Tag: தமிழ்த்தேனீ

  • ஜாம்பவான்

    -தமிழ்த்தேனீ

    இன்று ஶ்ரீராம நவமி!

    ராமனின் கதை  அல்லது நினைவு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் இருப்பான்  என்பது ஐதீகம்.  அதனால் ராமாயணத்தை சொல்லும் பௌராணிகர்கள்  ஶ்ரீராமனின் படத்தின்  அருகே   ஹனுமனுக்கு  ஒரு மணை போட்டு  வைப்பார்கள். ஹனுமன் அங்கே வந்து அந்த  மணையில் உட்கார்ந்து ரசிப்பாராம். நாம் ஹனுமன் போல் அப்படிப்பட்ட மஹான் இல்லையென்றாலும் சாதாரண பாமரனாக பக்தி கொண்ட பாமரனாக ஶ்ரீராமனைப் பற்றிய நினைவுகளுடன் இருக்கும்போது நாமும் கூடவே இருப்போமா?  கூடியிருப்போமா  அப்படிக் கூடினால்  அது சத்சங்கம். அதனால்தான்  நான் சத்சங்கம் அமைவது  பாக்கியம்  என்பேன்.

    விஸ்வாமித்ரர் தசரத மஹாராஜாவிடம் சென்று  ராம லக்‌ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு   நடந்து போய்க்கொண்டிருக்கிறார். கல்லிலும் மண்ணிலும்  நடந்தே காய்ப்பேறிய கால்கள்  விஸ்வாமித்ரருக்கு  ஆனால் பூப்போன்ற  பாதங்கள் கொண்ட  செந்தாமரைப் பாதங்கள் கொண்ட ராஜாதி ராஜன் அல்லவா  ஶ்ரீ ராமன், அவனும் லக்‌ஷ்மணனும் பாதரக்‌ஷை இல்லாமல் வெறும் காலுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள் விஸ்வாமித்ரரின் பின்னாலே.

    விஸ்வாமித்ரர்  திரும்பிக் கூடப் பார்க்காமல் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே  இருக்கிறார்.  தேவாதி தேவர்களெல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு  அடடா இப்படிப்பட்ட  ஶ்ரீராமன் பின்னால் வருகையில் இரக்கமற்ற  இந்த  விஸ்வாமித்ரர் இப்படி நடக்கிறாரே  ஒரு முறை கூட  பின்னால் திரும்பிப் பார்க்காமல் வரட்டு மனதுடன் நடக்கிறாரே  என்று தேவர்களும் மனம் வருந்த

    விஸ்வாமித்ர  மஹரிஷி  தேவர்களின் வருத்தத்தை ஞானதிருஷ்டியால்  தெரிந்துகொண்டு  மனதுக்குள்  உங்களுக்கென்ன  தெரியும்  நான் ஏன் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறேன் என்று  பரப்ரும்மம் ஶ்ரீராமன்  அவன் நடந்து வருகிறான்  ஒரே ஒரு முறை  நான் திரும்பிப் பார்த்தாலும் மனமுருகி நான் ஓடிப் போய் அவன் காலிலே  விழுந்துவிடுவேனே!”

    அதன் பின்னர் அவன் எனக்கிட்ட  கட்டளையை, கடமையை அதாவது  ஶ்ரீராம  திருக்கல்யாணம் தாடகை வதம்  இன்னைமும் இன்னமும்  எவ்வளவோ கடமைகள் நின்று போகுமே. எல்லாமே ஶ்ரீராமன் என்னுள் புகுந்து இட்ட கட்டளைதானே. அதனால்தான் நான் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறேன் என்று மனதுக்குள்  நினைத்துக் கொண்டு இன்னமும் வைராக்கியத்துடன்   நடக்கிறாராம்  விஸ்வாமித்ரர்.  அடடா எப்படிப்பட்ட  முனி ஸ்ரேஷ்டர்களை  நாம் அடைந்திருக்கிறோம்  என்று நினைத்தால்  மனம் உருகுகிறது. அப்படிப்பட்ட  முனிஸ்ரேஷ்டர்களின் வழிவந்ததால்தான்  நாமெல்லோரும் விஸ்வாமித்ர கோத்ரம்,  ஶ்ரீவத்ச கோத்ரம், பாரத்வாஜ கோத்ரம்  என்றெல்லாம் பெருமை கொள்கிறோம்.

    பெரியவர்களைப் பார்த்தால்  நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்கிறோம். அவர்கள் காலிலே விழுந்து  நமஸ்காரம் செய்து  அபிவாதயே  சொல்லி  நாம் என்னகோத்திரம் இன்னாருடைய பேரன் இன்னாருடைய  பிள்ளை இந்த  வம்சம் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.

    அதுதான்  நம் முன்னோர்கள் நமக்களித்த  ஆதார் கார்ட்,  ஸ்மார்ட் கார்ட்   எல்லாமே.  அதை இப்போது  வெளிநாடுகளில்  அவர்களே கண்டு பிடித்தாற்போல்  அடையாள அட்டையாக  சோஷியல் செக்யூரிட்டி கார்ட் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள்  இங்கிருந்து வெளிநாடு செல்லும் நம்மவர்  வெளிநாட்டுக்காரன்  புத்திசாலி என்று பாராட்டிக் கொண்டிருக்கிறான்  எல்லாமே  நம் வேதங்களிலும் புராணங்களிலுமிருந்தே  எடுக்கப்பட்டது  என்பதை  அறியாமல் எப்போது  நம் மதிப்பை நாம் உணர்வோம்?

    தன்னால் பறக்க முடியும் என்பதையே உணராமல் இருந்த  ஹனுமனுக்கே  அவரால் பறக்க முடியும் என்பதை நினைவூட்டிய  ஜாம்பவான் போலே   நமக்கெல்லாம் எந்த  ஜாம்பவான் வந்து  நம்மை உணரவைக்க  முடியும் என்று ஏங்கிக் கிடக்கிறேன் நான். 

    ***** 

     ”உன்னை உணர்

     

    tamil

    ஏதோ பொம்மை ஒன்றை வைத்திருந்தேன் பலவருடங்களுக்கு முன்னால் அதன் நிழல் சுவற்றிலே இப்படி காட்சி அளித்தது அதைப் புகைப்படமெடுத்து அந்தப் புகைப்படத்துக்கு நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை இது… 

    எதுவாக நினைக்கிறோமோ அதாக
    ஆகிறோம் எல்லோரும் சொல்கிறார்கள்
    எனக்கும்  ஒரு நம்பிக்கை
    என் சிந்தை முழுவதும்
    சிறகுகளின்  ஆக்ரமிப்பு
    எனக்குச் சீக்கிரம்  சிறகு
    முளைக்க வேண்டும்
    சிட்டுக்குருவி போல்
    வானில் பறக்கவேண்டும்.  

    எனக்கு எப்போது சிறகு
    முளைக்கும் சீறிப் பாய்ந்து
    இப்பிரபஞ்சம்  சுற்றுவேன்
    என்பதுதானே என் கவலை
    கண்களை மூடி இறைவனைப்
     ப்ரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். 

    எனக்கும் சிறகுகள் முளைத்திருக்கின்றன
    என்னலும் பறக்க முடியும்!!!
    நான் அது புரியாமல் கவலையாய்
    உட்கார்ந்து  இருக்கிறேன் சுமை தாங்கியில்! 

    அனுமாருக்கு அவர் பலம்
    உணர்த்தியது  போல்
    எனக்கும் என் பலம் உணர்த்த
    யாராவது வராமலா போய்விடுவார்கள்
    காத்திருக்கிறேன்  அந்த ஞானியைத்  தேடி
    யார் அந்த ஜாம்பவான்?

         

     

     

     

    Share
  • பரிபூரணம்

    -தமிழ்த்தேனீ

    1. “காலடிகள்“

    ஒருவர் எப்போதும் ராமநாம  ஸ்மரணையிலேயே இருப்பார்.  சிறந்த  ராமபக்தர்   அவர்  எப்போதுமே இறைவனை  வேண்டுவதால்   இறைவனும் அவரைக் காக்க  அவர்  கூடவே  நடந்து வருவாராம்.  அப்போது பின்னால் பார்த்தால் இரு காலடிகள் கூடவே வருவது  தெரியுமாம் அந்த  பக்தருக்கு. ஒரு நாள்  அவர்   காலில்  அடிபட்டு  நடக்க  ஸ்ரமப்பட்டுக் கொண்டிருக்கையில்  பின்னால் திரும்பி இறைவன் வருகிறானா  என்று பார்த்தாராம்.  அங்கே இறைவனின் திருவடிகளின்  தடம் காணவில்லை.   ஒரே ஒரு ஜோடிக் கால்தடங்கள் மட்டுமே  தெரிந்ததைப் பார்த்து  இறைவா என்னைக்  கைவிட்டு விட்டாயா   உன் காலடித் தடம் காணோமே  என்றாராம்.

    அதற்கு  இறைவன் நான் உன்னை  எப்போதுமே கைவிடமாட்டேன்  இப்போது தெரிவது  உன் காலடித் தடமல்ல;   என் காலடித் தடமே  உனக்கு காலில் அடிபட்டிருப்பதால் உன்னையும் தூக்கிக் கொண்டு நான் நடந்து கொண்டிருக்கிறேன்  என்றாராம் இறைவன்.

    *****

    2. “பரிபூரணம்”

    ஒருவன் மலைப்பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டான். உடனே அவன் கைக்குக் கிடைத்த மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு இறைவா காப்பாற்று என்று கதறுகிறான். அசரீரியாக, ”நீ அந்த வேரை விட்டுவிடு நான் காப்பாற்றுகிறேன்” என்று ஒரு குரல் கேட்கிறது. அதெப்படி விடமுடியும் இதையும் விட்டுவிட்டால் நான் கீழே விழுந்துவிடுவேன் என்றான் அந்த மனிதன்.

    உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறதா நான் காப்பாற்றுவேன் என்றது அந்த அசரீரி.

    இ ரு க் கி ற து ஆனாலும் பயமாய் இருக்கிறதே என்றான் அந்த மனிதன்.

    அப்படியானால் பயப்படாமல் அந்த மரத்தின் வேரை விட்டுவிடு என்றது அசரீரி.

    இல்லை எனக்குப் பயமாய் இருக்கிறது என்றான் அவன்.

    நான் ஏற்கெனவே உன்னைக் காப்பாற்றிவிட்டேன் நீதான் கவனிக்கவில்லை என்றது அசரீரி.

    அப்படியா எப்படி என்றான் மனிதன்.

     கீழே குனிந்து பார் என்றது அசரீரி.

    அந்த மனிதன் கீழே குனிந்து பார்த்தான். அவன் காலுக்கும் பூமிக்கும் இடையே இரண்டடி இடைவெளிதான் இருந்தது.

    தெய்வமே என்னைக் காப்பாற்றிவிட்டாய் என்று சொல்லிக்கொண்டே கீழே குதித்தான் அந்த மனிதன் அனவன் குதித்தவுடன் அங்கே அந்தப் பூமியில் புதைமணல் அவனை ஊள்ளே இழுக்கலாயிற்று.

    அந்த மனிதன் அலறினான் காப்பாற்றிவிட்டேன் என்றாயே தெய்வமே இப்படிப் புதை மணலில் தள்ளி விட்டாயே என்று அலறினான்.

    கவலைப்படாதே என் மேல் உனக்கு முழு நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறதே என்றது அசரீரி.

    அப்போது ஒரு பெரிய ராக்‌ஷதக் கழுகு அந்த மனிதனைக் கால்களால் பற்றிக்கொண்டு பறந்தது.

    அந்த மனிதன் இறைவா புதைமணலிலிருந்து ராக்‌ஷதக் கழுகிடம் மாட்டிவிட்டாயே என்று அலறினான்.

    அடே மனிதா நான் எது செய்தாலும் அது உன்னைக் காக்கவே என்று நீ எப்போது புரிந்துகொண்டு எப்போது என்னை நம்பப் போகிறாய் என்றது அசரீரி.

    அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. இந்த ஒரு அசரீரிதான் இப்போது துணையிருக்கிறது இதையும் பகைத்துக் கொண்டால் நம் கதி அதோ கதிதான் என்று நினைத்து இறைவா நான் உன்னை நம்பாமல் யாரை நம்பப் போகிறேன் அதற்காக என்னை ஒரு ஆபத்திலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் என்று சொல்லிக்கொண்டே போனவன், ஆமாம் நான் பேசுவது உன் காதில் விழுகிறதா இந்த ராக்‌ஷதக் கழுகு என்னைக் கவ்விக்கொண்டு வெகு வேகமாகப் பறக்கிறதே காற்றிலே நான் பேசுவது எனக்கே கேட்கவில்லையே உனக்கு கேட்கிறதா இறைவா என்று அலறினான்.

    அந்த அசரீரியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

    இறைவா நீயென்ன செவிடா ஊமையா நான் வேண்டுவது உன் காதில் விழுகிறதா என்று அலறினான் அந்த மனிதன். அந்தக் கழுகு ஓரிடத்தில் அவனை பத்திரமாக இறக்கி விட்டுவிட்டு நின்றது.

    அந்த மனிதன் தன்னைச் சுற்றிப் பார்த்தான் அப்பாடா வேறு ஆபத்து ஏதுமில்லை. நல்லவேளை இந்தக் கழுகு என்னைக் காப்பாற்றி விட்டது; ஆனால் நீ என்னைக் கைவிட்டு விட்டாயே என்றான் அந்த மனிதன்.

    நான் உன்னைக் கைவிடவே இல்லை. மனிதனே இது கழுகு அல்ல என் வாகனம் ஆகிய கருடன். இந்தக் கருடன் மேல் நானிருக்கிறேன் என்றது அசரீரி.

    இறைவா நீயிருக்கிறாயா இந்தக் கருடன் மேல் என்னால் காண முடியவில்லையே என்று அலறினான் அந்த மனிதன்.

    காலம் காலமாக உண்மையான பக்தியுடன் என்னை நோக்கித் தவமிருந்த பக்தர்களே காண முடியவில்லையே. என்னையே நம்பாமல் போலியாக பக்தி காட்டும் உன்னால் எப்படிக் காணமுடியும் என்னை? அதுவரை நீ உன் பக்தி போலியானதாக இருந்தாலும் உன்னை காப்பது என் கடமை ஆதலால் காப்பேன். ஆனால் என்னை நீ எப்போது பரிபூரணமாக நம்புகிறாயோ அப்போதுதான் நான் உனக்கு காட்சி அளிப்பேன் அதுவரை அசரீரியாகவே இருப்பேன்.

    நீ உன்னையும் உணர்ந்து என்னையும் உணரும் நேரம் வரும்போது சரீரியாகவே காட்சி அளிப்பேன் வருகிறேன் அல்ல அல்ல எங்கும் நிறைந்திருக்கிறேன் என்றது அசரீரி.

    கழுகு தன் அகலமான சிறகை விரித்து ஜிவ்வென்று மேலே எழுந்தது அல்ல அல்ல கருடன் பறந்து போனது.

    அதன் மேல் நாராயணன் உட்கார்ந்திருப்பதைப் பல கண்கள் கவனித்தன; அவையெல்லாம் பரிபூரண சரணாகதி பெற்ற கண்கள்.

     

     

     

    Share
  • குருவும் சீடனும்!

    -தமிழ்த்தேனீ

     

    guru

    சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்?

    குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்?

    குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும்.

    சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா?

    குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  தெய்வத்தைக் காண வேண்டும்.

    சீடன் :   தெய்வத்தை  எப்படிக் காண்பது?

    குரு :  விக்ரகத்தின் மூலமாகக்  காணலாம் .    அப்பு வாயு தேயு ப்ரித்வி ஆகாயம்  என்கின்ற  வெறும் பஞ்சபூதங்களாகிய  நீர்  நெருப்பு நிலம் காற்று  ஆகாயம் ஆகியவைகளிலும்  காணலாம்;  அது உன்னுடைய  மன முதிர்ச்சியைப் பொறுத்தது.

    சீடன் :  அப்படியானால் காணும் பொருட்கள் யாவிலும்  இறைவனைக் காணும்  அளவுக்கு  மனமுதிர்ச்சி அடைய   என்ன செய்ய வேண்டும்?

    குரு :  உன்னை உணரவேண்டும்; உன்னை  உணர உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :  மீண்டும் தொடங்கிய  இடத்துக்கே வந்துவிட்டீர்களே   குருதேவா  சற்றே விளக்கமாக சொல்லக் கூடாதா!

    குரு :   தொடங்கிய இடத்துக்கே  வருவதுதான் தெய்வம்.  ஆதி அந்தமில்லாமல் ஒரு புள்ளி என்றில்லாமல் அனைத்துப் புள்ளிகளிலும் இணைவதே  தெய்வம்.  அதனால்தான்  ஆதியும் அவனே அந்தமும் அவனே என்கிறார்கள்  விஷயம் அறிந்தவர்கள்.

    சீடன் :  அப்படியானால் என் போன்ற  சாமானியர்களுக்கு  இறையை உணர   அல்லது எங்களை உணர  வேறு வழியே இல்லையா  குருதேவா?

    குரு :  இருக்கிறது சீடனே!  பக்தி மார்க்கத்தில்  மர்க்கட நியாயம், மார்ஜால  நியாயம் என்று இருவகையைச் சொல்கிறார்கள் .  மர்க்கடம் என்றால்  குரங்கு , குரங்கு  எப்போதுமே  குட்டிகளைப் பற்றிக் கொள்ளாது ஆனால் குட்டிகள்  குரங்கைப் பற்றிக் கொண்டே இருக்கும்.   பற்றியதை விட்டுவிட்டால் குரங்குக் குட்டி  கீழே விழுந்துவிடும்.

    ஆனால்  மார்ஜால நியாயம் என்பது  என்ன தெரியுமா?  மார்ஜாலம் என்றால் பூனை.  பூனை எப்போதும் தன் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டே  இருக்கும்.   எப்போதும் கூடவே இருந்து அந்தக் குட்டிகளுக்கு  எழுந்து நடக்க  ஓட  எகிறிக் குதிக்க உணவை வேட்டையாடக்  கற்றுக் கொடுக்கும்.  அதுபோலத்தான்   இறைவனும் இரண்டு விதமானவன்.

    சீடன் :  என்ன  குருவே  இறைவன் இரண்டு  விதமானவனா  அதெப்படி?

    குரு :   நீ ஏற்கெனவே கேட்டாயே  என்னை நான் எப்படி உணர்வது  என்று.  அதற்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது.  அது உன்னிலிருந்து நீயே இரண்டாகப் பிரிந்து  உன்னையே நீ கண்காணிப்பது.,    த்வைதம் அத்வைதம் என்று சொல்வார்கள்.  ஒன்றுதான்  இல்லை இரண்டு   ஆனால்  இரண்டுமே ஒன்று  என்று  அது போலத்தான்.

    சீடன் :  அதெப்படி முடியும்?

    குரு :   கண்ணாடி அறையிலே  நீ இருக்கும் போது உன்னுடைய  பல பிம்பங்கள் தெரிகிறது. அத்தனையும் வெவ்வேறா  எல்லாம் நீதானே!  அது போலத்தான்  நீ இரண்டாகப் பிரிந்தாலும் அல்லது பலவாகப் பிரிந்தாலும் அல்லது  ஆயிரம் கோடி அணுக்களாகப் பிரிந்தாலும்  அது நீதானே?  உன்னிலிருந்து பிரிந்தவைதானே  அது?

    சீடன் :   அது சரி  ஆனால்  இறை பிரிந்தால் என்ன ஆகும்?  ஒருவன் சிவன் என்கிறான் ஒருவன் விஷ்ணு என்கிறான்  யாரை நம்புவது?

    குரு :   நீ யாரை நம்புவது  என்று குழம்பாதே  நீ யாரை நம்பினாலும் அவன்தான் இறைவன். அவன் சிவன்  விஷ்ணு  என்கிற பலவடிவங்களில்  இருந்தாலும்  எல்லாம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்துவிட்டால் அதன்பின்  உன் குழப்பங்கள் தீர்ந்துவிடும். ஆனால் யாரை  நம்பக் கூடாது  என்று முதலில் தெரிந்துகொண்டால்  அதன் பின் யாரை நம்புவது என்று எளிதாகப் புரிந்துவிடும்.

    சீடன் :  குருவே ஒவ்வொருவர் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகிறார்களே அதற்குண்டான விதிமுறைகள் மாறுகின்றனவே . ஒருவன் சொல்கிறான் கடவுளுக்கு உருவம் கிடையாது  என்று;  இன்னொருவன்  உருவம் உள்ளவன்தான்  கடவுள் என்கிறான். விக்ரக  வழிபாடு கூடாது என்கிறான் ஒருவன்;  விக்ரகத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபடுவதே சிறந்தது என்கிறான் மற்றொருவன்.

    குரு :   சீடனே நீயும் மற்றவர்களும்  நானும் போய்ச்சேருமிடம்  ஒன்றுதான்  என்பதை அறிவு பூர்வமாக ஆத்ம பூர்வமாக ஒப்புக்கொண்டால்  எல்லாம் விளங்கிவிடும்.   போய்ச்சேருமிடம் ஒன்று என்றால் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  இரு சக்கர வாகனத்திலோ  காரிலோ விமானத்திலோ  போகிறார்கள். ஆனால் போய்ச்சேருமிடம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்து பார்.   இந்த  மதங்கள் என்பது வெறும் வாகனங்கள்தான்.  நாம் எப்போதாவது  வாகனத்தில் சென்று ஓரிடத்தை  அடைந்து விட்டால் அந்த  வாகனத்தையும் போகுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டா அலகிறோம்? இல்லையே… அதுபோலத்தான் மதம் என்பதும் அதிலே ப்ரயாணம் செய்யலாம்; ஆனால் தூக்கிக் கொண்டு  அலையக் கூடாது.

    சீடன் :   எப்போது நான் என்னை உணர்ந்து  இறையை உணர்ந்து  குழப்பம் நீங்கித் தெளிவு கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை குருவே!

    குரு :   சீடனே  நீயும் இறையும் வெவ்வேறு  என்று எண்ணுகிறாய்?

    அப்படி அல்ல  என்பதை உணரத்தான் உன்னை உணர் என்றேன் . அதனால்தான் அணுவைச் சத கூறிட்ட அணுவிலும் உளன்  என்கிறார்கள்  இறைவனை .  ஆகவே நீ உன்னை உணர்ந்தால் இறையை உணரலாம் . இறையை உணர்ந்தால் உன்னை உணரலாம்.  அதன் பின் இறையும் நீயும் வெவ்வேறல்ல  என்பதையும் உணரலாம்.

    சீடன் :   குருவே கடைசியாக ஒரு கேள்வி.  நான் என்னை உணர்கிறேனோ இல்லையோ  இறையை உணர்கிறேனோ இல்லையோ  குறைந்த பக்‌ஷம் என் கூடவே இருந்து காட்சிதரும் உங்களை உணர  நான் என்ன  செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்!

    குரு: சீடனே இறையும் நீயுமே வேறில்லை என்கிறேன்.  என்னை உணர  முயற்சிக்கிறேன் என்கிறாயே?  நீயே நான் நானே நீ  புரிகிறதா ?   இன்னும் புரியவில்லை என்றால்  முதலில்  உன்னை உணர்.

    சீடன்: குருவே  எனக்கு மயக்கமாக வருகிறது.

    குரு :    குழம்பினால்தானே தெளிவு வரும்;  அதனால் சீக்கிரம் நீ தெளிந்துவிடுவாய்!

    Share
  • “ கல்வி என்பது”

    தமிழ்த்தேனீ

    மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.

    மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல விளையாட்டு நல்ல உடற்பயிற்சி நல்ல கலைகளை வளர்த்துக் கொள்ளும் திறமை . என்று நல்லவைகளையே போதித்து அவைகளைப் பின்பற்றவைக்க வேண்டும் .

    ஒரு குறிப்பிட்ட வயது வரை அரசியல், சினிமா போன்ற மாயவலைகளை அவர்கள் ஒதுக்கி சுய கட்டுப்பாட்டுடன் மனதை ஒருமைப் படுத்தி ஆரோக்கியமான குளியல் சுத்தமாக உடலைப் பேணுதல் பெரியவர்களிடம் மரியாதையாக நடத்தல் நம் பாரம்பரியத்தின் மூத்த இதிகாசங்கள் புராணங்கள் வேதங்கள் ஆகியவற்றில் இருக்கும் உன்னதமான அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி தற்போதைய விஞ்ஞானமே அந்தக் காலத்து மெய்ஞ்ஞானம் என்பதை விளக்கமாக அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லி பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் நியம நிஷ்டைகள் ஆகியவற்றை போதிக்கும் வகையில் அவர்களின் பாடத் திட்டங்களை மாற்றவேண்டும் .

    நம் பெற்றோர்கள் நம் தாய் நாடு நம் கலாசாரம் நம் தேசத்தின் பெருமை பற்றிய விளக்கங்களை எடுத்துச் சொல்லி நம் தேசத்துக்காக பாடு பட்ட பெரியோர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி நம் சுதந்திரத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும் வருங்காலத்தில் நம் நாடு எப்படி முன்னேற வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நாகரீகமான நாணயமான நேர்மையான தலைமுறைகளை உருவாக்கும் வண்ணம் நம் கல்வி இருக்க வேண்டும்.அப்ப்டிப்பட்ட கல்வித் தரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ஒரு இனிய ,வாழ்க்கைக்குத் தேவையான பல அறிவார்ந்த, செய்திகளை அறிந்து கொள்ள,நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள என்னும் உண்மையை அவர்களுக்கு மனதில் ஏற்படுத்தவேண்டும் என் சிறு வயதில் ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்.

    “ தலைவாரிப் பூச்சூட்டி உன்னை

    பாட சாலைக்கு போவென்று

    சொன்னாள் உன் அன்னை

    சிலை போல ஏன் அங்கு நின்றாய்

    சிலை போல என் அங்கு நின்றாய்

    நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

    மலைவாழை அல்லவோ கல்வி

    மலைவாழை அல்லவோ கல்வி

    உன் வாயாற வாழ்த்துவாய்

    போ என் புதல்வீ

    என்கிற இந்தப் பாரதிதாசன் அவர்களின்

    பாடலில் எவ்வளவு அழகாக அத்துணை நாட்கள் பெற்றோர் அருகிலேயே இருந்து விட்டு முன் பின் தெரியாத புதுச் சூழலில் பெற்றவர்களை விட்டு தனியே பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதையும்

    கலங்கும் பிள்ளைகளுக்கு அதன் அவசியத்தையும் கல்வி என்பது மலை வாழைப் பழம்போல் அவ்வளவு இனிமையானது அது உள்ளத்துக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். சுவைக்க இனிமையாய் இருக்கும் என்று மிக எளிதாக கல்வி என்பதை விளக்குகிறது இந்தப் பாடல் . அது போல முதலில் பிள்ளைகளுக்கு கல்வி என்பது இனிமையானது நம் அறிவை வளர்த்துக்கொள்ளத் தேவையானது என்று இதமாக பதமாக உணர்த்தவேண்டும்

    இந்த அடிப்படை உணர்த்துதலை செய்யாவிடில் பிள்ளைகளுக்கு வெறும் காகிதச் சுமையாகத்தான் கல்வி மனதில் பதியும் . அடிப்படை கல்வியே மனதில் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும்ம் கடினமான செயல் என்னு எண்ணத்தை விதைப்பதே கல்வி என்பது வெகு சுலபமானது இனிமையானது என்று உணர வைத்தலே அவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்கும் முறை.

    கற்றலின் கேட்டல் நன்று என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது. அதன் பொருளை ஆராய்ந்தால்

    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

    அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”

    என்று வள்ளூவர் தலை சிறந்த செல்வமாக போற்றிய செல்வம் செவிச்செல்வம் ஏனென்றால் முதன் முதலில் மந்திர உபதேசங்கள், குருவின் மூலமாக தெளிவான குரலில் ,தெளிந்த நடையில் இலகுவான முறையில் படிப்படியாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதுதான் முதற்க் கல்வி முறை

    அப்படி கற்பிக்கும் முறையில் ப்ரதானமாக மாணவர்கள் ஆசிரியர் ,அல்லது குரு சொல்லும் சொற்களின் ஒலியை மிகக் கவனமாக காதால் கேட்க வேண்டும் ஒலி என்பது மிகவும் ப்ரதானமான சாதனம். நம்முடைய ஒலி வாங்கியாகிய காது என்னும் உறுப்பு வாங்கும் ஒலியை மூளைக்கு அனுப்பி அந்த ஒலியின் பொருளை நமக்கு உணர்த்துகிறது. ஆகவே காதுகள் வாங்கும் ஒலி நேரிடையாக மூளைக்கு அனுப்பப்படுவதால் தாமாகவே ஒரு ஐம்பது சதவிகிதம் பதிந்து விடுகிறது.

    மற்ற ஐம்பது சதவிகிதப் புரிதல் என்பது கவனம் சிதறாமல் ஒரு தியானம் போன்று குரு சொல்லுவதை மனதை சிதறவிடாமல் உன்னிப்பாக கவனித்து, மனதை அதில் செலுத்தி இன்னமும் சற்று ஆராய்ச்சி மனப்பன்மையுடன் மூளைக்கு வேலை கொடுத்து சுய சிந்தனைக்கு வேலை கொடுத்து மீண்டும் மீண்டும் குரு சொல்லியதை நினைவில் நிறுத்தி தொடர் சிந்தனைகளாக அதையே நினைத்து நினத்து அசைப்போடுதலின் மூலமாக இன்னும் சற்று விவரமாக ,ஆழ்மாக பொருள் புரியும்.

    இங்கே நான் கூறியது மன ,அல்லது மூளையின் அசைபோடுதல் ஆனால் பொதுவாக அசைபோடும் மாடுகளைக் கவனித்தால் புரியும் அவைகள் அசைபோடும் போது கன்னத்தின் தசைகள் ஆடுதலின் காரணமாக காதுகளின் உள் உறுப்புகளும் அசியும் நிலை ஏற்படுகிறது அதனால் மாடுகள் உணவை அசை போடும் போதே எண்ணங்களையும் அசைபோடுகின்றன என்றே தோன்றுகிறது . அதனால்தான் மனிதருக்கும் எண்ணங்களை அசைபோடுதல் என்னும் சொல் வழக்கு உபயோகத்துக்கு வந்திருக்கிறது.

    அல்லது சில நேரங்களில் ப்ரமை பிடித்தாற்போல் இருக்கும் மனக் குழப்பத்தை அடைந்த சிலரை தெளிய வைக்க லேசாக முதுகில் தட்டுதலோ,அல்லது பலமாக கன்னத்தில் அறைதலோ செய்கிறார்கள். இது அவர்களை அறைய வேண்டும் என்னும் எண்ணத்தில் அறையும் அறையல்ல அவர்களைத் தெளிய வைக்கும் முயற்சி.

    ஏனென்றால் அப்ப்டி அறைதலின் மூலமாக ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளைக்கு சென்று செயலற்றிருந்த மூளயின் செயல் பாட்டுக்கு காரணமாக ஆகும் என்பது மருத்துவர்களின் கண்டு பிடிப்பு,அப்படி கன்னத்தில் அறையும் போது காதின் செவிப்பறைகளில் ஏற்படும் ஒலி அதிர்வுகள் மூளையில் பதிவாகின்றன.

    ஆக மொத்தம் கற்றலின் கேட்டல் நன்று அல்லவா காட்டு மிருகங்கள் கூட வாசனையை நுகர்வதாலோ, அல்லது மற்ற மிருகங்கள் வரும் ஒலி அதிர்வுகளை காதால் கேட்கும் திறன் பெற்றிருப்பதால்தான் தங்களைக் காத்துக்கொள்ள முடிகிறது ஒரு முறை சிங்கத்தின் கர்ஜனை,அல்லது அதன் நடையால் ,ஓட்டத்தால் ஏற்படும் அதிர்வுகளின் ஒலியை காதில் வாங்கிவிட்ட மிருகங்கள் அடுத்த முறை மிக எளிதாக சிங்கத்தின் வருகையை அறிந்துவிடும் திறன் பெறுகின்றன. ஏனென்றால் காதால் கேட்ட ஒலிகள் மூளையில் மிக எளிதாகப் பதிகின்றன.

    பேசும் கிளி என்று சொல்கிறோம் நாம் பேசுவதை அடிக்கடி காதால் கேட்கும் கிளிகள் அவைகளை அறியாமலே நாம் சொல்வதை திருப்பிச் சொல்லும் வல்லமை பெறுகின்றன . அதே போலத்தான் குழந்தையாகப் பிறந்த நமக்கு நம்முடைய தாயார் பேசும் மொழி காதால்,கேட்பதன் மூலமாகவே மனதில் பதிந்து நம் தாய்மொழியையே கற்கும் அளவுக்கு மூளைத்திறன் பழக்கப்படுகிறது. பொதுவாக ஊமைகளின் குழந்தைகளும் ஊமைகளாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்,

    ஏனென்றால் அங்கு ஒலிகள் எழுப்ப யாருமில்லாததுதான் முதற் காரணம் . அப்படிப் பிறந்த குழந்தைகளை ஒலிகள் கேட்குமிடத்தே வளரவிட்டு அவைகளுக்கு பேசும் சக்தியை மீட்டுத் தந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே காதுகள் மிக முக்கியமான கருவி கல்வி கற்க, குழந்தை முதன் முதலில் கருவாகி இரண்டு சென் டி மீட்டர் அளவில் இருக்கும் போதே அதன் இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது . அந்த இதயத்துடிப்பின் லப்டப் ஓசைதான் முதன் முதலாக ஒவ்வொரு ஜனனமும் கேட்கும் முதல் ஒலி.

    அப்போதே கேட்க ஆரம்பித்துவிடுகிறது . முதன் முதலாக ஒரு குழந்தையின் இயக்கம் என்று பார்த்தால் காதால் கேட்பதுதான். அதன் பிறகுதான் மற்ற இயக்கங்கள் தொடர்கின்றன. அதனால்தான் கற்றலின் கேட்டல் நன்று ஒலிதான் முதலில் மனிதனின் மொழிக்கே வழி வகுத்தது’

    தாயின் கர்பத்திலிருக்கும்போதே தாயின் தாலாட்டையும் , கேட்கும் திறன் கொண்டது குழந்தை, மஹாபாரதத்தில் அர்ஜுனன் மகன் அபிமன்யூ தாயின் கர்பத்திலிருக்கும் போதே கிருஷ்ணனால் விளக்கப்பட்ட சக்கரவியூகத்தின் நுணுக்கத்தை கேட்டு அறிந்தான் என்கின்றனர்.

    முதன் முதலில் ஒலியின் மூலமாகத்தான் மனிதனும் ,மிருகங்களும் தங்களின் இயல்பையும், உணவுதேடும் முறையையும் கற்றன .ஒலி என்பதே வாழ்க்கைக்கு தேவையான ஜீவாதாரம் . ஒலியும் ஒளியும் என்கிறார்களே .அதில் கூட ஒலிக்குதான் முதன் முதல் மரியாதை வானொலி வந்து பல காலம் ஆகிய பின்னர்தான் தொலைக்காட்சி வந்திருக்கிறது ஒலியின் ஸ்ருதி பேதம் தான் எண்ணங்களை வெளிப்படுத்தும் முறையாக அமைந்தது.

    கத்திப் பேசும் பலருக்கு நடுவே அமைதியாகப் பேசும் நபரை நம் கவனிக்கிறோம் . அமைதியாக சொல்லும் போது கவனிக்கப் படாத போதுதான் உரக்க கத்திப் பேசி கவனத்தை ஈர்க்க முயல்கிறோம். ஆகவே நம் கவனம் என்பது எதால் ஈர்க்கப்படுகிறதோ அங்கே நம் மூளை உற்றுக் கவனிக்க ஆரம்பிக்கிறது. மூளை கவனிக்க ஆரம்பித்தால்தான் ஒருமுகப்படுதல் சாத்தியமாகிறது. ஒருமுகப்படுதல் சாத்தியப்படும்போதுதான் உள்வாங்க முடிகிறது

    உள்வாங்கினால்தான் புரிகிறது, புரிந்தால்தான் லயிப்பு வருகிறது லயிப்பு வந்தால் இன்னும் அதிகமாகப் புரிகிறது. அதிகமாப் புரிந்து கொண்டால்தான் கல்வி மேம்படுகிறது. கல்வி என்பது வாங்கிக் கொண்டதை புரிந்து கொள்ளாமலே அப்படியே வாந்தி எடுத்து அதிக மதிப்பெண் பெறுவதல்ல, புரிந்து கொண்டு நம்முடைய எண்ணங்களையும் சேர்த்து ,நம் ஆராய்ச்சியின் விளைவுகளையும் சேர்த்து அளிக்கும்போதுதான் மதிப்பெண் அதிகம் பெற்ற மாணாக்கரைக் காட்டிலும் அதிகமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடிகிறது.

    பல முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதன் பிறகு முன்னேறாமல் போவதும் இந்தப் புரிதல் விகிதாசார அடிப்படையிலேதான் விளைகிறது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியான தருணத்திலே ஏற்கெனவே முதல்; மதிப்பெண் பெற்ற மாணவர்களை பத்திரிகைகள் பாராட்டிய மாணவர்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எழுதும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே மேலும் முன்னேறி யிருக்கிறார்கள் என்னும் விளைவுகளை.

    ஆகவே கல்வி என்றாலே புரிந்து கொள்ளல் என்பது மறுக்க முடியாத உண்மை .

    அந்தப் புரிந்து கொள்ளல் என்னும் தன்மையை ஆராய்ந்து அடிப்படைக் கல்வியை வடிவமைத்தாலே கல்வி முறையை மாற்றினாலே கல்வியும் மேம்படும் ,மாணவர்களும் மேம்படுவர். கல்வியின் தரம் குறைவதற்கு மிக முக்கியமான காரணம் பாடத் திட்டங்கள் சரியாக வடிவமைக்கப் படாமை , தற்போது கல்வி பாட அமைப்பில் படிக்கும் பல செய்திகள் வாழ்க்கைக்கு என்றுமே தேவையில்லாதவை.

    மற்றும் இனி வருங்காலத்தில் நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பண்பாடு சம்பந்தமான செய்திகள், மற்ற நாடுகளின் வளர்ச்சி பற்றிய விவரங்கள்” நம் நாடு காண வேண்டிய வளர்ச்சி பற்றிய செய்திகள். விஞ்ஞான முன்னேற்றங்கள் நம்முடைய பழைய மரபுகள் சமபந்தமான செய்திகள். மரபுகளைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் செய்திகள்.போன்ற பல செய்திகளை அளிக்கலாம். அவற்றையெல்லாம் விடுத்து,

    ஆபாசமான திரைப்படங்கள், வன்முறை கூடிய திரைப்படங்கள் மந்திரம் மாயம் செய்யும் தொலைக் காட்சித் தொடர்கள் ஆகியவைகளை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அளித்தால் எப்படி ஒரு நல்ல தலைமுறை உருவாகும்? ஆகவே மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் நல்ல செய்திகளை நல்ல ஞானத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை அவர்களும் கண்டு குழந்தைகளையும் காணவைக்கவேண்டும். ஒழுக்கம் போதிக்க வேண்டுமானால் போதிப்பவர் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் . ஆகவே நாமும் நல்ல விதத்தில் நம்மை மாற்றிக் கொண்டு நம் வருங்கால சந்ததிகளையும் நல்ல விதமாக வளர்த்தால் நம் நாடும் நம் கலாசாரமும் நம் பெருமையும் உயரும் என்பதில் ஐயமில்லை

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • “நளபாகம்”

    -தமிழ்த்தேனீ

    இல்லத்தரசியை நாம் வாழ்க்கைத் துணை என்று கூறுகிறோம். ஆங்கிலத்திலே Better Half என்கிறார்கள். ஆக மொத்தம் கடைசிவரை நம்மோடு சுகதுக்கங்களில் பங்கு கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தில் நாம் வாழ்க்கைத் துணை என்கிறோம். ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் பாதி வரை வந்தாலே போதும் என்கிறார்கள் மீதியை நான் வேறு ஒரு Better Half ஓடு கழிக்கிறேன் என்கிறார்கள்.

    நம் இந்து மதத்தில் நம் வீட்டு கிருஹ லக்ஷ்மி என்கிறோம்; மஹாலக்ஷ்மி என்கிறோம். ஆகவே கிருஹத்தையும் செல்வத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு அவளிடம் கையேந்துவதையே பெருமையாக நினைக்கிறோம். என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் அப்படி.

    இப்படி இருக்கையிலே என்னோடு வாழ்க்கைத் துணையாய் தொடர்ந்து வருகின்ற என் வீட்டு மஹாலக்ஷ்மியை நினைத்துப் பார்த்தேன்.

    இத்தனை வருடங்களாகப் பொறுமையாக என் சுக துக்கங்களில் சோதனையான காலங்களில் கூட என்னுடனே வாழ்கின்ற அவள் மிகப் பொறுமையாக சமைத்துப் போட்டுவீட்டு நிர்வாகத்தையும் கவனிக்கிறாள்.

    நாம் என்ன செய்கிறோம் அவளுக்கு என்கிற எண்ணம் எழுந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து என்னால் இயன்ற அளவில் ஏதேனும் உதவிகள் செய்கிறேன்.

    ஆனாலும் ஒரு திருப்தி வரவில்லை. அதனால் எனக்குத் தோன்றிய ஒரு யோசனையைக் கடைப்பிடிக்கலாம் என்று வீட்டிலுள்ளோர் அனைவரையும் அழைத்து எப்பவும் உங்க அம்மா சமைக்கறாங்க நான் அவங்களுக்கு உதவி செய்யலாம்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.   ஒரு வாரமாவது அம்மாவை ஓய்வு எடுக்கச் சொல்லி அனுமதித்து நான் சமைக்கப் போறேன் என்றவுடன் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை! வியப்பு பயம் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது என்னால்.

    அவர்களைச் சமாதானப்படுத்தி ஒரு நாள் சமைக்கிறேன். நீங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால் ஒரு வாரம் சமைக்கிறேன் என்றேன். வேறு வழியில்லாமல் எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.

    முதல் நாள் பெரும் சவாலான முதல் நாள் எப்படி சமைக்க வேண்டும் என்று யோசனை செய்து எல்லோரையும் அழைத்து ஒரு ஒப்பந்தம் நான் சமைக்கும் போது யாரும் அங்கே வரக் கூடாது. அம்மா மட்டும் எனக்கு வேண்டிய உப்பு புளி மிளகாய் கடலைப் பருப்பு பெருங்காயம் போன்ற சமைக்க உதவும் பொருட்களையும் எடுத்து வைத்துவிடவேண்டும் என்னால் எது எங்கிருக்கிறது என்று தேட முடியாது என்றேன்.

    என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் நான் ஒரு முறை சமைத்த அனுபவத்தை அவளிடம் சொன்னேன் அது அவள் மனதில் நிழல் படமாக ஓடுகிறது என்று புரிந்தது. ஆனாலும் அந்த அனுபவத்தை வைத்து அதன் பின்னர் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறேன் சமையலில் என்று அவளுக்கும் தெரியாதே. ஆகவே அவள் பார்வையைத் தவிர்த்துவிட்டு தொடர்ந்தேன். அவளும் என்னையே குறும்பாகப் பார்த்தபடி சரி என்றாள்.

    என்ன சமைக்க வேண்டும் நம் வீட்டில் உள்ளோருக்கு எது அதிகமாகப் பிடிக்குமோ அதையே செய்து இவர்களை வசப்படுத்திகொண்டுதான் ஒரு வாரம் சமாளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் ப்ரகாரமே சமையற்கட்டுக்குள் நுழைந்து என் நளபாகத்தின் முக்கியத் திறமைகளை உபயோகித்துச் சமைத்தேன். என்ன மெனுவென்று பார்க்கலாம்! எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். ஆகவே என் வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்த என் சமையல் அனுபவத்தை சற்றே அசைபோடுவோம். உங்களுக்கும் சலிப்புத் தட்டாமல் இருக்கும்.

    என் தாயார் இருந்த காலம் அது. சுவையோடு சமைத்து என் நாவை வளர்த்து என் உடலை வளர்த்து அன்போடு ஊட்டிய தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள். அப்போதெல்லாம் வீட்டு விலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே வரமாட்டார்கள். அப்படிப்பட்ட தருணங்களில் என் சமையல்தான். அடிக்கடி அவரிடம் சென்று யோசனை கேட்டுச் சமைப்பேன். அவரும் என் சமையலைப் பொறுமையாகச் சாப்பிடுவார்.

    அப்போது சென்னையில் தங்கசாலைத் தெரு அருகில் இருந்த கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் இருந்த வீட்டில் பின் பக்கமாடியில் நாங்கள் இருந்த காலம்.

    அப்படி ஒருநாள் சமைக்க வேண்டிய அவசியம் வந்தது. என் தாயாரிடம், ”அம்மா… நான் இன்னிக்கு மிளகு ரசம் வைக்கறேன்!” என்று சொல்லிவிட்டு எப்படிச் செய்ய வேண்டும் என்னும் சமையல் முறையை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தேன்.

    சாதம் வடித்தேன். அதன் பிறகு என் அம்மா சொன்னபடி அடுப்பிலே ஈயச்சொம்பை வைத்தேன். ஒரு சந்தேகம் கேட்க பின்பக்க மாடியிலிருந்து கீழே இறங்கி முன்பக்கம் சென்று வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்த என் தாயாரிடம் மீண்டும் ஒரு முறை மிளகு ரசம் வைக்கும் முறையைச் சொல்லுங்கள் என்றேன். அவரும் விளக்கமாகச் சொன்னார். ”சரி அம்மா புரிந்தது!” என்று சொல்லிவிட்டுப் பின் பக்க மாடிக்கு சென்று அடுக்களைக்குள் நுழைந்தேன்.

    அடுப்பைப் பார்த்தேன் ஈயச் சொம்பைக் காணவில்லை. ஒரு வேளை நாம் ஈயச் சொம்பை அதன் இடத்திலே இருந்து எடுக்காமல் மறந்து போய்விட்டோமோ என்று எல்லா இடத்திலும் ஈயச் சொம்பைத் தேடினேன் கிடைக்கவில்லை. மீண்டும் கீழே வந்து அம்மா ஈயச் சொம்பைக் காணோமே என்றேன். என்னப்பா நீதான் ஈயச்சொம்பை எடுத்தாச்சு அதுக்குள்ள ஒரு சந்தேகம்னு வந்து கேட்டியே என்றார்.

    ஆமாம் நாமதானே ஈயச்சொம்பை அடுப்பிலே வைத்துவிட்டு அதன் பிறகுதானே கீழே வந்தோம் என்பது நினைவுக்கு வரவே ஆமாம் அம்மா நான்தான் அடுப்பிலே வைத்தேன் இப்போ அடுப்பிலே காணோமே என்றேன். சரி ஈயச் சொம்பிலே தண்ணீர் கொட்டி வெச்சியா இல்லே அப்பிடியே வெச்சியா என்றார் . (அப்போதெல்லாம் கிருஷ்ணாயிலில் எரியும் பம்ப் ஸ்டவ்தான் உபயோகிப்போம்) அப்பிடியேதான் வெச்சேன் தண்ணி கொட்டலையே என்றேன்.

    அவர் சரி முதல்லே மேலேபோயி ஸ்டவ்வை அணைச்சுட்டு அந்த ஸ்டவ் இருக்கும் மேடையில் பாரு இருக்கும் என்றார். சரி பாக்கறேன் என்று மேலேபோய் ஸ்டவ்வைப் பார்த்து அதை முதலில் அணைத்தேன். அந்த ஸ்டவ் இருக்கும் மேடையிலேயே ஈயச்சொம்பு உருகிப்போய் திரவ வடிவமாகி அப்படியே திடவடிவமாக ஆகி உலக மேப்பையே வரைந்திருந்தது. அட உருகிப் போச்சு என்று தெரிந்தது.

    கீழே ஓடிப்போய் அம்மா ஈயச்சொம்பு உருகிபோச்சு என்றேன் கலவரத்துடன், ஸ்டவ்வை அணைச்சுட்டியா என்றார் அம்மா அணைச்சுட்டேன் என்றேன் .ஏம்பா மிளகு ரசம் வைக்கறேன்னு சொல்லிட்டு ஈயச்சொம்பு ரசம் பண்ணிட்டியே என்று அம்மா சிரித்தாள். நல்லவேளை ஸ்டவ் வெடிக்கலே ஜாக்கிரதையா இருக்கணும். அடுப்பிலே ஈயச்சொம்பு வைக்கும்போது அதிலே தண்ணி இல்லாம வைக்கக்கூடாது எல்லாம் அனுபவம்தான் பயப்படாதே இனிமே ஜாக்கிரதையா இரு என்றார்கள்.

    அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கைத் துணையின் மனதிலே படமாக ஓடிக்கொண்டிருக்கும் என்று புரிந்தது. இப்போ புரியுதா என் பொண்டாட்டியின் பரிகாசப் புன்னகைக்குப் பொருள்!

    அடேடே நான் சமைக்க வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சே…! பரவாயில்லே… எப்பிடியோ சமைச்சாச்சு, எல்லாம் ரெடி! எல்லாரும் தட்டைப் போட்டுண்டு உக்காருங்க என்று சொல்லிவிட்டு ஒவ்வொன்றாக கொண்டு வந்தேன். என்ன ஐட்டம்ன்னு காத்திருக்கீங்கன்னு புரியுது!

    1. வத்தக் குழம்பு 2, பருப்புத் துவையல் 3. வெள்ளரிக்காய் பச்சடி .4. உருளைக்கிழங்கு ரோஸ்ட் கூடவே பொரிச்ச அப்பளம்.

    அப்பிடியே அதையெல்லாம் பார்த்து மலைச்சுப் போயிட்டாங்க என் வாழ்க்கைத் துணைவியாரும் பிள்ளைகளும். சரி உக்காந்து சாப்ட்டு பார்த்துட்டு அதுக்கப்புறம் சொல்லுங்க பயப்படாதீங்க நான் உங்க வயித்துக்கு கியாரண்டின்னு சொல்லிகிட்டே என் வாழ்க்கைத் துணைவியாரையும் பிள்ளைகளையும் உட்காரவைத்து நானே பரிமாறினேன்.

    யாருக்கு என்ன பிடிக்குதோ சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் உண்ணுவதையே பார்த்துக்கொன்டிருந்தேன். முதலில் எல்லோர் கண்ணிலும் பீதி. அதன் பிறகு சுவைக்கச் சுவைக்க ஆச்சரியம்! அப்பா கலக்கிட்டீங்க என்று ஏகோபித்த பாராட்டுக்கள்.  அப்பாடா பட்ட கஷ்டம் வீணாகலேன்னு ஒரு திருப்தி எனக்கு.

    எல்லோரும் உண்டு முடித்துவிட்டு என்னை உட்காரவைத்து அப்பா நீங்களும் சாப்பிடுங்க என்று அன்போடு பரிமாறினர்.

    என் வாழ்க்கைத் துணைவி ஆச்சரியத்துடன் இவ்ளோ நல்லா சமைப்பீங்களா நீங்க? எனக்குத் தெரியவே தெரியாதே என்றாள். வத்தக் குழம்பு எல்லாமே ரொம்ப நல்லா செஞ்சிருக்கீங்க என்றவள் ஆமாம் இந்த வத்தக் குழம்பு செய்ய எனக்கும் சொல்லிக் குடுங்களேன் என்றாள்.

    சரி சொல்லித் தரேன் என்று சொல்லிவிட்டு முதல்லே புளியை கரைச்சு வெச்சுக்கணும். அப்புறம் பாத்திரத்திலே என்ன காய் போடணுமோ அதை வதக்கி எடுத்து வெச்சிகிட்டு கொஞ்சம் உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் இதெல்லாம் வறுத்து தனியா எடுத்து வெச்சிக்கோ. பாத்திரம் நல்லாக் காஞ்சதும் அதிலே இந்தக் காயைப் போட்டு உடனே கரைச்சு வெச்ச புளியை அதிலே கொட்டி கொஞ்ச நேரம் கொதிச்சவுடனே கொஞ்சம் மஞ்சள் பொடி போடணும்.

    அதுக்கு தேவையான உப்பைச் சேர்த்து அப்பிடியே குழம்பும்பொடியையும் போட்டு கலக்கி நல்லா கொதிக்க விடணும் அதிலே இந்த வறுத்த பெருங்காயம் உளுத்தம் பருப்பு கடுகு கருவேப்பிலை எல்லாம் போட்டு கொதிக்க விடு என்றேன் சரிங்க என்றாள் என் துணைவி. அப்பிடியே ஒரு மூடி போட்டு மூடிவெச்சிடு என்றேன் நான். சரிங்க என்றாள் என் துணைவி.

    அதுக்கப்புறம் அப்பிடி ஒண்ணு நாம செஞ்சோம்கிறதையே மறந்து போயி துணி துவைக்கப் போயிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்தா  குழம்பு அப்பிடியே வத்திப் போயி கருப்பா கருகிப் போயி பாத்திரத்தோட பாத்திரமா ஒட்டிக்கும். அதுதான் வத்தக் குழம்புன்னேன். எல்லோருமாக சேர்ந்து என்னை அடிக்க ஓடி வராங்க யாராவது காப்பாற்றுங்களேன்!

    பின் குறிப்பு:  பொதுவாகவே இந்தப் பெண்களுக்கு நம்மை வேலைவாங்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தாலும்  நாம் வேலை செய்தால்  இரக்கம் வரும்.  மனசு ஆகாது அடிக்கடி வந்து நான் வேணா ஏதாவது  உதவட்டுமா என்று கேட்பார்கள்.                     ஒரு நாள் சமைக்கவே இவ்வளவு யோசிக்கவேண்டி வந்ததே! ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கறதுன்னு யோசிச்சு 360 நாளும் சமைச்சு நம்ம வாழ்நாள் முழுவதும் சமைச்சுப் போட்டு நம்மை ஆதரிக்கும் நம் தாயார் , வாழ்க்கைத் துணைவி இவர்களை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போமே. அப்படி நினைத்தால் இனியாவது அவர்கள் அன்போடு ஆசையோடு கைப்பக்குவத்தோடு நம் நலத்துக்காகச் சமைக்கும் சாப்பாட்டைக் குறைசொல்லாமல் வீணடிக்காமல் சாப்பிடத் துவங்குவோம்!

    Share
  • “உம்மாச்சி காப்பாத்து!”

    “நமக்கு என்ன வேண்டும் என்றே அறியாத நாம் வரம் கேட்கிறோம்! என்ன வரம் கேட்பதென்றே தெரியாமல் வரம் கேட்கிறோம். நமக்கென்ன வேண்டுமென்று நம்மைவிட ஆண்டவன் நன்கறிவான். நமக்குக் கேட்கவும் தெரியவில்லை; இருப்பதன் அருமை தெரிந்து அனுபவிக்கவும் தெரியவில்லை. ஒன்றும் தெரியாத மானுடர் நாம் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அதன் விளைவாக எழுந்த ஒரு சிறுகதை இது.

    – தமிழ்த்தேனீ

    ***

    “உம்மாச்சி காப்பாத்து!”

    எப்பவுமே குளிச்சிட்டு உம்மாச்சி படத்துகிட்டே போயி நெத்தியிலே குங்குமமோ திருநீறோ இட்டுண்டு கைகூப்பிண்டு என்ன சொல்லணும்னு தாத்தா சொல்லிக் குடுத்திருக்கேன் என்றார் சடகோபன்.

    எனக்குத் தெரியுமே கைகூப்பிண்டு “உம்மாச்சி காப்பாத்துன்னு  சொல்லணும்” என்று சொல்லிவிட்டு தலையைச் சாய்த்து அவரைப் பார்த்து சிரித்தாள் பேத்தி ஹன்சிகா. அவள் சிரிப்பிலே மயங்கி அள்ளிஎடுத்துப் ”போடீ மயக்கீ…எப்பவும் என்னை மயக்கறே நீ!” என்றவாறு முத்தம் கொடுத்தார் சடகோபன்.

    ”போ தாத்தா எனக்கு உன்னோட மீசை குத்தறது என்னைக் கீழே இறக்கிவிடு!” என்று திமிறி இறங்கி ஓடினாள் ஹன்சிகா.

    சிரித்தபடி சோபாவில் வந்து உட்கார்ந்தார். பெருமாளே எப்பவும் நான் உங்கிட்டதான் வேண்டிக்கறேன். இதுவரைக்கும் என்னைக் கைவிடாமே காப்பாத்திட்டே. எப்பிடிடா பொண்ணோட படிப்பு கல்யாணம், சுகப் ப்ரசவம், அழகான ஒரு பேத்தி எல்லாமே நான் வேண்டிண்டா மாதிரியே இன்னி வரைக்கும் காப்பாத்தறே. எனக்கும் 59 வயாசியிடுத்து. கடமையெல்லாம் முடிஞ்சு போச்சு கொஞ்ச காலமாவது நிம்மதியா நோய் நொடியில்லாம வாழணும். எப்பவும் இப்பிடியே காப்பாத்து பெருமானே என்று கைகுவித்து வேண்டிக்கொண்டு நிம்மதியாக சாய்ந்து கண்ணை மூடினார்.

    திடீரென்று மார்பில் ஒரு பளீரென்று வலி, அப்படியே தோளிலும் பரவியது, அவருக்கு வியர்த்துக் கொட்டியது. வாய் திறந்து தண்ணி வேணும்ன்னு சொல்ல முயன்று தோற்றுப் போய் அப்படியே சரிந்தார் சடகோபன்.

    ”ஏன்னா என்ன ஆச்சு?” என்று அலறிக்கொண்டே அவரை மடியிலே வைத்துகொண்டு அப்படியே பக்கத்தில் டீபாயின் மேலிருந்த டெலிபோனில் டாக்டரை அழைத்தாள் சடகோபனின் மனைவி சந்தியா.

    டாக்டர் பரமேஷ்வரன் வந்து அவரைப் பரிசோதனை செய்துவிட்டு, உடனடியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம் என்று ஆம்புலன்சை வரவழைத்தார்.

    மருத்துவமனையில் படுத்திருந்தார் சடகோபன். பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்த சந்தியா உங்களுக்கு ஒண்ணுமில்லே பயப்படாதீங்க. நல்ல வேளையா சரியான நேரத்துக்கு இங்கே கூட்டிண்டு வந்துட்டோம். ”என்ன ஆச்சு திடீர்ன்னு?” என்றாள்.

    ”என்னமோ திடீர்ன்னு மார்லே ஒரு வலி; வேர்த்துப் போச்சு அவ்ளோதான் தெரியும்” என்றார். ஏதோ இந்த வேளைக்கு பகவான் காப்பாத்திட்டார். சரி கொஞ்ச நேரம் தூங்குங்க என்றபடி போர்வையைச் சரி செய்தாள் சந்தியா. அவரும் தூங்கத் தொடங்கினார்.

    டாக்டர் பரமேஷ்வரன் சொல்லிக்கொண்டிருந்தார். நல்ல வேளை ஹார்ட் அட்டாக்தானோன்னு நான்கூடப் பயந்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்லே, ஆமாம் என்ன சாப்பிட்டார் என்றார். பூரியும் உருளைக்கிழங்கும் தான் சாப்பிட்டார். என்றாள் சந்தியா. அஜீரணம்தான் அதான் வாயுப் பிடிப்பு. பயப்பட ஒண்ணுமில்லே. இனிமே கொஞ்சம் நாக்கைக் கட்டுப்படுத்தணும், ஜெரிக்கறாமாதிரி எதைவேணா சாப்பிடச் சொல்லுங்க. கண்ட கண்ட எண்ணெயிலே சமைக்காதீங்க. அவருக்கும் வயசாயிட்டே போவுதே. கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கணும். தினமும் நடக்கச் சொல்லுங்க, மத்தபடி பயப்பட ஒண்ணுமில்லே.  நீங்க ஹாஸ்பிடல் ஃபார்மாலிட்டியெல்லாம் முடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டுபோயிடலாம். இந்த மாத்திரையெல்லாம் தொடர்ந்து மூணு வேளைக்கு குடுங்க. கவலைப்படாதீங்க என்றார் சந்தியாவிடம்.

    சரி டாக்டர், சரியான நேரத்துக்கு தெய்வம் மாதிரி உடனே வைத்தியம் செஞ்சு காப்பாத்திட்டீங்க என்றாள் சந்தியா.   சரிம்மா..அதெல்லாம் எங்க கடமைதானே; ஒரு விஷயம் அவருக்கு வெறும் மூச்சுப் பிடிப்புதான்; ஹார்ட் அட்டாக் வந்துதுன்னு பயந்துறப் போறார். எல்லாம் சரியாயிடும். சரி நான் கிளம்பறேன் என்றபடி டாக்டர் சென்றார்.

    சந்தியா கௌண்டருக்குப் போய் பணத்தைக் கட்டிவிட்டு அறைக்கு வந்து எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு செல்போனில் டாக்ஸிக்கு சொல்லிவிட்டுச் சடகோபனிடம் வந்தாள். சடகோபன் கண்ணயர்ந்திருந்தார்.

    ஏங்க.. எழுந்திருங்க. நாம் வீட்டுக்கு போகலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார். உங்களுக்கு ஒண்ணுமில்லே; வாயுப் பிடிப்புதானாம். சரி மெல்லமா என் கையைப் பிடிச்சிண்டு எழுந்திருங்க. கையை நீட்டுங்க நான் பிடிச்சுக்கறேன் என்றாள் சந்தியா. உங்களைத்தான் சொல்றேன் கையை நீட்டுங்க என்கையை பிடிச்சுக்குங்க என்ற சந்தியா அவர் கை சில்லென்று இருந்ததை உணர்ந்து பதறினாள். சடகோபனின் கை கீழே படுக்கையில் விழுந்தது.

    என் கையை பிடிச்சுக்குங்க…கையை நீட்டுங்க என்கிற சந்தியாவின் குரல் கேட்டு கண்விழித்தார் சடகோபன். எதிரே நின்று கொண்டிருந்தவர் கையை நீட்டியபடி கையைக் குடுங்க சடகோபன் என்று சொல்லிவிட்டு மேலும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். சடகோபனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவருக்கு. என்ன சரி…சரி சுதாரிச்சிக்கோங்க சடகோபன். இப்போ சொல்றேன் நீங்க உங்க ஸ்தூல சரீரத்தை விட்டுட்டு வந்தாச்சு. புரியலையா உங்களுக்கு இதய வலி வந்துதே டாக்டர் பரமேஷ்வரன் தானே வைத்தியம் செஞ்சார்; நல்ல கைராசிக்காரர். அங்கேதான் உங்களுக்கு உயிர் போயிடுத்து என்றார் எதிரே இருந்தவர்

    என்ன கைராசி என்னை சாகடிச்சிட்டாரே என்றார் சடகோபன். இல்லியே உங்களுக்கு வந்து இதய வலியே இல்லையே… வெறும் வாயுப்பிடிப்புதானே நீங்கதான் பயந்து போயிட்டீங்க இதய வலின்னு. டாக்டர் சரியான வைத்தியம்தான் செஞ்சார். நீங்களாதான் செத்துப் போனீங்க. அவருமேலே ஏன் பழியைப் போடறீங்க. உங்களுக்குத் தூக்கத்திலேயே ஆயுள் முடிஞ்சு போச்சு. அவர் மேலே தப்பே இல்லே என்றார் எதிரே இருந்தவர்.

    என்னது நான் செத்துப் போயிட்டேனா! நெஞ்சு வலி வந்து வேர்த்துக் கொட்டித்தே அப்பக் கூட என்னைக் காப்பாத்து பெருமாளேன்னு சேவிச்சேனே, அதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல்லே கூட வேண்டிண்டே இருந்தேனே… என்னைக் காப்பாத்து என்னைக் காப்பாத்துன்னு. எப்பவுமே பெருமாளே காப்பாத்துவியே இந்த தடவை கைவிட்டுட்டியா.

    நான் எப்பவுமே கைவிடமாட்டேன். இப்பக் கூட நான் கையை நீட்டிண்டுதானே இருக்கேன். சடகோபன் நீங்கதான் பிடிச்சுக்க மாட்டேங்கறீங்க. நான் எல்லாருக்கும் கைகுடுக்கறேன். நீங்க புத்தி தெளிஞ்சு பிடிச்சிண்டாதானே இதுக்குமேலே நான் என்ன செய்ய முடியும் என்றார் காளமேகம்.

    டாக்டர் பரமேஷ்வரனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ட்றீங்களே என்றார் சடகோபன். வெறும் வாயுப்பிடிப்புக்கே என்னைக் காப்பாத்த முடியலே அவராலே. அவருக்கு நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கறீங்க. அதெல்லம் இருக்கட்டும்… நான் ஏன் உங்களுக்கு கைகுடுக்கணும் நீங்க யாரு? என்றார் சடகோபன்.

    நான் ஏற்கெனவே சொன்னேன் நீங்க கவனிக்கலே போலிருக்கு! என்னைக் காளமேகப் பெருமான்னு கூப்பிடுவாங்க. எனக்கு திருமோகூர்தான் சொந்த ஊர். நான் இந்த உலகத்திலே இருந்து விடைபெற்று வர ஆத்மாவையெல்லாம் கையைப் பிடிச்சு இதோ கீழே தெரியறதே இந்த விரஜா நதியைத் தாண்டி அழைச்சிண்டு போவேன். அதுக்கப்புறம் அவங்கவங்க செஞ்ச கர்மாக்களின் பலனை அவங்க அனுபவிப்பாங்க என்றார் அவர் கையை நீட்டியபடி.

    சாகடிசுட்டு இப்போ எதுக்கு கையைக் குடுக்கறீங்க நான் எல்லாக் கடமையையும் முடிச்சிட்டு அப்பாடா கொஞ்சகாலம் நிம்மதியா வாழலாம்னு இருந்தேன். என்னைப் பொசுக்குன்னு சாகடிச்சுட்டு எதுக்கு இப்போ கையைக் குடுக்கறீங்க என்றார் எரிச்சலுடன் சடகோபன்.

    எனக்கு காளமேகம்னு பேரு ஆனா எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அதுனாலே எங்கிட்டே எரிச்சலோட பேசக்கூடாது. இதமாப் பேசணும்… பக்தியா பேசணும். என்னைக் காப்பாத்து என்னைக் காப்பாத்துன்னு இவ்ளோ காலமா நீங்க யாரைவேண்டிகிட்டீங்களோ அவன்தான் நான் என்றார் காளமேகம்.

    பெருமாளே நீதானா அது! உன்னை நான் பாப்பேன்னு நெனைக்கவே இல்லையே. என்னை எப்பவுமே நீதானே காப்பாத்தினே இந்த தடவை மட்டும் ஏன் காப்பாத்தாமே விட்டுட்டே என்றார் சடகோபன். யார் சொன்னது நான் உங்களை காப்பாத்தாம விட்டுடேன்னு இப்பவும் நான் உங்களைக் காப்பாத்தி இருக்கேன் என்றார் காளமேகம்.

    நான் உனக்குக் கை குடுக்க மாட்டேன் என்னைக் காப்பாத்துன்னு நான் வேண்டிண்டேன் நீ என்ன செஞ்சிருக்கணும் என்னை காப்பாத்தி உயிரோட வெச்சிருக்கணும்; அதைவிட்டுட்டு காப்பாத்தாம விட்டுட்டியே என்றார்.

    சடகோபன் மனுஷங்களுக்கு நிகழ்காலத்திலே நடக்கும் போதே எதையும் புரிஞ்சிக்கற சக்தியில்லே. வருங்காலத்தை எப்பிடி உணரமுடியும், உங்களோட வருங்காலம் என்னான்னு எனக்குத் தெரியும். இப்போ நீங்க உயிரோட இருந்தா என்ன நடந்திருக்கும்னு ஒரு சினிமா காட்றேன் பாருங்க என்றார் காளமேகம்.

    அங்கே ஒரு காட்சி விரிந்தது. சடகோபனை வீட்டுக்கு அழைத்து போகிறாள் சந்தியா. அடுத்த வாரம் அவருக்கு திடீரென்று மறுபடியும் முதுகு வலி, சரி வாயுப் பிடிப்புதான் மறுபடியும் வந்திருக்கும்னு ஏற்கெனவே டாக்டர் பரமேஷ்வரன் எழுதிக் குடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனை எடுத்து அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார் சடகோபன். முதுகுவலி அதிகமாயிற்று; தாங்கமுடியாத முதுகுவலி. எதுக்கும் டாக்டர் பரமேஷ்வரனைப் பாத்துட்டு வரலாம் என்று கிளினிக்குக்கு போயி டாக்டர் முதுவலி தாங்க முடியலே என்றார்.

    பரமேஷ்வரன் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு சந்தியாவிடம் தனியாக சடகோபனுக்கு கிட்னிலே ப்ராப்ளம் உடனே வைத்தியம் செய்யணும் என்றார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து வைத்தியம் செய்து கொண்ட பிறகு, சந்தியாம்மா சடகோபனுக்குக் கிட்னி பாதிக்கப்பட்டிருக்கு. அவருக்கு வாரத்துக்கு ஒரு தடவை டையாலிசிஸ் செஞ்சிக்கணும், இல்லேன்னா யாராவது கிட்னி குடுத்தா ஆபரேஷன் செஞ்சு பாக்கலாம், ஆனாலும் இந்த வயசுக்கு மேலே உறுதியா ஒண்ணும் சொல்ல முடியாது என்றார். இதைச் சடகோபன்சார் கிட்டே பக்குவமா சொல்லி வைத்தியத்துக்கு தயார் செய்யுங்க என்றார் பரமேஷ்வரன்.

    வியாதியே வரக் கூடாது பெருமாளே இருக்கறவரைக்கும் ஆரோக்கியமா இருக்கணும் நெனைச்சேனே இப்பிடி ஆயிடுத்தே என்று அழுதார் சடகோபன். இப்போ எதுக்கு நீங்க அழறீங்கன்னே புரியலே! அப்பிடி என்ன ஆச்சு, நீங்கதான் இப்போ அங்கே இல்லையே நான்தான் உங்களைக் காப்பாத்திக் கூட்டிண்டு வந்துட்டேனே என்றார் காளமேகம்.

    ஒரு வினாடி யோசித்துவிட்டு உண்மையை உணர்ந்தவராய் ஆமாம் நீதான் எப்பவும் காப்பாத்தறா மாதிரியே இப்பவும் காப்பாத்திட்டியே!

    என்று கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் இரு கைகளையும் கூப்பி “உம்மாச்சி காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு இப்போ புரிஞ்சுது உன் கையைக் காட்டு நான் என் கையாலே பிடிச்சுக்கறேன். இல்லே இல்லே நான் கையை நீட்டறேன் என் கையை நீ பிடீச்சுக்கோ இதுதான் சாஸ்வதம் என்று கையை நீட்டினார் சடகோபன்.

    காளமேகம் புன்னகையுடன் சடகோபனின் கையைப் பற்றிக் கொண்டார். விரஜா நதி ஓடிக்கொண்டிருக்கிறது.

    Share
  • சைவமும் வைணவமும்!

    -தமிழ்த்தேனீ

     “ஜாதி  இருக்கிறது“
    “சிலரை சீண்டினால் நாம் தாக்கப் படுவோம்
     சீலரைச் சீண்டினால் நாம் ஆக்கப் படுவோம்”                    -தமிழ்த்தேனீ

    நிகமாந்த  மஹா தேசிகர்,  இராமானுஜர்  ஆகியோர் வைணவத்தையும்   வளர்க்க, பரப்ப  வந்த மகான்கள். ஆதி சங்கரர் சைவத்தைப் பரப்பவந்த மகான். இப்படிப் பல மஹான்கள் வாழ்ந்த  இந்தப் புனிதபூமியில்  இன்னமும்  சத்விஷயங்கள் எவை அசத் விஷயங்கள் எவை என்னும் ஞானத்  தெளிவில்லாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சற்றே ஞானத்தை நோக்கி நுகர்வோமா?

    “உறையின் அழகில் மயங்காது கத்தியின் கூர்மையை நோக்குவதுபோல் சான்றோரின் சாதியைக் கேட்காது அவர்களின் ஞானத்தைக் கேட்பீராக!!“ என்று கபீர்தாசர் கூறுகிறார்.

    நோக்குதல் என்பதோர் உயர்செயல். நோக்கும் நோக்கெலாம் அன்னை பராசக்தி  என்றார் மஹாகவி பாரதியார். வேத வாக்கியம் என்ன சொல்கிறது என்றால், ஒரு சொல்லை ஒரு வசதிக்காக ஒரு வரிசையில் போட்டுப் பொருள் கொள்கிறோம், ஆயின் அனைத்தின் ஆணிவேரும் இறைமையில் கொண்டுபோய் சேர்க்கிறது என்று. விதை இல்லாமல் வேரே இல்லை  என்பது உண்மைதானே.   ஜாதி என்ற அடையாளத்தை ஒருவர் இந்நோக்கில் பார்த்தால் அதுவும் அங்குதான்  இட்டுச் செல்லும்.

    ஜாதி ஒரு அடையாளம். அடையாளம் என்பது என்ன? எதனால்  வருகிறது…இப்படியே நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்துகொண்டே போனால் அது நம்மை அழைத்துச் செல்லும் இடம் பூஜ்ஜியம் அதாவது  பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்துகொண்டு நம்மை எல்லாம் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இறையை நோக்கியே நகர்கிறது.  மாத்வர்கள் பூஜ்ய ஶ்ரீராகவேந்திராய என்கிறார்கள். இதைத்தான் அவரவர்  பாணியில்  ஶ்ரீ நிகமாந்த  மஹாதேசிகரும்  ஸ்ரீராமானுஜரும், ஆதிசங்கரரும் தெளிய உரைத்தனர். யதார்த்தம், வெகு யதார்த்தம், நாரணனும் சிவனும் ஒண்ணு  இந்த ஞானமில்லாதவன்  மண்ணு  என்பார்கள் பெரியோர். அமலன் ஆதிபிரான் என்று நம்மாழ்வார் அருளிச்செய்த  திருவாய்மொழியார் நம்மாழ்வாரைத் தமிழ்செய்த மாறன், சடகோபன் என்றெல்லாம் வர்ணிப்பதில்  மிகவும் சந்தோஷம்.

    ஆகவே  சைவத்துக்கும் வைணவத்துக்கும் சாக்தத்துக்கும்  இருக்கும் பேதங்கள் இடையே மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டவை. இதிலே குழப்பமே இல்லை.  ஸ்மார்த்தர்களும் (சைவர்களும் ), வைணவர்களும் எல்லோருமே.  ஸ்ரீமன் நாராயணனின் அடியார்கள்தாம். சாக்தத்தைக் கடைப்பிடிப்போரும் அப்பனில்லாமல் அம்மைக்கும் மதிப்பில்லை  என்பதை உணர்ந்தவரே.  மனிதர்களின்  அணுக்கூற்றுக்களின் படியே விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கொண்டாலும், வேதமூலமாக எடுத்துக் கொண்டாலும்  பெண்குழந்தைகள் தாயைவிடச் சற்றே அதிகமாகத் தகப்பனை விரும்புவதும், பிள்ளைக் குழந்தைகள் தகப்பனைவிடச் சற்றே அதிகமாகத் தாயை விரும்புவதும்தான் மிக நுணுக்கமான வேதியல் பூர்வமான வேதபூர்வமான நுணுக்கம்.

    ஆகவே சற்றே அதிகமாகத் தாயை அதாவது சக்தியை  விரும்புவோரும் தகப்பனை  வெறுப்பதில்லை, மாறாகத் தாயை, ஆதி சக்தியைச் சற்றே அதிகமாக விரும்புகிறார்கள் அவ்வளவே.

    ஆதிசங்கரரே காலடி என்னும் க்ஷேத்திரத்தில் நாராயணனை  நரசிம்மாவதாரமாய்க் கண்டவர் என்று கூறுவர். அதற்கு ஒருகதை  சொல்வார்கள் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள். ஒரு காட்டிலே ஒரு வேடுவன் ஆதிசங்கரர் தவம் செய்து கொண்டிருப்பதைப்  பார்த்துவிட்டு, அவர் என்ன செய்கிறார் என்று வினவ அவர்  வேடுவனிடம்  பரப் ப்ரும்மமான ஸ்ரீமன் நாரணனைக் காண  தவமிருப்பதாக சொன்னார். அதற்குக் கண்களை மூடிக் கொண்டிருந்தால்  எப்படி அவரைக் காண முடியும் அவர் எப்படி இருப்பார் என்று கூறுங்கள், இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத பகுதிகளே இல்லை நான் கண்டுபிடித்துத் தருகிறேன் என்றான். அதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீமன் நாராயணன் சிங்கமுகமாகவும்,  மனித உடலாகவும் இருப்பார். அவரை அந்த வேடுவன் கண்டுபிடிப்பது கடினம் என்று கூறவே வேடுவன் எனக்குத் தெரியாத ஒரு மிருகமும் காட்டிலில்லை   அந்த மிருகத்தை மாலை அந்தி சாயும் பொழுதுக்குள்  கண்டுபிடித்துத் தருவதாகவும் அப்படி இல்லையென்றால்  தானே இறந்துவிடுவதாகவும் சத்தியம் செய்துவிட்டு தேடத்துவங்கினான்.   அவன் சிந்தையில் சிங்கமுகமும் மனித உடலும் முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது. மாலை வரை தேடிவிட்டு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை புரிந்துகொள்ள ஒரு கயிறு எடுத்து அதை முடிந்து மரத்தில் மாட்டித் தலையை உள்ளே நுழைக்கும்போது  ஸ்ரீமன் நாராயணன் நரசிங்க அவதாரம் அவன் எதிரில் நின்றது பயங்கரமான கர்ஜனை  கேட்டது. அட இங்கேதான் இருக்கிறாயா? நல்லவேளை  ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் என் உயிர் போயிருக்குமே  என்று மரத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து,  அதுதானே என்னிடம் சிக்காமல் எந்த மிருகமும் இருந்தததில்லையே வா என்று வேடன்.  அழைத்தவுடன் அமைதியாக வேடுவனிடம் வந்து அவன் கட்டிய கயிற்றில் கட்டுப்பட்டு அவன் பின்னே நடந்தது  நரசிங்கம்.

    பக்தர்களின் உண்மையான  ஏகாக்ர சித்தத்துக்கு ஆண்டவன் கட்டுப் படுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்ரீமன் நாராயணன் அந்த வேடுவனிடம் கட்டுப்பட்டான்.

    அவன் ஆதிசங்கரரிடம் அழைத்துச் சென்று இதோ நீங்கள் கேட்ட  மிருகம் என்று நரசிங்கத்தைக் காட்டினான்.  ஆனால் அவர் கண்களுக்கு கயிறு மட்டும் தெரிந்தது, நரசிங்கம் தெரியவில்லை ஒரு வேடுவனுக்கு காட்சி அளித்த ஸ்ரீமன் நாராயணா  காட்சி அளிக்கக் கூடாதா எனக்கு என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்ள ஸ்ரீமன் நாராயணன்  காலடி என்னும் இடத்தில் அவருக்குக் காட்சிதந்தான் என்று கூறுவர். அதனால் அன்றும் இன்றும் சங்கராசாரியார் அவர்களும்  நாராயணா, நாராயணா, நாராயணா என்று மும்முறை  கூறுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல  ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமப் பாராயணத்தைச் சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். (தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்) அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.

    சைவம் வைஷ்ணவம் அனைத்துக்கும் பொதுவானவன் ஸ்ரீமன் நாராயணன். அங்கு பேதமில்லை. பேதங்கள் நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். புத்தருக்கு ஒரு போதிமரம் போல் நமக்கு அறிவுறுத்தும் போதிமரங்களே  முக்கியம். ஆராய்ந்து பார்த்தால் வைணவமோ சைவமோ இருபாலாரும் அனைவருமே வணங்கத்தக்க பெரு நிலையை அடைந்த பரமாத்மாக்கள்,

    ப்ராமணர்களால் வணங்கப்படும் ராமன் க்ஷத்ரியன், க்ருஷ்ணன்   ஆயன் இடையன், சிவன் அம்பலக் கூத்தன் அனைத்துத் தேவதைகளும்  அனைத்து தெய்வங்களுமே ப்ராமணர் அல்லாத குலத்தைச் சேர்ந்தவர்தாமே? அப்புறம் ஜாதி என்ன? மதம் என்ன?   அறிவு விழித்துக் கொள்ளுதலே நலம்.

    தோணிமாறலாம், பாதை மாறலாம் போய்ச்சேர வேண்டியது  அனைவருக்குமே  ஒரே இடம்தானே? ஆனால் பெரியவர்களைப் பற்றி எழுதும்போது  கூடியவரையில் அவர்களுடைய இயல்பான நடைப் பாடுகளையும், மிகச் சரியான செய்திகளையும்  நாம் ஆராய்ந்து வெளியிட்டோமானால் நமக்கு இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.  மூலக்கூறுகள் சிதையாமல் இருக்கும் என்பது   அடியேனின் தாழ்மையான கருத்து.

    “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
    பட்டாங்கில் உள்ளபடி”  (நல்வழி என்னும் நூலில்  ஔவையார்)

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
    நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
    நோக்க நோக்கக் களியாட்டம்.” [ஐய பேரிகை] என்று மஹாகவி பாரதியார் கூறுகிறார்.

    என் சிறுவயதில் என் தந்தையாரைக் காண  எல்லாச் சாதிகளையும்  அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் வணிகத்  தொடர்பாக  வருவார்கள். அவர்கள் அழைத்துக்கொள்ளும் விதம் என் மனதிலே பதிந்தது.  வாங்க செட்டியாரே, வாங்க நாயிடு, வாங்க முதலியாரே, வாங்க பாய், வாங்க கிறித்துவரே  என்றெல்லாம் ஜாதியின் பெயரையே சொல்லி  அழைப்பார்  என் தந்தை. அவர்களும்  சொல்லுங்க  ஐயங்காரே  இன்னிக்கு  நாம் என்ன  செய்யணும்  வியாபாரத்தைப் பத்தி பேசுவோமே  என்பார்கள்.

    ஆக  அவர்கள் மனதிலே ஜாதிகளின் மேல் வெறுப்பில்லாமல் இயல்பாக வாழ்ந்தனர்.   எல்லோருமே அவரவர்  ஜாதி வழக்கங்களை அவரவர் மத வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் அடுத்தவர்  ஜாதியை, மதத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள்.

    ஆனால் நாம்  இப்போது எல்லோருடைய மதத்தின், ஜாதியின் பெயரை வாய்விட்டு  சொல்லாமல்  இருக்கிறோமே தவிர  மனத்திலே மற்ற  ஜாதிகளை, மதத்தை  மதிக்காமல் வெறுக்கிறோம்.    மனிதனைப் பார்ப்பதில்லை. அவன் குலத்தினைப் பார்க்கிறோம், மதத்தினைப் பார்க்கிறோம்.

    நம் எல்லோருடைய  நோக்கமும்  நாம் எந்த  நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும்  வாழ்கின்ற  நாட்டை நம் தேசம் போலக் கவனித்து  நாம் வாழும் நாட்டின்  முன்னேற்றத்துக்கு உதவ வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து  சில விஷமிகள் தூண்டிவிடும்  பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு  தீவிரவாதமென்னும் பிரிவினையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நம் இலக்கும் நோக்கும்  வேறு. செல்ல வேண்டிய தூரமும் அதிகம். குறுக்கு வழிச்சாலைகளுக்குள் புகுந்தால் போகும்நேரம் அதிகமாகும். மிகச் சரியான முடிவு அது மட்டுமல்ல  பழமை வாய்ந்த பல பொக்கிஷங்கள் இப்போதே நம்மால் கவனிக்கப்படாமல் போகின்றன.

    21ஆம் நூற்றாண்டின் சமூகவியற்பார்வையில் 11ஆம் நூற்றாண்டு   இந்தியாவைக் காணவியலாது. ஆகவே 21ஆம்  நூற்றாண்டிலும்  எல்லோராலும் படிக்க, கவனிக்கக்கூடிய வகையில் எல்லாப் பொக்கிஷங்களையும் (very chip) போன்ற விஞ்ஞான வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் சேமித்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். பழையதைப் பேசுவதைவிடப் பாதுகாத்து இனிவரும் சந்ததியினர் விவரம் அறிந்துகொள்ள சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்துதல் நம் நோக்கமாக இருக்க வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுவோம்.  அனைவரும் கைசேருங்கள்!

    வந்தே மாதரம்!
    ஜெய்ஹிந்த்!

     

     

    Share
  • வயோதிக வரம்!

    -தமிழ்த்தேனீ

    மிகவும் ப்ரயாசைப்பட்டு எழுந்து மெதுவே நடந்து  கண்ணாடி முன் நின்றார்  சபேசன். கண்ணாடியைப் பார்த்தவருக்கு  அதிர்ச்சி!  பத்து நாளைக்குள்ளே  இப்பிடியா மாறிப் போய்ட்டேன். கண்ணெல்லாம் குழி  விழுந்து ரப்பையெல்லாம் வீங்கிக்  கன்னம் ஒட்டிப் போய்  முகவாய்க்கட்டை  நீண்டு  முகமே சிறுத்து என்ன ஆச்சு! ஒரே ஒரு வைரல் இன்பெக்‌ஷன் காய்ச்சல் இப்படி ஆக்கிவிடுமா?  சரியான  நேரத்துக்கு மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்துகொண்டாயிற்று. எப்போதுமே  காய்ச்சல் வந்தால் ரெண்டே நாளிலே குணமாகி அவர் மீண்டும் தெளிந்துவிடுவாரே.

    ஓ வயோதிகம்!   அதிக வயதானாலே வயோதிகம்தானே!  இளமை அது போய் முதுமை வந்தாயிற்று!  கன்னத்தின் பக்கவாட்டு முடிகள், தலைமுடி  புருவம் எல்லாமே வெள்ளையாய்!  நல்ல வேளை அவருக்கு வழுக்கை கிடையாது. ஆனாலும்  காதோர நரை வந்து கட்டியம் கூறும்  என்று அவர் எழுதிய  கவிதை நினைவுக்கு வருவதைத்  தடுக்க முடியவில்லை.  எதையுமே கவிதையாக, கதையாக எழுதும்போது வரும் வலியை விட நேரிலே அனுபவிக்கும் வலி தாங்க முடியாத ஒன்று என்று அவருக்குப் புரிந்தது.

    கரு கருவென்ற  அகலமான விழிகளுடன் சுருள் முடியுடன் அவருக்கே உரித்தான பொன் நிறத்தோடு  நிமிர்ந்த  செருக்கான மார்பகமும்  விரிந்த தோள்களும்   மனதிலே பயமே இல்லாமல் வளைய வந்து  கன்னியரை  மயக்கிய அந்த  சபேசன் எங்கே போய்விட்டான்!   கன்னியரிடம் கைவரிசையைக் காட்ட மனமில்லாத நேர்மை அவரைக் காப்பாற்றியது என்றாலும் அவரைச் சுற்றி வட்டமிட்ட  கன்னியர்களின்  காந்த  அலைகளிலிருந்து தப்பிப்பது கஷ்டமாகவே இருந்தது என்பது உண்மைதானே.

    முரட்டு ஆண்களும் இவன்கிட்ட எதுக்கு வம்பு என்று தள்ளிப் போனவர்களே அதிகம். இவரைப் பார்த்தவுடன்  இவர் மனதில் உள்ள தைரியத்தைப் படித்தாற்போல் எதற்கும் தள்ளியே இருப்போம் இவரிடம் என்று ஜாக்கிரதையாக இருந்தவர் பலர். அப்படிப்பட்ட ஆண்மை! எங்கே போனது  எல்லாம்?  உடம்பால் அழியின் உயிரால் அழிவர் என்று திருமூலரும்,  தன் வயோதிகத்தைப் பிள்ளைக்கு கொடுக்க  எண்ணிய  யயாதியும் நினைவில் வந்து போயினர். கடைசியில் தன் முதுமையை வாங்கிக் கொண்ட புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்தாராம் யயாதி.   அப்படிப்பட்ட   சக்தி  அவருக்கு இருந்தாலும்  தன் வயோதிகத்தைப் பிள்ளைக்கு கொடுப்பாரா அவர்?

    தனக்கு என்ன நேரினும் பிள்ளைகள் நன்றாகத் தீர்க்க ஆரோக்கியமாகத் தீர்க்க ஆயுசோடு  தீர்க்க  சுமங்கலிகளாக இருக்க வேண்டும்  என்று தினமும் தூங்கும் முன் எல்லோர் பெயரையும் சொல்லி  இறைவனிடம் வேண்டிக்கொண்டு தூங்குபவரல்லவா அவர்.  அதற்கேற்றார்ப் போல் அவரைக் கண்ணில்வைத்து  இமையில் தாங்கும்  பிள்ளையும் பெண்களும் மருமகளும் மருமகன்களும் பேரப் பிள்ளைகளும் பேத்தியும்  குறிப்பாக  அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் துணைவி  பாருவும்  அவருக்கு  அதிர்ஷ்ட வசமாக அமைந்திருந்தது.  இது கொடுப்பினைதானே  எத்தனை பேருக்கு  கிடைக்கிறது இந்தக் கொடுப்பினை என்று மனம் பூரித்தாலும்  இந்த  வயோதிகமும் வியாதிகளும்  அவரை நிலைதடுமாற வைத்தன என்பதே  உண்மை.

    பால் மரத்துப் போன  பசு, ஒன்றுக்கும் உதவாமல்  ஆண்மை இழந்த  காளைகளை  அடிமாட்டுக்கு விடுவது நினைவுக்கு வந்தது அவருக்கு! ஒரு வேளை நியாயம் தானோ  இதெல்லாம்!   அன்பான மக்களாயிருந்தாலும்  நடைமுறை வாழ்க்கையில் எத்தனை நாட்கள்  வயோதிகத்தை  அடைந்த  மாடானாலும் மனிதரானாலும் தாங்க முடியும்?  அதுவும் இயற்கை உபாதைகளில்  உதவி, ஒரே இடத்தில்  படுத்த படுக்கையில் படுக்க வைத்துக் குளிப்பாட்டி இருக்கும் அவசரகதி வேலைகளுக்கு நடுவே  எத்தனைத் தாயுள்ளமாக இருந்தாலும்  தாக்குப் பிடிக்க முடியுமா  மனிதர்களால். வெறுக்காமல் இருக்க முடியுமா அவர்களால் அவர்களை அறியாமலே?  இயலாது  என்றே தோன்றியது  அவருக்கு.

    நல்ல வேளை  இன்னும் அந்த  மோசமான  நிலமைக்கு  அவர்  செல்லவில்லை நடமாடிக்கொண்டு  அவர் வேலைகளை அவரே  செய்துகொண்டிருக்கிறார்.  60 வயதிலே இருதய நோய் வந்து  அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்  நிச்சயமாக இன்னும்  பத்து  வருடங்களுக்கு உங்களுக்கு  கவலையில்லை. உங்களுக்கு இந்த  அறுபது வயதிலும் ரத்த அழுத்தமோ  சர்க்கரை நோயோ இல்லை ஆகவே  நல்லவிதமாக அறுவை சிகிச்சை முடிந்தது என்று சொன்னது  நினைவில் வந்தது.

    இப்போது அவர் எழுவதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பார்ப்பவர்கள் 60 வயதுக்கு மேல் சொன்னால் ஒப்புக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட  கட்டுக் கோப்பான  உடம்பு. அதுவா இப்படித் தளர்ந்து  ரத்த அழுத்தம் வந்து தலைசுற்றல் வந்து இப்படி வாடுகிறது என்று நினைக்கும் போது அவருக்கு இயலாமையினால் கண்ணீர்  வந்தது.

    அவர் கண்ணீரை  அவரே  காண விருப்பப்படாததால்  கண்ணாடியிலிருந்து பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பிவந்து உட்கார்ந்தார். எப்படியும் இனி வரும் நாட்களில் வயோதிகம் அதிகரிக்குமே, வியாதிகள் நெருங்குமே அப்போது  தளர்ந்து படுத்த  படுக்கையாய் ஆகி எல்லோருக்கும்  கஷ்டத்தை அளிப்பது  சரிதானா   என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்  சபேசன்.

    பார்வையைக் கிருஷ்ணன் படத்துக்கு திருப்பி  என்ன பரமாத்மா கண்ணா  இப்பிடிச் செஞ்சிட்டே  வாழும் வரைக்கும் உன்னோட  லீலைகளையே பாடி ஆடி எல்லோரையும் மகிழ்வித்தேனே  என்றார்.   சபேசா  என்றொரு குரல் கேட்டது. வாசலில் அவர் நண்பர்  கிருஷ்ணன் வந்துகொண்டே  என்ன சபேசா  இப்போ பரவாயில்லையா  என்றார்.

    வாப்பா ஏதோ பரவாயில்லே; ஆனாலும் முழுசாச் சரியாகலே  என்றார் சபேசன்.

    நமக்கு எல்லாத்துக்கும்  அவசரம் வரும்போது  சீக்கிரம் வரதெல்லாம் போகும்போது  சீக்கிரம் போகாது சபேசா.  பொறுமையா இரு  மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடு. நினைச்சதும் ஏறிப் போயிட  ஏணியா இருக்கு  என்றார்  அவர் மனதைப் படித்தாற்போல்.    இந்த பல்பு உயிரை விட்டுடுத்து. கியாரண்டி  முடிஞ்சு ஒரு நாளைக்குள்ளே  உயிரை விட்டுடறாமாதிரியே  தயார் பண்றாங்க. அறுபது வயசானாலே  அதுக்கப்புறம் வாழற வாழ்க்கை போனஸ் மாதிரிதானே?  அதை நாம  குறைசொல்ல முடியுமா?  லைட்டுக்கு  ஒரு பல்பு வாங்கணும் அப்போதான்  எரியும்  வாங்கலாமேன்னு வந்தேன்.  அப்பிடியே உன்னையும் பாத்துட்டுப் போலாமேன்னு  வந்தேன்.  சரி நான் வரேன்  என்றபடி கிளம்பிப் போனார்.  கிருஷ்ணன் படத்தையே பார்த்து  என்ன நான் கேட்டது காதிலே விழுந்துதா?  அதான்  அவனை அனுப்பினியா  என்றார் புன்னகைத்தபடி.  அதெல்லாம்  சரி  ஏணி இல்லேதான்  ஆனா வேற  வழியா  இல்லே  போகணும்னு முடிவு பண்ணிட்டா எப்பிடியும் போகலாமே  என்றார்.

    நாம நெனைச்சா எல்லாம் நடக்கறதா என்ன? இன்னிக்கு பாத்துக் கடை லீவுங்கறான் நாளைக்குதான்  பல்பு கிடைக்குமாம்.  இங்கே  வேற கடையுமில்லே.  இன்னிக்கு இருட்டுலேதான் இருக்கணும் போல  இருக்கு  என்றார்  கிருஷ்ணன் மீண்டும் வந்து.  என்ன கிருஷ்ணா இதுக்கு போயி ஒரு நாளைக்குதானே  அட்ஜஸ் பண்ணிக்கோ  நாளைக்கு வாங்கிப் போட்டுக்கலாம் என்றார் சபேசன்.  சரி நான் வரேன்  நமக்கு எல்லாமே  அவசரம்தானே  என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போனார்  கிருஷ்ணன்.

    ஆமாம் நாம வாழற  வாழ்க்கையே  போனஸ்தானே  என்று கிருஷ்ணன் சொன்னது நியாயமாவே பட்டுது அவருக்கு.  போனசைக் குறை சொல்ல முடியாது  அனுபவிச்ச  வரைக்கும் போதும்னு திருப்தியா இருக்க வேண்டியதுதான். ஆனா இந்த  பல்பைக் கிருஷ்ணன் தூக்கிப் போட்டா மாதிரி  நிலமை வரக் கூடாது என்று தீர்மானித்தவர் கிருஷ்ணன் படத்துக்கிட்டே போயி  நின்று கைகூப்பினார்.  ஏதோ நினைத்தவராய் அவருடைய  சகதர்மிணி பார்வதி கிட்ட   சொல்லிட்டுப்  போகலாம்னு நெனைச்சவர்  வேண்டாம் அவளாலே தாங்க முடியாது; கூறாமல் சன்யாசம் கொள்  அப்பிடீங்கறது உடம்புக்கும்  மனசுக்கும் மட்டுமில்லே  உயிருக்கும்தான்  என்று தெளிந்து ஒன்றும் சொல்லாமலே  வெளியே  சென்றார்.

    ஒவ்வொரு அடியாக எடுத்து ஆனால் உறுதியுடன் கடற்கரை நோக்கிப் போனவர்க்குச் சிரிப்பு வந்தது. நல்ல வேளை அவர் நீச்சல் கத்துக்கலை.   கடலில் இறங்கி நடந்து போய்க்கொண்டே இருந்தவர் ரொம்பத் தூரம் நடுக்கடலுக்கே மிதந்து அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கினார். ஒரு பகுதியில் மூழ்கினார், சிறு சிறு மீன்கள் வந்து கடிக்கத் தொடங்கின. அவருக்குள் ஒரு பயம் வந்தது. தப்பு செஞ்சிட்டமோ  பதறித் துடித்து எப்படியாவது கரை சேர்ந்துவிடவேண்டும்  என்று கையைக் காலை அடித்துக்கொண்டு  முயன்றார்

    மச்சாவதார கிருஷ்ணன் ஒரு பெரிய  மீன் வடிவில்  அவரை நோக்கி  வந்துகொண்டிருப்பதை  அறியாமலே.   மச்சாவதாரம்  வாலைச் சுழற்றி ஒரு அடி அடித்தது.  திடுக்கிட்டு விழித்தார்  சபேசன்  .  கிருஷ்ணன் படத்தின் எதிரேதான் நின்று கொண்டிருக்கிறார். பக்கத்தில்  அம்மா படம் அவரையே பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. சபேசா புற்றுநோய் வந்து பத்து வருஷம் அவஸ்தை பட்டபோதுகூட நான் இப்பிடி நெனைக்கலையே இப்போ என்ன ஆய்ப்போச்சு?

    உடம்புன்னு ஒண்ணு இருந்தா ஏதாவது வரும் போகும். உயிருன்னு ஒண்ணு இருந்தா தானாதான் போகணும்.  நாமா போக்கிக்கக் கூடாது;  போயி தூங்கு. வாலிபம்னு ஒண்ணு இருந்தா வயோதிகமும் இருக்கத்தானே செய்யும்? வயோதிகமும் வரம்தாண்டா என்று மாயன் கிருஷ்ணனின்  மயிலிறகு போல்  அம்மாவின் குரல் வருடியது. மீண்டும் வெகு ப்ரயாசைப்பட்டு  வந்து படுத்தார். இந்தாங்க இந்த  மாத்திரையைப் போட்டுண்டு தண்ணி குடிச்சுட்டு   மனசக் கொழப்பிக்காம நிம்மதியாத்  தூங்கி எழுந்திருங்க. எல்லாம் சரியாயிடும் என்றாள் பாரு என்கிற  பார்வதி எல்லாம் தெரிந்தவள் போல்!

    சுபம்

     

     

    Share
  • ஜெயலலிதா

    -தமிழ்த்தேனீ

    இவரைப் போல் படித்த  தைரியமான  விவேகமுள்ள  நிர்வாகத்திறன் படைத்த   மனதிடமுள்ள ஆற்றல் நிறைந்த  முதல்வர் இனிக் கிடைப்பாரா  தமிழ் நாட்டுக்கு…?  இறைவன்  யோசித்திருக்க வேண்டும்.

    இறைவன் எப்போதுமே நல்லவர்களைத்தான்  தேர்ந்தெடுத்து சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்.

    அவருக்கு நல்லதைச் செய்துவிட்டான் இறைவன்;   ஆனால் நாட்டுக்கு?

    வெற்றி மட்டுமே கண்டு வந்த  
    உண்மைக்கே  உண்மையான
    உன்னை  வெற்றி கொண்டது யார்?jaya

    எதையும் தாங்கும் உன் இதயம்
    உன்னை ஜெயிக்க யாரால் முடியும்
    என்றெண்ணிப் பூரித்தோமே
    உன்னை ஜெயித்தது யாரென்று
    சொல்லாமல் உன் புன்னகையை
    உறைய வைத்தாயே!

    உண்மைக்கு உரைவடித்த நீ
    புன்னகையை ஏன் உறைய வைத்தாய்?
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று
    பேசத் தெரியாதே உனக்கு! 
    உன் உள்ளே எதுவந்து  உனைச் சாய்த்தது?
    பொன்போன்ற திருமகளே எது உனை மாய்த்தது?

    யாருக்கும் அடங்காத பெரும் பெண்மை நீ
    யாருக்கு இப்போது  அடங்கிப் போனாய்?
    உன் பேருக்கே நெருங்காதே ஒரு  தோல்வியும்
    உன்னை நெருங்கி  உன்னை மயக்கி  விழிக்க
    விடாமல் செய்தவர் யாரென்றே  சொல்லாமல்
    உள்ளுக்குள் உறைந்தாயே   மக்கள்
    மனதுக்குள் நுழைந்தாயே!

    உறைகின்ற  புன்னகையில் ஓராயிரம்
    ரகசியம் அத்தனையும்  ஒரு அசைவில்
    சொல்லுவாயே அசையவிடாமல் உன்
    புன்னகையை உறைய வைத்தது யாரென்று
    சொல்லாமல் போய்விட்டாய்!

    இனி ஒருகணமும்
    மக்களுன்னை  நினைவிலிருந்து
    தள்ளவிடாமல்   போய்விட்டாய்!
    துள்ளுகின்ற  குழந்தை முதல் தள்ளாத
    கிழவி வரை மறக்க மாட்டார் மக்களுன்னை
    நீயளித்த இலவசங்கள் அத்தனையும் உனதன்பை
    உன் புகழை  உலகிற்கே பறைசாற்றும்!

    சந்தனப் பேழையில்  செந்தமிழ்ப் பாவை
    இந்திய நாட்டின்  முப்படைச் சேவை
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
    என்றே முழங்கிய  வீரத் தமிழ்ப்பாவை
    ராணுவ மரியாதை  துப்பாக்கி முழக்கம்
    மலரஞ்சலி எல்லாமே நினைவிடத்திலே  அடக்கம் 

    செய்த  சேவைக்கு  மக்களின்
    கண்ணீர்   அம்மா அம்மா என்றே
    கன்றுகள் கதறல் கிடைக்குமா எவர்க்கும்!
    உனையன்றி  மற்றோர்க்கு
    வாராதுபோல் வந்த  மாமணியே
    அமைதியாய் இறைவனடி சேர்ந்தே  ஆசியை வழங்கு
    அமரர் உலகுக்கெய்து  இரும்பு மனுஷியா
    நீ வானிலே மின்னும் தங்கத் தாரகை!   

     

     

    Share
  • இடைத் தரகர்!

    -தமிழ்த்தேனீ

    எப்போதுமே நேரிடையான தொடர்பு நல்லது. இடைத் தரகர்களை நாடினால் அவர்கள் இஷ்டப்படி நம்மை ஆட்டுவிப்பார்களே தவிர நம் இஷ்டத்துக்கு எதுவும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இது அனுபவ பூர்வமான உண்மை. அதனால் எப்போதுமே நேரிடையான தொடர்புகளையே நான் கொண்டிருக்கிறேன்.

    இப்போதைய நிலையில் சமீபத்தில் ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன் அந்த இடத்தில் ஒரு பெரிய உயரமான பெட்டி வைத்திருந்தார்கள். அதிலே குறிப்பிட்ட காசைப் போட்டால் அதிலே இருக்கும் கோகா கோலாவோ, அல்லது பெப்சியோ நம் கைக்கு அளிக்கும். அந்த இயந்திரத்தில் காசைப் போட்டுவிட்டு என் பேரன் கேட்ட லிம்கா வேண்டுமென்று பட்டனை அமுக்கினேன். இயந்திரத்தில் உள்ளே ஏதேதோ சத்தம் கடைசியில் கண்ணாடி வழியே ஒரு லிம்கா வருவது தெரிந்தது. சில நொடிகளில் அந்த லிம்கா ஒரு பெட்டியில் வந்து விழுந்தது. அதை எடுக்கக் கையை நீட்டினேன். அங்கே நீல நிறத்தில் இங்கே இருக்கும் பட்டனை அமுக்கவும் என்று அறிவிப்பு வந்தது. அந்த பட்டனை அமுக்கினேன். மீண்டும் சில சத்தங்கள், மறுபடியும் அந்த லிம்கா பாட்டில் வேறொரு பெட்டிக்குள் வந்து விழுந்தது , மீண்டும் கையை நீட்டினேன்; அங்கே ஒரு அறிவிப்பு! வேறு ஒரு பட்டனை அமுக்கும் படி. அது சரி லிம்கா எப்போது என் கைக்கு வரும் என்றே தெரியவில்லை. ஒரு பெட்டிக்குள்ளிருந்து வேறு பெட்டிக்கே மாறிக் கொண்டிருக்கிறது.

    கையில் உள்ள காசையும் உள்ளே போட்டாயிற்று. இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் விழிக்கிறேன். நேராக ஒரு கடைக்குப் போய்ப் பணத்தைக் கொடுத்து லிம்கா கேட்டால் உடனே கிடைத்திருக்கும்.  ஆனால் ஒரு வித்யாசம் போலி லிம்காவாகக் கூட இருக்கலாம். தரமான லிம்கா வேண்டுமென்றால் அந்த இயந்திரம் சொல்வதைக் கேட்டு, அது எப்போது தருகிறதோ அப்போது பெறவேண்டும். அதுவரை தண்ணீர் குடித்துச் சமாளிக்கலாம். கள்ள வியாதிகள் வராமலிருக்கும்.

    அதே போல்தான் சென்றவருடம் ஜோதிடர் சனிப்பெயர்ச்சி உங்கள் மேஷராசிக்கு  அஷ்டம சனியாக இருக்கிறார்  என்றார். சரி நான் என்ன  செய்யவேண்டும் என்றேன்.  தோஷபரிகாரம் செய்யுங்கள் சரியாகிவிடும் என்றார். சரி செய்வோம் என்ன செய்ய வேண்டும்?  என்றேன்.

    ஒரு ஹோமம் நடத்தலாம்  அதற்கு 12 ரூபாய் செலவாகும்  என்றார். சரி, நான் யோசித்து உங்களை அழைக்கிறேன்  என்று சொல்லி அவரை  அனுப்பிவிட்டு  யோசித்தேன்.

    ஹோமம் செய்தால் சரியாகலாம். அந்த  ஹோமத்தின் வாயிலாக நாம் சனி பகவானை மகிழ்விக்கப் போகிறோம்.  அவரது கருணையை யாசிக்கப் போகிறோம்; அவ்வளவுதானே  என்று தோன்றியது.  சரி,  தெய்வங்கள் எப்போதுமே உண்மையான பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கும் என்பார்களே வேதமறிந்த பெரியோர்.  ஆகவே  மனப்பூர்வமான பிரார்த்தனையை நாமே செய்யலாமே  என்று தோன்றியது. அன்று முதல்  சனீஸ்வர பகவானே  கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர்  நீர் ஒருவர் மட்டுமே. அப்படிப்பட்ட  பெருமைகொண்ட  நீர்  என்னை ஆசீர்வதியுங்கள். எனக்குக் கருணை காட்டுங்கள், தினமும் உங்களை யாசிக்கிறேன்,   உங்களிடம் சரணடைகிறேன் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு  காலையிலும்  இரவு படுக்கப் போகும் போதும் அவரை வணங்கி  பிரார்த்தனை செய்தேன்.  எனக்குச் சில  கஷ்டங்கள்  வந்தாலும்  அவைகளைச் சமாளிக்க  எனக்கு போதிய  மனவலிமையையும் அளித்தார்  சனீஸ்வரன்.

    கடந்த  அஷ்டமச்  சனிக் காலத்தில் இப்படியே  நான் நேரிடையாக சனீஸ்வரரை  வேண்டியே சமாளித்தேன். நம் விதி என்று ஒன்று இருக்கிறது என்ன வேண்டினாலும் ஹோமங்கள் யாகங்கள் செய்தாலும் விதியின் குரூரம் வேண்டுமானால் சற்றே குறையுமே தவிர  முழுவதும் விலகாது. அதையும் தவிரச்  சனிக் கிரகம் அல்லது  சனி பகவான்  நாம் ஏறெகனவே செய்திருக்கும் பாவங்களையும் நம்மை அறியாமலோ  அறிந்தோ இந்த  ஜென்மத்தில் செய்யும் பாவங்களையும் கணக்கிட்டு  அதற்குத் தகுந்தவாறு  நமக்குச் சில சோதனைகளைக் கொடுத்து நம் பாவங்களின் அளவைக் குறைத்து நம்மை சமப்படுத்தும் துலாக்கோல் போல செயல்படுகிறார் என்பார்கள்.

    ஆகவே நம் பாவங்களைக் குறைத்து  நம் ஆத்மாவை சமனப்படுத்தும் அவரை வணங்கினாலே போதும். இடைத்தரகர்கள் எல்லாம் தெரிந்தது போல் ஏதேனும் சொல்லி நம்மிடம்  பணம் பறிக்கும் செயலை அனுமதிக்க வேண்டாம். நேரிடைத் தொடர்பே எப்போதும் நல்லது  என்பதை உணர்கிறேன். ஆனானப்பட்ட  சர்வேஸ்வரன் சிவனையே சிறிது காலம் பீடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு  உள்ளான  சனீஸ்வரர்   சிவனிடம் வந்து நான் இப்போது உங்களைப் பீடிக்கப் போகிறேன்  என்றார்.  அதற்கு சிவன் அது உன்னால் முடியாது என்று சொல்லிவிட்டு ஏதோ ஈரேழு உலகங்களையும் தாண்டி ஒரு பாதாளத்தில் போய் உட்கார்ந்து கொண்டு  இருந்துவிட்டு  சனீஸ்வரர்  பீடிக்க  வேண்டிய காலம் கழிந்ததும்  வெளியே வந்து  என்ன சனீஸ்வரா  என்னைப் பிடிக்க முடியாமல் கஷ்டபட்டாயா  என்றார்.

    அதற்குச் சனி பகவான் புன்னகையுடன்  ஈஸ்வரா  கையிலாயத்தில் உங்கள் ஆசனத்தில் பெருமையாக அமரவேண்டிய  நீர்  ஏதோ பாதாளத்தில் போய் இருந்தீரே  அப்போதே தெரியவில்லையா  நான் உம்மையும் பீடித்துவிட்டேன் என்று  என்றார்.

    அதனால் நமக்கு  சனீஸ்வரர்  பீடிக்க வேண்டிய  வேளை வந்தால் நம்மால் தப்ப முடியாது; ஆகவே அவரையே  சரணடைவோம்.  அதைவிட முக்கியம் இந்தச் சனிப் பெயர்ச்சி இப்போது வருகிறது.  அதே ஜோதிடர் என்னிடம் வந்து  உங்களுக்கு சனீஸ்வரர்  எட்டாம் இடத்திலிருந்து விலகிவிட்டார்.  அதனால் அஷ்டம சனியின்  பாதிப்புகள் குறைந்துவிடும்  ஆனால் உங்கள் மனைவிக்கும்   இப்போது முதல் அஷ்டம சனி ஆரம்பம் ஆகவே ஹோமம் செய்யலாமா  என்றார். நான் யோசித்துவிட்டு அழைக்கிறேன் என்றதும் அவர் சென்றுவிட்டார்.

    கடந்த  அஷ்டம சனிக் காலத்தில்  என்னோடு கூடவே இருந்து என்னைப் பார்த்துக் கொண்ட என் கோபங்களையும்  சமாளித்த  என் துணைவியார் போலவே  இப்போது அவளுக்கு  அஷ்டம சனிக் காலமாகிய இந்தக் காலத்தை  நாம் அவளோடு இருந்து அவளுக்கு உதவியாய் இருக்க வேண்டும்  என்று தீர்மானம் எடுத்து  மீண்டும் சனீஸ்வர  பகவானிடம் வேண்டிக்கொண்டு நல்ல படியாக வாழ்வோம் என்னும் நம்பிக்கையில்   காலையிலும் இரவிலும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருக்கிறேன்.

    ஆகவே  27  நக்‌ஷத்திரத்திற்குள் ஏதோ ஒரு நக்‌ஷத்திரத்திலே தானே நம் வாழ்க்கைத் துணை பிள்ளைகள்  எல்லோரும் இருக்கிறார்கள். கிரகங்களின் சுழற்சி மாறும்; அதற்கேற்ற பலன்களும் மாறும். கிரக சுழற்சியை மாற்றவோ நிறுத்தவோ நம்மால் முடியாது.  ஆனால் நாம் நேர்மையாக வாழ்ந்து  இறையைத் தொழுது  எல்லாவற்றையும் சமாளிப்போம்; நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையோடு. ஆகவே தீர்மானம் எடுங்கள் இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை. நானும் இறையும் நேரிடையாகவே மனப்பூர்வமாக உரையாடிக் கொள்கிறோம்;  இறையிடம் நாங்கள் நேரிடையாகவே  வேண்டிக் கொள்கிறோம் என்று.

    அதற்காக  ஹோமங்களுக்கும் யாகங்களுக்கும் பலனில்லை  என்று நான் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். அவைகளுக்கு உண்டான பலன்கள் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அவற்றை மனப்பூர்வமாகப்  பணத்தின்மேல் குறிக்கோள் இல்லாமல் பக்தியுடன் ஸ்ரத்தையுடன் செய்ய ஆள் கிடைத்தால்  நிச்சயமாக  செய்யலாம். அப்படிப் பணத்தாசை, பேராசை இல்லாத மனிதர் தெய்வத்துக்கு சமானமாவார். அப்போது அவரே  தெய்வமாகிறார் இடைத்தரகராக ஆவதில்லை.

    ஆகவே அப்படிப்பட்ட  தெய்வாம்சம் பொருந்திய  மனிதர் கிடைத்தால் நாமும் ஹோமங்கள், யாகங்கள் செய்யலாம்.  நல்ல பலன்கள் கிட்டும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; பேராசை வரும்போது தரகனாகிறான்.

     

     

     

    Share
  • கோவக்காரன்!

    -தமிழ்த்தேனீ

    பக்கத்து வீட்டில்  குடிவந்த   புதியவர்  அவராகவே வந்து  சார்  நான் உங்க  பக்கத்து வீட்டிலே குடி வந்திருக்கேன் என்றார்.

    உள்ளே வாங்க… உக்காருங்க…என்ன சாப்படறீங்க?  என்றேன் நான்.  உட்கார்ந்து, சார் உங்க வீடு ரொம்ப நல்லா இருக்கு என்றார் அவர். இங்கே குடி வந்துடறீங்களா என்றேன் நான்.

    ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ என்று சிரித்துவிட்டு நல்லா தமாஷா பேசறீங்க  சார்;  என் பேர்  மணிகண்டன் என்றார் அவர்.   என் பேரு தமிழ்த்தேனீ என்றேன் நான்.

    பேரே  வித்யாசமா இருக்கே  உங்க  அப்பா அம்மா வெச்ச பேரா?  என்றார்.

    இல்லே  அவங்க வெச்ச பேரு கிருஷ்ணமாச்சாரி.  நான் வெச்சிகிட்ட  புனைபெயர் தமிழ்த்தேனீ  என்றேன் நான்.

    எப்பிடி சார் உங்களுக்கு இப்பிடி ஒரு பேரு வெச்சிக்கணும்னு தோணிச்சு   என்றார் மணிகண்டன்.  எனக்குத் தமிழ்ன்னா ரொம்பப்  பிடிக்கும்.  அதுனாலே தமிழ்லே இருக்கற அமிர்தம் மாதிரியான பல  நல்லதைச்  சேகரிச்சு மக்களுக்கு குடுக்கணும் அப்பிடீங்கற  எண்ணத்திலேதான் தமிழ்த்தேனீன்னு பேரு வெச்சிகிட்டேன் நானே  என்றேன் நான்.

    சார்  உங்ககிட்டே  வெளிப்படையா  பேசலாமா என்றார் அவர்.    தாராளமா பேசலாம்; வெளிப்படையாப்  பேசினா உங்ககிட்டே நட்பு வெச்சிப்பேன்; இல்லேன்னா கொஞ்சம் தள்ளியே இருப்பேன் அப்பிடின்னேன் நான்.

    உஙகளை  ரொம்பக் கோவக்காரர்ன்னு  சொல்றாங்களே  என்றார்  அவர்.

    நான் சிரித்தேன்.

    என்ன சார் உங்களை கோவக்காரர்ன்னு சொல்றேன்… சிரிக்கறீங்க  என்றார் அவர்.

    சரி அதைவிடுங்க  உங்களுக்கு கோவம் வருமா என்றேன், வரும் சார்   என்றார் மணிகண்டன்.

    கோவம் வந்தால் என்ன செய்வீங்க என்றேன் நான். கோவம் வந்தால்  கன்னாபின்னான்னு திட்டுவேன்  என்றார். உங்க அப்பாக்குக் கோவம் வருமா? வந்தா என்ன செய்வார்?  என்றேன்.    அவரு அடிச்சிருவாரு;   அதைப் பாத்துட்டுதான் நான் என் கோவத்தைக் கொறைச்சிகிட்டேன்  என்றார் அவர்.

    உங்க பையனுக்குக் கோவம் வருமா?  என்றேன் நான். அவனுக்குக் கோவம் வராது சார்  என்றார் அவர். அப்பிடிக் கோவம் வந்துட்டா என்ன செய்வாரு என்றேன் நான்.

    வெட்டிப் போட்ருவான் என்றார் அவர்.  நான் சிரித்தேன்!

    என்னைக் கோவக்காரன்னு சொன்னவங்க எல்லாம் என்ன செய்யறாங்கன்னு பாருங்க!

    எனக்குக் கோவம் வரும்! நான் கோவக்காரன்தான் எங்கேயாவது தப்பு நடந்தா எனக்கு கோவம் வரும் என்றேன் நான்!

    அது சரி சார், இவ்ளோ சொல்றீங்களே… உங்களுக்குக் கோவம் வந்தா   என்னா செய்வீங்க  என்றார் மணிகண்டன்.

    நான் சிரிப்பேன் என்றேன்!  என்னது சிரிப்பீங்களா! அதுதான் நான் உங்களைக் கோவக்காரன்னு  சொல்றாங்களேன்னு  கேட்டவுடனே சிரிச்சீங்களா?  சரி சார்  நான் கிளம்பறேன் என்றார்  பயந்தபடி.

    இப்போ  நீங்க  என்ன புரிஞ்சிகிட்டீங்க  என்றேன் நான். ஒண்ணும் புரியலே சார் குழப்பறீங்க நீங்க  என்றார் அவர்.

    சரி  தெளிவா பேசறீங்க.  இப்போ யாராவது என்னைப் பத்திக்கேட்டா என்னை கோவக்காரன்னு சொல்வீங்களா  இல்லே சாந்தமானவருன்னு  சொல்வீங்களா  என்றேன் நான்.  அதுதான் சார் குழப்பமா இருக்கு. அதுதான் ப்ரச்சனையே! குழம்பிப் போறவங்க எல்லாம் என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னே தெரியாமே கோவக்காரன்னு சொல்லிட்டுத் தப்பிச்சிக்கறாங்க.

    இப்போ நீங்க சொல்லுங்க… தப்பு நடந்தா நமக்குக் கோவம் வரலேன்னா  நாமல்லாரும் உணர்ச்சியுள்ள  மனுஷனா என்றேன் நான்.   இல்லே சார் தப்பு செய்யறவங்க மேலே கோவம் வரணும்; அதுதான் சரி! என்றார் அவர்.

    அப்போ  மத்தவங்க நம்மை என்ன சொல்வாங்க  என்றேன் நான்.   கோவக்காரன்னு சொல்வாங்க புரியுதா என்றேன் நான்.  இப்போ நீங்க சொல்லுங்க  நான் கோவக்காரனா?  என்றேன் நான்.

    அப்பிடித் தெரியலே… உங்களைப் பாத்தா நல்ல தமாஷா பேசறீங்க என்றார் அவர்.

    நான் சிரித்தேன்.

    அவர் பயந்துபோய் சரி சார் நான் கிளம்பறேன். உங்களுக்குக் கோவம் வந்திருச்சு  என்றார்.  இப்பிடித்தான்  நல்ல நடவடிக்கை யாரு எடுத்தாலும் அவரைக் கோவக்காரன்னு சொல்றாங்க தப்பு செய்யறவங்க புரியுதா? என்றேன் நான்.

    சரி சார் நீங்க கோவப்படாதீங்க! இல்லெ இல்லே சிரிக்காதீங்க! நான் போயிட்டு அப்புறமா வரேன் என்றபடி எழுந்துபோனார் மணிகண்டன்.

    Share
  • ஒரு ‘ஈ’ யின் விலை 3300 ரூபாய்!

    -தமிழ்த்தேனீ

    சார்லி சாப்ளின் நகைச்சுவை மன்னர்.  அவருடைய  நடிப்பு நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும்.  அப்படிப்பட்ட  சார்லி சாப்ளினும்   அவருடைய நண்பர் ஒருவரும்  ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.   அங்கே  ஈக்களின் தொந்தரவு அதிகமாக இருக்கவே  அவர் கையில் Bee Swatter   என்னும்   ஈ அடிக்கும் கருவி ஒன்று அந்த உணவு விடுதியின் நடத்துனரால் கொடுக்கப்பட்டது. வரும்போது  அந்தக் கருவியால் ஈயை  அடித்துவிடலாம், ஒரு ஈ பறந்து சார்லி சாப்ளினின்  அருகில் வந்து அவரைத் தொந்தரவு செய்துவிட்டு பறந்து சென்றது; அப்போது அவரால் அந்த ஈயை அடிக்க முடியவில்லை.  மறு முறை  ஒரு ஈ வந்து அவர் அருகில் பறந்து கொண்டிருந்தது. சார்லி சாப்ளின் அந்த ஈயை அடிக்காமல் இருக்கவே  பக்கத்தில் இருந்த நண்பர்  அந்த ஈயை அடியுங்களேன் என்றார், அதற்கு  அப்போது என்னை தொந்தரவு செய்த ஈ இதல்ல என்றார்.

    பொதுவாக  ஈக்களின் தொந்தரவு அதிகமிருக்கும் இடங்களில் பினாயில் என்னும் திரவத்தைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கி, அந்தத் திரவத்தை  தண்ணீரில் கலந்து  துடைத்தாலே ஈக்கள் அங்கே வராது சற்று நேரத்துக்கு, ஈக்களுக்கு பினாயிலின் வாடை பிடிப்பதில்லை. ஆகவே பல ஈக்களை விரட்ட பத்து ரூபாய் செலவு செய்தால் போதும்.  ஆனால் ஒரு ஈயைக் கண்டுபிடிக்க  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று  அனுபவப்பட்டவர்களுக்குத்தான்  தெரியும்,      ஒரு எலியைப் பிடிக்க இருபது ரூபாய் கொடுத்து ஒரு எலிப்பொறி வாங்கி வைத்து மேலும் அந்த எலியை அந்தப் பொறிக்குள் இழுக்க  மேலும் ஐந்து ரூபாயை செலவழித்து ஒரு மணக்கும் மசால்வடையையும்  வாங்கி அந்த பொறிக்குள்ளே இருக்கும் கம்பியில் லாவகமாகச் சொருகி வைக்க வேண்டும். அந்த மசால் வடையின் வாசனையை நுகர்ந்து அந்த எலி அதனால் கவரப்பட்டு  எலிப்பொறிக்குள் வந்து அந்த மசால் வடையை வாயால் கவ்வ முயலும்போது அந்த கம்பி  நெகிழ்ந்து எலிப்பொறியின் வாயை அடைத்துவிடும், எலியும் பொறியில் மாட்டிக்கொள்ளும்.

    ஆனால் இப்படிப்பட்ட  எந்த வலையினுள்ளும் மாட்டிக்கொள்ளாமல் லாவகமாகப் பறந்து சென்றுவிடும் ஈக்களையும் கொசுவையும் பிடிப்பதரிது.   அதுவும் நமக்கு  ஆராய்ச்சிக்காக  ஒரு ஈ அல்லது கொசு வேண்டும் என்றால் அதைப் பிடிப்பது மிகவும் கடினம்.   இவையெல்லாம் ஒரு புறமிருக்க ஒரு ஈ யினால்  எனக்கு ஏற்பட்ட உபத்ரவம் சொல்லி முடியாது. அந்த ஈயைத் தள்ளவும் முடியாமல், வைத்துக்கொள்ளவும் முடியாமல் நான் பட்ட அவதிகள் அதிகம். ஆனாலும் அந்த ஈ திடீரென்று ஒரு நாள் காணாமல் போனபோது என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் நான் பட்ட அவதி இருக்கிறதே அதுவும் மிகக் கொடுமை.  ஆனால் அந்த ஈ இல்லாமல் வேலை செய்வது மிகவும் கடினம் என்று உணர்ந்து அந்த ஈ யை எப்படியும் மீண்டும் அடைந்தே தீருவது  என்னும் முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன், அதனால்  பல இடங்களில், அலைந்து அந்த ஒற்றை ஈயைக் கண்டுபிடிக்க  என்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு  அலைந்ததில் எரிபொருள் செலவு கிட்டத்தட்ட  500.00 ரூபாய்.

    அப்படித் தேடிக்கொண்டிருக்கும்போது  ஒருவர்  அந்த குறிப்பிட்ட ஈ இருக்கும் பலகை ஒன்று இருக்கிறது. அந்த ஒற்றை ஈ இருக்கும் ஒரு சிறிய பலகையை அதை வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனை தீரும் என்றார்; சரி வேறு வழியில்லை… அந்தப் பலகையையே வாங்கிவிடலாம் என்று முடிவெடுத்து  நண்பர் கூறிய  கடையை அணுகினேன்.  அந்தக் கடையில் அந்த ஈ  என்ன தயாரிப்பு, எந்த  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது  என்று கேட்டார்கள், அப்போதுதான்  எனக்கு நினைவு வந்தது அந்த ஈ உள்ள பலகையை பொருத்த வேண்டிய கருவியை எடுத்துக்கொண்டு போகாமல் நான் சென்றது, சரி என்று வீட்டுக்கு வந்து  அந்தக் கருவியை கையோடு எடுத்துக்கொண்டு போய் அந்தக் கடையில் காண்பித்தேன். அந்தக் கருவியைப் பார்தவுடன் ஓ இதுவா சற்றே இருங்கள்  என்று கூறிவிட்டு ஐந்து ஆறு பேர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. கடைசியாக  ஒருவரிடம் அந்த ஈ உள்ள பலகை இருப்பதாகவும்  ஆனால் அவர் 2800.00 ரூபாய் கேட்கிறார் என்றார் அந்தக் கடைக்காரர்; என்ன செய்வது  வாங்கித்தான் தீரவேண்டும், வேறு வழியில்லை சரி என்று கூறி 2800.00 ரூபாயை அவரிடம் அளித்து  அந்த ஈ உள்ள பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

    ஆமாம் என்னுடைய  எச் பி காம்பாக் மடிக்கணிணியில் இருந்த  E வெகு நாட்களாக அடிக்கடி வெளியே வந்து விழுந்து கொண்டே இருந்தது, அந்த ஈ(E) தனியாகக்  கிடைத்திருந்தால்  ஒரு நூறு ரூபாய்க்குள் முடித்திருக்கலாம், அந்த தனி  ஈ (E) வாங்கிப் பொருத்த தேடி அலைந்து ,  கடைசியில் முடியாமல் போய் அந்த E யும் இருக்கும் தட்டச்சு பலகையை வாங்கிப் பொருத்தினேன்.

    அதற்கு ஆன செலவு  மொத்தம் 3300 ரூபாய்கள்.

    ”தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
    ஆறாதே ஈயினால் பட்ட வடு”

     

     

     

    Share
  • கீதை பிறந்த கதை!

    -தமிழ்த்தேனீ

    எதைச் செய்தாலும் முழுமனதோடு செய்யும் போதுதான் முழுப்பலனும் கிடைக்கிறது. இதைத்தான் அர்ஜுனனுக்கு  கிருஷ்ண பரமாத்மா  கீதையில் சொன்னார். இந்தக்  கருத்தை உணர்த்தவே கீதை பிறந்தது! இதென்ன  புதுக் குழப்பம் என்கிறீர்களா?  குழப்பமே இல்லை விளக்குகிறேன்.

    என் துணைவியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்  கீதையை ஏன் போர்க்களத்திலே  கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு உபதேசித்தார் . எதற்காக  உபதேசித்தார்  அவருக்கு வேறு இடமே வேறு சந்தர்ப்பமே கிடைக்கவில்லையா  என்று!  அதற்கு  என் துணைவியார்  அங்கேதானே  என் உறவினர்களுக்கே எதிராக நான் போரிடவேண்டுமா  என்று  அர்ஜுனன் யோசித்தான்   என்றாள்.  அது மட்டுமல்ல  அர்ஜுனனின் அஞ்ஞானத்தைப் போக்கவும்  தான் கீதோபதேசம் செய்தார் கிருஷ்ணன்  என்றாள்.

    lord-krishna-arjun-mahabharatஅர்ஜுனனுக்கு  அஞ்ஞானம் இருந்தது உண்மையா  என்று கேட்டேன்; என் துணைவி ஆமாம் என்றாள். அப்படியானால்  தன் வெற்றிக்காகவோ தர்மத்தைக் காக்கவோ கூட  உறவினர்களையும்  பல பெரியவர்களையும் கொல்ல மாட்டேன்  என்பது அஞ்ஞானமா  அது தர்மமில்லையா  என்றேன்.   ஆமாம்  அது அஞ்ஞானம்தான்  தர்மம் என்றாலும் கூட  அதர்மம் என்றே   வைத்துக் கொண்டாலும் கூட  போர்க்களத்திலே வந்து போர் புரியமாட்டேன்  என்று சொல்வது  நியாயமே இல்லையே.  அதனால்தான்  அந்தக் குழப்பத்திலிருந்து  அர்ஜுனனைத் தெளிய வைக்கவே   அங்கேயே  கீதோபதேசம் செய்தான்  கிருஷ்ணன்  என்றாள்.

    நீ சொல்வது  ஒரு வகையில் நியாயமாகவே படுகிறது.  இருந்தாலும்  இன்னும் சில  விளக்கங்கள் இருக்கிறது அதையும் விளக்கிவிட்டு  அதன் பிறகு நீ சொல்வதை  நான் ஒப்புக்கொள்வதா  அல்லது நான் சொல்வதை நீ ஒப்புக் கொள்கிறாயா  என்பதை முடிவு செய்யலாம் என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணன் அதர்மத்தை  அழிக்க  தர்மத்தை  நிலைநாட்ட  நீ இந்தப் போரை நடத்தித்தான் ஆகவேண்டும்;  உன் உறவினர்களுக்கும் பெரியவர்களுக்கும் எதிராக அஸ்திரங்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்;   இல்லையென்றால் உலகிலே  தர்மம்  வெல்லும் என்கிற நீதியே  செத்துப் போகும்;  இது நியாயமா  என்றவுடன்  அதை உணர்ந்த  அர்ஜுனன்  சரி கிருஷ்ணா  நான் போர் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டாலும்  மனமில்லாமல் போரைத் துவக்குகிறான் அர்ஜுனன். அப்போது  கிருஷ்ணன் இரு  அர்ஜுனா போரைத் துவக்காதே   துவக்குவதற்கு முன் என் சந்தேகத்தைத் தெளிவித்துவிட்டு போரைத் துவக்கு  என்கிறான் கிருஷ்ணன்.

    சொல் கிருஷ்ணா என்ன சந்தேகம் உனக்கு என்று கேட்ட அர்ஜுனனைப் பார்த்து இப்போது  உன் மனதிலே  நான் சொல்வது நியாயமாகப் படுகிறது;  அதனால் போரைத் துவக்குகிறாய்  என்றான்.    ஆமாம் அதில் என்ன  சந்தேகம் என்கிறான் அர்ஜுனன்.   அதில்தான்  சந்தேகமே  மீண்டும் வேறு யாரேனும் என்னைவிடத் திறமையாக வாதம் புரிபவர் வந்து  நீ செய்வது   அதர்மம்  என்று  அவருடைய  வாதத் திறமையால்  நிரூபித்துவிட்டால் அது உன் மனதுக்கு நியாயமாகப் பட்டால் போரை நிறுத்திவிடுவாயா மீண்டும் என்கிறான் கிருஷ்ணன்.

    அர்ஜுனன்  கிருஷ்ணா  நீ என்னைக் குழப்புகிறாய்  இப்போது என்ன சொல்ல வருகிறாய் என்றான்.   பதில் சொல்  உன் மனதிலே வேறு யாராவது நீ செய்வது  அதர்மம் உன் உறவினர்களுக்கு எதிராக  என்று உன்னை உணரவைத்துவிட்டால் போரை நிறுத்திவிடுவாயா?      கிருஷ்ணா   நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன்  அதர்மத்தை  கைக் கொள்ளுபவன்  அதற்குத் துணை செல்பவன் யாராயினும் நமக்கு எதிரிகளே  என்று  ஆனாலும்  அவர்கள்  செய்த  கொடுமைகள்  அதிகம் என்றும் உணர்ந்திருக்கிறேன்.   அதனால்தானே  இந்தப் போரே ஏற்பட்டது.

    இவைகளையெல்லாம் நான் உணர்ந்துதான்  இருக்கிறேன்;  ஆனாலும் என் மனம் மயங்குகிறது. இப்படி  என் உறவினர்களையும்   பிதாமகர் போன்றோர்களையும் கொன்று  நான் வெற்றி பெற்று  தர்மத்தை  நிலைநாட்ட வேண்டுமா? இப்படிப்பட்ட பாவகாரியத்தை செய்துதான்  நான்  என்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமா? இது தேவைதானா?  என்று என் மனம் மயங்குகிறது;   ஆனாலும் போரைத் துவக்கிவிட்டால் நிறுத்த  மாட்டேன் பின் வாங்கமாட்டேன் என்கிற உறுதி இருக்கிறது எனக்கு.;  நீ சந்தேகப் படாதே  என்றான்  அர்ஜுனன். ஆகவே சீக்கிரமாக போரைத் துவக்கிவிடலாம் என்றான் அர்ஜுனன்.

    உன் பதட்டம்  எனக்குப் புரிகிறது  அர்ஜுனா  என்று சொல்லிவிட்டு  சரி  அர்ஜுனா எக்காரணத்தைக் கொண்டும்   நீ பாதியிலே போரை  நிறுத்துவாயா  என்றான் கிருஷ்ணன்.    அது எப்படி முடியும்  பாதியிலே  தடுமாற  முடியுமா நடத்தித்தானே  ஆகவேண்டும்; அதனால்தான் இப்போதே  யோசித்தேன்  என்றான் அர்ஜுனன். எனக்குப் புரிகிறது  அர்ஜுனா நீ  விவேகி எதையும் முன்கூட்டியே  யோசிப்பாய்  இருந்தாலும் எனக்கு சந்தேகம்;  அதனால் கேட்டேன் என்றான்  கிருஷ்ணன்.   கிருஷ்ணா  உனக்கு ஏன் இவ்வாறு சந்தேகம் வருகிறது  என்றான் அர்ஜுனன். சரி  விடு  ஏதோ சந்தேகம் வந்தது அதனால் கேட்டேன்  என்றான் கிருஷ்ணன். என்ன இன்னமும் என் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாய் கிருஷ்ணா  சரி போரைத் துவக்குவோமா  என்றான் அர்ஜுனன்.

    துவக்கலாம்  அதற்கு முன்  எனக்கு ஏன் சந்தேகம் வந்தது என்று கேட்டாயே  அதைத் தெளிவு படுத்திவிடுகிறேன்; ஏற்கெனவே  எல்லாம் யோசித்துத் தர்மத்தை நிலை நாட்டத்தானே,   அதர்மத்தை அழிக்கத்தானே  போர்புரிவது என்று முடிவெடுத்தோம்;  போர்க்களத்திலே வந்து குழம்பிவிட்டாயே  அதனால்தான்  கேட்டேன்.   இப்போது நீ தயாரா  போர் செய்ய?  என்றான் கிருஷ்ணன்.  ஆமாம் தயார்  என்றான் அர்ஜுனன்.

    நன்றாக ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள். கொல்வதென்று  முடிவெடுத்துவிட்டால்   நன்றாக யோசித்துக் கொள்;  நன்றாக யோசித்து முழுமையாகக் கொல் நடுவிலே தயங்காதே    என்றான் கிருஷ்ணன்.        என்ன  கிருஷ்ணா   மறுபடியும் குழப்புகிறாய் என்ற அர்ஜுனன்  தன் மனதிலிருந்து தப்பித்து  போரைத் துவக்கிவிட்டால் குழப்பம் தெளிந்துவிடும்  என்னும்  பக்குவமில்லாத  குழப்பத்தில்  சரியோ தவறோ  செய்துவிடுவோம் என்கிற  மன நிலையில் அவசரப்பட்டான் அர்ஜுனன்.  கிருஷ்ணா  சீக்கிரம் போரைத் துவக்கலாம்  என்று பதட்டமாக அறிவித்தான் அர்ஜுனன்.

    அர்ஜுனா  கோபித்துக் கொள்ளாதே அவசரப்படாதே,  ஒரு செயலை தொடங்குவது எளிது; ஆனால் தீர்க்கமாக ஆராய்ந்து  தீர்க்கமான முடிவெடுத்து   தொடங்க வேண்டும்   நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் உறவினர்கள் பிதாமகர்கள் ஆகியோரை எதிர்த்துப் போர்செய்யப் போவதாக, அவர்களை நோக்கி உன் அஸ்திரங்களை ஏவப்போவதாக… இல்லை அர்ஜுனா நீ  என்னை நோக்கி உன் அஸ்திரங்களை ஏவப் போகிறாய்  என்றான் கிருஷ்ணன்,       என்னது!  என்ன சொல்கிறாய் கிருஷ்ணா  என்றான் அர்ஜுனன்!

    அர்ஜுனா   நீ அறியாத  விஷயமா,  பஞ்சபூதங்களும்  இந்தப் ப்ரபஞ்சமும்  உன் உறவினர்களும்  பிதாமகர்களும் நீயும் நானுமே  எல்லோருமே  என்னுள் அடக்கம்  என்று நீ ஏற்கெனவே அறிவாய்  ஆனால் மறந்துவிட்டாய். இப்போது யோசி  இவர்களில்  நீ யாரை நோக்கி  அஸ்திரத்தை ஏவினாலும்   அந்த  அஸ்திரம் என்னை நோக்கித்தானே வரும்  என்றான் கிருஷ்ணன் பரிதாபமாக  முகத்தை வைத்துக் கொண்டு.   இது நியாயமா  உனக்கு உதவி செய்ய  வந்த  என்மேலேயே  நீ உன் அஸ்திரத்தை விடுவாயா  அதுதான்  என் வருத்தமே என்றான் கிருஷ்ணன்.

     அதிர்ந்து போனான் அர்ஜுனன்! ஆமாம்  நானெப்படி இதை மறந்தேன்  அய்யோ  நான் உன்னையே நோக்கியா  அஸ்திரத்தை விடப் போகிறேன்  இது என்ன  குரூரமான  தலையெழுத்து  எனக்கு;   உண்மைதான்  நான் செய்வது நியாயமே இல்லைதான்   இப்போது எனக்குப் புரிகிறது   ஏதோ  ஒரு உள்ளுணர்வினால்தான்  நான்  போர் செய்ய மாட்டேன்  என்று  தடுமாறியிருக்கிறேன்  என்பது  இப்போது நன்றாகவே புரிகிறது   என்றான்  அர்ஜுனன்.  நல்ல வேளை  எனக்கு  கிருஷ்ணா  சரியான  நேரத்தில் உணர்த்தினாய்  என்றான் அர்ஜுனன் .

    ஒரு கணம் அவனையே புன்னகையுடன்  பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் அர்ஜுனா  எனக்கு  அவ்வளவாக  சாதுரியம் போதாது. அதனால் பயந்தேன்  வேறு யாராவது  உன்னைக் குழப்பி விடப் போகிறார்களே  என்று   ஆனால் நானே இப்போது உன்னைக் குழப்பிவிட்டேனே. நல்லவேளை நான் உன்னை சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருக்கிறது.   அப்படியானால் அதர்மத்துக்கு  எதிராக நீ போர் புரியப் போவது இல்லை  என்பதைத்  தீர்மானமாக  முடிவெடுத்துவிட்டாயா  என்றார்  கிருஷ்ணன்.

    ஆமாம்  அதுதான்  சரி  என்றான் அர்ஜுனன் தீர்மானமாக. அப்படியானால் சற்று நேரத்துக்கு  முன்  ஏன் கிருஷ்ணா உனக்கு என்மேல் சந்தேகம் வருகிறது   நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாய் என்று கேட்டவனும் நீதானே  இப்போது  மாறி மாறிப் பேசுகிறாயே?  ஏன் எனக்கு உன் மேல சந்தேகம் வராது?  என்றான் கிருஷ்ணன்.

    அர்ஜுனன் தன்னுடைய உறவினர்கள் பிதாமகர் பீஷ்மர்   போன்றவர்களுக்கு எதிராக என் அஸ்திரங்களா என்று  மலைக்கிறான். அப்படி ஒரு மலைப்பு  அர்ஜுனனுக்குள் இருந்தால்  அவனுடைய  அஸ்திரங்கள் பயனற்றுப் போகும்.   அப்படி  அரைகுறை மனதோடு அர்ஜுனன் ஏவும் அஸ்திரங்கள்  எதிராளியைத் தாக்காமல் அவர்கள் முன்னே  பலனற்றுக் கீழே விழுந்து போகும்; அதனால் அதர்மம் வெற்றிபெற அதுவே வாய்ப்பளிக்கும்;  தர்மம்  தோற்றுப் போகும்   என்பதை  உணர்ந்த  கிருஷ்ணனே சற்றுப் பயந்துபோனான் என்பதே  உண்மை.

    கிருஷ்ணனுக்கு  பயமா  என்றால் அது பயமல்ல   விவேகம் வருவதை முன்கூட்டியே  அறியக் கூடிய  திறன் என்றுதான் கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தான்.   அவன் மனதுக்குள் தூங்குபவனை எழுப்பி விடலாம் தூங்குவது போல்  நடிப்பவனை எழுப்ப  முடியாதென்று சொல்வார்கள்.  ஆனால்  தூங்குவது போல் ஒரு மயக்கத்தில் இருக்கும் இவனை எப்படியேனும் எழுப்பியே தீரவேண்டுமே  அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கும் இவனை எப்படியேனும்   தெளியவைக்க வேண்டுமே    என்று கிருஷ்ணனே  கவலைப்பட ஆரம்பித்தான்.

    அதன் விளைவுதான்  இவனுக்கு  இப்போதே கீதையின் சாரத்தை உணர்த்தவேண்டும்   என்னும் முடிவு  அதுதான் போர்க்களத்திலே  கீதோபதேசம் செய்ய  எடுத்த தீர்மானத்தின் ஆரம்பம். கீதோபதேசத்தின் முடிவிலே  கடமையைச் செய் பலனை நீ எதிர் பாராதே;  அந்தப் பலனை  நீ செய்த  கடமைக்கேற்ப  வடிகட்டி  நல்லதை அளிக்கவே நான் இருக்கிறேன்  என்று அர்ஜுனனுக்கு புரிய வைக்கவே  போர்க்களத்தையும் அந்தப்  பொன்னான நேரத்தையும்   தேர்ந்தெடுத்தான் கிருஷ்ணன்.

    ஆகவே  கிருஷ்ணன் அர்ஜுனனின்  அரைகுறை மனதை முழுமைப்படுத்த வேண்டும் என்றுதான்  கீதையையே உபதேசித்தான். கிருஷ்ணன்   தீர்மானமான குரலில்  அர்ஜுனா மன்னனும் நானே; மக்களும் நானே; மரம் செடி கொடியும்  நானே. என்னிலே அத்தனையும் அடக்கம்  இப்போது நீ  உன் அஸ்திரங்களை அவர்களை நோக்கி விடப்போவதில்லை என்னை நோக்கியே விடப்போகிறாய். ஏனென்றால் என்னுள் எல்லாமே அடக்கம்  ஆகவே  நீ அதிர்ச்சி அடைய  ஒன்றுமே இல்லை;  என்னுள் அடக்கமாய் இருப்பவைக்கு சொந்தக்காரன் நான்தானே.

    நானே உன்னை அனுமதிக்கிறேனே; நீ என்னை நோக்கி உன் அஸ்திரங்களை செலுத்த அதிகாரம் அளிக்கிறேனே;  அதற்குப் பிறகும் உனக்கு என்ன தயக்கம்? ஆகவே தயங்காமல் முழு மனதோடு  என்னைச் சரணடைந்து உன்   அஸ்திரங்களை  என் மேல் விடு. அதனால் வரும் பாவ புண்ணியங்கள் பலாபலன்கள்  எல்லாமே  என்னைத்தான் சாருமே அன்று உன்னைச் சேராது;  அதற்கு நான் பொறுப்பு.  இப்போது  புரிகிறதா?  என்று அர்ஜுனனின்  மயக்கத்தையும்  சந்தேகத்தையும் தீர்த்து வைத்து  அர்ஜுனன் ஒரு கருவிதான் செலுத்துபவன் கிருஷ்ணனே  என்று அவனுக்கு உணர்த்தவே கீதை பகன்றான்.  அர்ஜுனன் தெளிந்தான் அதர்மம்  அழிந்தது.

    ஆகவே இப்போது  புரிகிறதா? எதைச் செய்தாலும் முழுமனதோடு செய்யும் போதுதான் முழுப்பலனும் கிடைக்கிறது; அரைகுறையான மனதோடு செய்யும்போது  அதன் பலனும் அரைகுறையாகவே நிற்கிறது; இதை உணர்த்தவே    கிருஷ்ண பரமாத்மா  கீதை பகன்றான்.

    “பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
     தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

    எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம்  தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்; யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.  ஆகவே எதைச் செய்தாலும் அரைகுறை மனதோடு செய்யாதே!  முழுமையான மனதோடு செய்! அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை உணர்த்தவே  கீதை பிறந்தது. அந்தக் கீதையை அப்போதே போர்க்களமாயிருந்தாலும் பரவாயில்லை என்று  கீதோபதேசத்தை அங்கேயே  செய்தான் கிருஷ்ணன்   என்றேன் நான்   ஆமாம் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டாள்  என் சகதர்மிணி.

    அதோடு  நிறுத்தி இருக்கலாம்  நான் மிகவும் யோசனை செய்து பேசிய மொத்தப் பேச்சையும்  ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டாள்  ஒரே  ஒரு கேள்வி கேட்டதன் மூலமாக.    அந்தக் கேள்வி:      டாஸ்மாக்  கடை வரும்போது  நீங்க வேகமா காரை ஓட்டிகிட்டு வந்துருவீங்களா?  இல்லே  மெதுவா  காரை ஒட்டிகிட்டு வருவீங்களா?  என்றாள்.

    நான் மெதுவாத்தான் காரை ஓட்டிகிட்டு வருவேன்;  ஏனென்றால்  என் மேல் எனக்கு நம்பிக்கை  இருக்கிறது; டாஸ்மாக் கடைக்கு நான் போக மாட்டேன் என்று;    அதுமட்டுமல்ல… எப்படிப்பட்ட தடங்கல் வந்தாலும் சமாளிக்க  முடியும் என்று.   ஆனால் வேகமாகக்  காரோட்டி வந்தால் வேண்டுமென்றே  யாரேனும்  குறுக்கேவந்து விழுந்து தகராறு ஏற்படலாம்;  அல்லது  விபத்தே  கூட  ஏற்படலாம்;  ஏனென்றால்   செய்யும் காரியங்களைத்  தன்னம்பிக்கையோடு  தெளிவாகச்  செய்தால்தான்  ஆபத்திலிருந்து தப்பி   எதிராளியிடம் தோற்காமல் வர முடியும் என்று சொல்லிச் சமாளித்தேன்.  ஆனாலும் பெண்கள் புத்திசாலிகள்தான்!

                                                      சுபம்

     

     

    Share
  • ஆயிரம் உண்டிங்கு ஜாதி!

    -தமிழ்த்தேனீ

    ஆவடியிலே இருக்கும் ஒரு கிறிஸ்துவ (RCM) பள்ளியில் என்னைப் பேச அழைத்தார்கள், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “இந்து மதம்.“  அங்கே சென்று பார்த்தபோது   மேடையிலே ஒரு கிறிஸ்துவப் பெரியார், ஒரு இஸ்லாமியப் பெரியார் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் தாளாளர்  அவர்கள் இருவரும் அவர்கள் மத்தைப் பற்றிப் பேசப் போகிறார்கள்  என்றார். பகீரென்றது! ஜாதிக் கலவரத்தையும்  இனக் கலவரத்தையும் மதக் கலவரத்தையும்  ஏற்படுத்துமோ tamiltheneeஇந்த நிகழ்வு என்று பயம் வந்தது. நான் மனதுக்குள்ளே தீர்மானம் எடுத்தேன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதைவிட அதிகமாக இந்து மனத்தைப் பற்றிப் பேசுவதென்று. ஆகவே முதன் முதலாக  எனக்கு அளிக்கப்பட்ட வாய்பைப் பயன்படுத்திக்கொண்டு  அங்கே எதிரே அமர்ந்திருந்த பள்ளிப் பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள் என்று கிட்டத்தட்ட 600  பேர்களுக்கு முன்னால்  என்பேச்சைத் தொடங்கினேன். இங்கே கூடியிருக்கும் இந்துக்களே  இஸ்லாமியர்களே கிறிஸ்துவர்களே  நான் இந்து மத்தைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.  ஆனால் இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன்  என்று ஒரு அறிவிப்பு அளித்தேன். ஒரு வினாடி  சபையே மௌனம் காத்துவிட்டு  நிமிர்ந்து உட்கார்ந்து என் பேச்சைக் கேட்கத் தயாரானது.

    tamil3எதிரே நின்றிருந்த  அந்தப் பள்ளியின் கிறிஸ்துவ மத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையை ஏறிட்டு  உங்கள் தெருவிலே ஒரு பெரியவர் கீழே விழுந்து விடுகிறார் உங்கள் கண் முன்னால்  நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு  அவர்கள்  அங்கிருந்தபடியே பதில் சொன்னார்கள். அவரை மேடைக்கு அழைத்தேன்  கையிலே ஒலிப்பெருக்கியைக் கொடுத்து  இப்போது சொல்லுங்கள் என்றேன். அந்த ஆசிரியை என் ஒருத்தியால் அவரைத் தூக்க முடியாது; ஆகவே உள்ளே இருக்கும் என் கணவரை  உதவிக்கு அழைப்பேன் என்றார்.  நான் கேட்டேன்… உங்கள் கணவரிடம்  என்ன சொல்லி அழைப்பீர்கள் என்று.  அதற்கு அவர்கள் கூறிய பதில்   ஏங்க  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார்  சீக்கிரம் வாங்க உதவலாம் என்பேன் என்றார்.   நான் அந்த  ஆசிரியையிடம்  நீங்கள் உங்கள் கணவரை அழைக்கும் போது   ஒரு இந்துப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார் , அல்லது ஒரு இஸ்லாமியப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார், அல்லது ஒரு கிறித்துவப் பெரியவர்  கீழே விழுந்துவிட்டார்   என்றெல்லாம் சொல்லவில்லை  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதானே  கூறினீர்கள்  என்றேன்.   மீண்டும் சபையிலே மௌனமான ஒரு கணம், அடுத்து  அந்த  ஆசிரியர்  இல்லை ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதான்  அழைப்பேன்  என்றார்.

    tamil4அவருக்கு நன்றி கூறிவிட்டு  அவரை அனுப்பிவிட்டு  என் பேச்சைத் தொடர்ந்தேன், இப்போது நன்றாக நினைத்துப் பாருங்கள்.  ஒரு பெரியவருக்கு  ஆபத்து என்றதும் இந்த ஆசிரியை மனதிலே அவரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதே தவிர  அவர்  எந்த  ஜாதியைச் சார்ந்தவர், எந்த மத்தைச் சார்ந்தவர் எந்த மொழியைச் சார்ந்தவர், எந்த  இனத்தைச் சார்ந்தவர் என்கிற சிந்தனைகள் வந்ததா என்று ஒலிப்பெருக்கியிலே  ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு  ஒரு சிலவினாடிகள்  அமைதியாய் இருந்தேன்.  சில நொடிகளுக்கு பிறகு சபையிலிருந்து ஏகோபித்த குரலில் இல்லை… இல்லவே இல்லை!  பெரியவருக்கு ஆபத்து  என்பதைத் தவிர மற்றெதுவும் நினைவுக்கு வராது என்கிற இந்துக்களின் மனம் ஒலித்தது.   இப்போது ஒன்று புரிகிறதா  நம் மனதிலே  ஜாதியில்லை;  மதம் இல்லை; மொழி இல்லை; பேதம் இல்லை; மனிதம் மட்டுமே  இருக்கிறது. ஆனால்  அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள் நம் மனதைத் தீய வழிகளிலே ஆக்ரமித்து  அதிலே ஜாதி மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளை விதைக்கிறார்கள். அவர்களின் சுய லாபத்துக்காக  வாக்கு வங்கிக்காக, அவர்கள் பெரும்பணம் ஈட்டுவதற்காக.  ஆகவே  நாம் அனைவருமே எந்த  மதமானாலும் எந்த  மொழியானாலும்  எந்த  ஜாதியானாலும் எந்த  இனமானாலும்   இந்தியர்கள் என்னும் ஒரு குடையின் கீழே  வாழுகிறோம். ஆகவே  நமக்குள் இந்து மதம்  இஸ்லாமிய மதம்  கிறிஸ்துவ மதம் என்றெல்லாம் பேதமில்லை.   என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்; அது மட்டுமல்ல அப்படித்தான் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.  ஆகவே இதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.  இதுதான் இந்தியர்களாக இருப்போம், இதிலே இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசவோ கிறிஸ்துவ மதத்தைப் பற்றிப் பேசவோ ஒன்றுமில்லை.

    இதோ மேடையில்  அமர்ந்திருக்கும் இந்த இஸ்லாமியப் பெரியவரைப் பார்த்தால் என் பெரியப்பாவுக்கு  இஸ்லாமியர் வேடம் போட்டதுபோல் உள்ளது,   இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் இந்தக் கிறிஸ்துவப் பெரியவரைப் பார்த்தால் என் சிற்றப்பனுக்கு  கிறிஸ்துவர் வேடம் போட்டது போல் இருக்கிறது. ஆகவே நம் மனதிலே இருக்கும் வேறுபாடுகளைக் களைவோம். நாம் அனைவருமே உபயோகிக்கும்  வாகனம் வேண்டுமானால்  இருசக்கர  வாகனமாகவோ , நான்கு சக்கர வாகனமாகவோ  அல்லது வானிலே பறக்கும் ஊர்தியாகவோ இருக்கலாம். ஆனால் நாம் எந்த இடத்துக்கு இறுதியாகப் போகப் போகிறோம் என்பதுதான் என் கேள்வி.   அந்த  இடத்தை நாங்கள் வைகுண்டம் என்கிறோம்;  இவர் சொர்க்கம் என்கிறார்; இன்னொருவர் பரலோகம் என்கிறார். ஆகவே  நாம் சென்று அடையும்  இடம் ஒன்றுதான்.  அதற்கு  வாகனமாகத்தான்  மதம் இனம் ஜாதி மொழி ஆகியவைகளை உபயோகிக்கிறோம். வாகனங்கள்  மாறலாம் அவரவர் வசதிப்படி.  ஆனால் செல்லும் இடத்தின் இலக்கு மாறக்கூடாது. ஆகவே நாம் எப்போதும் இந்து மனதைப் பற்றிப் பேசுவோம் இந்தியர்களாக வாழ்வோம் என்று கூறி என் சிற்றுரையை முடித்துவிட்டு  வந்து அமர்ந்தேன். அடுத்து பேசஎழுந்த இஸ்லாமியப் பெரியவரும்,  கிறிஸ்துவப் பெரியவரும்  நாங்கள் சொல்லவந்த எல்லாக் கருத்தையுமே  இந்தத் தமிழ்த்தேனீ அவர்கள் கூறிவிட்டதால் அவர் கூறிய அனைத்தையும் அப்படியே ஏற்கிறோம்  என்று கூறிவிட்டு அமர்ந்தனர். நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்தேன்.

    இறைவன் படைப்பிலே  இந்த மண்ணிலே பலவகைப்பட்ட ஜாதி  களிமண் கரிசல் மண் பாலை மண் செம்மண் என்றெல்லாம்;  மரத்திலே  கனிகொடுக்கும்  ஜாதி; இலைமட்டும் கொடுக்கும் ஜாதி; காய்மட்டும் கொடுக்கும் ஜாதி  போன்ற பல ஜாதிகள்;  இலையில்  போட்டுக்கொண்டு உண்ண வசதியாக  வாழையிலை, அதிலே போட்டு உண்ணக் கூடிய   கருவேப்பிலை, கீரை வகைகள்,  கிழங்கு வகைகள், காய்கனி வகைகள் எல்லாவற்றிலுமே  ஜாதிகள் உள்ளன. அதற்காக நாம் அவைகளை வெறுக்கிறோமா?   பூவிலே  ஜாதிமல்லி, ஜாதிமுல்லை, ரோஜா வகைகளிலே  பல ஜாதிகள்;  கனியிலே  மாம்பழம் என்று எடுத்துக் கொன்டாலே  அதிலே  பங்கனபள்ளி, ருமானி, நீலம் அல்போன்ஸா போன்ற பலவகை ஜாதிகள்.

    பருப்பு வகைகளிலே   உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு,  முந்திரிப் பருப்பு போன்ற  ஜாதிகள்.   எதிலே இல்லை ஜாதி?  நாம் எல்லா ஜாதிகளையுமே  உபயோகிக்கிறோம்.  ஆனால்  எல்லாமே ஒரு  கட்டுக்குள் அடங்கிய  நீதிதான், இறைவன் வகைப்படுத்தினான்.  ஆனால் எதையுமே நீக்கவில்லை,  ஒதுக்கவில்லை, எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்  என்று நமக்கு உணர்த்தவே இத்தனை ஜாதிகளையும் மதங்களையும் வகைகளையும் எல்லாவற்றையும் பேதம் பார்க்காமல் சமமாகப் பாவித்து  ஏற்கவேண்டும்  என்றுதானே  இறைவன் எல்லாவற்றையும் அதனதன்  இயல்புக்காய்ப் படைத்து எல்லாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தினான். அதைமறந்து நான் இந்து,  நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன் நான் பௌத்தன், நான் சைனன்  என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டு நாம்தாம் நம் மனதைக் கெடுத்துக் கொள்கிறோம். எல்லாமே ஒன்றுதான் என்பதை உணர்ந்தால் பேதமே மறைந்து மனிதம் மிளிரும்.  மனிதர்கள் சுயநலம் மிகுந்து  பிரிவினையை ஏற்படுத்தி  மனித சமுதாயத்துக்கே  வினையை  ஏற்படுத்திவிட்டார்கள். வினை விதைத்தால் வினைதான் விளையும் ஒற்றுமை என்னும் தினை விதைப்போம்.    அனைத்து  ஜாதிக்காரர்களும் , மதத்துக்காரர்களும்  அவரவர் தேவையை ஒட்டி  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் அவர்களுக்கு  தேவையானால்  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள்.

    காலம் காலமாகப் பார்த்து வருகிறோம், எந்த ஜாதிக் குழந்தையானாலும் கையில் நிற்காமல் அழுது கொண்டே இருந்தால்  தோஷம் தாக்கி இருக்கிறது   என்று சொல்வார்கள். அப்போது அனைத்து மதத்தினரும்  காலையில்  இஸ்லாமியர்கள்  தொழும் மசூதிக்குச் சென்று  இஸ்லாமியர் தொழுதுவிட்டு வந்தவுடன்   அவர்கள் வாயால் ஊதினால்  குழந்தையின் தோஷம் போய்விடும் எனும் நம்பிக்கையால்  மசூதியின்  வாயிலில் காத்திருப்பதையும்  அப்படி  இஸ்லாமியர் வாயால் அந்தக் குழந்தைக்கு  ஊதுவதையும், அவர் ஊதியவுடன் கப்பென்று குழந்தை  அழுகையை நிறுத்திச் சரியாகிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

    அதேபோல்  பெண்ணிற்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருந்த  காரணத்தினால் மனம் வருந்திய கிறித்துவ நண்பரொருவர்    என்னிடம் வருத்தப் பட்டுக்கொண்டார். நான் எனக்குத் தெரிந்த செய்தியை நான் கடைப்பிடிப்பதை  நான் நம்புவதை  அவரிடம் சொன்னேன்.     திருவிடந்தை  எனும் ஊரில்  மஹாலக்‌ஷ்மியை   மடியில் இருத்தி  வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு   அனுக்ரஹிக்கும்  லக்‌ஷ்மி நாராயணன் கோயிலில் அளித்த மாலையை நாங்கள் பெண்ணின் கழுத்தில் போடுவோம், அதேபோல் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு ஏழுவாரங்கள் சுத்தபத்தமாகத் தூய மனதோடு சென்று  வேண்டிக்கொண்டால் திருமணம் ஆகிவிடும் என்றேன்.

    ஆனால் என் மனதிலே  இவர் கிறிஸ்தவர்   இவருக்கு  நம் இந்து மதக் கலாசாரத்தை பரப்பவேண்டும், இவர் மனதிலே இந்து மத்தை விதைக்க வேண்டும்   என்னும் கபடம் இல்லாமல் அவர் பெண்ணுக்குத் திருமணமாகி அந்த  நண்பரின் கவலையும் தீரவேண்டும் என்னும்  நல்ல எண்ணத்தோடுடன் சொன்னேன், நான் அந்தக் கிறிஸ்துவ நண்பரை  அந்தக் கோயிலுக்கெல்லாம் சென்று வாருங்கள் என்று கூறவில்லை, ஆகவே  நான் உங்கள் பெண்ணுக்காக  வேண்டிக்கொண்டு  அந்தக் கோயில்களுக்கு  சென்று வருகிறேன்  என்று கூறி  அவருக்காக வேண்டிக்கொன்டேன், சரியாக  மூன்றே மாதத்தில்  மனமும் முகமும் மலர  அவர் பெண்ணிற்குக் கல்யாணம் என்று  என்கையில் திருமணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு  கண்ணில் நீர்வழிய  உங்கள் நல்ல எண்ணத்தினால்தான்  என் பெண்ணிற்கு  இப்படி நல்லவிதமாக திருமணம் நடக்கிறது என்றார்.  மனம் நிறைவாக  இருந்தது.  

    நவீன விஞ்ஞான யுகத்திலும்    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விஞ்ஞான பூர்வமாக அனைத்து  பரிசோதனைகளையும்  செய்து பார்த்துவிட்டு கடைசியாக   மன்னார்குடி  ராஜகோபாலன்  சன்னிதிக்கு சென்று   அங்கே கர்ப்பக் கிருகத்தில் உள்ள  சந்தான கிருஷ்ணன் விக்ரகத்தை  வாங்கி மடியில் வைத்துக் கொண்டு  வருவதை பார்த்திருக்கிறேன். ஆகவே  மனிதர்களின் நம்பிக்கையே அவர்களை வாழவைக்கிறது,  எதிரே இருப்பது  ஏசுவா  அல்லாவா  நாராயணனா  என்பது  முக்கியமே இல்லை. நம்மிடம் நல்ல மனதும்   தூய்மையும் நம் மனதுக்குள்ளே தெய்வ சிந்தனையும் இருந்தாலன்றி மதமும் ஜாதியும் என்ன செய்ய முடியும்?

    ஆக மொத்தம் மனிதன்  ரத்தத்திலே  திமிர் இருக்கும் வரையில் ஆடுகிறான்.  கடவுள் பொய், ஜோதிடம் பொய், மந்திரம் பொய், மாந்த்ரீகம் பொய், பக்தி பொய்  என்றெல்லாம் உளறித்திரிகிறான்.  பார்ப்பனர், செட்டியார், இஸ்லாமியர், கிறித்துவர்   என்று எக்காளம் பேசுகிறான். பிரச்சனை வரும்போது உயிர்காக்க  ரத்ததானம் செய்ய வரும் மனிதரிடம் உள்ள  ரத்தவகையை மட்டும் பார்த்து அது மட்டும்  அவருக்கு பொருந்துகிறதா  என்று பார்க்கிறான். விபத்து நடந்தால் கைதூக்கி உதவி செய்யும் கரம் பிராமணன் கரமா  இஸ்லாமியன்  கரமா  கிறிஸ்துவன் கரமா  என்று பேதம் பார்க்கிறானா, எந்தக் கரமாயிருந்தாலும்  உதவியை  ஏற்றுக் கொள்கிறான். அப்போது  மதம் ஜாதி இனம் மொழி எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆகிவிடுகிறது.

    ரத்தம் சுண்டினால், அல்லது  அவனால் இயலாமல் போனால்  அப்போது  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறான், எதையும் செய்யத் தயாராய்  இருக்கிறான்.  பிரச்சனை தீர்ந்தால் சரி   எந்தத் தெய்வமாய் இருந்தாலென்ன  என்று  தலைவணங்குகிறான் .  அவரவர்  ஆலயங்களில்  அவரவர் வழக்கம்;  அதைக் கண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் தாய் அவரவருக்கு தாய், அடுத்தவன் வந்து என் தாயைத்தான் நீ அம்மா என்று அழைக்க வேண்டும் என்று வற்புறுத்த  முடியுமா? அல்லது உன் தாயை தூக்கி எறிந்துவிட்டு வா!  உனக்கு வேண்டிய  பொன் பொருள் வாழ்க்கை வசதிகள் எல்லாம் தருகிறேன்  என்று அழைக்கிறானே  என்பதற்காக நம் தாயைத் தூக்கி  எறிந்துவிடமுடியுமா? அப்படியே தூக்கி எறிந்தாலும் வேறொருவர்  நம் தாயாய் ஆக முடியுமா?  அயல்நாடுகளிலே  இருக்கும் பல பெரிய மசூதிகளுக்கும்   தேவாலயங்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அங்கே கூட  அவர்களுக்கென்று விதி முறைகள், புனிதமான பைபிள், புனிதமான குரான், எல்லாவற்றையும் அவரவர் புனிதம் கெடாமலே பாதுகாக்கிறார்கள். அவரவர் கலாசாரப்படி கட்டிடங்கள் அமைத்துக் கொள்கிறார்கள், கர்ப்பக் கிருஹம் அமைத்துக் கொள்கிறார்கள். அவற்றை மதித்து  அவரவர் கலாசார விதிகளை அனுசரித்தே  நடந்து கொள்கிறர்கள். சில இடங்களில் அன்னியர் பிரவேசம் இல்லையென்று சட்டம் அவர்களால் போடப்பட்டிருந்தால் உறுதியாக அன்னியர்களை  அனுமதிக்காமல்  புனிதம் காக்கிறார்கள்.

    கிறித்துவ ஆலயங்களில்  கிறித்துவருக்கு அளிக்கப்படும்   மரியாதை மற்ற மதத்தினருக்கு அளிக்கப்படுவதில்லை.   இஸ்லாமிய  ஆலயங்களில்  மற்ற மதத்தினருக்கு முதன்மை கிடையாது  ஒரு தர்காவிற்கு    காலிலே செருப்போடு போக முடியுமா?   புனித நீரையும்  அப்பத்தையும் மற்ற  மத்தவருக்கு அளிப்பார்களா கிறிஸ்தவர்கள்? அல்லது  இஸ்லாமிய மத குருமார்கள் தொழுகை நடத்தும் இடத்திலே மற்ற  மதத்தவரை அனுமதிப்பார்களா?  மற்ற  மதத்தவர்  அவர்களுடைய மதத்துக்கு மாறாதவரை அவர்களுக்கு ஞானஸ்நானம் அளிப்பார்களா?  ஒரு பாதிரியார் நிற்கும் தேவாலயத்தில் மற்ற  மதத்தவர்  யாரேனும் நின்று ஒரு கிறிஸ்துவப் பெண்ணுக்கு  திருமணம் செய்விக்க  முடியுமா? அனுமதிப்பார்களா?  ஏற்றுக் கொள்வார்களா?  பேரலாயப் பாதிரிமார்கள்  இருக்கும்  இடங்களில்   அந்தப் பேராயப் பாதிரிமாரைத் தவிர   யார் வேண்டுமானாலும்  அந்த   முக்கியமான  பிரதான இடத்தில் அனுமதிப்பார்களா? 

    அதைவிட   நகைச்சுவை என்னவென்றால்   பல விளையாட்டு   நடத்தும் கிளப்களில்   வேட்டி அணியத் தடை விதித்திருக்கிறார்கள். உணவகங்களில்     வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுகளுக்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். மலேசியாவில்  ஒரு மசூதிக்கு  சென்றோம்;   அங்கே  அந்தக் கருப்பு  அங்கிகளை அணிந்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று சட்டமே உள்ளது. அதனால் அவர்கள்  அளிக்கும் கருப்பு அங்கிகளை  அணிந்தவருக்கே அனுமதி.  அதையும்  தவிரக்  கருப்பு அங்கி அணிந்தால் கூட    மற்ற மதத்தினருக்கு  ஆங்கே   நம் கோயிலைப் போல   கர்ப்பக் கிருஹம் என்று சொல்லக் கூடிய  மையமான இடத்தைப் பார்க்கக்   கூட அனுமதி கிடைக்கவில்லை.   அவரவர்  புனிதத்தை அவரவர் காக்கிறார்.  சுகாதாரம் கருதி  சில விதிகளைப்  பொது மக்கள் வரும் ஆலயங்களில்  கடைப்பிடிக்க   சில விதிகள் நிர்ணயித்தால் அவற்றைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

    அதை விடுத்து    சுத்தமாகவோ,  சுகாதாரமாகவோ இல்லாமல்   சைவ, வைணவக் கோயில்களில்  நான்  அறுத்த கோழியுடன் வருவேன்  என்னை அனுமதிக்க வேண்டும்   என்று பிடிவாதம்  பிடித்தாலோ  அவர்களைக் குறை கூறினாலோ  அது நியாயமே அல்ல.  அவரவர்  நியாயம் அவரவருக்கு. அதில் தலையிட  அடுத்தவருக்கு அனுமதி கிடையாது.  சக்தி ஸ்தலங்களில்  பலியிடுதல் தொன்று தொட்டு வரும் வழக்கம்   நேபால் செல்லும் போது  மானகாம்னா தேவி ஆலயம் என்னும் ஒரு ஆலயத்துக்கு  சென்றோம். அங்கே வரிசையில் நிற்கும் பக்தர்கள்  கையில்  ஒரு கோழியோடுதான் நிற்கிறார்கள். அது அவர்கள் வழக்கம்! நாம் அதிலே தலையிடாமல் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வந்தோம். அவர்களிடத்திலே போய் ஆடுகள் கோழிகள் ஆகியவறை பலி கொடுக்கக் கூடாது என்று உபதேசம் செய்தால் அவர்கள் கேட்பார்களா?

    அல்லது  இந்தியாவிலிருந்து  வந்திருக்கும் பிராமணன் நான்  ஆகவே   கர்ப்பக் கிருஹத்திலே இருக்கும் பூசாரியை  விரட்டுங்கள்;  என்னை அங்கே அனுமதியுங்கள்  நான் செய்கிறேன் பூஜை என்றால் அனுமதிப்பார்களா?  அப்படிச் சொல்பவர்களை  அம்மனுக்கு பலி போட்டுவிடுவார்கள். அதேபோல்   இந்துக் கோயில்களில் அது வைணவமோ சைவமோ சாக்தமோ  அந்தந்த  ஆலையங்களில்  அந்தந்த  முறையான ஆகமங்களைக் கடைப்பிடிப்பது  அவர்கள் வழக்கம். அவர்கள்    அர்ச்சகர்கள் என்று யாரை நியமிக்கிறார்களோ  அவரைத் தவிர   மற்றவரை   அவர்கள் மட்டும் ஏன் அனுமதிக்க வெண்டும்  அவர்கள்  யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக்கவேண்டும்  என்று ஏன் எதிர்பார்க்கிறீகள்? ஆகவே இனியாவது பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் என்று   எழுதிக் கொண்டிருப்பதை   நிறுத்துங்கள். இந்தியராக இந்தியாவிலே உள்ள அனைத்து  மதத்தவரையும் மதிக்கும் ஒரு புனித  இந்தியராக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

    “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
    அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“
     

    என்று  மஹாகவி பாரதியார் எழுதினார். உண்மைதான்  ஜாதி இல்லையென்று அவர் சொல்லவில்லை. ஜாதிகள் உண்டு அவைகளை மதியுங்கள். அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க  அவரவரை  அனுமதியுங்கள்;  மனிதம் ஓங்கட்டும் என்றுதான் சொன்னார்.  ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள். நாமெல்லோரும் சகோதர்கள் என்றார். ஆகவே  மனிதம் காக்கப்படவேண்டுமானால் பேதங்கள் களையப்படவேண்டும், இரக்கம் மனிதாபிமானம் உதவும் குணம் ஓங்க வேண்டும். ஒன்று படுவோமா? 

    “அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?“  — தமிழ்த்தேனீ

     

     

    Share
  • “ அட ! யாருங்க இவரு? “

    தமிழ்த்தேனீ

    அப்பா உங்ககிட்ட ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசணும்   என்ற  அவருடைய  மகன் ராஜேஷை பார்த்து   ஒரு ஐஞ்சு நிமிஷம்  குடுப்பா  இவரு  என்கிட்டே முக்கியமா  ஏதோ பேசிகிட்டு இருக்காரு  என்றார்  சபேசன்.  சரிப்பா நீங்க  பேசி முடிச்சிட்டு கூப்புடுங்க  நான் இங்கே இருக்கறது அவ்வளவா நல்லா  இருக்காது  என்றான் ராஜேஷ், அதெல்லாம் ஒண்ணுமில்லே  அவரு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டாரு  நானும்  ஒரு ரெண்டு நிமிஷத்துக்குள்ளே  அவருக்கு வேண்டியதை சொல்லிடுவேன்  நீ உக்காருப்பா இங்கேயே  என்றார் , சரிப்பா  என்று உட்கார்ந்தான் ராஜேஷ்.

    இதோ பாருங்க மனுஷனாப் பொறந்துட்டா  எல்லாருமே  “அட! யாருங்க இவரு”  அப்பிடீன்னு பல பேரைக் கேக்கவெச்சிட்டாலே  அவங்க  வாழ்நாள் சாதனையாளர்தான் , ஆனா  எது செஞ்சாலும் புகழடையலாம் , மக்கள் எதிர்பார்க்காத  கொடூரச் செயலைச் செய்யலாம், அல்லது சாகசங்கள் ஏதேனும்  செய்யலாம், அல்லது மற்றவர்களால் முடியாத ஏதேனும் ஒன்றைச் செய்யலாம், அல்லது  நல்லவனாகவே  நடந்து  நன்மையே  செஞ்சு  கூடப் பேருவாங்கிடலாம், ஆனா ஒண்ணு அதுவும் நமக்கு எது வருமோ அதைச்செய்யணும்,  நம்மோட இயல்பிலேயே  இல்லாத,  ஒன்றை யாரோ சொல்லிக் குடுத்ததை மனசிலே வாங்கி குழம்பிட்டு  சரி  செஞ்சு பாக்கலாம்ன்னு  ஆரம்பிக்கறவங்களாலே  அந்தக் குணத்தைக் கடைப்பிடிக்கவே முடியாது அதுனாலே  திட்டம் தோல்வி அடைஞ்சிரும்,     அதுனாலேதான் சொல்றேன்  நீங்க  இயல்பாவே நல்லவங்க  யாரோ சொல்றாங்கன்னு  அதிலே தலையிட்டு உங்க இயல்புக்கு மாறா  நீங்க எதையாவது  செஞ்சிட்டு அப்புறம் நீங்களே  ஜெயிச்சாக் கூட  உங்க  மனசாட்சி உறுத்தல்லேருந்து  தப்பிக்க  முடியாமே  மனசு குமைஞ்சிகிட்டே  இருக்கறதைவிட  உங்க  பரம்பரை  பெரியவங்க  எப்பிடி வாழ்ந்தாங்கன்னு  நெனைச்சுப் பாருங்க  அதுமாதிரியே நேர்மையா  செயலபடுங்க அதுதான்  நல்லது   , இல்லே  உங்க பரம்பரையிலே  ஏற்கெனவே வாழ்ந்தவங்க  எல்லாருமே  இப்பிடித்தான்  தப்பு செஞ்சுதான் முன்னுக்கு வந்தவங்கன்னு  நீங்க தீர்மானம் செஞ்சிட்டீங்கன்னா  நீங்க எது வேணா செய்யுங்க பொய் சொல்றதுக்கும்  தப்பு செய்யறதுக்கும்  ரொம்ப  நியாபக சக்தியும் மூளையும் வேணும்  ஆனா  உண்மையைச் சொல்றதுக்கு  இதெல்லாம் தேவையே இல்லே  ஏன்னா எப்போ கேட்டாலும் தைரியமா அதையே  சொல்லாம். ஏதோ என்னைக் கேட்டதாலே சொல்றேன் அப்புறம் உங்க இஷ்டம் என்றார்  சபேசன்

    எனக்கும் நீங்க சொல்றதுதான் சரின்னு படுது   நான் எது நியாயமோ  அதையே செஞ்சிட்டு நிம்மதியா இருக்கேன் அப்போ நான் வரேங்க என்றபடி  வெளியேறினார்  அவர்.    ராஜேஷ்பக்கம் திரும்பி   சொல்லுப்பா ஏதோ முக்கியமா  பேசணும்னு சொன்னியே   என்றார்  சபேசன்,   ராஜேஷின் மனக்கண்ணில் ஒரு காட்சி  திரைப்படம் போல் ஓடியது . மாமியார் வீட்டில் அன்று நடந்த  உரையாடல்  “  ஏன் மாப்பிள்ளே நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க  நான் உங்க  அப்பா அம்மாவை விட்டுடுங்கன்னா சொல்றேன், இல்லையே  நல்ல பணக்கார  ஏரியாவிலே இருக்கற  வீட்டிலே உங்க  அப்பா அம்மாவை  வெச்சிருக்கீங்களே  அவங்க பாவம்  காய்கறி பூந்தோட்டம்னு   அழகா  இயற்கையா  வாழறவங்க  அவங்களை  கிராமத்திலே இருக்கற  உங்க அப்பாவோட வீட்டிலே குடிவெச்சிட்டா  அவங்களும் மகிழ்ச்சியா  இருப்பாங்க, இங்கே  இந்த  வீட்டுலே  வேற யாரையாவது குடி வெச்சா  வாடகையே  அதிகமா  வருமேன்னுதான் சொல்றேன். என்றாள் மாமியார் கனகா.

    ஏங்க  அம்மா சொல்றதுலேயும் தப்பில்லே  நமக்கும் கொஞ்சம் காசு வந்தாத்தானே நாமளும்  நம்ம குழந்தையை கிண்டர்கார்டன் பள்ளியிலே  சேக்க  முடியும் , இப்பல்லாம் கிண்டர்கார்டன் பள்ளியிலே சேக்கவே  ஒரு லக்ஷ ரூபா டொனேஷன் கேக்கறாங்க தெரியுமா  என்றாள் அவன் மனைவி ரேணுகா.      மாப்பிள்ளை  எப்பவுமே என் பொண்டாட்டி கெட்டிக்காரி  , பொண்டாட்டி  நிர்வாகத்திலே திறமைசாலியா இருந்தா  அவங்க கிட்டே  ஆட்சியை ஒப்படைக்கிறதிலே தப்பில்லேன்னு நெனைக்கறவன் நானு. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்  யோசிச்சுப் பாருங்க  என்றார்  மாமனார்  சுப்புரத்தினம்.  மொத்தத்தையும்  காதிலே வாங்கின ராஜேஷுக்கும்  அது சரியாகப் படவே  அப்பாவிடம் பேசிப்பாக்கலாம்   என்றுதானே அவன் இங்கே  வந்தான்   .  இப்போ அப்பா  அவரோட  நண்பருக்கு  சொன்னதெல்லாம் கேட்டா மறுபடியும் குழப்பம் வருதே  அப்பா சொல்றது சரியா  இல்லே  மாமனார் மாமியார்  பொண்டாட்டி  சொன்னது  சரியா ?  என்னடா இது  இதை இப்ப  எப்பிடி அப்பாகிட்டே சொல்றதுன்னு யோசனை  . சற்றே சும்மா இருந்தான் ராஜேஷ் என்னப்பா ஏதோ பேசணும்னு வந்தியே  என்னா விஷயம்  சொல்லுப்பா  என்றார்  சபேசன்

    அது என்னவோ தெரியவில்லை சபேசனுக்கு. ஒரு முறை அவருடைய கிராமத்து வீட்டுக்கு  வந்திருந்த  ராஜேஷின் மாமனாரும் மாமியாரும் அந்த  வீட்டைப் பார்த்துவிட்டு நல்லா இருக்கு இது மாதிரி ஒரு வீடு கிராமத்திலே இருக்கறது  நல்லதுதான் எல்லாருக்கும் கிடைக்கறதில்லே  இது மாதிரி  என்று சொன்னது நினைவுக்கு வந்தது.  சுதாரித்துக்கொண்டு சொல்லுப்பா என்றார்

    ஒண்ணுமில்லேப்பா  ஏதோ கேக்க வந்தேன்  இப்போ எனக்கே புரிஞ்சி போச்சு அதான்  வேற ஒண்ணுமில்லேப்பா  நான் போயிட்டு  வரேன்  இங்கே உங்களுக்கு ஏதாச்சும் பணம் வேணுமா  என்றான்  இல்லேப்பா  எங்களுக்கென்ன செலவு ஒண்னுமில்லேப்பா என்றார் சபேசன்.  சரிப்பா ஏதாவது  வேணும்னா போன் பண்ணுங்க நான் போயிட்டு வரேன் என்றபடி  கிளம்பினான் ராஜேஷ்

    வீட்டுக்குள்ளே நுழைந்த  ராஜேஷை   ஏங்க  உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டீங்களா என்றாள் ரேணுகா  . இல்லே ரேணு  நான் இதை அப்பாகிட்டே  சொன்னா அவரு தப்பா நெனைப்பாரே அப்பிடீன்னு  சொல்லாமலே வந்துட்டேன் என்றான் ராஜேஷ். அதானே பாத்தேன்   சிலபேரை  எவ்ளோ சொல்லிக் குடுத்தாலும் மாத்த  முடியாதுன்னு  நான் எங்க அம்மாகிட்டே  சொல்லிட்டேன்  எனக்குத் தெரியாதா  உங்களைப் பத்தி என்றாள் ரேணுகா    தொலைபேசி அழைத்தது  எடுத்துப் பேசினார்  சுப்புரத்தினம், என்ன சம்பந்தி  நல்லா இருக்கீங்களா  என்றார்  சபேசன்  நல்லா இருக்கோம்  நீங்க நல்லா இருக்கீங்களா  சம்பந்தி மாப்பிள்ளை அங்கே வந்தாரா  உங்க  செலவுக்கு  பணம் குடுத்தாரா  இல்லேன்னா சொல்லுங்க  நான் கொண்டாந்து தரேன் என்றார் சுப்புரத்தினம்.

    அதெல்லாம் வேணாம் சம்பந்தி  உங்க  நல்ல  மனசு எனக்குத் தெரியாதா    ராஜேஷே பணம் வேணுமான்னு  கேட்டான்  இப்ப ஒண்ணும் செலவு இல்லே அதுனாலே வேணாம்னுட்டேன் . ராஜேஷைக் கூப்பிடுங்களேன் என்றார் சபேசன். மாப்பிள்ளை உங்க  அப்பா உங்ககிட்டே பேசணுமாம் என்றார்  சுப்புரத்தினம்.  ராஜேஷ்  வந்து அப்பா  சொல்லுங்கப்பா  என்னா விஷயம் என்றான்.

    உங்கிட்டே  நேரா பேச  ஒரு மாதிரியா இருந்துது அதான்  ,   உன் அம்மா  சொல்றா   கிராமத்திலே  இருந்தா   தோட்டம் செடி கொடின்னு  நாம பாட்டுக்கு  இருக்கலாம் இங்கே எனக்கு பொழுதே  போகமாட்டேங்குது , அப்பிடீன்னு  அதுனாலே  நீ ஒண்ணும் தப்பா  நெனைச்சுக்காதே  நானும் அம்மாவும் கிராமத்து வீட்டுக்கே  போயிடலாம்னு முடிவெடுத்திருக்கோம். அங்கதாம்பா  காத்துலேருந்து  மனுஷங்க மனசு வரைக்கும்  சுத்தமா இருக்கு.  என்றார்.   அப்பா  எதுக்குப்பா இந்த திடீர் முடிவு என்றான் ராஜேஷ்    திடீர் முடிவில்லேப்பா அப்பப்போ சொல்லிகிட்டே  இருக்கா அவளுக்கு இங்கே பொழுது போகலே அதான் என்றார்  சபேசன் . அங்கே உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே  என்றான் ராஜேஷ்  ஒண்ணும் இல்லேப்பா எல்லாம் கிடைக்குது ,வேணும்னா  பஸ்சிலே ஏறி டவுனுக்கு  வந்தா போவுது ஒரு கஷ்டமும் இல்லே  என்றார்  சபேசன் .  சரிப்பா  நான் நாளைக்கு  நீங்க அங்க போறதுக்கு  ஏற்பாடு  செய்யறேன்  என்றான் ராஜேஷ்,

    ரிசிவரை வைத்துவிட்டு  வந்த  சபேசனைப் பாத்து  ஏங்க நான் அப்பிடியெல்லாம் சொல்லவே இல்லையே  எதுக்கு  இப்பிடி சொல்றீங்க, அவன் அந்த மாதிரி ஏதாவது சொன்னானா  பாவம் ராஜேஷ் தப்பா நெனைச்சுக்க போறான்  என்றாள் அவர் மனைவி  காமாட்சி.  இல்லேம்மா  அவன் சொல்லலை ! அவனாலே  சொல்ல முடியலே , அதுனலேதான் நான் முடிவெடுத்தேன்  .ஏம்மா  நான் ஏதாவது செஞ்சா அது சரியாத்தானே  இருக்கும்  பாவம்மா  ராஜேஷ் எடுப்பார் கைப்பிள்ள  அவன். அவன் குழம்பாமே இருக்கட்டும்னுதான்  இப்பிடி ஒரு முடிவெடுத்தேன் என்றார்  , சரிங்க  நாம கிராமத்துக்கே போயிடலாம் என்றாள் காமாட்சி.

                                                 சுபம்

    Share