் கருப்பு வெள்ளை படங்களின் காலத்திலேயே நகைச்சுவை நடிகையாக அசத்தத் தொடங்கிய மனோரமாவுக்கு கவிஞர் கண்ணதாசன் முதல் வாய்ப்பு கொடுத்த படம் மாலையிட்ட மங்கை (1958​). அதில் தொடங்கி இடையறாத வாய்ப்புகளும், பாராட்டுதல்களும், சாதனைகளும் தொடர்ந்தன அவர் வாழ்க்கையில். பிற்காலப் படங்களில் உதறலெடுப்பது போன்ற பாவனை, பல குரல்களில் இழுத்து நீட்டி முழக்கும் வசன உச்சரிப்பு, சொந்தக் குரலில் அசத்தலான பாட்டு என்று புரட்டி எடுக்கத் தொடங்கினார். ஆயிரமா, ஆயிரத்து ஐநூறா யாருக்குத் தெரியும் அதற்கு மேலும் நடித்திருக்கிறார் மனோரமா.

லாலி வந்தது என்பார் மனோரமா ஒரு திரைப்படத்தில். லாரி என்ற சொல் வராது அவருக்கு. நாகேஷ் கேட்பார், ஸ்கூல்ல ர நடத்தற அன்னிக்கு நீ லீவா என்று! தேன்மழை படத்தில் நாகேஷ், சோ இருவருக்கும் போட்டி, யார் மனோரமாவின் காதலை வெல்வது என்று….கலக்கலான அந்தப் போட்டியில் மனோரமாவின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு அசாத்தியமாக இருக்கும்.

உனக்கும் வாழ்வு வரும் என்ற படம் (என்று நினைவு). தேங்காய் சீனிவாசனோடு இணை. ஊமையாக நடிப்பார். பெரிய மலை. அதில் ஒரு குருவி இந்த வசனத்தைப் போட்டுப் பின்னிப் பின்னி எடுப்பார் மனோரமா, அவர் வந்து நின்றாலே ரசிகர்கள், பெய்ய மய்யி அதுல ஒரு குய்யி…..என்று கத்தத் தொடங்கி விடுவார்கள். சென்னை பாஷையை அந்தப் பாடு படுத்தி எடுப்பார் படங்களில். அவரது வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டினா நா உடமாட்டேன்…என்ற பொம்மலாட்டப் படப் பாடல் எந்தக் காலத்திலும் அழியாது. வா வா மச்சான் ஒண்ணாச் சேந்து வாராவதிக்கே போய்வரலாம் என்ற சென்னைச் சேரியின் குடிசைக் காதலியின் குரலை இனி எங்கே கேட்பது….

அதன் அடுத்த முனையில் மடிசார் மாமி பாத்திரம்…சூரியகாந்தி படத்தில் வம்பு பேசும் தோழிகளோடு அவர் அடிக்கும் கூத்து, தெரியாதோ நோக்கு தெரியாதோ என்ற பாட்டில் பன்மடங்கு பெருகி இருக்கும். மறைந்த கோமல் சுவாமிநாதன் அவர்கள் இயக்கத்தில் அவர் பல நாடகங்களில் நடித்தார். அதில் ஒன்று சென்னை தொலைகாட்சி நாடகமாக மலர்ந்த என் வீடு என் கணவன் என் குழந்தை! குழந்தைப் பேறு வாய்க்காத வேதனையை மறைத்தபடி குடும்ப உறவுகளோடு நெருங்கி வாழும் தன்மையில் கணவரோடு (கம்பர் ஜெயராமன்) நெகிழ்ச்சியுற பேசிக் கொண்டிருக்கும் மனைவியாக அய்யர் மாமி வேடத்தில் அத்தனை அற்புதமாக நடித்திருப்பார். அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்குமுன் வானொலியில் அவர் அசாதாரண காட்டுக் கத்தல் போடும் பாத்திரத்தில் நடித்த காப்பு கட்டி சத்திரம் ஒலிபரப்பாகும் நேரத்திற்கு ரசிகர்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது.

சர்வர் சுந்தரம் படத்தில் புதுமுக நடிகராக செட்டில் அறிமுகமாகும் நாகேஷ். இயக்குநராக ரங்காராவ். நாராசம் ததும்பும் உங்கள் நாக்கும் என்று தமிழைப் போட்டுக் கொன்று தின்பார். ஏம்மா மத்த படத்தில் எப்படி வேணும்னா பேசு..எம்படத்தில் தமிழ் பேசும்மா என்று கெஞ்சுவார் ரங்காராவ். போங்க சார் என்ற அவரது நளினமும், துடைப்பத்தை வைத்துத் தரையில் சிலுப்பி எடுக்கும் அவரது நடிப்பும் சிறப்பானவை.

அன்பே வா படத்தில் எம் ஜி ஆர் யாரென்று தெரிந்தாலும் நாகேஷிடம் காட்டிக் கொள்ளாது அவரைக் காதலிக்கும் குறுகுறு பாத்திரம். சந்திரோதயத்தில் எம் ஜி ஆர் வியந்து பார்த்தபடி காசிக்குப் போகும் சந்நியாசியாக நாகேஷை விரட்டியடிக்கும் பாத்திரம் என பட்டியலிட இயலாத பல்சுவை ரசனை வேடங்களில் அசத்தி இருப்பவர் மனோரமா.

aman1

என்றென்றும் பேசப்படும் பாத்திரம் அவருக்குக் கிடைத்ததற்கு அவர் ஏ பி நாகராஜனுக்கு மிகவும் நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார். அதுதான் ஜில் ஜில் ரமாமணியாக ஊரையே கலக்கி எடுத்த தில்லானா மோகனாம்பாள். அவரது நடிப்பை சிவாஜியே ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அந்தப் படத்தில் நிறைய உண்டு. ஒங்க நாயனத்துலதே இந்த சத்தம் வருதா…ஏன் என்று அவர் கெஞ்சலோடு சிவாஜியிடம் கேட்பதும், அவர் மண்டு (மட்டு) என்று நமக்குக் கேட்கும் அளவு அழுத்தமாகச் சொல்லி சிவாஜி நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் காற்றை வருணிக்கும்போது அப்படி லயித்துக் கேட்டு உட்கார்ந்திருப்பார் மனோரமா. வெத்தலவாக்கு, ஜோடா …வசனத்தை யார் மறக்க முடியும்? தன்னை சண்முக சுந்தரத்தோடு (சிவாஜி) இணைத்து மோகனா (பத்மினி​) சந்தேகப்படும் இடத்தில் அவர் நியாயம் கேட்டு அடுக்கும் அவரது உதவி பட்டியல் அசர வைக்கும். மதுரை காரைக்குடி வட்டார வழக்கு அப்படி மணக்கும்.

சுருளிராஜனை அவர் வேலை வாங்கத் திண்டாடும் டீக் கடை உரிமையாளர் பாத்திரம் தூள் கிளப்பும். காசி யாத்திரை படத்தில் வி கே ராமசாமியை ஏய்க்கும் பாத்திரம். அண்ணன் ஒரு கோயில் படத்தில், எவர்சில்வர் பாத்திரத் திருடியாக அவர் வருகையில் கிளி கத்திச்சி, கிளியனூர்னு நெனச்சி எறங்கிட்டேன், நானே கன்….ன் ….ன் …னிப்பொண்ணு….. என்று கிறக்கம் வர அவர் ரயில் நிலையத்தில் பேசுகையில் ஏ கருணாநிதி, ஏம்மா கிளி கத்தினா கிளியனூரு, கோழி கத்தினா கோழியூரா என்று கேட்பார்.

விசுவிற்கு போட்டியாக அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சம்பந்தியோடு வாதம் செய்யும் வேலைக்காரப் பெண்மணியாக கம்னு கெட, கம்முனா கம், கம்னாட்டி கோ என்பார்….தில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்று ஜொலிக்கும் பாட்டியாக ஒரு வேடம்….எத்தனை எத்தனை பாத்திரங்கள்…..எத்தனை எத்தனை புதிய தோற்றங்கள்…வித்தியாசமான ரசனையில் அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றல்….

நாகேஷ், சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், எஸ் எஸ் சந்திரன் ………..என எத்தனையோ நடிகர்களோடு இணையாக அவர் நகைச்சுவை நடிகையாக நடித்த அவர், ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்கத் தொடங்கினார். அம்மா பாத்திரம். ஜெமினி படத்தில் தனது மகனைக் கொன்ற விக்ரம் கோஷ்டியை அடையாளம் கண்டதும் அவர்களோடு நெருங்கிப் பழகி விஷம் வைத்துக் கொல்லக் காத்திருந்து அதைச் செய்ய முடியாது கதறும் இடத்தில் அருமையாக நடித்திருப்பார் மனோரமா. சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி, செந்திலோடு ஈடு கொடுத்து நடித்திருக்கும் அவர், ஜென்டில்மேன் படத்தில் தனது மகனுக்குக் கல்வி கிடைக்க தன்னையே அடுப்பாங்கரைத் தீயில் எரிய வைத்துக் கொள்ளும் உருக்கமான வேடத்தில் நடித்திருப்பார்.

ஆச்சி மனோரமாவுக்கு மிகவும் மதிப்பு சிவாஜி கணேசனிடம் இருந்தது. பக்தி என்றே சொல்வார் அதை. மனோரமா ஒரு பெண் சிவாஜி என்று வருணித்தார் சோ. அதற்கு அடுத்து கமல் ஹாசனோடு ஈடு கொடுத்து நடிப்பதில் அத்தனை ஆர்வம் காட்டியவர் அவர். அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அய்யய்யோ அய்யோ அய்யய்யோ என்று கத்தி ஜனகராஜை வெறுப்பேற்றும் காட்சி ஒன்று போதும். ராஜா கைய வச்சா ராங்காப் போறதில்ல பாடலுக்குமுன் அவரும் கமலும் தாள லயத்தோடு நடத்தும் வாய்ச் சண்டையும், சிங்காரவேலனில் கமலிடம் சொக்கி ஏமாறும் இடங்களிலும், உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலுக்கு அண்ணி வேடத்தில் உணர்ச்சிகர பாத்திரத்தில் பேசும் வசனங்களும் அவருக்கே உரித்தானவை. சவால் படத்தில் திருடக் கற்றுக் கொடுப்பவர்.

அண்ணாமலை, அருணாசலம் படங்களில் ரஜினியோடு நடித்த மனோரமா, குரு சிஷ்யன் படத்தில் போலீஸ்காரராக வரும் வினு சக்ரவர்த்தியின் மனைவி வேடத்தில் அட்டகாசம் செய்திருப்பார்.தளபதியில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலில் ரிதத்திற்கு ஏற்ப நடனத்தை எடுப்பார். சின்னத்தம்பி படத்தில் வெகுளி மகன் பிரபுவோடு விதவைத் தாய் வேடத்தில் அத்தனை பரிதவிப்பைக் கொண்டு வந்திருப்பார்.

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா …. (படம்: பந்தாட்டம்​) என்று இருமி இருமி சொந்தக் குரலில் பாடும் வேடமானாலும், அவரே மிகவும் ரசித்த பாத்திரமான சத்யராஜைக் காதலிக்கும் வயதான பெண்மணி வேடமானாலும் (நடிகன்) அவர் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். 7 ஜி ரெயின்போ காலனியில் மிகச் சிறு பாத்திரமே ஆனாலும் சின்னஞ்சிறுசுகள் தப்பு பண்ணப் போகுதுங்களே என்று திடுக்கிடும் முகத்தின் மொழி முக்கியமானது.

தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்குமுன் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பாட்டுக்களால் அமைந்த ஒரு விடுகதை போட்டி ஒன்றில் எதிரும் புதிருமாக நடத்தப்பட்டது. அதில் மனோரமா அத்தனை அழகாகப் பாடி இருந்தார். அவ மஞ்ச தேச்சுக் குளிச்சா, அது மழையில கரையவில்ல, அவ சந்தைக் கடைக்குப் போனா வந்த வழியில திரும்பவில்ல…அவ யாரு பேரைக் கூறு என்று பாடுவார் மனோரமா. எதிர்பார்ட்டி விடை தெரியாது முழிக்கவே, அவ அழகாச்சே, பேரு எலுமிச்சே என்று விடையையும் பாட்டாகவே பாடி இருப்பார் மனோரமா. நரசுஸ் காப்பி விளம்பரத்தில் மடிசாரோடு ஊஞ்சலைப் பிடித்தபடி ஒயிலாக நின்றவண்ணம் தேங்காய் சீனிவாசன் பேசும் (வட்டாவி விட்டு ஆத்தி…..) வசனத்தை அத்தனை பெருமிதத்தோடு கவனிக்கும் அவர் முகபாவம் உயிரானது.

தமிழ் வசன உச்சரிப்பின் திருத்தம், ஏற்ற இறக்கம், நயம் அனைத்தும் அவர் நாவில் குடி கொண்டிருந்தது. புறமுதுகிட்டு ஓடுகையில் அடிபட்டு இறந்தானா என் மகன் அய்யகோ என்று போர்க்களத்தில் புகுந்து மார்பில் பாய்ந்த வேல் தான் முதுகைத் துளைத்தது என்று அறிந்து பெருமிதம் பொங்கக் கதறும் புறநானூற்றுத் தாய் வேடத்தில் கலைஞர் வசனத்தை உச்சரிப்பதில் பெயர் பெற்றிருந்தவர் அவர். மைல் கற்கள் வழி நெடுக கம்பீரமாக ஊன்றப்பட்ட மிக நீண்ட நெடுஞ்சாலை அவரது கலையுலக பங்களிப்பு.

‘ஏ தில்லாங்குமரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ஷோக்காப் பாட்டு பாடுவேன் நேக்கா ஓட்டம் ஓடுவேன்’ என்று எல் ஆர் ஈஸ்வரி அதிரடிக் குரலில் பாடிக் கொடுத்த பாட்டுக்கு மேடையில் சதிராடி ரோசா ராணி என்று பெயர் மாற்றிக் கொண்டுவிடும் ஜில் ஜில் ரமாமணி அடுத்தடுத்த தலைமுறை தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் நிரந்தரமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் நடித்தபடியும் நிலைத்து நிற்பார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *