Featuredஅறிந்துகொள்வோம்கட்டுரைகள்பொது

கல்வெட்டு குறிக்கும் ஆரியர் என்பவர் யார்?

-சேஷாத்ரி ஸ்ரீதரன்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் மூன்றாம் இராசராச சோழன் 11 ஆம் ஆண்டு 11 வரிக் கல்வட்டு

 1. ஸ்வஸ்த்திசிரி [!] திருபுவனச் சக்கரவத்திகள் இராசராசதேவற்கு
 2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு வாலிகண்டபுரத்து உடையார்
 3. திருவாலீஸிரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெட்டுக்
 4. கலனையும் நிறவறநிறைந்து குறவறக்கூடி கல்வெட்டியபடியாவது
 5. பலமண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திர மேழிப்
 6. பெரியநாடான யாதவர் குலத்தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான
 7. மலையமான்களும் காயங்குடி கண்ணுடை அந்தணரும் சம்புவர்குலபதிப்
 8. பன்னாட்டாரும் பதினென் விஷயத்து வாணிய நகரங்களும் பொற்கோயிற் கைக்கோளரும்
 9. யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வன்த நன்மைத் தீமை
 10. அனைவற்கும் ஆவதாகவும் யிப்படி விலங்கிலோமாகில் மாறுடாதிக்குங்
 11. கீழ்சாதிக்குங் தாழ்வு செய்தோமாக இத்தனை யிப்படி ஒரு காலாலும் யிருகாலாலும் முக்காலாவதும்.[!]

கலனை – ஒன்றற்கமைந்த பல வகை உறுப்புகள், parts, as of a whole; ஆரியர் –உயர்குடியர், aristocrat, noble; விலங்கிலோமாகில் – குறுக்காக இருந்தோமானால்; மாறுடாதி –

விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் பொ.யு. 1227 இல் வடகரை வன்நாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து வாலீசுரர் கோவிலில் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் நிறைவுறநிறைந்து குறைவறக் கூடித் தாம் கொண்ட முடிவை கல்வெட்டாய் வெட்டுவித்த செய்தியாவது யாதெனில், “பல மண்டலங்களில் வாழுகின்ற பிராமணர் எனும் அந்தணர், ஆரியர் எனும் வேளாண்கள், சித்திரமேழிப் பெரியநாடான யாதவகுலத் தலைவரான நத்த மக்கள், சதிரமுடித் தலைவரான மலையமான்கள், காயங்குடி கண்ணுடைய பிராமணர், வன்னியரான சம்புவர்குலபதிப் பன்னாட்டார், பதினென் விஷயத்து வாணியர், பொற்கோவில் கைக்கோளர் ஆகியோருடன் இடங்கை தொண்ணூற்று எட்டு உட்பிரிவினரும் கூடி ஒருவர்க்கு வந்த நன்மை தீமையை நம்மில் அனைவர்க்கும் ஏற்பட்டதாகக் கருத வேண்டும் அந்த அளவிற்கு ஒன்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமைக்கு குறுக்காக இருந்தோமானால் கீழ்சாதி மக்களுக்கு தாழ்வு செய்தோம் என்று கருதக்கடவது”. இதனை ஒரு காலாலும், இருகாலாலும், முக்காலாவதாக என்று கல்வெட்டு முற்றுப்பெறாமல் விடுபட்டுள்ளது எனவே அதன் பொருள் விளங்கவில்லை.

சமூகத்தில் ஏதோ ஒரு கேடு நிகழ்ந்ததால், குறிப்பாக அதிக மழை அல்லது வறட்சி இவற்றால் ஏதோ ஒரு வற்கடம் (பஞ்சம்) வந்த போது அனைவரும் ஒவ்வொருவரது இன்ப துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று வலங்கை இடங்கை கூட்டத்தைக் கூட்டி வற்புறுத்தப்படுகின்றது. இவ்வாறு நடந்துகொள்வதற்கு எதிராக இருப்பது உழைக்கும் மக்களை தாழ்வு செய்தது போன்றதாகும் என கல் வெட்டி உள்ளனர். இங்கே ஆரியர் என்ற சொல்லாட்சி வேளாண் என்ற அரசகுடிகளைக் குறிக்கின்றது. 9 ஆம் நூற்றாண்டில் சோழரது பேரரசு ஆட்சியில் அரச குடியினருக்கு என்று ஒரு சாதி அமைப்பு உருவாகியது. இதில் இணைந்து வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் தம்மை வேளாண் என்று அறிவித்துக் கொண்டனர். பின்னாளில் இந்த வேளாண் என்ற சாதி பெருவாரியாக வெள்ளாளரோடு கலந்து விட்ட பண்ணை சாதி ஆகும். இந்த வேளாண்கள் படையாச்சி, கொங்கு வேளாளார், துளுவ வேளாளர், கள்ளரிலும் கலந்துள்ளனர். இந்த வெள்ளாளார்தாம் இக் கல்வெட்டில் ஆரியர் எனப்படுகின்றனர். இங்கு ஆரியர் என்பது உயர்குடியோர் என்ற பொருளில் தான் குறிக்கப்படுகின்றது. விந்தை என்னவெனில் வரலாற்றில் உண்மையாகவே ஆரியர் என்று குறிக்கப்பட்ட இந்த சாதி மக்கள் தாம் பின்னாளில் பிராமணரைப் பார்த்து ஆரியர் என்று சொல்லி தூற்றி அவமானப் படுத்தி வெறுப்பை அவர்பால் சமூகத்தில் வளர்க்கின்றனர். இதற்கு மனோன்மணியம் சுந்தரனார், மறைமலை அடிகள் ஆகியோரைக் காட்டாலாம். தமிழகத்தை ஆண்ட பல்லவ, வாண, நுளம்ப வேளிர்கள் தமிழகத்தின் குமரிப் பகுதி வரை சென்று ஆண்டுள்ளனர். இவர்கள் உண்மையாகவே ஈரான் ஈராக்கு பகுதியில் இருந்து வந்த ஆரியர்கள் என்பதைப் பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் இவர்கள் தம் அயலகத் தாயகத்தை மறைத்து பிராமணர் தாம் ஆரியர் என்று கூறித் திரிகின்றனர். ஆனால் கல்வெட்டுகள் இவர்தம் பொய்களை தோலுரித்துக் காட்டுகின்றன. அடுத்து வரும் ஒரு கல்வெட்டு இதனை உறுதி செய்கின்றது.

பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 300, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153. ARIEp 1944, B. No: 276

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர
வத்திகள் மதுரையும் ஈழமும் க
ருவூரும் பாண்டியன் முடித்தலை
யும் கொண்டு வீரா அபிஷேகமு
ம் விஜையா அபிஷேகமும் பண்
ணியருளிய திரிபுவன வீரதே
வற்கு யாண்டு 37 ஆவது
வம்பணாரும் புண்டரிக மலர்
மடந்தை பாலடி நாளுஞ்
சம்பு மாமுனி மாபலி வந்தோ. . . . .
சிகையில்லாச கங்கை நாதா
ர(வி)ந்த மலற்க்குழற் கண்ணக் கவ. . . .
மகள் கழல் தொழ ஆரியோர்,
அந்தணர் தம் ஆகுதியில் அ
றங்காவல் பெற்றுடை
யோர் வஞ்சி, கூடலுரை, கா
ஞ்சி, வளவர் கோமானருளினா
லே தஞ்சையுள்ளுங் காப்ப
தற்க்குச் சக்கர வாளம் பெற்று
டையோர் நாயனார் திருச்
சிற்றம்பலமுடையார் ஸ்ரீ
பாதங்களை நோக்கி பன்
னெடுங்காலம் பணி
கொண்டு அருநவதிக்கு
எழுபத்தொன்பது னாட்
டுப் பன்னாட்டோம்

விளக்கம்: தாமரை மலரில் உறையும் இலக்குமியின் திருவடிகளை நாளும் வணங்கும் சம்பு மாமுனிவரின் பெருவேள்வியில் இருந்து வந்தோர். தலைக் கொண்டையில் ஆகாய கங்கைதனைக் கொண்ட கையிலாச நாதன் சிவனின் தாமரைப் பாதத்தை, உமையின் பாதத்தை வணங்கும் ஆரியரான அரசகுடி வேளாண் மக்கள் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்து நிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள். வஞ்சி, கூடல் (கருவூர்), காஞ்சி ஆகிய தேசங்களைக் காப்பதுபோல சோழர் கோமான் கொடுத்த உரிமையால் தஞ்சையைக் காவல் காக்க சங்கரவாளப் படையைப் பெற்றவர்கள். தில்லை திருச்சிற்றம்பலமுடைய கூத்தனின் திருப்பாதங்களில் பன்னெடுங்காலம் பணிசெய்து வருபவர்கள். நவதிக்கு (ஒன்பது திசை) 79 நாடுகளிலும் வாழும் பன்னாட்டவர் (வன்னியர்கள்) என்று தம் இனத்து சிறப்பை மெய்க்கீர்த்தியாக கல்வெட்டி உள்ளனர்.

மூன்றாம் 37 ஆம் ஆண்டு ஆட்சியில் பொயு.1215 இல் வெட்டிய கல்வெட்டு. வன்னியர்களை “சம்பு மாமுனிவன் வேள்வித்தீயில் தோன்றியவர்கள்” என்று சொல்கிறது. வேள்வித்தீயில் தோன்றியவர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்கள்” என்பது தெளிவாகும்.

மேலும் இக்கல்வெட்டு கையிலாசநாதரான சிவன் பார்வதியை வணங்கும் அரசகுடி ஆரியர் அந்தணரைக் கொண்டு வளர்க்கும் வேள்வித் தீயைக் காத்துநிற்கும் காவல் உரிமை பெற்றவர்கள் வன்னியர்கள். அந்தணர்கள் வளர்க்கும் வேள்விக்குண்டத்தை காவல் செய்யும் பணி என்பது க்ஷத்ரியர்களின் பணி என்பதாகும். எனவே, வன்னியர்கள் என்பவர்கள் “க்ஷத்ரிய மரபினர்” என்பது உறுதியாகிறது.

பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் இராசத்தான் அபு மலையில் மேற்குஆசியாவில் இருந்து வந்த பார்த்தியர், சகரர் உள்ளிட்ட அயல்நாட்டு ஆட்சியாளர்களுக்காக வேள்வி வளர்த்து இவர்களை இராசபுத்திரர் என்ற பட்டத்துடன் இவரது ஆளும் உரிமையை தக்கவைத்து வேள்வி சமயத்தின் புரவலர், காவலர் என்ற பொறுப்பையும் பிராமணர் இவர்குளுக்குத் தந்தனர். இந்த வேள்விச் சடங்கு ஏன் நிகழ்த்தப்பட்டது என்றால் குப்தர்கள் இந்த அயலக ஆட்சியாளர்களை வந்தேறிகள் என்று சொல்லி சொல்லித் தான் உள்நாட்டு மக்களிடம் இருந்து அயன்மைப்படுத்தி இவருடன் கடும்போர்ச் செய்து வெற்றி கொண்டு இவரையும் இவர் ஆட்சியையும் வடக்கே ஒழித்துக் கட்டினர். அந்த நேரத்தே இந்த கையறுநிலையில் இருந்து இவர்களை விடுவிக்க இவர்குளுக்கு உதவிக்கை நீட்டி ஒரு வேள்வியால் இவர்களை உள்நாட்டு மக்களாக, இராசபுத்திரராக அறிவித்து அரசியலில் இவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு தந்தனர் பிராமணர். அதன்பின்பு தான் சத்திரியரை விட பிரமணரே முன்நிலை என்ற வருணாசிரம நிலையை, ஸ்தானத்தை பிராமணர் இவர்களின் ஒப்புதலோடு பெற்றனர். இந்த இராசபுத்திரர் தாம் கொண்ட சூளுரைக்கு ஏற்ப வேள்வி சமயத்தையும், புராண சமயத்தையும் பேரளவில் உத்தாரம் (ஆதரவு) கொடுத்து தூக்கி நிறுத்தினர். தெற்கே பல்லவரும் சாளுக்கியரும் அத்தகு இராசபுத்திரர் ஆவர். அதனால் இவர்களால் சைவமும் வைணவமும் மதங்களாக வளர்ந்தன.

மேற்கண்ட அரியலூர் மாவட்டக் கல்வெட்டைப் படியெடுத்து வெளியிட்டவர் முனைவர் இல. தியாகராஜன். இக்கல்வெட்டும் செய்தியும் James Robert சோழனார் முகநூல் பதிவில் உள்ளது.

https://tamilnadu-favtourism.blogspot.com/2019/02/valeeswarar-temple-valikandapuram-perambalur.html

வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில், வரலாறு, சிறப்பு மற்றும் இப்பொழுதைய நிலை (1)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்தன மண்டபம் தெற்கு சுவர் 24 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ[ ] கோயில் [பதிமு] பல
 2. கொத்திலும் செய்வதாக
 3. பெருமாள் சுந்தரபாண்டிய
 4. தேவர் ப்ரஸாதஞ் செ[ய்]தருளின
 5. திருமுகத்துக்கு கல்வெட்டு
 6. ஏ தன் விஸ்வமஹிபாலமணி கொ
 7. .. ர ..ண்ட்நம் [ ] ஸ்ரீமன் ஸூந்த்ரபாண்ட்யஸ்ய
 8. [ஸா]ஷநம் வைர . ஷநம் [ ] த்ரிபுவனசக்
 9. (க்)கரவ[ற்]த்தி கோனேரின்மை கொண்டா
 10. ன் அழகிய மணவாளப்பெருமாள்
 11. கோயில் ஸ்தாநபதிகளுக்கு இக்கோ
 12. யிலுக்கு முன்பு செய்துபோதும் [பதிமு]
 13. ஒரு கொத்தாகப் பெறாதுஎன்னூமித்தையிட்டு
 14. பலகொத்துமாக பத்தாவது ஆவணி மாத மு
 15. தல் [பதிமு] இட்டுக்கொள்வதாகவும் பொற்
 16. காவல் உள்ளவிடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும்
 17. ஒக்க காக்கவும் பண்ணுவதாக வாணாதராயற்குச்
 18. சொன்னோம். இப்படிக்கு இவ்வோலை பிடிபாடா
 19. க கொண்டு இப்படி செய்துபோதவும் ப
 20. ண்ணி இப்படி சந்த்ராதித்யவல் செய்வதாக கல்
 21. லிலும் செம்பிலும் வெட்டிகொள்க. இப்படி
 22. சொல்லுவதாக யா _ _ _ _ _ _ _ மாகக் காட்டச் சொ
 23. ன்னோம் இவைகச்சிநெல்மலி உடையா
 24. னெழுத்து யாண்டு 10 ள் 405

திருமுகத்துகல்வெட்டு – அரசாணைக் கல்வெட்டு; ஸ்தானாதிபதி –தலைவர் chief; ஒக்க – இணைந்து

விளக்கம்: பெருமாள் சுந்தர பாண்டியன் என்னும் சடவர்ம சுந்தரபாண்டியன் வாணாதராயருக்கு தனது10 ஆம் ஆண்டு ஆட்சியில் (1261 பொ.யு.) 45 ஆம் நாளில் இட்ட அரசாணையாவது, “கோனேரின்மை கொண்டான் அழகிய மணவாளப் பெருமாள் (திருவரங்கன்) கோயில் தலைவருக்கு! முன்பு செய்ததுபோல பதிமு ஒரு கொத்தால் செய்யப்பெறாது பலகொத்தாக சேர்ந்து ஆவணி 10 ம் நாள் பதிமு இட்டுக்கொள்ள பொற்காவல் (கருவூலம்) உள்ள இடமெங்கும் ஆரியரும் உள்ளூராரும் இணைந்து காத்தல் செய்ய வாணாதராயருக்குச் சொன்னோம். இதை இந்த ஓலையில் உள்ள வழிகாட்டுதல்படி சந்திராதித்தவர் வரை நடந்தேற கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க”.

கருவூலத்தை காக்க ஆரியரும் உள்ளூராரும் என்ற சொற்றொடரில் பயிலும் ஆரியர் என்ற சொல் காவல் காக்க என்று வருவதால் பிராமணரைக் குறிக்கவில்லை வேளாண் அரசகுடியாரைக் குறிப்பதே என்பது தெளிவு. இதனால் 13 ஆம் நூற்றாண்டில் வேளாண் என்போர் ஆரியர் என்று அறியப்பட்டனர் என்றாகின்றது.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 226, No 202 A.R. No 84 of 1938-39

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோவில் சந்திர புஷ்கரணிக்கு எதிரே உள்ள சுவரில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

 1. கோனரயவம்மர் த்ரிபுவனச்சக்ரவத்திகள் ஸ்ரீ குலசேகரதேவர்க்கு யாண்டு 4 ஆவது ஆடி மாதம் 10 தியதி / நாள் கோயில் அகரம் இரவிவம்மச்சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு
 2. திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களில் ஸ்ரீ வைகுந்ததாதரேன் பற்றுமுறி குடுத்த பரிசாவது [ ] இவ்வகர நத்தத்துக்கு வாஸ்து ஸேஷத்துக்கும் தவராசன் படுகைக்கும் விலையாக நிச்சயித்து திருக்கோட்டகாரத்தில்
 3. ஒடுக்குவதாந பணம் 2200. இப்பணம் இரண்டாயிரத்திரு நூற்றுக்கும் பற்றின திருப்பணிக்கு பிறித்த பணத்தில் பற்றின இரண்டாவது எதிராமாண்டு தை மாதம் 29 ம் தியதி திருப்பேரில் பிறி
 4. த்துத் தந்து பற்றின பணம் 200 ம் திருமுற்றுப்பற்று ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்து பற்றின பணம் 829 ம் ஆகப் பணம் ஆயிரத்திருபத்தொன்பதும் ஆனி மாதம் இரண்டாந்தியதி ஆ
 5. ரியரைத் தெண்டம் நிச்சயித்த பணத்தில் பற்றின பணம் 1130. கைக்கோளர் பேரால் தெண்டம் நிச்சயித்த பணத்தில் குலசேகரதாதர் தந்து பற்றின பணம் 41 ம் ஆக பணம் 1171 ஆக பணம் 2200
 6. இப்பணம் இரண்டாயிரத்து இருநூறும் இப்படிகளால் பற்றிக் கொண்டு இரண்டாவதில் எதிராமாண்டு சித்திரை மாதம் ஏழாந்திய[தி] நாள் திருச்சிவிகைக்கும் திருவாசிகை[யு]ம் உள்ளிட்டனவயிற்றுக்கு நான்
 7. பொற்பண்டாரத்தில் ஒடுக்கின பொன்னிலே இவ்வாட்டை மார்கழி மாதம் 13 தியதி பிறித்து குடுத்து
 8. பற்றுமுறி குடுத்தேன் பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுன்ததாதரேன் [ ]. இப்பணம் பொற்பண்டாரத்திலே முதலிட்டு குடுத்தமைக்கு.

கோயில் அகரம் – திருவரங்கம் அக்கிரகாரம்; பற்றுமுறி – ஒப்புகைச்சீட்டு, receipt, தண்டம் – fine; சிவிகை – சிறு பல்லக்கு; வாசிகை – ; திருக்கோட்டாகாரம் / பொற் பண்டாரம் – கருவூலம், முதலிட்டு – முன்பணம், advance

விளக்கம்: குலசேகர பாண்டியனுக்கு 4 ஆம் ஆட்சிஆண்டில் (1317 சூலை7 ல்) ஆடி மாதம் 1 ம் நாள் கோயிலான திருவரங்கத்தின் அக்கிரகாரமான இரவிவர்மச் சதுர்வேதிமங்கலத்து பட்டர்களுக்கு திருப்பதி வைணவரான ஸ்ரீவைகுந்ததாசர் கொடுத்த பற்றுமுறி பரிசு யாதெனில் அந்த அக்கிரகாரத்து நத்தத்திற்கும் வாஸ்துசிறப்பிற்கும் வாங்கிக் கொடுத்த தவராசன் படுகை நிலத்திற்காக விலை தீர்மானித்து அவர் 2,200 பொன்னை திருக்கோட்டாகாரத்தில் செலுத்தினார். பின்பு இப்பணத்தை திருப்பணிக்காக பிரித்து வழங்குகிறார். இதாவது சிவிகை, வாசிகை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இவர் கருவூலத்தில் செலுத்திய பொன்னில் அவ்வாண்டு மார்கழி மாதம் 13 ம் நாள் அப்பணத்தை பிரித்துக் கொடுத்ததற்கான, இதாவது பண்டாரத்திலே முன் பணத்தை கொடுத்ததற்கான பற்றுமுறியை பட்டர்களுக்கு ஸ்ரீ வைகுந்ததாசர் கொடுத்தார். அவருக்கு இந்த 2,200 பொன் எப்படி வந்ததென்றால் பணம் பெற்ற மூன்றாம் ஆண்டு தை மாதம் 29 ம் நாள் இறைவன் பேரில் பிரித்துத் தந்த பணம் 200 ம் ஜகதேகவீர சதுர்வேதி மங்கலத்தில் பெற்ற பணம் 829 ம் ஆக மொத்தம் 1029 பணம். ஆனி மாதம் இரண்டாம் நாள் ஆரியருக்கு தீர்மானித்த தண்டம் பணமாக பெற்றது 1,130. அதேபோல் கைக்கோளரிடம் தண்டமாக தீர்மானித்து குலசேகரதாசர் தந்து பெற்ற பணம் 41 என மொத்தம் 1171 பணம் ஆகும். 1029 + 1171= 2,200.

குலசேகரதாசரும் வைகுந்த தாசரும் துறவிகள் போலத் தெரிகின்றது. போர்த் தொழில் செய்யும் வேளாண் ஆரியரும், கைக்கோளரும் தாம் போரிலோ அல்லது வேறு ஒரு காரணமாகவோ செய்த கொலை முதலான குற்றச் செயலுக்கு கழுவாயக செலுத்திய தண்டப் பணம் 1,171 என கருதலாம். ஏனெனில் பணம் எதற்காக தண்ப்பட்டதுஎன்ற செய்தி இல்லை.

பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 24, பக் 267, No 244 A.R. No 36 of 1936-37

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  மேலும் தெளிந்த விளக்கத்திற்கு https://groups.google.com/d/msg/vallamai/RWYcKp70BDg/RpH8A77dAwAJ

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க