Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது.

    2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் குரல் எழுப்பினர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அமெரிக்கத் தேர்தல் விதிகளின்படி இரண்டு கட்சி வேட்பாளர்களில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் இருக்கின்றன; எப்போதாவது தனிப்பட்ட ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதுண்டு;  அவர்களில் யாரும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் உதவியிருக்கின்றன) யாருக்கு electoral college-இல் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.  இந்த electoral college என்ன என்று பார்ப்போம்.

    ஒவ்வொரு மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்திற்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஓட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜனத்தொகை அதிகம் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் ஓட்டுக்கள்; அளவிலும் ஜனத்தொகையிலும் சிறியதான நியூஹேம்ஷையர் மாநிலத்திற்கு 4 தேர்தல் ஓட்டுக்கள்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சிக்கு மக்களின் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கின்றதோ அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அத்தனை தேர்தல் ஓட்டுக்களும்  கிடைக்கும். அடுத்த கட்சிக்கு எதுவும் இல்லை. ஒரு சில மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் போட்டி தீவிரமாக இருக்கும்.  அங்கு ஒரு கட்சிக்கு மிகச் சிறிய வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்த மாநிலத்தின் எல்லா தேர்தல் ஓட்டுக்களும் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும். 2016-இல் இப்படித்தான் நடந்தது.  ட்ரம்ப்புக்கு electoral college தேர்தல் ஓட்டுக்களில் ஹிலரியைவிட அதிக ஓட்டுகள் கிடைத்தன; ஹிலரிக்கோ பொதுமக்கள் வாக்குகளில் ட்ரம்ப்பைவிட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் ட்ரம்ப்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஆனார். இதனால்தான் இந்தத் தேர்தல் விதியை மாற்றி நாடு முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் ஓட்டுக்களில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதோ அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழும்பும்.  ஆனாலும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

    இப்படி மொத்த ஜனங்களின் ஓட்டுக்களில் பாதிக்குமேல் பெறாமல் பதவிக்கு வந்த ட்ரம்ப்பின் மேல் பலருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40% சதவிகிதத்திலிருந்து குறையவில்லை என்கிறார்கள். ஒபாமா ஏழைகளுக்காகவும் அமெரிக்காவின் பிம்பத்தை நல்லபடியாக உயர்த்துவதற்காகவும் என்னென்ன செய்தாரோ அவை எல்லாவற்றையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே மாற்றிவருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நாடு வெள்ளை இனத்தவருக்கே என்ற வாதத்தை மறைமுகமாகக் கூறி வருகிறார். வெள்ளை இன அமெரிக்கர்களுக்கு இந்த வாதம் மிகவும் பிடிக்கிறது. அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் உலகிலேயே முதன்மை நிலையில் இருப்பதற்கு முதலில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளின் உழைப்பும் அதன் பிறகு உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பங்களிப்பும் காரணம் என்பதை இந்த வெள்ளை இனவாதிகள் மறந்துவிடுகிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப் போய்விட்டால் அமெரிக்காவின் வளம் அனைத்தும் தங்களுக்கே என்று இவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவின் பன்மைத்தனம்தான் அமெரிக்காவின் சிறப்பம்சம், அதன் வலிமை என்று இவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவருவார் என்று ட்ரம்ப்பின் பின்னால் இவர்கள் கானல் நீரை நோக்கி ஓடுபவர்கள்போல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு தலைமுறையில் வெள்ளை இனத்தவர் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

    இவர்கள் கொடுக்கும் தைரியத்தில் ட்ரம்ப்பும் தான்தோன்றித்தனமாக, தான் அமெரிக்காவுக்கே அரசன்போல் நடந்துவருகிறார். ரஷ்யாவின் புதின் போல், சீனாவின் ஷி போல், துருக்கியின் எர்டோவன் போல், இந்தியாவின் மோதிக்கு இருக்கும் வாய்ப்பு போல், சவூதி அரேபியாவின் சல்மான்கான் போல், வட கொரியாவின் கிம் ஜாங்-அன் போல் தான் வாழ்நாளுக்கும் அமெரிக்காவின் அதிபராக இருந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். உலக அரங்கிலும் அமெரிக்காவின் பல நட்பு நாடுகளுடன் எதையும் சிந்திக்காமல் மனதில் தோன்றுவதைப் பேசி வருகிறார், நடந்து வருகிறார். அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு,  ராணுவ பலம் வாய்ந்த நாடு என்பதால் பல நாட்டுத் தலைவர்களும் ட்ரம்ப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடந்துகொள்கிறார்கள். உள்நாட்டிலும் 40 சதவிகித மக்களின் ஆதரவு இருப்பதாலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் பலத்திற்குப் பயந்து பல தலைவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பதாலும் ட்ரம்ப்பின் அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

    இதற்கிடையில் 2020 தேர்தலில் தன்னை எதிர்க்கக்கூடிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஜோ பைடன் முதலிடம் வகிக்கலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மேல் எப்படியாவது சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று நினைத்தார். துணை ஜனாதிபதியாக இருந்த பைடனின் மகன் உக்ரைன் நாட்டின் ஒரு ஊழல் மலிந்த, எரிசக்தி கம்பெனியின் உயர்பதவியில் இருந்தார்; அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.  பைடனையும் அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரித்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக அமெரிக்கப் பாராளுமன்றம் தீர்மானித்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளிப்பதாகவும் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கூறியிருக்கிறார்.  அமெரிக்கப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு அந்நிய நாடுகளுக்கு ராணுவ உதவியை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிறுத்திவைப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றம்.  நிறுத்திவைத்தது எப்படியோ உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே வந்துவிட்டது.

    ஏற்கனவே ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கப் பல முறை முயன்ற ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் இப்போது ட்ரம்ப்பின் இந்த அடாவடிச் செய்கையை முன்வைத்து அவரைப் பதவி இறக்க விசாரணை (impeachment) செய்து எப்படியாவது பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள்.  இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா சட்டப்படி நடக்கும் நாடு, ஜனாதிபதியானாலும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பது நிரூபணமாகும். இதுதான் அமெரிக்காவுக்கான இப்போதைய அக்கினிப் பரீட்சை.

    முதலில் ட்ரம்ப் உக்ரைன் அதிபரோடு தான் பேசவேயில்லை என்றார். பிறகு பேசியதாகவும் பைடனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லவில்லை என்றும் விசாரித்தால்தான் ராணுவ உதவி என்று நிபந்தனை போடவில்லை என்றும் கூறிவந்தார்.

    இப்போது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்ட பிறகு இந்தச் செய்திகள் எல்லாம் பொய்ச் செய்திகள் (fake news) என்று சொல்லிவருகிறார். (இவரிடமிருந்துதான் இந்திய அரசியல் தலைவர்களும் fake news என்ற வார்த்தையைக் கற்றிருக்கிறார்கள்.)  தான் மட்டுமே உண்மை பேசுவதாகவும் மற்றவர்கள் எது கூறினாலும் அது பொய் என்றும் ட்விட்டரில் கூறுவது ட்ரம்ப்பின் பொதுவான வழக்கம்.  இப்போதும் அதைத்தான் செய்துவருகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சில தினங்களுக்கு ஒரு முறை ‘உண்மை எப்போதும் வெல்லும்’ என்று விளம்பரம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

    எப்படியாவது ட்ரம்ப்பின் இந்தக் குற்றத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயன்றுகொண்டிருக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழவையில் ஏற்கனவே ட்ரம்ப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இருந்தாலும் மேலவை அங்கத்தினர்கள் 100 பேரில் 67 பேர் ஓட்டுப் போட்டால்தான் ஜனாதிபதியைப் பதவி இறக்கம் செய்ய முடியும்.

    செனட்டில் 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் 53 குடியரசுக் கட்சி அங்கத்தினர்களும் இருக்கிறார்கள்.  47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுப் போடத் தயாராக இருக்கிறார்கள்; குடியரசுக் கட்சியில் இப்போதைக்கு யாரும் பதவி இறக்க ஓட்டைப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.  இத்தனைக்கும் இன்று (ஜனவர் 27, 2020) ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போல்ட்டன் என்பவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி (இது இன்னும் வெளியாகவில்லை; மார்ச் 17 அன்று வெளியாகிறது.) ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்து ட்ரம்ப்பிற்குப் பாதகமான செய்திகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படியும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் பதவி இறக்கத்திற்கு ஓட்டுப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் ட்ரம்ப்பை எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றன. கீழவையின் பதவி இறக்கத் தலைவர் தன் வாதங்களை முடிக்கும்போது, ‘இப்போது உலகம் முழுவதும் அமெரிக்காவைத்தான் ஜனநாயகத்திற்கு உதாரணமாகப் பார்க்கிறது. அதனால் இப்போது ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்காவே விசாரணைக்குள்ளாகி இருக்கிறது’ என்று முடித்தார். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘உலகிற்கே ஜனநாயக வழிகாட்டியாக இருந்த, உண்மை அதிகாரம் மக்களிடம் இருந்த,  அமெரிக்கக் குடியரசு இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதுபோல் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.

    அமெரிக்காவுக்கு இது சோதனைக் காலம். ட்ரம்ப்பை குடியரசுக் கட்சி செனட்டர்கள் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பதவியிலிருந்து இறக்கவில்லையென்றால், இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தோற்றுவிட்டால் உலகிற்கே இது நல்ல சகுனமில்லை.

    Share
  • உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சொன்னேன். நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை; இது பொய்யான செய்தியைப் (fake news) பரப்புவது என்று வாசகர்கள் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.  உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது.  செயல்களைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் உள்நோக்கம் வெளிப்படும்.  பா.ஜ.க. அரசின் செயல்களை – மௌனங்களையும்தான் – வைத்தே என் கருத்தைச் சொன்னேன்.  இந்தக் கருத்து என்னைப்போல் சமூகச் சிந்தனை, தார்மீக உணர்வு உள்ளவர்களுக்கும் உடன்பாடே.  மற்றவர்களுக்காக என் கருத்துக்கு ஆதாரமாக இருப்பவற்றை – இது பலவாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை வைத்து மட்டும் – சொல்கிறேன்.

    குடிமக்கள் யார் என்பது ஒரு நாட்டின் தன்மையை, ஆன்மாவை விளக்கும் கேள்வி.  இதனால்தான் ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 1950 ஜனவரி 26இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திலும் குடிமக்களை வரையறுப்பதைக் காணலாம். இந்திய நாடு பல மதம், இனம், குடியேற்றம் ஆகியவற்றை அடக்கிய மக்களைக் கொண்ட, பன்மைத்தன்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டம் வரையறுக்கிறது.  அதன் வாசகம் கீழே.

    Every person who was at the commencement of the Constitution (26 January 1950) domiciled in the territory of India, and (a) who was born in India, or (b) either of whose parents was born in India, or (c) who has been ordinarily resident in India for not less than five years, became a citizen of India.

    இந்தச் சட்டம் அவ்வப்போது மாறிய அரசியல் கொள்கைகள், சட்டப் பிரச்சினைகளைப் பொறுத்துத் திருத்தம் செய்யப்பட்டது.  திருத்தங்களின் விபரம் இதோ:

    The legislation related to this matter is The Citizenship Act, 1955, which has been amended by the Citizenship (Amendment) Acts of 1986, 1992, 2003, 2005, 2015 and 2019. The 1986 amendment restricted citizenship by birth to require that at least one parent had to be an Indian citizen. The 2003 amendment further restricted that aspect by requiring that a parent could not be an illegal immigrant. The 2003 amendment also mandated the Government of India to construct a National Register of Citizens. The 2019 amendment provided an easier path to citizenship for persecuted selected minorities, i.e. Hindus, Sikhs, Buddhists, Jains, Paris and Christians from the neighbouring Muslim-majority countries of Bangladesh, Pakistan, and Afghanistan who entered India before December 2014. (2003-இல் ஆண்டது வாஜ்பாயி தலைமையில் இருந்த பா.ஜ.க. கூட்டணி)

    2019-ஆம் ஆண்டுத் திருத்தத்தை பா.ஜ. க. ஆட்சி  பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றயது.  இது எப்படி குடிமக்களை வேறுபடுத்தி ஒதுக்குகிறது என்று பார்க்கலாம்.  இது எப்படி இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்துகிறது என்றும் காணலாம்.  குடிமக்களை வேறுபடுத்துவது, சட்டத்தின் உள்நோக்கம் பற்றியது;  சட்டத்தில் இது வெளிப்படையாக இல்லை; இருக்க முடியாது. வலதுசாரி அரசியல்வாதிகள் இந்தச் சட்டத்தின் நோக்கம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களைக் களைய வேண்டும் என்பதே என்று சொல்கிறார்கள்.  அண்மைப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்களைக் கறையான்கள் என்றார்.  கறையானைப்போல நாட்டை அரிக்கிறார்கள் என்று சூசகமாகச் சொன்னார்.  இதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை.  கறையான்களை அழிப்பதுபோல் இவர்களை ஒழிக்க வேண்டும் என்பது சொல்லாமல் விட்ட நோக்கம். எப்படி ஒழிப்பார்கள் என்பதை இப்போது மத்திய அரசு அஸ்ஸாமிலும் மற்ற மாநிலங்களிலும் கட்டிக்கொண்டிருக்கும் சிறைச்சாலைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்து எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.  இவர்கள் இஸ்லாமியர்கள் என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  அதோடு இவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதிகளைச் சிறையில் தள்ளி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று நாடகம் போடுகிறார்கள்.  மோதி, நாட்டின் காவல் நாயகன் என்னும் பிம்பத்தை வளர்க்க இந்தச் சட்டம் ஒரு கருவி.

    ஊடுருவியவர்கள் பற்றிய இந்தக் கருத்தாடலுக்கு வரலாற்றுச் சான்று இல்லை.  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு முன்னோடியாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமக்களைக் கண்டுபிடித்தல் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள்.  அஸ்ஸாமில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அங்குள்ள இந்துக்கள் சிலருக்கு சில காலமாக வருத்தம்.  இந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகோ பங்களாதேஷ் தனிநாடாக ஆன பிறகோ வந்தவர்கள் அல்லர்.  காலனி ஆட்சியில் அஸ்ஸாமில் விவசாயத்தை வளர்த்து கல்கத்தாவுக்கு உணவு சப்ளை செய்வதற்காக காலனிய அரசு அன்றைய பிரிபடாத வங்காளத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் குடியேற ஊக்கப்படுத்தியது.  அப்படிக் குடியேறியவர்களில் இஸ்லாமியர்களும் உண்டு (ஆதாரம் New York Review  of Books என்ற புகழ்பெற்ற இதழில் (ஜனவரி 6, 2020) வெளியான Why Hindu Nationalists Trialed India’s Citizenship Law in Assam என்னும் கட்டுரை; இதை எழுதியவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள Many Rivers, One Sea: Bangladesh and the Challenge of Islamist Militancy என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் ஜோசப் ஆல்ச்சின்.   இந்த இஸ்லாமியர்களைத்தான் பா.ஜ.க. அரசு, இவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் குடிமக்கள்; இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் என்று நம்மை நம்பவைக்க முயல்கிறது. இவர்கள் காலனிய காலத்திலிருந்து பல தலைமுறைகளாக அஸ்ஸாமில் வாழ்பவர்கள் என்னும் வரலாற்று உண்மையை நம் கண்ணிலிருந்து மறைக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ்,  இந்தியக் குடியுரிமைக்கு ஆவணம் காட்ட இயலாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட மக்களில் பலர் இந்துக்கள். இந்த விளைவை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை.  இவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஒரு மாயையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை மட்டும் – இந்தச் சிறுபான்மையினரில் 90 சதவிகிதத்தினருக்கு மேல் இந்துக்கள் – இந்தியா அரவணைத்துக்கொள்கிறது என்று நம் கண்ணில் மண்ணைத் தூவப் பார்க்கிறது. இந்தச் சட்டத்தால், இந்தியக் குடியுரிமை கிடைக்காமல் போகிறவர்களில் காலனிய காலத்திலிருந்து அஸ்ஸாமில் குடியிருக்கும் இஸ்லாமியர்களே அதிகம்.  பா.ஜ.க. இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் பற்றித் தரும் விளக்கத்தில் ஏராளமான ஓட்டைகள். மதக் கொடுமைக்கு ஆளான சிறுபான்மையினரே, இந்தியக் குடிமக்களாகத் தகுதி பெறுவார்கள் என்றால், இஸ்லாமியர்களுக்குள்ளேயே மேற்சொன்ன நாடுகளில் சிறுபான்மையராக இருந்து அவதிப்படும் அகமதியர்கள் போன்ற பல இஸ்லாமியச் சிறுபான்மையருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்; ஆனால், கொடுக்கவில்லை.  மியான்மாரிலிருந்துவிரட்டப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும்; செய்யவில்லை  இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இந்தச் சட்டத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் மேற்சொன்ன இஸ்லாமிய நாடுகளையே குறிவைப்பதால், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பது பற்றி இந்தச் சட்டம் பேசவில்லை. (தமிழ் இனத்தைக் காப்போம் என்று மார்தட்டும் அ.தி.மு.க. இந்தச் சட்டத்திற்கு வாக்களிக்காதிருந்திருந்தால் இந்தச் சட்டம் ராஜ்ய சபையில் நிறைவேறியிருக்காது.) இவற்றால் இந்தச் சட்டத்தின் நோக்கம் பிற நாடுகளில் மதத்தின் சார்பில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தருகிறது; இந்தப் பெருந்தன்மையைக் காட்டுவதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று சொல்லித்திரிவது ஏமாற்று வேலை.

    அடுத்தது, இந்திய ஜனத்தொகைப் பதிவேடு (National Population Register). இது காங்கிரஸ் ஆட்சியிலேயே (ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி) கொண்டுவரப்பட்டது.  ஆதார் அடையாள அட்டை அமலுக்கு வந்தபோது அரசின் ஏழைகளுக்கான உதவி திட்டங்களில் இருந்த ஊழல்களை ஒழிப்பதற்காக – ஒரே நபர் இரண்டு மூன்று தடவை இடம்பெறுவதைத் தடுப்பதற்காக – ஆதார் அட்டை தேவை என்று சொல்லப்பட்டது.  இதற்கான எதிர்ப்புகள் தனிப் பிரச்சினை; அதைப் பற்றி இங்கு சொல்லவில்லை.  ஆதார் அட்டையில் உள்ள குறுகிய அளவுத் தகவல்களை வலுப்படுத்த அதிகத் தகவல்களைச் சேர்ப்பதற்கு இந்தப் பதிவேடு.  இது தற்சமயம் ஒரு இடத்தில் வசிக்கும் மக்களைப் பற்றிய விபரம் தேடுவதற்கு என்று அப்போது சொல்லப்பட்டது.  இன்று இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மக்கள் வேலைக்காக அதிக அளவில் இடம்பெயர்வதால் அவர்களைப் பற்றிய கணிப்பு தேவை என்று சொல்லப்பட்டது. இந்த வகையில் இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜனத்தொகைக் கணிப்பிலிருந்து (Census) வேறுபட்டது என்று வாதிடப்பட்டது.  பா.ஜ.க. அரசு காங்கிரஸ் செய்ததைத்தான் தாங்கள் தொடர்ந்து செய்கிறோம் என்பது பாதி உண்மையை மறைப்பதாகும்.  பழைய பதிவேட்டில் இல்லாத இரண்டு கேள்விகளை பா.ஜ.க. அரசு சேர்த்திருக்கிறது.  அவை குடிமகனின் தந்தை பிறந்த இடமும் தேதியும் பற்றியவை.  இவற்றைக் கேட்பதன் காரணம் தந்தை பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ பிறந்தவரா என்று தெரிந்துகொள்ளத்தான் என்று ஊகிக்க முடியும். பா.ஜ.க. தலைவர்கள் சட்டத்தில் இது இல்லை என்று திருப்பித் திருப்பிச் சொன்னாலும், பா.ஜ.க. அரசின் இஸ்லாமிய விரோதக் கொள்கையின் மூலம் (இதைப் பற்றி ஆதாரம் வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்) இப்படி ஊகிப்பது பிரம்மவித்தை அல்ல.  முன்னோர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்ட பிறகு அவர்களுக்கு என்ன நேரும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

    இந்தப் புதிய கேள்விகள் எதற்கு என்று எதிர்ப்பு எழுந்தவுடன் பா.ஜ.க. அரசு முதலில் இந்தத் தகவலுக்கு ஆவணம் காட்டத் தேவையில்லை என்று பின்வாங்கியது; அடுத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கட்டாயமில்லை என்று பல்டி அடித்தது. எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவது உள்நோக்கத்தைச் சந்தேகப்பட வைக்கிறது அல்லவா? கால் விரலைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்த்து, சுட்டால் எடுத்துவிடுவோம்; இல்லையென்றால் குட்டையைக் குழப்புவோம் என்பதைப் போன்றது இந்த நடிப்பு.

    தந்தையின் பிறந்த இடம், தேதியைக் கேட்பதற்கு மேல் சென்று, தாத்தாவின் பிறந்த ஊரையும் தேதியையும் விசாவின் விண்ணப்பத்தில் இப்போதைய பா.ஜ.க. அரசு சேர்த்த்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுப் பிரஜைகளாக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியப் பயணத்துக்காக வெளிநாட்டுத் தூதரகங்களில் விண்ணப்பித்தால் அப்பா, தாத்தா பிறந்த இடம், தேதி கொடுக்க வேண்டும்.  (ஆதாரம் புதிய விசா விண்ணப்பப் படிவம்).  இந்தத் தகவல்களைத் தருவதற்கு ஆவண ஆதாரமும் காட்ட வேண்டும்.  இவை எத்தனை பேரிடம் இருக்கும்?  ஆவணம் இல்லாவிட்டால் விசா கிடைக்காது.  இந்திய வம்சாவளியினர் ஒருவர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய தந்தை, தாத்தா பாகிஸ்தானில் பிறந்திருந்தால் விசா கிடைக்கும் வாய்ப்புக் குறைவு; ஆவணச் சான்று காட்ட முடியவில்லையென்றால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம்.  இதைத்தான் என் கட்டுரையில் நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் வைத்து எழுதியிருந்தேன்.

    இஸ்லாமிய எதிர்ப்பில் உள்ள ஒரு அம்சம் நாடு பிரிவினையானபோது இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்று இந்தியாவில் தங்க முடிவு செய்தவர்களின் நாட்டுப்பற்றைப் பற்றிய சந்தேகம்.  இவர்கள் இந்தியாவுக்குத் துரோகம் செய்யக் கூடியவர்கள் என்று ஒரு பிம்பம்.  இது எவ்வளவு மோசமானது, ஆதாரமற்றது என்று காட்டத்தான் இந்தியப் பற்றை வெளிப்படுத்தும் சில முழக்கங்கள் இஸ்லாமியர்களால் எழுதப்பட்டவை என்று எழுதினேன். இவற்றில் ஒன்றுக்கு ஆதாரம் இது.  ஜெய்ஹிந்த என்ற முழக்கம் சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதை உருவாக்கியவர் ஹைதராபாத்தில் பிறந்து ஜெர்மனியில் பொறியியல் படிக்கும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக உயர்ந்து போரிட்ட ஒரு இஸ்லாமியர்.  அவர் பெயர் ஸைன் உல் அபிதீன் ஹாஸன் (Zain -ul Abideen Hasan). இதற்கு ஆதாரம் நரேந்திர லூதர் எழுதிய  Lengendotes of Hyderabad என்னும் ஆராய்ச்சி நூல்.  இதை நேதாஜி ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினார்.

    பா.ஜ.க. எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதாரம் கேட்பவர்கள் மோதியிலிருந்து பா.ஜ.க.வினர் சொல்லும் பொய்களுக்கு என்ன ஆதாரம் தருகிறார்கள்? பிரதம மந்திரி சொல்வதனாலேயே அவை உண்மை என்று நினைக்கிறார்களா? “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது குறள். இது எல்லாருக்கும் பொருந்தும். நான் சொல்வதற்கு மட்டுமல்ல; மோதியும் அமித் ஷாவும் சொல்வதற்கும்தான்.

     

    Share
  • உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வளர்ந்துவரும் எல்லா நாடுகளையும்போல் இந்தியாவிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவளாகிய நான் தமிழ்நாட்டில் அம்மையார் காலத்தில் நடந்த ஊழல் பற்றியும் அவருடைய மறைவிற்குப் பிறகும் அது தொடர்வது பற்றியும் நன்றாகவே அறிந்திருக்கிறேன். ‘எப்போது தணியும் இந்த சுதந்திர தாகம்’? என்றார் பாரதி. சுதந்திரம் பெற்றுவிட்ட இந்தியாவில், ‘எப்போது மறையும் இந்த ஊழல்?’ என்று பல முறை நான் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 1967 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தப் புற்றுநோய் பரவ ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் காலத்தில் அது புரையோடிப் போய் தமிழ்நாட்டையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.

    ‘எப்போது மறையும் இந்த ஊழல்’? என்ற என்னுடைய இந்தப் புலம்பலுக்கு ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாஸன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்துத் தன் கட்சியின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று நானும் மகிழ்ந்துபோய் வல்லமை என்னும் ஆன்லைன் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன்.

    இப்போது அரசியலுக்குப் பல நடிகர்கள் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம். கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.

    சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள். வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

    இப்படியெல்லாம் என் போன்றோரிடம் நம்பிக்கையை வளர்த்த கமலஹாஸன் இப்போது ரஜனிகாந்திடம் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். நான் படித்த இந்தச் செய்தி என் கனவில் கண்ட செய்தியாக இருக்க வேண்டுமே என்று பல முறை வேண்டியிருக்கிறேன்.

    ஆனாலும் மறுபடி மறுபடி இந்தச் செய்தி கண்ணில் பட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலேயுள்ள என் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு விடிவெள்ளி என்று நான் நினைத்திருந்த கமலஹாஸன் ஏன் இப்போது ரஜனியை அரசியலுக்கு வர அழைக்கிறார்?  உலக வரலாறு பற்றியோ நாட்டு நடப்பு பற்றியோ எதுவும் தெரியாத ரஜனியை இவர் உதவிக்குக் கூப்பிடுவதன் நோக்கம் என்ன? ‘காவிப் பக்கம் போக மாட்டேன்’ என்று உறுதியாகக் கூறிக்கொண்டிருந்தவர் ‘காவி’த் தலைவர்கள் குறிவைத்திருக்கும் ரஜனியை உதவிக்கு அழைக்கிறாரே.  இது என்ன மர்மம்?  ‘ரஜனி அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது ‘அவர் பாதை தனி. என் பாதை தனி’ என்று கூறியவர் இன்று அவரை உதவிக்கு அழைக்கிறாரே?

    சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘கமலஹாஸன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.  என் கேள்வியைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு, ‘மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர் பேசவில்லையே’ என்றார்கள்.  அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.  ‘இவர்கள் ஏன் கமலஹாஸனுடைய நல்ல கொள்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை?’ என்று ஆயாசப்பட்டேன்.  கமலஹாஸனை நான் எடைபோட்டது தவறா என்று இப்போது நான் ஆயாசப்படுகிறேன்.  நான் நம்பியதுபோல் அவர் ஒரு விடிவெள்ளி இல்லையா? ரஜனியைத் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர் அழைத்தது அறிந்து அவரைப் பற்றிய என் ஆர்வமெல்லாம் வடிந்துவிட்டது.  இது கனவாக இருக்கக் கூடாதா என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

    Share
  • இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

    இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எங்கள் நண்பர் ஒருவர் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர்.  ஒரு முஸ்லீம்.  அங்கேயே படிப்பை முடித்துக்கொண்டு 1958-இல் வேலைபார்க்க அமெரிக்காவுக்கு வந்தார்.  குடும்பம், குழந்தைகள் என்று அமெரிக்காவிலேயே தங்கிவிட்டாலும் இந்தியாவுக்கு சில வருடங்களுக்கு ஒரு முறையாவது போவார். பத்து வருடங்களுக்குச் செல்லுபடியாகும் இந்திய விசாவை மூன்று முறை பெற்று பல முறை தாய்நாட்டுக்குச் சென்றிருக்கிறார். முப்பது ஆண்டுகள் இந்தியாவுக்குப் போய்வந்து கொண்டிருந்தவர் சென்ற மாதம் இந்தியாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தபோது இந்திய அரசு அவருக்கு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. புதிய பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தபின் அவர் விசாவுக்கு விண்ணப்பிப்பது இது முதல் தடவை. தூதர் அலுவலகம் கேட்ட ஒரே கேள்வி எந்த ஆண்டு பிறந்தீர்கள் என்பதே. அவர் சுதந்திரம் வருவதற்கு முன்னரே – நாடு பிளவுபடுவதற்கு முன்னரே- லக்னோவில் பிறந்து இந்தியாவில் இருக்க முடிவு செய்தவர். என்ன கொடுமை! அவர் இந்தியக் குடிமகனாக இருந்தவர், இப்போது அமெரிக்கக் குடிமகன். பிறந்த நாட்டின் பந்தத்தை விட விரும்பவில்லை. அவ்வப்போது இந்தியாவுக்கு வர விரும்புகிறார். அங்கிருக்கும் உறவினர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்.  1947-இல் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியத் தாய்நாட்டில் இருக்க முடிவுசெய்த காரணத்தால் இப்போது இந்தியாவுக்குப் போக முடியவில்லை. என்ன அநியாயம்.

    1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் வாழ்ந்துவந்தனர்.  பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு முஸ்லிம்கள் சிறுபான்மையராகிவிடலாம் என்றும் அவர்களுக்கு பெரும்பான்மையராக இருந்த இந்துக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகலாம் என்றும் கருதிய ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியை ஆரம்பித்து முஸ்லீம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று பிரிட்டிஷாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

    இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்களுக்கென்று தனி நாடு எப்படி அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது எந்தப் பகுதியில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதி அவர்களுக்கான நாடாக பிரகடனப்படுத்தப்படும் என்று முடிவாகியது. இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் பங்களாதேஷ் பகுதியிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் அவை இரண்டும் முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடாக ஆனது.  மற்றப் பகுதிகள் இந்தியா ஆனது.  பாகிஸ்தான் பகுதியிலுள்ள இந்துக்களுக்கு விரும்பினால் இந்தியாவுக்கு வந்து குடியேறவும், இந்தியப் பகுதியிலுள்ள முஸ்லீம்களுக்கு விரும்பினால் பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறவும் அனுமதி வழங்கப்பட்டது.

    முஸ்லீம் லீக் தலைவர்கள் பாகிஸ்தானை முஸ்லீம் நாடு என்று பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  ஆனால் இந்தியத் தலைவர்களோ இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக விளங்கும் என்றும் அங்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்தியாவைத் தங்கள் தாய்நாடாக வரித்துக்கொண்ட முஸ்லீம்கள் இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்தனர்.  இந்தியாவில் அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் எந்தவிதப் பங்கமும் வராது என்று இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி இந்தியாவிலேயே வாழ்ந்துவந்தனர்.  அவர்கள் இந்தியப் பிரஜைகளாக, இந்தியாவுக்கு விசுவாசமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களே சாட்சி.

    ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை 1941-இல் உருவாக்கியவர் ஆபித் ஹஸன் சப்ராணி;

    இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை உருவாக்கியவர் ஹஸ்ரத் மொஹானி;

    பாரத் மாதா கி ஜெய் என்னும் முழக்கத்தை உருவாக்கியவர் அஸி முல்லாகான்;

    சாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற பாட்டைத் தந்தவர் முக்கம்மது இக்பால்.

    இவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள்.  இந்த வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துபவர் மும்மது ரஃபி, ‘காகிதம்’ என்னும் இதழில்.

    உண்மை அப்படியிருக்க இப்போது பி.ஜே.பி. அரசு இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள் என்று கூறி அவர்களை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்கிறது. அவர்கள் இந்தியத் துணைக்கண்டம் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று இரண்டு நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோதே பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும் என்று பூடகமாகக் கூறுகிறது.

    பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது ஒன்றாகயிருந்த வங்காளத்திலிருந்து பலரை அரசு அஸ்ஸாமில் குடியேற்றியது. அஸ்ஸாமில் இருந்த நிலங்களில் விவசாயம் செய்து உணவுப் பொருள்களைக் கல்கத்தாவிற்கு அனுப்புவதற்காக இந்த ஏற்பாடு.  இப்படிக் குடியேறியவர்களில் முஸ்லீம்களும் உண்டு. இவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதற்குப் பத்திரங்கள் எதுவும் இல்லை. அதனால் இவர்கள் கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்று சொல்லி அவர்களுடைய குடியுரிமையைப் பறித்துச் சிறையில் அடைப்பதற்காக பி.ஜே.பி. அரசு கௌஹாத்திக்கு அருகில் சிறைச்சாலை கட்டிக்கொண்டிருக்கிறது.

    தேசிய மக்கள் பதிவேட்டில் புதிதாகத் தந்தையின் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இபோது உள்ளவர்களின் பெற்றோர்கள் சுதந்திரத்திற்கு முன் எங்கு பிறந்தார்கள் என்று பார்ப்பதற்குத்தானே இந்தக் கேள்வி?  இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்து அதன் பிறகு இந்தியக் குடிமக்களாக வாழ்ந்துவருபவர்களை இந்தியாவை விட்டுப் போகச் சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி?

    Share
  • இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேலில் ஏப்ரலில் ஒன்றும் செப்டம்பரில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடந்தன. முதல் தேர்தலில் நேத்தன்யாஹுவின் கட்சிக்கு 35 இடங்களும் முந்தைய ராணுவத் தளபதி கேன்ட்ஸுக்கு 34 இடங்களும் கிடைத்தன. இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்றக் கட்சிகளோடு சேர்ந்து அரசு அமைக்க முயன்றனர்.  இவர்களோடு சேர்வதற்கு மற்ற எந்தக் கட்சியும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து அரசு அமைப்பதற்கு இருவரும் இசையவில்லை.

    அதனால் செப்டம்பர் மாதம் இரண்டாவது தடவையாக தேர்தல் நடந்தது.  அதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேத்தன்யாஹுவின் கட்சிக்கு முதல் தேர்தலில் கிடைத்ததைவிட ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. கேன்ட்ஸுக்கு அதே எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. மறுபடி மற்ற எந்தக் கட்சிகளும் இவர்களோடு அரசு அமைக்க ஒப்புக்கொள்ளவில்லையாதலால் இரண்டாவது தேர்தல் முடிவுகளுக்கும் அர்த்தமில்லாமல் போனது.

    இஸ்ரேல் ஜனாதிபதி டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சாத்தியம் இல்லையென்றால் மறுபடி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இஸ்ரேல் சமூகம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கொடுக்க வேண்டுமா என்று கேட்டால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

    ஆனாலும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உரிமைகளும் தேவையில்லை என்று நினைக்கும் பழமைவாத, சுயநலமிக்க யூதர்கள் ஒரு பக்கமும் ஏதோ சில உரிமைகள் கொடுக்கலாம் என்று கூறும் இஸ்ரேலியர்கள் இன்னொரு பக்கமும் இருப்பதால் நாடு பிளவுபட்டிருக்கிறது. இந்த இரண்டு பக்கத்தினரிடையேயும் ஒற்றுமை இல்லாததால்  யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    நேத்தன்யாஹு மேல் பலவித ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய மனைவியும் பெரும் பணக்காரர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகள் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. அவருடைய மனைவி மேல் அடிக்கடி பிரதமர் மாளிகைக்கு வெளியிலிருந்து உணவு தருவித்ததாகத் தனியாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை கிடைப்பதாக இருந்த சமயத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 75,000 டாலர் அரசுக்குக் கொடுத்து அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். இஸ்ரேலில் இருக்கும் இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்றிற்கு லஞ்சம் கொடுத்துத் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதுமாறு செய்தார்.

    இவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியபோது கையூட்டு வாங்கயதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்கள். இன்னும் சில சிறிய குற்றங்களும் நேத்தன்யாஹு மேல் இருக்கின்றன.  இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணைக்குத் தகுந்தவை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் அமைச்சரவையில் எந்தத் துறைப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரதம மந்திரி பதவியை மட்டும் வகிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆணையிட்டிருக்கிறார்.

    இந்தக் குற்றங்கள் எல்லாம் நிரூபிக்கப்பட்டு இவருக்குத் தண்டனை கிடைத்தால் தேர்தலில் ஜெயித்து பிரதமராக இருந்தாலும் இவர் பதவி விலக வேண்டும் என்பது இப்போதைய சட்டம். பிரதம மந்திரியாகி எப்படியாவது அந்தச் சட்டத்தைத் திருத்தி பிரதம மந்திரிக்கு அந்த விதியிலிருந்து விலக்களிக்க இவர் முயன்று வருகிறார்.  ஆனால் இரண்டு தடவை நடந்த தேர்தல்களிலும் இவருடைய கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    ஏப்ரல் தேர்தலுக்கு முன் சிரியாவில் ஆக்கிரமித்திருக்கும் கோலன் ஹைட்ஸை இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அங்கீகாரம் கிடைத்தது.  அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார்.  அப்படி நடக்கவில்லை.

    மறுபடி செப்டம்பர் தேர்தலுக்கு முன் வெஸ்ட் பேங்கில் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை இஸ்ரேலோடு சேர்த்துக்கொண்டார். அதற்கு உலகம் முழுவதிலும் கண்டனம் எழுந்தாலும் இஸ்ரேல் மக்களிடம் ஆதரவு இருக்கும், அதனால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், முதல் தேர்தலைவிட இதில் ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. இப்போது அடுத்த முறை தேர்தல் வந்தால் எப்படிப் பிரதம மந்திரியாகலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி நடந்தால் பிரதம மந்திரி பதவியும் கிடைத்துவிடும், குற்றங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

    இஸ்ரேல் மக்கள் இவரைப் போன்று அரசியலில் ஊழல் செய்தவர்களைச் சும்மா விடக்கூடாது. இவர் எப்படியும் தேர்தலில் தோற்றுப் பிரதம மந்திரியாகும் வாய்ப்பை இழப்பதோடு சிறைக்கும் செல்ல வேண்டும். இவர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் புரிந்திருக்கிறார்.

    ஆஸ்லோ ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து போனதற்கு இவர்தான் முழுக் காரணம். அதை அன்றைய அரசு உண்மையாக நிறைவேற்றியிருந்தால் பாலஸ்தீனர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கும். இவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவி வகித்து அவர்களுக்குப் பல அநீதிகளை ஒவ்வொன்றாக இழைத்தார்.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என்ற அவர்களுடைய கனவையே முழுவதுமாகக் குலைத்துவிட்டார்.

    இவரைப் போன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் உலகில் நீதி செத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

    Share
  • இந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்

    இந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சாதாரணமாக நான் விமானத்தில் பயணிக்கும்போது படங்கள் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சின்னத் திரையில் பார்ப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. இந்த முறை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரண்டு பயணங்களிலும் படம் பார்த்தேன். ஒன்று LKG. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டகாசங்களையும் அரசியல்வாதிகள் புரியும் ஊழல்களையும் எடுத்துச் சொல்வதுதான் படத்தின் முக்கியக் குறிக்கோள். இரண்டாவது ‘சம்பல்’ என்னும் கன்னடப் படம். இதில் ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி அரசியல்வாதிகளோடு மோதும்போதெல்லாம் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார் என்று காட்டுகிறார்கள்.

    இரண்டு படங்களும் நன்றாக ஓடியதாக விமர்சனங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் மக்களில் பலருக்கு லஞ்சம், ஊழல் என்பதில் வெறுப்பு இருக்கிறது என்று சொல்லலாம் என்றால், அவர்கள் வாழ்க்கையில் ஊழலையும் லஞ்சத்தையும் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

    மைசூரில் பல வருஷங்களுக்கு முன்பு எங்கள் பக்கத்து வீட்டு நண்பராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் – அவர் 1994-இல் தனது 82ஆவது வயதில் காலமானார் – ஒரு காந்தியவாதி. வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலைபார்த்து அங்குள்ள ஊழல்களைத் தாங்க முடியாமல், 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, மைசூர் திரும்பி, அங்கு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்து வந்தார்.

    தன்னுடைய நன்மைக்காக யாருக்கும் அவர் லஞ்சம் கொடுத்ததில்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்காமலேயே மைசூர் மாநகராட்சி அவருக்காக ஒதுக்கிய வீட்டைப் பெற்றுக்கொண்டு நாணயமாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவியைக் கதர் மட்டும் உடுத்த வற்புறுத்தினார். தானும் கதர்தான் உடுத்துவார். அவரும் அவர் மனைவியும் மிக எளிய உணவையே உண்டு வந்தனர். நான்கு செட் கதர் உடைகள்தான் இருவருக்கும்.

    ஒரு முறை வாரணாசியிலிருந்து மைசூர் திரும்பியபோது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ரயிலில் இரவு தூங்கும் வசதி கிடைக்கவில்லை. உடன் இருந்த நண்பர் லஞ்சம் கொடுத்து வாங்கித் தருவதாகச் சொன்னதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இரவுகள் இருவரும் உட்கார்ந்தே பயணம் செய்தனர். அவருடைய பக்கத்து வீட்டுக்காரராக நாங்கள் பத்து வருடங்கள் வாழ்ந்தபோதிலும் அவரிடமிருந்த எல்லாக்
    காந்தியக் கொள்கைகளையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அவரைப்போல் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்காமல் எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. ஆனாலும் பெரிய அளவில் அம்மாதிரியான தவறுகள் செய்யாமல் காலம் கடத்தி வந்தோம்.

    நாட்டில் நடக்கும் ஊழல்களைக் கண்டு மனம் புழுங்கி வேதனைப்படுவதோடு எங்களால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி வாழ்க்கை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் எப்போதும் உண்டு. சமீபத்தில் இந்தியாவில் பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதனுடைய பின்னணியைச் சொல்ல வேண்டும்.

    சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் தாயும் இறந்துவிட்டார். அதன் பிறகு நாங்கள் சகோதரிகள் மூவரும் எங்கள் தாய் தந்தையர் சொத்துகளைப் பிரித்துக்கொண்டோம். எங்கள் தந்தை, தாய் வாழ்ந்த வீடு – அது எங்கள் தந்தையே கட்டியது – மூன்றில் ஒரு பங்குக்கு, அதாவது என்னுடைய பங்குக்கு மேல் பெறுமாதலால் எங்கள் பெற்றோரின் ஞாபகார்த்தமாக
    நானே வைத்துகொள்ள எண்ணி எங்கள் சகோதரிகள் இருவருக்கும் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானே பெற்றுக்கொண்டேன்.

    எங்கள் சகோதரிகள் இருவரைப் பொறுத்தவரை எல்லாச் சொத்துகளையும் – எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீடு உட்பட – விற்றுப் பணத்தை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்றுவிடுவதை நான் விரும்பவில்லை. எப்படியோ என் சகோதரிகளை சம்மதிக்க வைத்து அதை மட்டும் விற்காமல் பார்த்துக்கொண்டேன்.

    வீட்டைப் பெற்றுக்கொண்டாகிவிட்டது. இனி அதை எங்கள் பெற்றோர் பெயரில் ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தோம். எனக்கு ரொம்ப நாட்களாக நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் ஒரு கிளினிக் நடத்த வேண்டும் என்று ஆசை. வீட்டைக் கொஞ்சம் புதுப்பித்து ஒரு டாக்டரைத் தேடினோம். யாரும் கிடைக்கவில்லை. என் தங்கையோடு படித்த ஒரு டாக்டரிடம் போய் யோசனை கேட்டேன். ஒரு டாக்டரைப் பார்த்துக் கொடுப்பதற்குப் பதில், அந்த ஊரிலேயே வடலூர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தினரின் உதவியோடு ஆசிரமம் ஒன்றை நடத்தும் ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டினார். இதுவும் நல்ல சேவைதான் என்று அவரைப் போய்ப் பார்த்தேன்.

    மிகவும் எளிய தோற்றத்தில் இருந்த, ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க அலுவலரைச் சந்தித்தேன். பல வருடங்களாக எங்கள் ஊரின் ஒரு கோடியில் ஆதரவற்ற குழந்தைகள் இருபது பேரையும் முதிய பெண்மணிகள் ஏழெட்டுப் பேரையும் கொண்ட ஒரு ஆசிரமம் நடத்திவந்தார். எங்கள் வீட்டைப் பற்றிக் கூறியதும் சில குழந்தைகளையும் சில முதியோர்களையும் எங்கள் வீட்டிற்கு மாற்றி அங்கு இன்னொரு ஆசிரமம் நடத்த ஒப்புக்கொண்டார்.

    ஊரின் நடுவில் வீடு இருந்ததால் அவருடைய மற்ற பல சேவைகளுக்கும் அது பயன்படும் என்பதால் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. 500 ரூபாய்தான் வாடகையாகக் கொடுக்க முடியும் என்றார். அப்போது எங்கள் வீட்டிற்குத் தாராளமாக 5000 ரூபாய் வாடகை கிடைத்திருக்கும். ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படப் போவதால் சரி என்றேன். மூன்று வருஷத்திற்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம்.

    எங்கள் துரதிருஷ்டம், ஒப்பந்தம் போட்ட ஒன்றரை வருஷங்களில் அவர் இறந்துவிட்டார். வீட்டை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த மறுபடி ஒருவரைத் தேடினோம். மதுரையில் இயங்கிவரும் ஒரு பிரபல, லாப நோக்கமற்ற சேவை நிறுவனத்தைப் பற்றித் தெரிய வந்தது. அவர்களிடம் நாங்களே நேரில் சென்று எங்கள் வீட்டைக் குறைந்த வாடகைக்கு அவர்களுக்கு – அவர்கள் நல்ல காரியங்கள் செய்வதாக நினைத்து – கொடுப்பதாகக் கூறினோம். அவர்களும் ஒப்புக்கொள்ள, வாடகை ஒப்பந்தம் தயார் செய்தோம்.

    இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டோம். ஏழு வருஷங்கள் கழிந்தன. எட்டாவது வருஷம் அவர்களுக்கும் அவர்களின் கீழே பணியாற்றும் ஒரு அமைப்பிற்கும் நிர்வாகத்தில் மன வேறுபாடு ஏற்பட்டு, அது பெரிய சண்டையாக விஸ்வரூபம் எடுக்க, சேவை நிறுவனத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சாவியை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அப்போது அமெரிக்காவில் இருந்தோம். இரு தரப்பாரும் இது பற்றி முதலில் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ‘வீடு எங்கள் வீடுதானே, இந்தியாவுக்கு வந்ததும் போலீஸிடமிருந்து சாவியைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று நினைத்தோம். வாடகை ஒப்பந்தமும் நாங்கள் திரும்பும் சமயம் முடிவதாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.

    இரு தரப்பாரும் தங்களுக்கே வீட்டைக் கொடுக்கும்படி எங்களிடம் கேட்டனர். முதலில் வீட்டுச் சாவியைப் பெற்றுக்கொண்டு அது பற்றி யோசிக்கலாம் என்று நினைத்து வட்டாட்சி வருமான அதிகாரியிடம் (Revenue Divisional Officer – RDO) (அதற்குள் சாவி, போலீஸிடமிருந்து அவரிடம் போயிருந்தது) சாவியைக் கொடுக்கும்படி கேட்டோம். இருவரின் சாமான்களும் உள்ளே இருப்பதால் அவர்களுக்குள் சாமான்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகே சாவியை எங்களிடம் கொடுக்க முடியும் என்றார் அந்த அதிகாரி.

    சேவை நிறுவனத்தையும் அதன்கீழ் இருந்த அமைப்பையும் வீட்டுச் சொந்தக்காரரான என்னையும் தனக்கு முன்னால் வந்து தங்கள் தங்கள் கட்சியை எடுத்துச் சொல்லும்படி வட்டாட்சி வருமான அதிகாரி கேட்டுக்கொண்டதால் நானும் அந்த அமைப்பும் அவருக்கு முன்னால் ஆஜரானோம். ஆனால் சேவை நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. அதன் பிறகும் பல முறை இந்த அதிகாரி அழைத்தும் அதன் சார்பில் யாரும் வரவேயில்லை. வேண்டுமென்றே காலம் கடத்திக்கொண்டிருந்தார்கள். RDO முன்னால் ஆஜராகாததோடு RDO தங்களிடம் சாவியைக் கொடுக்க வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு வேறு போட்டார்கள். ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி RDO எங்களிடம் சாவியைக் கொடுக்காதவாறு பார்த்துக்கொண்டார்கள். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வாடகை ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. வீடு சட்டப்படி எங்களிடம் வந்திருக்க வேண்டும்.

    ஆறு மாதங்களுக்கு மேல் வீடு பூட்டியிருந்ததால் வீட்டைப் பற்றிய கவலை என்னைப் பிடித்துக்கொண்டது. பத்துத் தடவைக்கு மேல் அழைத்தும் வராத சேவை நிறுவனத்துக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு எங்களிடம் வீட்டுச் சாவியைக் கொடுக்கக் கூடாதா என்று நாங்கள் கேட்டதற்கு, எந்தவிதப் பதிலும் சொல்லாமல் வட்டாட்சி வருமான அதிகாரி காலம் கடத்திக்கொண்டே இருந்தார். நாங்கள் அமெரிக்கா திரும்பும் நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசியாக தமிழ்நாடு அரசில் வேலைபார்க்கும் ஒரு நெருங்கிய உறவினர் எங்களுக்கு உதவுவதாகக் கூறியதும் அவரை எங்கள் பிரதிநிதியாக நியமித்துவிட்டு அமெரிக்கா திரும்பினோம். அவர் எங்கள் சம்மதம் இல்லாமலேயே ஒரு பெரிய தொகையை அந்த அதிகாரிக்கு லஞ்சமாகக் கொடுத்துச் சாவியைப் பெற்றுக்கொண்டார்.

    அதுவரை சாவியை எங்களிடம் கொடுக்காததற்கு அந்த அதிகாரி சொன்ன சால்ஜாப்புகளெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் குறைந்த வாடகைக்கு எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததற்கு இந்தத் தண்டனையா என்று எங்களை நாங்களே நொந்துகொண்டோம்.

    அந்த சேவை நிறுவனம் அதற்குக் கீழ் வேலைபார்த்த அமைப்பிற்கு நாங்கள் வீட்டைக் கொடுத்துவிடுவோமோ என்று நினைத்து வீட்டை எங்களிடம் ஒப்படைப்பதற்குத் தடை ஏற்படுத்தப் பல்வேறு வழிகளைக் கையாண்டது. அவர்களோடு தொடர்பு கொண்ட இன்னும் சில சேவை நிறுவனங்களின் தலைவர்களையும் அந்தச் சேவை நிறுவனத்தின் தலைவரோடு பேசிச் சாவியை எங்களிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய எவ்வளவோ முயன்றும் ஒன்றும் முடியவில்லை. எங்களையும் அவர்களின் கீழ் வேலைபார்த்த அமைப்பையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வருமான வட்டாட்சியர் முன்னால் ஆஜராகாமல் காலம் தாழ்த்திக்கொண்டே போனார்கள். இரண்டு வழக்குகள் – எங்களையும் சேர்த்து – போட்டார்கள். அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் சாவியை எங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று வட்டாட்சி வருமான அதிகாரியும் பிடிவாதமாக இருந்தார். இந்த முறை இந்தியாவில் நாங்கள் இருந்த இரண்டரை மாதங்களில் இரண்டு மாதங்கள் இந்த உளைச்சலிலேயே கழிந்தது.

    எந்தச் சேவை நிறுவனத்திற்கும் எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் படித்துக்கொண்டோம். சேவை நிறுவனங்கள் செயல்படும் லட்சணத்தைப் பாருங்கள். ஊழலை ஒழிப்பதற்காகவே பதவிக்கு வந்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி. அரசு ஆட்சி நடத்தும் காலத்தில் இப்படி நடந்திருக்கிறது. ஊழல் என்னும் அரக்கனை இந்தியாவிலிருந்து ஒழிக்க இறைவனே மனித அவதாரம் எடுத்து வந்தாலும் முடியாதா?

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • இந்தியக் குடியரசின் அவலம்!

    இந்தியக் குடியரசின் அவலம்!

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கர்நாடகாவிலுள்ள தும்கூர் ஜில்லாவில் நடந்த ஒரு சம்பவம் பற்றி, செப்டம்பர் 18 அன்று ‘த ஹிந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  அதைப் படித்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.  தலித் வகுப்பைச் சேர்ந்த, சித்ரதுர்கா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. நாராயணஸ்வாமி, பெம்மனஹள்ளி என்ற மாவட்டத்திலுள்ள, யாதவ சமூகத்தினர் வாழும் ஒரு குடியிருப்பான கொல்லரஹட்டி என்ற இடத்திற்குச் சென்றபோது, அங்கு வாழும் யாதவ இனத்தினர் அந்தக் குடியிருப்புக்குள் அவர் தலித் என்பதால் அவரை விடவில்லையாம்.  இருப்பினும் அவர் இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லையாம்.  ‘இவரை உள்ளே விட மறுத்தவர்கள் மேல் புகார் கொடுப்பது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல’ என்று கூறியிருக்கிறார். மாவட்ட கலெக்டர் ராகேஷ் குமார், மறுபடி இரண்டு நாட்களில் அவர் அங்கே போகப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

    தலித்துகளுக்கு உள்ளேயே கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இந்தக் குடியிருப்பில் அனுமதிக்கப்படுகிறார்களாம்.  ஆனால் நாராயணஸ்வாமி, மடிகா வகுப்பைச் சேர்ந்தவராதலால் அவர் உள்ளே போவதற்கு அனுமதி இல்லையாம்.  தன்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் தன்னை இழிவுபடுத்திய செயல் இது என்று அவர் கூறியிருக்கிறார்.  அந்தக் குடியிருப்பிலுள்ள பூசாரிகள்தான் இவர் அங்கு செல்வதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதை அறிந்திருந்தும் நாராயணஸ்வாமி, ‘மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் மனமாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.  என்னுடைய செயல்களினால் அவர்களுடைய உள்ளங்களில் இடம் பிடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

    யாதவப் பேரவைத் தலைவர் சமாதான முயற்சியாக அந்தக் குடியிருப்பு மக்கள் திரு. நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பார்கள் என்று கூறியதோடு, ‘இந்த ஜனங்கள் எல்லோரும் படிப்பறிவில்லாதவர்கள்; எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  எங்கள் தலைவர்களும் ஸ்வாமி யாதவானந்தாவும் கொல்லரஹட்டிக்குப் போய்வந்திருக்கிறார்கள்.  அங்கு ஜனங்களை நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பது பற்றிச் சொல்லிச் சம்மதிக்க வைத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.  ஹிரியூர் சட்டமன்ற உறுப்பினர் ரூபா சீனிவாசன், நாராயணஸ்வாமியைக் குடியிருப்புக்குள் கூட்டி வருவதாக வாக்களித்திருக்கிறாராம்.

    இந்தக் குடியிருப்பு மக்களுக்கு (பலர் இன்னும் குடிசையில் வாழ்கிறார்களாம்) வீட்டு வசதிகள் செய்து தரவும் வைத்திய வசதி செய்து தரவும் ஒரு மருத்துவரையும் சில அதிகாரிகளையும் தான்னோடு கூட்டிச் சென்ற நாராயணஸ்வாமியைத்தான் அந்தக் குடியிருப்புவாசிகள் உள்ளேவிட மறுத்திருக்கிறார்கள்.  தங்களுக்கு நன்மை செய்ய வருபவரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் அவர் தலித் என்பதால்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘இந்தச் சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது. இதை பி.ஜே.பி. முதல்வர் கண்டிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.  முதல்வர் எடியூரப்பா இந்தச் சம்பவம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  பி.ஜே.பி. மேலிடமும் அப்படியே.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  தலித்துகள், அவர்கள் மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும்கூட அந்த மக்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலை இன்னும் இருக்கிறது.  எப்படிப்பட்ட கேவலம் இது.  இன்னும் தலித்துகள் பற்றிய எண்ணம் மதகுருமார்களிடம் இப்படி இருக்கிறது என்று அறியும்போது இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு குடியரசாக விளங்குவதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

    19-ஆம் தேதியிட்ட  இந்து நாளிதழில் வந்த செய்தி, இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம் என்ன என்றும் இம்மாதிரிப் பல இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குள்ளேயே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்குக்கூட இவர்கள் தலித் என்பதால் அங்குப் போவதில்லை என்றும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறது.

    இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதல்ல.  அங்குள்ள மதகுருமார்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தொகுதிக்குள்ளும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் போவதை விரும்பவில்லை.  இந்த மதகுருமார்களைப் பொறுத்தவரை அவர்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களேயானாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.  அதனால் அவர்களை தொகுதிக்குள் எங்கும் அனுமதிப்பதில்லை.  தலித்துக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடுவதற்குத் தலித் வேட்பாளர்களை நிறுத்தும்போது அவர்களுடைய கட்சியும் அந்த வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியின் தலித் அல்லாத வாக்காளர்களும் ஓட்டளிப்பார்களா என்பதைப் பொறுத்துத்தான் தேர்ந்தெடுக்கிறார்களாம்.  இக்காரணத்தால் வேட்பாளர்களும் தலித் அல்லாத வாக்காளர்களையும், அவர்கள் தங்களை இழிவுபடுத்தினாலும், திருப்திப்படுத்தவே விரும்புகிறார்களாம்.  இந்த வாக்காளர்களில் பலரும் மதகுருமார்கள் நினைப்பதுபோல் தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களை கோவில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.  தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக இந்த வேட்பாளர்களும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்வதில்லை என்பதோடு புகாரும் கொடுப்பதில்லை.

    பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப் பரிவாரங்கள் இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏனென்றால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் இவர்களே.

    யாதவ குலத் தலைவர் சொன்னதுபோல் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பது உண்மையில்லை; பல நூற்றாண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட தலித்துகளுக்கும் இப்போது மற்றவர்களோடு சம உரிமைகள் உண்டு, அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்ற உணர்வுதான் இல்லை.  இந்த உணர்வைத்தான் அவர்களுக்குக் கொண்டுவர வேண்டும்.  இந்தப் புது நியதியை ஒப்புக்கொள்ளாதவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும்.

    தலித்துகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் மற்ற குடிமக்களுக்கு உரிய எல்லா உரிமைகளும் உண்டு என்ற அடிப்படை  ஜனநாயக உணர்வுகூட இல்லாத மக்களுக்கு குடியரசு ஒரு கேடா?

    Share
  • அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா

    அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அக்கரைச் சீமையிலே -அதாவது அமெரிக்காவிலே- வாழும் தமிழ் ஆர்வலர்கள், சிகாகோ நகரின் புறநகரான ஷாம்பர்க்கில் தமிழுக்கு ஒரு பெரிய விழா எடுத்தார்கள்.  மூன்று நிறுவனங்கள் சேர்ந்து எடுத்த விழாவாதலால் சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்கள் ஊர்களில் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் கொண்ட பேரவையை ஃபெட்னா (Federation of Tamil Associations of North America) என்று  ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இதன் 32-ஆவது ஆண்டு விழாவையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது ஆண்டுவிழாவையும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-ஆவது ஆண்டுவிழாவையும் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழுக்கான இந்த மாநாடு, அமெரிக்க சுதந்திர தினமான 2019 ஜூலை நான்கில் துவங்கி ஏழாம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது.  

    முதல் இரண்டு நாட்களும் ஃபெட்னா சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.  கிராமியக் கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, உயர்கலைகளான பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற நிகழ்ச்சிகளோடு இன்று பிரபலமாக விளங்கும்  பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழ்நாட்டிலிருந்து கலைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு அமெரிக்காவிலேயே வாழும் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.  மிகவும் சிரமப்பட்டு இவர்கள் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்தனர்.

    மூன்றாவது, நான்காவது நாட்களில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  இதற்கு வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.  மற்ற நிகழ்ச்சிகளைப் போல அங்கேயே வசிக்கும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். பதிவுக் கட்டணம் 200 டாலர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடி அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்திருந்தாலும் புதிய மண்ணில் தங்கள் ‘அடையாளத்தை’ (identity) நிலைநாட்டிக்கொள்ளும் முயற்சியின் விளைவு என்றாலும் பிறந்த மண்ணிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்துவிட்டிருக்கும் இவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் மீது வைத்திருக்கும் அன்பு மனத்தை நெகிழச் செய்தது.  ஒரு சிலர் தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்று வருகிறார்கள் என்ற செய்தி மனத்துக்கு இதமாக இருந்தது. தங்களைப் பற்றிப் பறைசாற்றிக்கொள்ள மட்டுமே இந்த விழாவை இவர்கள் நடத்தவில்லை, தமிழ்பால் கொண்டுள்ள தூய அன்பாலும் இந்த விழாவை எடுத்துச் செய்தார்கள் என்று அறியும்போது இவர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது. விழா நிர்வாகிகள் விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த நான்கு நாட்களும் மூன்று வேளையும் உணவு படைத்தார்கள் என்பது சிறப்புக்குரிய செயல்.  இது பெரிய சாதனைதான்.

    தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்த சிலர், தமிழின் தொன்மையைப் பற்றி அறிவியல் ஒப்புக்கொள்ளும் ஆதாரம் இல்லாமல் ‘அளந்துவிட்டார்கள்’.  தமிழின்பால் அன்பு செலுத்துவதற்கும் அதன் பெருமையைப் பேசுவதற்கும் தமிழுக்குக் கற்பனையான சிறப்பைக் கூறித்தான் ஆக வேண்டுமா? ஒரு வெளிநாட்டுத் தமிழ் அன்பர் – தமிழ்பால் தீராத காதல் கொண்டவர், தமிழ்ப் பெண்ணை மணந்துகொண்டு இனிதாக இல்லறம் நடத்தி வருபவர், தமிழுலகம் போற்றும் தமிழ் ஆர்வலர் – ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று ஒரு கட்டுரையாளர் படித்துக்கொண்டிருந்தபோது என்னால் அதற்கு மேல் அரங்கத்திற்குள் இருக்க முடியவில்லை’ என்று கூறியதைக் கேட்டபோது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தமிழ்க் காதல் இத்தனை தூரம் போக வேண்டுமா என்று மனத்தில் ஓர் அயர்ச்சி தோன்றியது.  தமிழை எவ்வளவு வேண்டுமானாலும் நேசியுங்கள், ஆனால் தமிழுக்கு இல்லாத ஒன்றைத் தயவுசெய்து கற்பனை செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.

    அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழ்மேல் ஆர்வம் கொண்டிருப்பதோடு தமிழை வளர்க்க அவர்கள் செய்யும் செயல்கள், மனத்தில் இவர்கள் மேல் ஒரு மரியாதையை வளர்க்கிறது.  தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு அதைப் படித்தவர்களுக்கு அதில் எவ்வளவு பாண்டித்யம் இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் வினா-விடை மூலம் காட்டினார்கள்.  இவையெல்லாம் தமிழை அமெரிக்காவில் தக்க வைப்பதற்கான வழிகள்.

    விழாவையொட்டி ஒரு மலர் வெளியிட்டார்கள்.  அதற்குக் கட்டுரை எழுத விரும்புபவர்களை எழுதச் சொன்னார்கள்.  நானும் ஒன்று எழுதினேன். என் கட்டுரை அவர்களுக்குக் கிடைத்த விபரத்திற்கும் பின் அது  மலரில் வெளியாகும் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்கும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.  அந்த இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பியவர் அழகு தமிழில் எனக்கு எழுதியிருந்தார். அமெரிக்கா வாழ் தமிழர்கள் முப்பது, நாற்பது ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பிறகும் தமிழில் இத்தனை புலமை பெற்றவர்களா என்று மிகவும் வியந்து போனேன்.  அந்த மகிழ்ச்சியோடு, தமிழ் பேசப்படும் சூழலிலேயே இல்லாதவர்கள் இத்தனை அழகாகத் தமிழில் எழுதும்போது தமிழ்நாட்டிலேயே வாழும் எத்தனைப் பேர் இப்படி அழகாகத் தமிழை –தொலைக்காட்சியிலேயும் செய்தித்தாள்களிலும் கூட- கையாளுகிறார்கள் என்ற எண்ணம் வராமல் இல்லை.  

    தமிழை வளர்க்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திற்குப் பணம் கொடுப்பவர்கள் இந்தியாவில் தமிழை வளர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்க்கலாம். இந்த விழாவில் நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் குதூகலித்தபோதும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மனத்தை உறுத்தியது.  விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், தம்ளர்கள், கரண்டிகள், முள்கரண்டிகள் ஆகியவை மலைமலையாகக் குவிந்தன.  இவற்றைப் பார்த்தபோது என் கண்ணில் நீர் வராத குறைதான். இவையெல்லாம் எந்தப் புதைகுழியில் போய்ச் சேருமோ, எத்தனை நூற்றாண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு பூமியின் சுற்றுச்சுழலைப் பாதித்துக்கொண்டிருக்குமோ?  தமிழ் எத்தனை காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கும் மேலேயே இவை வாழலாம். யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

    படத்திற்கு நன்றி – https://www.indiaabroad.com

    Share
  • சிங்கப்பூரும் கியூபாவும்

    சிங்கப்பூரும் கியூபாவும்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் நானும் கணவரும் சிங்கப்பூர் சென்றுவந்தோம். சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கழகம் (NIE) சார்பில் நடந்த பேச்சுத் தமிழைத் தமிழ்க் கல்வியில் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தில் ஆலோசனை வழங்கக் கணவர் சென்றபோது நானும் உடன் சென்றேன்.  சிங்கப்பூருக்கு நான் போவது இது இரண்டாவது தடவை. போன தடவை 2011-இல் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அப்போதைவிட இப்போது சிங்கப்பூர் இன்னும் பொருளாதார முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று தெரிகிறது.

    விமான நிலையத்தை விட்டு வெளிவந்ததும் கொஞ்ச தூரத்தில் பெரிய பெரிய பல மாடிக் கட்டடங்கள் இருக்கின்றன.  சாலைகள் எல்லாம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சாலைகளில் வழுக்கிக்கொண்டு ஓடும் அயல்நாட்டுக் கார்கள்.  இந்தியாவில் பெரு நகரங்களுக்கிடையே ஓடும் சொகுசு பஸ்களைவிட நகருக்குள்ளேயே ஓடும் நகர பேருந்துகள் பல மடங்கு சொகுசு தருபவையாக இருக்கின்றன.  ஒரு நகரம், ஒரு நாடு என்று அழைக்கப்படும் ஒரே நகரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் விஸ்தீரணம் சுமார் 300 சதுர மைல்கள். அந்தச் சிறிய இடத்திற்குள் எத்தனை கட்டடங்கள், எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை ஆராய்ச்சி மையங்கள்.   நேர்த்தியான சாலைகள் எல்லாம் மிகச் சுத்தமாக இருக்கின்றன. அவற்றை யார் எப்போது சுத்தப்படுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு அடையாளமும் இல்லை. அவ்வப்போது ட்ரக்குகளில் இருக்கைகள் இல்லாமல் ட்ரக்கின் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் தொழிலாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானிக்க மட்டும்தான் முடியும்  (அமெரிக்காவில் தொழிலாளர்கள் கூட இப்படி ஸீட் பெல்ட் இல்லாமல் வாகனத்தின் தரையில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை. அவர்களும் இருக்கைகளில் அமர்ந்து ஸீட் பெல்ட் போட்டுக்கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்). எங்கே பார்த்தாலும் விதவிதமான பல டிசைன்களில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்ட் கட்டடங்கள். இவற்றில் பல, அந்நிய நாட்டுப் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட கட்டடங்களுக்கிடையே பசுமையாகக் காட்சி தரும் மரங்கள், செடிகொடிகள்.

    நாங்கள் தங்கியிருந்த நான்யாங் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதி, அத்தனை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.  விருந்தினர் விடுதி அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் நுழைவாயிலை அடுத்து வரும் லவுஞ்ச் அத்தனை பெரியது. நுழைவாயிலின் கண்ணாடிக் கதவுகள், கண்ணாடிச் சுவர்கள் எல்லாம் எந்தவிதப் பிசிறும் இல்லாமல் அப்போதுதான் சுத்தப்படுத்தப்பட்டவை போல் காணப்படுகின்றன.  அந்த லவுஞ்சில் அதன் அளவுக்குத் தக்கவாறு பெரிய பூந்தொட்டி. வெளியே நீர் ஊற்றுகள், செடிகொடிகள் இத்யாதி. ஒவ்வொரு தளத்திலும் பிஸ்லேரி போன்ற பெரிய தண்ணீர் பாட்டில்கள். அவற்றிலிருந்து வேண்டியபோது வேண்டிய அளவு சுத்தத் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.

    அந்தச் சிறிய நாட்டில் அத்தனை மியூசியங்கள்.  எல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்போல் எங்கே பார்த்தாலும் வளத்தின் செழுமை.  எங்கு சென்றாலும் சுத்தமான கழிப்பறைக்குப் பஞ்சமில்லை. இந்த வசதியில் அமெரிக்காவைக்கூட சிங்கப்பூர் மிஞ்சிவிடும்போல் தெரிகிறது.  சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் வந்தடைந்ததும் மனத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது பெங்களூரு விமான நிலையக் கழிவறைகள். அத்தனை வித்தியாசம் சிங்கப்பூர் விமான நிலையக் கழிப்பறைகளுக்கும் பெங்களூரு விமான நிலையக் கழிப்பறைகளுக்கும்.

    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சிங்கப்பூர் இன்னும் பிரிட்டனின் காலனியாகத்தான் இருந்தது.  1963-இல்தான் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரண்டும் அடங்கிய பெடரேஷனாக சுதந்திரம் பெற்றது. 1965-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது. இந்தக் குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது.

    மூன்று வருஷங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கர்கள் கியூபாவுக்குப் போக இருந்த சில தடைகளை நீக்கினார்.  இன்னும் சில தடைகள் நீக்கப்பட்டு, கியூபா அமெரிக்கக் கலாச்சரத்தின் தாக்கத்திற்கு உட்படுமுன் கியூபாவைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று வேகவேகமாகப் பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு கியூபாவுக்குப் போய்வந்தோம்.  (மேலும் சில தடைகள் நீக்கப்படாதது மட்டுமல்ல இருந்த தடைகளுக்கும் வலுவேற்றியிருக்கிறார் இப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் என்பது வேறு விஷயம்.)

    கியூபாவின் தலைநகரான ஹவானாவின் விமான நிலையமே மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது.  சுத்தமான கழிப்பறைகள் விமானக் கூடத்தில் கூட இல்லை. கியூபா கரன்சியை வாங்குவதற்கு அத்தனை நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  அதைப் பெறுவதற்கு வரிசையில் நின்ற ஒருவரைத் தவிர மற்றவர்கள் உட்காருவதற்குக்கூட சரியான வசதிகள் இல்லை. நெடுநேரம் காத்திருந்து மிகவும் களைத்துப் போய் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  தங்கியிருந்த வீடு வசதியாக இருந்தாலும் (பெரிய வீடுகள் வைத்திருப்போர் பயணிகள் தங்குவதற்குத் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடலாம் என்று கியூபா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் சில நிபந்தனைகள் உண்டு) களைப்பைப் போக்கிக்கொள்ள பக்கத்தில் எந்த உணவக வசதியும் இல்லை.  இரவு உணவுக்கு வாடகையோடு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டுச் சொந்தக்காரரிடம் ஏற்பாடு செய்துகொண்டோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சிறிய உணவகங்கள் இருந்தனவே தவிர பல இடங்களில் உணவக வசதி எதுவும் இல்லை. சாலைகள் சிங்கப்பூர் அளவுக்கு நேர்த்தியாக இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே இருந்தன.  ஆனால் ஷாப்பிங் மால்கள் எதுவும் கிடையாது. மியுசியங்கள் இருந்தாலும் பிரமாதமாக இல்லை. அமெரிக்கா கியூபாவில் கோலோச்சிய காலத்தில் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பழங்காலக் கார்கள்தான் வீதிகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக எப்படிப் பழுதுபார்த்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வளத்தின் அறிகுறி எங்கேயும் இல்லை.

    கியூபாவை விட்டுக் கிளம்பும்போது ஹவானா விமான நிலையத்தின் தன்மை, மனத்தில் ஒரு சோர்வை உண்டுபண்ணியிருந்தது.  விமானம் அமெரிக்காவின் மயாமிக்குள் நுழைந்தும் அங்கிருந்த கழிப்பறைகள், அமெரிக்காவின் வளத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.  மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை தனியாக ஒரு பெரிய அறையில் இருந்தது. அதற்குள்ளேயே கைகளைக் கழுவிக்கொள்ள சிங்க்கும் இருந்தது.  அந்த அளவு உள்ள வீடுகளில் நம் நாட்டில் நிறையப் பேர் வசிக்கிறார்கள்.

    கியூபாவுக்கும் சிங்கப்பூருக்கும் வளத்தில் ஏன் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்?  முதலாளித்துவவாதிகள் சிங்கப்பூரில் இருக்கும் வளமை, முதலாளித்துவத்தின் மகிமை என்பார்கள். கியூபாவின் வளமின்மை, கியூபா அரசின் கம்யூனிசக் கொள்கையால் வந்தது என்பார்கள்.   அமெரிக்க ஆதிக்கத்தை விட்டு கியூபா விலகியவுடனேயே அமெரிக்கா, கியூபா மீது விதித்த வர்த்தகத் தடைகள், கியூபாவின் வளமின்மைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  சில தடைகளை நீக்குவதற்கு ஒபாமா முயன்றார். அந்தத் தடைகளையெல்லாம் மறுபடி கொண்டுவந்ததோடு புதிதாகச் சில தடைகளையும் கொண்டுவர முயல்கிறார் இப்போதைய இரக்கமற்ற ஜனாதிபதி ட்ரம்ப்.

    சிங்கப்பூர் அத்தனை வளமான நாடாக இருந்தாலும் மனித உரிமைகள் சில அந்தக் குடிமக்களுக்கு மறுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  இந்தியர்கள் சிலர், அதிலும் தமிழர்கள், தங்களுக்குச் சீனர்கள் அளவு சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள். மேலும் எல்லா வளர்ந்த நாடுகளிலும் போல் சிங்கப்பூரிலும் தனக்கென்று வாழ்வதற்கான மேலை நாட்டு அடையாளங்களான திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது போன்ற வழக்கங்கள் தோன்றத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.  

    கியூபாவிலும் சில மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக அமெரிக்கா அலறிக்கொண்டிருக்கிறது.  கியூபாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி அரசை எதிர்த்து எளிதாக எதுவும் சொல்லிவிட முடியாது.  அரசை எதிர்க்கும் உரிமை இரண்டு நாடுகளிலும் கிடையாது. (இந்தியாவிலும் அது மெதுவாகத் தலைதூக்கி வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)  கியூபா மக்கள் பலரோடு பேசும் வாய்ப்பு எங்களுக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால் வாழ்க்கை வசதிகள் நிறைய இல்லையென்றாலும் அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்களா என்று சொல்ல முடியவில்லை.  இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கிடையே ஏன் இத்தனை வித்தியாசங்கள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், பொருளாதார அமைப்பினால் மட்டுமல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

    Share
  • நம் பிரதமரின் கவனத்திற்கு

    நம் பிரதமரின் கவனத்திற்கு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் நம் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  ஆனால் அது எழுத்தளவில் மட்டும் தானா என்ற சந்தேகம் பா.ஜ.க பதவிக்கு வந்த பிறகு பலருக்கு வந்திருக்கிறது.  ஆட்சியில் இரண்டாவது முறையாக அமர்ந்திருக்கும் பா.ஜ.க நடந்துகொள்வதைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் அப்படியொன்றும் ஆதாரமற்றதல்ல என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

    சில நாட்களுக்கு முன்னால், ஜார்கண்டில் ஒரு அப்பாவி முஸ்லீமை அவன் மோட்டார் சைக்கிளைத் திருடினான் என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, ஒரு மரத்தில் 24 மணி நேரம் கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார்கள். அவர்களும் உடனடியாக அந்த அப்பாவியை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. நான்கு நாட்கள் கழித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் இறந்துபோனான். அவனைத் துன்புறுத்தியபோது அவனை ”ஹே ராம், ஹே ஹனுமன்” என்று இரண்டு இந்து தெய்வங்களின் பெயரை உச்சரிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் இந்துத்வவாதக் குழுவைச் சேர்ந்த வன்முறையாளர்கள்.  இவர்கள் வணங்கும் ராமனுக்கும் அனுமானுக்குமே இது அடுக்காது.

    அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆபிரஹாம் லிங்கன் கருப்பர்களுக்கு விடுதலை அளித்த பிறகு தென் மாநிலங்களில் வெள்ளையினவாதிகள் இப்படித்தான் அவர்களுக்குக் கொடுமை இழைத்தார்கள்.  அடிமைகளாக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்களுக்குச் சமமான உரிமைகளா என்று வெள்ளையினவாதிகள் கருப்பர்களைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். செய்யாத குற்றங்களை அவர்கள் மேல் சுமத்தி அவர்களைத் தூக்கில் போட்டார்கள்; அவர்கள் வீடுகளை எரித்தார்கள்; சொத்து வாங்க முயன்றவர்களை அனுமதிக்கவில்லை.  Ku Klux Klan போன்ற வெள்ளையினவாதக் குழுக்கள் தோன்றி இப்படிச் செய்தன.  அவர்களின் சொந்த நாடுகளிலிருந்து அவர்களைத் திருட்டுத்தனமாகக் கூட்டிவந்து கடுமையாக வேலைவாங்கி துன்புறுத்தியதையெல்லாம் மறந்துவிட்டார்கள் இந்த வெள்ளையினவாத வெறியர்கள்.  இது வெள்ளையின ஆதிக்கம்; நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது இந்துமத ஆதிக்கம்.

    நம் இந்துத்வவாதிகளுக்கு முஸ்லீம்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை.  இந்தியாவில் அவர்களுக்குச் சம உரிமைகள் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  முஸ்லீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அப்படிச் சாப்பிடாத பட்சத்திலும் சாப்பிட்டதாகக் கூறி அவர்களைக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்.  இது இந்துமதத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்தேதான் நடந்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேயில்லை அல்லது பெயருக்குத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.  இந்தியாவில் அப்பாவி முஸ்லீம்கள் இந்துத்வவாதிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி அமெரிக்கப் பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸிலும் வந்தது. பிஜேபி பதவிக்கு வந்த பிறகு இது அதிகரித்திருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடும் நாடுகளில் மத நல்லிக்கண நிலைமை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவைச் சாடியிருக்கிறது. எங்களைச் சொல்ல நீ யார்?’ என்பதுதான் பிஜேபியின் பதில். 

    சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யார் துன்புறுத்தப்பட்டாலும் நம் பிரதம மந்திரி அதைக் கண்டுகொள்வதேயில்லை.  வங்காள மாநிலத்தில் ஒரு வயதான கிறிஸ்துவப் பெண் துறவி மானபங்கப்படுத்தப்பட்டபோது கொதித்தெழ வேண்டிய நம் பிரதமர் சாவதானமாக பத்து நாட்கள் கழித்துத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.  இப்படித்தான் பல தடவைகளிலும் நடந்துகொண்டிருக்கிறார். முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியக் குடிமக்கள் இல்லையா?  அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதற்குக் காரணமானவர்களைக் கண்டித்து அதைத் திருத்துவது ஒரு பிரதமரின் கடமை அல்லவா?

    தலித்துக்களுக்கும் இதே கதிதான்.  அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் அவர்களைக் கொடுமைப்படுத்துவதற்கும் முக்கிய காரணம் என்று பேசப்பட்டாலும் மற்ற ஜாதி இந்துக்களுக்குச் சமமாக அவர்களுக்கு உரிமைகள் வழங்க நம் சமூகம் மறுக்கிறது.   அவர்களை இந்து வர்ணாஸிரமத்திற்குள் விட மாட்டோம்; ஆனால் அவர்கள் இந்துமதக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.  இதை அவர்கள் வழிபடும் இறைவனே அனுமதிக்க மாட்டார். 

    ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சி தன் மனதில் வலியை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் பேசியிருக்கிறார்.  உண்மையிலேயே அவர் மனதில் வலி ஏற்பட்டிருந்தால் இனியாவது அந்த மாதிரிச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வாரா?  இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.  இந்தக் குற்றம் புரிந்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால் இனி இம்மாதிரிக் குற்றங்கள் புரிய நினைப்பவர்கள் அப்படி நடந்துகொள்ளத் தயங்குவார்கள் என்று நம்பலாம்.  இதுவரை இம்மாதிரிக் குற்றங்கள் புரிந்தவர்கள் கைதுசெய்யப் படுவதில்லை; அப்படியே கைதுசெய்யப்பட்டாலும் பெயருக்குத் தண்டிக்கப்படுவார்கள்.  இந்த நிலை மாற வேண்டும். தாங்கள் செய்த குற்றங்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைத்தே தீரும் என்று இவர்களை  பயப்பட வைப்பதுதான் இனி அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். செய்வாரா நம் பிரதமர்?  அவரைச் செய்யவிடுவார்களா இந்த இந்துமத வெறியர்கள்?

    Share
  • சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் அவர்களுடைய குடிமக்களுக்கே மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.  சென்ற வருடம் அரசை எதிர்த்து எழுதிய, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வாழ்ந்துவந்த, சவூதி அரேபியாவின் குடிமகனான கஷோகி என்னும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரை துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் கொலைசெய்து அவர் உடம்பை துண்டு துண்டாக்கி அதை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீசி எறிந்திருக்கிறார்கள்.  சவூதி அரசு அதை மறுத்தாலும் உலகம் ஒப்புக்கொள்வதாக இல்லை. இப்போது ஐ.நா.வின் விசாரணைக் குழு, இதை ஆதாரத்தோடு உறுதிப்படுத்தியிருக்கிறது.

    இந்த வருடம் 37 பேர்களை அரசுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கைகள் உடையவர்களாக இருந்தவர்கள் என்றும் அரசுக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டி அவர்களின் தலைகளைச் சீவி மரண தண்டனை கொடுத்தார்கள்.  அது மட்டுமல்ல அந்தத் தலைகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் வைத்தார்கள்.  2016-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவர் உட்பட அரசை விமர்சித்த 47 பேரைத் தண்டித்தது.  சவூதி அரசைப் பொறுத்தவரை அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்.

    இப்போது இதைவிடக் கொடிய பாவச்செயல் ஒன்றைப் புரியக் காத்திருக்கிறார்கள்.. பத்து வயது சிறுவன் ஒருவன் அரசுக்கு எதிராக நடந்த பிரச்சாரத்தில் பங்குகொண்டான் என்றும் துப்பாக்கி வைத்திருந்தான் என்றும் ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருந்தான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டி, 13 வயதில் அவனைக் கைதுசெய்து தனிமைச் சிறையில் அடைத்து அவனுக்குப் பதினெட்டு வயதாகியதும் விசாரணை என்ற ஒன்றை நடத்தி அவன் செய்த ‘குற்றங்களுக்கு’ அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள்.  சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  இவன் சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தக் குற்றங்கள் புரிந்ததாக அவனைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்.  மனித உரிமைகள் மீறப்படும் சவூதி அரேபியாவிலேயே கூட ஒரு சிறுவனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கிய கொடுமை இதுவரை நிகழவில்லை.

    2017-இல் ஐ.நா. சபையின் மனித உரிமை ஹைகமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்த மனித உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு சவூதி அரசு பதிலளிக்கையில் மிகக் கொடிய குற்றங்களுக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று கூறியது.  ஆனால் மனித உரிமைக் கழகம், சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் சிறுபான்மையரான ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறது

    சவூதி அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களுடைய தலைகளைச் சீவி மரண தண்டனை வழங்குகிறார்கள்.  சவூதி அரேபியா, ஒரு முடியரசு.  அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமீர்தான் எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கிறார்.  இப்போது இருக்கும் அரசருக்கு வயதாகிவிட்டதால் அடுத்து அமீராக வரப் போகிற முகம்மது பின் சல்மான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்.  இவர்தான் கஷோகியின் கொலைக்குக் காரணமானவர்.  பல நாடுகளில் இப்போது எந்தவிதக் குற்றங்கள் புரிந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் சவூதி அரேபியாவோ அமீர்,  யாராவது குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானித்தால் அதுதான் தீர்ப்பாகிவிடுகிறது.  நீதிமன்றங்களோ குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமாக வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களோ இருப்பதாகத் தெரியவில்லை.  அப்படியே இருந்தாலும் அவர்கள் பெயருக்குத்தான் இருக்கிறார்கள்.  குற்றம் புரிந்தவர்களைக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிப்பது அமீர்கள்தான்.  இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் ஷியா என்ற முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சவூதியில் சன்னி என்னும் முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்.

    பத்து வயதில் இந்தப் பையனுக்கு என்ன புரிந்திருக்கும்?  பதிமூன்று வயதிலேயே கைதுசெய்யப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோது இவனுடைய மனது எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்?  அதன் பிறகு அவனுடைய மன, உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படிருக்குமே.  இப்போது அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வளவு தூரம் அவன் உணர்ந்திருப்பான்?  இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்.

    கஷோகி கொல்லப்பட்டு அவருடைய உடலைச் சின்னாபின்னமாக்கித் தூர வீசிய பிறகு அமெரிக்கா, சவூதி அரேபியாவோடு எந்த வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால் ட்ரம்ப் அந்த எதிர்ப்புக்கெல்லம் செவிசாய்க்கவில்லை.  ஆயிரம் கோடி டாலர் பெறுமான ஆயுதங்களை சவூதி அரேபியாவுக்கு விற்காவிட்டால் அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம் என்பதுபோல் பேசிவந்தார்.  சவூதி அரேபியா தலைவர்களும் புஷ் குடும்பமும் தனிப்பட்ட முறையிலும் நண்பர்கள்.  இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பமும் சவூதியின் தலைவர்களோடு நெருக்கம் காட்டிவருகிறார்கள்.  ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரும் சௌதியின் வருங்கால அமீரும் நெருங்கிய நண்பர்கள்.  இதுவரை இவர்கள் யாரும் 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது பற்றி வாயே திறக்கவில்லை.

    இப்போது உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருப்பதால் சவூதி அரேபியா, பையனின் சிரச்சேதத்தைப் பன்னிரண்டு வருஷ சிறைவாசமாக மாறியிருக்கிறது.

    மனித உரிமைகளைக் காக்கும் நாடுகளின் தலைவன் (leader of the Free World) என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, மனித உரிமைகளைத் காலில் போட்டு மிதிக்கும் சவூதி அரேபியாவைப் பற்றி என்ன சால்ஜாப்பு சொல்லப் போகிறது?

    ====================================================================

    More: https://theintercept.com/2019/06/16/saudi-crown-prince-child-execution/

    Pic courtesy: https://en.wikipedia.org/wiki/Mohammad_bin_Salman

    Share
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    நேத்தன்யாஹுவுக்கு மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்ட தேர்தல் வெற்றி இப்போது செல்லாததாகிவிட்டது.  மே மாதம் 29-ஆம் தேதி நள்ளிரவுக்குள் மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற கெடு கடந்துவிட்டது.  அவருடைய கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன.  இன்னும் 26 இடங்களைப் பெற்று அமைச்சரவை அமைப்பதற்கு முடியாமல் போயிற்று. இஸ்ரேல் பார்லிமென்டில் மொத்தம் 120 இடங்கள்.  மந்திரிசபை அமைப்பதற்கு 61 இடங்களாவது வேண்டும்.  அதைக்கூட அவரால் பெற முடியவில்லை.  எப்படியோ முயன்று மற்றக் கட்சிகளோடு சேர்ந்து 60 இடங்களைப் பிடித்துவிட்டும் இன்னும் ஒரேயொரு சீட் வேண்டியிருந்ததால் மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று என்று சொல்வோமே அப்படித்தான் நடந்திருக்கிறது.

    நேத்தன்யாஹு மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் அவருடைய மந்திரிசபையில் ராணுவ மந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்த லிபெர்மேன் என்பவர்.  மால்டோவாவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய இவர்.  நேத்தன்யாஹுவுக்கு உதவியாளராக அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறி இப்போது கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு அரசியலில் உயர்ந்திருக்கிறார்.  இப்போது நேத்தன்யாஹுவுக்கு மிகவும் வேண்டாதவராக மாறியிருக்கிறார்.

    நேத்தன்யாஹு மேல்மூன்று வழக்குகள் – ஊழல் புரிந்தது, லஞ்சம் வாங்கியது, நம்பிக்கைத் துரோகம் செய்ததுஎன்று பலவகைக் குற்றச்சாட்டுக்கள் – இருக்கின்றன.  இப்படி வழக்குகளில் சிக்கிக்கொண்டவருக்கு ஆதரவு கொடுக்க சிறிய கட்சிகள் எதுவும் முன்வரவில்லை.  இதைச் சாக்காக வைத்து நேத்தன்யாஹுவின் லிக்கூட் கட்சி மந்திரிசபை அமைத்து அவருக்கு முதல் மந்திரி ஆகும் வாய்ப்பைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் லிபெர்மேன் என்பது நேத்தன்யாஹுவின் வாதம்.

    அவருக்கும் நேத்தன்யாஹுவுக்கும் இடையே இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேலில் 18 வயது முடிந்த ஆண், பெண் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்.  யூத மத்தத்தின் வேதமான தோராவைப் படிப்பவர்களுக்கும் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் மாத்திரம் இதிலிருந்து விலக்கு உண்டு.  அவர்களுக்கு விலக்களிக்கத் தேவையில்லை என்று கூறி ஒரு சட்டத்தை இயற்ற லிபெர்மேன் ஒரு மசோதாவைக் கொண்டுவந்தார்.  இந்தச் சட்டம் நிறைவேறாமல் தடுக்கும் கூட்டணி அரசோடு எப்படி சேருவது என்பது லிபெர்மேனின் வாதம்.  இப்போது இவருக்குத் தனியாக ஒரு கட்சி இருக்கிறது.அந்தக் கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைத்திருந்தது.  (இஸ்ரேலில் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்)

    நேத்தன்யாஹு முதல் முறையாக 1996-1999 வரை இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்தவர்.  அதன் பிறகு 2009 முதல் மார்ச்சில் நடந்த தேர்தல்வரை பிரதம மந்திரியாக இருந்தவர். அடுத்த தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார்.  தேர்தலில் 35 சீட்டுகளே பெற்ற இவர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த பிறகு இப்போது முதல் முறையாக மந்திரிசபை அமைக்க முடியாமல் போனது.  இவரோடு கூட்டுச் சேர வந்த கட்சிகளின் மூலம் இவருக்கு 60 சீட்டுகள்தான் கிடைத்தது.  மே மாதம் 27 இரவு 12 மணிவரை இருந்த கெடுவிற்குள் இவரால மந்திரிசபை அமைக்க முடியாமல் போனதால் கெடு முடிந்தவுடனேயே பார்லிமென்டைக் கலைத்துவிட்டார்.  ஜனாதிபதி வேறு ஏதாவது கட்சியை மந்திரிசபை அமைக்க முயற்சிக்குமாறு கேட்டுவிடுவாரோ என்று நினைத்துத்தான் அவசரமாகப் பார்லிமென்டைக் கலைத்தார்.

    பார்லிமென்டைக் கலைத்துவிட்டு லிபெர்மேன் தன்னுடைய கூட்டணியில் சேர்ந்திருந்தால் தான் மந்திரிசபை அமைத்திருக்கலாம் என்றும் தனக்குப் பிரதம மந்திரி பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தன் அவர் நேத்தன்யாஹு கூட்டணியில் சேரவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

    மே மாதம் 30-ஆம் தேதி இரவு 12 மணியோடு அமைச்சரவை அமைக்க நேத்தன்யாஹுவுக்குக் கொடுத்த கெடு முடிந்துவிட்ட நிலையில் அன்று காலை ட்ரம்ப்பின் மருமகனும் மத்திய கிழக்கு ஆலோசகருமாகிய ஜேரட் குஷ்னரும் வெள்ளை மாளிகை அதிகாரியுமான ஜேஸன் கிரீன்ப்ளாட்டும் அடுத்த மாதம் பாஹ்ரைனில் நடக்கவிருக்கும் பாலஸ்தீன அமைதிக்கான திட்டங்களை வகுக்கப் போகும் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெருசலேம் வந்திருக்கிறார்கள்.  அப்போது இரவு கெடு முடிந்துவிட்டதைப் பற்றிக் குறிப்பிடுகையில்,‘நேற்று இரவு ஏதோ ஒரு சிறிய சம்பவம் நடந்திருக்கிறது.  அது பற்றி ஒன்றும் கவலையில்லை.  நாங்கள் தொடர்ந்து செயலாற்றுவோம்’ என்று நேத்தன்யாஹு குறிப்பிட்டார்.  காலை தொலைக்காட்சி அறிக்கையில் இஸ்ரேல் தான் இல்லாமல் இயங்க முடியாது என்பது போலவும் தனக்கு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரின் ஆதரவு இருப்பது போலவும் பேசினார்.  தன்னுடைய சொந்த நலனுக்காக லிபெர்மேன் வலதுசாரி அரசைக் கவிழ்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த கேன்ட்ஸ் கட்சியும் 35. சீட்டுகளைப் பெற்றிருக்கிறது.  நேத்தன்யாஹு பார்லிமென்ட்டைக் கலைக்காமல் இருந்திருந்தால் அவர் அமைச்சரவையை அமைத்திருக்கலாமோ என்னவோ.  நேத்தன்யாஹு மேல் வழக்கு நடக்கவிருப்பதால் நேத்தன்யாஹுவோடு சேர்ந்து அமைச்சரவை அமைக்க அவர் விரும்பவில்லை.

    செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு அடுத்த தேர்தல் நடப்பதாக இருக்கிறது.  சென்ற தேர்தலில் ஜெயித்திருந்தால் பதவியில் இருக்கும் பிரதம மந்திரியின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று ஒரு சட்டம் கொண்டுவர நேத்தன்யாஹு திட்டம் போட்டிருந்தார்.  இப்போது அது முடியாமல் போய்விட்டது.  இனி செப்டம்பர் 17 தேர்தலில் ஜெயித்தால் அதை முயன்று பார்க்கலாம்.  ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஏனெனில் அக்டோபரில் நேத்தன்யாஹு மேல் இருக்கும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேர்தலில் ஜெயித்தாலும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவகாசம் இருக்குமா என்று தெரியவில்லை.

    இஸ்ரேலில் இன்னொரு தேர்தல் நடந்து யார் பதவிக்கு வரப் போகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  எல்லா அரசியல் தலைவர்களும் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள்.  லிபெர்மேன் என்ன சொல்கிறார் தெரியுமா?  காஸாவை இன்னும் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமாம்.  இவர்கள் பயங்கரவாதிகள் என்று கணிக்கும் எல்லோருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமாம்.  இப்படித்தான் எல்லா இஸ்ரேல் தலைவர்களும் நினைக்கிறார்கள்.  யார் வந்தாலும் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை.  இஸ்ரேல் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒரு காந்திஜி தோன்றினால்தான் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    Share
  • கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதர் டேவிட் ப்ரீட்மேன் கூறியிருக்கிறார். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகச் சொல்வதற்குப் பதில் இப்படிச் சொல்கிறார் போலும். இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாகச் சொல்வதால் இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென்று சொல்கிறாரா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.

    பைபிளை அப்படியே நம்பும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றி ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் ஒரு விழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். (யேசுவைக் கொன்றவர்கள் என்ற கோபம் யூதர்கள் மேல் இவர்களுக்கு சென்ற நூற்றாண்டுவரை இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தபோது யேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்கள் யூதர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று யூதர்கள் வெளியில் வர மாட்டார்களாம். இப்போது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்பட்ட பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது ஒரு காரணம். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது, பெத்லஹேமில் பிறந்த இயேசு மாண்டது ஜெருசலேமில். ஜெருசலேம் இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் தாங்கள் அங்கு இடையூறின்றிப் போய்வரலாம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று நான் சொல்வேன்.) இப்போது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு வலுப்பட்டிருப்பதாலும் இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாலும் இஸ்ரேல் மிகவும் பலமுள்ளதாக ஆகிவருவதாக அவர் கூறியிருக்கிறார்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக அவர் கூறியதாலேயே அமெரிக்கா இஸ்ரேலுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்று சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணங்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியிருப்பது; பாலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. அளித்து வரும் உதவியில் தன் பங்கைக் குறைத்திருப்பது; வெஸ்ட் பேங்கை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று கூறுவதை நிறுத்திவிட்டது; வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீனத்தின் அமெரிக்க உறவு அலுவலகத்தை மூடிவிட்டது; ஜெருசலேமில் இருந்த பாலஸ்தீனர்களுக்கான துணைத் தூதரகத்தை இஸ்ரேலுக்கான தூதரகத்தோடு இணைத்துவிட்டது. இப்படிப் பல. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன நாளிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதும் இஸ்ரேலுக்கு புதிய சலுகைகள் வழங்குவதும் அமெரிக்காவின் வழக்கமாயிற்று.

    ப்ரீட்மேனின் இந்தக் கருத்தைப் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல இஸ்ரேலில் ப்ரீட்மேனுக்கு முன்னால் அமெரிக்காவின் தூதராக இருந்த டேனியல் குர்ட்ஸெர்கூட வரவேற்கவில்லை. இவர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் காலத்திலும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதராக இருந்திருக்கிறார். ‘அமெரிக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் தூதரான இவர் தன் பணிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களாகக் கூறிவருகிறார்’ என்றார். பாலஸ்தீனர்களுக்கு ப்ரீட்மேன் கூறியது மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரான இவர், அமெரிக்கர்களின் நலன்களைவிட இஸ்ரேலின் நலன்களில்தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

    பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) அதிகாரிகளில் ஒருவர், ‘ப்ரீட்மேன் இப்படிக் கூறியிருப்பதால், ‘பாலஸ்தீனர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருபோதும் அமெரிக்கா அப்படி நினைத்ததில்லை’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

    இந்தப் பதவிக்கு ட்ரம்ப்பால் நியமிக்கப்படுவதற்கு முன் ப்ரீட்மேன், ட்ரம்ப்பின் திவால் வழக்கறிஞராக இருந்தார்; பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியபோது அதை வெகுவாக ஆதரித்ததோடு நன்கொடைகளும் வழங்கியவர் இவர். இஸ்ரேல் இப்படிக் குடியிருப்புகளைக் கட்டியது, அகில உலக சட்டத்திற்குப் புறம்பானது என்று பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. சட்டம் படித்த இவர், இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

    ஓராண்டுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியபோது இருபது பேர்களைத் தவிர பாலஸ்தீனர்கள் வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அன்று ஜெருசலேம் ஓட்டல்களில் தாங்கள் சாப்பிட்ட உணவு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேசினார்களேயொழிய தூதரகத்தை மாற்றியது பற்றி யாரும் பேசவில்லை என்றும் வாய்கூசாமல் கூறுகிறார். அன்று இதை எதிர்த்து காஸாவில் கலவரம் நடந்து 60 பேர் கொல்லப்பட்டது உண்மை என்றாலும், நடந்த கலவரங்களுக்கும் தூதரகம் திறக்கப்பட்டதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்கிறார். எப்படிப் பொய் சொல்கிறார்! திறப்புவிழா நிகழ்ச்சிகளை இருட்டடிப்பதற்காகத்தான் காஸாவில் வன்முறை நிகழ்ந்தது என்பதே உண்மை.

    இப்படிப் பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் தன்னால் முடியுமென்றால் பாலஸ்தீனர்களை இன்னும் ஒடுக்குவாராம். இன்னொரு மனித இனத்திற்கு அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலைப் பாராட்டிக்கொண்டிருக்கும் இவர் எப்படி இஸ்ரேல் கடவுள் பக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். கடவுள் என்று இவர் யாரைச் சொல்கிறார்? கடவுள் படைத்த மனித இனங்களில் ஒன்றைத் தீர்த்துக் கட்டுவதென்று முடிவு எடுத்திருக்கும் இவருக்குக் கடவுள் பெயரைச் சொல்லக்கூட அருகதை இல்லை.

    Share
  • ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு

    ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரையாற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அடிக்கடி பல சிறப்பு விருந்தனர்களை வரவழைப்பதுண்டு. நேற்று (மே 10) தெற்காசியத் துறையின் சார்பில் நம் தேசத்தந்தை காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை வரவழைத்திருந்தார்கள். இவர் இல்லினாய் மாநிலத்தில் இருக்கும் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் 22 வருஷங்களாகப் பணியாற்றுகிறார். இவர் சிகாகோ பலகலைக்கழகத்திற்கு வருகிறார் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து எனக்குள் மகிழ்ச்சி பரவியது. காந்திஜி என்னுடைய முதல் ஹீரோ. இரண்டாவதாக போப் பிரான்சிஸ். இவர்கள் இருவரிடமும் நான் எந்தக் குறையும் காண்பதில்லை. யாரும் இவர்களைப் பற்றி என்ன குறைவாகச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை. மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு எழுத்தாள நண்பர் ஒருவர் தான் பெங்களூரில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் தேசத்திற்காக வசூலித்த பணத்தை அவர்களின் பிரதிநிதியாகக் காந்திஜியிடம் கொடுத்ததாகக் கூறுவார். அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்காத குறையை இப்போது அவருடைய பேரன்களில் ஒருவரைப் பார்த்துத் தீர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசை. இரண்டாவதாக அந்த மகானின் வழியில் வந்தவர்கள் எப்படி அமெரிக்கா போன்ற நாட்டில் வசிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வம்.

    நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர் உரையாற்றப் போகும் துறை ஒரு மைலில் இருக்கிறது. என்னால் அவ்வளவு தூரம் சிரமமில்லாமல் நடக்க முடியாது. பேருந்து வசதியும் சரியாக இல்லை. வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிவரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் எங்கும் காரை நிறுத்த முடியாது. காரில் போனால் காரை நிறுத்திவிட்டு அரை மைல் தூரமாவது நடக்க வேண்டும். இதற்கு முதலிலேயே வீட்டிலிருந்தே நடந்துபோய்விடலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால் வெளியில் சென்ற பிறகுதான் தெரிந்தது அதிகமான குளிரோடு பலத்த காற்றும் வீசுகிறதென்று. நான் எவ்வளவு தூரம் அவரைப் பார்க்கப் பிரியப்படுகிறேன் என்று அறிந்திருந்த என் கணவர் காரில் என்னை அந்தக் கட்டடத்தின் அருகில் இறக்கிவிட்டுவிட்டு வேறு எங்காவது, முடிந்தவரை பக்கத்தில், கிடைக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வருவதாகச் சொன்னார். அதைவிட வேறு வழி எதுவும் எனக்கும் தெரியவில்லையாதலால் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டேன்.

    ஹாலுக்குள் நுழைந்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவருடைய உரை மதியம் 2 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. அவருடைய பேச்சில் எதையும் விட்டுவிடக் கூடாது என்று நான் விரும்பியதாலும்ஹால் முழுவதும் நிரம்பி வழியும் என்று நான் நினைத்ததாலும் இருபது நிமிடங்கள் முன்பாகவே அங்கு இருந்தேன். ‘இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் இன்னும் பலர் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நேரம் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சிலர்தான் வந்தார்கள், நான் நினைத்த மாதிரிப் பலர் வரவில்லை. காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அப்போதே அங்கிருந்தார்.

    இவர் காந்திஜிக்கு மட்டும் பேரன் இல்லை; தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கும் பேரன். ராஜ்மோகனின் தந்தை தேவதாஸ் காந்திஜியின் நான்காவது மகன்; தாய் லட்சுமி ராஜாஜியின் மகள். தாத்தாக்கள் இருவரைப் போலவே இவரும் கூர்புத்தியையும் எளிமையையும் அணிகலன்களாகக் கொண்டிருக்கிறார். இவர் மனித உரிமைகள் பற்றிய பல அமைப்புகளோடு தொடர்பு கொண்டவர். ‘மாற்றத்திற்கான முதல் முயற்சி’(Initiatives of Change) என்னும் அமைப்போடு அரை நூற்றாண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறார். இதன் அனைத்துலக அமைப்பின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்குப் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தாத்தாக்கள் பற்றியும் வல்லபாய் போட்டேல் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் சாதனைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இன்னும் பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் ஜாதிகளுக்கிடையே ஒற்றுமைக்காகவும் பாடுபட்டிருக்கிறார்.

    இவர் பற்றிய விபரம் இங்கே:

    https://www.law.duq.edu/sites/default/files/documents/DeansOffice/Rajmohan%20Gandhi%20-%20bio%20edited.pdf

    அவர் எழுதி 2018-ல் வெளியான Modern South India: A History from the 17th Century to our Times என்ற புத்தகத்தைப் பற்றித் தலைமை தாங்கிய பெண் கேள்விகள் கேட்க இவர் அதற்குப் பதில் அளித்தார். கடைசியாக ‘இப்போது இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். கொஞ்ச நேரம் குரல் எழும்பவில்லை; அவரால் பேச முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு,‘என்னைப் பொறுத்தவரை நான் இளமையாக இருந்தபோது இருந்த இந்தியாவில்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.

    அவரோடு நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலே குறிப்பிட்டிருக்கும் அவருடைய புத்தகத்தின் பிரதி ஒன்றை ஹாலிலேயெ வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டோம்.

    இந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தில் ஒரேயொரு விஷயம்தான் மனதை நெருடிக்கொண்டிருந்தது. ராஜ்மோகன் காந்திக்கும் என்னுடைய நெருடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கம்போல் எல்லாக் கூட்டங்களிலும்போல் நம் பருப்பு வடையான சிறு தீனியோடு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பார்த்தாலே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இவை எல்லாம் புதைகுழிக்குள் போகப் போகின்றனவே என்று நினைத்து மனம் சஞ்சலப்படும். ராஜ்மோகன் காந்திக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்திருப்பார்கள் போலும். அது மேஜை மீது இருந்தது. அவர் அதிலிருந்து தண்ணீர் குடித்த மாதிரித் தெரியவில்லை. கூட்ட அமைப்பாளர்கள் அவருக்கு ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்தபோது அதை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அதை உபயோகிக்கவேயில்லை.

    ‘நுகர் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் எப்படிக் காலம் தள்ளுகிறீர்கள்?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ‘எல்லா இடங்களிலும் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவர முடியும்’ என்றார்.

    நம் நாட்டின் அரசியல்வாதிகளும் அவர்களுடைய வாரிசுகளும் அடிக்கும் கொள்ளைகளையும் கூத்துக்களையும் தினசரி பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு இவரைப் பார்த்ததும் அந்த நாளைய நினைவுகள் வராமல் இல்லை. தினமும் பொய்களாக உதிர்க்கும் ட்ரம்ப்பின் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு நேற்றைய பொழுது புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

    Share
  • இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றி பெற்றுவிட்டார்; இது என்ன வெற்றி!?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இது என்ன வெற்றி? 120 அங்கத்தினர்கள் உள்ள பாராளுமன்றத்தில் 35 இடங்களே பெற்றிருக்கிறார். இது ஓட்டு வங்கியில் 34 சதவிகிதம்தான். இன்னொரு தேர்தலைத் தவிர்ப்பதற்காகப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இடங்கள் பெற்றுவிட்டால் அந்தக் கூட்டுக் கட்சி அரசு அமைக்க முடியும். (இந்தியாவில் கர்நாடகாவில் 2018-ஆகஸ்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களே பெற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்ததுபோல்தான். 104 இடங்கள் வாங்கிய பிஜேபி 78 இடங்கள் வாங்கிய காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பாததால் ஜனதா தளத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது.)

    மற்றக் குட்டிக் கட்சிகள் வெள்ளை-நீலம் கட்சியின் தலைவர் கேன்ட்ஸோடு (இந்தக் கட்சிக்கும் 35 சீட்டுகள் கிடைத்திருக்கின்றன) சேர விரும்பாததால் நேத்தன்யாஹுவோடு சேர முடிவு எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நேத்தன்யாஹுவுக்கு அரசு அமைக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

    நேத்தன்யாஹு வன்மம் படைத்தவர்; தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்குவதில் கில்லாடி; ஊழல் புரிந்தவர்; பாலஸ்தீனர்களின் உரிமைகள் என்று வரும்போது அவர்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பவர். இவருக்கு ஐந்தாவது முறையாக – இஸ்ரேலின் ஸ்தாபகர் பென்-குரியனுக்குக் கிடைத்ததைவிட அதிக முறை – ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. ஊழல்கள் புரிந்திருக்கிறார் என்று இவர்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதம மந்திரியாகிவிட்டால் பிரதம மந்திரிக்குத் தண்டனை வழங்க முடியாது என்று சட்டம் இயற்றிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    இது இஸ்ரேலுக்கு சோதனையான சமயம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. அவர் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்கப் போவதால் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு அமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது, இஸ்ரேலின் ஜனநாயகத் தன்மைக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு வந்திருக்கிறது, அமெரிக்க யூதர்களுக்கும் இஸ்ரேலின் வலதுசாரி அரசுக்கும் இடையிலான உறவு முறிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறது.

    நேத்தன்யாஹு காலத்தில் இஸ்ரேல் நிறையச் சாதனைகள் படைத்திருக்கிறது என்பது உண்மைதான். இவையெல்லாம் அமெரிக்காவின் உதவியால்தான் என்பதை மறுக்க முடியாது. இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்தே அமெரிக்காவும் அமெரிக்க யூதர்களும் இஸ்ரேலுக்கு நிறையப் பண உதவியும் தொழில்நுட்ப உதவியும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ட்ரம்ப் உதவியும் நிறைய அளவில் கிடைத்திருக்கிறது. இரண்டு crooks-களும் ஒன்று
    சேர்ந்திருக்கிறார்கள். இது உலகுக்கே நல்லதல்ல.

    இதுவரை அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக உலகுக்குக் காட்டிக்கொண்டாவது இருந்தது. இப்போது அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத சில காரியங்களை
    ட்ரம்ப் செய்திருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார். போரில் சிரியாவிடமிருந்து கைப்பற்றிய, இதுவரை ஆக்கிரமித்திருந்த கோலன் ஹைட்ஸை இஸ்ரேலின் இறையாண்மைக்கு நேத்தன்யாஹு உள்ளாக்கிக்கொண்டபோது நேத்தன்யாஹுவின் வேண்டுகோளுக்கு இணங்க ட்ரம்ப்பும் அதை அங்கீகரித்தார். கிழக்கு ஜெருசலேமிலிருந்த அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடிவிட்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் நேத்தன்யாஹு ஓட்டுகளைப் பெற, பாலஸ்தீனர்களுக்குரிய இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் கட்டியிருக்கும் குடியிருப்புகளை இஸ்ரேலின் ஆளுகைக்குக் கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தார். பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கை இஸ்ரேல் போரில் பிடித்துக்கொண்டது முதல் தவறு. அதில் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் கட்டியது இரண்டாவது தவறு. இப்போது அதை இஸ்ரேலின் வசமாக்கிக்கொள்ள நினைப்பது அதைவிடப் பெரிய தவறு. இது சர்வதேசச் சட்டத்திற்கே விரோதமானது. இப்படிச் செய்தால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகும் சாத்தியமே இல்லை.

    இஸ்ரேல் உருவானதிலிருந்து செய்த அட்டகாசங்களையெல்லாம் கண்டித்து ஐ.நா. பொதுச்சபை கொண்டுவந்த எந்தத் தீர்மானத்தையும் இஸ்ரேல் மதிக்கவில்லை; அது அப்படி நடந்துகொள்வதற்கு அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அந்தத் தீர்மானங்களை முறியடித்துவிடுவதுதான் காரணம். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் கூடிப் பேசி இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லைகளை முடிவெடுக்க வேண்டும், இஸ்ரேலால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட  பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும், ஜெருசலேமின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று 1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தம் போட்ட எந்த ஷரத்தையும் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக 1996-இல் பதவியேற்ற நேத்தன்யாஹு நிறைவேற்றவில்லை.

    ஆஸ்லோ ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு நேத்தன்யாஹுதான் காரணம். நேத்தன்யாஹு பிரதம மந்திரியாகப் பதவியேற்ற பிறகு ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்தது போல் இஸ்ரேலும் ஒரு இன ஒதுக்கல் நாடாக மாறிவிடும்; அதில் பாலஸ்தீனர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருக்காது. எல்லாப் பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீனத்தை விட்டே விரட்டிவிட்டு, இஸ்ரேல் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரு ஜனநாயக நாடாக விளங்க வேண்டும் என்ற நேத்தன்யாஹுவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

    Share