“நமக்கு என்ன வேண்டும் என்றே அறியாத நாம் வரம் கேட்கிறோம்! என்ன வரம் கேட்பதென்றே தெரியாமல் வரம் கேட்கிறோம். நமக்கென்ன வேண்டுமென்று நம்மைவிட ஆண்டவன் நன்கறிவான். நமக்குக் கேட்கவும் தெரியவில்லை; இருப்பதன் அருமை தெரிந்து அனுபவிக்கவும் தெரியவில்லை. ஒன்றும் தெரியாத மானுடர் நாம் என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அதன் விளைவாக எழுந்த ஒரு சிறுகதை இது.

– தமிழ்த்தேனீ

***

“உம்மாச்சி காப்பாத்து!”

எப்பவுமே குளிச்சிட்டு உம்மாச்சி படத்துகிட்டே போயி நெத்தியிலே குங்குமமோ திருநீறோ இட்டுண்டு கைகூப்பிண்டு என்ன சொல்லணும்னு தாத்தா சொல்லிக் குடுத்திருக்கேன் என்றார் சடகோபன்.

எனக்குத் தெரியுமே கைகூப்பிண்டு “உம்மாச்சி காப்பாத்துன்னு  சொல்லணும்” என்று சொல்லிவிட்டு தலையைச் சாய்த்து அவரைப் பார்த்து சிரித்தாள் பேத்தி ஹன்சிகா. அவள் சிரிப்பிலே மயங்கி அள்ளிஎடுத்துப் ”போடீ மயக்கீ…எப்பவும் என்னை மயக்கறே நீ!” என்றவாறு முத்தம் கொடுத்தார் சடகோபன்.

”போ தாத்தா எனக்கு உன்னோட மீசை குத்தறது என்னைக் கீழே இறக்கிவிடு!” என்று திமிறி இறங்கி ஓடினாள் ஹன்சிகா.

சிரித்தபடி சோபாவில் வந்து உட்கார்ந்தார். பெருமாளே எப்பவும் நான் உங்கிட்டதான் வேண்டிக்கறேன். இதுவரைக்கும் என்னைக் கைவிடாமே காப்பாத்திட்டே. எப்பிடிடா பொண்ணோட படிப்பு கல்யாணம், சுகப் ப்ரசவம், அழகான ஒரு பேத்தி எல்லாமே நான் வேண்டிண்டா மாதிரியே இன்னி வரைக்கும் காப்பாத்தறே. எனக்கும் 59 வயாசியிடுத்து. கடமையெல்லாம் முடிஞ்சு போச்சு கொஞ்ச காலமாவது நிம்மதியா நோய் நொடியில்லாம வாழணும். எப்பவும் இப்பிடியே காப்பாத்து பெருமானே என்று கைகுவித்து வேண்டிக்கொண்டு நிம்மதியாக சாய்ந்து கண்ணை மூடினார்.

திடீரென்று மார்பில் ஒரு பளீரென்று வலி, அப்படியே தோளிலும் பரவியது, அவருக்கு வியர்த்துக் கொட்டியது. வாய் திறந்து தண்ணி வேணும்ன்னு சொல்ல முயன்று தோற்றுப் போய் அப்படியே சரிந்தார் சடகோபன்.

”ஏன்னா என்ன ஆச்சு?” என்று அலறிக்கொண்டே அவரை மடியிலே வைத்துகொண்டு அப்படியே பக்கத்தில் டீபாயின் மேலிருந்த டெலிபோனில் டாக்டரை அழைத்தாள் சடகோபனின் மனைவி சந்தியா.

டாக்டர் பரமேஷ்வரன் வந்து அவரைப் பரிசோதனை செய்துவிட்டு, உடனடியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம் என்று ஆம்புலன்சை வரவழைத்தார்.

மருத்துவமனையில் படுத்திருந்தார் சடகோபன். பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்த சந்தியா உங்களுக்கு ஒண்ணுமில்லே பயப்படாதீங்க. நல்ல வேளையா சரியான நேரத்துக்கு இங்கே கூட்டிண்டு வந்துட்டோம். ”என்ன ஆச்சு திடீர்ன்னு?” என்றாள்.

”என்னமோ திடீர்ன்னு மார்லே ஒரு வலி; வேர்த்துப் போச்சு அவ்ளோதான் தெரியும்” என்றார். ஏதோ இந்த வேளைக்கு பகவான் காப்பாத்திட்டார். சரி கொஞ்ச நேரம் தூங்குங்க என்றபடி போர்வையைச் சரி செய்தாள் சந்தியா. அவரும் தூங்கத் தொடங்கினார்.

டாக்டர் பரமேஷ்வரன் சொல்லிக்கொண்டிருந்தார். நல்ல வேளை ஹார்ட் அட்டாக்தானோன்னு நான்கூடப் பயந்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்லே, ஆமாம் என்ன சாப்பிட்டார் என்றார். பூரியும் உருளைக்கிழங்கும் தான் சாப்பிட்டார். என்றாள் சந்தியா. அஜீரணம்தான் அதான் வாயுப் பிடிப்பு. பயப்பட ஒண்ணுமில்லே. இனிமே கொஞ்சம் நாக்கைக் கட்டுப்படுத்தணும், ஜெரிக்கறாமாதிரி எதைவேணா சாப்பிடச் சொல்லுங்க. கண்ட கண்ட எண்ணெயிலே சமைக்காதீங்க. அவருக்கும் வயசாயிட்டே போவுதே. கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கணும். தினமும் நடக்கச் சொல்லுங்க, மத்தபடி பயப்பட ஒண்ணுமில்லே.  நீங்க ஹாஸ்பிடல் ஃபார்மாலிட்டியெல்லாம் முடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டுபோயிடலாம். இந்த மாத்திரையெல்லாம் தொடர்ந்து மூணு வேளைக்கு குடுங்க. கவலைப்படாதீங்க என்றார் சந்தியாவிடம்.

சரி டாக்டர், சரியான நேரத்துக்கு தெய்வம் மாதிரி உடனே வைத்தியம் செஞ்சு காப்பாத்திட்டீங்க என்றாள் சந்தியா.   சரிம்மா..அதெல்லாம் எங்க கடமைதானே; ஒரு விஷயம் அவருக்கு வெறும் மூச்சுப் பிடிப்புதான்; ஹார்ட் அட்டாக் வந்துதுன்னு பயந்துறப் போறார். எல்லாம் சரியாயிடும். சரி நான் கிளம்பறேன் என்றபடி டாக்டர் சென்றார்.

சந்தியா கௌண்டருக்குப் போய் பணத்தைக் கட்டிவிட்டு அறைக்கு வந்து எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு செல்போனில் டாக்ஸிக்கு சொல்லிவிட்டுச் சடகோபனிடம் வந்தாள். சடகோபன் கண்ணயர்ந்திருந்தார்.

ஏங்க.. எழுந்திருங்க. நாம் வீட்டுக்கு போகலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார். உங்களுக்கு ஒண்ணுமில்லே; வாயுப் பிடிப்புதானாம். சரி மெல்லமா என் கையைப் பிடிச்சிண்டு எழுந்திருங்க. கையை நீட்டுங்க நான் பிடிச்சுக்கறேன் என்றாள் சந்தியா. உங்களைத்தான் சொல்றேன் கையை நீட்டுங்க என்கையை பிடிச்சுக்குங்க என்ற சந்தியா அவர் கை சில்லென்று இருந்ததை உணர்ந்து பதறினாள். சடகோபனின் கை கீழே படுக்கையில் விழுந்தது.

என் கையை பிடிச்சுக்குங்க…கையை நீட்டுங்க என்கிற சந்தியாவின் குரல் கேட்டு கண்விழித்தார் சடகோபன். எதிரே நின்று கொண்டிருந்தவர் கையை நீட்டியபடி கையைக் குடுங்க சடகோபன் என்று சொல்லிவிட்டு மேலும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். சடகோபனுக்கு ஒன்றும் புரியவில்லை.

எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவருக்கு. என்ன சரி…சரி சுதாரிச்சிக்கோங்க சடகோபன். இப்போ சொல்றேன் நீங்க உங்க ஸ்தூல சரீரத்தை விட்டுட்டு வந்தாச்சு. புரியலையா உங்களுக்கு இதய வலி வந்துதே டாக்டர் பரமேஷ்வரன் தானே வைத்தியம் செஞ்சார்; நல்ல கைராசிக்காரர். அங்கேதான் உங்களுக்கு உயிர் போயிடுத்து என்றார் எதிரே இருந்தவர்

என்ன கைராசி என்னை சாகடிச்சிட்டாரே என்றார் சடகோபன். இல்லியே உங்களுக்கு வந்து இதய வலியே இல்லையே… வெறும் வாயுப்பிடிப்புதானே நீங்கதான் பயந்து போயிட்டீங்க இதய வலின்னு. டாக்டர் சரியான வைத்தியம்தான் செஞ்சார். நீங்களாதான் செத்துப் போனீங்க. அவருமேலே ஏன் பழியைப் போடறீங்க. உங்களுக்குத் தூக்கத்திலேயே ஆயுள் முடிஞ்சு போச்சு. அவர் மேலே தப்பே இல்லே என்றார் எதிரே இருந்தவர்.

என்னது நான் செத்துப் போயிட்டேனா! நெஞ்சு வலி வந்து வேர்த்துக் கொட்டித்தே அப்பக் கூட என்னைக் காப்பாத்து பெருமாளேன்னு சேவிச்சேனே, அதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல்லே கூட வேண்டிண்டே இருந்தேனே… என்னைக் காப்பாத்து என்னைக் காப்பாத்துன்னு. எப்பவுமே பெருமாளே காப்பாத்துவியே இந்த தடவை கைவிட்டுட்டியா.

நான் எப்பவுமே கைவிடமாட்டேன். இப்பக் கூட நான் கையை நீட்டிண்டுதானே இருக்கேன். சடகோபன் நீங்கதான் பிடிச்சுக்க மாட்டேங்கறீங்க. நான் எல்லாருக்கும் கைகுடுக்கறேன். நீங்க புத்தி தெளிஞ்சு பிடிச்சிண்டாதானே இதுக்குமேலே நான் என்ன செய்ய முடியும் என்றார் காளமேகம்.

டாக்டர் பரமேஷ்வரனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ட்றீங்களே என்றார் சடகோபன். வெறும் வாயுப்பிடிப்புக்கே என்னைக் காப்பாத்த முடியலே அவராலே. அவருக்கு நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கறீங்க. அதெல்லம் இருக்கட்டும்… நான் ஏன் உங்களுக்கு கைகுடுக்கணும் நீங்க யாரு? என்றார் சடகோபன்.

நான் ஏற்கெனவே சொன்னேன் நீங்க கவனிக்கலே போலிருக்கு! என்னைக் காளமேகப் பெருமான்னு கூப்பிடுவாங்க. எனக்கு திருமோகூர்தான் சொந்த ஊர். நான் இந்த உலகத்திலே இருந்து விடைபெற்று வர ஆத்மாவையெல்லாம் கையைப் பிடிச்சு இதோ கீழே தெரியறதே இந்த விரஜா நதியைத் தாண்டி அழைச்சிண்டு போவேன். அதுக்கப்புறம் அவங்கவங்க செஞ்ச கர்மாக்களின் பலனை அவங்க அனுபவிப்பாங்க என்றார் அவர் கையை நீட்டியபடி.

சாகடிசுட்டு இப்போ எதுக்கு கையைக் குடுக்கறீங்க நான் எல்லாக் கடமையையும் முடிச்சிட்டு அப்பாடா கொஞ்சகாலம் நிம்மதியா வாழலாம்னு இருந்தேன். என்னைப் பொசுக்குன்னு சாகடிச்சுட்டு எதுக்கு இப்போ கையைக் குடுக்கறீங்க என்றார் எரிச்சலுடன் சடகோபன்.

எனக்கு காளமேகம்னு பேரு ஆனா எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அதுனாலே எங்கிட்டே எரிச்சலோட பேசக்கூடாது. இதமாப் பேசணும்… பக்தியா பேசணும். என்னைக் காப்பாத்து என்னைக் காப்பாத்துன்னு இவ்ளோ காலமா நீங்க யாரைவேண்டிகிட்டீங்களோ அவன்தான் நான் என்றார் காளமேகம்.

பெருமாளே நீதானா அது! உன்னை நான் பாப்பேன்னு நெனைக்கவே இல்லையே. என்னை எப்பவுமே நீதானே காப்பாத்தினே இந்த தடவை மட்டும் ஏன் காப்பாத்தாமே விட்டுட்டே என்றார் சடகோபன். யார் சொன்னது நான் உங்களை காப்பாத்தாம விட்டுடேன்னு இப்பவும் நான் உங்களைக் காப்பாத்தி இருக்கேன் என்றார் காளமேகம்.

நான் உனக்குக் கை குடுக்க மாட்டேன் என்னைக் காப்பாத்துன்னு நான் வேண்டிண்டேன் நீ என்ன செஞ்சிருக்கணும் என்னை காப்பாத்தி உயிரோட வெச்சிருக்கணும்; அதைவிட்டுட்டு காப்பாத்தாம விட்டுட்டியே என்றார்.

சடகோபன் மனுஷங்களுக்கு நிகழ்காலத்திலே நடக்கும் போதே எதையும் புரிஞ்சிக்கற சக்தியில்லே. வருங்காலத்தை எப்பிடி உணரமுடியும், உங்களோட வருங்காலம் என்னான்னு எனக்குத் தெரியும். இப்போ நீங்க உயிரோட இருந்தா என்ன நடந்திருக்கும்னு ஒரு சினிமா காட்றேன் பாருங்க என்றார் காளமேகம்.

அங்கே ஒரு காட்சி விரிந்தது. சடகோபனை வீட்டுக்கு அழைத்து போகிறாள் சந்தியா. அடுத்த வாரம் அவருக்கு திடீரென்று மறுபடியும் முதுகு வலி, சரி வாயுப் பிடிப்புதான் மறுபடியும் வந்திருக்கும்னு ஏற்கெனவே டாக்டர் பரமேஷ்வரன் எழுதிக் குடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனை எடுத்து அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார் சடகோபன். முதுகுவலி அதிகமாயிற்று; தாங்கமுடியாத முதுகுவலி. எதுக்கும் டாக்டர் பரமேஷ்வரனைப் பாத்துட்டு வரலாம் என்று கிளினிக்குக்கு போயி டாக்டர் முதுவலி தாங்க முடியலே என்றார்.

பரமேஷ்வரன் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு சந்தியாவிடம் தனியாக சடகோபனுக்கு கிட்னிலே ப்ராப்ளம் உடனே வைத்தியம் செய்யணும் என்றார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து வைத்தியம் செய்து கொண்ட பிறகு, சந்தியாம்மா சடகோபனுக்குக் கிட்னி பாதிக்கப்பட்டிருக்கு. அவருக்கு வாரத்துக்கு ஒரு தடவை டையாலிசிஸ் செஞ்சிக்கணும், இல்லேன்னா யாராவது கிட்னி குடுத்தா ஆபரேஷன் செஞ்சு பாக்கலாம், ஆனாலும் இந்த வயசுக்கு மேலே உறுதியா ஒண்ணும் சொல்ல முடியாது என்றார். இதைச் சடகோபன்சார் கிட்டே பக்குவமா சொல்லி வைத்தியத்துக்கு தயார் செய்யுங்க என்றார் பரமேஷ்வரன்.

வியாதியே வரக் கூடாது பெருமாளே இருக்கறவரைக்கும் ஆரோக்கியமா இருக்கணும் நெனைச்சேனே இப்பிடி ஆயிடுத்தே என்று அழுதார் சடகோபன். இப்போ எதுக்கு நீங்க அழறீங்கன்னே புரியலே! அப்பிடி என்ன ஆச்சு, நீங்கதான் இப்போ அங்கே இல்லையே நான்தான் உங்களைக் காப்பாத்திக் கூட்டிண்டு வந்துட்டேனே என்றார் காளமேகம்.

ஒரு வினாடி யோசித்துவிட்டு உண்மையை உணர்ந்தவராய் ஆமாம் நீதான் எப்பவும் காப்பாத்தறா மாதிரியே இப்பவும் காப்பாத்திட்டியே!

என்று கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் இரு கைகளையும் கூப்பி “உம்மாச்சி காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு இப்போ புரிஞ்சுது உன் கையைக் காட்டு நான் என் கையாலே பிடிச்சுக்கறேன். இல்லே இல்லே நான் கையை நீட்டறேன் என் கையை நீ பிடீச்சுக்கோ இதுதான் சாஸ்வதம் என்று கையை நீட்டினார் சடகோபன்.

காளமேகம் புன்னகையுடன் சடகோபனின் கையைப் பற்றிக் கொண்டார். விரஜா நதி ஓடிக்கொண்டிருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.