-தமிழ்த்தேனீ

பக்கத்து வீட்டில்  குடிவந்த   புதியவர்  அவராகவே வந்து  சார்  நான் உங்க  பக்கத்து வீட்டிலே குடி வந்திருக்கேன் என்றார்.

உள்ளே வாங்க… உக்காருங்க…என்ன சாப்படறீங்க?  என்றேன் நான்.  உட்கார்ந்து, சார் உங்க வீடு ரொம்ப நல்லா இருக்கு என்றார் அவர். இங்கே குடி வந்துடறீங்களா என்றேன் நான்.

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ என்று சிரித்துவிட்டு நல்லா தமாஷா பேசறீங்க  சார்;  என் பேர்  மணிகண்டன் என்றார் அவர்.   என் பேரு தமிழ்த்தேனீ என்றேன் நான்.

பேரே  வித்யாசமா இருக்கே  உங்க  அப்பா அம்மா வெச்ச பேரா?  என்றார்.

இல்லே  அவங்க வெச்ச பேரு கிருஷ்ணமாச்சாரி.  நான் வெச்சிகிட்ட  புனைபெயர் தமிழ்த்தேனீ  என்றேன் நான்.

எப்பிடி சார் உங்களுக்கு இப்பிடி ஒரு பேரு வெச்சிக்கணும்னு தோணிச்சு   என்றார் மணிகண்டன்.  எனக்குத் தமிழ்ன்னா ரொம்பப்  பிடிக்கும்.  அதுனாலே தமிழ்லே இருக்கற அமிர்தம் மாதிரியான பல  நல்லதைச்  சேகரிச்சு மக்களுக்கு குடுக்கணும் அப்பிடீங்கற  எண்ணத்திலேதான் தமிழ்த்தேனீன்னு பேரு வெச்சிகிட்டேன் நானே  என்றேன் நான்.

சார்  உங்ககிட்டே  வெளிப்படையா  பேசலாமா என்றார் அவர்.    தாராளமா பேசலாம்; வெளிப்படையாப்  பேசினா உங்ககிட்டே நட்பு வெச்சிப்பேன்; இல்லேன்னா கொஞ்சம் தள்ளியே இருப்பேன் அப்பிடின்னேன் நான்.

உஙகளை  ரொம்பக் கோவக்காரர்ன்னு  சொல்றாங்களே  என்றார்  அவர்.

நான் சிரித்தேன்.

என்ன சார் உங்களை கோவக்காரர்ன்னு சொல்றேன்… சிரிக்கறீங்க  என்றார் அவர்.

சரி அதைவிடுங்க  உங்களுக்கு கோவம் வருமா என்றேன், வரும் சார்   என்றார் மணிகண்டன்.

கோவம் வந்தால் என்ன செய்வீங்க என்றேன் நான். கோவம் வந்தால்  கன்னாபின்னான்னு திட்டுவேன்  என்றார். உங்க அப்பாக்குக் கோவம் வருமா? வந்தா என்ன செய்வார்?  என்றேன்.    அவரு அடிச்சிருவாரு;   அதைப் பாத்துட்டுதான் நான் என் கோவத்தைக் கொறைச்சிகிட்டேன்  என்றார் அவர்.

உங்க பையனுக்குக் கோவம் வருமா?  என்றேன் நான். அவனுக்குக் கோவம் வராது சார்  என்றார் அவர். அப்பிடிக் கோவம் வந்துட்டா என்ன செய்வாரு என்றேன் நான்.

வெட்டிப் போட்ருவான் என்றார் அவர்.  நான் சிரித்தேன்!

என்னைக் கோவக்காரன்னு சொன்னவங்க எல்லாம் என்ன செய்யறாங்கன்னு பாருங்க!

எனக்குக் கோவம் வரும்! நான் கோவக்காரன்தான் எங்கேயாவது தப்பு நடந்தா எனக்கு கோவம் வரும் என்றேன் நான்!

அது சரி சார், இவ்ளோ சொல்றீங்களே… உங்களுக்குக் கோவம் வந்தா   என்னா செய்வீங்க  என்றார் மணிகண்டன்.

நான் சிரிப்பேன் என்றேன்!  என்னது சிரிப்பீங்களா! அதுதான் நான் உங்களைக் கோவக்காரன்னு  சொல்றாங்களேன்னு  கேட்டவுடனே சிரிச்சீங்களா?  சரி சார்  நான் கிளம்பறேன் என்றார்  பயந்தபடி.

இப்போ  நீங்க  என்ன புரிஞ்சிகிட்டீங்க  என்றேன் நான். ஒண்ணும் புரியலே சார் குழப்பறீங்க நீங்க  என்றார் அவர்.

சரி  தெளிவா பேசறீங்க.  இப்போ யாராவது என்னைப் பத்திக்கேட்டா என்னை கோவக்காரன்னு சொல்வீங்களா  இல்லே சாந்தமானவருன்னு  சொல்வீங்களா  என்றேன் நான்.  அதுதான் சார் குழப்பமா இருக்கு. அதுதான் ப்ரச்சனையே! குழம்பிப் போறவங்க எல்லாம் என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னே தெரியாமே கோவக்காரன்னு சொல்லிட்டுத் தப்பிச்சிக்கறாங்க.

இப்போ நீங்க சொல்லுங்க… தப்பு நடந்தா நமக்குக் கோவம் வரலேன்னா  நாமல்லாரும் உணர்ச்சியுள்ள  மனுஷனா என்றேன் நான்.   இல்லே சார் தப்பு செய்யறவங்க மேலே கோவம் வரணும்; அதுதான் சரி! என்றார் அவர்.

அப்போ  மத்தவங்க நம்மை என்ன சொல்வாங்க  என்றேன் நான்.   கோவக்காரன்னு சொல்வாங்க புரியுதா என்றேன் நான்.  இப்போ நீங்க சொல்லுங்க  நான் கோவக்காரனா?  என்றேன் நான்.

அப்பிடித் தெரியலே… உங்களைப் பாத்தா நல்ல தமாஷா பேசறீங்க என்றார் அவர்.

நான் சிரித்தேன்.

அவர் பயந்துபோய் சரி சார் நான் கிளம்பறேன். உங்களுக்குக் கோவம் வந்திருச்சு  என்றார்.  இப்பிடித்தான்  நல்ல நடவடிக்கை யாரு எடுத்தாலும் அவரைக் கோவக்காரன்னு சொல்றாங்க தப்பு செய்யறவங்க புரியுதா? என்றேன் நான்.

சரி சார் நீங்க கோவப்படாதீங்க! இல்லெ இல்லே சிரிக்காதீங்க! நான் போயிட்டு அப்புறமா வரேன் என்றபடி எழுந்துபோனார் மணிகண்டன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *