-மேகலா இராமமூர்த்தி

பார்கவ் கேசவின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 218க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்பட நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

மகிழுந்தின் கதவோரம் அமர்ந்து இனிய கதைபேசும் அழகிய பொம்மைகளை வைத்துப் புதுக்கவிதைகள் படைத்து நம்மை மகிழ்விக்க வருகின்றார்கள் நம் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

*****

”விடுமுறையன்றும் தொடுதிரையே கதியாயிருக்க வேண்டாம்! ஊர்வலம் போவோம் மகிழுந்தில் மகிழ்ச்சியாய்!” என்று உயிர்பெற்ற பதுமைகள் தமக்குள் பேசிக்கொள்வதை நம் காதில் போட்டிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

பதுமைகள் உயிர் பெற்றால்…

சில்லென்ற சாரலும்..
வெண்பனித் தூரலும் கண்டேன்..!
உள்ளத்தைக் கிள்ளிடும்..
உன்னதச் சூழ்நிலை கண்டேன்..!
ஊர்வலம் போவோம்.. வா.. வா..!!
உள்ளது மகிழுந்து.. வா.. வா..!!

விடுமுறை நாளன்றும்..
தொடுதிரையே உலகாக வேண்டாம்..!
வண்ணத்துப் பூச்சியாய்..
எண்ணத்தில் மகிழ்ச்சியே கொள்வோம்..!
சோம்பலைப் புறந்தள்ளி.. வா.. வா..!!
ஆம்பலைப் போல்மலர.. வா.. வா..!!

குறிக்கோளில் வென்றிட..
நெறியுடனே நாமென்றும் உழைப்போம்..!
தறிகெட்டுத் திரிந்தாலே..
தடம்மாறும் வாழ்வென்று அறிவோம்..!
தடைகளைத் தாண்டிட.. வா.. வா..!!
விடைகளைத் தேடிட.. வா.. வா..!!

*****

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

ஏக்கம்…

செப்பு வைத்து விளையாடிய
சிறுவர் சிறுமி யெல்லோரும்
ஒப்பனை செய்த பொம்மைகளுடன்
ஒன்றாய்ச் சேர்ந்தே ஆடியதெலாம்
இப்போ திங்கே நடப்பதில்லை
இவர்கள் கைகளில் தொடுதிரையே,
எப்போ திவர்கள் நமைத்தொடுவார்
ஏங்கித் தவிக்கும் பொம்மைகளே…!

”செப்புவைத்துக் குழந்தைகள் விளையாடிய காலமெல்லாம் கப்பலேறிப்போய்விட்டது. தொடுதிரையிலேயே தொலைந்துபோன குழந்தைகள் எப்போது நம்மை(யும்) தொடுவர் என்று ஏங்கித் தவிக்கின்றன பொம்மைகள்” என்று இன்றைய மழலையரின் மனநிலையைத் தன் கவிதையில் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *