குடும்பம் ஒரு தாம்புக் கயிறு

-நிர்மலா ராகவன், மலேசியா

நலம்… நலமறிய ஆவல் (164)

“இன்னுமா இந்தியாவுக்குப் போறீங்க? நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க!” மருத்துவ மனையிலிருந்த அந்த தாதி நான் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப் போல் பேசினாள்.

`பிறந்தகம், புக்ககம் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடு!’ என்றால் எப்படி? கல்யாணமானதும், பெற்றோருடன் மற்ற உறவினர்களையும் ஒதுக்கிவிட வேண்டுமா?

அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!

கதை

பணக்காரக் குடும்பத்தின் ஒரே பெண் மாலினி. திருமணத்தின்போதே நிறைய நகை போட்டிருந்தார்கள். தந்தை இறந்ததும், தாய் வீட்டுக்கு வந்து, இருக்கிற மிச்சத்தையும் சுருட்டிப் போனாள்.

தாயிடமிருந்து சுரண்ட இனி ஒன்றுமில்லை என்று புரிந்ததும், அங்குப் போவதை நிறுத்திவிட்டாள் மாலினி.

இத்தனைக்கும், சென்னையில் அவர்கள் இருவரின் வீடுகளுக்கும் இடைய இருந்த தொலைவு ஐந்தே கிலோமீட்டர்கள்தாம்!

யாரால் நன்மை கிட்டுகிறதோ, அவர்களிடம் மட்டும் விசுவாசம் காட்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவள்.

சற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்களின் மனப்பான்மை புரிவதேயில்லை. தம்மைப் பற்றி மிக உயர்வாக எண்ணி, பிறகு ஏமாற்றம் அடைகிறார்கள்.

கதை

அரசியல்வாதி ஒருவர் நடத்திய பத்திரிகையின் ஆசிரியரான சாரங்கன், எங்கே சென்றாலும், அவருடைய நட்பை விரும்புவது போல் பலரும் நடந்துகொண்டனர். அவருக்குத் தன் மகிமையில் பெருமை ஏற்பட்டது.

`இவரைப் பிடித்தால், பத்திரிகையில் நம் படைப்புகளும் வருமே!’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாகப் பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க!” என்று சிலாகித்தார்.

அவர்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விரைவிலேயே, அவர்களின் படைப்புகள் அப்பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன.

ஏதோ காரணத்தால் சாரங்கனுக்கு வேலை போயிற்று. ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் வழக்கம்போல் யாருமே சாரங்கனைக் கண்டுகொள்ளவில்லை.  தாமே வலிய, “ஹலோ, ஹலோ!” என்றபடி அவர் அங்குமிங்கும் நடக்க, `கூடை கூடையாக’ப் பழங்கள் கொடுத்தவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

`இனி இவரால் என்ன உபயோகம்!’ என்ற நினைப்பு எழ, அலட்சியப்படுத்தியிருப்பாள். பிழைக்கத் தெரிந்தவள்!

பள்ளிக்கூடங்களில் விசுவாசம்

மாணவர்கள் பிரச்சினைக்கு உரியவர்களாக இருந்தால், ஆசிரியர்கள் இணைவார்கள் என்பது நியதி. ஆசிரியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலோ, தலைமை ஆசிரியர் அவர்களைப் பாடு படுத்துவது எளிது.

வெகு சில பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களும் ஒழுங்காக, அதிக பிரச்சினைகள் கொடுக்காது இருப்பார்கள், ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலை ஏற்பட, நல்ல தலைமைத்துவம் அமைய வேண்டும்.

பள்ளியோ, குடும்பமோ, நாடோ எதுவாகிலும், அது சிறக்க ஒரு தலைவரானவர் தன்னைச் சார்ந்தவர்களைப் பாரபட்சமின்றி நடத்துபவராக இருக்க வேண்டும். இத்தகையவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தன்னைச் சார்ந்தவர்களின் நலனையே பெரிதாகக் கருதிச் செயல்படுவார்.

ஒன்றாக இணைய வேண்டியவர்கள், தமக்குத் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தால், ஒற்றுமையோ, நன்மையோ எப்படிக் கிடைக்கும்?

தேவையானபோது, தனித்து இயங்குவதற்கான துணிச்சலும் அவர்களுக்கு அவசியமாகிறது.

ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

என்னிடம் படிக்க வந்தார்கள் பதின்ம வயதுப் பையன் ஒருவனும், அவனுடைய தங்கையும். பையன் பரம சாது. மரியாதையாக நடப்பான். தங்கை சோபனாவோ நேர் எதிரிடை.

ஒரு முறை, பாடத்தில் நான் ஏதோ கேள்வி கேட்க, சற்றும் யோசியாது, ஒரு பதிலை அளித்தாள் சோபனா.

“தவறு. நன்றாக யோசித்துச் சொல்,” என்றேன், நல்ல விதமாக.

அவளிடமிருந்து பதிலே இல்லை. விறைப்பாக உட்கார்ந்திருந்தாள்.

பல நிமிடங்கள் பொறுத்துவிட்டு, “நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் பதில்?” என, “I gave you an answer!” என்று கத்தினாளே பார்க்க வேண்டும்!

`மூத்தவர்களிடம் மரியாதையாக இருக்க வேண்டும்!’ என்று போதிக்கும் எனக்குப் பெரும் அதிர்ச்சி.

வீட்டுக்குப் போய், ஓர் அறையை உள்ளே தாளிட்டுக்கொண்ட சோபனா, `அவள் என்னைக் கண்டபடி திட்டுகிறாள். இனி நான் அங்கு போகமாட்டேன். நீங்கள் சரியென்று சொல்கிறவரை வெளியே வரமாட்டேன்,” என்றாளாம்.

அவளுடைய தந்தை என்னிடம் வந்து, “நீங்கள் அவளை pig-headed என்று திட்டியது ரொம்ப சரி,” என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. தானே அளந்திருக்கிறாள். எப்படியோ, `பிடிவாதம்’ என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் என்று அறிந்தேன்!

என்னிடம் வருவதற்குமுன் ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற்றிருக்காத பையன் நான் போதித்த கணக்கு, விஞ்ஞானம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான். ஆயினும், அவன் `மிக மிக’ச் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கவில்லையே என்று தந்தைக்குக் குறை.

பெற்றோர் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது, ஓயாது விவாதித்துக்கொண்டே இருந்தால், யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது அவர்கள் வளர்ச்சியைப் பாதித்து, எடுத்த காரியத்திலெல்லாம் பிடிப்பே இல்லாது செய்துவிடும். மகன் பிரகாசிக்காதது ஏனென்று அவருக்குப் புரியவில்லை.

(நிம்மதியே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்த அந்த இரு குழந்தைகளின் விவாகங்களும் சொற்ப காலத்திலேயே முறிந்து போயிற்று).

பாரபட்சமான குடும்பம்

ஒரு குடும்பத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். மற்றவரது கண்ணோட்டத்தைப் புரிந்து, அதைப் பிறருக்கும் விளக்குவது குடும்பத் தலைவியின் பொறுப்பு. அப்போதுதான் பரஸ்பர மரியாதை உண்டாகும்.

ஒரு மகனை மிக அருமையாக நடத்தி, இன்னொருவனைக் காரணமின்றி தண்டிப்பதையும் காண்கிறோம். சகோதரர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்? வளர்ந்தபின், இருவருமே பெற்றோரிடம்தான் குறை காண்பார்கள்.

செல்ல மகனாக வளர்ந்தவன் உலகில் எல்லாருமே தன்னைக் கொண்டாடுவார்கள் என்றெண்ணி ஏமாறுகிறான். உலகின் போக்கு புரியாத விதமாகத் தன்னை வளர்த்தவர்களின் மீது வெறுப்புகூட வரும்.

மற்றவன் பயந்தவனாக வளரலாம். இல்லையேல், அடக்கி வைத்திருந்த திறமையையும் ஆத்திரத்தையும் படிப்பிலும் உத்தியோகத்திலும் காட்டி உயரக்கூடும்.

இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெற்றோர்தாம். எங்கே தவறிழைத்தோம் என்று புரியாது குழம்புவர்.

குடும்பம் ஒரு தாம்புக் கயிற்றுக்கு ஒப்பானது. பலகீனமான ஒருவரை (அவருடைய சொந்த நலனைக் காரணம் காட்டி) குடும்பத்தினரிடமிருந்து பிரிப்பது தாம்புக் கயிற்றின் பிரிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்து, அதை அறுக்க முயல்வதுபோல்தான். வெற்றி கிட்டும்.

ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லாருமே பலமாக உணர்வார்கள். அவர்களை எளிதில் பிரிப்பது இயலாத காரியம். அதனால், அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவருமே தம் திறமைகளை முழுமையாக வெளிக்காட்டவும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published.