பகத்சிங்கின் பன்முக ஆளுமை
த. ஸ்டாலின் குணசேகரன்
மாவீரன் பகத்சிங் 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாலை லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 23 மட்டுமே நிறைவு பெற்றிருந்தது. அவருடன் தூக்கிலிடப்பட்ட ராஜகுரு, சுகதேவ் ஆகிய இரண்டு புரட்சியாளர்களுக்கும் ஏறக்குறைய அதே வயதுதான்.
இருபத்திமூன்று வயதில் இமாலயத்தாக்கத்தை இந்திய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய பகத்சிங்கின் செயல்பாடுகள் யாவும் விளையாட்டுப் போக்கிலே விளைந்தவையல்ல. சாகசம் புரிய வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட்ட ஒரு திறமைமிக்க இளைஞரின் வீரதீரச் செயல்பாடுகளுமல்ல.
பகத்சிங்கின் வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்தால் வயதிற்கும் மீறிய பக்குவமும் ஆளுமையும் பெற்ற ஒரு இளம் தலைவரை இந்திய நாடு பெற்றிருந்த பெருமையை நம்மால் நன்கு உணர முடியும்.
மாவீரன் பகத்சிங் ஒரு புரட்சியாளர், தியாகி, தேசபக்தர் என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சொற்றொடர்களால் மட்டும் முழுமையான பகத்சிங்கை நமக்கு அறிமுகப்படுத்திவிட முடியாது. இவையெல்லாம் அவரது அடிப்படைகளென்றாலும் பன்முக ஆளுமைமிக்க தலைமைப் பண்புகளே அவரது தனிச் சிறப்புகளாகும்.
பிறவி மேதமை என்பது கூட அறிவியல் சார்ந்ததுதான் என்று அறிவியலாளர்கள் நிறுவியிருக்கிறார்கள். மரபணு ஒரு மனிதனின் உருவாக்கத்திற்கு அடித்தளமிடுவதாக அறிவியல் தெரிவிக்கிறது. பகத்சிங்கின் சிறப்புமிக்க ஆளுமைக்கு எத்தனையோ புறக்காரணங்கள் இருந்திருப்பினும் அவரது குடும்ப வரலாற்றையும் இணைத்துப் பார்க்கிறபோது மரபணுவின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
பகத்சிங்கின் ஒட்டுமொத்தக் குடும்பமே ஒரு ஆழமான, அழுத்தமான தேசபக்தக் குடும்பம். பகத்சிங்கின் தாத்தா ஆர்ஜுன்சிங் ‘ ஆர்ய சமாஜம் ’ என்ற சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். ஆன்மீகத்தையும் அரசியலையும் இரண்டு கண்களாகப் போற்றியவர். சுய முயற்சியால் இந்தி, சமஸ்கிருதம், உருது, பாரசீகம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் எழுதப்படிக்க மட்டுமல்லாது பாண்டித்தியமும் பெற்றவர். ‘ யுனானி ’ முறை மருத்துவத் தொழிழையும் சிறப்பாகச் செய்து வந்தவர்.
வேளாண்மை அர்ஜுன்சிங்கிற்கு அடிப்படைத் தொழிலாகவும் விளங்கியது. தனது கடுமையும் நுட்பமுமான நேரடி உழைப்பால் உழவுத்தொழிலில் பெருவெற்றி பெற்றவர் அர்ஜுன்சிங். வளமும் வசதியும் மிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்தது.
அர்ஜுன்சிங் அந்தப் பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார். அவரது சொந்த ஊரில் சீக்கியர் கோயிலான ‘ குருத்வாரா ’ கட்டினார். குருத்வாரா சீர்திருத்தங்களுக்கும் அகாலி இயக்கத்தின் மாற்றங்களுக்கும் குரல் கொடுக்கும் விதமாக தலையில் கருப்புநிற முண்டாசு கட்டிக்கொண்டு தனது புரட்சிகரமான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தினார்.
அர்ஜுன்சிங் படிப்படியாக ஆர்யசமாஜ இயக்கத்திலிருந்து விடுபட்டு காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்திய விடுதலைக்காக சீக்கியர்கள் அமெரிக்காவில் உருவாக்கிய தீவிரமான அரசியல் இயக்கமான ‘ கதார் ’ கட்சியின் இந்தியத் தொண்டர்களுக்கு ஆங்கிலேயே அடக்குமுறையின் போது தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து முழுப்பாதுகாப்பளித்தார்.
அர்ஜுன்சிங்கிற்கு கிஷன்சிங், அஜித்சிங், ஸ்வரன்சிங் ஆகிய மூன்று ஆண் மக்கள் வாரிசுகளாக விளங்கினர். இந்த மூவருமே அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்கள். நாட்டுப்பணியே தமது முழுநேரப்பணியாக உணர்வுப் பூர்வமாக ஏற்றுத் தேசத் தொண்டாற்றியவர்கள். மூவரில் மூத்தவரான கிஷன்சிங்கின் மகனாகப் பிறந்தவர்தான் பகத்சிங்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு கடுமையாக ஆட்பட்ட பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங் காவல்துறையின் கரங்களில் அகப்படாமல் தலைமறைவாக நேப்பால் சென்றுவிட்டார். இவர், ‘ பாரதமாதா சங்கம் ’ என்ற அமைப்பின் மூலமும் தீவிரக் களப்பணியாற்றுபவராக விளங்கினார். இவரின் தேசப்பணியின் காரணமாக இவருக்கு அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தாரோடு வசிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. சித்தப்பா அஜீத்சிங் பர்மாவுக்கு ஆங்கிலேயே அரசால் நாடு கடத்தப்பட்டிருந்தார். கடைசிச் சித்தப்பா ஸ்வர்ன்சிங் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
வெவ்வேறு பகுதிகளிலும் சூழல்களிலுமிருந்த மூன்று சகோதரர்கள் விடுதலை பெற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையிலும் சொந்த ஊருக்குத் திரும்பினர். ஏதேச்சையாக மூவரும் ஒரே நாளில் தங்களது வீட்டிற்கு முன்னும் பின்னுமாக வந்தடைந்தனர். சொல்லி வைத்தாற்போன்று 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியான அவர்கள் வீடுதிரும்பிய அதேநாளில்தான் பகத்சிங் பிறந்தான். அவர்கள் வருவதற்கும் பகத்சிங் பிறப்பதற்கும் காலம், நேரம் பொருத்தமாக அமைந்தது. பகத்சிங்கின் தாத்தா வர்ணிக்க முடியாத ஆனந்தத்தில் ஆழ்ந்து பஞ்சாபி மொழியில் ‘ அதிர்ஷ்டக்காரன் ’ என்ற பொருள்பட ‘ பகன்வாலா ’ என்று பெயர் சூட்டினார். அதுவே பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பட்டபோது ‘ பகத்சிங் ’ என்று சிறு மாற்றத்துடன் பதிவாயிற்று.
உலக இந்தியர்களிடையே புகழ்மிக்க விடுதலைப் போராட்டத்தலைவர்களாக விளங்கிய ராஷ் பிகாரி போஸ், ‘ காமகட்டமாரு ’ என்ற கப்பலில் கனடா சென்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைமையேற்ற புரட்சிக்குழுத் தலைவர் பாபா குர்திர்சிங், பிற்காலத்தில் அந்தமான் சிறைச்சாலையில் பல்லாண்டு காலம் தனிமைச் சிறையிலிருந்து சித்ரவதைப்பட்ட பாய் பரமானந்தா, புரட்சியாளர் சசிந்திரநாத் சன்யால் போன்ற நாடு தழுவிய மிக முக்கியத்துவம் பெற்ற பல தலைவர்கள் பகத்சிங் குடும்பத்தாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும்தான் மாதக்கணக்காக இருந்திருக்கின்றனர்.
பகத்சிங்கின் சித்தப்பா அஜித்சிங் நாடு விடுதலை பெறும்வரை தலைமறைவு வாழ்க்கை நடத்துபவராகவும் தொடர்ந்து நாடுகடத்தப்படுபவராகவுமே வாழ்ந்தார். இன்னொரு சித்தப்பா ஸ்வரன்சிங் சிறைச்சாலையிலேயே மரணமடைந்தார்.
பகத்சிங்கிற்கு அமையப்பெற்ற வலுவான தேசபக்தக் குடும்பப் பின்னணியும் இவரது குழந்தைப் பருவத்திலிருந்தே தாத்தாவை, தந்தையை, சித்தப்பாக்களை சந்திக்க வந்து வீட்டில் தங்கியிருந்த கீர்த்திமிக்க தேசத் தலைவர்களைப் பார்த்தது, பழகியது; அவர்களிடையே நிகழ்ந்த விவாதங்களையும் உரையாடல்களையும் கேட்கும் வாய்ப்பைப் பெற்றது; அவரது குடும்பத்தில் ஆங்கிலேய ஆட்சியினரின் அடக்குமுறையால் நேர்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளால் ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவையே இவரது ஆளுமையின் அடித்தளங்களாக விளங்கின.
பகத்சிங் தனது 12 வது வயதில் பூர்வீகக் கிராமத்திற்குச் சென்றிருந்த தனது தாத்தாவுக்கும் 13,14 ஆவது வயதுகளில் சிறையில் இறந்துபோன தனது சித்தப்பா ஸ்வரன்சிங்கின் மனைவியான சித்திக்கும் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் மூன்று கடிதங்கள் கிடைக்கப்பெற்று டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிறுவயதில் தனது பிஞ்சுக் கரங்களால் எழுதிய கடிதத்தில், தான் லயால்பூரில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புவதாகவும் அதன் காரணமாகவே ஊருக்கு வர இயலாது எனவும், தான் ஒரு பழைய அரிய புத்தகத்தை மிகக்குறைந்த விலையில் வாங்கியுள்ளதாகவும் ரயில்வே தொழிலாளர்கள் தங்களின் வேலை நிறுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அப்போராட்டம் விரைவில் தொடங்கவிருப்பதாகத் தான் நம்புவதாகவும் எழுதியுள்ளார். சிறுவனாக இருக்கும்போது வீட்டுக்கு எழுதிய கடிதங்களில் கூட நாட்டு நிகழ்வுகளைப் பற்றி பக்குவமாக எழுதியுள்ள பாங்கு கவனிக்கத்தக்கதாகும்.
பள்ளிப் பருவத்தில் தொடங்கிய கடிதம் எழுதும் பழக்கத்தை கடைசிவரை பகத்சிங் கைவிடவில்லை. மேலும் மேலும் இவரின் இப்பழக்கம் நன்கு செழுமைப்பட்டது. தூக்குமேடையேறிய கடைசி நாளில் கூட ஒரு கடிதத்தை எழுதிவிட்டுத்தான் விடைபெற்றிருக்கிறார். இந்தியக் கடித இலக்கிய வரலாற்றில் பகத்சிங்கின் கடிதங்களுக்கு ஒருதனி இடம் எப்போதும் உண்டு.
கொடியவன் டயரால் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகளின் அறைகூவலுக்கு இணைங்கித் திரண்ட நிராயுதபாணிகளான சத்தியாகிரகிகள் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி நடந்தது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி.
ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே பள்ளிக்குப் புறப்பட்ட பகத்சிங் ரயிலேறி அமிர்தசரஸ் நகரக்குச் சென்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் மடிந்த சத்தியாகிரகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து தனது பைஜாமா பாக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்.
மாலை வழக்கமான நேரத்தில் பள்ளியை விட்டு வீட்டுக்கு பகத்சிங் வரவில்லை என்று குடும்பத்தார் பதற்றமடைந்தனர். இருள் சூழும் சமயத்தில் திரும்பிய பகத்சிங் தனது தங்கையிடம் தான் கொண்டுவந்த ரத்தம் தோய்ந்த மண்ணடங்கிய பாட்டிலைக் காட்டியதோடு அதனை வீட்டில் ஓர் இடத்தில் வைத்து தினமும் பூப்போட்டு வீர வணக்கம் செலுத்தியுள்ளார். அப்போது அவருக்கு வயது 12.
ஏற்கனவே அதே ஜாலியன் வாலாபாக்கில் இச்சம்பவத்திற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே தேசபக்தர்களால் நடத்தப்பட்ட சில பொதுக்கூட்டங்களுக்கு தனது தந்தையாரோடு சென்ற அனுபவம் பகத்சிங்கிற்கு இருந்தது.
விளையாடிக்கழிக்க வேண்டிய விடலைப் பருவத்தில் வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்ததோடு வயதிற்கு மீறிய பொறுப்புணர்ச்சியோடும் பக்குவத்தோடும் விளங்கியுள்ளார் பகத்சிங்.
லாகூர் டி.ஏ.வி. பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்த பிறகு இன்னும் இரண்டாண்டுகள் பள்ளியில் படிக்க வேண்டியிருந்தும் 1921 இல் லாகூரிலுள்ள தேசியக் கல்லூரியில் எஃப். ஏ. படிப்பதற்கு பகத்சிங் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒன்பதாம் வகுப்புப் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கழித்துக் கல்லூரியில் சேர்வதற்குப் பதிலாக அப்போதே சேரவிரும்பினால் அதற்கு இரண்டு மாதகால அவகாசம் தனித்தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பின்னர் நடைபெறுகிற போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். அவ்வாறான போட்டித் தேர்வில் பகத்சிங்கும் அவரது நண்பரான ஜெய்தேவ் குப்தா என்பவரும் பங்கேற்று தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுவிட்டனர். இதை பகத்சிங்கோடு பரிட்சை எழுதிய ஜெயதேவ் குப்தாவே தனது குறிப்பொன்றில் எழுதித் தெளிவுபடுத்தியுள்ளார்.
அப்போதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்திய ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது.
‘ தேசியக் கல்லூரி ’ என்ற பெயரில் நாடெங்கும் தன்னார்வத்துடன் தேசபக்தர்கள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே கல்லூரிகளைத் தொடங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் லாகூரில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டிருந்தது. இக்கல்லூரியை விடுதலைப் போராட்டத்தின் தேசியத் தலைவர்களின் ஒருவரான லாலா லஜபதிராய் முன்னின்று நிறுவினார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று அரசுக் கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் இக்கல்லூரியில் முன்னுரிமை கொடுத்துச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதிலுள்ள பேராசிரியர்கள் தேசபக்த உணர்ச்சியும் பயிற்சியும் உள்ளவர்கள். வழக்கமான பாடப்புத்தகங்களோடு வரலாறு மற்றும் அரசியல் பாடங்களும் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தி வந்தனர். நாட்டின் முக்கியத் தலைவர்கள், தேசபக்திமிக்க பல்துறை அறிஞர்கள் போன்றோரை அழைத்து வந்து மாணவர்களுக்கு நல்ல சொற்பொழிவுகளைக் கேட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்ந்த பகத்சிங்கிற்கு இக்கல்லூரி ஒரு பாடசாலையாக மட்டுமல்லாமல் பாசறையாகவும் திகழ்ந்தது. பள்ளிப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்புக்கு நன்கு வசப்பட்டவர் பகத்சிங்.
பகத்சிங்கின் உற்றதோழர் சிவவர்மா தனது கட்டுரையில் “ பகத்சிங் என் அறையில் நேரத்தை பெரும்பாலும் புத்தகம் படிப்பதிலேயே கழித்து வந்தார். விக்டர் ஹீயூகோ, ஹால்கேன், டால்ஸ்டாய், தாஸ்த்தோவஸ்கி, மார்க்சிம் கார்க்கி, பெர்னார்ட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோர் அவரது அபிமான எழுத்தாளர்கள். அவர் பெரும்பாலும் தான் படித்த புத்தகங்களைப் பற்றியே பிறரிடம் பேசுவார். அந்நூல்களைப் பற்றி விவரித்து, எங்களையும் அவற்றைப் படிக்கச் சொல்வார். சில சமயம் பழைய புரட்சிக்காரர்கள் பற்றிய வீரஞ்செறிந்த வரலாறுகளைக் கூறுவார். கூர்கா எழுச்சி, ‘ கதார் ’ கட்சியின் வரலாறு, கர்தார்சிங், சூஃபி அம்பா பிரசாத், ‘ பபர் ’ அகாலிகளின் வீரக்கதைகள் போன்றவற்றை விவரிக்கும்போது அவர் தன்னை மறந்து விடுவார். அவருடைய வர்ணனையும், நடையும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்.
அர்ஸ்டாட்டில், பிளேட்டோ, ரூசோ, டிராட்ஸ்கி, பெர்ட்ராண்ட்ச்ரசல், கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், தாகூர், லஜபதிராய் போன்ற உலக அளவிலும் இந்திய அளவிலும் புகழ்மிக்க அறிஞர்களின் ஏராளமாக நூல்களை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் தேடித்தேடி வாசித்துள்ளார் பகத்சிங். படிக்கப் படிக்க முக்கியத்துவம் உள்ள பகுதிகளையும் சந்தேகம் ஏற்படுகிற இடங்களையும் தனி நோட்டுப் புத்தகங்களில் எழுதிவைத்துக் கொண்டு அவை குறித்து நண்பர்களிடம் விரிவாக விவாதித்துள்ளார். அவரால் குறிப்பெடுக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களெல்லாம் இப்போதும் ஆவணங்களாக உள்ளன.
கான்பூரில் காங்கிரஸ் கட்சியின் புகழ்பூத்த தலைவராக விளங்கிய கணேஷ் சங்கர் வித்யார்த்தி என்பவர் நடத்தி வந்த ‘ பிரதாப் ’ என்ற ஆங்கில வார இதழில் பணியாற்றினார் பகத்சிங். கணேஷ் சங்கரிடம் கிடைத்த எழுத்து மற்றும் இதழியல் பயிற்சியை பகத்சிங் ஈடுபாட்டுடன் கூடிய அயராது உழைப்பின் மூலம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
பாபா சோகன்சிங் ஜோஷ் இந்தியப் புரட்சியாளர்களின் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். 23 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருந்தவர். இந்திய விடுதலைக்காக அமெரிக்காவிலுள்ள சீக்கியர்களை ஒன்றிணைத்து ‘ கதார் ’ என்ற புரட்சிகர அரசியல் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவராக விளங்கியதோடு அதன் தலைவராகவும் திகழ்ந்தவர். அத்தகைய பெரும் தலைவரை ஆசிரியராகக் கொண்டு 1926 இல் வெளிவந்த ‘ கீர்த்தி ’ என்ற இதழின் துணையாசிரியராக ‘ பகத்சிங் ’ பணியாற்றினார். கீர்த்தி என்றால் ‘ தொழிலாளி ’ என்று பொருள். டெல்லியிலிருந்தபோது ‘ அர்ஜீன் ’ என்ற உருது இதழின் ஆசிரியர்க்குழுவிலும் பணியாற்றினார்.
பகத்சிங் ‘ ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுச் சங்கம் ’ என்ற அமைப்பில் இணைந்து முழுமூச்சோடு செயல்பட்டு வந்தார். அத்தோடு தான் படித்த லாகூர் தேசியக் கல்லூரியில் ‘ நவஜவான் பாரத் சபா ’ என்ற ஒரு புதிய இளைஞர் அமைப்பை தனது தோழர்களோடு சேர்ந்து நிறுவினார். இந்த அமைப்பு நிறுவப்பட்ட விதமும் இது வழி நடத்தப்பட்ட முறையும் தனித்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரியவை. கல்லூரி முதல்வரிலிருந்து பேராசிரியர்கள் மாணவர்கள் என்று பலரையும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒரு அரங்கில் அமரவைத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் விரிந்த அமைப்பாகவும் அதே சமயத்தில் புரட்சிகரக் கருத்துகள் கொண்ட நாட்டு விடுதலைக்குக்குக் களப்பணியாற்றும் தேர்ந்த ஊழியர்களைக் கொண்ட அமைப்பாகவும் ஏக காலத்தில் இவ்வமைப்பு செயல்பட்டது. பகத்சிங் ஒரு மேம்போக்கான போராட்ட வீரராக அல்லாமல் ஒரு பக்குவப்பட்ட, பண்பட்ட அமைப்பாளர் என்பதை இவரது அமைப்பு சார்ந்த பணிகளை நுட்பமாக அலசுகிறபோது தெரியவருகிறது.
பகத்சிங் நன்கு உரையாடுபவராகத் திகழ்ந்தார். கல்லூரி மாணவர்களிடத்தில், சகபுரட்சிக்காரர்களிடத்தில், நீதி மன்றத்தில் அவர் பேசியபோதெல்லாம் ஒரு தெளிவும் உறுதியும் வெளிப்பட்டுள்ளது.
அவர் சிறையில் இருந்தபோது எழுதிய 3,4 புத்தகங்கள் ரகசியமாக வெளியில் கொடுத்தனுப்பப்பட்டு அது முறையாகப் பாதுகாக்கும் சூழல் இல்லாததால் அவை தொலைந்து போயின. இருப்பினும் எஞ்சியுள்ள ‘ நான் நாத்திகன் ஏன் ? ’ என்ற சிறு நூலும் அவர் இதழ்களில் எழுதிய பல கட்டுரைகளும், துண்டறிக்கைகளும் கடிதங்களும் அவரது எழுத்தாற்றலைப் புலப்படுத்துகின்றன.
ஆம்…
பகத்சிங் பன்முக ஆளுமைமிக்க இளம்தலைவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இன்று பகத்சிங் நினைவுநாள்.
( கட்டுரையாளர் : மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் )
நன்றி ‘ தினமணி ’ – நாளிதழ் 23.03.2017