யோகம் தரும் யோகா!

எம். ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும். ஆனால் அதற்காக நாம் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவதில்லை. நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளை எழுதித் தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார். அந்தப் பரிசோதனை, இந்தப் பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிப் படாத பாடு படுத்திவிடுவார். பணமும் செலவழிந்து, நோயும் மாறாத நிலையில், என்ன செய்வது என்று அறியாமல், புரியாமல், வேறொரு விசேஷ வைத்திய நிபுணரைப் பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவோம்.
இதுதான் பலரது வாழ்வில் நிகழும் பரிதாபகரமான சம்பவமாகிவிட்டது. இப்படியெல்லாம் நொந்து, வெந்து, போகாமல் இருப்பதற்கு மிகவும் அருமையான வழி ஒன்றை நமது முன்னோர்கள் ஆக்கி அளித்துச் சென்றுள்ளார்கள். அதுதான் யோகம் தருகின்ற யோகாவாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்தச் சுவரும் இடிந்து விழும் நிலையிலோ, உடைசலாய் ஓட்டையாய் இருக்கும் நிலையிலோ அங்கு சித்திரத்தை வரைய முடியுமா? முடியவே முடியாது! இங்கே சுவர் என்று சுட்டப்படுவது நம் உடம்பையே! எனவே உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராக வேண்டியது கட்டாயமாகும்.
நோய்வராமலும் தடுக்க வேண்டும். நோய் வந்தாலும் அதனால் தாக்கப்படாமல் காத்துக் கொள்ளவும் வேண்டும். இவையெல்லாம் நடை முறைக்குச் சரிவருமா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறதல்லவா? இவற்றுக்கெல்லாம் வழிவகைகளை நமது முன்னோர்களான சித்தர்களும் முனிவர்களும், யோகிகளும் வகுத்து வைத்திருக்கிறார்கள்.
அவை யோகா என்னும் வரமாகும். இந்த யோகம் என்பது மதம், இனம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதம் சார்ந்தது. இதை உணர வேண்டும். இறைவனது படைப்புகள் எண்ணிறந்தன. அவற்றுள் மனிதப் படைப்பே அரியதும் பெரியதுமாகும். உலகினை அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் தனது அறிவாற்றலினால் ஏற்படுத்தி இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன், நோயால் படும் அவஸ்தையும் அதைப் போக்க எடுக்கும் பிரயத்தனங்களும்தான் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? மனம் போன போக்கிலே போவது! மதுவுக்கு அடிமையாவது! அளவுக்கு மிஞ்சி உண்பது! உடலைக் கவனிக்காமல் இருப்பது! ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்துவிடுவது என்று பட்டியலிடலாம்.
மனிதனுக்குள்ளே தெய்வமும் இருக்கிறது. தேவையற்றவையும் இருக்கின்றன. தேவையற்ற எண்ணங்கள் கூடும்போது மனம், தன்னிலையை இழக்கிறது. வாழ்வு தடுமாறுகிறது. மனத்தினிலே சாந்தியும் சமாதானமும் எழுகின்ற வேளையிலே தெய்வம் அங்கே தோன்றி, சிறப்பு எல்லாம் வந்து ஏறுகிறது!
யோகம் பற்றிக் கூறவந்துவிட்டு சமயமும் சன்மார்க்கமும் போதிக்கப்படுகிறது என்று தோன்றுகிறதா? யோகம், ஒரு வாழ்க்கை! யோகம், ஒரு வாழ்கலை! யோகம் என்பது வளத்தை, வலிமையை, வாலிபத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரக் கூடியது. இதனால்தான் “யோகக் கலை சாகாக் கலை” என்றார்கள்!
நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பைக் கவனமாகப் பார்க்காவிட்டால் கவலைப்பட்டே ஆகவேண்டும்! ஆகையால் உடம்பினைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கட்டாயமாகிறது.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே !
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில்கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே !
இதனை இவ்வாறு கூறியவர் சித்தரும் யோகக் கலையில் வல்லவருமான திருமூலராவார். திருமூலரே இந்த உடம்பின் அருமையை, பெருமையை, உயர்வை, அவசியத்தைக் காட்டிய பின்னாவது நம் உடம்பைப் பேணாமால் விட்டுவிடுவது முறையாகுமா! யாவரும் சிந்திப்பது அவசியம் அல்லவா! ”பிராணாயாமம் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகும். இதனை வழங்கியது யோகமாகும். காற்றை வெளியே விட்டு உள்ளிழுத்துச் சிறிதுநேரம் அடக்கினால்… மனம் சற்று அமைதியடையும். முறையான பிராணாயாமப் பயிற்சியினால் உடலின் வெவ்வேறு இயக்கங்களையும், நரம்பு ஓட்டங்களையும், நாம் அடக்கி ஆளலாம். உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களையும் நம் வசப்படுத்தலாம்.
யோகப் பயிற்சியின் மூலம் உடலில் வேறுபாடுகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு புது எண்ணமும் மூளையில் ஒரு பாதையை உண்டாக்குகின்றது. மானிட அமைப்பை முற்றும் காப்பதற்கு இந்த எண்ணப் பாதைகளே காரணம். இப்படிப் பாதைகள் அமைவதால்தான் ஞாபக சக்தியே மனித இனத்துக்கு அமைந்திருக்கிறது. உடலைப் பேண, ஆரோக்கியமாக விளங்க, யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. எல்லாவற்றிலும் சமநிலை கடைப்பிடிப்பது யோக சாதனையால் சாத்தியமாகின்றது.” இவ்வாறு சுவாமி விவேகானந்தர் அவர்கள் யோகத்தின் மகத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இருக்கின்றார். உடல் என்பது தனிப்பட்ட பொருள் அன்று. ஐம்பெரும் தத்துவங்களால் ஆன ஒரு தொகுப்பு. இந்தத் தொகுப்பு தனித்து இயங்க முடியாது. அது இயங்க வேண்டுமானால், அதற்கு ஒரு முக்கியமான பொருள் தேவை. அதுதான் உயிர்.
இந்த உயிர் இருந்தால் மாத்திரம் போதாது. உயிர் இருப்பதை உணர்த்தும் கருவியாக மனமும், அதிலே தோன்றக்கூடிய எண்ணங்களும், அந்த எண்ணங்களுக்கு ஏற்ப இயங்கும் உடல் உறுப்புக்களும் இருந்தால்தான் உடலின் இயக்கம் முழுமை பெறும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் எந்தவொன்று பழுதானாலும், இன்னொன்றின் இயக்கம் பாதிக்கப்படும். உடலும், அதன் உறுப்புக்களும் சரியாக இயங்க வேண்டுமானால், மனமும், அதன் எண்ணங்களும் சீராக இருக்க வேண்டும். மனம் சீர்கெட்டு நோயுறும்பொழுது உடலும் அதன் உறுப்புகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
எனவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது மனமும் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதுதான் அடிப்படை. இங்குதான் யோகம் என்பது எமது வாழ்வுக்குள் வந்து சேர்கிறது. நோய்களை அணுக விடாது, நோயெதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி, பஞ்ச பூதங்களாலான இந்த உடம்பைக் காக்கும் பாரிய பணியினை யோகம் ஏற்று நிற்கிறது. இதனால் எங்கள் வாழ்க்கையில் யோகம் தரும் நிலையில் யோகா அமைந்திருக்கின்றது என்பதை எவராலுமே மறுத்துவிட முடியாது. வெளியில் உடம்பை முறுக்கேற்றுவதில் பலர் நாட்டமுடையவர்களாக இருக்கின்றார்கள். அதற்காகப் பலவிதமான பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். குஸ்தி போடுவது, கராத்தே பழகுவது, இன்னும் பல விநோதமான விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும், பணத்தைச் செலவு செய்து தமது வெளித் தோற்றத்தைப் பேணி நிற்பதை நடைமுறையில் காண்கின்றோம். ஆனால் இவற்றால் எல்லாம் உள்ளுறுப்புகளுக்கு எந்தவித நலன்களும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பயிற்சிகளால் பிரச்சினையை உருவாக்கும் மனம் கூட அமைதியைப் பெற்றுவிடாது.
பணத்தின் அவசியமே இல்லாமல் உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தி ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் ஒரே வழி யோகம் மட்டுமே. ஏழைகளுக்கும் ஏற்றது. வசதி படைத்தவருக்கும் ஏற்றது இந்த யோகம் ஆகும். மற்றைய பயிற்சிகளுக்குக் கூடுதலான உணவுகள் தேவை. யோகப் பயிற்சிக்கோ குறைந்த சாதாரண உணவுகளே போதும். யோகம் பயின்றால் கோபம் குறையும். நிதானம் ஏற்படும். சமநிலை பேணும் எண்ணம் உருவாகும். பதற்றம் குறையும்.
யோகத்தின் அருமை கருதி அதனைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டுசெல்லும் வகையிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலை நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கே யோகாவை பயிற்றுவிக்கின்றனர். யோகாவைக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் இலகுவானது. யோகா செய்வதற்கெனப் பிரத்தியேகமான இட வசதிகள் எல்லாம் தேவையில்லை. சாதாரணமான காற்றோட்ட வசதியுள்ள இடமே போதுமானதாகும். மற்ற பயிற்சிகளின் போது களைப்பைப் போக்க, விதம்விதமான குளிர்பானங்களை அருந்துவார்கள். அல்லது காப்பியோ, தேநீரோ, போன்விட்டா, மைலோ போன்றவற்றையோ வைத்திருந்து நன்றாக அருந்தி மகிழ்வார்கள். பயிற்சி செய்வதுகூட இவற்றை எல்லாம் குடிப்பதற்கோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இவற்றைக் குடிப்பதால் செய்த பயிற்சியின் பலன்கூட அவர்களுக்குக் கிடைக்காமல் போனாலும் போகலாம்.
இவை எதுவுமே இல்லாமல் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைதியாக இருந்து செய்வதுதான் யோகா. காசுச் செலவும் இல்லை. கண்டவற்றைக் குடித்து ஆரோக்கியத்தைப் பாழாக்கவும் தேவையில்லை. குறைந்த உணவும் நிறைந்த திருப்தியும் யோகாவின் முக்கியமான அம்சம் எனலாம்.
இராமகிருஷ்ண மிஷனால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கூடங்களில், யோகா மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் கீழியங்கிய மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தில் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் ஏனையவர்களுக்கும்கூட ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னரே யோகத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு கல்வி கற்றவர்கள் நல்ல திறமையானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
மனித வாழ்க்கை, அகவியல் புறவியல் என்று இருகூறுகளைக் கொண்டது. அக ஆரோக்கியத்துக்குத் தியானப் பயிற்சி உதவுகிறது. புற ஆரோக்கியத்துக்கு யோகப் பயிற்சி உதவுகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பில் ஏற்படும் நோயை – தலையில் இருந்து பாதம்வரை, எலும்புக்கும் தசைக்கும் நரம்புக்கும் நாடிக்கும் குருதிக்கும் குடலுக்கும் பல்லுக்கும் பார்வைக்கும் மனத்துக்கும் தொண்டைக்கும் தோலுக்கும் மூச்சுக்கும் மூளைக்கும் கைக்கும் வருகின்ற அனைத்து நோய்களையும் மருந்தின் துணையில்லாமலேயே யோகா குணப்படுத்தும் வல்லமை பெற்றது. இது இத்துறையில் ஆய்ந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்களின் கருத்தாகும்.
இளமை வரும். சுறுசுறுப்புடன் நினைவாற்றலும் வரும். மனோசக்தியும் மன அமைதியும் உண்டாகும். வீரம் உருவாகும். ஆற்றல் விருத்தியடையும். ஆயுள் பலப்படும். புலமை, நுண்ணறிவு, பழுதில்லா வாழ்க்கை என அத்தனையும் தருவது யோகா ஆகும். இவையாவும் அமைய வேண்டும் என்பதுதானே அனைவரதும் ஆசையும் கனவும்! இவற்றை நமக்கு அள்ளித் தரும் யோகா, வரம் தரும் யோகமாக நம் வாழ்வில் திகழ்கிறது.
சிரித்து வாழவேண்டும். சிறக்கவும் வாழவேண்டும். சதைபெருத்த உடல் பெற்று, சங்கடங்கள் பல பெற்று சந்தோஷம் இழந்து வாழ்வது வாழ்க்கையல்ல. இளமையுடன், வளமையும், இனிமைநிறை எண்ணமும், பொறுமைநிறை உள்ளமும், பொங்கிவரும் சுகமுமே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகும். இந்தச் சிறந்த வாழ்வை நமக்கு அளிக்கவல்ல சஞ்சீவியாக அமைந்திருப்பது யோகா.