நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43
43. அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
அறிவு நமக்கு அழிவு வராம காக்கும். அது மட்டுமல்லாம பகையாளியாலயும் அழிக்க முடியாத அரண் கணக்காவும் நிக்கும்.
குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
மனச அது போக்குல விடாம கெட்டத வெலக்கி நல்ல வழில நம்மள நடத்துததே அறிவு.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
யார் என்ன சொன்னாலும் நம்பாம உண்ம எது னு கண்டுபிடிக்கது தான் அறிவு.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
பொறத்தியார் மனசுல பதியுதது கணக்கா எளிமையா பேசுததும், அவுக சொல்லுத விசயத்த கூறுபோட்டு பாத்து எளிதா விளங்கிக்கிடுததும் தான் அறிவு.
குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
ஒலகத்து ஒசந்தவங்க கூட நட்பா இருக்கது சிறந்த அறிவு. நட்போட தொடக்கத்துல மகிழ்ச்சியாவும் பொறவு வருத்தப்படுததும் இல்லாம ஒண்ணுபோல சீரா இருக்கது அறிவு.
குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
ஒலகத்து பெரிய மனுசங்க எப்டி வாழுதாங்களோ அவங்களோட சேந்து தானும் அப்படியே வாழுதது அறிவு.
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அறிவுள்ளவுக நாளமுன்னயும் நடக்கப் போகுதத முன்னமே அறிஞ்சு வச்சிருப்பாக. அறிவில்லாதவுகளால அது ஏலாது.
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
பயப்பட வேண்டியதுக்கு பயப்படாம தெனாவட்டா இருக்கது முட்டாள்தனம். பயப்பட வேண்டியதுக்கு பயப்படுதவங்க புத்திசாலிங்க.
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
அடுத்தாப்ல வரப்போகுதத முன்னமே உணந்து காத்துக்கிடுதவனக்கு நடுங்குத அளவுக்கு அதிர்ச்சியான துன்பம் னு ஒண்ணு வாராது.
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
ஒண்ணும் இல்லையினாலும் அறிவுள்ளவங்க எல்லாத்தையும் உடையவுக. வேற எத வச்சிருந்தாலும் அறிவில்லாதவுக ஒண்ணுமில்லாதவங்களுக்கு சமானம் தான்.
(அடுத்தாப்லயும் வரும்….