இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.

நாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.

பதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினில் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.

தெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள்? முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.

அடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பாராளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.

சரி! தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே! அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே! அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை

வெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி எனைப் போன்ற புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.

இதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.

எதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *