-இலந்தை சு. இராமசாமி

முன்னுரை

முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நங்கநல்லூரிலுள்ள அர்த்த நாரீஸ்வர் கோவிலில் பிரபல உபன்யாசகர் இராமகதா ரத்னம் புதுக்கோட்டைத் தியாகராஜன் அவர்கள் கம்பராமாயணம் உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். உபன்யாசத்தின் நடுவில் அவர் சொன்னார்: ”ஐயப்பன் கதையை உபன்யாசம் செய்ய முறைப்படியான காவியம் எதுவுமில்லை. இங்கே கவிமாமணி இலந்தை இராமசாமி வந்திருக்கிறார். அவர் ஐயப்பன் காவியம் ஒன்று எழுதவேண்டும். அதற்குரிய தகுதி உள்ளவர் அவர். கோயிலில் சுவாமி முன்னால் சொல்லியிருக்கிறேன். அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். 500 பாடல்களுக்குள் அமைந்தாலும் போதும்” என்றார். நான் எழுந்து ஒத்துக்கொண்டேன். உடனே என் மனத்தில் கதை பாண்டி நாட்டில் நிகழ்வதாக அமைக்கவேண்டும் என்று தோன்றியது. அதன்படி ஆற்றுப்படலமாகப் பொருநை நதியைக்கொண்டு எழுத் தொடங்கினேன்,. பிறகு புத்தகங்களைப் படிக்கும் போது கதை சேரநாட்டில் நடப்பதாகப் பல புத்தகங்களில் பார்த்தேன். காவியத்தில் பிழை வரக்கூடாதென்பதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு ஐயப்பன் வரலாற்றை வழிநடைச்சிந்தாக 64 ஆனந்தக் களிப்பு பாடல்களில் எழுதினேன். ஐயப்பன் வில்லுப்பாட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நிகழ்த்தும் மாதிரி எழுதி நிகழ்ச்சிகள் நடத்தினேன். எனினும் மனம் சமாதானமாகவில்லை. சென்ற மாதம் ஒரு ஆங்கிலக் கட்டுரையைப் படித்தபோது திருவாங்கூர் மகாராஜா பந்தள ராஜாவைப் பாண்டியராஜன் என்றுதான் அழைப்பார் என்று எழுதப்பட்டிருந்தது. உடனே விழித்துக் கொண்டேன். ஐயப்பன் காவியத்தை மீண்டும் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். பூதநாதோபாக்கியானம் ஐயப்பன் கதையை விரிவாகச் சொல்கிறது. ஸ்காந்தம் மாஹாசாஸ்தா கதையைப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன. அப்பர் சாத்தனை மகனாய்ப் பெற்றான் என எழுதியிருக்கிறார்.

என்றாலும் காலபேத குழப்பங்கள் ஏற்பட்டன. ஐயப்ப பக்தர் திரு அரவிந்த சுப்ரமணியம் ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம் எனும் ஒரு ஆய்வுப் பதிப்பு வெளியிட்டிருக்கிறார். அப்புத்தகம் தற்செயலாகக் கையில் கிடைத்தது. முதலில் படித்தபோது குழப்பம் அதிகரித்தது. பிறகு மீண்டும் ஆய்வு செய்த போது குழப்பங்கள் ஒவ்வொன்றாக விலகின. கதையில் தெளிவு கிடைத்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். கவிஞர் விவேக்பாரதி வல்லமையில் வெளியிடுகிறோம் என்றார். அதைப் பேறாகக் கருதினேன். வல்லமை மதிப்பு மிக்க ஒரு தளம் என்பதை அறிவேன்.

நான் எழுத எழுதக் காவியம் இங்கே தொடர்ந்து வெளியாகும். பொதுவாக விருத்தத்தில் எழுதுவது வழக்கம். நானும் அப்படித்தான் செய்யப்போகிறேன்,பாரதி பாஞ்சாலி சபதம் குறுங்காவியத்தைச் சிந்துப்பாடலில் எழுதி இடையிடையே விருத்தங்களைக் கொணர்ந்தார். நான் விருத்தப்பாக்களில் எழுதி இடையிடையே சிந்துப்பாடல்களைக் கொணரப் போகிறேன். வண்ணப்படல்கள், சந்தப்பாடல்களும் வரும். இயன்ற அளவு விருத்தத்தின் பல வகைகளைப் பயன்படுத்த முயல்வேன்,

சாமியே சரணம் ஐயப்பா!

அன்புடன்,
இலந்தை சு இராமசாமி
17-6-2019

ஐயப்பன் காவியம்

காப்பு

வானின் றிறங்கியிந்த வையத்திற் போந்தவருள்
ஞானத் திருசாஸ்தா நற்கதையை – ஆனநறுங்
காவியமாய்ப் பாடக் கணபதியே காத்தருள்க
பாவியக்கப் பாடும் படி.

நூல்

கலிவிருத்தம்

உலகி லேயறம் ஓங்கி நிலைக்கவும்
இலகு பக்தியின் ஏற்றம் சிறக்கவும்
தலமொ ளிர்ந்திடத் தாரணி வந்தவன்
மலர்ந றும்பதம் வாழ்த்தி வணங்குவாம்

அவையடக்கம்

பூத நாதனின் பொற்புடை மாக்கதை
நீத மாய்த்தமிழ் நேர்ந்து கொடுத்திடப்
போத மில்லெனும் போது மிறங்கினேன்
சோதி மாமலை சுண்டெலி தூக்குமோ?

ஈர நத்தையி ழுத்திடும் கோட்டிலே
சார மாய்மொழி தானுள தாகுமோ?
ஆர மாய்த் தமிழ் ஆய்ந்தவர் என்னையும்
வார மாகவே வாழ்த்திய ருள்கவே!

வேண்டும் காவியம் என்று விளம்பியே
தூண்டி விட்டநல் தூயவர் ஆசியால்
ஈண்டிம் மாக்கதை ஈசன் வரத்தினால்
பாண்டி யன்மர பேந்தலைப் பாடுவேன்!

அறம் நிறுத்திடும் ஆண்டவன் சாத்தனை
மறம்வி ளைத்தொளி வார்த்தருள் ஐயனை
திறம்ப லப்பல சேர்த்திடும் நாதனை
பெறுந்த மிற்சொலில் பேசுவன் பாட்டிலே!

கரணம் போட்டிடக் கைவராக் காவியம்
சரணம் கூவிடத் தன்வச மாகுமே
திரண மாத்திரம் செப்பிடப் போதுமே
மரணப் போதிலே வந்தருள் கூட்டுமே!

ஐயன் பெருமை

மோகி னிக்கொரு முத்தனாய் வாய்த்தவன்
பாகம் தந்தவன் பாலனாய் ஆனவன்
போகி பூரண புஷ்கலா நாயகன்
யோகி ஆனவன் ஓங்கெழில் ஐயனே!

நீதி காக்கிற நேர்மை யுடையவன்
சாதி பேதங்கள் தாண்டிய சத்தியன்
சோதி யாகிடும் சுந்தரன் சூக்குமன்
ஆதி யானவன் அற்புதன் காந்தனே!

ஊர்ப்பு றங்களில் ஓங்கருள் செய்பவன்
கார்க்கு லங்களைக் கட்டியே மேய்ப்பவன்
பேர்ப டைத்தவன் பிள்ளையாய் வந்தவன்
சேர்த்தி டுங்கரச் செண்டலங் காரனே!

சபரி மாமலை தங்கி யருள்பவன்
அபயம் நல்கிடும் அண்ணல ருந்தவன்
இபத்தி லூர்பவன் என்றுமி ளையவன்
சுபங்கொ டுத்திடும் தூமணி கண்டனே!

பாண்டி நாட்டிலே பையனாய் வந்தவன்
வேண்டிச் செந்தமிழ் வித்தகம் கொண்டவன்
ஆண்ட வன்மகன் ஆரியங் காவினன்
யாண்டும் உள்ளவன் ஐயனைப் போற்றுவோம்

இலந்தை யூரன் இராமனின் பேருளோன்
நலந்தி கழ்ந்திட நாயகன் ஐயனின்
வலந்தி கழ்ந்திடு மாத்தமிழ்க் காவியம்
சிலந்தி நெய்வதைத் தேர்ந்திவண் செய்வதே!

பின் குறிப்பு: ஒரு காவியத்தின் பாயிரத்தில் யார் எழுதச்சொன்னது, யார் எழுதியது என்பதைக் கவிஞனோ வேறு பிறரோ சொல்லலாம். எழுதப்போகும் தெய்வத்தின் தன்மையையும் கோடிட்டுக் காட்டியும் எழுதலாம். கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் அவற்றுள் அடக்கம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *