-தமிழ்த்தேனீ

ஆவடியிலே இருக்கும் ஒரு கிறிஸ்துவ (RCM) பள்ளியில் என்னைப் பேச அழைத்தார்கள், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “இந்து மதம்.“  அங்கே சென்று பார்த்தபோது   மேடையிலே ஒரு கிறிஸ்துவப் பெரியார், ஒரு இஸ்லாமியப் பெரியார் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் தாளாளர்  அவர்கள் இருவரும் அவர்கள் மத்தைப் பற்றிப் பேசப் போகிறார்கள்  என்றார். பகீரென்றது! ஜாதிக் கலவரத்தையும்  இனக் கலவரத்தையும் மதக் கலவரத்தையும்  ஏற்படுத்துமோ tamiltheneeஇந்த நிகழ்வு என்று பயம் வந்தது. நான் மனதுக்குள்ளே தீர்மானம் எடுத்தேன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதைவிட அதிகமாக இந்து மனத்தைப் பற்றிப் பேசுவதென்று. ஆகவே முதன் முதலாக  எனக்கு அளிக்கப்பட்ட வாய்பைப் பயன்படுத்திக்கொண்டு  அங்கே எதிரே அமர்ந்திருந்த பள்ளிப் பிள்ளைகள், அவர்களின் பெற்றோர்கள் என்று கிட்டத்தட்ட 600  பேர்களுக்கு முன்னால்  என்பேச்சைத் தொடங்கினேன். இங்கே கூடியிருக்கும் இந்துக்களே  இஸ்லாமியர்களே கிறிஸ்துவர்களே  நான் இந்து மத்தைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.  ஆனால் இந்து மனத்தைப் பற்றிப் பேசப் போகிறேன்  என்று ஒரு அறிவிப்பு அளித்தேன். ஒரு வினாடி  சபையே மௌனம் காத்துவிட்டு  நிமிர்ந்து உட்கார்ந்து என் பேச்சைக் கேட்கத் தயாரானது.

tamil3எதிரே நின்றிருந்த  அந்தப் பள்ளியின் கிறிஸ்துவ மத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையை ஏறிட்டு  உங்கள் தெருவிலே ஒரு பெரியவர் கீழே விழுந்து விடுகிறார் உங்கள் கண் முன்னால்  நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு  அவர்கள்  அங்கிருந்தபடியே பதில் சொன்னார்கள். அவரை மேடைக்கு அழைத்தேன்  கையிலே ஒலிப்பெருக்கியைக் கொடுத்து  இப்போது சொல்லுங்கள் என்றேன். அந்த ஆசிரியை என் ஒருத்தியால் அவரைத் தூக்க முடியாது; ஆகவே உள்ளே இருக்கும் என் கணவரை  உதவிக்கு அழைப்பேன் என்றார்.  நான் கேட்டேன்… உங்கள் கணவரிடம்  என்ன சொல்லி அழைப்பீர்கள் என்று.  அதற்கு அவர்கள் கூறிய பதில்   ஏங்க  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார்  சீக்கிரம் வாங்க உதவலாம் என்பேன் என்றார்.   நான் அந்த  ஆசிரியையிடம்  நீங்கள் உங்கள் கணவரை அழைக்கும் போது   ஒரு இந்துப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார் , அல்லது ஒரு இஸ்லாமியப் பெரியவர் கீழே விழுந்துவிட்டார், அல்லது ஒரு கிறித்துவப் பெரியவர்  கீழே விழுந்துவிட்டார்   என்றெல்லாம் சொல்லவில்லை  ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதானே  கூறினீர்கள்  என்றேன்.   மீண்டும் சபையிலே மௌனமான ஒரு கணம், அடுத்து  அந்த  ஆசிரியர்  இல்லை ஒரு பெரியவர் கீழே விழுந்துவிட்டார் என்றுதான்  அழைப்பேன்  என்றார்.

tamil4அவருக்கு நன்றி கூறிவிட்டு  அவரை அனுப்பிவிட்டு  என் பேச்சைத் தொடர்ந்தேன், இப்போது நன்றாக நினைத்துப் பாருங்கள்.  ஒரு பெரியவருக்கு  ஆபத்து என்றதும் இந்த ஆசிரியை மனதிலே அவரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதே தவிர  அவர்  எந்த  ஜாதியைச் சார்ந்தவர், எந்த மத்தைச் சார்ந்தவர் எந்த மொழியைச் சார்ந்தவர், எந்த  இனத்தைச் சார்ந்தவர் என்கிற சிந்தனைகள் வந்ததா என்று ஒலிப்பெருக்கியிலே  ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு  ஒரு சிலவினாடிகள்  அமைதியாய் இருந்தேன்.  சில நொடிகளுக்கு பிறகு சபையிலிருந்து ஏகோபித்த குரலில் இல்லை… இல்லவே இல்லை!  பெரியவருக்கு ஆபத்து  என்பதைத் தவிர மற்றெதுவும் நினைவுக்கு வராது என்கிற இந்துக்களின் மனம் ஒலித்தது.   இப்போது ஒன்று புரிகிறதா  நம் மனதிலே  ஜாதியில்லை;  மதம் இல்லை; மொழி இல்லை; பேதம் இல்லை; மனிதம் மட்டுமே  இருக்கிறது. ஆனால்  அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள் நம் மனதைத் தீய வழிகளிலே ஆக்ரமித்து  அதிலே ஜாதி மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளை விதைக்கிறார்கள். அவர்களின் சுய லாபத்துக்காக  வாக்கு வங்கிக்காக, அவர்கள் பெரும்பணம் ஈட்டுவதற்காக.  ஆகவே  நாம் அனைவருமே எந்த  மதமானாலும் எந்த  மொழியானாலும்  எந்த  ஜாதியானாலும் எந்த  இனமானாலும்   இந்தியர்கள் என்னும் ஒரு குடையின் கீழே  வாழுகிறோம். ஆகவே  நமக்குள் இந்து மதம்  இஸ்லாமிய மதம்  கிறிஸ்துவ மதம் என்றெல்லாம் பேதமில்லை.   என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்; அது மட்டுமல்ல அப்படித்தான் இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.  ஆகவே இதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.  இதுதான் இந்தியர்களாக இருப்போம், இதிலே இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ இஸ்லாமிய மதத்தைப் பற்றிப் பேசவோ கிறிஸ்துவ மதத்தைப் பற்றிப் பேசவோ ஒன்றுமில்லை.

இதோ மேடையில்  அமர்ந்திருக்கும் இந்த இஸ்லாமியப் பெரியவரைப் பார்த்தால் என் பெரியப்பாவுக்கு  இஸ்லாமியர் வேடம் போட்டதுபோல் உள்ளது,   இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் இந்தக் கிறிஸ்துவப் பெரியவரைப் பார்த்தால் என் சிற்றப்பனுக்கு  கிறிஸ்துவர் வேடம் போட்டது போல் இருக்கிறது. ஆகவே நம் மனதிலே இருக்கும் வேறுபாடுகளைக் களைவோம். நாம் அனைவருமே உபயோகிக்கும்  வாகனம் வேண்டுமானால்  இருசக்கர  வாகனமாகவோ , நான்கு சக்கர வாகனமாகவோ  அல்லது வானிலே பறக்கும் ஊர்தியாகவோ இருக்கலாம். ஆனால் நாம் எந்த இடத்துக்கு இறுதியாகப் போகப் போகிறோம் என்பதுதான் என் கேள்வி.   அந்த  இடத்தை நாங்கள் வைகுண்டம் என்கிறோம்;  இவர் சொர்க்கம் என்கிறார்; இன்னொருவர் பரலோகம் என்கிறார். ஆகவே  நாம் சென்று அடையும்  இடம் ஒன்றுதான்.  அதற்கு  வாகனமாகத்தான்  மதம் இனம் ஜாதி மொழி ஆகியவைகளை உபயோகிக்கிறோம். வாகனங்கள்  மாறலாம் அவரவர் வசதிப்படி.  ஆனால் செல்லும் இடத்தின் இலக்கு மாறக்கூடாது. ஆகவே நாம் எப்போதும் இந்து மனதைப் பற்றிப் பேசுவோம் இந்தியர்களாக வாழ்வோம் என்று கூறி என் சிற்றுரையை முடித்துவிட்டு  வந்து அமர்ந்தேன். அடுத்து பேசஎழுந்த இஸ்லாமியப் பெரியவரும்,  கிறிஸ்துவப் பெரியவரும்  நாங்கள் சொல்லவந்த எல்லாக் கருத்தையுமே  இந்தத் தமிழ்த்தேனீ அவர்கள் கூறிவிட்டதால் அவர் கூறிய அனைத்தையும் அப்படியே ஏற்கிறோம்  என்று கூறிவிட்டு அமர்ந்தனர். நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்தேன்.

இறைவன் படைப்பிலே  இந்த மண்ணிலே பலவகைப்பட்ட ஜாதி  களிமண் கரிசல் மண் பாலை மண் செம்மண் என்றெல்லாம்;  மரத்திலே  கனிகொடுக்கும்  ஜாதி; இலைமட்டும் கொடுக்கும் ஜாதி; காய்மட்டும் கொடுக்கும் ஜாதி  போன்ற பல ஜாதிகள்;  இலையில்  போட்டுக்கொண்டு உண்ண வசதியாக  வாழையிலை, அதிலே போட்டு உண்ணக் கூடிய   கருவேப்பிலை, கீரை வகைகள்,  கிழங்கு வகைகள், காய்கனி வகைகள் எல்லாவற்றிலுமே  ஜாதிகள் உள்ளன. அதற்காக நாம் அவைகளை வெறுக்கிறோமா?   பூவிலே  ஜாதிமல்லி, ஜாதிமுல்லை, ரோஜா வகைகளிலே  பல ஜாதிகள்;  கனியிலே  மாம்பழம் என்று எடுத்துக் கொன்டாலே  அதிலே  பங்கனபள்ளி, ருமானி, நீலம் அல்போன்ஸா போன்ற பலவகை ஜாதிகள்.

பருப்பு வகைகளிலே   உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு,  முந்திரிப் பருப்பு போன்ற  ஜாதிகள்.   எதிலே இல்லை ஜாதி?  நாம் எல்லா ஜாதிகளையுமே  உபயோகிக்கிறோம்.  ஆனால்  எல்லாமே ஒரு  கட்டுக்குள் அடங்கிய  நீதிதான், இறைவன் வகைப்படுத்தினான்.  ஆனால் எதையுமே நீக்கவில்லை,  ஒதுக்கவில்லை, எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்  என்று நமக்கு உணர்த்தவே இத்தனை ஜாதிகளையும் மதங்களையும் வகைகளையும் எல்லாவற்றையும் பேதம் பார்க்காமல் சமமாகப் பாவித்து  ஏற்கவேண்டும்  என்றுதானே  இறைவன் எல்லாவற்றையும் அதனதன்  இயல்புக்காய்ப் படைத்து எல்லாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தினான். அதைமறந்து நான் இந்து,  நான் இஸ்லாமியன், நான் கிறிஸ்தவன் நான் பௌத்தன், நான் சைனன்  என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டு நாம்தாம் நம் மனதைக் கெடுத்துக் கொள்கிறோம். எல்லாமே ஒன்றுதான் என்பதை உணர்ந்தால் பேதமே மறைந்து மனிதம் மிளிரும்.  மனிதர்கள் சுயநலம் மிகுந்து  பிரிவினையை ஏற்படுத்தி  மனித சமுதாயத்துக்கே  வினையை  ஏற்படுத்திவிட்டார்கள். வினை விதைத்தால் வினைதான் விளையும் ஒற்றுமை என்னும் தினை விதைப்போம்.    அனைத்து  ஜாதிக்காரர்களும் , மதத்துக்காரர்களும்  அவரவர் தேவையை ஒட்டி  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் அவர்களுக்கு  தேவையானால்  எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்கிறார்கள்.

காலம் காலமாகப் பார்த்து வருகிறோம், எந்த ஜாதிக் குழந்தையானாலும் கையில் நிற்காமல் அழுது கொண்டே இருந்தால்  தோஷம் தாக்கி இருக்கிறது   என்று சொல்வார்கள். அப்போது அனைத்து மதத்தினரும்  காலையில்  இஸ்லாமியர்கள்  தொழும் மசூதிக்குச் சென்று  இஸ்லாமியர் தொழுதுவிட்டு வந்தவுடன்   அவர்கள் வாயால் ஊதினால்  குழந்தையின் தோஷம் போய்விடும் எனும் நம்பிக்கையால்  மசூதியின்  வாயிலில் காத்திருப்பதையும்  அப்படி  இஸ்லாமியர் வாயால் அந்தக் குழந்தைக்கு  ஊதுவதையும், அவர் ஊதியவுடன் கப்பென்று குழந்தை  அழுகையை நிறுத்திச் சரியாகிவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

அதேபோல்  பெண்ணிற்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருந்த  காரணத்தினால் மனம் வருந்திய கிறித்துவ நண்பரொருவர்    என்னிடம் வருத்தப் பட்டுக்கொண்டார். நான் எனக்குத் தெரிந்த செய்தியை நான் கடைப்பிடிப்பதை  நான் நம்புவதை  அவரிடம் சொன்னேன்.     திருவிடந்தை  எனும் ஊரில்  மஹாலக்‌ஷ்மியை   மடியில் இருத்தி  வைத்துக்கொண்டு பக்தர்களுக்கு   அனுக்ரஹிக்கும்  லக்‌ஷ்மி நாராயணன் கோயிலில் அளித்த மாலையை நாங்கள் பெண்ணின் கழுத்தில் போடுவோம், அதேபோல் சிங்கப்பெருமாள் கோயிலுக்கு ஏழுவாரங்கள் சுத்தபத்தமாகத் தூய மனதோடு சென்று  வேண்டிக்கொண்டால் திருமணம் ஆகிவிடும் என்றேன்.

ஆனால் என் மனதிலே  இவர் கிறிஸ்தவர்   இவருக்கு  நம் இந்து மதக் கலாசாரத்தை பரப்பவேண்டும், இவர் மனதிலே இந்து மத்தை விதைக்க வேண்டும்   என்னும் கபடம் இல்லாமல் அவர் பெண்ணுக்குத் திருமணமாகி அந்த  நண்பரின் கவலையும் தீரவேண்டும் என்னும்  நல்ல எண்ணத்தோடுடன் சொன்னேன், நான் அந்தக் கிறிஸ்துவ நண்பரை  அந்தக் கோயிலுக்கெல்லாம் சென்று வாருங்கள் என்று கூறவில்லை, ஆகவே  நான் உங்கள் பெண்ணுக்காக  வேண்டிக்கொண்டு  அந்தக் கோயில்களுக்கு  சென்று வருகிறேன்  என்று கூறி  அவருக்காக வேண்டிக்கொன்டேன், சரியாக  மூன்றே மாதத்தில்  மனமும் முகமும் மலர  அவர் பெண்ணிற்குக் கல்யாணம் என்று  என்கையில் திருமணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு  கண்ணில் நீர்வழிய  உங்கள் நல்ல எண்ணத்தினால்தான்  என் பெண்ணிற்கு  இப்படி நல்லவிதமாக திருமணம் நடக்கிறது என்றார்.  மனம் நிறைவாக  இருந்தது.  

நவீன விஞ்ஞான யுகத்திலும்    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விஞ்ஞான பூர்வமாக அனைத்து  பரிசோதனைகளையும்  செய்து பார்த்துவிட்டு கடைசியாக   மன்னார்குடி  ராஜகோபாலன்  சன்னிதிக்கு சென்று   அங்கே கர்ப்பக் கிருகத்தில் உள்ள  சந்தான கிருஷ்ணன் விக்ரகத்தை  வாங்கி மடியில் வைத்துக் கொண்டு  வருவதை பார்த்திருக்கிறேன். ஆகவே  மனிதர்களின் நம்பிக்கையே அவர்களை வாழவைக்கிறது,  எதிரே இருப்பது  ஏசுவா  அல்லாவா  நாராயணனா  என்பது  முக்கியமே இல்லை. நம்மிடம் நல்ல மனதும்   தூய்மையும் நம் மனதுக்குள்ளே தெய்வ சிந்தனையும் இருந்தாலன்றி மதமும் ஜாதியும் என்ன செய்ய முடியும்?

ஆக மொத்தம் மனிதன்  ரத்தத்திலே  திமிர் இருக்கும் வரையில் ஆடுகிறான்.  கடவுள் பொய், ஜோதிடம் பொய், மந்திரம் பொய், மாந்த்ரீகம் பொய், பக்தி பொய்  என்றெல்லாம் உளறித்திரிகிறான்.  பார்ப்பனர், செட்டியார், இஸ்லாமியர், கிறித்துவர்   என்று எக்காளம் பேசுகிறான். பிரச்சனை வரும்போது உயிர்காக்க  ரத்ததானம் செய்ய வரும் மனிதரிடம் உள்ள  ரத்தவகையை மட்டும் பார்த்து அது மட்டும்  அவருக்கு பொருந்துகிறதா  என்று பார்க்கிறான். விபத்து நடந்தால் கைதூக்கி உதவி செய்யும் கரம் பிராமணன் கரமா  இஸ்லாமியன்  கரமா  கிறிஸ்துவன் கரமா  என்று பேதம் பார்க்கிறானா, எந்தக் கரமாயிருந்தாலும்  உதவியை  ஏற்றுக் கொள்கிறான். அப்போது  மதம் ஜாதி இனம் மொழி எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக ஆகிவிடுகிறது.

ரத்தம் சுண்டினால், அல்லது  அவனால் இயலாமல் போனால்  அப்போது  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறான், எதையும் செய்யத் தயாராய்  இருக்கிறான்.  பிரச்சனை தீர்ந்தால் சரி   எந்தத் தெய்வமாய் இருந்தாலென்ன  என்று  தலைவணங்குகிறான் .  அவரவர்  ஆலயங்களில்  அவரவர் வழக்கம்;  அதைக் கண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் தாய் அவரவருக்கு தாய், அடுத்தவன் வந்து என் தாயைத்தான் நீ அம்மா என்று அழைக்க வேண்டும் என்று வற்புறுத்த  முடியுமா? அல்லது உன் தாயை தூக்கி எறிந்துவிட்டு வா!  உனக்கு வேண்டிய  பொன் பொருள் வாழ்க்கை வசதிகள் எல்லாம் தருகிறேன்  என்று அழைக்கிறானே  என்பதற்காக நம் தாயைத் தூக்கி  எறிந்துவிடமுடியுமா? அப்படியே தூக்கி எறிந்தாலும் வேறொருவர்  நம் தாயாய் ஆக முடியுமா?  அயல்நாடுகளிலே  இருக்கும் பல பெரிய மசூதிகளுக்கும்   தேவாலயங்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அங்கே கூட  அவர்களுக்கென்று விதி முறைகள், புனிதமான பைபிள், புனிதமான குரான், எல்லாவற்றையும் அவரவர் புனிதம் கெடாமலே பாதுகாக்கிறார்கள். அவரவர் கலாசாரப்படி கட்டிடங்கள் அமைத்துக் கொள்கிறார்கள், கர்ப்பக் கிருஹம் அமைத்துக் கொள்கிறார்கள். அவற்றை மதித்து  அவரவர் கலாசார விதிகளை அனுசரித்தே  நடந்து கொள்கிறர்கள். சில இடங்களில் அன்னியர் பிரவேசம் இல்லையென்று சட்டம் அவர்களால் போடப்பட்டிருந்தால் உறுதியாக அன்னியர்களை  அனுமதிக்காமல்  புனிதம் காக்கிறார்கள்.

கிறித்துவ ஆலயங்களில்  கிறித்துவருக்கு அளிக்கப்படும்   மரியாதை மற்ற மதத்தினருக்கு அளிக்கப்படுவதில்லை.   இஸ்லாமிய  ஆலயங்களில்  மற்ற மதத்தினருக்கு முதன்மை கிடையாது  ஒரு தர்காவிற்கு    காலிலே செருப்போடு போக முடியுமா?   புனித நீரையும்  அப்பத்தையும் மற்ற  மத்தவருக்கு அளிப்பார்களா கிறிஸ்தவர்கள்? அல்லது  இஸ்லாமிய மத குருமார்கள் தொழுகை நடத்தும் இடத்திலே மற்ற  மதத்தவரை அனுமதிப்பார்களா?  மற்ற  மதத்தவர்  அவர்களுடைய மதத்துக்கு மாறாதவரை அவர்களுக்கு ஞானஸ்நானம் அளிப்பார்களா?  ஒரு பாதிரியார் நிற்கும் தேவாலயத்தில் மற்ற  மதத்தவர்  யாரேனும் நின்று ஒரு கிறிஸ்துவப் பெண்ணுக்கு  திருமணம் செய்விக்க  முடியுமா? அனுமதிப்பார்களா?  ஏற்றுக் கொள்வார்களா?  பேரலாயப் பாதிரிமார்கள்  இருக்கும்  இடங்களில்   அந்தப் பேராயப் பாதிரிமாரைத் தவிர   யார் வேண்டுமானாலும்  அந்த   முக்கியமான  பிரதான இடத்தில் அனுமதிப்பார்களா? 

அதைவிட   நகைச்சுவை என்னவென்றால்   பல விளையாட்டு   நடத்தும் கிளப்களில்   வேட்டி அணியத் தடை விதித்திருக்கிறார்கள். உணவகங்களில்     வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுகளுக்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். மலேசியாவில்  ஒரு மசூதிக்கு  சென்றோம்;   அங்கே  அந்தக் கருப்பு  அங்கிகளை அணிந்தால்தான் உள்ளே அனுமதிப்போம் என்று சட்டமே உள்ளது. அதனால் அவர்கள்  அளிக்கும் கருப்பு அங்கிகளை  அணிந்தவருக்கே அனுமதி.  அதையும்  தவிரக்  கருப்பு அங்கி அணிந்தால் கூட    மற்ற மதத்தினருக்கு  ஆங்கே   நம் கோயிலைப் போல   கர்ப்பக் கிருஹம் என்று சொல்லக் கூடிய  மையமான இடத்தைப் பார்க்கக்   கூட அனுமதி கிடைக்கவில்லை.   அவரவர்  புனிதத்தை அவரவர் காக்கிறார்.  சுகாதாரம் கருதி  சில விதிகளைப்  பொது மக்கள் வரும் ஆலயங்களில்  கடைப்பிடிக்க   சில விதிகள் நிர்ணயித்தால் அவற்றைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

அதை விடுத்து    சுத்தமாகவோ,  சுகாதாரமாகவோ இல்லாமல்   சைவ, வைணவக் கோயில்களில்  நான்  அறுத்த கோழியுடன் வருவேன்  என்னை அனுமதிக்க வேண்டும்   என்று பிடிவாதம்  பிடித்தாலோ  அவர்களைக் குறை கூறினாலோ  அது நியாயமே அல்ல.  அவரவர்  நியாயம் அவரவருக்கு. அதில் தலையிட  அடுத்தவருக்கு அனுமதி கிடையாது.  சக்தி ஸ்தலங்களில்  பலியிடுதல் தொன்று தொட்டு வரும் வழக்கம்   நேபால் செல்லும் போது  மானகாம்னா தேவி ஆலயம் என்னும் ஒரு ஆலயத்துக்கு  சென்றோம். அங்கே வரிசையில் நிற்கும் பக்தர்கள்  கையில்  ஒரு கோழியோடுதான் நிற்கிறார்கள். அது அவர்கள் வழக்கம்! நாம் அதிலே தலையிடாமல் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு வந்தோம். அவர்களிடத்திலே போய் ஆடுகள் கோழிகள் ஆகியவறை பலி கொடுக்கக் கூடாது என்று உபதேசம் செய்தால் அவர்கள் கேட்பார்களா?

அல்லது  இந்தியாவிலிருந்து  வந்திருக்கும் பிராமணன் நான்  ஆகவே   கர்ப்பக் கிருஹத்திலே இருக்கும் பூசாரியை  விரட்டுங்கள்;  என்னை அங்கே அனுமதியுங்கள்  நான் செய்கிறேன் பூஜை என்றால் அனுமதிப்பார்களா?  அப்படிச் சொல்பவர்களை  அம்மனுக்கு பலி போட்டுவிடுவார்கள். அதேபோல்   இந்துக் கோயில்களில் அது வைணவமோ சைவமோ சாக்தமோ  அந்தந்த  ஆலையங்களில்  அந்தந்த  முறையான ஆகமங்களைக் கடைப்பிடிப்பது  அவர்கள் வழக்கம். அவர்கள்    அர்ச்சகர்கள் என்று யாரை நியமிக்கிறார்களோ  அவரைத் தவிர   மற்றவரை   அவர்கள் மட்டும் ஏன் அனுமதிக்க வெண்டும்  அவர்கள்  யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக்கவேண்டும்  என்று ஏன் எதிர்பார்க்கிறீகள்? ஆகவே இனியாவது பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் என்று   எழுதிக் கொண்டிருப்பதை   நிறுத்துங்கள். இந்தியராக இந்தியாவிலே உள்ள அனைத்து  மதத்தவரையும் மதிக்கும் ஒரு புனித  இந்தியராக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

“ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“
 

என்று  மஹாகவி பாரதியார் எழுதினார். உண்மைதான்  ஜாதி இல்லையென்று அவர் சொல்லவில்லை. ஜாதிகள் உண்டு அவைகளை மதியுங்கள். அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க  அவரவரை  அனுமதியுங்கள்;  மனிதம் ஓங்கட்டும் என்றுதான் சொன்னார்.  ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள். நாமெல்லோரும் சகோதர்கள் என்றார். ஆகவே  மனிதம் காக்கப்படவேண்டுமானால் பேதங்கள் களையப்படவேண்டும், இரக்கம் மனிதாபிமானம் உதவும் குணம் ஓங்க வேண்டும். ஒன்று படுவோமா? 

“அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?“  — தமிழ்த்தேனீ

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *