-தமிழ்த்தேனீ

1. “காலடிகள்“

ஒருவர் எப்போதும் ராமநாம  ஸ்மரணையிலேயே இருப்பார்.  சிறந்த  ராமபக்தர்   அவர்  எப்போதுமே இறைவனை  வேண்டுவதால்   இறைவனும் அவரைக் காக்க  அவர்  கூடவே  நடந்து வருவாராம்.  அப்போது பின்னால் பார்த்தால் இரு காலடிகள் கூடவே வருவது  தெரியுமாம் அந்த  பக்தருக்கு. ஒரு நாள்  அவர்   காலில்  அடிபட்டு  நடக்க  ஸ்ரமப்பட்டுக் கொண்டிருக்கையில்  பின்னால் திரும்பி இறைவன் வருகிறானா  என்று பார்த்தாராம்.  அங்கே இறைவனின் திருவடிகளின்  தடம் காணவில்லை.   ஒரே ஒரு ஜோடிக் கால்தடங்கள் மட்டுமே  தெரிந்ததைப் பார்த்து  இறைவா என்னைக்  கைவிட்டு விட்டாயா   உன் காலடித் தடம் காணோமே  என்றாராம்.

அதற்கு  இறைவன் நான் உன்னை  எப்போதுமே கைவிடமாட்டேன்  இப்போது தெரிவது  உன் காலடித் தடமல்ல;   என் காலடித் தடமே  உனக்கு காலில் அடிபட்டிருப்பதால் உன்னையும் தூக்கிக் கொண்டு நான் நடந்து கொண்டிருக்கிறேன்  என்றாராம் இறைவன்.

*****

2. “பரிபூரணம்”

ஒருவன் மலைப்பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டான். உடனே அவன் கைக்குக் கிடைத்த மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு இறைவா காப்பாற்று என்று கதறுகிறான். அசரீரியாக, ”நீ அந்த வேரை விட்டுவிடு நான் காப்பாற்றுகிறேன்” என்று ஒரு குரல் கேட்கிறது. அதெப்படி விடமுடியும் இதையும் விட்டுவிட்டால் நான் கீழே விழுந்துவிடுவேன் என்றான் அந்த மனிதன்.

உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறதா நான் காப்பாற்றுவேன் என்றது அந்த அசரீரி.

இ ரு க் கி ற து ஆனாலும் பயமாய் இருக்கிறதே என்றான் அந்த மனிதன்.

அப்படியானால் பயப்படாமல் அந்த மரத்தின் வேரை விட்டுவிடு என்றது அசரீரி.

இல்லை எனக்குப் பயமாய் இருக்கிறது என்றான் அவன்.

நான் ஏற்கெனவே உன்னைக் காப்பாற்றிவிட்டேன் நீதான் கவனிக்கவில்லை என்றது அசரீரி.

அப்படியா எப்படி என்றான் மனிதன்.

 கீழே குனிந்து பார் என்றது அசரீரி.

அந்த மனிதன் கீழே குனிந்து பார்த்தான். அவன் காலுக்கும் பூமிக்கும் இடையே இரண்டடி இடைவெளிதான் இருந்தது.

தெய்வமே என்னைக் காப்பாற்றிவிட்டாய் என்று சொல்லிக்கொண்டே கீழே குதித்தான் அந்த மனிதன் அனவன் குதித்தவுடன் அங்கே அந்தப் பூமியில் புதைமணல் அவனை ஊள்ளே இழுக்கலாயிற்று.

அந்த மனிதன் அலறினான் காப்பாற்றிவிட்டேன் என்றாயே தெய்வமே இப்படிப் புதை மணலில் தள்ளி விட்டாயே என்று அலறினான்.

கவலைப்படாதே என் மேல் உனக்கு முழு நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறதே என்றது அசரீரி.

அப்போது ஒரு பெரிய ராக்‌ஷதக் கழுகு அந்த மனிதனைக் கால்களால் பற்றிக்கொண்டு பறந்தது.

அந்த மனிதன் இறைவா புதைமணலிலிருந்து ராக்‌ஷதக் கழுகிடம் மாட்டிவிட்டாயே என்று அலறினான்.

அடே மனிதா நான் எது செய்தாலும் அது உன்னைக் காக்கவே என்று நீ எப்போது புரிந்துகொண்டு எப்போது என்னை நம்பப் போகிறாய் என்றது அசரீரி.

அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. இந்த ஒரு அசரீரிதான் இப்போது துணையிருக்கிறது இதையும் பகைத்துக் கொண்டால் நம் கதி அதோ கதிதான் என்று நினைத்து இறைவா நான் உன்னை நம்பாமல் யாரை நம்பப் போகிறேன் அதற்காக என்னை ஒரு ஆபத்திலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் என்று சொல்லிக்கொண்டே போனவன், ஆமாம் நான் பேசுவது உன் காதில் விழுகிறதா இந்த ராக்‌ஷதக் கழுகு என்னைக் கவ்விக்கொண்டு வெகு வேகமாகப் பறக்கிறதே காற்றிலே நான் பேசுவது எனக்கே கேட்கவில்லையே உனக்கு கேட்கிறதா இறைவா என்று அலறினான்.

அந்த அசரீரியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

இறைவா நீயென்ன செவிடா ஊமையா நான் வேண்டுவது உன் காதில் விழுகிறதா என்று அலறினான் அந்த மனிதன். அந்தக் கழுகு ஓரிடத்தில் அவனை பத்திரமாக இறக்கி விட்டுவிட்டு நின்றது.

அந்த மனிதன் தன்னைச் சுற்றிப் பார்த்தான் அப்பாடா வேறு ஆபத்து ஏதுமில்லை. நல்லவேளை இந்தக் கழுகு என்னைக் காப்பாற்றி விட்டது; ஆனால் நீ என்னைக் கைவிட்டு விட்டாயே என்றான் அந்த மனிதன்.

நான் உன்னைக் கைவிடவே இல்லை. மனிதனே இது கழுகு அல்ல என் வாகனம் ஆகிய கருடன். இந்தக் கருடன் மேல் நானிருக்கிறேன் என்றது அசரீரி.

இறைவா நீயிருக்கிறாயா இந்தக் கருடன் மேல் என்னால் காண முடியவில்லையே என்று அலறினான் அந்த மனிதன்.

காலம் காலமாக உண்மையான பக்தியுடன் என்னை நோக்கித் தவமிருந்த பக்தர்களே காண முடியவில்லையே. என்னையே நம்பாமல் போலியாக பக்தி காட்டும் உன்னால் எப்படிக் காணமுடியும் என்னை? அதுவரை நீ உன் பக்தி போலியானதாக இருந்தாலும் உன்னை காப்பது என் கடமை ஆதலால் காப்பேன். ஆனால் என்னை நீ எப்போது பரிபூரணமாக நம்புகிறாயோ அப்போதுதான் நான் உனக்கு காட்சி அளிப்பேன் அதுவரை அசரீரியாகவே இருப்பேன்.

நீ உன்னையும் உணர்ந்து என்னையும் உணரும் நேரம் வரும்போது சரீரியாகவே காட்சி அளிப்பேன் வருகிறேன் அல்ல அல்ல எங்கும் நிறைந்திருக்கிறேன் என்றது அசரீரி.

கழுகு தன் அகலமான சிறகை விரித்து ஜிவ்வென்று மேலே எழுந்தது அல்ல அல்ல கருடன் பறந்து போனது.

அதன் மேல் நாராயணன் உட்கார்ந்திருப்பதைப் பல கண்கள் கவனித்தன; அவையெல்லாம் பரிபூரண சரணாகதி பெற்ற கண்கள்.

 

 

 

1 thought on “பரிபூரணம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க