சிறுவனுக்குச் சிரச்சேதமா?

0

U.S. Secretary of State Rex Tillerson shakes hands with Deputy Crown Prince Mohammad bin Salman Al Saud following the signing by President Donald Trump and King Salman bin Abdulaziz Al Saud of Saudi Arabia of the Joint Strategic Vision Statement for the United States and the Kingdom of Saudi Arabia, during ceremonies, Saturday, May 20, 2017, at the Royal Court Palace in Riyadh, Saudi Arabia. (Official White House Photo Shealah Craighead)

நாகேஸ்வரி அண்ணாமலை

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் அவர்களுடைய குடிமக்களுக்கே மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.  சென்ற வருடம் அரசை எதிர்த்து எழுதிய, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வாழ்ந்துவந்த, சவூதி அரேபியாவின் குடிமகனான கஷோகி என்னும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரை துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் கொலைசெய்து அவர் உடம்பை துண்டு துண்டாக்கி அதை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீசி எறிந்திருக்கிறார்கள்.  சவூதி அரசு அதை மறுத்தாலும் உலகம் ஒப்புக்கொள்வதாக இல்லை. இப்போது ஐ.நா.வின் விசாரணைக் குழு, இதை ஆதாரத்தோடு உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த வருடம் 37 பேர்களை அரசுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கைகள் உடையவர்களாக இருந்தவர்கள் என்றும் அரசுக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டி அவர்களின் தலைகளைச் சீவி மரண தண்டனை கொடுத்தார்கள்.  அது மட்டுமல்ல அந்தத் தலைகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் வைத்தார்கள்.  2016-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவர் உட்பட அரசை விமர்சித்த 47 பேரைத் தண்டித்தது.  சவூதி அரசைப் பொறுத்தவரை அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்.

இப்போது இதைவிடக் கொடிய பாவச்செயல் ஒன்றைப் புரியக் காத்திருக்கிறார்கள்.. பத்து வயது சிறுவன் ஒருவன் அரசுக்கு எதிராக நடந்த பிரச்சாரத்தில் பங்குகொண்டான் என்றும் துப்பாக்கி வைத்திருந்தான் என்றும் ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருந்தான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டி, 13 வயதில் அவனைக் கைதுசெய்து தனிமைச் சிறையில் அடைத்து அவனுக்குப் பதினெட்டு வயதாகியதும் விசாரணை என்ற ஒன்றை நடத்தி அவன் செய்த ‘குற்றங்களுக்கு’ அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள்.  சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  இவன் சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தக் குற்றங்கள் புரிந்ததாக அவனைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்.  மனித உரிமைகள் மீறப்படும் சவூதி அரேபியாவிலேயே கூட ஒரு சிறுவனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கிய கொடுமை இதுவரை நிகழவில்லை.

2017-இல் ஐ.நா. சபையின் மனித உரிமை ஹைகமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்த மனித உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு சவூதி அரசு பதிலளிக்கையில் மிகக் கொடிய குற்றங்களுக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று கூறியது.  ஆனால் மனித உரிமைக் கழகம், சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் சிறுபான்மையரான ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறது

சவூதி அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களுடைய தலைகளைச் சீவி மரண தண்டனை வழங்குகிறார்கள்.  சவூதி அரேபியா, ஒரு முடியரசு.  அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமீர்தான் எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கிறார்.  இப்போது இருக்கும் அரசருக்கு வயதாகிவிட்டதால் அடுத்து அமீராக வரப் போகிற முகம்மது பின் சல்மான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்.  இவர்தான் கஷோகியின் கொலைக்குக் காரணமானவர்.  பல நாடுகளில் இப்போது எந்தவிதக் குற்றங்கள் புரிந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் சவூதி அரேபியாவோ அமீர்,  யாராவது குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானித்தால் அதுதான் தீர்ப்பாகிவிடுகிறது.  நீதிமன்றங்களோ குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமாக வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களோ இருப்பதாகத் தெரியவில்லை.  அப்படியே இருந்தாலும் அவர்கள் பெயருக்குத்தான் இருக்கிறார்கள்.  குற்றம் புரிந்தவர்களைக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிப்பது அமீர்கள்தான்.  இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் ஷியா என்ற முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சவூதியில் சன்னி என்னும் முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்.

பத்து வயதில் இந்தப் பையனுக்கு என்ன புரிந்திருக்கும்?  பதிமூன்று வயதிலேயே கைதுசெய்யப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோது இவனுடைய மனது எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்?  அதன் பிறகு அவனுடைய மன, உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படிருக்குமே.  இப்போது அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வளவு தூரம் அவன் உணர்ந்திருப்பான்?  இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்.

கஷோகி கொல்லப்பட்டு அவருடைய உடலைச் சின்னாபின்னமாக்கித் தூர வீசிய பிறகு அமெரிக்கா, சவூதி அரேபியாவோடு எந்த வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால் ட்ரம்ப் அந்த எதிர்ப்புக்கெல்லம் செவிசாய்க்கவில்லை.  ஆயிரம் கோடி டாலர் பெறுமான ஆயுதங்களை சவூதி அரேபியாவுக்கு விற்காவிட்டால் அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம் என்பதுபோல் பேசிவந்தார்.  சவூதி அரேபியா தலைவர்களும் புஷ் குடும்பமும் தனிப்பட்ட முறையிலும் நண்பர்கள்.  இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பமும் சவூதியின் தலைவர்களோடு நெருக்கம் காட்டிவருகிறார்கள்.  ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரும் சௌதியின் வருங்கால அமீரும் நெருங்கிய நண்பர்கள்.  இதுவரை இவர்கள் யாரும் 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது பற்றி வாயே திறக்கவில்லை.

இப்போது உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருப்பதால் சவூதி அரேபியா, பையனின் சிரச்சேதத்தைப் பன்னிரண்டு வருஷ சிறைவாசமாக மாறியிருக்கிறது.

மனித உரிமைகளைக் காக்கும் நாடுகளின் தலைவன் (leader of the Free World) என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, மனித உரிமைகளைத் காலில் போட்டு மிதிக்கும் சவூதி அரேபியாவைப் பற்றி என்ன சால்ஜாப்பு சொல்லப் போகிறது?

====================================================================

More: https://theintercept.com/2019/06/16/saudi-crown-prince-child-execution/

Pic courtesy: https://en.wikipedia.org/wiki/Mohammad_bin_Salman

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *