-இலந்தை  சு. இராமசாமி 

தேவகாண்டம்

அனுசூயைப் படலம்

கலிவிருத்தம்

நிலைபெறும் கற்பினள் உலகினில் யாரோ
நலமுறத் தேடுவோம் வாமெனச் சேர்ந்தே
அலைமகள் கலைமகள் மலைமகள் ஆய்ந்தார்
பலருமே அனுசுயை என்றுப கர்ந்தார் 72

முத்தொழில் தேவியர் எப்படி எனவே
அத்திரி மகரிஷி அற்புத மனைவி
உத்தமி கற்பினில் ஒப்பிலி அவளே
பத்தினிச் சிகரமென் றொப்பினர் பலரே 73

அரனையும் அரியையும் மறையவன் தனையும்
விரைவுடன் நெருங்கியே வினவினர் அவர்கள்
சரிசரி அதுசரி என்றனர் உடனே
இருகரம் சிரசினில் வைத்தனர் தொழுதார் 74

*

எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா

ஒப்பரிய கற்புடையள் என்றுரைத்தீர் நீங்கள்
உடனதனைச் சோதிக்க விரும்புகிறோம் நாங்கள்
இப்பொழுதே மூவருமே அவளிடத்துச் சென்றே
“எங்களுக்குச் சோறிடுக அம்மணமாய் நின்றே
ஒப்பவிலை எனில்சாபம் தந்திடுவோம் என்றே
உரைத்திடுக என்றவர்கள் சொன்னார்கள் நன்றே!
அப்பொழுதே அவ்விடத்தை நீங்கியவர் சென்றார்
அனுசூயை யிடம்சென்றே அப்படியே சொன்னார் 75

“எங்களது வீட்டிற்கே எழுந்தருளி உள்ளீர்
எவ்வளவு பேறெமக்கு! மும்மூர்த்தி சேர்ந்தே
இங்குவரக் கொடுத்துவைத்தோம் , எதைக்கேட்ட போதும்
இங்கதனைக் கொடுப்பதுவே எங்களது தர்மம்
சங்கடமே படவேண்டாம். கேட்டபடி செய்வேன்
சாமிகளே, குழந்தைகளாய் மாறிடுக “ என்றாள்
அங்கவர்கள் உடனடியாய்க் குழந்தைகளாய் மாற
அநுசூயை அம்மணமாய் சோறூட்டி நின்றாள். 76

குழந்தைகளும் அம்மணமே, கொடுத்தவளும் அஃதே
குறைவின்றி மூவருமே அநுசூயை ஊட்டம்
விழைந்திருந்தார், சென்றவர்கள் ஏன்மீள வில்லை
வேறெதுவும் ஆனதுவோ எனவுள்ளத் துள்ளே
உழன்றபடி தேவியர்கள் உடனங்கே வந்தார்
உள்ளநிலை தாம்கண்டார் உண்மையையு ணர்ந்தார்
குழந்தைகளை மறுபடியும் முன்பூல மாற்றக்
கும்பிட்டு வேண்டுகிறோம் எனவிறைஞ்சி நின்றார் 77

தேவியரும் இவ்விடத்தே வந்ததெங்கள் பேறு
தெய்வதமே இங்கிருக்க எதுவேண்டும் வேறு
மூவரிவர் அம்சமென எனக்குமகன் வேண்டும்
முன்வந்தே ஒப்புவிரேல் மாற்றுகிறேன் மீண்டும்
ஆவதினி உம்கையில் முடிவுசொல்க” என்றாள்
அங்ஙனமே ஆகிடுக எம்தாயே” என்றே
மூவருமே மொழிந்தார்கள், முன்போலே மாறி
முறைமுறையே தத்தமதி ருப்பிடம டைந்தார். 78

சொன்னபடி அநுசூயை பெற்றனளோர் பிள்ளை
சுடர்மூன் றங்கொன்றான அவன் ஞானக் கொள்ளை
அன்னவனைத் தத்தாத்தி ரேயனெனும் பேரில்
அழைத்தார்கள் அவன்பெரிய ஞானியிந்தப் பாரில்
உன்னதமாய் எங்களரும் அம்சமென இங்கே
ஒருபெண்ணைத் தருகின்றோம், அவள் எங்கள் பங்கே
என்றனர் முத்தேவியர்கள், காலவ முனிக்கோர்
எழில்மகவாய் வந்துதித்தாள் அவளதுபேர் லீலை! 79

தத்தனுக்கு வேதங்கள் கலைகளெலாம் தந்தை
தானாசா னாயிருந்து கற்றுக்கொ டுத்தார்
வித்தைகளை, உபநிடத நூல்களையும் கற்றான்
வினயமுள ஞானியெனப் போற்றிட வளர்ந்தான்
புத்திரியைச் காலவரும் பத்திரமாய் வளர்த்தார்
பொங்குமெழில் கொண்டயிளம் பெண்ணாய்த் திகழ்ந்தாள்
தத்தனுக்குப் பெண்லீலா வதியைமணம் புரியச்
சம்மதித்த பெற்றோர்கள் மணம் செய்து வைத்தார் 80

இல்லறத்தில் விருப்பமிலை என்றிருந்த போதும்
இதுகடமை எனவுணர்ந்தே அவளைமகிழ் வித்தான்
நல்லறமாய் பெற்றோர்கள் மகிழ்கின்ற வண்ணம்
நான்காண்டு குறையின்றி வாழ்ந்தார்கள் நன்றே!
எல்லையிலாப் பரம்பொருளை என்றும்மனத் திருத்தி
இல்லறத்தை விட்டுவிட முடிவெடுத்தான் தத்தன்
மெல்லமெல்ல மனைவியிடம் விருப்பத்தைச் சொன்னான்
விடைகொடுக்க வேண்டுமென மிகக்கெஞ்சிக் கேட்டான். 81

‘என்ன குறை வைத்துவிட்டேன்? ஏனிந்த முடிவு?
இன்னும்மக வேதுமிலை, கசந்ததுவோ வாழ்க்கை?
அன்றுதிரு மணப்போதில் அம்மிமிதிக் கையிலே
அக்கினிமுன் சொன்னதெலாம் மறந்ததுவும் ஏனோ?
என்னைமிக மகிழ்வாக வைத்திருப்ப தாக
எடுத்துரைத்த வார்த்தைகளை ஏன்மறந்து போனீர்?
அன்னைதந்தை இதைக்கேட்டால் மிகவருந்து வார்கள்
ஆகாது நும்செய்கை எனமேலும் சொல்வாள் 82

தவம் புரிய வேண்டாம் – நாதா
சடை வளர்க்க வேண்டாம்
நவநவமாக இன்பங்கள்
நாளும் சுவைத்திடலாம் 83

கட்டுத் தளரவில்லை- இன்னும்
கால்கைகள் சோரவில்லை
சுட்டித் தனம் செய்யக் குழந்தைச்
சொந்தங்கள் ஏதுமில்லை 84

வயதும் ஆகவில்லை – நமது
வாலிபம் மாறவில்லை
தயவு செய்திடுவீர் – எனது
தாபம் குறைத்திடுவீர் 85

என்றுலீ லாவதியாள்- மிக
இரந்து கேட்குங்கால்
இன்னும் திடமாகத் தத்தன்
எண்ணம் இயம்பிநின்றான் 86

இறைவன் பாதத்திலே – சேரும்
எண்ணம் கருதிவிட்டேன்
உறுதி செய்துவிட்டேன் – பெண்ணே
உதவி செய்கவென்றான் 87

விட்டுக் கொடுத்திடவே – சற்றும்
விருப்பம் இல்லாமல்
கொட்டினாள் கண்ணீரை அவனைக்
கும்பிட்டுச் சொல்லுகிறாள் 88

மாலையிட்டு மணம் முடித்த மஹிஷி நான் இருக்கும்போது
வனவாசம் போவதுவும் முறையோ – இந்த
மங்கையிடம் ஏதேனும் குறையோ?

மஹிஷி என்ற உரிமையிலே மணவாளா சொல்லுகிறேன்
வனவாசம் போவதுவோ கடமை- அதை
மறுப்பதுவும் மஹிஷி என்னும் உரிமை 89

இருவரும் மாறி மாறி
எடுத்தெதைச் சொன்ன போதும்
ஒருவரும் நிலைவி டுத்தே
ஒப்புதல் கொடுக்கவில்லை
பெருகிடும் சினத்தால் தத்தன்
பேதையும் வருந்தும் வண்ணம்
ஒருபெரும் சாபம் தந்தான்
உத்தமி பதறிப் போனாள் 90

மிகமிக வேண்டிக் கேட்டும்
மீளவும் மகிஷி என்னும்
தகுதியால், உரிமை தன்னால்
தடையினை விதித்த தாலே
மகிஷியாய்ப் பிறக்கச் சாபம்
வழங்கினேன் என்றான் தத்தான்
தகர்த்திடும் சினத்தினாலே
தழலெனக் கொதித்தாள் லீலா! 91

வாழ்க்கையிலே சுகம் கேட்டால் கோபமா – அதற்கு
மகிஷியாகப் போகச் சொல்லிச் சாபமா?
ஆழ்ந்த என்றன் அன்புசற்றும் சரியுமா- எங்கே
அடுத்தாலும் உமையழைப்பேன் தெரியுமா? 92

மஹிஷமாகப் பூமியில் நீர் பிறக்க வேண்டும்- இந்த
மஹிஷியோடு கூடி அன்பிற் சிறக்க வேண்டும்
அகிலமெல்லாம் என் காலில் வீழ வேண்டும் – மிக்க
அன்புடனே நாமிருவர் வாழ வேண்டும்\ 93

எழுசீர் விருத்தம்

கரம்பன் என்னும் அரக்கன் மகளாய்க்
காட்டு மகிஷ முகத்தோடே
திரும்பப் பிறப்பை எடுத்தாள் லீலா
தீமை மிகுந்த மனத்தோடே
உருவில் பெருத்தாள், உளத்தில் சிறுத்தாள்
ஒவ்வோர் செயலும் உக்கிரந்தான்
கரத்தில் எடுத்துப் பிடித்தால் போதும்
கனத்த மலையும் பொடிப்பொடிதான் 94

மரத்தைப் பொடித்தாள் மலையைப் பொடித்தாள்
வனத்தைப் பொட்டல் ஆக்கிவிட்டாள்
சிரத்தை யாகத் தவங்கள் செய்து
சீக்கிரத்தில் அயனிடத்தே
வரத்தைப் பெறுவாய் மகளே என்று
வழியைச் சொன்னான் அவள்தந்தை
கருத்தை நெஞ்சில் ஆழப் போட்டே
கடிய தவத்தை அவள் செய்தாள் 95

உண்ண வில்லை உறங்க வில்லை
உட்கா ராமல் ஒருகாலால்
மண்ணை மிதித்து மறுகால் மடித்து
மாறா நிலையில் அவள்நின்றாள்
எண்ணத் துள்ளே அயனைநிறுத்தி
எழுநூ றாண்டு தவம்செய்தாள்
விண்ணை வெப்பம் தாக்கத் தேவர்
விதிர்விதிர்த்துப் போனார்கள் 96

இன்னும் காலம் தாம தித்தால்
எரிந்து போவோம் எனவெண்ணி
முன்னே சென்று பிரம னிடத்தே
முறையிட் டார்கள் தேவரெலாம்
என்ன செய்ய? வரத்தைக் கொடுத்தே
இடரைப் போக்கி வருகின்றேன்
என்று சொல்லிப் பிரமன் சென்றார்
எதிரே நின்றார் அவள் பார்த்தாள் 97

“பெண்ணே உன்றன் தவத்தைக் கண்டு
பெரிதும் மகிழ்ந்தேன். வரங்கேட்பாய்
விண்ணோ மண்ணோ பிறந்தார்க் கெல்லாம்
மேவும் மரணம் அதனாலே
எண்ணிப் பார்த்தே எந்த வகையில்
எய்த வேண்டும் எனக்கேட்பாய்
பெண்ணே அதனைத் தருவேன் என்றே
பிரமன் சொல்ல அவள் கேட்டாள் 98

“அரனும் மாலும் இணைந்து பிறந்த
அரிய குழந்தை மண்ணகத்தில்
அரசன் ஒருவ னிடத்தே ஈரா
றாண்டு தங்கி வளர்ந்தவனால்
மரணம் நிகழ வரத்தைத் தருக
வணங்கு கின்றேன், எனச்சொன்னாள்
பிரமன் சொன்னார்” தருகின்றேன் நான்
பிழைசெ யாதே வாழெ”ன்றார். 99

வரத்தைப் பெற்ற மகிழ்ச்சி தன்னில்
மண்டைக் கனமும் ஏறியதால்
உரத்தை எங்கும் காட்ட எண்ணி
ஓல மிட்டாள், பெரிதாகச்
சிரித்தாள், நடக்க இயலாவொன்றைச்
சிந்தித்தோ மென்றுள மகிழ்ந்தாள்
கரத்தைக் குவித்தாள் ரம்ப னிடத்தே
கதையைச் சொன்னாள் , அவன்மகிழ்ந்தான் 100

ஆணும் ஆணும் பிள்ளை பெறுதல்
ஆகா தம்மா ஆகாது
வீணில் கால விரயம் இன்றி
விண்ணை நோக்கிச் சென்றிடுவாய்
காணும் தேவர் எல்லாம் உன்னைக்
கண்டு பதறி ஓடட்டும்
வேணும் படைகள் கூட்டிச் செல்வாய்
வெற்றி உனதே “ எனச் சொன்னான்.. 101

-தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *