கவிஞர் ஜவஹர்லால்

 

காலமெனும் மேடையிலே

கோலமிட்டு வேடமிட்டுக்

காட்டுகிறோம் நாம்பலவாய் வித்தை-ஆய்ந்து

கூட்டிடிலோ அத்துணையும் சொத்தை

 

காதலென்றும் மோகமென்றும்

காதலின்றேல் சாதலென்றும்

கதறுகிறார் இளைஞரெல்லாம் இங்கே-அந்தக்

காதலெல்லாம் ஓய்ந்தபின்னர் எங்கே?

 

மாடுமனை வீடுமக்கள்

கூடுகின்ற மக்களெலாம்

மாட்சியுள்ள போதிருப்பார் கூடி-நாம்

வீழ்ச்சியுற்றால் பறந்திடுவார் ஓடி

 

செத்தபிணம் தனைச்சுற்றிக்

கத்தைகத்தை யாய்மாலை

சாத்துகிறார் போர்த்துகிறார் ஆடை-நாளும்

சாம்பிணத்துக் கேதுமில்லை ஆடை

 

வறுமையென்றும் ஒழிப்பென்றும்

வகைவகையாய்க் கொள்கைகளை

வகுத்துரைத்து வாக்குவாங்கிச் செல்வார்-அவர்

வென்றபின்னே ஏழைபக்கம் நில்லார்

 

யாரிடத்தில் யார்தஞ்சம்

யாரொடுயார் கூட்டணியாம்

நாட்டிலொரு பெருங்கூத்தே நடக்கும்-என்று

நாட்டுமக்கள் அக்கூத்தை முடிக்கும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *