நம் பிரதமரின் கவனத்திற்கு

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் நம் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  ஆனால் அது எழுத்தளவில் மட்டும் தானா என்ற சந்தேகம் பா.ஜ.க பதவிக்கு வந்த பிறகு பலருக்கு வந்திருக்கிறது.  ஆட்சியில் இரண்டாவது முறையாக அமர்ந்திருக்கும் பா.ஜ.க நடந்துகொள்வதைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் அப்படியொன்றும் ஆதாரமற்றதல்ல என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

சில நாட்களுக்கு முன்னால், ஜார்கண்டில் ஒரு அப்பாவி முஸ்லீமை அவன் மோட்டார் சைக்கிளைத் திருடினான் என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, ஒரு மரத்தில் 24 மணி நேரம் கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார்கள். அவர்களும் உடனடியாக அந்த அப்பாவியை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. நான்கு நாட்கள் கழித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் இறந்துபோனான். அவனைத் துன்புறுத்தியபோது அவனை ”ஹே ராம், ஹே ஹனுமன்” என்று இரண்டு இந்து தெய்வங்களின் பெயரை உச்சரிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் இந்துத்வவாதக் குழுவைச் சேர்ந்த வன்முறையாளர்கள்.  இவர்கள் வணங்கும் ராமனுக்கும் அனுமானுக்குமே இது அடுக்காது.

அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆபிரஹாம் லிங்கன் கருப்பர்களுக்கு விடுதலை அளித்த பிறகு தென் மாநிலங்களில் வெள்ளையினவாதிகள் இப்படித்தான் அவர்களுக்குக் கொடுமை இழைத்தார்கள்.  அடிமைகளாக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்களுக்குச் சமமான உரிமைகளா என்று வெள்ளையினவாதிகள் கருப்பர்களைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். செய்யாத குற்றங்களை அவர்கள் மேல் சுமத்தி அவர்களைத் தூக்கில் போட்டார்கள்; அவர்கள் வீடுகளை எரித்தார்கள்; சொத்து வாங்க முயன்றவர்களை அனுமதிக்கவில்லை.  Ku Klux Klan போன்ற வெள்ளையினவாதக் குழுக்கள் தோன்றி இப்படிச் செய்தன.  அவர்களின் சொந்த நாடுகளிலிருந்து அவர்களைத் திருட்டுத்தனமாகக் கூட்டிவந்து கடுமையாக வேலைவாங்கி துன்புறுத்தியதையெல்லாம் மறந்துவிட்டார்கள் இந்த வெள்ளையினவாத வெறியர்கள்.  இது வெள்ளையின ஆதிக்கம்; நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது இந்துமத ஆதிக்கம்.

நம் இந்துத்வவாதிகளுக்கு முஸ்லீம்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை.  இந்தியாவில் அவர்களுக்குச் சம உரிமைகள் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  முஸ்லீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அப்படிச் சாப்பிடாத பட்சத்திலும் சாப்பிட்டதாகக் கூறி அவர்களைக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்.  இது இந்துமதத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்தேதான் நடந்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேயில்லை அல்லது பெயருக்குத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.  இந்தியாவில் அப்பாவி முஸ்லீம்கள் இந்துத்வவாதிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி அமெரிக்கப் பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸிலும் வந்தது. பிஜேபி பதவிக்கு வந்த பிறகு இது அதிகரித்திருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடும் நாடுகளில் மத நல்லிக்கண நிலைமை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவைச் சாடியிருக்கிறது. எங்களைச் சொல்ல நீ யார்?’ என்பதுதான் பிஜேபியின் பதில். 

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யார் துன்புறுத்தப்பட்டாலும் நம் பிரதம மந்திரி அதைக் கண்டுகொள்வதேயில்லை.  வங்காள மாநிலத்தில் ஒரு வயதான கிறிஸ்துவப் பெண் துறவி மானபங்கப்படுத்தப்பட்டபோது கொதித்தெழ வேண்டிய நம் பிரதமர் சாவதானமாக பத்து நாட்கள் கழித்துத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.  இப்படித்தான் பல தடவைகளிலும் நடந்துகொண்டிருக்கிறார். முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியக் குடிமக்கள் இல்லையா?  அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதற்குக் காரணமானவர்களைக் கண்டித்து அதைத் திருத்துவது ஒரு பிரதமரின் கடமை அல்லவா?

தலித்துக்களுக்கும் இதே கதிதான்.  அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் அவர்களைக் கொடுமைப்படுத்துவதற்கும் முக்கிய காரணம் என்று பேசப்பட்டாலும் மற்ற ஜாதி இந்துக்களுக்குச் சமமாக அவர்களுக்கு உரிமைகள் வழங்க நம் சமூகம் மறுக்கிறது.   அவர்களை இந்து வர்ணாஸிரமத்திற்குள் விட மாட்டோம்; ஆனால் அவர்கள் இந்துமதக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.  இதை அவர்கள் வழிபடும் இறைவனே அனுமதிக்க மாட்டார். 

ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சி தன் மனதில் வலியை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் பேசியிருக்கிறார்.  உண்மையிலேயே அவர் மனதில் வலி ஏற்பட்டிருந்தால் இனியாவது அந்த மாதிரிச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வாரா?  இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.  இந்தக் குற்றம் புரிந்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால் இனி இம்மாதிரிக் குற்றங்கள் புரிய நினைப்பவர்கள் அப்படி நடந்துகொள்ளத் தயங்குவார்கள் என்று நம்பலாம்.  இதுவரை இம்மாதிரிக் குற்றங்கள் புரிந்தவர்கள் கைதுசெய்யப் படுவதில்லை; அப்படியே கைதுசெய்யப்பட்டாலும் பெயருக்குத் தண்டிக்கப்படுவார்கள்.  இந்த நிலை மாற வேண்டும். தாங்கள் செய்த குற்றங்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைத்தே தீரும் என்று இவர்களை  பயப்பட வைப்பதுதான் இனி அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். செய்வாரா நம் பிரதமர்?  அவரைச் செய்யவிடுவார்களா இந்த இந்துமத வெறியர்கள்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.