அப்பாவின் வாசனை
-பாஸ்கர் சேஷாத்ரி
கொஞ்ச நாட்களாக என் தந்தையின் நினைவு என்னை வாட்டுகிறது. அவர் அமர்ந்த இடம், ஒட்டிய சைக்கிள், வெற்றிலை பாக்கு பெட்டி, அதில் பொறிக்கப்பட்ட ”சேஷாத்ரிநாதன்” என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அவர் ஃபோனை எடுத்துச் சொல்லும் குட் மார்னிங்கில் அவ்வளவு கனிவு. உறவுகள் தொலைவதற்கு இடைவெளி வருவதற்கும் முக்கிய காரணம் தன்னைத் தனிமைபடுத்திக் கொள்ளல். தனி உலகமாகப் போதல்தான். தன்னைச் சுற்றி உலகத்தை வைத்துக் கொண்டு தான் பார்ப்பதுதான் உலகம் என்றால் எந்த உறவு நிற்கும்?
பரபரவென இருந்த வாழ்க்கையில் பத்து நிமிடங்கள் அமர்ந்து பேசியிருக்கலாம். அல்லது ஏதாவது நிகழ்வைப் பற்றி சம்பாஷனை செய்து இருக்கலாம். ஓடி போய், தன் உலகம் காண விழைந்த எனக்குப் பின்னர்தான் இழப்பு புரிந்தது. கெட்ட பின்பு ஞானி என்பது போல.
அவர் விரல் பிடித்து அழைத்து போன பள்ளிக்கூடங்கள் அப்படியே இருக்கின்றன. அட்டை போட்டு ஒட்டித் தரும் லாகவம், அந்தப் புத்தக வாசனை, அந்தக் கோந்தின் பிடிப்பு. அதில் லேபிளை ஒட்டிக் கூர்ப்பாய் எழுதித் தந்த ஸ்டைலான ஆங்கிலம். அடடா. எந்தப் பையனும் என் புத்தகத்தை மட்டும் கிழிக்க மாட்டான்.
ஒரு கடையில் இன்று மாலை சென்ட் ரப்பர் கேட்ட ஒரு பையனைப் பார்த்தபோது, நான் அழிப்பதற்காகவே தப்பாய் எழுதி அந்த மணத்தை முகர்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த ரப்பரைப் போல என் அப்பாவும் தேய்ந்து கரைந்து போனார். சென்ட் வாசனை போய்விட்டது. என் அப்பாவின் வாசனை என் சொத்து. என் மனம் நினைத்தால் அதனைக் கொண்டுவரும் லாகவம் தெரிந்து வைத்து இருக்கிறது.
இப்போது என் முகமும் மாறிக்கொண்டு இருக்கிறது. பாதி அப்பா முகம். குரலும் அப்படி அந்த கோரோஜனை சக்தி. நான் அவராகி விட்டேன். இது எரிமலை போல. என்று வெடிக்கும் எனத் தெரியாது. ஆனால் இந்த உணர்வு தூண்டி வாழச் செய்கிறது ஆயுள் நேரத்தை மொத்தமாய் இழுத்துக் கரைத்துக்கொள்ள முடியுமா….?.
ஒரு வேண்டுகோள்- . அப்பாவின் சுண்டு விரலை விட்டுவிடாதீர்கள்.