இந்தியக் குடியரசின் அவலம்!

நாகேஸ்வரி அண்ணாமலை

கர்நாடகாவிலுள்ள தும்கூர் ஜில்லாவில் நடந்த ஒரு சம்பவம் பற்றி, செப்டம்பர் 18 அன்று ‘த ஹிந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  அதைப் படித்தபோது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.  தலித் வகுப்பைச் சேர்ந்த, சித்ரதுர்கா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. நாராயணஸ்வாமி, பெம்மனஹள்ளி என்ற மாவட்டத்திலுள்ள, யாதவ சமூகத்தினர் வாழும் ஒரு குடியிருப்பான கொல்லரஹட்டி என்ற இடத்திற்குச் சென்றபோது, அங்கு வாழும் யாதவ இனத்தினர் அந்தக் குடியிருப்புக்குள் அவர் தலித் என்பதால் அவரை விடவில்லையாம்.  இருப்பினும் அவர் இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லையாம்.  ‘இவரை உள்ளே விட மறுத்தவர்கள் மேல் புகார் கொடுப்பது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வல்ல’ என்று கூறியிருக்கிறார். மாவட்ட கலெக்டர் ராகேஷ் குமார், மறுபடி இரண்டு நாட்களில் அவர் அங்கே போகப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

தலித்துகளுக்கு உள்ளேயே கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இந்தக் குடியிருப்பில் அனுமதிக்கப்படுகிறார்களாம்.  ஆனால் நாராயணஸ்வாமி, மடிகா வகுப்பைச் சேர்ந்தவராதலால் அவர் உள்ளே போவதற்கு அனுமதி இல்லையாம்.  தன்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் தன்னை இழிவுபடுத்திய செயல் இது என்று அவர் கூறியிருக்கிறார்.  அந்தக் குடியிருப்பிலுள்ள பூசாரிகள்தான் இவர் அங்கு செல்வதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதை அறிந்திருந்தும் நாராயணஸ்வாமி, ‘மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் மனமாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.  என்னுடைய செயல்களினால் அவர்களுடைய உள்ளங்களில் இடம் பிடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

யாதவப் பேரவைத் தலைவர் சமாதான முயற்சியாக அந்தக் குடியிருப்பு மக்கள் திரு. நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பார்கள் என்று கூறியதோடு, ‘இந்த ஜனங்கள் எல்லோரும் படிப்பறிவில்லாதவர்கள்; எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  எங்கள் தலைவர்களும் ஸ்வாமி யாதவானந்தாவும் கொல்லரஹட்டிக்குப் போய்வந்திருக்கிறார்கள்.  அங்கு ஜனங்களை நாராயணஸ்வாமியை வரவேற்று உபசரிப்பது பற்றிச் சொல்லிச் சம்மதிக்க வைத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.  ஹிரியூர் சட்டமன்ற உறுப்பினர் ரூபா சீனிவாசன், நாராயணஸ்வாமியைக் குடியிருப்புக்குள் கூட்டி வருவதாக வாக்களித்திருக்கிறாராம்.

இந்தக் குடியிருப்பு மக்களுக்கு (பலர் இன்னும் குடிசையில் வாழ்கிறார்களாம்) வீட்டு வசதிகள் செய்து தரவும் வைத்திய வசதி செய்து தரவும் ஒரு மருத்துவரையும் சில அதிகாரிகளையும் தான்னோடு கூட்டிச் சென்ற நாராயணஸ்வாமியைத்தான் அந்தக் குடியிருப்புவாசிகள் உள்ளேவிட மறுத்திருக்கிறார்கள்.  தங்களுக்கு நன்மை செய்ய வருபவரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் அவர் தலித் என்பதால்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘இந்தச் சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது. இதை பி.ஜே.பி. முதல்வர் கண்டிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.  முதல்வர் எடியூரப்பா இந்தச் சம்பவம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  பி.ஜே.பி. மேலிடமும் அப்படியே.

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.  தலித்துகள், அவர்கள் மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும்கூட அந்த மக்கள் வசிக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலை இன்னும் இருக்கிறது.  எப்படிப்பட்ட கேவலம் இது.  இன்னும் தலித்துகள் பற்றிய எண்ணம் மதகுருமார்களிடம் இப்படி இருக்கிறது என்று அறியும்போது இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு குடியரசாக விளங்குவதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

19-ஆம் தேதியிட்ட  இந்து நாளிதழில் வந்த செய்தி, இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம் என்ன என்றும் இம்மாதிரிப் பல இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குள்ளேயே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்குக்கூட இவர்கள் தலித் என்பதால் அங்குப் போவதில்லை என்றும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறது.

இந்தப் பிரச்சினையின் உண்மைக் காரணம், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதல்ல.  அங்குள்ள மதகுருமார்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தொகுதிக்குள்ளும் அங்குள்ள கோவில்களுக்குள்ளும் போவதை விரும்பவில்லை.  இந்த மதகுருமார்களைப் பொறுத்தவரை அவர்கள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களேயானாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.  அதனால் அவர்களை தொகுதிக்குள் எங்கும் அனுமதிப்பதில்லை.  தலித்துக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடுவதற்குத் தலித் வேட்பாளர்களை நிறுத்தும்போது அவர்களுடைய கட்சியும் அந்த வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதியின் தலித் அல்லாத வாக்காளர்களும் ஓட்டளிப்பார்களா என்பதைப் பொறுத்துத்தான் தேர்ந்தெடுக்கிறார்களாம்.  இக்காரணத்தால் வேட்பாளர்களும் தலித் அல்லாத வாக்காளர்களையும், அவர்கள் தங்களை இழிவுபடுத்தினாலும், திருப்திப்படுத்தவே விரும்புகிறார்களாம்.  இந்த வாக்காளர்களில் பலரும் மதகுருமார்கள் நினைப்பதுபோல் தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்களை கோவில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.  தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக இந்த வேட்பாளர்களும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டுகொள்வதில்லை என்பதோடு புகாரும் கொடுப்பதில்லை.

பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப் பரிவாரங்கள் இது பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏனென்றால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் இவர்களே.

யாதவ குலத் தலைவர் சொன்னதுபோல் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பது உண்மையில்லை; பல நூற்றாண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட தலித்துகளுக்கும் இப்போது மற்றவர்களோடு சம உரிமைகள் உண்டு, அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்ற உணர்வுதான் இல்லை.  இந்த உணர்வைத்தான் அவர்களுக்குக் கொண்டுவர வேண்டும்.  இந்தப் புது நியதியை ஒப்புக்கொள்ளாதவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும்.

தலித்துகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் மற்ற குடிமக்களுக்கு உரிய எல்லா உரிமைகளும் உண்டு என்ற அடிப்படை  ஜனநாயக உணர்வுகூட இல்லாத மக்களுக்கு குடியரசு ஒரு கேடா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *