-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
————————————————————-

திருவதிகை வீரட்டானத்தில் முதிய அந்தணராக வந்த இறைவன் திருவடி சூட்டுவது போல் செய்த திருவிளையாடலால், சுந்தரருக்குத் தில்லைசென்று கூத்தனின் தூக்கிய திருவடியை வணங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது அதனால் தில்லை நோக்கி சுந்தரர் விரைந்தார். தில்லையின் எல்லையிலே பத்துக் கல் தொலைவில் கடல் உள்ளது. கடல் கரைமீறிச் செல்ல முயல்வதால் அதன் அலைகள் கரையை மோதுகின்றன. விசேடத் திருநாள்களில் சிவபெருமான் கடற்கரைத் தீர்த்தம் நோக்கி எழுந்தருள்வார் ; அப்போதெல்லாம் அவரைச் சூழ்ந்து அடியார்கள் செல்வர். அக்கடல் அலைகள் இறைவன் திருவடியைத் தொட்டும் , அடியார்களின் திருமேனியைச் சூழ்ந்து வழிபடும். அவ்வப் போது, வழிபடும் பேறு மட்டும் போதாது எனப்பொங்கி எழும் அலைகள், மணலூடே சென்று தில்லைத் திருக்கோயிலைச் சூழ்ந்து அகழியாகி நாள்தோறும் எப்போதும் வணங்கும் ஆவலில் அலைமோதும்!

தில்லையில் தூக்கிய பாதத்தில் அணிந்த சிலம்பு நடஞ்செய்தலால் ஓசை செய்யும்!. இவ்வோசையே சிருட்டித் தொடக்கம்! நாதத்தாற் சிருட்டி தொடங்குதலின் அது சிலம்பொலி எனப்பெறும், நாதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயை தனக்குத்தாரகமாகிய அத்தன் தாள்களாகிய ஞானக்கிரியா சத்திகளினடங்கிநின்று தன் காரியமாகிய நாதத்தைத் தோற்றுவிக்கும். ஆதலின் சுத்தமாயை சிலம்பும், நாதம் சிலம்பொலியுமாமென வழங்கப்பெறும். நல் வினையொலி என்பதும் அது. “திருச்சிலம்போசை யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற“ (திருவுந்தியார்.)

இவ்வாறு கடல்நீர் அகழியாகித் தில்லைக் கோயிலைச் சூழ்ந்து முழுவதும் தழுவி அணைக்கும் அழகைச் சேக்கிழார் கற்பனை செய்கிறார்.

தில்லை மன்றுள் நடனமாடும் பிரானின் திருவடி மலர்கள், திருவருள் தேனைப் பிலிற்றுகின்றன! அகழியைச் சூழ்ந்து மலர்ந்த தாழம்பூக்களில் தேனுண்ட வண்டுகள் , திருவடி மலரின் தேனை உண்டு வாழ்க்கைப் பயனைத் துய்த்து மகிழ முயன்று எழுந்து பறக்கின்றன! அவை முரலும் ஓசை வேதங்களை இசைப்பது போல் உள்ளதாம்! இதனைச் சேக்கிழார்,

‘’ மன்றுளாடும் மதுவின் நசையாலே மறைச்சுரும்பறை புறத்தின் மருங்கே ‘’

என்றுபாடுகின்றார்

இறைவன் திருக்கோயில் மதில் குன்று போல உயர்ந்து விளங்குகின்றது. அதனைக் கைலை மலை என எண்ணிக் கடல்நீர் அகழியாகி அரவணைக் கின்றதாம்! சிவபிரானாகிய அருள்மணி, மதிலாகிய மலையுச்சியில் ஒளி வீசுகின்றதாம்! இதனைச் சேக்கிழார் , ‘’ குன்றுபோலும் மணி மாமதில் சூழும் குண்டகழி !’’ என்று குறிப்பிடுகிறார்.

அந்த அகழியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களில் மொய்த்த வண்டுகள் , தேனின் வண்ணத்தில் இருந்தன! அவை, கரையில் வளர்ந்திருக்கும் தாழம் பூக்களில் புகுந்து திளைக்கின்றன! உடனே அவை முழுநீறு பூசிய கோலம் கொள்கின்றன! அவை அதனால் தில்லை நாதன் திருவடியை என்றும் எண்ணிச் செல்லும் சிவனடியார்களாக மாறி, மேனியில் திருநீறு சண்ணித்த வேடம் கொண்டு சென்று சென்று ஐந்தெழுத்தை ஒதுவதுபோல் முரல்கின்றன!

“தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்
அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ“

என்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் உபதேசித்தருளிய சுரும்பரின் வழிவழி மரபில் வந்தவை இந்த வண்டுகள். ஆதலின் உள்ளே மன்றினில் நிறைந்த மதுவை அளவுபடாது உண்ணும் மறைச்சுரும்பர் எடுத்துப்பாட, அதுபோலவே புறத்தே உள்ள நாமும் செய்வோம் என்று கமலவண்டு அச்செயலுக்குத் தக்க வேடமாகிய நீறுபூண்டு அடியார் கோலத்துடன் சென்று சென்று முரல்கின்றன என்பது குறிப்பு.

இதனை அங்கு வரும் சுந்தரர் காணுகின்றார்! அதனால் அவர் சிந்தை சிவபிரான் மேல் பேரன்பு கொண்டு பக்தியில் திளைக்கின்றது. அவ்வாறே அவர் தில்லை நோக்கிச் சென்றார்! இதனைச் சேக்கிழார்,

‘’கமல வண்டு, அலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித்
தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்றுமுரல் கின்றனகண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.’’

என்று பாடுகின்றார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் ,

“மன்றுளாடு மதுவின் நசையாலே
மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழிக்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித்
தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்று முரல்கின்றன கண்டு
சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்!”

இப்பாடலில் ‘துன்றுநீறு’ என்பது வண்டுகள் பரபரப்புடன் தாழம்பூவில்புகுந்து முழுவதும் மூழ்கியதால் உண்டான வேடத்தைக் குறிக்கும். அடுத்து ‘தூய நீறு’ என்ற தொடர் சிவனடியார்கள் உளத்தூய்மையுடன் பக்தி மேலிட முறையாக அணிந்து கொண்ட திருநீற்றை உணர்த்தியது. இதனை மேலும்,

‘’கைதை துன்று நீறுபுனை மேனிய ஆகி தூய நீறுபுனை தொண்டர்கள் என்ன – வண்டுகள் தாழைப் பூவினுட் போந்து வெளிவரும்போது அதனுட் பொருந்திய மகரந்தம் தமது உடம்பிற் றோய்ந்து வரும். அப்போது காண்போர்க்கு முழுநீறு பூசிய அடியவர்களைப் போன்று தோன்றும்.

கைதையில் துன்றுநீறு – உண்மையும் தூய்மையுமில்லாத மாயா காரியப் பொருள். ஆனால் உண்மையான தூய திருநீற்றின் தோற்றம்மட்டும் பொருந்தியது. ஆதலின் இதனைத் துன்று நீறு எனவும், அதனைத் தூய நீறு எனவும் கூறினார். பொருள்கள் காண்போரின் மனப்பான்மைக் கேற்றவாறு நினைவுண்டாக்குதல் இயல்பு.’’ என்று சி.கே.எஸ் அய்யா விளக்குவார்

மதுவின் நசையாலே என்றதொடர் தரும் நயம்எண்ணிமகிழத்தக்கது. சிறுசிறு துளியாய்ப் பல பூக்களிற், போய் உண்டும் நிரம்பாது நாவிற்கு மட்டும் சிறிதுகாலம் இனிமை தருவதும், அதிக முண்டால் நோய் தருவதுமான, எளிய மலர்த்தேனைத் தேடி அலையாது, பொருந்திரளாக ஒரே இடத்தில் நுகரத்தக்கதாய் எல்லா இந்திரியங்களுக்கும் உயிருக்கும் எப்போதும் இனிமை தருவதாய் உள்ள பெருந்தேனை உண்ணுவோம் என்ற நசையைக் குறிக்கும். சமய ஈடுபாடும் , இலக்கியச்சுவையும் ஒருங்கே அமைந்த இப்பாடல் சேக்கிழாரின் புலமைக்குத் தக்க எடுத்துக் காட்டாகும் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *