ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு

-நாகேஸ்வரி அண்ணாமலை
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரையாற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அடிக்கடி பல சிறப்பு விருந்தனர்களை வரவழைப்பதுண்டு. நேற்று (மே 10) தெற்காசியத் துறையின் சார்பில் நம் தேசத்தந்தை காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை வரவழைத்திருந்தார்கள். இவர் இல்லினாய் மாநிலத்தில் இருக்கும் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் 22 வருஷங்களாகப் பணியாற்றுகிறார். இவர் சிகாகோ பலகலைக்கழகத்திற்கு வருகிறார் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து எனக்குள் மகிழ்ச்சி பரவியது. காந்திஜி என்னுடைய முதல் ஹீரோ. இரண்டாவதாக போப் பிரான்சிஸ். இவர்கள் இருவரிடமும் நான் எந்தக் குறையும் காண்பதில்லை. யாரும் இவர்களைப் பற்றி என்ன குறைவாகச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை. மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு எழுத்தாள நண்பர் ஒருவர் தான் பெங்களூரில் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் தேசத்திற்காக வசூலித்த பணத்தை அவர்களின் பிரதிநிதியாகக் காந்திஜியிடம் கொடுத்ததாகக் கூறுவார். அந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்காத குறையை இப்போது அவருடைய பேரன்களில் ஒருவரைப் பார்த்துத் தீர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு ஆசை. இரண்டாவதாக அந்த மகானின் வழியில் வந்தவர்கள் எப்படி அமெரிக்கா போன்ற நாட்டில் வசிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வம்.
நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர் உரையாற்றப் போகும் துறை ஒரு மைலில் இருக்கிறது. என்னால் அவ்வளவு தூரம் சிரமமில்லாமல் நடக்க முடியாது. பேருந்து வசதியும் சரியாக இல்லை. வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிவரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் எங்கும் காரை நிறுத்த முடியாது. காரில் போனால் காரை நிறுத்திவிட்டு அரை மைல் தூரமாவது நடக்க வேண்டும். இதற்கு முதலிலேயே வீட்டிலிருந்தே நடந்துபோய்விடலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால் வெளியில் சென்ற பிறகுதான் தெரிந்தது அதிகமான குளிரோடு பலத்த காற்றும் வீசுகிறதென்று. நான் எவ்வளவு தூரம் அவரைப் பார்க்கப் பிரியப்படுகிறேன் என்று அறிந்திருந்த என் கணவர் காரில் என்னை அந்தக் கட்டடத்தின் அருகில் இறக்கிவிட்டுவிட்டு வேறு எங்காவது, முடிந்தவரை பக்கத்தில், கிடைக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வருவதாகச் சொன்னார். அதைவிட வேறு வழி எதுவும் எனக்கும் தெரியவில்லையாதலால் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டேன்.
ஹாலுக்குள் நுழைந்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவருடைய உரை மதியம் 2 மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. அவருடைய பேச்சில் எதையும் விட்டுவிடக் கூடாது என்று நான் விரும்பியதாலும்ஹால் முழுவதும் நிரம்பி வழியும் என்று நான் நினைத்ததாலும் இருபது நிமிடங்கள் முன்பாகவே அங்கு இருந்தேன். ‘இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் இன்னும் பலர் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நேரம் சென்றுகொண்டிருந்தது. இன்னும் சிலர்தான் வந்தார்கள், நான் நினைத்த மாதிரிப் பலர் வரவில்லை. காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அப்போதே அங்கிருந்தார்.
இவர் காந்திஜிக்கு மட்டும் பேரன் இல்லை; தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கும் பேரன். ராஜ்மோகனின் தந்தை தேவதாஸ் காந்திஜியின் நான்காவது மகன்; தாய் லட்சுமி ராஜாஜியின் மகள். தாத்தாக்கள் இருவரைப் போலவே இவரும் கூர்புத்தியையும் எளிமையையும் அணிகலன்களாகக் கொண்டிருக்கிறார். இவர் மனித உரிமைகள் பற்றிய பல அமைப்புகளோடு தொடர்பு கொண்டவர். ‘மாற்றத்திற்கான முதல் முயற்சி’(Initiatives of Change) என்னும் அமைப்போடு அரை நூற்றாண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறார். இதன் அனைத்துலக அமைப்பின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்குப் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தாத்தாக்கள் பற்றியும் வல்லபாய் போட்டேல் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் சாதனைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இன்னும் பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் ஜாதிகளுக்கிடையே ஒற்றுமைக்காகவும் பாடுபட்டிருக்கிறார்.
இவர் பற்றிய விபரம் இங்கே:
அவர் எழுதி 2018-ல் வெளியான Modern South India: A History from the 17th Century to our Times என்ற புத்தகத்தைப் பற்றித் தலைமை தாங்கிய பெண் கேள்விகள் கேட்க இவர் அதற்குப் பதில் அளித்தார். கடைசியாக ‘இப்போது இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். கொஞ்ச நேரம் குரல் எழும்பவில்லை; அவரால் பேச முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு,‘என்னைப் பொறுத்தவரை நான் இளமையாக இருந்தபோது இருந்த இந்தியாவில்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.
அவரோடு நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலே குறிப்பிட்டிருக்கும் அவருடைய புத்தகத்தின் பிரதி ஒன்றை ஹாலிலேயெ வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டோம்.
இந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தில் ஒரேயொரு விஷயம்தான் மனதை நெருடிக்கொண்டிருந்தது. ராஜ்மோகன் காந்திக்கும் என்னுடைய நெருடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கம்போல் எல்லாக் கூட்டங்களிலும்போல் நம் பருப்பு வடையான சிறு தீனியோடு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பார்த்தாலே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இவை எல்லாம் புதைகுழிக்குள் போகப் போகின்றனவே என்று நினைத்து மனம் சஞ்சலப்படும். ராஜ்மோகன் காந்திக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்திருப்பார்கள் போலும். அது மேஜை மீது இருந்தது. அவர் அதிலிருந்து தண்ணீர் குடித்த மாதிரித் தெரியவில்லை. கூட்ட அமைப்பாளர்கள் அவருக்கு ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்தபோது அதை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அதை உபயோகிக்கவேயில்லை.
‘நுகர் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் எப்படிக் காலம் தள்ளுகிறீர்கள்?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ‘எல்லா இடங்களிலும் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவர முடியும்’ என்றார்.
நம் நாட்டின் அரசியல்வாதிகளும் அவர்களுடைய வாரிசுகளும் அடிக்கும் கொள்ளைகளையும் கூத்துக்களையும் தினசரி பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு இவரைப் பார்த்ததும் அந்த நாளைய நினைவுகள் வராமல் இல்லை. தினமும் பொய்களாக உதிர்க்கும் ட்ரம்ப்பின் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு நேற்றைய பொழுது புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தது.