படக்கவிதைப் போட்டி – 225
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிரேம்குமார் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (27.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
வாழ்க்கை
ஆருயிர் தந்தாய் நீ
அடையாளமாய் அம்மை அப்பன்
அன்பை மட்டும் பொழிந்து ஆளாக்கிட
வளர்ந்து நின்றேன் நான்
அன்பாய் பேசி சிரித்து
இதயத்தை வென்றால் அவள்
அத்தனையும் மறந்து மயக்கத்தில்
அவள் கரம் பிடித்தேன் நான்
இதயங்கள் இணைந்தது இல்லறத்தில்
இன்பத்தில் திளைத்திடும் மனம்
பொய்யாய் போகும் மெய்கள் இணைந்திட
நாம் என்று ஆகினோம் அவளும் நானும்
உறவுக்கு சாட்சியாய் ஒன்றுக்கு இரண்டாய்
பிறந்தது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய்
மகனாய் மருமகளாய் இருந்த எம்மை
தந்தை தாய் என்று உயர்த்தினாய்
எங்கள் இளமை மெல்ல மறைய
இடம் பெயர்ந்து சென்றனர் இவர்கள்
மகள் புகுந்த வீட்டிற்கும்
மகன் தனி குடித்தனத்திற்கும்
ஒருவருக்கு ஒருவர் துணையாய்
தனிமையில் இருக்கையில்
பிள்ளைகளுக்கு பிள்ளைகள் பிறந்தது
எங்களை தாத்தா பாட்டி என்று உயர்த்தியது
துணை வேண்டி இருவரும்
துணையாய் இருந்தவளை பிரித்து
அவளுடன் அவளும் இவனுடன் நானும்
தனித்தனியாய் வேதனையுடன் அவளும் நானும்
உள்ளுக்குள் வேதனையை வைத்து
புன்னகை பூட்டி ஓடி ஓடி உழைத்தவள்
இதயம் இயங்காமல் நின்று போனது
தனியாய் எனை தவிக்கவிட்டு சென்றது
முதுமை எனை முத்தமிட்டதும்
முத்தமிட்டவள் விட்டுப்போனால்
கரம் பிடித்தவன் கையால்
கொள்ளிதனை வாங்கி சென்றாள்
நிமிர்ந்து நிற்க இயலாமல் முதுமையில்
இனி வரும் காலம்தன்னை தனிமையில்
தள்ளுவதை நினைக்கையில்
எதிரே கண்டேன் இந்த வாசகம்
நான் உங்களுக்கு அன்பு செய்தது போல்
நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள்
போகும் திசை அறியாமல் தவிக்கையில்
விட்டு சென்றவள் காட்டிய வழியாய் இந்த வாசகம்
கண்களில் நீர் மல்க கால்கள் தானாய் நகர்ந்தது
பிள்ளைகள் இருக்கும் பிருந்தாவனம் நோக்கி
உன்னைத்தான் தம்பி…
முடக்கிவிடுகிறது மனிதனை
முதுமை,
உடலிலும் மனதிலும்
கைவைத்துவிடுகிறது காலம்..
வியப்புக் குறியாய்
நிமிர்ந்திருந்த முதுகு
வளைந்து
வினாக் குறியாகித்
தடி எடுத்தவனைத்
தடுமாறித்
தடி பிடிக்க வைத்துவிடுகிறது..
ஊனமில்லா உள்ளத்தையும்
முதுமை
ஊனமாக்கிவிடுகிறது
தனிமையில் தள்ளி..
உறவுகளின்
உண்மை நிலைகாட்டிப்
பிறக்கவைக்கிறது ஞானம்..
தம்பி
துடிக்கும் இளைஞனே,
தடுக்கமுடியாது உனக்கும்
முதுமை வருவதை..
அதனால்
தவிக்க விட்டுவிடாதே
முதியவர்களை,
தவிக்கவிடப்பட்டவர்களுக்கு
உதவி செய்து
பரிசாய்ப் பெற்றுக்கொள்-
அனுபவத்தை…!
செண்பக ஜெகதீசன்…
கூடிவாழ்ந்த உறவுகளின்
கூட்டுத் தொகை சில கோடி
கூன்முதுகு குனிந்து சுமந்த சுமைகளின்
கூட்டு நிறை பல கோடி – ஆயினும்
கூர் மழுங்கிய ஏர்கொழு முனை இது
கூர்மை மங்கிய விழிகளின் பார்வையோடு
கூடிழந்த பறவையாக இன்று குடியிருக்க
கூடு தேடும் இடமோ தெருக்கோடி
ஆலமரம் விழுதிறங்கி தோப்பாச்சு
ஆன அடிமரம் தான் ஆதரவு இன்றி தனியாச்சு
ஆயிரம் உறவுகள் தாங்கிய தோள்களும் கால்களும்
ஆதரவு தேடி ஏதிலியாக எங்கோ போகிறது
ஆண்டவன் கூட அறிவிப்பே செய்கின்றான்
அவனைப் போலவே அன்பு செய்யச் சொல்லி
ஆனலும் அன்பான ஆளைத்தான் காணவில்லை –எல்லா
அம்மா அப்பாவுக்கும் இதுதான் கடைசியா ?
அன்னைக்கும் தந்தைக்கும் அதரவளிப்போமா- நமது
ஆருயிர் தானே அவர்கள் அதை நாம் அறிவோமா ?
அமுதூட்டி அகிலம் காட்டிய அவர்களுக்கு கொஞ்சம்
அன்பு செய்வோமா அதை அன்புடன் செய்வோமா ?
இளமை மட்டுமே நிலையல்லா
இனி முதுமை என்பது முடிவல்ல
இதயம் அன்பால் நிறைந்தால்
இன்பம் தானே விரியும் எங்கும்
யாழ். நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in