படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் புகைப்படக்கலை நிபுணர் ஷாமினியுடையது. இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். ஷாமினி, சாந்தி இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
முகத்தில் பலவண்ணக் கலவையோடும், கலையாத புன்னகையோடும் சிலையென நின்றிருக்கும் இப்பெண்ணின் அகத்துணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டப் பாக்களோடு காத்திருக்கின்றார்கள் பாவலர்கள். அவர்களை வரவேற்கின்றேன்!
*****
”அன்பை அள்ளி அள்ளி அனைவர்க்கும் அளித்திட வானவில்லே இவள்மீது தன் வண்ணங்களைத் தூவி வாழ்த்தியதோ?” என்று இவ் வண்ணப் பாவையைக் கண்டு வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
வானவில்!
வானில் தோன்றிய வெண்ணிலவு
மஞ்சள்பூசி வந்ததோ மஞ்சள் நிலவாய்?
வியந்து விழித்த விழிகளில்
காப்பியுடன் நின்றிருந்தாள்
மஞ்சள்பூசிக் குளித்து முடித்த அன்னை இவள்
வெட்டிக் கதை பேசி
வீண் அரட்டை அடிக்கும் பாட்டியிடம்
காரணம் கேட்டு அறிந்திடச் சென்றேன்
மஞ்சள் பூசி மலர்ந்த முகத்துடன்
உற்சாகமாய்ச் சொல்ல ஆரம்பித்தாள்
தீமை அண்டாமல் இருக்க தேகம் ஜொலிக்க
மனம் விரும்பிய மணவாளன் கரம்பிடிக்க
நினைவில் அவனை நிறுத்திப்
பலரும் மறந்து போன பழக்கமதை
தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதைச்
சொல்லி முடித்தாள்!
மஞ்சள் வண்ணம் ஒன்றிற்கே
இத்தனை மகிமை இருக்கையில்
இத்தனை வண்ணங்களை
பூசி வந்து நிற்கும் இவள் யாரோ
அன்பின் விழாவாக ஹோலி பண்டிகையை
ஒருவர்மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி
அன்பைப் பரிமாறி நிற்க
சுயநலமாய்ச் சிந்தித்துப் பூசுகின்ற மஞ்சளுக்கே
இத்தனை பலன்கள் இருக்கையில்
இத்தனை வண்ணங்களை
பூசி நிற்கும் இவள் மகிமை என்னவோ?
அடுத்தவர் மீது காட்டும் அன்பும் குறைந்து போகும்
இரக்கம் கூட மெல்ல இறந்து போகும்
களிக்கலாம் என்று கேலி பேசும் ஊரில்
அன்பை அனைவருக்கும் இவள்
அள்ளி அள்ளிக் கொடுத்திட
அந்த வானவில்லே வியந்து
தன் வண்ணங்களை
இவள் மீது தூவி வாழ்த்தி நின்றதோ?
*****
”பொன்னகை அணியாத சின்னத் தாரகையே! உன் புன்னகையால் மண்ணில் அன்பு தழைக்கட்டும்! இன்புற்று இருக்க அனைவர்மீதும் அன்புற்று இருப்போம்!” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.
இன்புற்று இருப்போம்!
வாசனைப் பூ மகளே வசந்த வயலின்
வாடாத புத்தம்புது மலர் மல்லிகையே
வண்ணப் பொடிகள் வாரியிறைத்ததால்
வானவில்லானதோ உன் கன்னங்கள்?
கொண்டாட்டமே களிப்பு
கொண்டாடுவோமே கவலை மறந்து
கொடுத்தால் வளருமே அன்பு அதைக்
கொடுத்தே பெறுவோம் அன்போடு!
எல்லையில்லாப் பால்வெளியின்
எழுச்சிமிகு மின் மினியே!
எங்கும் ஒளிதரும் கதிர் போல
எழிலே நீ எதிர் வந்தால் பொங்கும் மகிழ்ச்சி!
பொன்நகை அணியாச்
சின்னத் தாரகையே – உன்
மின்நகைப் புன்னகையால்
மண்ணில் அன்பு மீண்டும் தழைக்கட்டும்!
கார்குழலை வாரிமுடி!
கருணையல்ல உரிமை!
கட்டுத்தளைகளை வெட்டி எறி!
கட்டவிழட்டும் அடிமை முடிச்சு!
இனி இல்லை எங்கும் எல்லை
இனிதாகுமே வாழ்வின் பயணம்
இனிக்க இனிக்க வாழ்ந்திடுவோம்
இன்புற்று இருக்க அன்புற்று இருப்போம்!
*****
”பெண்ணே! கானக்குயிலின் கீதம், காக்கை கரைவதால் மாறுவதில்லை; அதுபோல் வண்ணச் சாயங்களால் உன் வனப்பை மறைத்திட இயலவில்லை” என்று உண்மை உரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கண்களே…
வான வில்லின் வனப்பு வேறு
வண்ணம் பூசிக் குறைவ தில்லை,
கானக் குயிலின் கீதம் என்றும்
காக்கை கரைந்து மாறுவ தில்லை,
ஆன மட்டும் சாயம் பூசி
அழகினை மறைத்தும் அவளைக் காட்டிடும்
மோன விழிகளின் பார்வை தானே,
மோதும் விழிகளே மங்கைக் கழகே…!
*****
வண்ணத்துப் பூச்சியாய்ப் பலவண்ணங்கள் சுமந்துநிற்கும் வனிதை குறித்த தம் எண்ணவோட்டங்களை எழிலுறப் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
ஏக்கம்…!
ஏழ்வண்ணம் கொண்டதோர்.. எழிற்கொஞ்சும் வானவில்லாய்..
வாழ்வதற்கு நினைத்திருந்தேன்.. வாய்ப்பேதும் கிட்டவில்லை..!!
அலைகடலின் ஆழத்தில்.. அலைகின்ற மீன்களைப்போல்..
அவனிதனில் மகிழ்ந்திருக்க.. நினைத்ததுவும் நடக்கவில்லை..!!
புள்ளினங்கள் இன்புற்று.. உலவிடும்பெரு வான்வெளியில்..
நல்லதொருப் பறவையாக.. நான்மாற வழியுமில்லை..!!
வண்ணத்துப் பூச்சியாக.. வண்ணமிகு மலர்களிலே..
வந்தமர்ந்து சிறகடிக்க.. எண்ணியதும் பலிக்கவில்லை..!!
புல்மீது தூங்குகின்ற.. பனித்துளியுள் ஒளிவீசும்..
பகலவனின் பிம்பமாக.. மாறிடத்தான் நினைத்திருந்தேன்..
வானத்து விண்மீனாய்.. மின்னுமொரு நிலையடைய..
விழைந்ததுவும் விதிவிலக்காய்.. காரிருளாய் மாறியதேன்..??!!
ஏழ்பிறவித் தொடரினிலே.. தொடர்ந்துவரும் ஊழ்வினையோ..?
வாழுமிந்தப் பிறவியிலே.. எனைமறந்து செய்திட்ட..
பிழையேதும் காரணமோ.. பித்துப்பிடித் தலைகின்றேன்..!!
மலையளவு துன்பத்தால்.. அலைக்கழிந்து வாடுகின்றேன்..!!
வானவில்லாய் வாழ நினைத்ததுவும் நடக்கவில்லை; விண்மீனாய் விளங்கிட எண்ணியதும் பலிக்கவில்லை என்று கானலாய்ப்போன தன் ஏக்கங்களையெல்லாம் உருக்கமாய் இப்பாட்டில் பட்டியலிட்டிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களே!
மிகசிறப்பான புகைப்படம் இது.
ஒரு பெரும் வியப்பு
இந்த புகைப்படம் !
இந்த வண்ணக்குழம்பில்
பச்சை நிறத்தில் கூட
ஒரு “எரிமலை லாவா” இப்படி
வந்து நின்று சிரிக்க முடியுமா?
சமுதாயத்தின் ஒரு மௌன தாகம்
அந்தக்கண்களில் அலையடிக்கிறது.
இதுவும் கூட ஒரு “சவுந்தர்ய லஹரி தான்”
காலடியார்களும் நாலடியார்களும்
தத்துவங்கள் எத்தனையோ
சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள்.
நான் தேடியது
இங்கு அல்லவா இருக்கிறது.
என்ன அது?
அந்த “நான்கு வர்ணம்”இங்கு இல்லை
என்பதே
நான் தேடிய சமுதாய வர்ணம்.
தூரிகை கொண்டு
தீட்டும் வர்ணங்களுக்கு
கோடரியையா கொண்டு வருவது
என்ற கேள்வியின்
அடர்த்தியான ஆரண்ய காண்டம் இது!
நெற்றி அடிச் சித்திரம் இது.
அருமை ! அருமை !அருமை.!
====================================== ருத்ரா இ பரமசிவன்.
சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கும்.. கவிஞர்கள் அனைவருக்கும்.. வல்லமைக்கும்.. என் நன்றிகள் பல..