அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா
நாகேஸ்வரி அண்ணாமலை
அக்கரைச் சீமையிலே -அதாவது அமெரிக்காவிலே- வாழும் தமிழ் ஆர்வலர்கள், சிகாகோ நகரின் புறநகரான ஷாம்பர்க்கில் தமிழுக்கு ஒரு பெரிய விழா எடுத்தார்கள். மூன்று நிறுவனங்கள் சேர்ந்து எடுத்த விழாவாதலால் சுமார் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்கள் ஊர்களில் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் கொண்ட பேரவையை ஃபெட்னா (Federation of Tamil Associations of North America) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இதன் 32-ஆவது ஆண்டு விழாவையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது ஆண்டுவிழாவையும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-ஆவது ஆண்டுவிழாவையும் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழுக்கான இந்த மாநாடு, அமெரிக்க சுதந்திர தினமான 2019 ஜூலை நான்கில் துவங்கி ஏழாம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது.
முதல் இரண்டு நாட்களும் ஃபெட்னா சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். கிராமியக் கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை, உயர்கலைகளான பரத நாட்டியம், கர்நாடக இசை போன்ற நிகழ்ச்சிகளோடு இன்று பிரபலமாக விளங்கும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன. தமிழ்நாட்டிலிருந்து கலைஞர்கள் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களோடு அமெரிக்காவிலேயே வாழும் தமிழர்களும் இந்த நிகழ்ச்சிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். மிகவும் சிரமப்பட்டு இவர்கள் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்தனர்.
மூன்றாவது, நான்காவது நாட்களில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மற்ற நிகழ்ச்சிகளைப் போல அங்கேயே வசிக்கும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். பதிவுக் கட்டணம் 200 டாலர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடி அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்திருந்தாலும் புதிய மண்ணில் தங்கள் ‘அடையாளத்தை’ (identity) நிலைநாட்டிக்கொள்ளும் முயற்சியின் விளைவு என்றாலும் பிறந்த மண்ணிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்துவிட்டிருக்கும் இவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் மீது வைத்திருக்கும் அன்பு மனத்தை நெகிழச் செய்தது. ஒரு சிலர் தமிழ் இலக்கியங்களை எல்லாம் கற்று வருகிறார்கள் என்ற செய்தி மனத்துக்கு இதமாக இருந்தது. தங்களைப் பற்றிப் பறைசாற்றிக்கொள்ள மட்டுமே இந்த விழாவை இவர்கள் நடத்தவில்லை, தமிழ்பால் கொண்டுள்ள தூய அன்பாலும் இந்த விழாவை எடுத்துச் செய்தார்கள் என்று அறியும்போது இவர்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது. விழா நிர்வாகிகள் விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் அந்த நான்கு நாட்களும் மூன்று வேளையும் உணவு படைத்தார்கள் என்பது சிறப்புக்குரிய செயல். இது பெரிய சாதனைதான்.
தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்த சிலர், தமிழின் தொன்மையைப் பற்றி அறிவியல் ஒப்புக்கொள்ளும் ஆதாரம் இல்லாமல் ‘அளந்துவிட்டார்கள்’. தமிழின்பால் அன்பு செலுத்துவதற்கும் அதன் பெருமையைப் பேசுவதற்கும் தமிழுக்குக் கற்பனையான சிறப்பைக் கூறித்தான் ஆக வேண்டுமா? ஒரு வெளிநாட்டுத் தமிழ் அன்பர் – தமிழ்பால் தீராத காதல் கொண்டவர், தமிழ்ப் பெண்ணை மணந்துகொண்டு இனிதாக இல்லறம் நடத்தி வருபவர், தமிழுலகம் போற்றும் தமிழ் ஆர்வலர் – ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று ஒரு கட்டுரையாளர் படித்துக்கொண்டிருந்தபோது என்னால் அதற்கு மேல் அரங்கத்திற்குள் இருக்க முடியவில்லை’ என்று கூறியதைக் கேட்டபோது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தமிழ்க் காதல் இத்தனை தூரம் போக வேண்டுமா என்று மனத்தில் ஓர் அயர்ச்சி தோன்றியது. தமிழை எவ்வளவு வேண்டுமானாலும் நேசியுங்கள், ஆனால் தமிழுக்கு இல்லாத ஒன்றைத் தயவுசெய்து கற்பனை செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழ்மேல் ஆர்வம் கொண்டிருப்பதோடு தமிழை வளர்க்க அவர்கள் செய்யும் செயல்கள், மனத்தில் இவர்கள் மேல் ஒரு மரியாதையை வளர்க்கிறது. தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு அதைப் படித்தவர்களுக்கு அதில் எவ்வளவு பாண்டித்யம் இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் வினா-விடை மூலம் காட்டினார்கள். இவையெல்லாம் தமிழை அமெரிக்காவில் தக்க வைப்பதற்கான வழிகள்.
விழாவையொட்டி ஒரு மலர் வெளியிட்டார்கள். அதற்குக் கட்டுரை எழுத விரும்புபவர்களை எழுதச் சொன்னார்கள். நானும் ஒன்று எழுதினேன். என் கட்டுரை அவர்களுக்குக் கிடைத்த விபரத்திற்கும் பின் அது மலரில் வெளியாகும் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்கும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்த இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பியவர் அழகு தமிழில் எனக்கு எழுதியிருந்தார். அமெரிக்கா வாழ் தமிழர்கள் முப்பது, நாற்பது ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பிறகும் தமிழில் இத்தனை புலமை பெற்றவர்களா என்று மிகவும் வியந்து போனேன். அந்த மகிழ்ச்சியோடு, தமிழ் பேசப்படும் சூழலிலேயே இல்லாதவர்கள் இத்தனை அழகாகத் தமிழில் எழுதும்போது தமிழ்நாட்டிலேயே வாழும் எத்தனைப் பேர் இப்படி அழகாகத் தமிழை –தொலைக்காட்சியிலேயும் செய்தித்தாள்களிலும் கூட- கையாளுகிறார்கள் என்ற எண்ணம் வராமல் இல்லை.
தமிழை வளர்க்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திற்குப் பணம் கொடுப்பவர்கள் இந்தியாவில் தமிழை வளர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்க்கலாம். இந்த விழாவில் நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் குதூகலித்தபோதும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மனத்தை உறுத்தியது. விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், தம்ளர்கள், கரண்டிகள், முள்கரண்டிகள் ஆகியவை மலைமலையாகக் குவிந்தன. இவற்றைப் பார்த்தபோது என் கண்ணில் நீர் வராத குறைதான். இவையெல்லாம் எந்தப் புதைகுழியில் போய்ச் சேருமோ, எத்தனை நூற்றாண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு பூமியின் சுற்றுச்சுழலைப் பாதித்துக்கொண்டிருக்குமோ? தமிழ் எத்தனை காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கும் மேலேயே இவை வாழலாம். யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
படத்திற்கு நன்றி – https://www.indiaabroad.com