கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

-நாகேஸ்வரி அண்ணாமலை
இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதர் டேவிட் ப்ரீட்மேன் கூறியிருக்கிறார். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகச் சொல்வதற்குப் பதில் இப்படிச் சொல்கிறார் போலும். இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாகச் சொல்வதால் இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென்று சொல்கிறாரா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.
பைபிளை அப்படியே நம்பும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றி ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் ஒரு விழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். (யேசுவைக் கொன்றவர்கள் என்ற கோபம் யூதர்கள் மேல் இவர்களுக்கு சென்ற நூற்றாண்டுவரை இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தபோது யேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்கள் யூதர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று யூதர்கள் வெளியில் வர மாட்டார்களாம். இப்போது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்பட்ட பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது ஒரு காரணம். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது, பெத்லஹேமில் பிறந்த இயேசு மாண்டது ஜெருசலேமில். ஜெருசலேம் இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் தாங்கள் அங்கு இடையூறின்றிப் போய்வரலாம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று நான் சொல்வேன்.) இப்போது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு வலுப்பட்டிருப்பதாலும் இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாலும் இஸ்ரேல் மிகவும் பலமுள்ளதாக ஆகிவருவதாக அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக அவர் கூறியதாலேயே அமெரிக்கா இஸ்ரேலுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்று சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணங்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியிருப்பது; பாலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. அளித்து வரும் உதவியில் தன் பங்கைக் குறைத்திருப்பது; வெஸ்ட் பேங்கை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று கூறுவதை நிறுத்திவிட்டது; வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீனத்தின் அமெரிக்க உறவு அலுவலகத்தை மூடிவிட்டது; ஜெருசலேமில் இருந்த பாலஸ்தீனர்களுக்கான துணைத் தூதரகத்தை இஸ்ரேலுக்கான தூதரகத்தோடு இணைத்துவிட்டது. இப்படிப் பல. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன நாளிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதும் இஸ்ரேலுக்கு புதிய சலுகைகள் வழங்குவதும் அமெரிக்காவின் வழக்கமாயிற்று.
ப்ரீட்மேனின் இந்தக் கருத்தைப் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல இஸ்ரேலில் ப்ரீட்மேனுக்கு முன்னால் அமெரிக்காவின் தூதராக இருந்த டேனியல் குர்ட்ஸெர்கூட வரவேற்கவில்லை. இவர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் காலத்திலும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதராக இருந்திருக்கிறார். ‘அமெரிக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் தூதரான இவர் தன் பணிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களாகக் கூறிவருகிறார்’ என்றார். பாலஸ்தீனர்களுக்கு ப்ரீட்மேன் கூறியது மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரான இவர், அமெரிக்கர்களின் நலன்களைவிட இஸ்ரேலின் நலன்களில்தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று விமர்சித்துள்ளனர்.
பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) அதிகாரிகளில் ஒருவர், ‘ப்ரீட்மேன் இப்படிக் கூறியிருப்பதால், ‘பாலஸ்தீனர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருபோதும் அமெரிக்கா அப்படி நினைத்ததில்லை’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
இந்தப் பதவிக்கு ட்ரம்ப்பால் நியமிக்கப்படுவதற்கு முன் ப்ரீட்மேன், ட்ரம்ப்பின் திவால் வழக்கறிஞராக இருந்தார்; பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியபோது அதை வெகுவாக ஆதரித்ததோடு நன்கொடைகளும் வழங்கியவர் இவர். இஸ்ரேல் இப்படிக் குடியிருப்புகளைக் கட்டியது, அகில உலக சட்டத்திற்குப் புறம்பானது என்று பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. சட்டம் படித்த இவர், இதைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஓராண்டுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியபோது இருபது பேர்களைத் தவிர பாலஸ்தீனர்கள் வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அன்று ஜெருசலேம் ஓட்டல்களில் தாங்கள் சாப்பிட்ட உணவு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேசினார்களேயொழிய தூதரகத்தை மாற்றியது பற்றி யாரும் பேசவில்லை என்றும் வாய்கூசாமல் கூறுகிறார். அன்று இதை எதிர்த்து காஸாவில் கலவரம் நடந்து 60 பேர் கொல்லப்பட்டது உண்மை என்றாலும், நடந்த கலவரங்களுக்கும் தூதரகம் திறக்கப்பட்டதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்கிறார். எப்படிப் பொய் சொல்கிறார்! திறப்புவிழா நிகழ்ச்சிகளை இருட்டடிப்பதற்காகத்தான் காஸாவில் வன்முறை நிகழ்ந்தது என்பதே உண்மை.
இப்படிப் பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் தன்னால் முடியுமென்றால் பாலஸ்தீனர்களை இன்னும் ஒடுக்குவாராம். இன்னொரு மனித இனத்திற்கு அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலைப் பாராட்டிக்கொண்டிருக்கும் இவர் எப்படி இஸ்ரேல் கடவுள் பக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். கடவுள் என்று இவர் யாரைச் சொல்கிறார்? கடவுள் படைத்த மனித இனங்களில் ஒன்றைத் தீர்த்துக் கட்டுவதென்று முடிவு எடுத்திருக்கும் இவருக்குக் கடவுள் பெயரைச் சொல்லக்கூட அருகதை இல்லை.