மகிழ்ச்சி என்பது மாயை இல்லை!

நிர்மலா ராகவன்

நலம்… நலமறிய ஆவல் (158)

`நாம் அவரைப் போலவா? அவர் மிக்க திறமை வாய்ந்தவர்!’ என்று யாரையாவது பார்த்துப் பெருமூச்சு விடுகிறவர்கள் அநேகர்.

திறமை ஓரளவுக்குதான் ஒருவரை உயர்த்தும். அந்நிலை குலையாமலிருக்க நற்பண்பு அவசியம்.

கதை

பதின்ம வயதில் கலைத் துறையில் தனக்கு அசாத்திய ஆர்வத்துடன், திறமையும் இருப்பதைப் புரிந்துகொண்டார் விவேகன். சில விருதுகளைப் பெற்றதும், கர்வம் தலைக்கேறியது. அவர் மிகச் சிறந்தவர் – அவரைப் பொறுத்தவரை. ஓயாது, அதே துறையிலிருந்த பிறரைப் பழித்தார் – அவர்கள் முன்னிலையிலேயே!

பிறரது உணர்ச்சிகள் பொருட்டல்ல என்று நினைப்பதுபோல் நடப்பவர்களுக்கு அன்பை யாரிடமிருந்து பெறமுடியும்? அன்பு கிட்டாததால் மகிழ்ச்சியும் குன்றியது.

மகிழ்ச்சி மாயை இல்லை. அதை வெளியில் எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளேயேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது.

“பிறரைப் புரிந்துகொள்வது அறிவு என்றால், தன்னைத் தானே புரிந்துகொள்வது விவேகம்” (ஒரு தத்துவ ஞானி).

ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, கீழே நோக்கி, `அடேயப்பா! எத்தனைப் படிகளைக் கடந்துவிட்டேன்!’ என்று பெருமிதம் கொண்டுவிட்டால், தலைசுற்றிப் போகாதா! எத்தனை வெற்றி பெற்றாலும், தன்னையே வியந்துகொள்வதும் அதுபோல்தான். வாழ்வில் சறுக்காமலிருக்க எளிமை அவசியம்.

`அவ்வளவு பெரிய மனிதர் பொது இடத்தில் என்னை அப்படித் தூக்கியெறிந்து பேசியிருப்பாரா? எனக்கு அவ்வளவாக திறமை இல்லை!’ என்று நொந்துபோயினர் விவேகனது அகந்தைக்குப் பலியான சிலர்.

பிறரிடம் என்ன குறை என்பதை ஆராய்ந்தபடியே இருப்பவரை எதற்குப் பொருட்படுத்த வேண்டும்? `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுத் தள்ள வேண்டியதுதான்.

பிறர் என்ன நினைப்பார்களோ, எப்படியெல்லாம் நம்மிடம் குறை காண்பார்களோ என்று யோசித்தே ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் நம்மை நாமே உணர முடியாது போய்விடும். மகிழ்ச்சி பறிபோய், மன உளைச்சல்தான் மிஞ்சும்.

நம் நலனை நாடும் ஒருசிலர் பலர் முன்னிலையில் உரக்கப் புகழ்ந்து, குறைகளைத் தனிமையில், மெல்லக் கூறுவார்கள். புகழ்ச்சியினால் கர்வம் கொள்ளாது, அறிவுரையில் உபயோகமானதை மட்டும் ஆராய்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

புதிதாக மணமாகி, கூட்டுக் குடும்பத்துடன் வாழ வந்தவள் கீதா. பலருடனும் ஒத்துப் போகத்தான் முடிவெடுத்து வந்தாள். ஆனால், மாமியாரும் நாத்தனார்களும் அவள் செய்த ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுபிடித்து, அதைப் பலரிடமும் கேலியாகக் கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை.

அனுசரணையாக இருக்க முயன்ற கணவனும், `பெண்டாட்டிதாசன்’ என்று கேலிப் பொருளாக ஆனான். பிறரது அதிகாரமும், `தன்னை ஒரு பொருட்டாக எவரும் மதிக்கவில்லையே!’ என்ற அவமானமும் கீதாவின் உடல்நிலையைப் பாதித்தன.

ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர், கீதாவின் நிலைமை மோசமாகியது. அவள் பெற்ற குழந்தையிடம் அவளுக்கு எந்த உரிமையும் இல்லாததுபோல், அவள் செய்வதில் எல்லாம் குற்றம் கண்டுபிடித்தார்கள்.

அப்போது கீதா செய்திருக்க வேண்டியது என்ன?

எந்தத் தவறும் தன்மீது இல்லை என்று தெளிந்து, தனியாகப் போயிருக்கலாம். அப்போது கிடைக்கும் சுதந்திரத்தால் நிம்மதியும் எழுந்திருக்கும். குழந்தையும் இரு மாறுபட்ட கட்சிகளால் ஆட்டுவிக்கப்படாது, தாயின் வார்த்தைக்கு மட்டும் கட்டுப்பட்டு வளரும்.

`வயதானவர்களை விட்டு நாங்கள் தனிக்குடித்தனம் போனால், அவர்கள் பாவம், இல்லையா? பிறர் பழிப்பார்கள்!’ என்று அஞ்சிப் பொறுமை காக்கலாம். பொறுக்க முடியாவிட்டாலும், மாற்றத்திற்குப் பயந்து ஒரே நிலையில் இருப்பது பொறுமையா?

அப்படி, எதையும் தாங்கிய மருமகள் கமலாட்சி என்னிடம் கூறியது: “என் கணவர், `I hate you, dee” (உன்னை வெறுக்கிறேன்டி) என்று சொல்லிவிட்டார்”. அதற்காகவே காத்திருந்ததுபோல் பெருமை தொனித்தது அவள் குரலில்.

அக்குடும்பத்துக்கு மருமகளாக வந்திருந்த மற்ற இரு பெண்களும் தம் மகிழ்ச்சியைப் பிறருக்காக விட்டுக் கொடுக்க விரும்பாது தனியாகப் போய்விட்டிருந்தார்கள். தமக்கு விரும்பியதைச் செய்ய முடிந்தது. குழந்தைகளைத் தம் விருப்பப்படி பல உபயோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர். `இதெல்லாம் வீண் வேலை! பணம்தான் விரயமாகும்!’ என்று பழிக்க, யாரும் அருகில் இருக்கவில்லை.

புக்ககத்தினர் கமலாட்சியின் நல்ல குணத்தைப் புரிந்து, அதிகக் குறுக்கீடு இல்லாமல் அவளுக்கு மரியாதை கொடுத்து நடத்தியிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.

`தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போக வந்தவள்!’ என்று தாய்மார்கள் நினைத்து, மருமகளுடன் போட்டி போடும்போது எல்லாருடைய மகிழ்ச்சியும் பறிபோய்விடுகிறது.

கதை

அன்பான பெற்றோரை விட்டு வெகுதூரம் வந்திருந்த சுரேகா, அடிக்கடி நீண்ட கடிதம் எழுதினாள்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஓய்ந்த நேரத்தில் அவள் எழுதியதால், வேறு எப்படி குறை சொல்வது என்று மாமியாருக்குப் புரியவில்லை.

“நீ இவ்வளவு நீண்ட கடிதம் எழுதித் தள்ளினால், அதை யாரும் படிக்கப் போவதில்லை!” என்றாள், கேலிச் சிரிப்புடன்.

தான் என்ன செய்தாலும் மாமியார் ஏனோ அதில் குறை கண்டுபிடிக்கிறாள் என்று புரிந்தது, சுரேகாவிற்கு. அவள் அயரவில்லை. நிகழ்காலம் பொறுக்க முடியாது இருந்தபோது, கடந்த காலத்தில் பெற்றோரிடமிருந்து பெற்ற அன்பை எண்ணி ஆறுதல் பெறும் முயற்சியிலிருந்து மாறவில்லை.

நமக்குப் பிடித்த ஆக்ககரமான செயல்களை முயன்று செய்கையிலேயே மகிழ்ச்சி கிட்டிவிடுகிறது. அடுத்தவருக்காக அதை விட்டுக் கொடுப்பானேன்!

கூட்டுக் குடும்பத்தில், `உனக்குப் பிடித்ததைச் செய்!’ என்று, வயது வந்தவர்களுக்கு அனுமதி கொடுத்து, சற்றே விலகியிருந்தால், அவர்கள் ஏன் பிரிந்து போக நினைப்பார்கள்? பலருடன் இணைந்திருந்தால், பக்க பலமும் பாதுகாப்பும் இருக்கும். செலவும் கணிசமாகக் குறையுமே!

`எல்லாரும் செய்கிறார்களே!’ என்று மந்தையாடுபோல் நடக்காது, தமக்கென ஒரு தனிப் பாதை வகுத்துக்கொள்ளும் துணிச்சல் வெகு சிலருக்கே இருக்கிறது.

கதை (படித்தது)

சீனாவில் ஒரு கோடீஸ்வரர் அண்மையில் இறந்தபோது, அவருடைய சொத்து பூராவும் அனாதரவான குழந்தைகளின் கல்விக்கும் இதர தர்ம ஸ்தாபனங்களுக்கும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும், அவருக்கு ஒரே மகன்!

இருபது வருடங்களுக்கு முன்னரே, “நீ சுயமாக உழைத்துச் சம்பாதித்தால்தான் உனக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டும். நான் சேர்த்த பணம் உனக்கு வேண்டாம்,” என்று தந்தை கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தார் மகன். இப்போது தனது நாற்பதாவது வயதில், தந்தையின் செயலால் சிறிதும் பாதிக்கப்படவில்லை.

தம் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, `அன்பு’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக வங்கியில் பணம் சேமிப்பவர்கள், தம் `தியாகம்’ குழந்தைகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சி அளிக்குமா என்று யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

கதை

தந்தை விட்டுப் போன பெரும் சொத்தால், உத்தியோகத்திற்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டவர் சிவகுரு.

எளிதாகப் பணம் கிடைக்கும்போது அதன் அருமை புரியுமா? மனைவியுடன் உல்லாசப் பயணம், வெளியூர்களில் நடக்கும் இசைக் கச்சேரிகள் என்று பொழுதைப் போக்கியவருக்கு இருபது வருடங்களுக்குப் பின் அந்த வாழ்க்கை அலுத்துப் போயிற்று.

மனம்போனபடி செலவிட்டு, எதிலும் மகிழ்ச்சி கிடைக்காது போக, பணமும் மிகக் குறைந்துவிட்ட நிலையில் வெறுமைதான் மிஞ்சியது.

சிவகுருவோடு ஒப்பிட்டால், சீனாக்கார செல்வந்தர் அறிவாளி. மகன்மேல், அவனது நிரந்தரமான மகிழ்ச்சியில், அக்கறை கொண்டவர். முக்கியமாக, மகனும் தன்னைப்போல் சாமர்த்தியசாலிதான் என்ற நம்பிக்கையும், அலாதி துணிச்சலும் கொண்டவர்.

இக்குணங்களால்தான் பெரும் பொருள் ஈட்ட முடிந்ததோ?

 

Pic courtesy: http://getdrawings.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.