தமிழ்த்தேனீ

அப்பா உங்ககிட்ட ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசணும்   என்ற  அவருடைய  மகன் ராஜேஷை பார்த்து   ஒரு ஐஞ்சு நிமிஷம்  குடுப்பா  இவரு  என்கிட்டே முக்கியமா  ஏதோ பேசிகிட்டு இருக்காரு  என்றார்  சபேசன்.  சரிப்பா நீங்க  பேசி முடிச்சிட்டு கூப்புடுங்க  நான் இங்கே இருக்கறது அவ்வளவா நல்லா  இருக்காது  என்றான் ராஜேஷ், அதெல்லாம் ஒண்ணுமில்லே  அவரு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டாரு  நானும்  ஒரு ரெண்டு நிமிஷத்துக்குள்ளே  அவருக்கு வேண்டியதை சொல்லிடுவேன்  நீ உக்காருப்பா இங்கேயே  என்றார் , சரிப்பா  என்று உட்கார்ந்தான் ராஜேஷ்.

இதோ பாருங்க மனுஷனாப் பொறந்துட்டா  எல்லாருமே  “அட! யாருங்க இவரு”  அப்பிடீன்னு பல பேரைக் கேக்கவெச்சிட்டாலே  அவங்க  வாழ்நாள் சாதனையாளர்தான் , ஆனா  எது செஞ்சாலும் புகழடையலாம் , மக்கள் எதிர்பார்க்காத  கொடூரச் செயலைச் செய்யலாம், அல்லது சாகசங்கள் ஏதேனும்  செய்யலாம், அல்லது மற்றவர்களால் முடியாத ஏதேனும் ஒன்றைச் செய்யலாம், அல்லது  நல்லவனாகவே  நடந்து  நன்மையே  செஞ்சு  கூடப் பேருவாங்கிடலாம், ஆனா ஒண்ணு அதுவும் நமக்கு எது வருமோ அதைச்செய்யணும்,  நம்மோட இயல்பிலேயே  இல்லாத,  ஒன்றை யாரோ சொல்லிக் குடுத்ததை மனசிலே வாங்கி குழம்பிட்டு  சரி  செஞ்சு பாக்கலாம்ன்னு  ஆரம்பிக்கறவங்களாலே  அந்தக் குணத்தைக் கடைப்பிடிக்கவே முடியாது அதுனாலே  திட்டம் தோல்வி அடைஞ்சிரும்,     அதுனாலேதான் சொல்றேன்  நீங்க  இயல்பாவே நல்லவங்க  யாரோ சொல்றாங்கன்னு  அதிலே தலையிட்டு உங்க இயல்புக்கு மாறா  நீங்க எதையாவது  செஞ்சிட்டு அப்புறம் நீங்களே  ஜெயிச்சாக் கூட  உங்க  மனசாட்சி உறுத்தல்லேருந்து  தப்பிக்க  முடியாமே  மனசு குமைஞ்சிகிட்டே  இருக்கறதைவிட  உங்க  பரம்பரை  பெரியவங்க  எப்பிடி வாழ்ந்தாங்கன்னு  நெனைச்சுப் பாருங்க  அதுமாதிரியே நேர்மையா  செயலபடுங்க அதுதான்  நல்லது   , இல்லே  உங்க பரம்பரையிலே  ஏற்கெனவே வாழ்ந்தவங்க  எல்லாருமே  இப்பிடித்தான்  தப்பு செஞ்சுதான் முன்னுக்கு வந்தவங்கன்னு  நீங்க தீர்மானம் செஞ்சிட்டீங்கன்னா  நீங்க எது வேணா செய்யுங்க பொய் சொல்றதுக்கும்  தப்பு செய்யறதுக்கும்  ரொம்ப  நியாபக சக்தியும் மூளையும் வேணும்  ஆனா  உண்மையைச் சொல்றதுக்கு  இதெல்லாம் தேவையே இல்லே  ஏன்னா எப்போ கேட்டாலும் தைரியமா அதையே  சொல்லாம். ஏதோ என்னைக் கேட்டதாலே சொல்றேன் அப்புறம் உங்க இஷ்டம் என்றார்  சபேசன்

எனக்கும் நீங்க சொல்றதுதான் சரின்னு படுது   நான் எது நியாயமோ  அதையே செஞ்சிட்டு நிம்மதியா இருக்கேன் அப்போ நான் வரேங்க என்றபடி  வெளியேறினார்  அவர்.    ராஜேஷ்பக்கம் திரும்பி   சொல்லுப்பா ஏதோ முக்கியமா  பேசணும்னு சொன்னியே   என்றார்  சபேசன்,   ராஜேஷின் மனக்கண்ணில் ஒரு காட்சி  திரைப்படம் போல் ஓடியது . மாமியார் வீட்டில் அன்று நடந்த  உரையாடல்  “  ஏன் மாப்பிள்ளே நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க  நான் உங்க  அப்பா அம்மாவை விட்டுடுங்கன்னா சொல்றேன், இல்லையே  நல்ல பணக்கார  ஏரியாவிலே இருக்கற  வீட்டிலே உங்க  அப்பா அம்மாவை  வெச்சிருக்கீங்களே  அவங்க பாவம்  காய்கறி பூந்தோட்டம்னு   அழகா  இயற்கையா  வாழறவங்க  அவங்களை  கிராமத்திலே இருக்கற  உங்க அப்பாவோட வீட்டிலே குடிவெச்சிட்டா  அவங்களும் மகிழ்ச்சியா  இருப்பாங்க, இங்கே  இந்த  வீட்டுலே  வேற யாரையாவது குடி வெச்சா  வாடகையே  அதிகமா  வருமேன்னுதான் சொல்றேன். என்றாள் மாமியார் கனகா.

ஏங்க  அம்மா சொல்றதுலேயும் தப்பில்லே  நமக்கும் கொஞ்சம் காசு வந்தாத்தானே நாமளும்  நம்ம குழந்தையை கிண்டர்கார்டன் பள்ளியிலே  சேக்க  முடியும் , இப்பல்லாம் கிண்டர்கார்டன் பள்ளியிலே சேக்கவே  ஒரு லக்ஷ ரூபா டொனேஷன் கேக்கறாங்க தெரியுமா  என்றாள் அவன் மனைவி ரேணுகா.      மாப்பிள்ளை  எப்பவுமே என் பொண்டாட்டி கெட்டிக்காரி  , பொண்டாட்டி  நிர்வாகத்திலே திறமைசாலியா இருந்தா  அவங்க கிட்டே  ஆட்சியை ஒப்படைக்கிறதிலே தப்பில்லேன்னு நெனைக்கறவன் நானு. அவ சொன்னா சரியாத்தான் இருக்கும்  யோசிச்சுப் பாருங்க  என்றார்  மாமனார்  சுப்புரத்தினம்.  மொத்தத்தையும்  காதிலே வாங்கின ராஜேஷுக்கும்  அது சரியாகப் படவே  அப்பாவிடம் பேசிப்பாக்கலாம்   என்றுதானே அவன் இங்கே  வந்தான்   .  இப்போ அப்பா  அவரோட  நண்பருக்கு  சொன்னதெல்லாம் கேட்டா மறுபடியும் குழப்பம் வருதே  அப்பா சொல்றது சரியா  இல்லே  மாமனார் மாமியார்  பொண்டாட்டி  சொன்னது  சரியா ?  என்னடா இது  இதை இப்ப  எப்பிடி அப்பாகிட்டே சொல்றதுன்னு யோசனை  . சற்றே சும்மா இருந்தான் ராஜேஷ் என்னப்பா ஏதோ பேசணும்னு வந்தியே  என்னா விஷயம்  சொல்லுப்பா  என்றார்  சபேசன்

அது என்னவோ தெரியவில்லை சபேசனுக்கு. ஒரு முறை அவருடைய கிராமத்து வீட்டுக்கு  வந்திருந்த  ராஜேஷின் மாமனாரும் மாமியாரும் அந்த  வீட்டைப் பார்த்துவிட்டு நல்லா இருக்கு இது மாதிரி ஒரு வீடு கிராமத்திலே இருக்கறது  நல்லதுதான் எல்லாருக்கும் கிடைக்கறதில்லே  இது மாதிரி  என்று சொன்னது நினைவுக்கு வந்தது.  சுதாரித்துக்கொண்டு சொல்லுப்பா என்றார்

ஒண்ணுமில்லேப்பா  ஏதோ கேக்க வந்தேன்  இப்போ எனக்கே புரிஞ்சி போச்சு அதான்  வேற ஒண்ணுமில்லேப்பா  நான் போயிட்டு  வரேன்  இங்கே உங்களுக்கு ஏதாச்சும் பணம் வேணுமா  என்றான்  இல்லேப்பா  எங்களுக்கென்ன செலவு ஒண்னுமில்லேப்பா என்றார் சபேசன்.  சரிப்பா ஏதாவது  வேணும்னா போன் பண்ணுங்க நான் போயிட்டு வரேன் என்றபடி  கிளம்பினான் ராஜேஷ்

வீட்டுக்குள்ளே நுழைந்த  ராஜேஷை   ஏங்க  உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டீங்களா என்றாள் ரேணுகா  . இல்லே ரேணு  நான் இதை அப்பாகிட்டே  சொன்னா அவரு தப்பா நெனைப்பாரே அப்பிடீன்னு  சொல்லாமலே வந்துட்டேன் என்றான் ராஜேஷ். அதானே பாத்தேன்   சிலபேரை  எவ்ளோ சொல்லிக் குடுத்தாலும் மாத்த  முடியாதுன்னு  நான் எங்க அம்மாகிட்டே  சொல்லிட்டேன்  எனக்குத் தெரியாதா  உங்களைப் பத்தி என்றாள் ரேணுகா    தொலைபேசி அழைத்தது  எடுத்துப் பேசினார்  சுப்புரத்தினம், என்ன சம்பந்தி  நல்லா இருக்கீங்களா  என்றார்  சபேசன்  நல்லா இருக்கோம்  நீங்க நல்லா இருக்கீங்களா  சம்பந்தி மாப்பிள்ளை அங்கே வந்தாரா  உங்க  செலவுக்கு  பணம் குடுத்தாரா  இல்லேன்னா சொல்லுங்க  நான் கொண்டாந்து தரேன் என்றார் சுப்புரத்தினம்.

அதெல்லாம் வேணாம் சம்பந்தி  உங்க  நல்ல  மனசு எனக்குத் தெரியாதா    ராஜேஷே பணம் வேணுமான்னு  கேட்டான்  இப்ப ஒண்ணும் செலவு இல்லே அதுனாலே வேணாம்னுட்டேன் . ராஜேஷைக் கூப்பிடுங்களேன் என்றார் சபேசன். மாப்பிள்ளை உங்க  அப்பா உங்ககிட்டே பேசணுமாம் என்றார்  சுப்புரத்தினம்.  ராஜேஷ்  வந்து அப்பா  சொல்லுங்கப்பா  என்னா விஷயம் என்றான்.

உங்கிட்டே  நேரா பேச  ஒரு மாதிரியா இருந்துது அதான்  ,   உன் அம்மா  சொல்றா   கிராமத்திலே  இருந்தா   தோட்டம் செடி கொடின்னு  நாம பாட்டுக்கு  இருக்கலாம் இங்கே எனக்கு பொழுதே  போகமாட்டேங்குது , அப்பிடீன்னு  அதுனாலே  நீ ஒண்ணும் தப்பா  நெனைச்சுக்காதே  நானும் அம்மாவும் கிராமத்து வீட்டுக்கே  போயிடலாம்னு முடிவெடுத்திருக்கோம். அங்கதாம்பா  காத்துலேருந்து  மனுஷங்க மனசு வரைக்கும்  சுத்தமா இருக்கு.  என்றார்.   அப்பா  எதுக்குப்பா இந்த திடீர் முடிவு என்றான் ராஜேஷ்    திடீர் முடிவில்லேப்பா அப்பப்போ சொல்லிகிட்டே  இருக்கா அவளுக்கு இங்கே பொழுது போகலே அதான் என்றார்  சபேசன் . அங்கே உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே  என்றான் ராஜேஷ்  ஒண்ணும் இல்லேப்பா எல்லாம் கிடைக்குது ,வேணும்னா  பஸ்சிலே ஏறி டவுனுக்கு  வந்தா போவுது ஒரு கஷ்டமும் இல்லே  என்றார்  சபேசன் .  சரிப்பா  நான் நாளைக்கு  நீங்க அங்க போறதுக்கு  ஏற்பாடு  செய்யறேன்  என்றான் ராஜேஷ்,

ரிசிவரை வைத்துவிட்டு  வந்த  சபேசனைப் பாத்து  ஏங்க நான் அப்பிடியெல்லாம் சொல்லவே இல்லையே  எதுக்கு  இப்பிடி சொல்றீங்க, அவன் அந்த மாதிரி ஏதாவது சொன்னானா  பாவம் ராஜேஷ் தப்பா நெனைச்சுக்க போறான்  என்றாள் அவர் மனைவி  காமாட்சி.  இல்லேம்மா  அவன் சொல்லலை ! அவனாலே  சொல்ல முடியலே , அதுனலேதான் நான் முடிவெடுத்தேன்  .ஏம்மா  நான் ஏதாவது செஞ்சா அது சரியாத்தானே  இருக்கும்  பாவம்மா  ராஜேஷ் எடுப்பார் கைப்பிள்ள  அவன். அவன் குழம்பாமே இருக்கட்டும்னுதான்  இப்பிடி ஒரு முடிவெடுத்தேன் என்றார்  , சரிங்க  நாம கிராமத்துக்கே போயிடலாம் என்றாள் காமாட்சி.

                                             சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.