எச்சரிக்கையாக இருப்பது மூலதனத்திற்கு நல்லது !

எஸ் வி வேணுகோபாலன்

இந்திய முதலாளிகள் எத்தனை ஏழைகள் என்பதை அண்மையில் வாசித்தபோது பெரிய கழிவிரக்கம் என்னைச் சூழ்ந்தது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நதெல்லா, இத்தனைக்கும் தாமும் இந்தியர் என்றாலும், இந்தியாவின் மிக அதிகமாக ஊதியம் பெறும் 14 முதலாளிகள் ஈட்டும் மொத்த சம்பளத்தைத் தமது ஊதியமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்….இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று மனம் மிகவும் வருந்தியது. அதாவது நதெல்லாவின் ஆண்டு ஊதியம் ரூ 525 கோடியாம். நம்மவூர் முன்வரிசை முதலாளியின் ஊதியம் நாற்பது கோடிக்கும் கீழே என்றாகிறது. அதற்காக அவ்வளவு மோசமில்லை, முதல் இரண்டு ஏழை முதலாளிகள், அதாவது புருஷன் பெண்டாட்டி தலா அறுபது கோடி வாங்கி இருக்கின்றனர். வேறு யாரு, நம்ம சன் தொலைகாட்சி குழுமத்தின் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி இருவரும்தான்!

தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜோடியை அடுத்து நிற்பவர், ஒன்பதாவது இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்குப் படிப்படியாக (இந்தச் சொல்லை இந்தத் தேர்தலில் வேறு எங்கோ கேட்டது மாதிரி இருக்கு இல்லே!) உயர்ந்து வந்திருக்கும் அப்போலோ டயர்ஸ் நிறுவனத் தலைவர் ஓங்கர் எஸ் கன்வர் இவர்களை விடவும் நல்லவர். தமது கம்பெனியின் லாபம் 2.73 சதவீதம் சரிந்ததைத் தமது ஊதியத்தை 11 கோடி அதிகரித்து ஆண்டு வருவாய் ரூ 41 கோடி அள்ளிக் கொண்டு போன பெருந்தகை! இந்தக் கணிதம் எல்லாம் நம்மவர்களுக்கு எங்கே புரிகிறது.

முதலாளியாக இருப்பது எத்தனை சோதனை மிகுந்த வாழ்க்கை, பாவம்! முகேஷ் அம்பானியை எடுத்துக் கொள்ளுங்களேன், பல ஆண்டுகளாக 44 கோடி ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டிருந்தவர் 2008-2009ல் வெறும் 15 கோடி அற்பச் சம்பளம் போதும் என்று சொல்லிவிட்டாராம்….என்னடா இந்தக் கொடுமைன்னு கேட்டால், நிறுவனத்தின் பங்குகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் ஈவுத் தொகை 1390 கோடியை வைக்கவே இடம் இல்லையாம்…போதும்டா நீங்களே வச்சுக்குங்க என்று சொல்ல எத்தனை பெரிய மனசு வேண்டும் பாருங்கள். அநியாயத்திற்கு முதலாளி வர்க்கம், சுரண்டல், அது இதுன்னு வெற்றுத் தத்துவம் பேசி தொழிலாளிகளை உசுப்பி விடும் ஆட்களை ஏதாவது செய்யத் தான் வேண்டும் அல்லவா…

நல்ல நாளும் அதுவுமா இத்தனை தெரிந்து கொண்டதோடு இன்னொரு செய்தியும் கற்றுக் கொள்வோம். முதலாளி வாங்கும் ஊதியத்திற்கும், நிறுவனத்தின் நடுவாந்திர ஊதியத்துக்கும் என்ன விகிதம் என்று பார்க்கும் கணக்கீடு ஒன்று உண்டாம். அப்படி பார்த்தால், நம்ம அப்போலா டயர்ஸ் நிறுவனத்துக்காரர் கன்வர் பற்றிப் பார்த்தோமே, மனுஷன் வாங்கும் ஊதியம் (ச்சே அதுக்கும் பேரு ஊதியம் தானாமே…என்ன நியாய உணர்வு!), நிறுவன நடுவாந்திர சம்பள வரிசையைப் போல 1069 மடங்காம்! அது சரி, டயர் கம்பெனி ஓனருக்கு எத்தனை ‘டயர்டா’ இருக்கும் அன்றாடம் எத்தனை கவலை, எத்தனை தொல்லை, எத்தனை வேலை பளு, அதுக்குத் தக்கின கூலி வேண்டாமா? முதலாளிகள் கஷ்டம் யாருக்குப் புரிகிறது, எக்குத் தப்பாகி பாவம் ஒரு விஜய மல்லையாவை வெளி நாட்டுக்கு ஓடவிட்டு அப்புறம் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டியாகப் போச்சு.

சரி, நாம் வாழும் உலகுக்கு வருவோம்….மத்திய அரசைக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 10,000 அறிவிக்க வைக்கவே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது தொழிலாளி வர்க்கம். பிச்சைக்காரகளுக்கு எத்தனை பெற்றுக் கொண்டால்தான் ஜென்மம் சாபல்யம் ஆகும் என்று நினைப்பு ஆட்சியாளர்களுக்கு. உள்ளே பணக்காரப் பந்தி பரிமாறல் நடத்தவே ஆள் அம்பு, கஜானா காசு கட்டுபடி ஆகாதபோது, பொழுதன்னிக்கும் வாசலில் கத்திக் கொண்டிருக்கும் பஞ்சைப் பராரிகளை அவர்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும். ‘போ போ அப்பால, சாயந்திரமா வா ஏதாவது பார்த்துக் கொடுக்கலாம்’ என்று விரட்டவே நேரம் சரியாக இருக்கிறது அவர்களுக்கு.

நிரந்தரமற்ற காசுவல் தொழிலாளி என்ற பெயர் இப்போது பொதுத்துறை வங்கிக்குள்ளேயே வந்து இறங்கியபிறகு தனியார் நிறுவனங்களைக் கேட்பானேன். ஆதாரமே அற்று அட்டைகளால் உறிஞ்சப் பட்டுக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான ‘பாவி’களுக்கு ஆதார் அட்டைதான் குறைச்சலா? மொட்டையின் மகன் ஆண்டி, பிளாட்பார வீடு, தெருத் தெருவாய் சுற்றும் வீதி, மாதத்துக்கொரு மாநிலம் என்ற முகவரிக்கு யார் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் எல்லாம் கொட்டிக் கொடுத்துச் சீரழிந்து கொண்டிருப்பது. ஆண்டவனாப் பார்த்து, மெட்ரோ கட்டுமானப் பணியின்போது சரிந்து விழும் பாறங்கல்லைத் தலையில் போட்டோ, வேறெங்காவது மின்சாரக் கம்பிகளில் இடித்துக் கொண்டோ, மௌலிவாக்கம் மாதிரி அப்பார்ட்மென்ட் இடிந்து நொறுங்கியோ அவர்களது பிரச்சனைகளைச் சிக்கல் இல்லாமல் முடித்துத் தருவதை ஈர மனத்தோடு பார்க்க ஒரு நாதி இல்லை, நாட்டில்.

இராச் சாப்பாடு இல்லாமல் உறங்கப் போகும் இந்தியர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கணக்கைச் சொன்ன மறைந்த மால்கம் ஆதி சேஷய்யா அவர்கள் இப்போது இருந்தால் நாணிக் கோணிப் போவார்கள். ஐ பி எல் ஆட்டம் எல்லாம் நடத்தி ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்கவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டுத் தவிக்கும் நாட்டில் மைல் கணக்கில் நடந்தும் தூய்மையான குடி தண்ணீர் இல்லை என்று போராடும் மராத்திய மக்களை என்ன சொல்வது. குடிக்கவே தண்ணி இல்லையாம், இதில் வேளாண்மை வேறு நடத்தி நாசமாப் போனதெல்லாம் போதும் என்று தாயுள்ளத்தோடு முதல்வர் ஆனந்தி பென் சொன்ன குஜராத் மாநில மண் வாசம் எத்தனை மகோன்னதமானது. மூன்று மாத மழை ஒரே நாளில் பெய்தால் ஒரு வருடச் சாவு இரண்டே நாளில் விழத் தான் செய்யும் என்று சொல்லக் கூட ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை மக்களை தொலைவில் இருந்து வந்து சந்திக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களது பாசமிக்க மிரட்டல்களைக் கொண்டாடத் தெரியாத குணமென்ன குணமோ!

போதாததற்கு,பொதுத் துறையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் ஆனாலும் எப்போது பார்த்தாலும் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். காண்டிராக்டுமயம், பங்கு விற்பனை எந்த சீர்த்திருத்தமும் இவர்கள் கண்ணுக்கு அபாயமாகத் தெரிகிறதாம்….காலா காலத்தில் எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்கி இருந்ததால் ஒரு பய கேள்வி கேட்க முடியுமா…..உலக வங்கிக்கும், உலக நாடுகளில் இருந்து வரும் நிதி மூலதனத்திற்கும் இவர்கள் அப்பனா வந்து பதில் சொல்லப்போவது! ஸ்வச் பாரத் என்று எதற்கு நரேந்திர மோடி குரல் கொடுத்தார், இந்தக் குப்பைகளை எல்லாம் பெருக்கி எடுத்துப் போடு என்பதற்குத் தானே!

உலக பொருளாதாரமே சிக்கித் திண்டாடியபோது இங்கே நாங்கள்தான் காப்பாற்றினோம் என்று ப சிதம்பரம் பீற்றிக் கொண்டாலும், உண்மையில் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட இடதுசாரிகளும், விடாது போராடிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களும் தானே காரணம் என்று அமித் ஷா வகையறாக்களுக்குத் தெரியாதா என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா, உலகம் எந்த வேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது, அதானி, அம்பானி குடும்பங்களுக்கு எத்தனை கனவு இன்னும் ஈடேறாமல் இருக்கிறது….கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்ன சொற்களை மறக்கலாமா அரசு!

திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு, பல மடங்கு வர்த்தகமும், லாபமும் உயர்ந்த பிறகு எப்படி சொத்தைப் பிரித்துக் கொள்வது என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிட்டு சமாதானம் செய்த கோகிலா பென் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து ப சிதம்பரம் நிம்மதி பெருமூச்சு விட்டாரே, யார் அந்தப் பெண்மணி? சகோதர அம்பானிகளின் சாட்சாத் அம்மாவே தான். தேச பொருளாதாரம் சந்திக்க இருந்த நெருக்கடியை ஒரு சாதாரணத் தாய் தீர்த்தவைத்த சிலிர்க்கவைக்கும் தியாகக் கதைகளை தொழிலாளி வர்க்கம் கொண்டாட வேண்டாமா..அதை விட்டுவிட்டு, வெள்ளம் சூழ்ந்தபோது பம்பாயில் தகவல் தொடர்பு சேவையைத் தொடர முடியாது என்று ரிலையன்ஸ் மறுக்க, பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனம் மட்டுமே இயங்கி உயிரையும் உடைமையையும் பாதுகாக்க உதவி புரிந்ததாம்…இங்கும் தமிழக வெள்ள அபாயத்தின்போது பி எஸ் என் எல் மட்டுமே இயங்கியதாம், இதை எல்லாம் நினைவுபடுத்தி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு சூப்பர் சிங்கர் தமிழகத்தின் செல்லக் குரல் தேடலுக்கு லட்சக் கணக்கில் குறுஞ்செய்தி வசூலிக்க வேண்டி இருக்கிறது, அதிகக் காசு பிடுங்க வேண்டி இருக்கிறது, இதற்கே நேரம் இல்லையாம்…கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் சேவை, இதுக்குப் போயி அலட்டிக்கலாமா…

ஆயிற்று, இனி ஏழை பாழைகள் எதுவுமற்றவர்கள் ரயில்வே பிளாட்பாரங்களில் படுத்து இடத்தைப் பாழடித்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள்தான் பிளாட்பாரத்தையே தனியாருக்கு விற்கப் போறோம்ல….அப்புறம் சரக்கு ரயில், பயணிகள் ரயிலில் பெட்டிகளை முதலாளி வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் சொந்தப் பொறுப்பில் வைத்து விளையாடிப் பார்க்க ஆசையாக இருக்கின்றனர்…உங்களுக்கு இல்லாததா கண்ணுகளா என்று எடுத்துக் கொடுத்தால் என்ன என்று தீவிர சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.

ரகுராம் ராஜன், அதுதான் இந்த ரிசர்வ் வங்கியின் கவர்னர், கொஞ்சம் திருவாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறாரா மனுஷன், பார்வையில்லாதோர் பூமியில் ஒற்றைக் கண் உடையவனே ராஜா என்று போட்டு உடைத்துவிட்டார்… ..ஜி டி பி., பி பி பி என்று மக்களுக்குப் புரியாத எழுத்துக்களைச் சொல்லி இந்தியா எங்கோ உயரத்திற்குப் போய்விட்டது என்று ஜல்லி அடித்துக் கொண்டிருந்தது பொறுக்காமல் காற்றைப் பிடுங்கி விட்டார். வளர்ச்சி எல்லாம் ச்சும்மா…..போக வேண்டிய தூரம் அதிகம் என்று இப்படியா உளறிக் கொட்டுவது.

A woman breaks down as she is about to board a bus for Mumbai leaving her son behind.

நேற்று கூட பாருங்கள், தெலுங்கானா மண்ணில் வறட்சி, எட்டணாக் காசு இல்லை. குல்காசார்லா பேருந்து நிலையத்தில் சிறு வயது மகனை விட்டுப் போக முடியாத ஆற்றாமையோடு மாமனார் மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு, பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவனோடு வேலை தேடி மும்பைக்குப் புறப்படும் பெண்மணியின் கண்களில் இப்படியாக இடம் பெயர்ந்து செல்லும் கோடிக் கணக்கான உதிரி பாட்டளிகளின் சார்பில் கண்ணீர் கெஞ்சி நிற்கிறது…. வளர்ச்சி என்றால் சும்மாவா…வல்லரசுக் கனவு வேண்டாமா…அதற்கு எல்லாம் ஒரு விலை உண்டல்லவா….சோகமான திரைப்படம் மாதிரி ரசித்து விட்டு வேறு காட்சியை மாற்றிப் பாருங்கள்…சானலை மாற்றிக் கொள்ளுங்கள்…கோக், பெப்சி, கென்டக்கி சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள்…ஓ நீங்கள் சுதேசியா…கவலையை விடுங்கள்…பாபா ராம்தேவ் வழங்கும் பதஞ்சலி உணவுப் பொருள்களுக்கு இணையதளத்தில் ஆர்டர் கொடுங்கள்…மலிவு விலையில் அம்மா தண்ணீர் ஒரு பாட்டில் வாங்கிக் குடித்து எல்லாவற்றையும் செரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

மே தினம் வரும்போதெல்லாம் கொஞ்சம் அதிர்ச்சி முழக்கங்கள் கேட்கும்தான்….பழைய வரலாற்றுக் கதைகளை பேசிக் கொண்டே போய்க் கொண்டிருப்பார்கள்… இப்படியே காலம் போய்விடாது என்பார்கள். மக்கள் கொதித்தெழுவார்கள் என்பார்கள். ஜனநாயகக் குரல்கள் ஒலிக்கும் என்பார்கள். புரட்சியின் கீதங்கள் இளைய தலைமுறையை ஒரு நாள் கவ்வும், படிப்பினைகளில் இருந்து புதிய திசைவழியில் விடுதலைக்கான இறுதிப் போர் நடக்கவே செய்யும் என்பார்கள். அதன் ஆச்சரிய விதைகளை ஆந்திரத்தில், தில்லியில் பல்கலைக் கழகங்களில், நம்மூர் ஐ ஐ டியில் பார்த்தீர்களா என்பார்கள்…சாதியைக் கடந்து, மதங்களைக் கடந்து உழைப்பாளி மக்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டுவோம் என்பார்கள்…உங்களிடம் சொல்வதற்கென்ன, இப்படியான விஷயங்களில் உண்மை இருக்கத் தான் செய்கிறது…ஆங்காங்கு கலகங்கள் வெடிக்கத் தான் செய்கின்றன. இதை விரும்பாதவர்கள் போர்வையை இறுக்கப் போர்த்திக் கொண்டு குளுமை செய்யப்பட்ட அறைகளில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு நிம்மதியாகத் தூங்கப் பாருங்கள். ஏனென்றால், எப்போதுமே அநியாயமும் அக்கிரமும் வென்று கொண்டிருக்காது என்றுதான் சமயங்களில் தோன்றுகிறது. அதனால் எச்சரிக்கையாக இருப்பது மூலதனத்திற்கு நல்லது.

*****************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *