-தமிழ்த்தேனீ

இல்லத்தரசியை நாம் வாழ்க்கைத் துணை என்று கூறுகிறோம். ஆங்கிலத்திலே Better Half என்கிறார்கள். ஆக மொத்தம் கடைசிவரை நம்மோடு சுகதுக்கங்களில் பங்கு கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தில் நாம் வாழ்க்கைத் துணை என்கிறோம். ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் பாதி வரை வந்தாலே போதும் என்கிறார்கள் மீதியை நான் வேறு ஒரு Better Half ஓடு கழிக்கிறேன் என்கிறார்கள்.

நம் இந்து மதத்தில் நம் வீட்டு கிருஹ லக்ஷ்மி என்கிறோம்; மஹாலக்ஷ்மி என்கிறோம். ஆகவே கிருஹத்தையும் செல்வத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு அவளிடம் கையேந்துவதையே பெருமையாக நினைக்கிறோம். என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் அப்படி.

இப்படி இருக்கையிலே என்னோடு வாழ்க்கைத் துணையாய் தொடர்ந்து வருகின்ற என் வீட்டு மஹாலக்ஷ்மியை நினைத்துப் பார்த்தேன்.

இத்தனை வருடங்களாகப் பொறுமையாக என் சுக துக்கங்களில் சோதனையான காலங்களில் கூட என்னுடனே வாழ்கின்ற அவள் மிகப் பொறுமையாக சமைத்துப் போட்டுவீட்டு நிர்வாகத்தையும் கவனிக்கிறாள்.

நாம் என்ன செய்கிறோம் அவளுக்கு என்கிற எண்ணம் எழுந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து என்னால் இயன்ற அளவில் ஏதேனும் உதவிகள் செய்கிறேன்.

ஆனாலும் ஒரு திருப்தி வரவில்லை. அதனால் எனக்குத் தோன்றிய ஒரு யோசனையைக் கடைப்பிடிக்கலாம் என்று வீட்டிலுள்ளோர் அனைவரையும் அழைத்து எப்பவும் உங்க அம்மா சமைக்கறாங்க நான் அவங்களுக்கு உதவி செய்யலாம்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.   ஒரு வாரமாவது அம்மாவை ஓய்வு எடுக்கச் சொல்லி அனுமதித்து நான் சமைக்கப் போறேன் என்றவுடன் ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை! வியப்பு பயம் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது என்னால்.

அவர்களைச் சமாதானப்படுத்தி ஒரு நாள் சமைக்கிறேன். நீங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால் ஒரு வாரம் சமைக்கிறேன் என்றேன். வேறு வழியில்லாமல் எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.

முதல் நாள் பெரும் சவாலான முதல் நாள் எப்படி சமைக்க வேண்டும் என்று யோசனை செய்து எல்லோரையும் அழைத்து ஒரு ஒப்பந்தம் நான் சமைக்கும் போது யாரும் அங்கே வரக் கூடாது. அம்மா மட்டும் எனக்கு வேண்டிய உப்பு புளி மிளகாய் கடலைப் பருப்பு பெருங்காயம் போன்ற சமைக்க உதவும் பொருட்களையும் எடுத்து வைத்துவிடவேண்டும் என்னால் எது எங்கிருக்கிறது என்று தேட முடியாது என்றேன்.

என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் நான் ஒரு முறை சமைத்த அனுபவத்தை அவளிடம் சொன்னேன் அது அவள் மனதில் நிழல் படமாக ஓடுகிறது என்று புரிந்தது. ஆனாலும் அந்த அனுபவத்தை வைத்து அதன் பின்னர் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறேன் சமையலில் என்று அவளுக்கும் தெரியாதே. ஆகவே அவள் பார்வையைத் தவிர்த்துவிட்டு தொடர்ந்தேன். அவளும் என்னையே குறும்பாகப் பார்த்தபடி சரி என்றாள்.

என்ன சமைக்க வேண்டும் நம் வீட்டில் உள்ளோருக்கு எது அதிகமாகப் பிடிக்குமோ அதையே செய்து இவர்களை வசப்படுத்திகொண்டுதான் ஒரு வாரம் சமாளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் ப்ரகாரமே சமையற்கட்டுக்குள் நுழைந்து என் நளபாகத்தின் முக்கியத் திறமைகளை உபயோகித்துச் சமைத்தேன். என்ன மெனுவென்று பார்க்கலாம்! எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். ஆகவே என் வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்த என் சமையல் அனுபவத்தை சற்றே அசைபோடுவோம். உங்களுக்கும் சலிப்புத் தட்டாமல் இருக்கும்.

என் தாயார் இருந்த காலம் அது. சுவையோடு சமைத்து என் நாவை வளர்த்து என் உடலை வளர்த்து அன்போடு ஊட்டிய தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள். அப்போதெல்லாம் வீட்டு விலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே வரமாட்டார்கள். அப்படிப்பட்ட தருணங்களில் என் சமையல்தான். அடிக்கடி அவரிடம் சென்று யோசனை கேட்டுச் சமைப்பேன். அவரும் என் சமையலைப் பொறுமையாகச் சாப்பிடுவார்.

அப்போது சென்னையில் தங்கசாலைத் தெரு அருகில் இருந்த கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவில் இருந்த வீட்டில் பின் பக்கமாடியில் நாங்கள் இருந்த காலம்.

அப்படி ஒருநாள் சமைக்க வேண்டிய அவசியம் வந்தது. என் தாயாரிடம், ”அம்மா… நான் இன்னிக்கு மிளகு ரசம் வைக்கறேன்!” என்று சொல்லிவிட்டு எப்படிச் செய்ய வேண்டும் என்னும் சமையல் முறையை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டு சமைக்க ஆரம்பித்தேன்.

சாதம் வடித்தேன். அதன் பிறகு என் அம்மா சொன்னபடி அடுப்பிலே ஈயச்சொம்பை வைத்தேன். ஒரு சந்தேகம் கேட்க பின்பக்க மாடியிலிருந்து கீழே இறங்கி முன்பக்கம் சென்று வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்த என் தாயாரிடம் மீண்டும் ஒரு முறை மிளகு ரசம் வைக்கும் முறையைச் சொல்லுங்கள் என்றேன். அவரும் விளக்கமாகச் சொன்னார். ”சரி அம்மா புரிந்தது!” என்று சொல்லிவிட்டுப் பின் பக்க மாடிக்கு சென்று அடுக்களைக்குள் நுழைந்தேன்.

அடுப்பைப் பார்த்தேன் ஈயச் சொம்பைக் காணவில்லை. ஒரு வேளை நாம் ஈயச் சொம்பை அதன் இடத்திலே இருந்து எடுக்காமல் மறந்து போய்விட்டோமோ என்று எல்லா இடத்திலும் ஈயச் சொம்பைத் தேடினேன் கிடைக்கவில்லை. மீண்டும் கீழே வந்து அம்மா ஈயச் சொம்பைக் காணோமே என்றேன். என்னப்பா நீதான் ஈயச்சொம்பை எடுத்தாச்சு அதுக்குள்ள ஒரு சந்தேகம்னு வந்து கேட்டியே என்றார்.

ஆமாம் நாமதானே ஈயச்சொம்பை அடுப்பிலே வைத்துவிட்டு அதன் பிறகுதானே கீழே வந்தோம் என்பது நினைவுக்கு வரவே ஆமாம் அம்மா நான்தான் அடுப்பிலே வைத்தேன் இப்போ அடுப்பிலே காணோமே என்றேன். சரி ஈயச் சொம்பிலே தண்ணீர் கொட்டி வெச்சியா இல்லே அப்பிடியே வெச்சியா என்றார் . (அப்போதெல்லாம் கிருஷ்ணாயிலில் எரியும் பம்ப் ஸ்டவ்தான் உபயோகிப்போம்) அப்பிடியேதான் வெச்சேன் தண்ணி கொட்டலையே என்றேன்.

அவர் சரி முதல்லே மேலேபோயி ஸ்டவ்வை அணைச்சுட்டு அந்த ஸ்டவ் இருக்கும் மேடையில் பாரு இருக்கும் என்றார். சரி பாக்கறேன் என்று மேலேபோய் ஸ்டவ்வைப் பார்த்து அதை முதலில் அணைத்தேன். அந்த ஸ்டவ் இருக்கும் மேடையிலேயே ஈயச்சொம்பு உருகிப்போய் திரவ வடிவமாகி அப்படியே திடவடிவமாக ஆகி உலக மேப்பையே வரைந்திருந்தது. அட உருகிப் போச்சு என்று தெரிந்தது.

கீழே ஓடிப்போய் அம்மா ஈயச்சொம்பு உருகிபோச்சு என்றேன் கலவரத்துடன், ஸ்டவ்வை அணைச்சுட்டியா என்றார் அம்மா அணைச்சுட்டேன் என்றேன் .ஏம்பா மிளகு ரசம் வைக்கறேன்னு சொல்லிட்டு ஈயச்சொம்பு ரசம் பண்ணிட்டியே என்று அம்மா சிரித்தாள். நல்லவேளை ஸ்டவ் வெடிக்கலே ஜாக்கிரதையா இருக்கணும். அடுப்பிலே ஈயச்சொம்பு வைக்கும்போது அதிலே தண்ணி இல்லாம வைக்கக்கூடாது எல்லாம் அனுபவம்தான் பயப்படாதே இனிமே ஜாக்கிரதையா இரு என்றார்கள்.

அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கைத் துணையின் மனதிலே படமாக ஓடிக்கொண்டிருக்கும் என்று புரிந்தது. இப்போ புரியுதா என் பொண்டாட்டியின் பரிகாசப் புன்னகைக்குப் பொருள்!

அடேடே நான் சமைக்க வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சே…! பரவாயில்லே… எப்பிடியோ சமைச்சாச்சு, எல்லாம் ரெடி! எல்லாரும் தட்டைப் போட்டுண்டு உக்காருங்க என்று சொல்லிவிட்டு ஒவ்வொன்றாக கொண்டு வந்தேன். என்ன ஐட்டம்ன்னு காத்திருக்கீங்கன்னு புரியுது!

  1. வத்தக் குழம்பு 2, பருப்புத் துவையல் 3. வெள்ளரிக்காய் பச்சடி .4. உருளைக்கிழங்கு ரோஸ்ட் கூடவே பொரிச்ச அப்பளம்.

அப்பிடியே அதையெல்லாம் பார்த்து மலைச்சுப் போயிட்டாங்க என் வாழ்க்கைத் துணைவியாரும் பிள்ளைகளும். சரி உக்காந்து சாப்ட்டு பார்த்துட்டு அதுக்கப்புறம் சொல்லுங்க பயப்படாதீங்க நான் உங்க வயித்துக்கு கியாரண்டின்னு சொல்லிகிட்டே என் வாழ்க்கைத் துணைவியாரையும் பிள்ளைகளையும் உட்காரவைத்து நானே பரிமாறினேன்.

யாருக்கு என்ன பிடிக்குதோ சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் உண்ணுவதையே பார்த்துக்கொன்டிருந்தேன். முதலில் எல்லோர் கண்ணிலும் பீதி. அதன் பிறகு சுவைக்கச் சுவைக்க ஆச்சரியம்! அப்பா கலக்கிட்டீங்க என்று ஏகோபித்த பாராட்டுக்கள்.  அப்பாடா பட்ட கஷ்டம் வீணாகலேன்னு ஒரு திருப்தி எனக்கு.

எல்லோரும் உண்டு முடித்துவிட்டு என்னை உட்காரவைத்து அப்பா நீங்களும் சாப்பிடுங்க என்று அன்போடு பரிமாறினர்.

என் வாழ்க்கைத் துணைவி ஆச்சரியத்துடன் இவ்ளோ நல்லா சமைப்பீங்களா நீங்க? எனக்குத் தெரியவே தெரியாதே என்றாள். வத்தக் குழம்பு எல்லாமே ரொம்ப நல்லா செஞ்சிருக்கீங்க என்றவள் ஆமாம் இந்த வத்தக் குழம்பு செய்ய எனக்கும் சொல்லிக் குடுங்களேன் என்றாள்.

சரி சொல்லித் தரேன் என்று சொல்லிவிட்டு முதல்லே புளியை கரைச்சு வெச்சுக்கணும். அப்புறம் பாத்திரத்திலே என்ன காய் போடணுமோ அதை வதக்கி எடுத்து வெச்சிகிட்டு கொஞ்சம் உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் இதெல்லாம் வறுத்து தனியா எடுத்து வெச்சிக்கோ. பாத்திரம் நல்லாக் காஞ்சதும் அதிலே இந்தக் காயைப் போட்டு உடனே கரைச்சு வெச்ச புளியை அதிலே கொட்டி கொஞ்ச நேரம் கொதிச்சவுடனே கொஞ்சம் மஞ்சள் பொடி போடணும்.

அதுக்கு தேவையான உப்பைச் சேர்த்து அப்பிடியே குழம்பும்பொடியையும் போட்டு கலக்கி நல்லா கொதிக்க விடணும் அதிலே இந்த வறுத்த பெருங்காயம் உளுத்தம் பருப்பு கடுகு கருவேப்பிலை எல்லாம் போட்டு கொதிக்க விடு என்றேன் சரிங்க என்றாள் என் துணைவி. அப்பிடியே ஒரு மூடி போட்டு மூடிவெச்சிடு என்றேன் நான். சரிங்க என்றாள் என் துணைவி.

அதுக்கப்புறம் அப்பிடி ஒண்ணு நாம செஞ்சோம்கிறதையே மறந்து போயி துணி துவைக்கப் போயிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்தா  குழம்பு அப்பிடியே வத்திப் போயி கருப்பா கருகிப் போயி பாத்திரத்தோட பாத்திரமா ஒட்டிக்கும். அதுதான் வத்தக் குழம்புன்னேன். எல்லோருமாக சேர்ந்து என்னை அடிக்க ஓடி வராங்க யாராவது காப்பாற்றுங்களேன்!

பின் குறிப்பு:  பொதுவாகவே இந்தப் பெண்களுக்கு நம்மை வேலைவாங்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தாலும்  நாம் வேலை செய்தால்  இரக்கம் வரும்.  மனசு ஆகாது அடிக்கடி வந்து நான் வேணா ஏதாவது  உதவட்டுமா என்று கேட்பார்கள்.                     ஒரு நாள் சமைக்கவே இவ்வளவு யோசிக்கவேண்டி வந்ததே! ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கறதுன்னு யோசிச்சு 360 நாளும் சமைச்சு நம்ம வாழ்நாள் முழுவதும் சமைச்சுப் போட்டு நம்மை ஆதரிக்கும் நம் தாயார் , வாழ்க்கைத் துணைவி இவர்களை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போமே. அப்படி நினைத்தால் இனியாவது அவர்கள் அன்போடு ஆசையோடு கைப்பக்குவத்தோடு நம் நலத்துக்காகச் சமைக்கும் சாப்பாட்டைக் குறைசொல்லாமல் வீணடிக்காமல் சாப்பிடத் துவங்குவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *