பலவடிவில் கூட்டம் !

Blurred crowd of unrecognizable at the street

மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியுதொரு கூட்டம்
பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்

வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்

தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
தள்ளாடும் முதுமைதனைத் தவிர்க்குமொரு கூட்டம்

நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கு கூட்டம் !

கடவுளில்லை என்றுரைத்துக் கட்சிகூட்டும் கூட்டம்
கடமை செய்வார் கழுத்தறுக்கக் காத்திருக்கும் கூட்டம்

தனியுடமை என்றுரைத்துத் தான்பிடுங்கும் கூட்டம்
சகலமுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்

தத்துவத்தைச் சமயத்தைச் சாடிநிற்கும் கூட்டம்
சன்மார்க்க நெறிமுறையைத் தகர்த்துநிற்கும் கூட்டம்

உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க