இலக்கியம்தொடர்கள்நெல்லைத் தமிழில் திருக்குறள்

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

56. கொடுங்கோன்மை

குறள் 551:

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து

நாட்டு மக்களத் துன்புறுத்துத ராசா கொல செய்யுதவனக் காட்டிலும் கொடுமக்காரன்

குறள் 552:

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

ஆட்சி நடத்துத ராசா அதிகாரத்த ஒபயோகிச்சு மக்கள்கிட்ட பொருள் கேக்குதது, வழிப்பறி கொள்ளக்காரன் கொள்ளையடிக்கதுக்காவ மிரட்டுததுக்கு சமானம்.

குறள் 553:

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

தெனைக்கும் நாட்டுல நடக்குதத அறிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிடாத ராசா பைய பைய தன் நாட்ட இழந்துகிட்டே வருவான்.

குறள் 554:

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

நாட்டு நெலமயத் தெரிஞ்சுக்கிடாம கூறுகெட்டு நாட்ட ஆளுத ராசாவவிட்டு செல்வமும் , குடிமக்களும் சேந்தாப்ல வெலகிப் போயிடுவாக.

குறள் 555:

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

தப்பான ஆட்சிமொறையால நொந்து போயி மக்கள் உடுத கண்ணீர் தான் ஒரு ராசாவோட செல்வத்த அழிக்குத ஆயுதம்.

குறள் 556:

மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

ராசாவோட புகழ் நெலச்சி நிக்கதுக்குக் காரணம் அவரோட நேர்மையான ஆட்சி.  அது இல்லன்னா புகழ் இல்லாமப் போவும்.

குறள் 557:

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

மழை இல்லாமப் போவுச்சுன்னா எங்ஙன சங்கடத்த அனுபவிப்பாகளோ அங்ஙன நேர்மையில்லாத ஆட்சிலயும் அனுபவிப்பாக.

குறள் 558:

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

மொற தவறி தப்பா ஆட்சி நடத்துதவனுக்கு கீழ ஏழையா வாழுதத விட பணக்காரனா வாழுதது ரொம்ப சங்கடமான விசயம்.

குறள் 559:

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

ராசா மொற தப்பி ஆட்சி செஞ்சாம்னா அந்த நாட்டுல பருவம் தப்பி மழை பெய்யாமலே போவும்.

குறள் 560:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

நாட்டக் காக்க வேண்டியவன் மொறப்படி காக்கலேன்னா பசு மாடு பால் கொடுக்காது. ஞானிங்க அவுக படிச்ச அறநூல்கள அயத்து (மறந்து)  போவாக

(அடுத்தாப்லயும் வரும்…..)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க